சிக்கிமுக்கி 17

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குணாவோடு சேர்ந்து குறுக்கு வழியில் விடுதி வந்து சேர்ந்தாள் மீனா‌. அரை மணி நேரம்தான் தாமதமாகி இருந்தது.

கல்லூரி பையை ஓரம் எறிந்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவளின் இதழில் புன்னகை குறையாமல் இருந்தது.

"குணாவுக்கு செம காமெடி சென்ஸ்.. அவனோடு பேசிட்டு இருந்தா டைம் போறதே தெரியறது இல்ல.." என்றாள். அவள் சொன்னது அபிநயாவின் காதில் விழவேயில்லை. 'துப்பட்டாவை ஸ்டைலா கழட்டி வீசின..' ஒற்றை வார்த்தையே அவளின் நினைவை கொள்ளையடித்து வைத்திருந்தது.

பதில் வராததை கண்டு தோழியை பார்த்தாள் மீனா. "ஏன் ஒரு மாதிரியா இருக்க.?" என கேட்டவள் அபிநயாவின் அருகே வந்து அமர்ந்தாள்.

"ஏன் இவ்வளவு சோகம்.?" என்று விசாரித்தாள்.

அபிநயா உதட்டை பிதுக்கி மௌனமாய் அழுதாள்.

"என்னாச்சி அபி.?" மீனாவிற்கு அவளது அழுகை கண்டு பயமாக இருந்தது. இதுவரையிலும் அபிநயா அழுததே கிடையாது.கோபம் மட்டும்தான் அவளின் ஒரே உணர்வு என்பது போலதான் இருந்தாள்.

மௌனமாய் அழுதவள் ஓவென அழுதாள். மீனாவையும் கட்டிக் கொண்டாள். அவளின் தோளில் முகம் புதைத்தவள் விம்மி விம்மி அழுதாள்.

"ஏன் அழற அபி.? வயிறு வலிக்குதா.? இல்ல தலை வலிக்குதா.? நான் போய் வார்டனை கூட்டிட்டு வரட்டா.?" என்றாள் கவலையோடு.

மறுத்து தலையசைத்தாள் அபிநயா. "மீனு.. மீனு.." என்றாள் அழுகையின் இடையே திணறலாக.

"என்னன்னு சொல்லு அபி.." என்று அவளின் தோளை உலுக்கினாள் மீனா.

"அந்த கோணக்காலன் என்னை பார்த்துட்டான் மீனு.." என்று சொல்லிவிட்டு மூக்கை உறிஞ்சினாள்.

அவள் சொன்னது கேட்டு மீனாவிற்கு குழப்பமாக இருந்தது. "உன்னை பார்த்தானா.?" என்றாள். இவளை பார்க்க கூட கூடாதா என்று சிறு கோபம் வந்தது மீனாவிற்கு.

"நான் டிரெஸ் மாத்தும்போது பார்த்துட்டான் மீனு.." ஒப்பாரி போலவே பாடி சொன்னாள் அபிநயா.

அதிர்ச்சியோடு தோழியின் முகத்தை பற்றி நிமிர்த்தினாள் மீனா. "என்ன சொன்ன.? அவன் எப்படி நீ டிரெஸ் மாத்துவதை பார்க்க முடியும்.?" என்றாள் குழப்பத்தோடு.

அபிநயா ஜன்னலை கை காட்டினாள். "பாய்ஸ் ஹாஸ்டல்ல நமக்கு நேர் எதிரே இருக்கும் ரூம்தான் கோணக்காலனோடது. அந்த ரூம்ல இருந்து நம்ம ரூமை பார்த்திருக்கான். அதுவும் நான் டிரெஸ் மாத்தியதையே பார்த்திருக்கான்.." என்றாள் கண்களை துடைத்துக் கொண்டு‌.

மீனா அந்த ஜன்னலை பார்த்தாள். மூடி இருந்தது. எழுந்து சென்று ஜன்னலை திறந்தாள். ஆண்கள் விடுதி தெரிந்தது. எதிரே இருந்த அறையை பார்த்தாள். மங்கலாக தெரிந்தது உருவங்கள்.

"அதெப்படி முடியும்.? இங்கிருந்து பார்த்தா அவங்க முகம் கூட சரியா தெரியல.. அவங்களால எப்படி நம்ம ரூமை பார்க்க முடியும்.?" என கேட்டவள் அபிநயாவின் ஃபோனை எடுத்து வந்தாள். எதிர் அறையை போனில் ஜூம் செய்து பார்த்தாள். அன்பு தலையை பிடித்தபடி மேஜையின் அந்த புறம் அமர்ந்திருந்தான். கட்டிலில் அமர்ந்திருந்த குணா அன்புவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

"அன்புவும் குணாவும் ரூம் மேட்ஸ்ப்பா.." என்றாள். அபிநயா பதில் எதுவும் சொல்லவில்லை. மீனா பெருமூச்சோடு இவளின் அருகே வந்தாள்.

"நீ அழுற அளவுக்கு ஒன்னும் நடக்கல விடு.. இனி ஜன்னலை சாத்திட்டு டிரெஸ் மாத்து.." என்றாள்.

"அவன் என்னை பார்த்துட்டான்.." என்றாள் அவள் மீண்டும் அழுகையோடு.

"பார்த்துட்ட பிறகு அழுதா மட்டும் என்ன பிரயோசனம்.? இங்கிருந்தே செல்போன்ல ஜூம் பண்ணி பார்த்தால்தான் அரைகுறையா தெரியுது. அங்கிருந்து அவங்களால கிளியரா பார்க்கவே முடியாது. அப்படி அவன் பார்த்திருந்தா கூட இப்ப என்ன போச்சி.? சண்டை போடும் போதெல்லாம் இரண்டு பேரும் கட்டிபிடிச்சிதானே உருளுறிங்க.. இதையும் அதே கணக்குல சேர்த்துக்க.." என்றாள்.

அபிநயா அழுகையை நிறுத்தவேயில்லை. "என்னை டிரெஸ் இல்லாம பார்த்ததா அந்த கோணக்காலன் எல்லோர்கிட்டயும் சொல்லிடுவான்.." என்றாள்.

"அப்படியெல்லாம் அவன் செய்ய மாட்டான்.." என்று ஆறுதல் கூற முயன்றாள் மீனா.

அவள் அழுகையோடு இடம் வலமாக தலையசைத்தாள். "அவனும் நானும் எதிரிங்க. அவன் நிச்சயம் என்னை பழி வாங்குவான்.." என்றாள்.

"இந்த விசயத்தையெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்கப்பா.. ஜென்ம எதிரி கூட அப்படி செய்ய மாட்டாங்க.." என்றாள்.

மீனா எவ்வளவு சொல்லியும் கூட அபிநயாவின் மனம் சாந்தமடையவில்லை. அன்று இரவு வெகுநேரம் வரை கண்ணீர் சிந்தியபடிதான் படுத்துக் கொண்டிருந்தாள். அவளின் நிலை கண்டு மீனாவிற்கே கஷ்டமாக இருந்தது.

மறுநாள் கல்லூரி சென்றவுடனேயே அன்புவை தனியே பேச அழைத்தாள் மீனா. அன்புவோடு சேர்ந்து குணாவும் வந்தான். கல்லூரி கட்டிடத்தின் இரண்டாம் தளத்தின் ஒரு ஓரத்தில் வந்து நின்றனர்.

"என்ன மீனா.?" என்ற அன்புவை முறைத்தவள் "எங்க ரூமை எதுக்கு நீங்க வாட்ச் பண்றிங்க.?" என்றாள் கோபமாக.

"எதேச்சையாதான் பார்த்தேன்.." என்றவனை நம்பாமல் பார்த்தாள் மீனா. "பொய் சொல்லாதிங்க.. எங்க ரூம்ல இருந்து பார்த்தா உங்க ரூம்ல நீங்க இருப்பதே மங்கலாதான் தெரியுது. அப்படி இருக்கும்போது எப்படி உங்களால எங்க ரூம்ல டிரெஸ் மாத்துவதை பார்க்க முடிஞ்சது.?" என்றாள்.

குணா நண்பனையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். "என்ன நடந்தது.?" என்றான்.

"நேத்து உங்க பிரெண்ட் அபியை டிரெஸ் மாத்தும்போது பார்த்திருக்காரு.." என்று சீற்றமாக சொன்னாள் மீனா.

"அது.." குணா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான். பைனாக்குலரை வைத்து இவர்களை நோட்டமிட்டோம் என்று சொன்னால் பின்னாளில் மீனா தன்னோடு பேசவே மாட்டாள் என்று அவனுக்கே புரிந்தது.

"அவ நேத்து நைட்டெல்லாம் அழுதுட்டே இருந்தா.. பாவம் அவ.. அன்பு என்னை டிரெஸ் இல்லாம பார்த்துட்டான்னு விடிய விடிய ஒப்பாரி பாடிக்கிட்டு ஓயாம அழுதுட்டு இருந்தா.."

மீனா சொன்னதை அன்புவால் நம்பவே முடியவில்லை. "அவ அழுதாளா.? அதுவும் இதுக்காக.? வாவ்.. அவளுக்கும் இந்த உணர்வெல்லாம் இருக்கும்போலதான் இருக்கு.." என்று கடுப்போடு சொன்னான். "நான் ஒன்னும் அவளை டிரெஸ் இல்லாம பார்க்கல.. அவ துப்பட்டாவை கழட்டி வீசிட்டு டாப்பை கழட்ட டிரை பண்ணும்போதே பைனாக்குலரை கீழே வச்சிட்டேன்.." என்றான். குணா மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்டான். 'இப்படி உண்மையை சொன்னா இவங்க நம்மளை பொம்பள பொறுக்கின்னு சொல்லி பட்டம் கட்டிடுவாங்கடா அறிவு கெட்டவனே..' என்று அவனை மனதுக்குள் திட்டினான்‌.

மீனா அதிர்ச்சியில் விழி விரித்தாள். "பைனாக்குலரை யூஸ் பண்ணி எங்க ரூமை நோட்டம் விட்டிங்களா.?" என்றவள் குணாவின் பக்கம் திரும்பினாள். "நீங்களும் பார்த்திங்களா.?" என்றாள்.

இல்லையென தலையசைத்தான் குணா. "நான் நேத்து உங்க கூடதானே சுத்திட்டு இருந்தேன். நான் நேத்து பைனாக்குலரை தொட கூட இல்ல.." என்றான்.

"நேத்து தொடல.. ஆனா அதுக்கும் முன்னாடி அதை யூஸ் பண்ணியிருக்கிங்க.." என்று கேட்டவளின் தோளில் வந்து விழுந்தது ஒரு கரம். மீனா திரும்பி பார்த்தாள். அவளருகே அபிநயா நின்றுக் கொண்டிருந்தாள்.

"இவங்க இப்படிதான் மீனு.. நீ கோபப்படுறதுல யூஸ் இல்ல.. வா போகலாம்.." என்று தோழியின் கை பிடித்து இழுத்துக் கொண்டு எதிர் திசையில் நடந்தாள் அபிநயா.

"ஆமா நீ பெரிய ரதி.. உன்னை டிரெஸ் இல்லாம பார்க்க நாங்க காத்து கிடக்கறோம் பாரு.. ஜன்னலை சாத்தி வைக்க துப்பில்ல.. ஆனா எனக்கு பொறுக்கி பட்டம் கட்டுற நீ.!?" என்று எரிச்சலோடு சொன்னான் அன்பு.

அபிநயா தனது தோளில் இருந்த பேக்கை கழட்டி அவன் முகத்தின் மீது எறிந்தாள். ஆனால் பேக் தன் முகத்தை தொடும் முன்பே அதை கையில் பிடித்து விட்டான் அன்பு. அபிநயா பத்ரகாளி போல அவனை முறைத்தாள். "ஆமான்டா நீ பொறுக்கிதான்.. லேடிஸ் ஹாஸ்டலை வாட்ச் பண்ற நீ பொறுக்கியேதான்.." என்றாள்.

அன்பு தன் கையில் இருந்த பேக்கோடு ஓரடி கைப்பிடிச் சுவரை நோக்கி நடந்தான். வராண்டா கைப்பிடியை பிடித்தபடி கீழே பார்த்தான். தரையில் நேர் கீழே இருந்த புல்வெளியை பார்த்தவன் பேக்கை கீழே எறிந்தான். அபிநயா கோபத்தோடு அவனை நெருங்கினாள். அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டாள். அன்பு அவளை திருப்பி அடிக்க முயற்சித்தான். ஆனால் அதே வேளையில் அந்த வராண்டாவின் மறு ஓரத்தில் இருந்த படிக்கட்டில் ஏறி மேலே வந்தார் அருள் குமரன். அவரை கண்டதும் ஓங்கிய கையை கீழே இறக்கி கொண்டான் அன்பு. அபிநயா அவனின் பின்வாங்கல் கண்டு குழம்பி திரும்பி பார்த்தாள். அருள் குமரனை கண்டவள் பற்களை கடித்தாள். அன்புவின் காலில் ஒரு உதையை தந்தவள் அவன் அடுத்த முயற்சியை செய்யும் முன் வேகமாக அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

அன்பு அவளை பின்தொடர வேண்டுமென்று ஓரடி எடுத்து வைத்தான். அவனை கை காட்டி மறித்து நிறுத்தினாள் மீனா.

"தப்பு உங்க மேலதான் இருக்கு அன்பு.‌." என்றாள்.

அன்பு அவளை கோபத்தோடு பார்த்தான். "ஆமா.. என் மேலதான்.. அவ மேல இருக்கற அக்கறையில் ஜன்னலை சாத்துன்னு சொல்ல போனேனே.. தப்பு என் மேலதான்.." என்றான் பொய் ஆச்சரியத்தோடு.

மீனா தன்னையே நொந்துக் கொண்டாள். "எங்க ரூம் ஜன்னலை சாத்தணும்ன்னா அதை வேற வழியில் சொல்லியிருக்கலாம். என் மூலமா கூட சொல்லி இருக்கலாம். ஆனா நேரா அவக்கிட்டயே போய் நீ ஸ்டைலா துப்பட்டா கழட்டி வீசினன்னு சொல்லியிருக்க கூடாது.. உங்களுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்கனவே பகை. நீங்க அதை எப்படி சொன்னாலும் அது தப்பாதான் போகும்.. உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா அது நல்ல விசயம்.. ஆனா அதை வெளிப்படுத்திய முறை தப்பு. அவ கவனக்குறைவா தப்பு பண்ணிட்டா.. ஆனா அந்த தப்பை நேரா சொன்னா ஏத்துக்கற அளவுக்கு இயல்பா இல்ல உங்க உறவு.. இனியாவது கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கங்க.." என்றவள் குணாவின் பக்கம் திரும்பினாள். "அந்த பைனாக்குலரை பத்திரப்படுத்தி வைங்க.. விளையாட்டுக்கு யூஸ் பண்றேன்னு கேர்ள்ஸ் ஹாஸ்டலை நோட்டம் விடாதிங்க.. அப்புறம் சிறைச்சாலைக்கு போக வேண்டியது வரும்.." என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்‌.

மீனாவின் அறிவுரையை கேட்டு முடித்ததும் அன்பு கைப்பிடி சுவர் தாண்டி கீழே பார்த்தான். அபிநயா ஓடிவந்து தன் பேக்கை கையில் எடுத்தாள். அண்ணாந்து அவனை பார்த்தாள். அவனின் ஆழ பார்வையை வெறுப்போடு பார்த்தவள் பேக்கோடு அங்கிருந்து சென்றாள்‌.

"என் ஆள் சொன்னது கரெட்தான்டா.. உங்களுக்குள்ளயே ஜென்ம பகை. நீ நல்லதையே சொன்னா கூட தப்பாதான் போய் முடியும்.. அவக்கிட்ட சொன்னதுக்கு பதிலா இவக்கிட்ட சொல்லி புரிய வச்சிருக்கலாம்.." என்றான் குணா.

அன்பு நண்பன் சொன்னதை காதுகளில் ஏற்றிக் கொண்டான். ஆனால் அபிநயாவின் முதுகை தாண்டி பார்வையை திருப்பிக் கொள்ளவில்லை.

அபிநயா வகுப்பறைக்குள் வந்து அமர்ந்தாள். தன் பேக்கில் ஒட்டியிருந்த மண் துகள்களை கவனித்தவள் அதை தட்டி விட்டாள். "கோணக்காலனை காலை உடைச்சி வைக்கணும்.. அப்போதான் இன்னொரு நாளைக்கு இப்படி வெட்டி வம்பு பண்ண மாட்டான்.." என்று முனகினாள்.

அன்பு குணாவோடு சேர்ந்து வகுப்பறைக்கு வந்தான். ஆசிரியரும் அதே நேரத்தில் வந்து சேர்ந்தார்.

தனது இருக்கையில் அமர்ந்த அன்பு மேஜையில் இருந்த தன் பேக்கை காணாமல் சுற்றும் முற்றும் தேடினான்.

"என் பேக் எங்கடா.?" என குணாவை கேட்டான். குணா தெரியாதென்று கையசைத்தான். கோபத்தோடு அபிநயாவை பார்த்து முறைத்தான். அவள் சிலை போல அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

"அவன் பேக் எங்கே‌.?" தோழியிடம் ரகசியமாக விசாரித்தாள் மீனா.

"அந்த எதிர் பக்கத்துல இருக்கற ஜன்னல் வழியா அவனோட பேக்கை கொட்டிட்டேன்.." என்றாள் ஆசிரியரை கவனித்தபடியே.

"அடிப்பாவி.. ஆனா இது எப்படி.? அன்புவோடு சண்டை போட்ட பிறகு என்னோடுதானே நீ கிளாஸ்க்கு வந்த.?" என்றாள்.

"அவனோடு சண்டை போடும் முன்னாடியே கிளாஸ்குள்ள வந்து அவன் பேக்கை எடுத்து எறிஞ்சிட்டுதான் அங்கே வந்தேன்.." என்று கிசுகிசுப்பாக சொன்னாள் அபிநயா.

"இந்த விசயத்துல மட்டும் எப்படி நீங்க இரண்டு பேருமே விடாகண்டனா இருக்கிங்க.?" ஆச்சரியத்தோடு கேட்டாள் மீனா.

"அந்த பொறுக்கியை பத்தி இனி பேச வேணாம் விடு.." என்ற அபிநயா தன்னை முறைப்பவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி உள்ளுக்குள் சிரித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1164

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN