சிக்கிமுக்கி 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு பற்களை கடித்தபடி பொறுமை காத்து அமர்ந்திருந்தான். வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அங்கிருந்து கிளம்பியதும் தன் இருக்கையை விட்டு வேகமாக எழுந்தவன் அபிநயாவின் அருகே வந்து அவளின் தாடையை பற்றி தன் புறம் திரும்பினான்.

"என் பேக் எங்கேடி.?" என்றான்.

அபிநயா நக்கலாக உதடு சுழித்தாள். "என் உள்ளங்கையிலதான் இருக்கு.." என்றவள் தனது மூடிய கையை அவன் முன் காட்டினாள்.

"விளையாட்டு வேணாம் குட்ட.. மரியாதையா என் பேக் எங்கேன்னு சொல்லிடு.." என்றான் ஆத்திரத்தோடு.

"குட்டன்னு சொன்ன மரியாதை கெட்டுடும்.. நீ யார்டா என்னை குட்டச்சின்னு சொல்ல.?" என்றாள் அவளும் எழுந்து நின்று.

'நீ யார்.?' என்ற வார்த்தை அவனை காயப்படுத்திவிட்டது. எதற்கு இந்த காயம் என்றும் அறியவில்லை அவன்.

"என் பேக்கை நீ எடுக்காம இருந்தா நான் எதுக்கு உன்னை குட்டச்சின்னு கூப்பிட போறேன்.?" என்றான்.

"நீ ஏன் குட்டச்சின்னு கூப்பிடுற.?" என்று வீண் விதாண்டாவாதம் செய்தாள் அபிநயா.

இருவரும் மீண்டும் கைக்கலப்பில் இறங்கி விடுவார்களோ என்று பயந்த மீனா "பேக் அந்த ஜன்னலுக்கு நேர் கீழ தரையில இருக்கு.." என்றாள். அன்பு அபிநயாவை முறைத்துவிட்டு வெளியே சென்றான்.

"எதுக்கு சொன்ன புள்ளை.?" என்று சிணுங்கலாக கேட்டபடி திரும்பினாள் அபிநயா.

"நீங்க சண்டை போடுறதையே எத்தனை நாளைக்குதான் பார்க்கறது அபி.?" என்று கேட்டாள் அவள்.

அன்பு தரைப்பகுதிக்கு வந்து பார்த்தபோது அவனின் பேக்கும் பேக்கில் இருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

அவள் பையை திறந்து அதை அப்படியே கீழே கொட்டிவிட்டாள் என்பது தெளிவாக புரிந்தது. மண்ணில் சிதறி கிடந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பேக்கில் வைக்க தொடங்கினான் அன்பு.

நோட்டுகளின் ஓரங்களில் மண்துகள்கள் நிரம்பியிருந்தது. அனைத்தையும் தட்டி தூசு ஊதி எடுத்து வைத்தான். பேனாவின் மூடியை காணவில்லை. தேடி தேடி பார்த்தான். கிடைக்கவேயில்லை. நொந்துப்போய் மூடியில்லாத பேனாவை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

பேக்கின் மீது ஒட்டியிருந்த மண்ணையும் தட்டியவன் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு வகுப்பறைக்கு கிளம்பினான்.

வகுப்பில் இருந்த ஆசிரியர் இவனை ஏற இறங்க பார்த்தார். "ஐயா இவ்வளவு நேரம் எங்கே போனிங்க.?" என்றார்.

"பிரேக்ல பிரெண்ட்ஸோடு விளையாடிட்டு இருக்கும்போது கை தவறி பேக் ஜன்னல் தாண்டி விழுந்துடுச்சி சார்.. அதை எடுத்துட்டு வர லேட் ஆகிடுச்சி.." என்றான்.

"அரை கிளாஸ் படிக்கிற பசங்களா நீங்க.? பிரேக் டைம்ல அமைதியா இருந்தா குறைஞ்சிடுவிங்களோ.?" என்று கேட்டவர் அவனை உள்ளே வர சொல்லி சைகை காட்டினார்.

அன்பு அபிநயாவை முறைத்துப் பார்த்தபடியே உள்ளே வந்தான். அவள் இவனை பார்த்து பழிப்பு காட்டினாள். அவளின் பல்லை உடைக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு. அவனின் நெற்றியை பிளக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் குரலுக்கு அடங்கி அமைதியாக அமர்ந்திருந்தனர் இருவரும்.

பிற்பகல் வேளையில் வகுப்பிற்கு வந்த அருள் குமரன் அன்புவையும் அபிநயாவையும் சந்தேகமாக பார்த்தார். "இரண்டு பேரும் மறுபடியும் சண்டை போட்டுக்கிட்டிங்களா.?" என்றார். இருவரும் இல்லையென ஒரே நேரத்தில் தலையை அசைத்தனர்.

"குட்.." என்றவர் அன்றைய பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

அன்று கல்லூரி முடிந்து வெளியே நடந்தனர் அனைவரும்.

"சனி ஞாயிறு லீவ்.. வீட்டுக்கு போக போறியா.? இல்ல இங்கேயே இருக்க போறியா.?" என்றாள் மீனா அபிநயாவிடம்.

"தெரியல மீனு.. அப்பாக்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுட்டுதான் கிளம்பணும்.." என்று கவலையோடு சொன்னாள் அபிநயா. ஒரு வாரம் வீட்டை பிரிந்து இருந்ததே அவளுக்கு ஏக்கத்தை தந்து விட்டிருந்தது. இதே போல வருங்காலத்திலும் தன்னை விலக்கியே வைத்து விடுவார்களோ என்று பயம் உண்டானது அவளுக்குள்.

"வெள்ளிக்கிழமை சாயங்கால பஸ்க்கு கரெக்டா வந்துடணும்ன்னு எங்க அம்மா சொல்லிதான் அனுப்பினாங்க.. நான் கிளம்பிட்டா நீ எப்படி தனியா ரூம்ல இருப்ப.? உனக்கு வேற பேய் பயமாச்சே.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. நீயும் எங்க வீட்டுக்கே வந்துடுறியா.?" என்றுக் கேட்டாள் மீனா‌.

"பரவால்லப்பா.. நானும் எங்க வீட்டுக்கு கிளம்பிடுவேன்.. இல்லன்னா மூணு நைட்டுக்கும் வேற ரூம்ல தங்கிக்கிறேன்.." என்றாள் அபிநயா. ஒருவேளை அம்மா தன்னை வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று இப்போதே அவளுக்கு கவலையாக இருந்தது.

அவர்களின் பின்னால் நடந்து வந்த அன்புவையும் குணாவையும் இருவருமே கவனிக்கவில்லை. மீனா சொன்ன விசயம் அன்புவிற்கு புதிதாக இருந்தது. 'குட்டச்சிக்கு பேய் பயமா.?' என்று கேட்டது அவனின் பிசாசு மனம். இந்த சிறு தகவல் தனக்கு ஏன் இவ்வளவு ஆனந்தத்தை தருகிறது என்று எண்ணி வியந்தான் அவன். 'பேய்.. ஹ..ஹ..ஹா.. பேயே.. நீ எங்க இருக்க.? அர்ஜென்டா வந்து குட்டச்சிக்கு தரிசனம் தந்துட்டு போ.. அவ உன் வருகைக்காக காத்திருக்கா..' என்று சொல்லி துள்ளி குதித்தது அவனின் மனம்.

மீனா தன்னை திரும்பி பார்ப்பாளா தன்னோடு பேசுவாளா என்று ஏக்கமாய் காத்திருந்தான் குணா. ஆனால் அவளோ இவனை கண்டுக்கொள்ளவேயில்லை. 'எல்லாம் அன்புவால வரது.. இவன் பைனாக்குலரை வச்சிருந்ததுக்கு இவ என்னையும் சேர்த்து வெறுக்கறா..' என்று மனம் நொந்தான். அன்பு மேல் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

மீனாவும் அபிநயாவும் தங்களின் விடுதிக்கு செல்லும் வழியில் திரும்பி நடந்தனர். அவர்களோடு இணைந்து நடக்க இருந்த குணாவின் சட்டையின் காலரை பிடித்து நிறுத்தினான் அன்பு.

"எங்கே போற.?" என்றான்.

குணா தூரத்தில் செல்லும் மீனாவை பெருமூச்சோடு பார்த்தான். "இன்னும் இரண்டு நாளைக்கு அவளை பார்க்க முடியாது.. கடைசியா என்கிட்ட போய்ட்டு வரேன்னு சொல்லாம கூட கிளம்பிட்டா.." என்றான் வருத்தமாக.

"இரண்டு நாள் கழிச்சி இங்கேதானே வருவா.. அப்ப பார்த்துக்க.." என்ற அன்பு அவனை தன்னோடு இழுத்துக்கொண்டு நடந்தான்.

அபிநயாவும் மீனாவும் விடுதிக்கு வந்தபோது அங்கே வாசலிலேயே காத்திருந்தார் வினோத். தந்தையை கண்டதும் பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டாள் அபிநயா. "ஐ மிஸ் யூ ப்பா.." என்றாள் அவரின் கழுத்தை இறுக்கமா கட்டியபடி.

"நானும் மிஸ் யூ தான்.. ஆனா என் கழுத்தை விடு.. உடைச்சிடாத.. இன்னும் குழந்தையா நீ.?" என்றவர் அவளை தள்ளி நிறுத்தினார். கழுத்து வலித்தது. நீவி விட்டுக் கொண்டார். அபிநயா அதற்கே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். "உங்களுக்கு என் மேல பாசமே இல்ல.." என்றாள் அழுகுரலில்.

வினோத் சுற்றும் முற்றும் பார்த்தார். விடுதி வாசலில் நின்றிருந்த மாணவிகள் சிலர் இவர்களை பார்த்து ரகசியமாய் சிரித்தனர். வினோத்திற்கு நெற்றியில் அடித்துக் கொள்ள தோன்றியது.

"சின்ன புள்ளையை போல செய்யாத அபி.. நீயும் இப்ப வளர்ந்த பொண்ணு.. நீ எவ்வளவு ஸ்ட்ராங்க்ன்னு உனக்கே தெரியும்.. என் கழுத்தை இறுக்கினா எனக்கு வலிக்கத்தான் செய்யும்.. நான் மிஷினும் இல்ல.. நீ இன்னும் குழந்தையும் இல்ல.. போய் உன் திங்க்ஸை எடுத்துட்டு வா.. நாம வீட்டுக்கு கிளம்பலாம்.." என்றார்.

அபிநயா முகத்தை தூக்கிக் கொண்டே விடுதிக்குள் நுழைந்தாள். மீனா களுக்கென்று சிரித்துவிட்டு தோழியை பின்தொடர்ந்து ஓடினாள். இருவரும் தங்களது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

"இவ மீனு.. என் பிரெண்ட்.." என்று தந்தையிடம் அறிமுகப்படுத்தினாள் அபிநயா. அப்பா அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தார்.

"இவளை அப்படியே பஸ் ஸ்டான்ட்ல விட்டுட்டு போயிடலாம்.." என்ற அபிநயா பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

தயங்கி நின்ற மீனாவிடம் "ஏறுமா போகலாம்.." என்றார் வினோத்.

மீனா பைக்கில் ஏறி அமர்ந்தாள். பைக் அங்கிருந்து கிளம்பியது. மீனாவை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தங்களின் ஊர் நோக்கி பைக்கை ஓட்டினார் வினோத்.

வீட்டிற்கு வந்ததும் ஒரே கும்மாளமாக இருந்தது அபிநயாவிற்கு.

"அம்மா.. நான் இல்லாதபோது என்னென்ன பலகாரம் செஞ்சன்னு மறைக்காம சொல்லு.." என்று சமையலறையில் புகுந்து அனைத்து பாத்திரங்களையும் உருட்டினாள்.

"நாங்க பலகாரமே செய்யல அபி.." என்றாள் அவளின் பின்னால் வந்த ஆனந்தி.

"பொய் சொல்லல இல்ல.?" என கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தாள் அம்மா.

"இல்ல.. எனக்கு சந்தேகமாவே இருக்கு.. நானே கண்டுபிடிக்கறேன்.." என்றவள் சர்க்கரை டப்பாவை கையில் எடுத்தாள். அதிலிருந்த மெல்லிய கோட்டின் கீழே விரலை வைத்து அளந்தாள்.

"நாலு நாள் மூணு பேர் இரண்டு வேளை டீயோ காப்பியோ குடிச்சா இவ்வளவுதான் சர்க்கரை காலியாகும்.." என்றவள் சர்க்கரை டப்பாவை இருந்த இடத்திலேயே வைத்தாள். "ஆமா நீங்க ஸ்வீட் எதுவும் செய்யல.. ஆனா காரம் ஏதாவது செஞ்சிருந்தா.?" என்றாள் விழிகளை உருட்டியபடி.

ஆனந்தி நெற்றியில் அடித்துக் கொண்டாள். "மாமியார் இல்லாததுக்கு தனியா கொடுமை பண்ணவே பிறந்தியா நீ.?" என கேட்டாள்.

"சரி சரி விடு.." என்றவள் சமையலறையை விட்டு வெளியே நடந்தாள்.

"அடேய் அமுலு தம்பி.." என்று கத்தியபடி சென்று தீபக்கின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளினாள்.

"உன் அன்பு போதும்.. என் கன்னத்தை தனியா பிச்சி எடுத்துடாத.. என்னை விடு.." என்றான் அவன்.

"நான் உன்னை ஒரு வாரமா மிஸ் பண்ணேன்டா.." என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள். தீபக்கிற்கு அவள் சொல்வது கேட்டு ஆச்சரியமாக இருந்தது.

"நீ என்னை மிஸ் பண்ணியா.? நான்தான் கனவு காணுறனா.?" என்று குழம்பினான் அவன்.

"நிஜமாடா.." என்று அவனின் கன்னத்தை கிள்ளியவள் நேராக தன் அறைய நோக்கி ஓடினாள். அங்கே அந்த அறையில் அவளது பொருட்கள் ஒன்று கூட இல்லை. தீபக்கின் கட்டிலும் மேஜையும் அலமாரியும்தான் இருந்தன.

"என் கட்டில் எங்கே.? என் டிரெஸ்ஸிங் டேபிள் எங்கே.? என் பீரோ எங்கே.?" என்று கத்தினாள் அறையின் நடுவில் நின்றபடி. இவளின் கத்தல் சத்தம் கேட்டு வந்து கதவில் சாய்ந்தபடி நின்றான் தீபக்.

"எங்கே என் கட்டிலும் பொருட்களும்.? காலேஜ் போனவ திரும்பியே வரமாட்டான்னு நினைச்சி எல்லாத்தையும் எடுத்து எடைக்கு போட்டுடிங்களா.?" என்று முட்டை கண்களை உருட்டி கேட்டாள்.

"அட கொடுமையே.. உன் பொருளெல்லாம் மாடி ரூம்ல இருக்கு‌. இனி நீ அங்கேதான் தங்க போற.." என்றான் தீபக்.

"யாரு.? நானா.?" தன் நெஞ்சுக்கு நேரா சுட்டுவிரலை சுட்டிக் அதிர்ச்சியோடு கேட்டவளிடம் ஆமென தலையசைத்தான் தீபக்.

"நான் மாட்டேன்.." என்று தலையை ஆட்டினாள்.

"வளர்ந்த பொண்ணு மாதிரி நடந்துக்க அபி.. விடிய விடிய லைட்டை போட்டுக்கிட்டு கூட தூங்கு.. ஆனா இனி நீ தனியாதான் தூங்கணும்.. உன்னையெல்லாம் நாலு வருசம் முன்னாடி இருந்தே தனியா விட்டிருக்கணும்.. பேய் பிசாசுன்னு அதை சொல்லியே இத்தனை வருசம் ஓட்டிட்ட.. ஆனா இனி அப்படி ஏமாத்த முடியாது.. மரியாதையா தனியா தூங்கி பழகு.." என்று கட்டளையாக சொன்னாள் அம்மா.

அபிநயாவிற்கு அழுகை வரும்போல இருந்தது. "பச்சை புள்ளையை தனி ரூம்ல தூங்க சொல்றிங்களே.." என்றாள் கண்ணை கசக்கியபடி.

"பச்சை புள்ளைதானே நீ.? அப்புறம் ஏன் பக்கத்து வீட்டு பையனை அடிச்சி கையை காலை உடைக்கிற.?" என்று கேட்டான் தீபக்.

"இதுவும் அதுவும் ஒன்னா.?" என்று கேட்டாள் அவள்.

"சில்லறை புள்ளை மாதிரி இருக்காத.." என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள் அம்மா.

சந்தனக்கொடிக்கால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்கள் அன்புவும் குணாவும். இருள் அரை குறையாக சூழ்ந்து விட்டிருந்தது. குணா கையசைத்துவிட்டு தன் வீடு இருந்த திசையில் நடக்க ஆரம்பித்தான். அன்பு பேருந்து நிறுத்தத்தை சுற்றியிருந்த கடைகளை நோட்டம் விட்டான். கடை ஒன்றிற்குள் புகுந்தவன் பேய் மாஸ்க் இரண்டை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். மாஸ்கை பார்த்து சிரித்தவன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN