சிக்கிமுக்கி 19

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு உணவு உண்ணும்போது கூட தூக்கிய முகத்தை இறக்கவேயில்லை அபிநயா.

உணவை கூட ஒன்றிரண்டு பருக்கையாகதான் எடுத்து தின்றாள்.

"உன் நல்லதுக்குதான் சொல்றோம் நாங்க.." என்றார் அப்பா.

உதட்டை பிதுக்கியபடி அரை அழுகையோடு அவரை பார்த்தாள் அபிநயா.

"தனியா தூக்கம் வராதுப்பா.. எனக்கு ஒரு வருசம் டைம் கொடுங்க.." என்றாள் கெஞ்சலாக.

"உனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு அபி..தனியொரு ரூம்ல தூங்க கூட உனக்கு தைரியம் இல்லன்னா பிறகு எப்படித்தான் நீ சாதிப்ப.?" என்றாள் அம்மா.

"நான் சாதிக்கவும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. நான் தனியா தூங்க மாட்டேன்.." என்று ஒரே முடிவாக சொல்லிவிட்டாள் அபிநயா.

அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பா எதையோ பேச முயன்றார். அவரை கை காட்டி தடுத்தாள் அம்மா. "இன்னைக்கு நான் அவ கூட அவ ரூம்ல தூங்குறேன்.. கொஞ்ச நாளைக்கு அவளுக்கு துணையா இருக்கேன்.." என்றாள்.

அபிநயா அம்மாவை அணைத்துக் கொண்டாள். "தேங்க்ஸ்ம்மா‌.‌." என்றாள்.

தீபக் சிரிப்போடு பார்த்தான். இவள் எப்படித்தான் உருப்படுவாளோ என்று சந்தேகமாக இருந்தது அவனுக்கு.

இரவு மணி ஒன்பதை தாண்டி விட்டிருந்தது. அபிநயாவின் அறையில் பளிச்சென்று எரிந்துக் கொண்டிருந்த விளக்கை அணைத்தாள் ஆனந்தி. அபிநயாவின் அருகே சென்று படுத்தாள். அபிநயா அம்மாவின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"ஸ்வீட் மம்மி.." என்றவள் ஆனந்தியின் தாடையில் முத்தம் தந்தாள்.

"அமைதியா தூங்கு புள்ளை.." என்ற ஆனந்தி கொட்டாவி விட்டபடியே கண்களை மூடினாள்.

அபிநயா அம்மாவை அணைத்தவாறே உறங்கிப் போனாள்.

அன்பு தனது அறையில் அமர்ந்திருந்தான். கையில் இருந்த பேய் முகமூடிகளை மாறி மாறி பார்த்தான். அதை முகத்தில் போட்டுக்கொண்டு கண்ணாடியை பார்த்தான். மாஸ்க் என்பதை பார்த்த நொடியே கண்டுப்பிடித்து விடுவார்கள் என்பது புரிந்தது. அந்த மாஸ்க் குறை போல தோன்றியது.

'பார்த்த உடனே ரத்தம் கக்கி சாவுற மாதிரி மாஸ்க் வேணும்ன்னா எங்கடா போறது.?' என கேட்டது அவனின் மனசாட்சி. சரி இதுவே இருக்கட்டுமென்று நினைத்தவன் மாஸ்கை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

அபிநயா ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தாள். ஆனந்தி ஓசையில்லாமல் அந்த கட்டிலை விட்டு இறங்கி நின்றாள். மகளின் மீது பெட்சீட்டை போர்த்தி விட்டாள். இதையெல்லாம் நான்கு வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டுமோ என்று யோசித்தவள் சத்தமில்லாமல் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்தாள்.

வினோத்தும் தீபக்கும் இவளுக்காக காத்திருந்தார்கள். இவள் வந்ததும் "தூங்கிட்டாளா அவ.?" என்று கிசுகிசுப்பாக கேட்டார்கள்.

"ம். தூங்கிட்டா.." என்றாள் ஆனந்தி.

"அது ஒரு லூசும்மா.. எங்கேயாவது நாம் குரைச்சாலோ இல்ல கெட்ட கனவு கண்டாலோ எழுந்துடுவா.." என்றான் தீபக்.

"அவ ரூம் பேன் சத்தமா சுத்தும். அதனால எந்த சத்தமும் அவளுக்கு கேட்காது. மறுபடியும் காலையில்தான் எழுவா.." என்ற ஆனந்தி "நீ போய் தூங்குடா.." என்று மகனை விரட்டினாள்.

அக்கா நிஜமாகவே இந்த இரவை கடந்து விடுவாளா என்ற சிந்தனையிலேயே உறங்க சென்றான் தீபக்.

காலையில் கண் விழித்தாள் அபிநயா. கட்டிலில் தான் மட்டும் உறங்கிக் கொண்டிருப்பது புரிந்ததும் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

"அம்மா.." என அழைத்தபடியே அறையை விட்டு வெளியே ஓடினாள்.

கணவனுக்கு காப்பியை தந்துக் கொண்டிருந்த அம்மா இவளை முறைத்தாள். "எதுக்குடி இப்ப காலங்காத்தால கத்துற.?" என்றாள்‌.

"ஏன் நீ எழுந்து வந்துட்ட.?" கோபமாக கேட்ட மகளை இவளும் கோபமாகவே பார்த்தாள்.

"விடியற்காலையில் எழுந்து வரலன்னா இந்த வேலையெல்லாம் யார் உன் பாட்டியா செய்வா.?" என்று கேட்டவள் தனது அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க சென்றாள்.

"நான் எந்திருக்கும் வரைக்கும் நீயும் தூங்க வேண்டியதுதானே.." என்று சிணுங்கினாள் அபிநயா. அவளை மற்ற மூவரும் கண்டுக் கொள்ளவேயில்லை.

"ஐ ஹேட் யூ மம்மி.." என்றவள் தனது அறைக்கே திரும்பி வந்தாள். பெட்சீட்டை முகத்தோடு போர்த்தியபடி கட்டிலில் விழுந்தாள். காகம் ஒன்று கரைந்து சென்றது. மேஜையின் மீது இருந்த தன் பொம்மை வடிவ கடிகாரத்தை எடுத்து பார்த்தாள். மணி ஏழரையை தாண்டி விட்டிருந்தது.

"நாம லேட்டா எழுந்தா அம்மாவும் அதே நேரத்துக்கு எப்படி எழுவாங்க.?" என தனக்குதானே கேட்டாள்.

அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த அம்மா காப்பி டம்ளரை கொண்டு வந்து மேஜையின் மீது வைத்துவிட்டு போனாள்.

அறையின் கதவு வரை சென்றவள் "பல்லை விளக்கிட்டு குடிடி.." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அபிநயா பெட்சீட்டை எறிந்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். கீழே ஓடினாள். அவசரமாக பல்லை தீட்டிவிட்டு திரும்பி வந்தாள்.

"வீட்டு காப்பி குடிச்சி வருசமே ஆயிடுச்சு.." என்றபடியே காப்பி டம்ளரை கையில் எடுத்தாள். வாசனை மிகவும் பிடித்திருந்தது. ஒரு விழுங்கு குடித்தாள். தேன் சுவையாக இருந்தது.

"அற்புத காலையில் அருஞ்சுவை காப்பி.." என்றவளுக்கு எதுவோ ஒன்று குறைந்தது போல இருந்தது.

"அட.. ஜன்னல்.." என்றவள் ஜன்னலை திறந்து வானத்தை பார்த்தாள்.

"நீல வானம்.. சூடா காப்பி.. காலை நேர தென்றல்.. கரெக்ட் காம்பினேசன்.." என்றவள் காப்பியை ருசிக்க ஆரம்பித்தாள்.

நொடிக்கு நொடி ரசித்து ருசித்தாள் அந்த ஒரு டம்ளர் காப்பியை.

நிமிடங்கள் கடந்தபோது பாடல் முணுமுணுப்பு ஒன்று கேட்டது அபிநயாவிற்கு. வானத்தில் இருந்த பார்வையை நேராக திருப்பினாள். அன்புதான் பாடல் ஒன்றை முனகிக் கொண்டிருந்தான். அவனை பார்த்தவள் சட்டென ஒற்றை கையால் தன் கண்களை மூடினாள்.

குளித்து முடித்து வந்திருந்த அன்பு ஒற்றை துண்டை மட்டும் இடுப்பில் கட்டியபடி கண்ணாடியின் முன்னால் நின்று தனது கையின் வலிமையையும் கழுத்தின் வலிமையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அபிநயா இறுக்கமாக மூடியிருந்த கண்களை லேசாக திறந்தாள். கை விரல்களை சற்று நகர்த்தினாள். எதிர் அறையில் முக்கால் குறையாக இருந்தவனை இதயம் படபடக்க பார்த்தாள். மறுகையில் இருந்த காலி டம்ளர் அவளோடு சேர்ந்து நடுங்கியது.

சின்ன துண்டை மட்டுமே இடுப்பில் கட்டியிருந்தான் அவன். முதுகிலும் காலிலும் தலை முடியிலும் ஈரம் இருந்தது.

"எங்க அம்மா தாத்தாவோட கோவணம் கூட இதை விட அதிகமா கவர் பண்ணுமே.. இப்படி ஒரு துண்டை கட்டிக்கறதுக்கு பதிலா அப்படியே திரியலாமே.. இந்த கருமத்துக்கு ஒத்த துண்டு மட்டும் எதுக்கு.?" என அவள் தனக்குள் கேட்ட அதே நேரத்தில் அந்த துண்டும் நழுவி விழுந்தது. அபிநயா இறுக்க மூடிய கண்களோடு சட்டென தரையில் அமர்ந்தாள்.

"காலங்காத்தால என்ன கருமத்தை பார்த்திருக்க அபி.?" என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

"அறிவு கெட்ட பரதேசி.. இன்னமும் அமுல் பேபின்னு நினைப்பா.? ச்சை.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

அரை நொடி நேரத்தில் பார்வையில் பதிந்ததை விரட்ட முயற்சித்தாள். ஆனால் அவனேதான் மூடிய கண்களிலும் தென்பட்டான்.

"எருமை.. பிசாசு.." என்று திட்டியவளுக்கு எழுந்து நிற்கவும் மனம் வரவில்லை. அமர்ந்தபடி அமைதியாக இருக்கவும் மனம் வரவில்லை. நெற்றியில் வியர்த்த வியர்வை துளிகளை புறங்கையால் ஒற்றி எடுத்தாள். கையில் இருந்த டம்ளரை தூரமாக வைத்தாள். தயக்கத்தோடு எம்பியவள் எதிரில் இருந்த அறையை பார்த்தாள். உள்ளாடை அணிந்திருந்தவன் இப்போதும் கூட வேறு உடைகளை அணியாமல் பாடலை முனகியபடி கண்ணாடியின் முன் நின்று ஃபேஷன் ஷோ காட்டிக் கொண்டிருந்தான்.

"இப்ப கொஞ்சம் லட்சணமா இருக்கான்.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தான். தனது கல்லூரி பேக் எங்கே என்று தேடினாள். பேக்கை தேடி எடுத்தவள் அதிலிருந்த ஃபோனை எடுத்துக் கொண்டு வந்தாள்.

"டிரெஸ் இல்லாம எடுத்தாதான் தப்பு.. அதான் ராசா இப்ப டிரெஸ் போட்டுட்டு இருக்காரே.." என்றவள் மர்ம சிரிப்போடு அவனை புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தாள்.

"நான் டிரெஸ் மாத்தியதை நீ பார்த்த இல்ல.. மகனே இனி பாருடி என் கச்சேரியை.." என்று சூளுரைத்தாள்.

எப்போதும் மூடியிருக்கும் எதிர் வீட்டு ஜன்னலுக்கு திடீர் உயிர் வந்து திறந்து விட்டதை கடைசி வரை அன்பு கவனிக்கவேயில்லை.

அன்றைய நாள் முழுக்க அன்புவை பழி வாங்குவதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் அபிநயா. ஃபோனில் இருக்கும் புகைப்படங்கள் அவளுக்கு துள்ளலை தந்தது.

அன்றைய நாள் அவளின் மன துள்ளலோடேதான் முடிந்தது.

இரவு வந்தது. ஆனந்தி நேற்றைய நாளை போலவே இன்றும் அபிநயாவோடு தூங்க வந்தாள்.

அன்பு தன் வீட்டு மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்தான். எதிர் வீட்டை நோட்டம் விட்டான். எதிர் வீட்டின் கட்டிட அமைப்பு இன்னும் அவனின் மூளையில் பதிவாகிதான் இருந்தது. கீழே உள்ள வலது பக்க அறையில்தான் அபிநயா இருப்பாள் என்று குத்துமதிப்பாக கணக்கிட்டான். ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்தால் அதன் பிறகு திருடன் என்று போலிஸில் பிடித்து தந்து விட்டால் என்ன செய்வது என்றும் தயங்கினான்.

"இழுத்தா மலை.. போனா கயிறு.." என்று முடிவெடுத்தவன் நேரம் இன்னும் கொஞ்சம் கடந்துச் செல்லட்டும் என்று காத்திருந்தான்.

அபிநயா அம்மாவை இறுக்க அணைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா நான் இல்லாத இந்த ஒரு வாரமும் எல்லாரும் சந்தோசமா இருந்திங்களா.?" என்றாள்.

ஆனந்தி பெருமூச்சி விட்டாள்.

"அப்படியெல்லாம் இல்ல அபி.. நீ இல்லையேன்னு வருத்தமாதான் இருந்தது‌. ஆனா என்ன செய்ய முடியும்.? நீ படிச்சாதானே உனக்கு நல்லது‌.?" என்றாள்.

"ஆமாம்மா.." என்றவள் சில நொடிகளுக்கு பிறகு "நான் இல்லாதபோது தீபக் என்னை திட்டினானா அம்மா.?" என கேட்டாள்.

"இல்லடி.. அவன் ஏன் திட்டப்போறான்.? அவன் உன் மேல ரொம்ப பாசமா இருக்கான்.." என்றாள் ஆனந்தி.

"பொய் சொல்றியா.?" என மகள் கேட்க, ஆனந்திக்கே சலிப்பாக இருந்தது.

"அமைதியா தூங்கு அபி.." என்றுவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

அபிநயா அப்படியும் இப்படியுமாக திரும்பி படுத்தாள். சற்று நேரத்தில் உறங்கியும் போனாள்.

அன்பு இரவை ரசித்தபடி மொட்டை மாடியில் நடை பழகிக் கொண்டிருந்தான். அவனின் வீட்டில் இருந்த அனைவரும் தூங்கி விட்டார்கள் என்பதன் ஆதாரமாய் ஆழ்ந்த மௌனம் நிலவியது.

ஆனந்தி எழுந்து அமர்ந்தாள்‌. மகளை பார்த்தாள். "இதெல்லாம் என்னைக்கு வளருமோ.?" என்று சலிப்போடு கேட்டாள். தூங்குவதற்கு முன்பே அபிநயா உதைத்து தள்ளிவிட்டிருந்த பெட்சீட்டை எடுத்து அவளின் மீது போர்த்தினாள். முகத்தில் மோதிக் கொண்டிருந்த கேசங்களை மெதுவாக விலக்கி விட்டாள். மகளை கனிவோடு பார்த்தாள். பின்னர் அந்த அறையை விட்டு புறப்பட்டாள்.

அன்பு தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். மணி பதினொன்று என்று காட்டியது. மொட்டை மாடியின் கைப்பிடி சுவரின் மீது ஏறினான். இடையில் இருந்த மரத்தின் மீது தாவினான். மரத்தின் வழியாக நடந்துச் சென்றவன் அபிநயா வீட்டின் மாடியில் தாவி குதித்தான்.

இரு வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் கட்டியிருந்தார்கள் ஆறுமுகமும் வினோத்தும். ஆனால் இரு வீட்டுக்கும் பொதுவில் உள்ள மரத்தை பயன்படுத்தி பக்கத்து வீட்டு திருடன் வருவான் என்று எண்ணியிருக்கவே மாட்டார் வினோத்.

மொட்டை மாடியின் கதவின் அருகே வந்தான் அன்பு. கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது.

"ஆமா இது பெரிய பேலஸ்.. அனா ஆவனா கத்துக்கும் முன்னாடியே இந்த கதவை திறக்கத்தான் கத்துக்கிட்டேன் நான்.." என்று சொல்லி சிரித்தவன் கையோடு எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் சீப்பை கதவு இடுக்கின் வழியே உள்ளே நுழைத்தான். இரும்பு கதவின் வெற்று தாழ்பாள் கம்பியினை சீப்பை வைத்து மேலே தூக்கி நகர்த்தி தள்ளினான். கதவின் தாழ் விலகிக் கொண்டதற்கான சத்தம் கேட்டது.

"பத்து பைசா பூட்டை வாங்கி போட மனசிருக்கா.? மகளை போலவே அப்பனும் சரியான பிசினாரி.." என்று நடு இரவில் வினோத்தை திட்டியவன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். வரிசையாக தெரிந்த படிக்கட்டில் பார்த்து இறங்கினான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த முகமூடியை கையில் எடுத்தான். நான்கு படிகள் இறங்கியவன் அங்கிருந்த அறையில் பேன் ஓடும் சத்தம் கேட்டு நின்றான்.

"இந்த ரூம்ல யார் இருக்கா.? என கேட்டவன் தயக்கமாக கதவை பார்த்தான். அறை கதவு கால் வாசி திறந்திருந்தது.

"ஒருவேளை ஆனந்தி அத்தையும் வினோத் மாமாவும் இருக்காங்களோ.." என்று நினைத்தவன் "இல்ல.. கதவு திறந்திருக்கு.. கண்டிப்பா தீபக் மச்சான் ரூம்தான்.." என்றவன் கதவை சற்று உள்ளே தள்ளினான். இரவு விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அபிநயா அவனுக்கு முகம் தெரியும்படி ஒருக்களித்து படுத்திருந்தாள்.

"அட நம்ம குட்ட.." என்றவனுக்கு கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இருந்தது.

"அடடா.. பால் வண்ண முகமாம்.. பளிங்கு கன்னமாம்.. காட்டருவி கேசமாம்.. கலைஞனின் எழுத்தாய் புருவமாம்.. செந்தீயில் வரைந்த இதழ்களாம்.. இவளல்லவோ அழகு குட்டச்சி.? பேய்க்கு பயந்தவளாம்.. ஆனால் தனியாக தூங்கும் அளவுக்கு தைரியசாலியாம்.." என்று குஷியோடு வர்ணித்தவன் "இதோ வந்துட்டேன் குட்ட.. உன் அழகு முகத்தை போலவே இருக்கும் இன்னொரு அழகு முகம் என்கிட்டயும் இருக்கு.." என்றபடியே மாஸ்கை எடுத்து முகத்தில் மாட்டினான்‌.

"எவ்வளவு சந்தோசமப்பா இந்த குட்டச்சியை பழி வாங்குறதுல.?" என்று மனதார சொல்லியவன் கதவை திறந்து உள்ளே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN