சிக்கிமுக்கி 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா சுகமான கனவு ஒன்றின் வசத்தில் இருந்தாள்.

அவளின் காதோரத்தில் என்னவோ படர்ந்தது போல இருந்தது. தூக்கத்திலேயே அதை தள்ளி விட்டாள். மீண்டும் அதுவே அவளின் காதோரம் படர்ந்தது. அவளின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்துக் கொண்டிருந்தது.

அன்பு அவளின் காதோரம் தன் விரல்களால் கோலம் வரைந்துக் கொண்டிருந்தான்.

"கும்பகர்ணி மாதிரியே தூங்கறா.." என்றவன் அவள் எழாததை கண்டு அவளின் காது நுனியை பிடித்து கிள்ளி வைத்தான்.

அபிநயா படக்கென எழுந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. அருகில் தூங்கிக் கொண்டிருந்த அம்மாவையும் காணவில்லை. அதற்குள் பொழுது விடிந்து விட்டதா என்று குழம்பினாள். கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றாள். கண்கள் இரண்டும் நெருப்பாக எரிந்தன. அதுவே சொன்னது இன்னும் பொழுது விடியவில்லை என்று. காதை நீவினாள். வலித்தது. ஏன் வலிக்கிறது என்று குழம்பினாள்.

"அம்.." அம்மாவை அழைக்க வாய் திறந்தவள் அறையினுள் சரக்கென்று ஏதோ சத்தம் வரவும் சிலையாக நின்றாள். பயத்தோடு திரும்பி பார்த்தாள். கட்டிலின் அடியிலிருந்து அந்தப்புறமாக வெளிவந்த ஐவிரல்கள் கட்டிலின் நுனியை பற்றின. ஆரஞ்சு வண்ண இரவு விளக்கில் அந்த ஐ விரல்களும் செவ்வண்ணமாக தெரிந்தன. அபிநயா பயத்தில் உறைந்து போனாள். ஐ விரல்களை தொடர்ந்து கை ஒன்று வெளிவந்தது. அபிநயாவால் எதுவும் பேச கூட முடியவில்லை. வார்த்தைகள் அவளின் நாவை மீறி வர மறுத்தன. கையை தொடர்ந்து உருவம் ஒன்று வெளிவந்தது.

'பேய்..' என்றது அவளின் மனம். ஆனால் கத்த முடியவில்லை. முயற்சித்தாள். ஆனாலும் காற்று கூட உதடுகளை மீறி வரவில்லை. சிலையாக நின்றுக் கொண்டிருந்தவளை நோக்கி நடந்தது அந்த உருவம். விழிகளை அசைக்காமல் நின்றுக் கொண்டிருந்த அபிநயா அப்படியே பின்னால் சாய்ந்தாள். அன்பு பாய்ந்தோடிப்போய் அவளை பிடித்தான். மயங்கி சரிந்தவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"அடிப்பாவி.. பேய்க்கு இவ்வளவு பயமா.?" என கேட்டவனுக்கு அவளை பார்க்கையில் பரிதாபமாக இருந்தது‌. அவளை தூக்கி வந்து கட்டிலின் மீது படுக்க வைத்தான்.

"நெஞ்சடைச்சி செத்துட்டாளா.? கொலை கேஸ்ல உள்ளே போயிடுவேனோ.?" என்று புலம்பியவன் அவளின் நெஞ்சின் மீது காது வைத்து இதய துடிப்பை கேட்டான். "லப்டப் லப்டப்.." என்று இதய துடிப்பின் ஓசை தெளிவாக கேட்டது. அதன்பிறகே அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

"இவளை பயமுறுத்த வந்து நான்தான் கடைசியில் பயந்து போனேன்.." என்று புலம்பியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். மேஜை மேல் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்து வந்தான். அபிநயாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

அபிநயா மெல்ல கண்களை விழித்தாள். முகத்தில் இருந்த ஈரத்தை உணர முடிந்தது அவளால். எதிரில் இருந்த பேயையும் பார்த்தாள்.

"அம்மா.." என்று பெருங்குரலெடுத்து கத்தினாள்.

அபிநயாவின் கத்தலில் பயந்து போய் ஓரடி தள்ளி விழுந்தான் அன்பு. முகத்தில் மாஸ்க் இருப்பதையே மறந்து விட்டிருந்தான் அவன். இப்போது அவள் கத்தியபிறகே தான் செய்த முட்டாள்தனம் அவனுக்கு புரிந்தது.

'மயக்கம் போட்டு கிடந்தவளை எழுப்பி நீயே வம்புல மாட்டிக்கிட்டியேடா..' என்று புலம்பியது அவன் மனம்.

அபிநயா பேயை கண்டு பயந்து விட்டாள். பயத்தில் என்ன செய்வதென்றே அவளுக்கு தெரியவில்லை.

சுற்றம் முற்றும் பார்த்தவள் தலையணையை எடுத்து பேயின் மீது எறிந்தாள். அப்போதுதான் எழலாம் என்று நினைத்திருந்தான் அன்பு. தலையணை வந்து மோதியதில் மீண்டும் கீழே விழுந்தான்.

தலையணையை ஓரம் தள்ளிவிட்டு எழுந்துவனை கண்டு மீண்டும் மீண்டும் கத்தினாள் அபிநயா.

அன்பு கைகளை நேராக கொண்டு வந்தான். விரல்களை கோணல் மாணலாக அசைத்தபடி அவளை நெருங்கினான்.

"ஆ‌... ஆ.." என்று மீண்டும் உச்ச குரலில் கத்தினாள் அவள்.

அவள் கத்தியதில் பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் எழுந்து விட்டனர். இரு வீட்டில் இருந்த அனைத்து விளக்குகளும் எரிந்தன.

'காது செவிடா போயிடும் போல இருக்கு. போதும்டா சாமி போயிடலாம்..' என முடிவெடுத்த அன்பு கடைசி முயற்சியாய் அவளின் தலைமுடியை பிடித்து இழுத்துவிட்டு வெளியே ஓடினான்.

அவன் கதவை திறந்த அதே நேரத்தில் வினோத்தும் தீபக்கும் படிகளில் ஏறி மேலே வந்திருந்தனர். அவர்களை கண்டு பயந்து போய் நின்றான் இவன். ஆனால் தீபக் இவனை கண்டு பயந்துப்போய் "பேய்.." என கத்திக்கொண்டே பின்னால் ஓடினான்.

தீபக் தனக்கு பின்னால் வந்த அப்பாவின் மீது சாய்ந்ததில் அவர் கால் தடுமாறி கீழே விழுந்து உருண்டார். பயந்துப் போய் நின்றுக் கொண்டிருந்த அன்புவிற்கு சிரிப்பு வரும்போல இருந்தது.

ஆனந்தி படிகளின் ஆரம்பத்தில் ஏறினாள். வினோத்தும் தீபக்கும் தடுமாறி எழ முயன்றனர். அன்பு மாடியை நோக்கி ஓடினான்.

"பேய்.. பேய்.." என்று கத்திக் கொண்டிருந்த தீபக் பேய்க்குரியவன் மாடி வழியாக தப்பிக்க முயற்சித்த பிறகுதான் அது பேய் அல்ல மனிதன் என்பதை கண்டுக் கொண்டான்.

மாடி கதவை திறந்து வெளியே வந்த அன்பு அந்த கதவை வெளிப்பக்கமாக தாளிட்டான்.

"திருடன்.. திருடன்.." என்று கத்த ஆரம்பித்த தீபக் மாடியை நோக்கி ஓடினான். ஆனால் மாடி கதவு தாளிடப்பட்டு இருந்தது.

"யாரோ கத்தினாங்க இல்லையா.?" என்று கேட்டாள் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து விளக்குகளை ஒளிர விட்ட அர்ச்சனா.

"ஆமா.." என்ற ஆறுமுகம் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். பக்கத்து வீட்டில் மட்டும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மீண்டும் சத்தம் கேட்கிறதா என்று பொறுத்திருந்தார். ஆனால் எந்த சத்தமும் கேட்கவில்லை.

அதே நேரத்தில் அபிநயா வீட்டு மாடி கைப்பிடி சுவரில் ஏறிய அன்பு வேகமாக மரத்தின் மீது தாவினான். அடுத்த பத்தாம் நொடியில் தனது அறையில் இருந்தான் அவன். மூச்சிரைத்தது அவனுக்கு. அதை விட அதிகமாக சிரிப்பு வந்தது.

"குட்டச்சி கத்துனது கூட பரவால்ல.. ஆனா தீபக்கும் வினோத் மாமாவும் விழுந்ததுதான் செம காமெடி.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு வயிற்றை பிடித்தபடி சிரித்தான்.

"பக்கத்து வீட்டுலதான் லைட் எரியுது.. ஆனா எந்த சத்தமும் கேட்கல.. யாராவது கெட்ட கனவு கண்டுட்டு கத்தினாங்களோ என்னவோ.?" என்றபடி மனைவியின் அருகே வந்தார் ஆறுமுகம்.

"அப்படிதான் போல.. சரி வாங்க போய் தூங்கலாம்.." என்ற அர்ச்சனா விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க சென்றாள்.

"திருடன் தப்பிச்சிட்டான்ப்பா.." என்றபடி பின்னால் திரும்பி பார்த்து சொன்னான் தீபக்.

"நீ கத்துனதுக்கே அவன் ஓடிட்டான்.. திருடனை பிடிக்கற ஆளா நீ.?" என்று திட்டினார் வினோத். தன்னையும் செயல்பட விடாமல் மேலே விழுந்து தன்னையும் கீழே தள்ளிய மகனின் மேல் கோபமாக வந்தது அவருக்கு.

"ஆளுக்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திட்டு போனா மட்டும் போதாது.. உன்னால முடியலன்னாலும் மத்தவங்களுக்காவது தடை போடாம இருக்கணும்.." என்று எரிந்து விழுந்தவருக்கு முதல் சந்தேகமே அன்பு மேல்தான் வந்தது. அந்த வீட்டில் உள்ளோரை தவிர வேறு யாராலும் தன் வீட்டிற்குள் சுலபமாக வந்து செல்ல முடியாது என்பதை அவரே அறிவார்‌. அந்த வீட்டில் பிறந்து அவரை இப்படியெல்லாம் இம்சிப்பது அன்பு ஒருவன்தான் என்பதால் அவரால் அவனை தவிர வேறு யாரையும் சந்தேகிக்க முடியவில்லை. தீபக்கிற்கும் ஆனந்திக்கும் கூட அன்பு மீதேதான் சந்தேகம் வந்தது. அவனை தவிர வேறு யாரும் இந்த சில்லறை வேலைகளை செய்ய மாட்டார்கள் என்பது அவர்களின் தெளிவான எண்ணமாக இருந்தது.

மகளின் அறைக்குள் நுழைந்தார் வினோத்.

"அப்பா.. பேய்.." என்று அழுதவளை அருகில் சென்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டவர் அவளின் முதுகை வருடி தந்தார்.

"பேய் இல்ல.. ஏதோ திருடன்.. பயப்படாதே.." என்றார் அப்பா. தன் மகளால் பேயை சமாளிக்க முடியாதே தவிர திருடனை சமாளிக்க இயலும் என்று நம்பினார் அவர்‌. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அபிநயாவின் அழுகை சட்டென்று நின்று போனது.

"திருடனா.?" என்றாள் அதிர்ச்சியோடு.

ஆமென தலையசைத்தார் அவர். "எவனோ ஒரு திருடன்தான் பேய் மாஸ்க் போட்டுட்டு வந்திருக்கான்.." என்றான் தீபக். 'வீணா போன கோணக்காலன் அநியாயமா என்னையும் சேர்த்து பயமுறுத்திட்டான்..' என்று மனதுக்குள் அவனை திட்டினான் தீபக்.

அபிநயா அப்பாவை விட்டுவிட்டு சென்று தன் பீரோவை திறந்தாள்.

"பிளாஸ்டிக் உண்டியல்ல ஐநூறு ரூபாய்க்கும் மேல இருந்துச்சிப்பா.." என்றவள் பதட்டமாக சென்று உண்டியல் இருந்த இடத்தை தேடினாள். உண்டியல் அங்கேயேதான் இருந்தது. ஆனந்தி தன் மகளின் சிறு பிள்ளைதனத்தை எண்ணி வருத்தப்பட்டாள்.

"காசு இருக்குப்பா.." என்றபடி திரும்பினாள் அபிநயா.

வினோத் எழுந்து மகளின் அருகே வந்தார். "நீ தூங்கு.. திருடனை பத்தி காலையில் பேசிக்கலாம்.." என்று தலையை வருடி விட்டார். மனைவியை இங்கேயே உறங்க சொல்லி சைகை காட்டிவிட்டு வெளியே நடந்தார்.

திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த மகனின் அருகே வந்த வினோத் "நீயும் போய் தூங்கு.." என்றார்.

வீட்டின் பூட்டை எடுத்து வந்து மாடி கதவை தாழிட்டார். தனது அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்தவருக்கு உறக்கமே வரவில்லை. அன்பு ஏன் இப்படி செய்கிறான் என்று அவன் மீது கோபப்பட்டார்.

அபிநயா அம்மாவை இறுக்க கட்டிக் கொண்டாள்.

"எங்கம்மா போன நீ.?" என்றாள்.

"வயித்தை கலக்குதுன்னு பாத்ரூம் போயிருந்தேன்டி.. அதுக்குள்ள இவ்வளவு கலாட்டா.." என்று சொல்லி சமாளித்தவளுக்கு தன் மகளை தாங்கள் தைரியசாலியாக மாற்ற முயற்சிக்கும் இந்த நேரத்திலேயே அன்பு பேயாக மாறி வர வேண்டும் என்று சலிப்பாக இருந்தது.

மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேளையாக பக்கத்து வீட்டிற்கு சென்று கதவை தட்டினார் வினோத். காப்பி போட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா வந்து கதவை திறந்தாள்.

வினோத்தை கண்டவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை‌. சில நொடிகள் தயங்கி நின்றாள்.

"வாங்க அண்ணா.." என்றாள். அதை தவிர வேறு என்ன சொல்வதென்றும் அவளுக்கு தெரியவில்லை.

வாசலுக்கு சென்ற மனைவி திரும்பி வராததால் விருந்தாளி யாரென்று பார்க்க வாசலுக்கு வந்தார் ஆறுமுகம். வினோத்தை கண்டு அவரும் தயங்கி நின்றார்.

"என்ன வேணும்.?" என்றார் சில நொடிகளுக்கு பிறகு.

"நேத்து நைட் பேய் வேசம் போட்டுக்கிட்டு திருடன் ஒருத்தன் எங்க வீட்டுக்கு வந்துட்டான். வந்தவன் வீட்டோட மாடி வழியா வந்திருக்கான். எந்த பொருளையும் எடுத்துட்டு போகல. ஆனா என் பொண்ணு ரூம்க்குள்ள மட்டும் புகுந்திருக்கான்.." என்றார்.

ஆறுமுகத்துக்கும் அர்ச்சனாவுக்கும் யார் அந்த திருடன் என்று தெளிவாக புரிந்தது. இருவருக்கும் மகன் மீது கோபமாக வந்தது.

"திருடன்னு சொல்லி போலிஸ்ல கம்ப்ளைண்ட் தர ஒரு நிமிசம் கூட ஆகாது எங்களுக்கு. ஆனா தலைமுறை தலைமுறையா நல்ல முறையில் பழகிட்டு வந்த நம்ம குடும்பம் இரண்டும் ஏற்கனவே இவங்களால பிரிஞ்சிதான் இருக்கு.. அதை இன்னும் பெருசு பண்ண வேண்டாமேன்னுதான் இதை போலிஸ்ல சொல்லாம உங்கக்கிட்ட வந்து சொல்றேன்.. இனியாவது அடுத்த வீட்டு மாடியில் ஏறி குதிக்க வேணாம்ன்னு உங்க பையனுக்கு சொல்லுங்க.." என்ற வினோத் தன் வீட்டை நோக்கி நடந்தார்.

அர்ச்சனாவுக்கும் ஆறுமுகத்துக்கும் அவமானத்தில் முகம் கறுத்துப் போய் விட்டது.

அபிநயா காலையில் கண் விழித்த உடனே அவளுக்கு நினைவிற்கு வந்தது அந்த பேய் திருடன்தான். அவன் எதையாவது திருடி சென்றிருப்பானோ என்று யோசித்து குழம்பினாள். எழுந்து சென்று பீரோவை திறந்து அனைத்தையும் சரி பார்த்தாள். வைத்த பொருட்கள் வைத்தபடியே இருந்தன. திருடன் எதையும் திருடவில்லை என்பது அவளுக்கே நிச்சயமாக தெரிந்தது. அதே வேளையில் கட்டிலின் கீழே தரையில் இருந்த ஒரு பொருளும் அவளின் கண்களுக்கு தெரிந்தது.

அருகே சென்று அந்த பொருளை கையில் எடுத்தாள். ஏ என்ற ஆங்கில எழுத்து டாலரை கொண்ட கழுத்து செயின் அது.

"இந்த செயினை எங்கேயோ பார்த்திருக்கேனே.." என்று யோசித்தவள் தனது ஃபோனை தேடி எடுத்தாள். அன்புவின் புகைப்படத்தை பார்த்தாள். அவனின் கழுத்தில் இருந்த அதே செயின்தான் அது என்பது தெளிவாக புரிந்தது அவளுக்கு.

"அடேய் கோணக்காலா.. செத்தடா நீ.." என்று பற்களை கடித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN