முகவரி 23

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகவரி 23

மகளுடனே இருந்தவனுக்கு திடீரென வேலை வர... “ஷிதா, எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. நீயும் கிளம்பு… உன்னை வீட்டில் விட்டுவிடுறேன். நீயும் கொஞ்ச நேரம் ஓய்வு எடு. ஆதி இப்போ வந்துவிடுவான். பேபிக்கு வேற ரூம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கேன். நைட் நீயும் நானும் பேபி கூடவே இருக்கலாம்” எல்லாவற்றையும் அவன் திட்டத்தோடு சொல்ல, சரி என்று கணவனோடு கிளம்பினாள் அனு.

மிருடன் காரை அவன் வீட்டினுள் விட எத்தனிக்க, “இங்கேயே நிறுத்துங்க… நான் இறங்கிக்கிறேன்” தன் வீட்டு வாசல் வந்ததும், அனு இவ்வாறாகச் சொல்ல…

காரை திடீர் பிரேக்கில் நிறுத்தியவன், “எத்தனை நாளைக்கு?” என்று கோபபட்டவன்... “நாளைக்கு பேபி வீட்டுக்கு வரும் போது நீயும் வீட்டில் இருக்கணும். இதை நான் முன்னாடியே உன் கிட்ட சொல்லிட்டேன்” இவன் அதிகாரம் செய்ய

“ஏன் இப்படி என்னைப் படுத்துறீங்க? மான்வி உங்க மக தான்... நான் அதை மறுக்கல. ஒரு அப்பாவா நீங்க அவளுக்கு என்ன வேணா செய்யுங்க... நான் குறுக்க வரல”

“ஏன்... வந்து தான் பாரேன்” என இடை வெட்டியவன், “மேடம் பெரிய மனசு செய்து நான் தான் தந்தை என்ற அடையாளத்தை என் மகளுக்கு கொடுக்க இறங்கி வந்துட்டீங்க போல! ரொம்ப இரக்க குணம் மேடம் உங்களுக்கு... பாவ பரிதாபம் பட்டு விட்டுக் கொடுத்துட்டீங்களே!” இவன் குரலில் அப்படி ஒரு எகத்தாளம் தாண்டவம் ஆடியது.

“ப்ளீஸ்... என்னைப் புரிஞ்சிக்கோங்க” இவள் கெஞ்ச

“அதை நீ சொல்றியா?” சொல்ல முடியாத வலியில் அவன் குரல் ஒலிக்க, கணவன் குரலில் என்ன இருந்ததோ… இவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவன் முகம் கல்லென இறுகி இருந்தது.

அவன் வார்த்தைகளை ஒதுக்கியவள், “ஆனா நீங்க என் கணவன் இல்லை... என் கணவன் ஒருத்தர் மட்டும் தான்! அது நீங்க இல்லை... என்னைக்கும் நீங்க என் கணவனா ஆகவே முடியாது!”

அவளின் ஆணித்தரமான வார்த்தையில் இவனுக்குக் கோபம் தலைக்கு ஏற... கார் ஸ்டியரிங்கை ஓங்கி குத்தியவன், “அவ்வளவு தானா? இன்னும் இருக்குமே! சொல்லு... எல்லாத்தையும் சொல்லு. கணவன் உயிரோட இருக்கும் போதே தன் மனைவியை இந்தக் கோலத்தில் பார்க்கிற கணவன் இந்த உலகத்திலே நானா தான் டி இருப்பேன்” என்றவன் “அன்று நான் கட்டின தாலியை என் முகத்தில் விட்டெறியும் போது என்ன சொன்ன? நான் செத்துட்டேன்னு தானே? எங்கே இப்போ இந்த வினாடி.... என் முகத்தைப் பார்த்து சொல்லு.... நான் செத்துட்டேன் என்ற வார்த்தையை...” இவன் சவால் விட

அதெப்படி சொல்வாள்? அன்றிருந்த வேகம் ஆத்திரம், கோபம், வெறுப்பு எல்லாம் அதே அளவுக்கு இன்று கணவன் மேல் இருக்கா என்று கேட்டால், அனு இல்லை என்று தான் சொல்லுவாள். ஆனால் அன்றைய தினத்தை விட மனதால் ஆயிரம் மைல் தூரம் அல்லவா விலகி இருக்கிறாள்? அன்று அவன் செய்த துரோகத்தில் வந்த வார்த்தை இன்றும் அவள் வாயில் வருமா? எப்படி முடியும்?

அவள் அமைதியாய் அமர்ந்திருக்க, “இறங்கு.... நாளை நீ வரலைனா கையைக் காலைக் கட்டியாவது உன்னைத் தூக்கிட்டுப் போவேன்” இவன் எச்சரிக்க…

அனு, “நீங்க இன்னும் மாறவே இல்லை மிரு...”

“இதை என் மனைவியா என் வீட்டில்... என் பக்கத்திலே இருந்து சொல்” என்றவன்… கார் கதவைத் திறந்து விட்டு, “இறங்கு… எனக்கு நேரம் ஆகுது” என்க...

அனு இறங்கி உள்ளே வந்ததும், நேற்றைய தினம் மாதிரி மான்வியின் உடல்நிலை பற்றி விசாரித்த முனீஸ்வரன், பார்வதி தம்பதிகள்... பின் அவளை ஓய்வெடுக்கச் சொல்லிச் சென்று விட... அனுவின் மனதோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவள் சிறிது நேரம் தூங்கி எழுந்ததும்... அவள் அறைக்கு வந்த முனீஸ்வரன்,

“அனும்மா, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்க

கணவன் மனைவி இருவருக்கும் மிருடன் விஷயம் தெரியாது என்பதால்... அதைப்பற்றி அவர் கேட்கப் போகும் கேள்விகளுக்கு இவள் தயாராய், “சொல்லுங்க அங்கிள்” என்க

“நான் உங்க தாத்தா கிட்ட வேலைக்கு சேர்ந்து இருபது வருஷம் இருக்கும்”

அனு, “எனக்கு இது முன்பே தெரியுமே அங்கிள். நீங்களும் ஆன்ட்டியும் என்னை சின்ன வயசிலிருந்து பார்த்து இருக்கீங்களே...”

“ம்ம்ம்... அதற்கு முன்னேயும் நான் பல பேர் கிட்ட வேலை செய்திருக்கேன். ஆனா மிருடன் தம்பி மாதிரி ஒரு பிள்ளைய நான் பார்த்தது இல்லை...” திடிரென அவர் மிருடனுக்கு புகழாரம் சூட்ட

“என்னது! உங்களுக்கு அவரை முன்பே தெரியுமா?” இவள் வியப்பாய் கேட்க

“ஆமாம்… தம்பியைத் தெரியும்... நீயும் அந்த தம்பியும் என்ன பிரச்சனையில் பிரிஞ்சீங்கன்னு எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி என்பது மட்டும் தான்” என்றவர்

“அங்கிள், அனு என் மனைவி... ஒரு சில விஷயத்தில் நாங்க பிரிஞ்சிட்டோம். ஆனா இந்தப் பிரிவு நிரந்தரம் இல்லை. ஒருநாள் நிச்சயம் நாங்க ஒன்று சேருவோம். அன்று… என் மனைவி, என் குழந்தையைத் தேடி நான் வருவேன். அதுவரை அவளை நீங்க இரண்டு பேரும் தான் அப்பா, அம்மாவா இருந்து பார்த்துக்கணும். இது தான் மிருடன் தம்பி, என் கிட்ட... என்ன முதல் முதலாக பார்த்தப்போ சொன்னது. அதை நான் இன்று வரை செய்திட்டு இருக்கேன்”

“இந்த ஐந்து வருடத்தில், தினமும் இங்கு நடக்கிறது எல்லாமே… நான் இரவு தூங்கும் முன்னே தம்பி கிட்ட தகவலா சொல்லிடுவேன். இதில் எந்த தப்பும் இருக்கிறதா எனக்குத் தோணலை. ஏன்னா… அப்படி ஒரு பரிதவிப்போட தான் இதை ஒரு உதவியா அன்று அந்த புள்ள செய்யச் சொல்லிச்சு”

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு பேச முடியாமல் அனு அதிர்ந்து போயிருக்க... “பைனான்ஸ் கம்பெனி விஷயமா இந்த வீட்டை விற்றுட்டு வெளிநாடு போகப் போறேன்னு நீ சொன்னதை நான் தம்பி கிட்ட சொன்னப்போ... அன்று முழுக்க அதோட முகத்தை என்னால் பார்க்கவே முடியல. எப்படி இருந்த புள்ள அப்படி ஒடிஞ்சி போச்சு... நீயும் அவரைப் பிரிந்து அப்படி ஒண்ணும் நல்லா இல்லையே அனும்மா... அப்புறம் ரெண்டு பேருக்கும் எதற்கு இந்த வீம்பு பிடிவாதம்?”

“இப்போ நான் இதை எதற்கு சொல்கிறேன்னா... உன்னைத் தன்னிடம் தக்க வைக்க என்னை ஜெயிலில் போடத் துணிந்த அந்த தம்பி... இனி நீ எங்கே போனாலும் விடாது. அதாவது… அது தன் கடமையிலிருந்து என்றைக்கும் விலகாது. நான் பார்த்த மிருடன் இப்படி தான்!”

“கடைசியா உன்னோட அப்பா ஸ்தானத்திலிருந்து ஒரு வார்த்தை சொல்கிறேன் கேளு... எதுவா இருந்தாலும் உன் கணவன் தான் சொல்லணும்... தன்னை நிரூபிக்கணும்னு நீ எதிர்பார்க்காதே. மனைவியே என்றாலும் நிச்சயம் அதை மிருடன் தம்பி செய்ய மாட்டார். எதுவா இருந்தாலும் எதிர்நோக்க கத்துக்க...” அவ்வளவு தான்... ஒரு தந்தையாய் இருந்து… அவரின் குணம் மிருடனின் குணத்திற்கு ஈடு இல்லை என்பதை அறிந்தவர்… அனைத்தும் சொல்லிவிட்டு அவர் விலக... அனுவுக்கோ இங்கு மண்டை வெடித்தது.

‘என்னைச் சுற்றி எவ்வளவோ நடந்திருக்கு! அப்போ மிரு என்னை விடவே மாட்டாரா... ஆனா ஏன்? மறுபடியும் என் அப்பாவை பழிவாங்கற பிரச்சனையா இருக்குமோ?’ முனீஸ்வரன் அவளிடம் சொன்ன மிருடனின் என் மனைவி என் கடமை என்ற வார்த்தைகளை மறந்தவளாக... அவனின் பழிவாங்கும் எண்ணத்தையே யோசித்தாள் இவள். மிருடன் அவளிடம் பேசியதும்... நடந்து கொண்டதும் அப்படி தானே! ஏற்கனவே அனு கொஞ்சம் நியாய குணம் உள்ளவள் என்பதால்... மகளைக் குறித்து கணவனிடம் உதவி கேட்ட போதே அவள் முடிவு செய்து விட்டாள்... மான்வி விஷயத்தில் இனி கணவனை விலக்கி வைக்க முடியாது என்று.

மகள் விஷயத்தில் தெளிவாக இருந்தவளால்... இவள் விஷயத்தில்… அதில் இப்போதும் அவள் கணவனை மன்னித்து அவனுடன் வாழ அவள் தயாராக இல்லை. அதாவது கணவன் வீட்டிற்குச் செல்லும் விஷயத்தில் தெளிவு இல்லாமல் இருந்தவளை தற்போது முனீஸ்வரனின் பேச்சு அவள் கணவன் வீட்டிற்குத் தான் போக வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது. அதாவது கணவனை விட்டுப் பிரிந்து... தனியாக அவனிடம் போராடுவதை விட... அவன் இடத்திலேயே இருந்து கணவனிடம் போராட முடிவு செய்து விட்டாள் அனு.

அதுமட்டும் இல்லாமல் வெண்பா கொஞ்சம் வெளிப்படையாக பேசினாலும்... அவளை அனுவுக்குப் பிடித்திருந்தது. அவளை விட இவ்வளவு நடந்த பிறகும் கணவன் மனைவி நிறைய விஷயங்களை மறைத்து இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி கேட்காமல் அன்பாய் அக்கறையாய் பேசும் வெண்பாவின் கணவர் கஜேந்திரன் நடந்து கொள்ளும் பாங்கு ஏனோ அனுவுக்குப் பிடித்திருந்தது. அதனால் இவர்களுடன் உறவாட கணவன் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள் அனு.

மிருடன் சொன்ன மாதிரியே... மான்வியை வேறு அறைக்கு மாற்றினார்கள். இரவு முழுக்க மகளுடன் இருந்து விட்டு... காலையில் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு மகளை வீட்டுக்கு அழைத்து வந்த போது… தன் உடமைகளோடு அனுவும் கணவன் வீட்டுக்கே வந்து விட்டாள்.

மான்வி வீட்டுக்கு வந்து விட்டாள் என்றதும் கோபத்தில் போன வெண்பா, கோபத்தை எல்லாம் மறந்தவளாக... சேலத்தில் வளைகாப்பு விழா முடிந்ததும் நேரே பிள்ளைகளுடன் இங்கே வந்து விட்டாள். கஜேந்திரனுக்கு வேலை இருப்பதால் அவர் வர வில்லை.

எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் தம்பி வீட்டிற்குகுள் இவள் நுழைய... காலையில் அலுவலகம் செல்வதற்காக கிளம்பி உணவை உண்டு கொண்டிருந்த மிருடன்… தமக்கையைக் கண்டதும், “வா.. க்கா... சாப்பிடுறீயா...” என்று இவன் உபசரிக்க

“நான் முதலில் என் மருமகளை பார்த்திட்டு வரேன். இந்தா… இந்த சின்னவனுக்கு அப்படியே எதையாவது ஊட்டி விடு. காரில் நல்லா தூங்கிட்டு வந்துட்டு இப்போ பசிக்கு அழறான். ஸ்ரீ... பிரவீனா... உள்ளே போய் பிரெஷ் ஆகுங்க” என்க

“டேய் குட்டிப் பையா… பசிக்குதா? மாமா உனக்கு ஊட்டி விடுறேன் வா” என்று கமலைக் கொஞ்சியவன்... “அத்தான் வரலையா அக்கா?” என்று விசாரிக்க

“வேலை இருக்காம் டா... இதற்கே, இரண்டு நாளில் குழந்தைகளுக்கு ஸ்கூல் தொடங்கிடும்... வந்திடுன்னு சொல்லிட்டார்” என்றவள் “இப்போ மானுவுக்கு எப்படி டா இருக்கு? குழந்தைக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே... ஜீவா எங்க டா... அனுவும் எங்கே...”

“பேபி நல்லா இருக்கா க்கா... டாக்டர் இனி கஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டார். அனு, பேபி அறையில் தான் இருக்கா. ஜீவா தூங்கறான் க்கா...”

“சரி… நான் போய் மானுவைப் பார்க்கிறேன். கமலுக்கு ஊட்டி விடுறேன்னு... நீ ஏனோ தானோன்னு கொறிக்காத டா... ஒழுங்கா வயிற்றுக்கு சாப்பிட்டு எழுந்திரு” இப்படியான அன்புக் கட்டளையுடன் வெண்பா உள்ளே சென்றாள்.

இது தான் வெண்பா... நீ என்னைப் போகச் சொன்னாய்... நான் போனேன். திரும்ப நீ கூப்பிடும் வரை கோபித்துக் கொண்டு இருப்பேன்னு நினைக்காதே... எனக்கு அந்த ஈகோ எல்லாம் இல்லை. இது என் தம்பி வீடு! நான் வருவேன்… போவேன்... இப்படியான மனநிலை தான் அன்றிலிருந்து இன்று வரை அவளுக்கு இருப்பது. அந்த குணமே... மிருடனைத் தமக்கையின் பால் இன்னும் சேர்த்தது என்றே சொல்லலாம்.

இதே மனநிலையுடன் மானுவின் அறைக்குள் வந்த வெண்பா, அங்கு அனுவைக் கண்டவள் கோபம் கொள்ள… ஆத்திரத்தில் தன்னுடைய துடுக்கான பேச்சால்... அனுவைக் காயப்படுத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN