சிக்கிமுக்கி 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவின் கழுத்து செயினை எடுத்து தனது பேக்கில் பத்திரப்படுத்தினாள் அபிநயா. பின்னர் தன் அம்மாவை தேடி ஓடினாள்.

"அம்மா.. நைட் வந்த திருடன் யாருன்னு தெரிஞ்சதா.? கம்ப்ளைண்ட் தந்துட்டிங்களா.?" என்றாள்.

"அதையெல்லாம் உங்க அப்பா பார்த்துப்பாரு.. உனக்கு வேண்டாத வேலையை கவனிக்காம போய் படிக்கற வேலையை பாரு.." என்றாள் ஆனந்தி.

அபிநயா அம்மாவை முறைத்துவிட்டு தீபக்கை தேடி சென்றாள்.

தீபக் தனது அறையில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான்.

"தீபக்.. உனக்கு ஒரு விசயம் தெரியுமா.?" என்றாள் அவனது கட்டிலில் அமர்ந்தபடி.

"என்ன.?" தீபக் எழுதுவதை தொடர்ந்தபடியே கேட்டான்.

"நேத்து நைட் நம்ம வீட்டுக்கு வந்த திருடன் யாருன்னு. கண்டுப்பிடிச்சிட்டேன்.." என்றவளை பரிதாபமாக பார்த்தான் தீபக்.

"பக்கத்து வீட்டு கோணக்காலன்தான் நம்ம வீட்டுக்கு திருட வந்திருக்கான்.." என்று சொன்னாள் அவள்.

"அக்கா அவன் திருட வரல.. உன்னை பயமுறுத்த வந்திருக்கான்.. இது நேத்து நைட்டே எங்க எல்லோருக்கும் தெரியும். அப்பா காலையிலேயே போய் அவங்க வீட்டுல வார்னிங் தந்துட்டு வந்துட்டாரு.." என்றான் தீபக்.

அபிநயா அதிர்ந்து போனாள். இரவு நடந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்திப் பார்த்தாள். தனது அறைக்கு வந்த திருடன் எதையும் திருடவில்லை. மாறாக தன்னை பயமுறுத்தி மட்டுமே உள்ளான் என்ற விசயம் புரிந்ததும் அன்புவின் மீது கொலைவெறிக் கொண்டாள். கட்டிலின் அடியிலிருந்து வந்த கையையும் வேண்டுமென்றே கை விரல்களை அசைத்து தன்னை பயப்படுத்தியதையும் நினைத்து பார்க்கையில் அவளுக்குள் இருந்த கோபம் பல மடங்காக அதிகரித்தது.

அக்காவின் முகத்தை பார்த்தே பாதி விசயத்தை யூகித்தான் தீபக்.

"அப்பா வார்னிங் தந்துட்டாருக்கா.. நீ வேற வேலை எதையாவது செஞ்சி வச்சிடாத.. நீங்க இரண்டு பேரும் மறுபடியும் சண்டை போட்டுக்கிட்டா அப்பா மனசுதான் சங்கடப்படும்.." என்று எச்சரித்திருந்தான்.

அபிநயா புரிந்துக் கொண்டதாக வெளியே தலையசைத்தாள். ஆனால் மனம் முழுக்க கோபக்கனல் எரிந்தது.

ஆறுமுகம் அன்புவின் அறைக்கு வந்தார். அன்பு நேற்று இரவு நடந்ததையே நினைத்து பார்த்து அதே குஷியோடு இருந்தான்.

"என்னடா யோசனை.?" என்றபடி வந்து இருக்கையில் அமர்ந்தார் அவர்.

"ஒன்னுமில்லப்பா.." என்று தலையசைத்தான் அன்பு.

"நேத்து நைட் நீ எங்கே போன.?" நேரடியாக விசயத்திற்கு வந்தார் அவர்.

அன்பு சந்தேகத்தோடு அவரை பார்த்தான். "ஏன் ப்பா.?" என்றான்.

"நேத்து நைட் பக்கத்து வீட்டுக்குள்ள புகுந்து அபி ரூம்க்கு போனியா.?" என்றார் கோபத்தோடு.

அன்புவிற்கு திக்கென்றது. அப்பா எப்படி கண்டறிந்தார் என்று குழம்பினான்.

"அப்பா... நான் எதுக்கு அந்த வீட்டுக்கு போறேன்.?" என்றான் இவன் அப்பாவியை போல.

அப்பாவின் கோபம் அதிகமாகியது. அன்புவிற்கு சற்று பயமாக இருந்தது.

"பொய் பேசாதே அன்பு.." என்றவர் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.

"உன்னால இந்த குடும்ப மானமே போகுது.. அந்த பொண்ணோடு சண்டை போடாதேன்னு ஆயிரம் முறை சொன்னேன் நீ கேட்கல. பொறுக்கி மாதிரி சுவரேறி குதிச்சி அந்த பொண்ணோட ரூம் வரைக்குமே போயிருக்க.." என்றவர் இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அன்புவின் கட்டிலடியில் இருந்த பேய் மாஸ்க் பார்வையில் பட்டது. அதை கையில் எடுத்தவர் மாஸ்கை அன்புவின் மீதே விட்டெறிந்தார்.

"உனக்கு இன்னும் சின்ன பையன்னு நினைப்பா.? நீ இந்த வயசுல ஒரு வயசு பொண்ணோட ரூம் வரைக்கும் போனதுக்கு வேற ஒருத்தரா இருந்தா பொம்பள பொறுக்கின்னு சொல்லி உன்னை போலிஸ்ல பிடிச்சி தந்திருப்பாங்க. அந்த மனுசனா இருந்ததால வீடு தேடி வந்து நல்ல முறையா சொல்லிட்டு போயிருக்கான்.." என்றார் அவர்.

அன்பு தன் மடியில் விழுந்த மாஸ்கில் பார்வையை பதித்தபடி திட்டுகள் அனைத்தையும் வாங்கி கொண்டிருந்தான்.

"உனக்கு இதேதான் லாஸ்ட் வார்னிங் அன்பு.. மறுபடியும் அந்த புள்ளை கூட சண்டை போட்டன்னு கம்ப்ளைண்ட் வந்ததுன்னா உன்னை தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்.." எச்சரித்துவிட்டு சென்றார் அவர்.

அவர் திட்டியது எதுவும் அன்புவிற்கு உரைக்கவேயில்லை. மாறாக தான்தான் அந்த பேய் என்று அவளுக்கும் தெரிந்து விட்டதோ என்ற சந்தேகம்தான் கவலையாக உருமாறி இருந்தது. அதே மாஸ்கை வைத்து இன்னும் பல முறை அவளை பயமுறுத்த திட்டமிட்டிருந்தான் அவன். அவள் பேய்க்கு பயந்து கத்தியது அவனுக்குள் குஷியை தந்திருந்தது. அந்த கத்தல் அவனுக்கு இனிய கீதம் போல இருந்தது. அதை மீண்டும் மீண்டும் கேட்க ஆசைகொண்டான் அவன்.

திங்கள்கிழமை காலையில் கல்லூரி செல்ல தயாராகிவிட்டிருந்த அபிநயாவை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார் வினோத்.

"பைக்ல கூட்டி போகலையாப்பா.?" என்றாள் பேருந்து நிலையம் வந்ததும் அவள்.

"அதிசயம்ன்னு ஒரு நாள் இரண்டு நாள் பைக்ல கூட்டிப் போகலாம். டெய்லியும் எப்படி கூட்டிப் போக முடியும்.? எனக்கும் வேலை இருக்கு இல்ல.?" என்றவர் அவளை பேருந்தின் இருக்கையில் அமர வைத்துவிட்டு டாடா காட்டி விட்டு கிளம்பி சென்றார்.

அப்பாவின் பைக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அபிநயா. சில நிமிடங்களுக்கு பிறகு அதே பேருந்தில் ஏறிய அன்பு சுற்றும் முற்றும் பார்த்தான். காலி இருக்கை தென்படவில்லை. தோளில் இருந்த பேக்கை அட்ஜஸ்ட் செய்துக் கொண்டு கம்பியை பிடித்துக்கொண்டு நின்றான்.

பேருந்து நகர ஆரம்பித்த பத்தாம் நிமிடம்தான் அபிநயா அவனின் கண்களில் தென்பட்டாள். 'குட்டச்சி..?? இவளும் பஸ்லதான் வராளா.?' என கேட்டபடி அவளை நோக்கி நடந்தான். அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்னால் வந்து நின்றான். அபிநயா தன் பின்னால் வந்து நின்ற உருவத்தை பார்க்காமல் பேருந்தில் ஒலித்த பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள். பாடலின் இசைக்கும் வரிக்கும் ஏற்றார் போல அவளின் முகத்தில் இருந்த உணர்வுகள் மாறி மாறி வந்து போயின. அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அன்பு அவளின் முகபாவத்தில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான். அவள் கண்களை சிமிட்டும்போது இவனும் கண்களை சிமிட்டினான். அவளின் உதடுகளில் சிரிப்பு குடி கொண்டபோது அவனும் புன்னகைத்தான். அவளின் கன்னத்தில் கூட புன்னகையின் சாயலை கண்டான் அவன். தன்னை மறந்து அவளை ரசிப்பது அவனின் இதயத்திற்கு பிடித்திருந்தது. பேருந்து பயணித்தது. ஆனால் அவன் அவளின் புன்னகையிலேயே நிலையாய் நின்று விட்டான்.

இடையே இடையே இருந்த நிறுத்தங்களில் பேருந்து நின்றபோது பயணிகள் பலர் இறங்கினர். பேருந்து பாதி காலியாகியது. ஆனால் அபிநயாவின் அருகே இருந்த காலி இருக்கையில் அமர கூட யோசனை வராமல் நின்றுக் கொண்டிருந்தான் அன்பு‌.

கல்லூரி நிறுத்தம் அருகில் வருவதை கண்டு அபிநயா தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். நிறுத்தம் வந்ததும் பேருந்து சட்டென நின்றது. பேருந்தின் குலுக்கலில் முன்னால் சென்ற அபிநயா அதே வேகத்தில் அரையடி பின்னால் வந்து சாய்ந்தாள். பின்னால் நின்றிருந்த ஆளின் மீது விழுந்தாள். மீண்டும் அவள் முன்னால் சாய இருந்த நேரத்தில் சட்டென ஒரு கரம் அவளின் இடுப்பை சுற்றி வளைத்து அவளை முன்னால் சாய விடாமல் நிறுத்தியது.

தன் இடுப்பை சுற்றி வளைத்த கையை அதிர்ச்சியோடு பார்த்தாள் அபிநயா. ஏற்கனவே அறிமுகமான கரம்தான் என்பதை முதல் நொடியிலேயே அறிய முடிந்தது. சந்தேகத்தோடு திரும்பி பார்த்தாள். அன்பு நின்றிருந்தான். அவனின் மூச்சுக்காற்று அவளின் பின்னங்கழுத்தில் மோதியது.‌ இரு மடங்காய் துடிக்க ஆரம்பித்த இதயத்தோடு அவனை விட்டு விலகினாள். ஆனால் அவனின் கை இரும்பு பிடியாய் இருந்தது.

"காலேஜ் ஸ்டாப் இறங்குகங்கப்பா.." என்றார் நடத்துனர்.

அன்பு மனமே இல்லாமல் அவளின் இடுப்பை சுற்றியிருந்த தன் கையை விலகினான். அபிநயா படிக்கட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். பேருந்தை விட்டு இறங்கியவள் ஓரடி தள்ளி சென்று நின்றாள். இதயம் படபடவென துடித்தது. பேருந்து அங்கிருந்து செல்லும் சத்தம் கேட்டது. நெற்றியில் அரும்பிய வியர்வையை துடைத்துக் கொண்டவள் மெல்ல திரும்பினாள். அன்பு அவளின் நெருக்கத்தில் நின்றிருந்தான். அபிநயா அவனை கண்டும் காணதது போல விலகி நடந்தாள். அன்பு அவளின் பின்னால் நடந்தான். இருவருக்கும் இடையில் ஒரு அடிதான் இடைவெளி இருந்தது. அவளின் பாதி சுவட்டில் தன் பாதத்தை பதிய வைத்து நடந்தான் அன்பு.

வானில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காதற் கடவுளின் சேவகன் இவர்கள் இருவரையும் பார்த்து மனம் நிம்மதியுற்றான்.

"எம் காதல் கடவுளை தாண்டி எந்த பகை உயிர்ப்பித்து நிற்கும்.?" என்று கர்வத்தோடு கேட்டான்.

அவனின் அருகே நின்றிருந்த பகை கடவுளின் பணியாள் இவனை பார்த்து சிரித்தான்.

"அதற்குள் வெற்றி சிரிப்பு சிரிக்காதே.." என்று கிண்டலாக கூறி விட்டு அங்கிருந்து சென்றான்.

தூரத்தில் இருந்து பார்ப்போர் கூட காதலர்கள் என எண்ணும்படி நெருக்கமாய் நடந்தனர் அன்புவும் அபிநயாவும்.

அபிநயா தன் விடுதியை நோக்கி நடந்தாள்.

அன்பு தன் விடுதிக்கு சென்று தன் உடமைகளை வைத்துவிட்டு கால் மணி நேரத்திற்கு பிறகு கல்லூரிக்கு வந்தான். கல்லூரிக்குள் நுழைந்தவனின் காதில் வந்து விழுந்தது அபிநயாவின் குரல்.

"நூறு ரூபா.. வெறும் நூறே ரூபா.. செக்ஸியான பாய் பிக்சர் வெறும் நூறே ரூபா.. கையில காசு கொடுங்க‌ அடுத்த செகண்டே உங்க போனுக்கு பிக்சர் வந்து சேரும்.." பெண்கள் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த அபிநயாதான் இதை கூவி கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN