சிக்கிமுக்கி 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
'செக்ஸியான பாயா.? எந்த நாய் அது.?' என்று கொந்தளிக்கும் மனதோடு பெண்கள் கூட்டத்தை நோக்கி நடந்தான் அன்பு.

"நூறு ரூபா செலவு பண்ணி வாங்கும்படி அப்படி யாரோட போட்டோ அது.? சினிமா நடிகரா.? ஸ்போர்ட்ஸ் மேனா.?" என்று கேட்டாள் ஒருத்தி.

அபிநயா அவளுக்கு பதில் சொல்ல முயன்றாள். அவளின் கையை பற்றினாள் மீனா. "வேணாம் புள்ளை.. வா அமைதியா கிளாஸ்க்கு போகலாம்.." என்றாள்.

அபிநயா முடியாதென தலையசைத்தாள்.

"பிக்சரை காட்டுறேன் பாருங்க.." என்ற அபிநயா தன் ஃபோனை எடுத்து அதிலிருந்த புகைப்படத்தை எடுக்க ஆரம்பித்தாள்.

மீனா நெற்றியில் அடித்துக் கொண்டே முகத்தை திருப்பினாள். அன்பு கூட்டத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். மீனா அவசரமாக எழுந்து அவனிடம் ஓடினாள். அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஒரு மரத்தின் பின்னால் வந்தாள்.

"யார் அந்த செக்ஸி பாய்.? எந்த பரதேசி போட்டோவை வச்சிருக்கா அவ.?" என்று ஆத்திரமாக கேட்டான் அவன். மீனா அதிர்ந்துப்போய் அரையடி பின்னால் தள்ளி நின்றாள்.

'அட அரை மெண்டலே..' என்று நினைத்தவள் அவனின் பொறாமையை நினைத்து தனக்கு தானே நொந்துக் கொண்டாள்.

"அவ அங்கே ஏலம் போட்டுட்டு இருக்கறது உன் போட்டோவைதான்.." என்றாள்.

அன்பு குழம்பி போனான். அவள் சொன்ன விசயத்தின் தீவிரம் புரிவதற்கு அவனுக்கு சில நொடிகள் பிடித்தது.

"எ.. என் போட்டாவா.? ஆனா எப்படி.? என்ன போட்டோ‌.?" என்று குழப்பத்தோடு கேட்டான்.

"அவ டிரெஸ் மாத்தும்போது ஜன்னலை சாத்தலன்னு குறை சொன்னது நீதான். ஆனா நீயும் அதே தப்பைதான் பண்ணியிருக்க.. ஜன்னல் திறந்திருக்கறதை கூட பார்க்காம டிரெஸை மாத்தியிருக்க. அவ அதான் சான்ஸ்ன்னு போட்டோவை எடுத்துட்டா.." என்றாள் மீனா.

அன்பு இதற்கு முன் தான் உடை மாற்றியதையெல்லாம் நினைத்துப் பார்த்தான். 'சனிக்கிழமை காலையிலயா.?' என்று சிந்தித்துப் பார்த்தவனுக்கு அபிநயா மீது ஆத்திரமாக வந்தது. 'எதுக்கு போட்டோ எடுத்தா.?' என்று மனதுக்குள் எரிந்து விழுந்தான்.

"அவ உன் மானத்தை முழுசா வாங்கும் முன்னாடி நீயா போய் நல்ல முறையா பேசி அவகிட்ட இருக்கற போட்டோவை வாங்கிட்டு வந்துடு.." என்றாள் மீனா.

அன்பு அபிநயாவை நோக்கி நடந்தான்.

கல்லூரிக்குள் நுழைந்த குணா அன்புவும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை கண்டுவிட்டு இவர்களை நோக்கி வந்தான். இவன் வந்து நிற்கும் முன்பே அங்கிருந்து சென்று விட்டான் அன்பு.

"என்ன பேசிட்டு இருந்திங்க இரண்டு பேரும்.?" ஆர்வ மிகுதியில் கேட்டவனிடம் நடந்ததை விவரித்தாள் மீனா.

"என்னப்பா இது.? முகம் இல்லாத பிக்சரா இருக்கு.." என்றாள் அபிநயாவின் முன்னால் இருந்த ஒருத்தி.

அவளின் கையில் இருந்த ஃபோனை பிடுங்கினாள் அபிநயா. "முகமும் தெரியற மாதிரி பிக்சர் வேணும்ன்னா ஐம்பது ரூபா தரணும்.." என்றாள்.

சுற்றி இருந்தவர்கள் குழப்பத்தோடு அவளை பார்த்தார்கள். "இது என்ன கணக்கு.? முகமில்லன்னா நூறு.. முகத்தோடு ஐம்பது.?" என்று கேட்டாள் ஒருத்தி.

"அதெல்லாம் அப்படித்தான். உங்களுக்கு பிக்சர் வேணுமா வேணாமான்னு மட்டும் சொல்லுங்க.." என்று கண்டிப்பு குரலில் சொன்னாள் அபிநயா.

சுற்றி நின்றிருந்த பெண்களை எரிச்சலோடு பார்த்த அன்பு இடையில் புகுந்து அபிநயாவின் கையை பற்றி அவளை மேலே எழுப்பினான்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. என்னோடு வா.." என்றவன் அவள் பேசுவதற்கு கூட வாய்ப்பு தராமல் அவளை தூரமாக இழுத்து வந்தான்.

"என்னை விடுடா கோணக்காலா.." என்று திமிறியவளின் கையை கல்லூரி கட்டிடம் ஒன்றின் பின்னால் வந்த பிறகுதான் விட்டான் அன்பு. அவள் அவனை என்னவென கேட்க இருந்த நேரத்தில் அவளின் கையில் இருந்த போனை பிடுங்கினான்.

அபிநயா தன் போனை பறிக்க முயன்றாள். ஆனால் அன்பு தன் கையை மேலே உயர்த்திக் கொண்டான். அவளுக்கு அவனின் கை எட்டவே இல்லை. அன்பு அந்த போனில் இருந்த புகைப்படங்களை வரிசையாக சோதித்தான். உள்ளாடையோடும் முகமில்லாமலும் இருந்த ஆண் உருவம் ஒன்று முதலிலேயே இருந்தது‌. அது தான் இல்லை என்பது பார்த்த நொடிகளிலேயே அவனுக்கு புரிந்தது. சந்தேகத்தோடு அடுத்த புகைப்படத்தை பார்த்தான். உள்ளாடை விளம்பரத்தில் வரும் விளம்பர நடிகனின் புகைப்படம் அது. அபிநயாவை குழப்பமாக பார்த்தான். அவள் இவனிடம் உள்ள ஃபோனை பறிப்பதிலேயே குறியாக இருந்தாள்.

"ஆக்டரோட போட்டோவை ஏன் விக்கிற.?" என்றான் குழப்பமாக.

'அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டானே.. நல்லா கடுப்பேத்தி விடலாம்ன்னு நினைச்சேன். இப்படி மிஸ் ஆயிடுச்சே..' என்று கவலை கொண்டாள் அபிநயா.

"என் ஃபோனை கொடு நீ.." என்றாள்.

அன்பு அதிலிருந்த புகைப்படங்களை அடுத்தடுத்து தள்ளி பார்த்தான். அவனின் புகைப்படம் கடைசியாக இருந்தது.

"என்னை ஏன் போட்டோ எடுத்த.?" என்றான் புருவம் நெரித்து.

"நீ ஏன் நான் டிரெஸ் மாத்தும்போது பார்த்த.?" என்றாள் அவளும் அதே கோபத்தோடு.

"கொடுமை.. நான் அப்படி உன்னை பார்க்கல.. நீ துப்பட்டாவை கழட்டி வீசும்போதே பார்வையை திருப்பிக்கிட்டேன்.." என்றவனை கிண்டலாக பார்த்தவள் "நானும் உன்னை நியூடா போட்டோ எடுக்கல. டிரெஸோடு இருக்கும்போதுதான் எடுத்தேன்.. அமுல் பேபி மாதிரி கண்ணாடி முன்னாடி நின்னு ஷோ காட்டுன்னா மட்டும் போதாது.. இடுப்புல இருக்கற துண்டு நழுவி விழாத அளவுக்கு இறுக்கமா கட்டவும் தெரியணும்.." என்றாள் பதிலுக்கு.

அன்பு கோபத்தை அடக்க பற்களை கடித்தான். "ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்கவே மாட்டியா நீ.? இந்த வெட்கம் மானம் நாணமெல்லாம் உனக்கு கிடையவே கிடையாதா.?" என்றான்.

அபிநயா அவனின் வயிற்றிலேயே ஒரு குத்து விட்டாள். "நீ ஒரு பையன் மாதிரி நடந்துக்கவே மாட்டியா.? பேய் மாஸ்க்.. திருட்டு தனமா ரூம்க்குள்ள வரது.. எதிர்ல இருக்கற கேர்ள்ஸ் ஹாஸ்டலை பைனாக்குலர் வச்சி நோட்டம் பாக்கறது.. பொறுக்கி மாதிரி நடந்துக்கற நீயெல்லாம் என்னை பொண்ணு மாதிரி நடந்துக்க சொல்லாத.." என்றாள்.

வயிற்றை ஒரு கையாலும் ஃபோனை ஒரு கையாலும் பிடித்தபடி அவளை பார்த்தான் அன்பு. 'நான் பொறுக்கி இல்லடி..' என்று கத்தியது அவன் மனம்.

"என்னை பழி வாங்க நீ எது வேணாலும் செய்வியா.?" என்றான் வேதனையோடு.

அபிநயா சிரித்தாள். "நடிக்கறதை முதல்ல நிப்பாட்டுடா.. எந்த விசயமா இருந்தாலும் முதல்ல ஆரம்பிச்சி வைக்கிறவனே நீதான். என்னவோ நான்தான் வம்பு சண்டை போடுற மாதிரி சீன் போடாத.. உன் வண்டவாளம் என்னன்னு எனக்கும் ரொம்ப நல்லா தெரியும். இதுவே பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்.. இனி எப்பவும் என் வழியில நீ வராத.. உன் வழியில நானும் வர மாட்டேன்.. இரண்டு பேரும் ஜென்ம விரோதிகளா தூரமாவே இருப்போம். என்கிட்ட சும்மா கூட வம்பிழுக்க டிரை பண்ணாத.. அதையும் மீறி எதாவது செஞ்சா நிஜமாவே உன் போட்டோவை போஸ்டர்ல அடிச்சி விட்டுடுவேன்.." என்றவள் அவன் கையிலிருந்த தன் ஃபோனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள். தனது அறைக்குள் திருட்டு தனமாக நுழைந்தவன் எது வேணாலும் செய்ய தயங்க மாட்டான் என்ற விசயம் அவளை கொந்தளிக்க செய்து விட்டது. அவளால் அவனின் இந்த செயலை விளையாட்டு என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அன்பு அவளின் முகத்தை வெறித்தபடி நின்றான். அவள் சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை. இனிமேல் விளையாட்டுக்கு வம்பிழுத்தால் கூட பயங்கர பின்விளைவை சந்திக்க நேரிடுமோ என்று எண்ணி குழம்பினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

சின்ன யூடிக்கு சாரி மக்களே. இன்னும் மூணு நாளைக்கு சின்ன சின்ன யூடிதான் வரும்ப்பா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN