என் நெஞ்சுநேர்பவளே -17

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ENN-17


முழு மாலைப் பொழுது முடிவுறும் நேரம் இள மஞ்சள் பூசிய பௌர்ணமி நிலவு கருநீல வானத்தின் கிழக்கு திசையில் மெல்ல மேல் எழும்பி நின்றது..

சலசலக்கும் தென்னை கீற்றுக்கள் நிலவை தொட்டு தடவிடும் தேடலில் ஓயாமல் அசைந்து கொண்டிருந்தது..

அரையிருட்டாய் கிடந்த மாடிப் படியில் கன்னத்தில் கை தாங்கி நிலவினை பார்த்திருந்தவள் மனம் கோவம் என்ற வேலி தாண்டி காதல் களத்தில் நீராட தவித்திடும் நிலையில் தான் இருந்தது..

மூட்டை கட்டி கொண்டு வந்த கோவங்கள் எல்லாம் இன்று மென்பனியாய் உருகி விட்டதோ என எண்ணும் அளவு ஆதியின் பார்வையும் ஸ்பரிசமும் அவளை பாதித்து வைத்திருந்தது..

காலை ஆரம்பித்த காதல் கணைகள் அன்றைய நாள் முழுதும் அலுங்காமல் குலுங்காமல் இவளை வந்தடைய தவறவே இல்லை..

விளையாட்டு போல் பொது வெளியில் இயல்பாய் கைகளை கோர்த்துக் கொள்ளும் பொழுது முன்பு போல் அவன் கைகளை உதறி விட மனம் எழும்ப வில்லை.. அதையும் மீறிய மேலெழும்பும் வகையாய் இனிய தென்றல் தழுவியதை போன்றதொரு புது உணர்வில் ஆட்பட்டுத் தான் போனாள் ரதி..

அவனிடம் இருந்து அன்னியத் தன்மையையும் விலகலையும் மட்டுமே இதுவரை கண்டு வந்தவள் காலையில் இருந்து கிடைக்கும் இந்த மாற்றங்கள் அவனின்பால் மையலை கொண்டவளுக்கு புதுவித அவஸ்தையையும் மாய லோகத்தையும் தோற்றுவித்திருந்தது..

அதன் காரணமாகவே நாள் முழுதும் எந்த ஒன்றிலும் மனம் லயிக்காமல் அவனின் அருகாமையிலேயே விழுந்து கிடந்தது.. அவன் மீதான கோவம் கூட ஓடி ஒளிந்து பதுங்கிக் கொண்டது..

அன்றைய தினம் இரு வீட்டினரின் குலதெய்வ கோவில் தரிசனம் முடிந்து எண்ணெய் தேய்ப்பு சடங்கிற்கென அம்மா வீட்டிற்கு வந்திருந்தனர் சுரபியும் ஆரதியும்..

கோவிலில் இருந்து வந்ததும் ஆதி ஒரு வேலையாய் ஆராதனைக்கு சென்று விட, சட்டென விழுந்த இந்தப் பிரிவை மனம் ஏற்காமல், தன்னிடமும் சுரபியிடமும் அளவளாவிக் கொண்டிருந்த மீனா திருவிடம் மனம் செல்லவில்லை..

சற்று நேரத்தில் விதுரன் ஓய்வெடுக்க அறைக்குள் புகுந்து கொள்ள சுரபி அவன் பின்னாலே சென்றுவிட்டாள்..

"நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரதிம்மா.."என்றுவிட்டு மீனா சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டனர்..திருவும் நாளை விருந்திற்கு வேண்டியனவற்றை பட்டியலிட மீனாவின் பின் சென்றுவிட, ஆரதிஅவளுக்கு பிடித்த மாடிப் படியில் அமர்ந்து விட்டாள்..

"ஓய் புதுப்பொண்ணே..!! என்ன முழிச்சுட்டே கனவா..?"என்றவாறு ஆரதியை உரசிக் கொண்டே அமர்ந்த ரஞ்சியின் பேச்சில் கவனம் களைந்தாள்..

"ஹே எரும... எதுக்குடி இப்படி இடிச்சிட்டு உக்கார்ற?"

"ஏன் இந்த இடிக்குறது உரசுறது எல்லாம் உன் வீட்டுக்காரர் மட்டும் தான் செய்யணுமா.."என்று ரஞ்சி கிண்டல் செய்ய ஆரதியின் கன்னம் சிவந்தது..

அவள் எண்ணம் மீண்டும் ஆதியிடம் தஞ்சம் புகுந்து கொள்ள, அடுத்து பேசிய ரஞ்சியின் கேள்விகள் காதில் விழாமல் போகவே ரஞ்சி உலுக்கினாள் இவளை...

"ஹான்.. என்ன கேட்ட..?"என்று ரதி திருதிருக்க,

"அது சரி.. ஒருநாள்ல எப்படி ரதி இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி ஆகிட்ட. எங்க அண்ணன் அப்பிடி என்ன சொக்கு பொடி போட்டு கவுத்தாரு.."

"உங்க அண்ணனா.."என்று ரதி விழிக்க,

"அய்யய்ய!! இதென்னடி சிவாஜி செத்துட்டாராங்கற மாதிரியே கேக்குற.."

"ப்ச் உளறாம தெளிவா கேளு மாடே.."

" நேற்று இல்லாத மாற்றம் என்னது.. ஆதி அண்ணன் காதல் சொல்லி கவுத்தாரா.. காலில் விழுந்து கன்னி மனம் கவர்ந்தாரா.. இது தான் காதல் என்பதா... கோவம் ஓடி விட்டதா.. சொல் அன்பே... "என்று வார்த்தைகளை மாற்றிப் போட்டு நீட்டி முழக்க,

ஆரதியோ பதிலேதும் சொல்லாமல் நிலவையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

"என்னாச்சு டி.. ஏன் டல்லகிட்ட.."என்றவாறு ரதியின் தோள் பற்றி லேசாய் உலுக்க, இப்போது ரஞ்சியின் புறம் திரும்பியவளின் விழியில் ஈரம் பளபளத்தது..

"ஹே ரதிம்மா என்னடா ஆச்சு..."என்று பதறி அவள் கண்ணீர் துடைக்க, ஆதரவாய் அவள் மடியில் தலை வைத்தவாறு பேச ஆரம்பித்தாள் ரதி..

"இவ்வளவு நாள் என்னோட வேதனையை அவனோட இந்த ஒரு நாள் நெருக்கம் ஈஸியா மறக்க வச்சுடுச்சு ரஞ்சி.. அவனோட காதலுக்கு அவ்ளோ ஏங்கி போய் இருந்திருக்கேன் நானு.. இத்தனைக்கும் அவன் இதுவரைக்கும் பண்ணினத்துக்கு எந்த ஒரு விளக்கமும் கொடுக்காத நிலையில் கூட அவன ஏத்துக்கற அளவுக்கு எனக்கு சுயமரியாதை இல்லாம போகிருச்சா.."என்றாள் வேதனையுடன்.

"சில சூழ்நிலையில காதலுக்கு சுயமரியாதை ரெண்டாவது பட்சமா போகிடும் ரதி.. அதோட நீ என்னதான் ஆதி அண்ணா மேல கோவமா இருந்தாலும் அவங்கள உன்னால தப்பா நினைக்க முடியல.. அதோட மனசுல ஏதோ ஒரு மூலையில அவர் செஞ்சதுக்கு எல்லாம் எதாவது சரியான காரணம் இருக்கும்னு உனக்கு நம்பிக்கை இருந்துருக்கு.. அதையும் மீறிய அவர் பிரிவு தான் உனக்குள்ள கோவமா இருந்துருக்கு..

இப்ப கல்யாணத்துக்கு பிறகு அவரோட நடவடிக்கைல வெளிப்பட்ட காதல்ல உன்னோட கோவம் ரெண்டாம் பட்சமாகி லவ் ஓவர்ஃப்லோ ஆகிடுச்சு.."

ரஞ்சியின் பதிலில் தெளிந்த ரதி அவள் மடியிலிருந்து எழுந்தாள்..

"அப்போ ஆதி பண்ணினதை எல்லாம் மன்னிச்சுடலாமா.."

"அது உன் விருப்பம் தான்.. முத்தம் கொடுத்தும் மன்னிக்கலாம்.. மண்டையை இன்னொரு தரம் ஒடச்சும் மன்னிக்கலாம்.."

"ரெண்டும் கிடையாது.. என்னைய சுத்தல்ல விட்டான்ல... இப்ப அவனை சுத்தல்ல விட்டு நல்லா மண்டை காய வச்சு அப்புறம் போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுரலாம்.."

"இது இன்னும் டேஞ்சர் ஆச்சே..."என்று சொல்லி ரஞ்சி சிரிக்க,

"அதர விடறேன் பாரு உன் நொண்ணன..."என்று சொல்லி ரதியும் சிரிப்பினில் இணைந்தாள்..

"ஹே ரதி உனக்கு நிஜமாவே ஆதி அண்ணா மேல கோவம் போயிருச்சா.."என்று சிறிது நேரம் கழித்து கேட்டாள் ரஞ்சி..

"கோபத்தை விட ஒரு ஏமாற்ற உணர்வு இருக்கு ரஞ்சி.. அதுக்காக எனிடைம் மூஞ்சிய தூக்கி வச்சுட்டே திரிய முடியாதுல்ல. அதே நேரம் எனக்கு பிடிச்சவங்க கிட்ட ரொம்ப நாள் கோவத்தை இழுத்து பிடிச்சுட்டும் இருக்க முடியாதுன்னும் உனக்கு தெரியுமே..

ஆதி எவ்வளவு தப்பு பண்ணிருந்தாலும் அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஞ்சி. இப்ப கிட்டத்துலயே இருந்துட்டு அவன் என்னை ஏக்கமா பாக்கும் போது தன்னால மனசு உருகி போயிடுது..

அவன் பண்ண தப்புக்கெல்லாம் ரெண்டு கும்மாங்குத்து குடுத்து இப்படி பண்ணுவியாடான்னு நாலு திட்டு திட்டி அவன் கைக்குள்ளயே புகுந்துக்கணும்னு தான் தோணுது.."

"அப்போ இன்னைக்கு அண்ணனுக்கு ரெண்டு அடி குடுத்து சமாதானமா போய்டலாம்ல."

"அதெப்படி உடனே சமாதானம் ஆக முடியும்.. என்ன இருந்தாலும் அவன் அவனோட சோ கால்டு கொள்கைக்காக தானே கல்யாணம் பண்ணியிருக்கான்.."

"அப்போ அண்ணன் உன்னை லவ் பண்ணலைன்னு சொல்ல வரியா.."

"அதெல்லாம் ரொம்ப பண்றான் தான்.. பாக்கும் போதே டன் டன்னா லவ்வு கொட்டுதே."

"அப்போ வேற என்ன தான்டி உனக்கு பிரச்சனை. சட்டு புட்டுன்னு சமாதானம் ஆகி தொலைய வேண்டியது தானே.."

"அதெல்லாம் முடியாது. என்னை எப்படியெல்லாம் பேசுனான் தெரியுமா.."

"ஆமாம் அதுவும் சரிதான்.. உனக்கு முழுசா மனசு சமாதானம் ஆகுற வரைக்கும் உன்னோட கோவத்தை கண்டின்யூ பண்ணு.."

"அது தான்டி கஷ்டமா இருக்கு.."

"அய்யய்ய நீ என்னடி அந்நியன் மாதிரி பேசிட்டு இருக்க.. "என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டாள்..

"இது தான்டி எனக்கும் பிரச்சனையே.. வேண்டாம்னு விலகவும் முடில. வேணும்னு நெருங்கவும் முடில..இப்ப நான் என்னதான்டி பண்றது.."என்று பாவமாய் கேட்க, தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டாள் ரஞ்சி..

"தயவு செஞ்சு என்னை விட்டுரு டி. ஏதோ உன்கிட்ட பேசி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க சொல்லி அந்த கார்த்தி எருமை சொல்லிச்சுன்னு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்.. நீயாச்சு உன் அருமை புருஷனாச்சு.. நான் போறேன்டி.. "

"யேய் எரும..."என்று இவள் கத்த கத்த ரஞ்சியோ "இனி உன் கதைக்கே வரல சாமி என்றுவிட்டு ஓடியே விட்டாள்..

சிறிது நேரத்தில் ஆதியும் வந்துவிட சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.. தங்கள் அறைக்கு வந்த ரதி படுக்கையை ஒழுங்கு படுத்தினாள்.. அவள் அருகில் வந்தான் ஆதி.

"ஆரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."என்று ஆதி சொல்லவும் சுற்றும் முற்றும் யாரையோ தேடினாள் ரதி.

"என்ன தேடுற.."என்றான் கேள்வியாய்.

"இல்ல ஆருன்னு யாரையோ கூப்பிட்டில.. அதுதான் யாருன்னு தேடினேன்.. என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனமாக, அவள் கைபிடித்து தன் புறம் திருப்பினான் ஆதி..

"நான் உன்ன தான் கூப்பிட்டேன்.."

"ஓஹ் நான் தான் ஆருவா.. நான் கூட ஆரோன்னு(யாரோ) நினச்சேன்.."

"ரொம்ப பண்ணாதடி.. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆரு.."

"எனக்கு டைமில்ல. தூக்கம் வருது.

"பச்சுன்னு ஒன்னு நச்சுன்னு குடுத்தா தூக்கம்லாம் போயிரும்.. அப்புறம் பேச வேண்டியதை எல்லாம் பேசிக்குவேன்.. அப்புறம் உன் விருப்பம்.."என்று அவன் சொல்லி முடிக்கவும், ரதியோ இவன் சொன்ன பச்சென்னு ஒரு இச்சை இவன் உதட்டில் அசால்ட்டாய் பதித்தாள்.

ஆதி பெருந்தொற்றை போல் தொற்றிக்கொண்ட திகைப்பு விலக்காமல் விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தான் ரதியை..

அவளோ கண்ணை சுருக்கி இதழ் சுளித்து "ஹப்பா இப்பத் தான் தூக்கம் சொழட்டிக் கிட்டு வருது "என்றவள் ஆயாசமாய் கட்டிலில் விழுந்து தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டாள்..

"அடி ராட்சசி.. கிராதாகி.. இப்படி அசால்ட்டா என்னை கொன்னுட்டு தூங்க போய்ட்டாளே.. "என்று வாய் விட்டே புலம்பியவன் மனதில், 'என்ன டிசைனுடா இவ 'என்று ஓடாமல் இருந்தால் தான் ஆச்சிரியம்..

'இன்னைக்கு மேல படுத்தோம் தொலைஞ்சோம் 'என்று புலம்பியவன், தலையணையை எடுத்து கீழே போட்டு குப்பிற படுத்து விட்டான்..

போர்வைக்குள் ஒளிந்திருந்த ரதி கண்களை இறுக்க மூடி இரு கைகளையும் தன் இதழ்களின் மீது வைத்திருந்தாள்..

வயிற்றுக்குள்ளும் வாயினுள்ளும் பட்டாம்பூச்சி சிறகடிப்பதை போலொரு அவஸ்தையில் இறுக மூடியிருந்தாள் இதழ்களை.. பெண்களின் இதழ்களை வருணித்த விதங்கள் வழக்கொழிந்து போனது போல் பிரேமை அவளிடம்..

புகைபிடித்தலின் தடம் கானா சிவந்த இதழ்கள்.. பட்டின் மென்மையாய் வரிவடிவாய் சில நொடி ஒற்றல் என்றாலும் பெரும் அதிர்வாய் மின்சார தாக்கமாய் இன்னும் அவள் இதழில் மிச்சமீதியாய் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது..

'இந்த வீர தீர சாகசம் எல்லாம் தேவையாடி ரதி உனக்கு."என மனசாட்சி பதறிக்கொண்டு கத்தியது இவளுள்..

'பின்ன முத்தம் என்ன அவங்களுக்கு மட்டும் பாத்தியப்பட்டதா..என்னமோ மிரட்டுறான்.. இப்போ அல்லு விட்டுருக்கும் அய்யாவுக்கு..'என மனதிற்குள் வீர வசனம் பேச,

அவள் மனசாட்சியோ 'அவனுக்கு மட்டுமாடி தங்கம் 'என்று கேலி செய்ய, அதை 'ச்சு ச்சு...'என்று விரட்டி விட்டாள்..

இரவு நேரம் விரைந்து கடந்து கொண்டிருக்க, ரதியோ போர்வைக்குள் உருண்டு கொண்டிருந்தாளே தவிர உறக்கம் வரவில்லை..

உறக்கத்துடன் போராடி பார்த்தவள் "ச்சே "என போர்வையாய் உதறி விட்டு எழுந்து அமர்ந்தாள். நீல நிற இரவு விளக்கின் வெளிச்சத்தில் குளித்திருந்த அறையில் வெறும் தரையில் இவள் புறம் ஒருக்களித்து படுத்திருந்த ஆதியை பார்த்தாள்..

உறங்கும் போதும் அவன் முகத்தில் தென்பட்ட வசீகரம் எப்பொழுதும் போல் இவளை தொலைய செய்தது. மெல்ல எழுந்தவள் பூனை நடை நடந்து அவன் அருகில் படுத்துக் கொண்டாள்..

அவன் இழுத்து விட்ட மூச்சுக் காற்று இவள் முகத்தில் வந்து மோத, சுக தென்றல் ஒன்று தழுவிக்கொண்டது போன்றொரு உணர்வில் லயித்திருந்தாள்..

ஜில்லிட்ட வெறும் தரைக்கு எதிராய் அவனிடத்தில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் பெரும் கதகதப்பை தருவதை உணர முடிந்தது.. மூடிய இமைகளில் இருந்த அடர்த்தியான இமைக் கற்றைகள் மேல் எப்பொழுதும் இவளுக்கு அலாதி ஈர்ப்புண்டு.

"உன் மேல என்னால கோவத்தை இழுத்து வைக்க முடிலடா ரதி புருஷா. சரியான மாயக்காரன் நீ "என்று அவன் மீதான கொஞ்சலில் இறங்க, தூக்கத்தில் இருந்தவனோ அவனையும் அறியாமல் ரதியை இடையோடு சேர்த்து தன்னுடன் இறுக அணைத்துக் கொள்ள, அந்த அணைப்பில் அவள் உணர்ந்தது பரிபூரண அன்போடு இயைந்த பாதுகாப்பை மட்டுமே..

எல்லா நேரங்களிலும் ஒரு ஆணின் அணைப்பு சிலிர்ப்பையும் உயிர் தூண்டலையும் தருவிப்பது இல்லை.. பெரும்பாலும் பெண்ணவள் உணருவது பாதுகாப்பு உணர்வையும் அவன் அன்பையும் மட்டுமே..

ரதியும் அவன் அணைப்பினில் அவன் மார்பினில் முகம் பாதித்து உறக்கத்தை தழுவினாள்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN