முகவரி 24

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“மான்வி குட்டி பாப்பா… என்ன செய்ற.. எப்படி இருக்க?” கேட்ட படி வெண்பா உள்ளே நுழைய...

“அத்தே...” என்று மானு ஆர்ப்பரிக்க...

“வாங்க அண்ணி...” என்று அனு அவளை வரவேற்க...

சிரித்த முகமாக உள்ளே நுழைந்தவள்… அனுவைக் கண்டதும் புருவங்கள் நெறிய... அவளை ஆராய்ச்சியோடு நோக்கியவள், “தங்கம் இப்போ நீ எப்படி இருக்க?” என்று மருமகளை விசாரித்தவள்... மறந்தும் பிறகு அனுவின் முகம் கண்டு பேசவில்லை.

அனுவும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மான்வியைப் பார்க்க தானே வந்து இருக்கிறார்... அதனால் குழந்தையின் உடல்நிலை விஷயங்களை இவளாகச் சொன்னவள்... மான்விக்கு வேண்டியதைச் செய்தவள் அவள் தூங்கியதும்...

“அண்ணி, குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுங்க. அண்ணா வரலையா அண்ணி... கமல்எங்கே...” சகஜமாய் இவள் பேச

இவ்வளவு நேரம் முகத்திலிருந்த இலகு தன்மை மறைய அனுவின் கேள்விக்கு எதற்கும் பதில் கொடுக்காமல் அவளை ஒரு வெட்டும் பார்வை பார்த்து விட்டு வெண்பா வெளியேற எத்தனிக்க...

அப்போது “அக்கா, நீ இந்தப் பக்கம் வந்ததும் கமல் உன்னையை கேட்டு ஒரே அடம். இந்தா, இவனைப் பிடி... நான் ஆபீஸ் கிளம்புறேன்” என்றபடி மிருடன் உள்ளே நுழைய

தம்பியின் வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் அவனையும் ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு குழந்தையைக் கூட வாங்காமல் இவள் வெளியேற

தமக்கையின் முகத்தை வைத்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன், “என்ன ஆச்சு ஷிதா?” என்று மனைவியிடம் விசாரிக்க

“தெரியலைங்க… பாப்பா.. கிட்ட நல்லா தான் பேசிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. அவ தூங்கினதும் வெளியே கிளம்பினவங்களை, நான் தான் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்னு சொன்னேன். அதற்கும் எதுவும் சொல்லலை... ஒரு வேளை நான் இந்த வீட்டுக்கு வந்தது அண்ணிக்கு பிடிக்கலையோ... என் தம்பி வீட்டில் வந்து இவ யார் என்னை உபசரிக்கிறதுனு நினைத்து இருப்பாங்களோ...” அனு மனதில் பட்டதை கேட்டு விட

“சேச்சே... அக்கா அப்படி எல்லாம் நினைக்கிறவ இல்லை. என் மனைவி... மகள் இருவரும் என் வீட்டில் தான் இருப்பாங்கனு அவளுக்குத் தெரியாதா? இது வேற ஏதோ கோபம். ஆனா அக்கா கோபமா இருக்கிறது மட்டும் தெரியுது. சரி விடு பார்த்துக்கலாம்” என்றவன் கமலை அவளிடம் கொடுத்து விட்டு,

“அக்கா ஏதாவது சொன்னாலும் எதையும் மனசுல போட்டுகாதே... தனியா இருக்கோம்னு நினைக்காதே... நான் இருக்கேன். என் கிட்ட சொல்லு... சரியா...” அக்கறையாய் சொன்னவன் அவள் தலை அசைத்ததும் மனைவியின் கலங்கிய முகத்தைக் கண்டவன் அவள் கூந்தல் வருடி, “அப்போ நான் போயிட்டு வரேன்” என்று பரிவாய் சொல்ல

“மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவீங்க இல்ல?”

“இல்லை ஷிதா… வேலை இருக்கு. லஞ்ச் கொடுத்து அனுப்பிடு... நான் ஈவினிங் சீக்கிரம் வரப் பார்க்கிறேன்” என்றவன் ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து விலகி இருந்தான் மிருடன். பின்னரும் தன் அக்காவை தேடி அவளிடமும் சொல்லிக் கொண்டே கிளம்பினான் அவன்.

வெண்பா குளித்து வந்த பின்... பிள்ளைகளும் அவளும் காலை உணவை முடித்து... பின்னர் மதியம் உணவுக்கு வேண்டியதை அனுவுடன் சேர்ந்து செய்து அவ்வுணவையும் உண்டு பிள்ளைகளைத் தூங்க வைத்த பிறகும்... வெண்பா அனுவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அது அணுவின் மனதை ஏதோ செய்ய...

அவள் அறைக்கு வெண்பாவைத் தேடிச் சென்ற அனு, “அண்ணி, உங்க தம்பி வீட்டில்… நானும் மான்வியும் எப்படி இருக்கலாம்னு நினைக்கிறீங்களா? மான்வியோட அப்பா அவர் தானே அண்ணி… அப்போ நானும் பேபியும் இங்க தானே இருப்போம்?” இவள் மனதில் அரித்துக் கொண்டிருந்ததை சொல்லி விட

“மான்விக்கு அப்பா மட்டும் தானா? உனக்கு எந்த வகையிலும் என் தம்பி உறவு இல்லையா?” என கோபத்துடன் வெண்பா கேட்க

“அது… அண்ணி… மான்விக்கு அப்பானா… அவர் என் கணவர் தானே… நானும் அவரோட மனைவி தானே?” இந்த வார்த்தைகளை சொல்லப் பிடிக்காமல் நிறுத்தி நிறுத்தி அரைகுறை மனதுடன் அனு சொல்லவும்…

“அப்படியா? எனக்கு என்னமோ பார்த்தா அப்படி தெரியலியே...” வெண்பா நறுக்கென்று பதில் தர

அனுவுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது. ‘அப்போ இவங்க என்ன சந்தேகிக்கிறாங்களா... என்னை ஏமாற்றுப் பேர்வழின்னு நினைக்கிறாங்களா....’ என்று நினைத்தவளுக்கு ரோஷம் வர, “வேணும்னா டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பாருங்க. அப்போ நான் சுத்தமானவள்னு தெரியும். குழந்தைக்கு உடம்பு சரியானதும் நான் இங்கிருந்து போய்டுறேன்”

பாதி பேச்சில் சுரீர் என்று கன்னம் எரியவும் தான்... வெண்பா தன்னை அடித்ததை உணர்ந்தாள் அனு. இவள் அதிர்ச்சியிலும்... வலியிலும் பேந்தப் பேந்த முழிக்க...

“அப்பப்பா! என்ன வாய்... என்ன வாய்… என்ன அவசரம்... என்ன மாதிரி பேச்சு இது! இதெல்லாம் வார்த்தை இல்லை அனு. கொடுக்காய் கொட்டுவது! நிச்சயம் நான் இதை உன்னிடமிருந்து எதிர்பார்க்கலை அனு...” என்று வேதனைப்பட்டவள்...

“ஒரு பொண்ணோட மானத்தை சோதிப்பவளா நான்? அதிலும் என் தம்பி மனைவியின் மானத்தை! நீ என்னை பற்றி என்ன நினைத்த? என்னுடைய வார்த்தை மட்டும் தானா... இல்லை நீ எல்லோருடைய வார்த்தையையும் தப்பா தான் புரிஞ்சிக்குவீயா?” அவள் ஆதங்கத்தில் கோபப்பட...

அனுவோ இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, “உன்னை அடித்து வளர்க்கலைன்னு நீ இப்படி நிற்கிறதிலேயே தெரியுது. நான் இப்படி தான்... இப்ப கூட உன்னை என் மகளா நினைத்து தான் அடித்தேன்” என்றவள் அனுவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றவள் அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவளை நிறுத்தி...

“உன் கோலத்தை நீயே பார்... நீ என் தம்பிக்கு மனைவினு சொல்கிற. மான்வி... உங்க இருவரோட மகள்னு சொல்கிற... ஆனால் நீ இருக்கும் கோலம்... அதே பழைய அனுவா தான் இருக்க! முன்னாடி எப்படியோ... இப்போ நீ இந்த வீட்டுக்கு வந்த பிறகு மாறி இருக்கணுமா இல்லையா... என்ன இது? இப்படி தான் வெளியில் இருக்கிறவங்க வாய்க்கு அவல் கொடுக்கறியா? இதைக் கேட்டா… டி.என்.ஏ டெஸ்ட் வரை போற! அனு, நிச்சயம் நான் இதை உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கல” அனுவை சரமாரியாக வெளுத்து வாங்கிய வெண்பா, இறுதியாய் மறுபடியும் தன் ஆதங்கத்தில் முடிக்க…

அனுவுக்கு இப்போது தான் தெரிந்தது தான் இருக்கும் கோலம்! அதே பழைய அனுவாக பூ.. பொட்டு… என்று இல்லாத கோலம்… மகளின் உடல்நிலை... அவள் நல்ல முறையில் வீட்டுக்கு வருவது என்று இவள் அதிலேயே இருக்க... கொஞ்சமும் அவள் தன் உருவத்தைக் காணவில்லை. மிருடனும் இவள் என் மனைவி... என் மகள்.. அவ்வளவே! என்ற திருப்தியில் இருந்தானே தவிர... மனைவியின் நிலையில் மாற்றம் வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை. அப்படியே நினைத்து இருந்தாலும்... அதை வாய் திறந்து சொல்பவன் இல்லை அவன்… மனைவியை செய்ய வைப்பவன் அவன்.

‘நான்கு நாட்களா இப்படியேவா இந்த வீட்டில் இருந்தோம்! மகளுக்கு இவர் தான் தகப்பன் என்ற அடையாளத்தோடு இங்கு வந்த பிறகு... இதை எப்படி மறந்தேன்?அந்த அளவிற்க்கா கணவனை விட்டு மனதால் நான் போய்ட்டேன்’ அனு மனதிற்குள் குழம்பியவள்

“சாரி அண்ணி....” இவள் மெல்லிய குரலில் சொல்ல

வெண்பா, “இதற்கு தான் வீட்டில் ஒரு பெரியவங்க வேண்டும்னு சொல்றது. முன்னாடி உங்களுக்குள்ளே என்ன நடந்ததோ... இப்போ நீ என் தம்பி மனைவி. அந்த உறவை… அதற்கான உரிமையையும், மரியாதையையும் அவனும் விட்டுத் தர மாட்டான்... நீயும் விட்டு கொடுத்துடாதே...” என்று சமாதானம் செய்தவள்... “சொல்லு அனு... கணவன் இருக்க நீ இந்த நிலையில் நிற்க என்ன காரணம்? அப்படி உங்களுக்குள்ள என்ன நடந்தது?” இவள் பரிவாய் கேட்க, அனு தயங்க…

அவளின் தயக்கத்தை வேறு மாதிரி யூகித்த வெண்பா, “திருமணம் இல்லாமலே என் தம்பி உன் கிட்ட தவறா நடந்துகிட்டானா?” தம்பி மேல் நம்பிக்கை இருந்தாலும் இவள் கேட்டு விட

“ஐயோ அண்ணி! அப்படி எல்லாம் இல்லை... நாங்க இருவரும் விரும்பி... அதிலும் திருமணம் செய்து தான்...” மேற்கொண்டு சொல்ல முடியாமல் அனு தவிக்க…

அவளை பரிவாய் அணைத்து அழைத்துச் சென்று கட்டிலின் ஓரம் அமர வைத்தவள், “இந்தா... இந்த தண்ணியை குடிச்சிட்டு... மெதுவா சொல்லு” ஆனால் சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வெண்பா இருக்க

“அது... வந்து... அண்ணி...” என்ற அனு, அன்று தனக்கும் மிருடவாமணனுக்குமாக ஏற்பட்ட உறவைச் சொல்ல ஆரம்பித்தாள்...

அன்று...
டெல்லி... மத்திய அமைச்சர் குணநாதன் பங்களா.

“உங்க பொண்ணு என்னை சித்தின்னு நினைக்கிறதும் இல்ல... மதிக்கறதும் இல்ல” சுமதி தன் கணவனிடம் குறைபட, குணநாதனோ மகளைக் காண… அவளோ தலை குனிந்து நின்றாள்.

“நீங்க எப்போ பார், கட்சி மீட்டிங்... வெளியூர்... வெளிநாடுன்னு.. சுத்திகிட்டே இருக்கீங்க. அப்போ நான் தானே அனுவை நல்லா பார்த்துக்கணும்? என் மகளா நினைத்து அவளைப் பார்த்தா... இவ என் பேச்சைக் கேட்கிறதே இல்லை...” சுமதி இன்னும் தூபம் போட

குணநாதன், “என்ன பாப்பா... என்ன ஆச்சு?”

“அது வந்து ப்பா ஸ்கூலில்...” என்று அனு ஆரம்பித்த நேரம்

“அவளை ஏன் கேட்குறீங்க? அவ சின்னப் பொண்ணு... நான் சொல்கிறேன். இந்த சின்ன வயசுலே... படிக்கிறதை விட்டுட்டு நேபாளம் டூர் போகணும்னு அடம் பிடிக்கிறா. நான் வேணாம்னு சொன்னா கேட்கல. இதோ, நீங்க இருக்கீங்க… நீங்களே சொல்லுங்க... நமக்கு படிப்பு தானே முக்கியம்?” சுமதி நீட்டி முழங்க

அனுவுக்குள் கோபம் துளிர்ந்தது. ‘இந்த சித்தி, ஏன் சினிமாவில் வர்ற வில்லி சித்தி மாதிரி... அப்பா இருக்கும்போது ஒரு வேஷம்.... அவர் இல்லைனா ஒரு வேஷம்னு போடறாங்க? இருக்கட்டும்…. இன்றைக்கு ஒரு முடிவு கட்டுறேன்’ மனதிற்குள் நினைத்துக் கொண்டவள்

“ப்பா... நான் ஒண்ணும் ஸ்கூல் கட் அடிச்சிட்டு டூர் போகல. அடுத்த வருடம் நாங்க பனிரெண்டாவது போறோம். அப்போ டூர் போக முடியாது. அதான்… இந்த வருடம் பள்ளியே ஏற்பாடு செய்து எங்களை டூர் அனுப்பறாங்க... நான் ஒண்ணும் தனியா எல்லாம் போகல ப்பா...” அனு எடுத்துரைக்க

“ஐயோ! ஐயோ! இந்தப் பொண்ணு இப்படின்னு என் கிட்ட சொல்லலைங்க... ஏதோ டூர் போறேன்னு தான் சொல்லுச்சு... இப்படினு தெரிந்திருந்தா போகச் சொல்லியிருப்பேன்” சுமதி இடை புக

“பொய் சொல்லாதீங்க சித்தி... உங்களுக்கு ஸ்கூல் டூர்னு தெரியும்” அனுவும் தன் வாதத்தை நிறுத்த

“நான் உனக்கு சித்தி தான்! அதற்காக... இந்த பதினாறு வயதில்... ஒன்றை மறைக்க நீ பொய் சொல்லணுமா? அக்கா வளர்த்த பொண்ணா நீ? உன்னை அவங்க எப்படி எல்லாம் வளர்த்தாங்க...” வழக்கம் போல சுமதி தன் வார்த்தை ஜாலத்தைக் காட்ட

“நீங்க தான் சித்தி பொய் சொல்றீங்க!” அனு எகிற…

“இரண்டு பேரும் நிறுத்துங்க... வெளியே ஆயிரத்தெட்டு பிரச்சனையோட தான் நான் வீட்டுக்கு வரேன்... நீங்க என்னான்னா… தினந்தினம் அடிச்சிக்கிறீங்க...” என்று குணநாதனின் குரல் ஓங்கி ஒலிக்கவும்

“அச்சோ! நீங்க கோபப்படாதீங்க... எங்க இரண்டு பேருக்கும் உறவே நீங்க தான். நம்ம பொண்ணு நேபாளம் போகவேணாங்க... அங்கே எல்லாம் மலைச்சரிவு அதிகம். நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுனா... ஏற்கனவே அக்காவை நாம் பறிகொடுத்துட்டோம்” சுமதி தன் நடிப்பால் மூக்கை சிந்த

“பாப்பா, நீ டூர் போக வேணாம்” வழக்கம்போல் குணநாதன் உறுதியாய் முடித்துவிட…

அனுவும், நானும் உங்கள் மகள் தான் என்பதை நிருபிக்க... என்றும் இல்லாமல் இன்று, “ப்பா... என்னை டூருக்கு அனுப்பினா நான் இதே ஸ்கூலில் படிக்கிறேன்... நீங்க அனுப்ப மாட்டீங்கனா... நான் ஸ்கூலுக்குப் போகலை. என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை பரிதாபமா பார்ப்பாங்க… அது எனக்கு அவமானம்! என்னை விடுங்க…. நான் சென்னையில் தாத்தா வீட்டில் போய் தங்கிக்கிறேன்” இவளும் தன் முடிவில் பிடிவாதமாய் நிற்க


மனைவியை எதிர்த்து டூர் அனுப்ப முடியாத குணநாதனோ, மகளை அவள் பிடிவாதத்தின் பேரில்... சென்னையில் இருக்கும் தன் மாமனார் வீடான… அதாவது அனுவின் தாய் கௌசல்யாவின் அப்பா வீடான செல்வராஜ் வீட்டிற்குத் அனுவை அனுப்பி வைத்தார் அவர்.
 
Last edited:
Super Super maa... Nice episode.... Innum ava பூ pottu vechi kalanu thaan avangaluku kovam m... Ava chiththi seriyana kedi ah irukkum போல இல்லாது polaathathum solli ava அப்பா va namba veikiraanga... Iva kochikitu ava தாத்தா வீடு ku kilambita
 
U

UMA M

Guest
வாவ் வெண்பா செய் அடி, சென்னையில் படிக்கும் போது தான் நம்ம ஹீரோ வருகிறாரா
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super Super maa... Nice episode.... Innum ava பூ pottu vechi kalanu thaan avangaluku kovam m... Ava chiththi seriyana kedi ah irukkum போல இல்லாது polaathathum solli ava அப்பா va namba veikiraanga... Iva kochikitu ava தாத்தா வீடு ku kilambita
நன்றிங்க சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN