சிக்கிமுக்கி 24

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
24

கல்லூரி காலம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் தாண்டி விட்டது. அபிநயாவும் அன்புவும் கடந்த மூன்று மாதங்களாக எந்த சண்டையும் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இருவராலுமே விலகி இருக்க முடியவில்லை‌. எப்போதும் அருகருகில்தான் இருந்தனர். ஆனாலும் அருகில்தான் தாங்கள் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே தினங்களை கடந்தனர்.
மனதிற்குள் இருந்த வெறுமைக்கான காரணம் புரியாமலேயே இருவரும் காலத்தை கடத்திக் கொண்டிருந்தனர்.
குணாவும் மீனாவும் ஒன்றாய் சேர்ந்து கல்லூரிக்குள் சுற்றி வரும் அளவுக்கு நெருங்கி விட்டிருந்தனர். அன்புவும் அபிநயாவும் சண்டை போட்டுக் கொள்ளாதது இவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. தினமும் மாலை வேளைகளில் கல்லூரியின் பின்புறம் இருந்த புல்வெளியில் அமர்ந்து மணிக்கணக்காக கதை பேசினர் இருவரும். அன்புவுக்கும் அபிநயாவுக்கும் இவர்களின் காதல் கூத்தை தினமும் பார்த்து பார்த்து சலித்தே போய் விட்டது.
சஞ்சய் தனக்கென ஒரு காதலியை கண்டு பிடித்து விட்டான். அவனின் காதலி சுவேதாவும் அபிநயாவின் வகுப்புதான். இவன் காதலை சொன்னதும் உடனே ஏற்றுக் கொண்டாள் அவள். அன்றிலிருந்தே அவளும் அபிநயாவிற்கு நெருங்கிய தோழியாகி விட்டாள்.
தினமும் போல அன்று காலையிலும் தன் காதலியை அவளின் வகுப்பறை வாசலில் விட்டுவிட்டு தனது வகுப்பறை நோக்கி நடந்தான் சஞ்சய்.
சுவேதா மீனாவின் அருகே வந்து அமர்ந்தாள்.
"ரோமியோ கிளம்பிட்டாரா.?" என்று கிண்டலாக கேட்டாள் மீனா.
"ம்.. மறுபடியும் இன்டர்வெல் டைம்ல கரெக்டா வந்துடுவாரு.." அரை வெட்கமும் அரை சலிப்புமாக சொன்னாள் அவள்.
"உன் ஆளை பாரு.. உன்னையே பார்த்துட்டு இருக்கான்.." என்று சுவேதா சொன்னதும் குணா இருந்த இடத்தை திரும்பி பார்த்தாள் மீனா. இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்‌.
"ரொம்ப லவ்லீப்பா.. இப்பவே ரொம்ப கேர் பண்றான்.." என்றாள் மீனா.
இருவரும் தங்களின் காதல் புராணங்களை கிசுகிசுத்துக் கொண்டே இருந்த நேரத்தில் அந்த வகுப்பும் முடிந்தது. பாடம் எடுக்க வந்த ஆசிரியர் வகுப்பிலிருந்து கிளம்பி போனார்.
அபிநயா தோழிகளை திரும்பி பார்த்தாள். "கிளாஸை கவனிக்கவே மாட்டிங்களா.? நீங்க கவனிக்கலன்னாலும் பரவால்ல. மத்தவங்களையும் ஏன் டிஸ்டர்ப் பணறிங்க.?" என்றாள்.
மீனாவும் சுவேதாவும் ஒருவரையொருவர் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டனர்.
"கிளாஸை கவனிக்கறாளாம்.. அன்புவை ஓர கண்ணால கவனிக்கிற விசயம் எங்களுக்கு தெரியாதுன்னு நினைப்பு போல.." என்று கிண்டல் குரலில் சொன்னாள் சுவேதா.
அபிநயா அவளை முறைத்தாள். "லூசுதனமா நீங்களே எதையாவது கற்பனை பண்ணிக்காதிங்க.. அவனை

இங்கே எவளும் பார்க்கல.." என்றவள் அவர்களுக்கு பழிப்புக் காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்‌.
சுவேதாவும் மீனாவும் தங்களுக்குள் எதையோ ரகசியமாக பேசி சிரித்துக் கொண்டனர்.
மாலை வேளையில் அபிநயாவோடு வகுப்பறை விட்டு கிளம்பினர் மீனாவும் சுவேதாவும். வாசலுக்கு வந்ததும் இருவரும் தங்களின் காதல் ஜோடிகளோடு கிளம்பி விட்டனர்.
அபிநயா இருவரையும் சலிப்போடு பார்த்து விட்டு விடுதி நோக்கி கிளம்பினாள். அவளின் பின்னால் நான்கடி தூரத்தில் நடந்தான் அன்பு.
'குட்டச்சி.. எப்படி நடக்கறா பாரு.. மழையில நனைஞ்ச எருமை மாடு ஆடி அசைஞ்சி போற மாதிரி..' என்று சொன்னது அவனின் மனம்.
ஆனாலும் நடந்துக் கொண்டிருந்தவளின் பாதத்தையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான் அன்பு.
தன் முன்னால் வந்து விழும் நிழலை கவனித்தபடியே எட்டு வைத்து நடந்தாள் அபிநயா. 'கோணக்காலு பூச்சாண்டி.. எப்படி நடக்கறான் பாரு ஒட்டகச்சிவிங்கி ஊர்கோலம் போற மாதிரி..' என்று கிண்டலடித்தது அவளின் மனம்‌.
அபிநயா தனது விடுதிக்குள் நுழைந்தாள். அன்பு அதற்கும் முன்பே தனது அறைக்கு வந்து ஜன்னலை திறந்து விட்டிருந்தான். எதிரில் இருந்த அறையை பார்த்தான். எப்போதும் போல மூடியிருந்தது. மேஜை மீது அமர்ந்தவன் புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்‌. நொடிக்கொரு தரம் ஜன்னலை பார்த்தன கண்கள்.
அபிநயா மூடியிருந்த ஜன்னலின் முன்னால் சிலையாக நின்றுக் கொண்டிருந்தாள். தினமும் அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ மீனா அந்த அறைக்கு வரும் வரையிலுமே இப்படித்தான் நின்றுக் கொண்டிருந்தாள் ‌அவள். காரணமே இல்லை. ஆனாலும் சிலை போல நின்றுக் கொண்டிருப்பாள். அந்த ஜன்னலை திறக்க அவளின் கை தினம் பத்து முறை நீளும். ஆனால் உடனே பின்னிக்கிழுத்துக் கொள்வாள். அந்த ஜன்னலின் மீது கை விரல்களை ஓட விடுவாள். இப்படியேதான் இத்தனை நாட்களும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இருவருமே மனதுக்குள் ஒருவரையொருவர் நினைத்து ஏக்கம் கொண்டிருந்தனர்.
அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு ஜன்னலை விட்டு நகர்ந்து வந்த அபிநயா கட்டிலில் வந்து படுத்தாள். மீனா உள்ளே வந்தாள்.
"தினமும் அப்படி என்னதான் பேசுறிங்க.?" என்று சலிப்போடு கேட்ட அபிநயாவை முறைத்தாள் மீனா.
"கொஞ்ச நாள் முன்னாடி வரை நீயும் ஒரு ஜீவனும் ஓயாம சண்டை போடுவிங்களே.. அப்படி என்னதான் சண்டை போடுறிங்கன்னு நாங்க யாராவது கேட்டோமா என்று பதில் கேள்வி கேட்டாள் மீனா.
அபிநயா அவளை முறைத்து பார்த்துவிட்டு தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
"இந்த வாரம் வீட்டுக்கு போறியா நீ.?" என கேட்டாள் மீனா.
"போகணும்.." என்று சொன்ன அபிநயாவிற்கு போன வாரத்தில் பேருந்தில் நடந்தது நினைவிற்கு வந்தது. எப்போதும் அவள் பயணிக்கும் பேருந்து அன்று இவளின் தாமதத்தால் முன்னாலேயே புறப்பட்டு சென்று விட்டிருந்தது. அடுத்ததாக வந்த பேருந்தில் ஏறினாள் அபிநயா. அந்த பேருந்தில் கூட்டம் அதிகம். அதிலும் ஆண்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. முன்னே செல்ல கூட வழி இல்லை. ஆண்கள் கூட்டத்திலிருந்து விடுபட்டு கம்பி ஒன்றின் அருகே வந்து நின்றாள் அபிநயா. மேலிருக்கும் கம்பியும் அவளின் உயரத்திற்கு எட்டவில்லை‌. இருப்பது முன்னால் இருந்த கம்பிதான். அதில் சாய்ந்து நின்றாலும் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆணின் மீது உடல் படர்ந்தது. கம்பியில் சாயாமல் நேராய் நின்றால் பின்னால் இருப்பவர்கள் மீது சாய வேண்டியதாய் இருந்தது‌. அவளின் வலப்பக்கத்தில் நின்றிருந்த பெண்மணி ஒருத்தி இவளின் கை பட்டாலே முறைத்தாள்‌. வலப்பக்கம் நின்றிருந்த விடலை பையன் வேண்டுமென்றே இவளின் மீது மோதினான். அவனிடம் தள்ளி நிற்க சொல்லி பலமுறை சொன்னாள் அபிநயா. ஆனால் அவன் கேட்கவேயில்லை. பேருந்து என்றால் கை கால் படத்தான் செய்யும் என்று வியாக்கியானம் பேசினான் அவன். பேருந்தில் உள்ள மற்ற பெண்களை பார்த்தாள். பெரும்பாலானோர் பேருந்தின் முன் பக்கத்தில்தான் நின்றிருந்தனர். இவளை போல பேருந்தின் நடுப்பாகத்தில் நின்றுக் கொண்டிருந்த மற்ற பெண்கள் யாருமே இவளை போல அசாதாரணமாய் உணரவில்லை.
வெறும் ஐந்து நிமிடங்களை அந்த பேருந்தில் கடந்திருப்பாள் அவள். ஆனால் அதுவே அவளுக்கு அரை யுகம் போல இருந்தது. பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொள்ளலாமா என்று அவள் நினைத்த நேரத்தில் அவளின் முதுகோடு உரசியபடி வந்து நின்றது ஒரு ஜீவன். திரும்பி பார்த்தாள். அன்புதான் நின்றுக் கொண்டிருந்தான். அவள் திரும்பிக் கொள்ள நினைத்த நேரத்தில் அவளை தன் பக்கம் திருப்பி நிறுத்தினான். அவளின் முதுகு பின்னால் இருந்த கம்பியில் சாய்ந்தது. பேருந்தின் குலுக்கலில் சாய இருந்தவளின் கையை பற்றி தனது கையில் பதித்தான்‌. அவள் குழப்பமாக பார்த்துவிட்டு அவனின் கையை பற்றி நின்றாள். அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் அங்கே அவன் அவளுக்காய் உருவாக்கிய கோட்டையை தாண்டி யாராலும் உள் நுழைய முடியாது எனும்படி இருந்தது அவனது செய்கை.
பேருந்தில் இசை பாடிய பாடலின் மெல்லிய ராகத்தில் அவனின் முகத்தை பார்த்துக் கொண்டே பயணித்தவளுக்கு அவன் ஏன் தன்னை மறந்து அவளை பார்க்கிறான் என்று சந்தேகமாக இருந்தது.
வெளியே இருள் கவிழ்ந்தது. பேருந்தினுள் விளக்குகள் ஒளிர்ந்தது. அப்படியொரு சூழலில் அவனோடு பயணிப்பது அவளுக்கு புதுவித உணர்வை தந்தது. பேருந்து சந்தனக்கொடிக்காலில் நின்றபோது கூட அவளின் கை பிடித்து அழைத்துவந்து பேருந்தின் கீழே இறக்கி விட்டான் அன்பு. அவள் தன் பேக்கை சரி செய்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது அவன் தூரமாய் நடந்துக் கொண்டிருந்தான்‌. அவள் இருளை பார்த்தும் இருளில் ஒளிரும் விளக்குகளை பார்த்தும் அரை குறை பயத்தோடும் தங்களது தெருவை நோக்கி நடந்தாள். ஒரு இடத்தில் விளக்கே இல்லை. அந்த சாலையை கடப்போம் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இல்லை. தந்தைக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்து அவள் ஃபோனை எடுத்து நேரத்தில் அவளின் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தாள். அன்பு வந்துக் கொண்டிருந்தான்‌. அவளுக்கே ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் அவன் செய்வது அவளுக்கு பிடித்திருந்தது. அவன் பின்தொடர்ந்து நடக்க இவள் முன்னால் நடந்துச் சென்று வீட்டை அடைந்தாள்.
போன வாரத்து பேருந்து பயணம் ஏனோ அபிநயாவிற்கு பிடித்திருந்தது. அன்புவை அந்த ஒருநாள் மட்டும் அவளுக்கு பிடித்திருந்தது. போன வார நினைவில் தலையணையில் முகம் புதைத்திருந்தவளுக்கு இந்த வாரமாவது முதல் பேருந்தை தவற விட கூடாது என்ற எண்ணம் வந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN