சிக்கிமுக்கி 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழகிய நந்தவனம் அது. இருபுறமும் பூத்து குலுங்கும் மலர்களை பார்த்தபடியே முன்னால் நடந்தாள் அபிநயா‌. அருமையான மணம் நாசியை தாக்கியது. பாதங்களை மோதும் மலரின் இதழ்கள் அவளுக்கு சில்லிப்பை தந்தன. தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற சந்தேகத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. திரும்பும் இடமெங்கும் பூக்கள் மட்டும்தான் இருந்தன.

கல்லூரியிலிருந்து விடுதி நோக்கி நடந்தவள் எங்கேயோ சிக்கி கொண்டது போல தோன்றியது. சந்தேகங்கள் மனதை அரிக்கவில்லை. பயம் தோன்றவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அவளின் இடது பக்கத்திலிருந்து காலடி சத்தம் ஒன்று கேட்டது. திரும்பி பார்த்தாள். அன்பு அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

"இங்கே என்ன செய்ற நீ.?" என்ற அவளும் அவனை நோக்கி நடந்தாள்.

"உன்னை பின்தொடர்ந்து வந்தேன்.." என்றவன் அவளின் கையை பற்றினான். பல காலமாய் தடைப்பட்டு நின்றிருந்த அவளின் மூச்சு இப்போதுதான் சீர் பெற்றது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு.

அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அவளின் இதழ் நோக்கி குனிந்தான் அன்பு. அவளின் உதட்டில் தன் உதட்டை அழுத்தமாக பதித்தான். அபிநயா அதிர்ச்சியில் உறைந்தாள்.

அவன் சில நொடிகளுக்கு பிறகு விலகி நின்றான்.

"என்ன செஞ்ச நீ.?" என்றாள் அபிநயா தனது உதடுகளை தொட்டு பார்த்தபடி.

"முத்தம் தந்தேன்.." என்றான்.

அபிநயாவிற்கு கோபமாக வந்தது. அவனை அறைய நினைத்து கையை ஓங்கினாள். அதே நேரத்தில் அங்கே வளையொலி சத்தம் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்தார்கள். சத்தம் வந்த திசையிலிருந்து நடந்து வந்தாள் ஒரு மங்கை. பூவனத்தில் உருவான தென்றல் அவளை சுற்றி சுழன்றது. தேவதையை போலவே உருவத்தில் இருந்தவளின் முகம் புன்னகையில் ஜொலித்தது.

அபிநயா அன்புவை விட்டு தள்ளி நின்றாள்.

"யார் நீங்க‌.?" என்றாள் வந்து நின்றவளிடம்.

"எனது பெயர் ஆதி. நான் ஒரு அன்பின் தேவதை.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தனர் இவர்கள் இருவரும்.

"அன்பின் தேவதையா.?" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"ஆமாம்.. இந்த மொத்த உலகமும் அன்பினால்தான் சுழல்கிறது என்ற கோட்பாட்டை முழுதாய் நம்புவள் நான். பிரபஞ்சத்தில் உயிர்கள் உருவாக காரணம் கூட அன்புதான். இங்கே நடைப்பெறும் அனைத்து செயல்களுக்கும் அன்புதான் அடிப்படை என்பது என் வாதம்.." என்றாள் அவள்.

"ஓ.. ஆனா நீங்க இங்கே என்ன பண்றிங்க.?" சந்தேகமாக கேட்டான் அன்பு.

"எங்களுக்கான தடைகள் பலவற்றை தாண்டி உங்களை நான் சந்திக்க வந்த காரணமும் அன்புதான். நீங்கள் இருவரும் ஆன்ம ஜோடிகள். உங்களால் ஒருவரையொருவர் பிரிந்திருக்க முடியாது. உந்தன் வலியை அவள் உணர்வாள். அவளின் மகிழ்ச்சியை நீ கொண்டாடுவாய். உனது வெற்றி அவளுக்கானது. அவளின் தோல்வி உனக்கானது. இப்படி விதி பெற்ற நீங்கள் ஜென்ம எதிரிகளாகும் விதியையும் சேர்ந்தே பெற்றுள்ளீர்கள். ஆனால் அன்பின் முன்னால் எந்த விரோதமும் தலை தூக்காது. இது உண்மை. நீங்களும் உங்களின் விரோதத்திற்கு முக்கியத்துவம் தராமல் அன்பின் வழியில் நடந்துச் செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை வளம் பெறும்.." என்றாள் ஆதி.

அன்புவும் அபிநயாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"நாங்க ஆன்ம ஜோடியா.?" சந்தேகமாக கேட்ட அபிநயாவிடம் ஆமென தலையசைத்தாள் ஆதி.

தாங்கள் இருவரும் ஆன்ம ஜோடிகள் என்ற விசயம் அறிந்ததும் அவர்கள் இருவரின் மனதிலும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

அன்புவின் கையில் தன் கையை பொருத்தினாள் அபிநயா. அதே வேளையில் அங்கே திபுதிபுவென்று படை வீரர்கள் கூட்டம் ஓடி வந்தது.

"ஆதி.. நீ மீண்டும் நமது கட்டுப்பாட்டை மீறிவிட்டாய்.." என்றபடி முன்னால் வந்தான் ஒரு மாவீரன்.

"அவர்கள் இருவரும் அன்பால் வாழ வேண்டியவர்கள். அன்பில்லா வாழ்வு அவர்களுக்கு சிரமத்தை தரும். அதனால்தான் நான் இதை சொல்ல வந்தேன்.." என்றவளை முறைத்தான் அந்த மாவீரன்.

"விதியினை எடுத்துச் சொல்லும் உரிமை உனக்கில்லை.. மறுமுறை நீ இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாவாய்.." என்றவன் இவர்களின் புறம் திரும்பினான். ஆசிர்வதிப்பது போல தன் கையை நீட்டினான்.

"நான் சொன்ன தகவல்களை மறக்கடிக்காதீர்.." என்று கத்தினாள் ஆதி. அவளை இளக்காரமாக பார்த்துக் கொண்டே இவர்களின் சிந்தையில் பதிவாகிய ஆதி பற்றிய நினைவுகளை அழித்தான் அந்த மாவீரன்.

அதிகாலை நேரத்தில் வியர்த்து போய் எழுந்து அமர்ந்தாள் அபிநயா. மூச்சு வாங்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தாள். மீனா தனது கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சி.? என்னத்தையோ தவற விட்டது போல இருக்கே.." குழப்பத்தோடு கீழே இறங்கி நின்றாள். மேஜை மேல் இருந்த அலாரம் ஒலித்தது. மீனா புரண்டு படுத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். கண்களை தேய்த்துக் கொண்டே அபிநயாவை பார்த்தாள்.

"அதிசயமா இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்ட போல.." என்றாள் கொட்டாவி விட்டபடியே.

"நான் என்னவோ கனவு கண்டேன்.." என்றாள் அபிநயா.

"என்ன கனவு.?" கேட்டுக்கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்ற மீனா தனது போர்வை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.

"என்னன்னு தெரியலையே.." என்ற அபிநயா தனது நினைவுகளை சுரண்டி பார்த்தாள். ஒரு நந்தவனம், அன்பு, அவன் தந்த முத்தம் என்று இவை மட்டும் நினைவில் வந்தன.

"உவ்வேக்.. அன்பு எனக்கு முத்தம் தந்துட்டான்.." என்றவள் தன் புறங்கையால் உதட்டை அழுந்த துடைத்தாள்.

மீனா அவளை விசித்திரமாக பார்த்தாள். "அவன் உனக்கு முத்தம் தந்தானா.?" என்றாள் தன் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப இயலாமல்.

"ஆமா.." என தலையசைத்த அபிநயா அவசரமாக தனது பேஸ்டையும் பிரஷையும் எடுத்தாள்.

"முத்தம் தந்தது கனவுலயா.? இல்ல நேர்லயா.?" என்ற மீனாவிற்கு அபிநயாவின் கையில் இருந்த பேஸ்டையும் பிரஷையும் பார்த்து குழப்பமாக இருந்தது.

"கனவுலதான்.. கருமம்.. கருமம்.. அந்த கோணக்காலனுக்கு அறிவே இல்ல.." என்றவள் பிரஷால் பல்லை துலக்கிக் கொண்டே பாத்ரூமை நோக்கி சென்றாள்.

"கனவுல முத்தம் தந்தா கூட பல் விளக்கணுமா.? கொடுமைடா இவளோடு.." என்று நொந்துக் கொண்டாள் மீனா.

அன்பு தூங்கி எழுந்ததில் இருந்தே எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான். கல்லூரி வந்ததும் அபிநயாவை சந்தேகமாக பார்த்தான். அவள் இவனை பார்த்தும் பார்க்காதது போல இருந்தாள். அவனுக்கு என்ன வந்தது என்று குணாவும் பலமுறை கேட்டான். ஆனால் அன்பு வாயே திறக்கவில்லை. சலித்துப்போய் குணாவும் அத்தோடு விட்டு விட்டான்.

முற்பகல் வேளையில் இடைவேளை விட்டபோது குணாவின் முன்னால் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் மீனா.

"ஹாய்.." என்றாள் குணாவிடம் கை விரல்களை அசைத்தபடி.

குணா வெட்கத்தோடு "‌ஹாய்.." என்றான்.

"அவ என்ன உன்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்கா இவ்வளவு வெட்கப்படுற.?" என்ற அன்பு மீனாவின் பக்கம் திரும்பினான். "அதான் தினமும் காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் ஓயாம பார்க்கறிங்க இல்ல‌.. அப்புறம் எதுக்கு புதுசா பார்க்கற மாதிரி ஹாய்ன்னு விரலை ஆட்டுற.?" என்றான் கடுப்பு நிரம்பிய குரலில்.

மீனாவின் முகம் வாடி போனது‌. "எருமை மாடுங்க ஏரோபிளேனை பார்த்து ஏன் நீங்க வானத்துல பறக்கறிங்கன்னு கேட்கற மாதிரி இருக்கு நீ கேட்கிறது.." என்று சீறினான் குணா.

"நீங்க பண்றது உங்களுக்கே சரியா தோணுதா.?" என்று கேட்டான் அன்பு.

"லவ்வர்ஸ்ன்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நீ ஏன் கண்டுக்கற.? உனக்கு பார்க்க பிடிக்கலன்னா கண்ணை மூடிக்கோ.. உன்னையும் அவளையும் பார்க்க சகிக்கல எங்களுக்கு. ஆனாலும் இத்தனை வருசமா உங்க கூடவே குப்பை கொட்டல நான்.." என்று சொன்னான் குணா.

அன்பு அவனை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டான். அபிநயா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் கரம் தானாய் தன் உதட்டை தடவியது. அவள் இவனை முறைத்து விட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

"அவளுக்கும் அதே கனவு வந்திருக்குமோ.?" என்று குழப்பமாக தன்னை தானே கேட்டுக் கொண்டான். முத்தமிட்டுக் கொண்டதும் கலைந்து போன கனவை பாதி நேசித்தான் பாதி வெறுத்தான் அன்பு. நேசத்தின் காரணமும் தெரியவில்லை. வெறுப்பின் காரணமும் புரியவில்லை.

போன வாரத்திலும் இதே போலதான் அவனின் மனம் மாறி மாறி செயல்பட்டது. ஊருக்கு செல்ல குணாவோடு சேர்ந்து பேருந்தில் ஏறியவன் அங்கிருந்து பேருந்து புறப்பட தயாரானதும் தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு இறங்கி கொண்டான். ஏனென்று காரணம் கேட்ட குணாவிடம் உருப்படியான பதிலை சொல்லாமல் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலையே வெறித்தப்படி நின்றான்.

குணா அமர்ந்திருந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்ட பத்து நிமிடம் கழித்துதான் அங்கே ஓடி வந்தாள் அபிநயா. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு அடுத்து வந்த பேருந்தில் ஏறினாள் அவள். அவனும் அவளை பின்தொடர்ந்து அதே பேருந்தில் ஏறினான். அவள் கூட்டத்தில் சிக்கி பரிதவித்தபோது அவனாய் சென்று அவளுக்கு பாதுகாவலாய் நின்றான். ஊரில் இறங்கியதும் அவளுக்கு முன்னால் விடுவிடுவென நடந்தவன் செல்லும் வழியில் இருள் இருப்பதை கண்டு தயங்கி நின்றான். அபிநயா இருளை பார்த்து பயப்படுகையில் அவளுக்கு துணையாய் பயணப்பட்டான். காரணமே இன்றி செய்யும் செயல்களை ரகசியமாக ரசித்தான் அவன்.

மாலை நேர பாட வேளையில் அருள் குமரன் வந்தார். பாடத்தினை நடத்த தொடங்கினார். அபிநயா பாடத்தை கவனித்தாள். அன்பு அவளை ஓரக்கண்ணால் கவனித்து கொண்டிருந்தான்.

சுவேதா தன் நோட்டில் சஞ்சயின் பேரை கிறுக்கிக் கொண்டிருந்தாள். மீனா சுவேதாவின் நோட்டை பார்த்தாள். அவளுக்கு சிரிப்பாக வந்தது. சுவேதா முதல் பக்கத்தை முடித்துவிட்டு அடுத்த பக்கத்தில் சஞ்சயின் பேரை கிறுக்க ஆரம்பித்தாள்.

அருள் குமரன் ஆங்கில நாவல் ஒன்றை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்கள் அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆவலோடு கேட்டனர்.

நேரம் கடந்தது. அருள் குமரன் தன் பாடவேளை முடிந்து அங்கிருந்து கிளம்பினார். அபிநயா தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள். சுவேதாவும் மீனாவும் வழக்கம் போல காதல் மொழி கொஞ்ச கிளம்பி விட்டனர்.

அன்பு அபிநயாவை தொடர்ந்து நடந்தான். கீழ் தளத்திற்கு செல்ல படிகளில் இறங்கினாள் அபிநயா. அவளின் பேக் திறந்திருந்ததை கவனித்தான் அன்பு.

"குட்டச்சி.." என்றான் தன்னை மறந்து.

அபிநயா நடப்பதை சட்டென நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தாள். அன்பு மேலிருந்து ஓடி வந்துக் கொண்டிருந்தான். கீழிருந்து மேலே வந்து கொண்டிருந்த இரண்டாமாண்டு மாணவன் ஒருவன் வந்த வேகத்தில் வழியில் நின்றுக் கொண்டிருந்த அபிநயாவின் மீது வேகமாய் மோதினான். அன்புவை பார்த்தபடி நின்றிருந்த அபிநயா இவன் மோதிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தாள். அவன் பிடிக்க முயன்றான். ஆனால் அவள் அவனின் முயற்சியையும் தாண்டி கீழே விழுந்தாள். விழுந்த வேகத்தில் கீழே உருண்டாள். தரை பகுதிக்கு வந்த பிறகு எழுந்து நின்றாள். அவளின் நெற்றி உடைந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அபிநயா நெற்றியை பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தாள். அன்பு அவளை மோதிய மாணவனை சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தான். அபிநயா அவசரமாக அவர்களிடம் ஓடினாள். இருவரையும் பிரித்து நிறுத்தினாள்.

"விடு அவனை.. இது என் தப்புதான்.." என்று அன்புவிடம் சொன்னாள் அபிநயா.

"இவன்தான் வேணும்ன்னே வந்து உன்னை மோதினான்.." என்ற அன்பு அந்த மாணவனின் முகத்தில் மேலும் ஒரு குத்து விட்டான்.

அபிநயா அன்புவை தன் பக்கம் இழுத்தாள். அந்த மாணவனிடம் "சாரி.." என்றுவிட்டு இவனை இழுத்துக் கொண்டு தூரமாக வந்தாள்.

"எதுக்கு சீன் கிரியேட் பண்ற நீ.?" என்றாள் எரிச்சலோடு.

"அவன் வேணும்ன்னுதான் வந்து உன் மேல மோதினான்.." என்றவனை நிறுத்தினாள் அவள்.

"நீ எதுக்கு என்னை கூப்பிட்ட.?" என்றாள்.

அவளின் பேக்கை சுட்டி காட்டினான் அன்பு. அவள் குழப்பமாக பேக்கை பார்த்தாள். ஜிப்பை போட்டுக் கொண்டாள். பின்னர் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

அன்பு தன் கைவிரல் முட்டிகளை பார்த்தான். லேசாக வலித்தது. கையை உதறிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

அபிநயாவின் மீது மோதிய விகேஷ் தன் மூக்கிலிருந்து கசியும் ரத்தத்தை துடைத்தான்.

"அவளோட ஆளு உன்னை நொங்கெடுத்துட்டான் போல.." என்று சிரித்தபடியே அவனருகே வந்தனர் அவனின் நண்பர்கள் இருவர்.

"பெட் கட்டியது போலவே அவ மேல இடிச்சேன் இல்ல.?" என்றான் அவன்.

"அவ மேல மோதியது எனக்கு தெரியல. ஆனா அவளோட ஆள்கிட்ட நீ அடி வாங்கியதுதான் எனக்கு நினைவுல இருக்கு.." என்றான் நண்பன் ஒருவன் கேலியாக.

"ஆளாம் ஆளு.. அவளும் அவனும் அடிச்சிக்கிட்டே சாக போறாங்க.. அந்த மாதிரி நான் செய்ய போறேன்.." என்றவன் சற்று முன் தான் அடி
வாங்கியதை நினைத்து பற்களை கடித்தான். நண்பர்களுடன் சவால் விட்டுவிட்டு வந்துதான் இவள் மீது மோதினான் விகேஷ். ஆனால் அவள் தடுமாறி கீழே விழுந்து விட்டாள். அவளை பிடிக்க முயன்றான். ஆனால் இவனின் முயற்சியை தாண்டி கீழே உருண்டு விட்டாள் அபிநயா. அவளிடம் சாரி கேட்கத்தான் இருந்தான் அவன். ஆனால் அன்பு குறுக்கே புகுந்து தேவையில்லாமல் அடித்து கோபத்தை கிளறி விட்டு விட்டான். அன்பு அவள் மீது காதல் கொண்டிருப்பது இவனுக்கு எரிச்சலை தந்தது. கல்லூரி சேர்ந்த புதிதில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென சண்டையை நிறுத்திக் கொண்டனர். அவர்களின் சண்டையை மீண்டும் துவங்கி வைக்க திட்டம் தீட்டிய விகேஷ் தன் மூக்கை துடைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.

சிறு பிள்ளைகளின் சண்டை நின்று போனது. மெச்சூரிட்டி வந்த இருவர் சண்டை போட்டுக் கொண்டால் விளைவு என்னவாக இருக்கும்.? பகை வளருமா.? அல்லது ஒவ்வொரு சண்டையும் அவர்களின் காதலை பலமாக்குமா.? அடுத்தடுத்த அத்தியாயத்தில் சொல்றேன் நட்புக்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN