சிக்கிமுக்கி 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா தன் நெற்றிக்கு கட்டு போட்டாள். "எருமை மாடு மாதிரி அவனை அடிச்சிட்டான் கோணக்காலன்.." என்றவளுக்கு தலை வலித்தது. "அவன் தெரியாமதான் மோதியிருக்கான்.." என்றாள் தனக்குதானே.

அன்பு கோபத்தோடு மேஜையின் மீது ஏறி அமர்ந்தான். எதிரில் தெரிந்த ஜன்னலை வெறித்தான். "ஆளையும் அவளையும் பாரு.. ஒருத்தன் வந்து வேணும்ன்னே இடிக்கிறான். நேரா நிற்க வக்கிலாம கீழே விழுந்து மண்டையை உடைச்சி வச்சிக்கிட்டா.. நியாயத்தை கேட்டா நாம கெட்டவங்களாம்.." என்றான் எரிச்சலோடு.

அரை மணி நேரத்திற்கு பிறகு அறைக்கு வந்து சேர்ந்தாள் மீனா‌. அபிநயாவின் தலையில் இருக்கும் கட்டை பார்த்துவிட்டு என்ன நடந்தது என்று விசாரித்தாள். அபிநயா நடந்ததை சொன்னாள். அதை விட அதிகமாக அன்புவை திட்டினாள்.

"சரி விடு.. பையன் ஏதோ உன் மேல இருக்கற பாசத்துல அவனை அடிக்க பாஞ்சிட்டான்.." என்று கிண்டலாக சொன்னாள் மீனா.

அபிநயா அவளை முறைத்தாள். "உன் கற்பனை கேவலமோ கேவலமா இருக்கு.." என்றவள் தன் ஃபோனை எடுத்து கேம் விளையாட ஆரம்பித்தாள்.

"கேமை கை தொடதா பொண்ணு என் பொண்ணுன்னு உங்க அப்பா ஊரெல்லாம் உன்னை புகழ்ந்து வச்சிட்டு இருக்காரு.. நீ என்னடான்னா ஒவ்வொரு கேம்லயும் அறுநூறாவது லெவல் எழுநூறாவது லெவல்ன்னு போய்ட்டு இருக்க.." என்று திட்டினாள் மீனா.

"இன்னைக்கு ஒருநாள் மட்டும் விடு மீனு.. கோணக்காலனால நான் செம டென்சன்ல இருக்கேன்.. இது சும்மா ஸ்ட்ரெஸ் பஸ்டர்.." என்றாள் அபிநயா.

மீனா தோழியின் அருகே வந்து அமர்ந்தாள். அவளின் கையில் இருந்த போனை பிடுங்கினாள். "உனக்கு ஒரு விசயம் தெரியுமா.? நான் குணாவை நினைக்கிற நேரத்தை விட அதிகமா நீ அன்புவை நினைக்கிற.. எதிரியை யாரும் இந்த அளவுக்கு நினைக்க மாட்டாங்க. ஆனா நீங்க இருபத்து நான்கு மணி நேரமும் ஒருத்தரையொருத்தர் திட்டியபடியே நினைச்சிக்கிறிங்க.. அவனை கண்டுக்காதே நீ.. அவனை பத்தி எதையும் யோசிக்காத.. உனக்கு ஸ்ட்ரெஸே இருக்காது.." என்றாள்.

அபிநயா யோசனை செய்தாள். மீனா சொல்வது சரியென்றே தோன்றியது. சரியென தலையசைத்தாள்.

"சரி வா.. நாம இரண்டு பேரும் சேர்ந்து இந்த சம்மை சால்வ் பண்ணலாம்.." என்ற மீனா தனது புத்தகத்தை எடுத்து மடி மீது வைத்தாள். பின்னர் இருவரும் பாடத்தில் மூழ்கினர். இப்போதெல்லாம் மீனாவின் உதவியால் விடுதிக்கு வந்தபிறகும் படிக்க ஆரம்பித்தாள் அபிநயா. அவளின் படிப்பு திறன் மேம்பட்டத்தை அவளாலேயே உணர முடிந்தது.

"ஒருநாள் இல்ல ஒருநாள் விகேஷோட முகத்தை கண்டிப்பா உடைக்க போறேன் நான்.." என்று சீறலாய் சொன்னான் அன்பு.

குணா அவனை சலிப்போடு பார்த்துவிட்டு தனது பேக்கை எடுத்தான். புத்தகம் ஒன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த நூறு ரூபாயை எடுத்து பார்த்தான். "ஹப்பா.. தொலைக்கல நான்‌‌.." என்று நிம்மதி பெருமூச்சி விட்டான். பள்ளியில் இதே போல நிறைய முறை அவன் சேர்த்து வைத்திருந்த பணம் தொலைந்து போயுள்ளது. அல்லது திருடு போயுள்ளது. இங்கே அப்படி ஒரு பிரச்சனை இல்லை என்பது அவனுக்கு நிம்மதியை தந்தது. "நம்ம கிளாஸ்ல திருட்டு பசங்களே இல்லடா.. இங்கே பாரு.. நூறு ரூபா பத்திரமா இருக்கு.." என்று நண்பனிடம் பணத்தை காட்டினான் குணா.

அன்பு குணாவின் கையிலிருந்த பணத்தை பிடுங்கினான். "ஓ.. அப்ப சரி.. நான் இதை செலவு பண்ணிக்கிறேன்.." என்றான்.

குணா தன் பணத்தை பிடுங்கி மீண்டும் நோட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். "எங்க பாப்பாவுக்கு சாக்லேட் வாங்க நான் சேர்த்து வச்ச காசு இது.." என்றான்.

அன்பு அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்து இறங்கி நின்றான்.

"பத்திரமா வச்சிக்கோ.." என்று பழிப்போடு சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து புத்தகத்தை பிரித்தான்.

குணா தன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவனருகே வந்தான். "இந்த சொல்யூசனை சொல்லி கொடு.." என்றான்.

"உங்க பாப்பாவுக்கு வாங்குற சாக்லேட்ல எனக்கும் பங்கு தரியா.?" என்று கிண்டலாக கேட்டான் அன்பு‌.

"அது முடியாது.. வேணா எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கிட்ட சொல்றேன்.. சாக்லேட் என்ன.. நீ கேட்கும் எல்லாமே தருவா.." என்றான் கேலி சிரிப்போடு.

அன்பு அவனை முறைத்தான். "அந்த பேயை பத்தி பேசாத.." என்றவன் நண்பனின் பாட சந்தேகத்தை தீர்க்க ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் சென்றது. வெள்ளிக்கிழமை மாலை வேளையில் அபிநயா வீட்டிற்கு கிளம்பினாள்.

பேருந்து நிலையத்தில் குணாவோடு சேர்ந்து நின்றிருந்த அன்பு அபிநயா அங்கே வந்து சேரும்வரை குட்டி போட்ட பூனையை போல அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

"ஏன்டா உனக்கு இந்த டென்சன்.?" என்று சந்தேகமாக கேட்டான் குணா.

அவனுக்கு பதில் சொல்லவில்லை அன்பு. 'குட்டச்சி.. இன்னைக்காவது கரெக்டா பஸ்க்கு வந்துடுவாளா.?' என்று உள்ளுக்குள் புலம்பினான். பேருந்து புறப்பட ஐந்து நிமிடம் இருக்கும்போது பேருந்து நிலையத்திற்குள் ஓட்டமாக ஓடி வந்தாள் அபிநயா.

"குட்ட.. அந்த ஸ்ப்ரிங் முடியை சீவி அந்த முட்டைக்கோஸ் முகத்தை சிங்காரிச்சிட்டு வரதுக்கு ஒரு மணி நேரமா.?" என்றான் முணுமுணுப்பாக.

புரியாமல் அமர்ந்திருந்த குணாவிற்கு இவனின் புலம்பலுக்கு பிறகே விசயம் புரிந்தது. "அவளுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருந்தியா.? லவ் பண்றவன் கூட தோத்துடுவான்.. வா வந்து பஸ்ல ஏறு.." என்று நண்பனை இழுத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான்.

அபிநயா பேருந்தின் முன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். கூட்டமில்லாத அந்த பேருந்தில் அன்புவும் குணாவும் அவளின் இருக்கையின் பின்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர். அபிநயா திரும்பி பார்த்தாள். குணாவை பார்த்து புன்னகைத்தாள். அன்புவை பார்க்காமல் முன்னால் திரும்பிக் கொண்டாள்‌. அன்பு அவளின் பின்னந்தலையில் கொட்டுவதற்கு கையை கொண்டு சென்றான். சட்டென பாய்ந்து அவனின் கையை தடுத்த குணா விரலை நீட்டி அவனை எச்சரித்தான். "போதும்.. கையை காலை அடக்கமா வச்சிட்டு உட்காரு.." என்றான்.

அன்பு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அபிநயா என்ன செய்கிறாள் என்று சாய்வாக இருந்தபடி பார்த்தான். அவள் ஜன்னல் வழி தெரிந்த கட்டிடங்களையும் மரங்களையும் பார்த்துக் கொண்டு வந்தாள். அன்பு அவளின் முகத்தை மட்டுமே பார்த்தான். அவளின் அசையும் இமைகளும் நெகிழும் விழிகளுமே அவனுடைய பொழுது போக்கிற்கு போதுமானதாக இருந்தது.

பேருந்தின் ஓட்டத்தில் கசிந்த பாடலை முணுமுணுத்தபடி அபிநயாவின் கூந்தல் முடியில் விரலை சுற்றி விளையாடினான் அன்பு. குணா அவ்வப்போது கையை தட்டி விட்டான். ஆனால் அன்பு அமைதி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவளின் தலைமுடியில் விளையாடினான்.

குணாவின் பக்கம் சாய்ந்தவன் "இவ முடியை மந்திரிச்சி வைக்கலாமா.?" என்றான்.

குணா அதிர்ச்சியோடு அவனை பார்த்தான். "வினோத் மாமா உன்னை தலைகீழா கட்டி வச்சி தோலை உரிப்பாரு.. உனக்கு அது சம்மதமா.?" என்றான்.

அன்பு அவனை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டான். மீண்டும் அவளின் கூந்தலில் விளையாட ஆரம்பித்தான். இவனின் செயலை கூட அறியாமல் மாலை நேரம் வீசிய மென் குளிர் காற்றில் உறங்கி போயிருந்தாள் அபிநயா.

"குட்டச்சி டயார்டாகி தூங்குறா.." என்று கிசுகிசுத்தான் அன்பு.

"கடவுளே.. கொஞ்ச நேரம் அவளை பத்தி யோசிக்கமா இருடா.." என்றான் குணா.

அன்பு மீண்டும் அவனை முறைத்துவிட்டு திரும்பினான். அபிநயாவை பார்க்க ஆரம்பித்தான். ஏதேதோ எண்ணம் தோன்றியது அவனுக்குள்.

சந்தனக்கொடிக்கால் என்ற போர்டை கண்டதும் குணா எழுந்தான். அன்புவும் தன் பேக்கை சரியாய் மாட்டிக் கொண்டு எழுந்து நின்றான். அபிநயா தன் முகத்தின் மீது துப்பட்டாவை போர்த்தியபடி இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள். அன்பு தன் பேக்கால் அவளின் தலை மீது மோதி இடித்தான். அபிநயா சட்டென எழுந்து அமர்ந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். தலையை தேய்த்து விட்டுக் கொண்டாள். "யாரே தலையில் அடிச்ச மாதிரி இருந்ததே.." என்றாள் புலம்பலாக.

"சந்தனக்கொடிக்கால் ஸ்டாப் எல்லாம் இறங்குங்க.." நடந்துனர் சொன்னதும் ஜன்னலை தாண்டி பார்த்தவள் வேகமாய் எழுந்து வாசற்படியை நோக்கி நடந்தாள். பேருந்து நின்றதும் இறங்கினாள். கொட்டாவி விட்டுக் கொண்டாள். திரும்பி பார்த்தாள். அன்புவும் குணாவும் பேருந்தின் இன்னொரு வழியில் இறங்கி நின்றிருந்தனர்.

பேருந்து அங்கிருந்து சென்றதும் அபிநயாவின் அருகே வந்தான் குணா.

"நல்ல தூக்கமா.?" என்றான் கேலியாக.

அபிநயா புறங்கையால் வாயை துடைத்துக் கொண்டு இல்லையென தலையசைத்தாள்.

"ஓகே.. நான் எங்க வீட்டுக்கு கிளம்பறேன்.. மறுபடியும் திங்கள் காலையில் பார்க்கலாம்.." என்றவன் அன்புவின் புறம் திரும்பினான். "பாய்டா.." என்று கை அசைத்துவிட்டு தன் வீடு இருந்த திசை நோக்கி நடந்தான்.

அன்புவும் அபிநயாவும் தங்களின் தெருவை நோக்கி நடந்தனர். இருவருக்கும் இடையில் நான்கடி இடைவெளி இருந்தது. அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டனர். வீடு வந்து சேரும் வரையிலுமே இப்படித்தான் வந்து சேர்ந்தனர்.

அபிநயா தன் வீட்டு வாசற்படியில் நின்று அவனை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டில் உணவு மணந்துக் கொண்டிருந்தது.

"போய் கை காலெல்லாம் சுத்தம் பண்ணிட்டு வாடி.." என்று இவள் உள்ளே நுழைந்ததும் அம்மா குரல் தந்தாள்.

அபிநயா தன் பேக்கை ஹாலில் வைத்து விட்டு குளியலறை நோக்கி நடந்தாள். பத்து நிமிடத்திற்கு பிறகு திரும்பி வந்தவள் தனது மாடி அறைக்கு வந்தாள். பேக்கை சரியான இடத்தில் வைத்தாள்‌. ஈர முகத்தை துடைத்துக் கொண்டாள். மூடியிருந்த ஜன்னலை வெறித்தாள்.

அவள் வீட்டின் மாடி கதவு பூட்டிடப்பட்டிருந்தது. அதையும் மீறி மாடியில் முள் கம்பியால் பத்தடி உயரத்திற்கு வேலி போடப்பட்டு உள்ளது. அன்பு இவர்களின் வீட்டுக்குள் புகுந்த மறு வாரமே தன் மாடியை சுற்றி முள்வேலி போட்டு விட்டார் வினோத். பக்கத்து வீட்டு திருடன் தன் வீட்டுக்குள் நுழைவதை விரும்பவில்லை அவர்.

ஆறுமுகமும் தன் வீட்டு மாடியின் கைப்பிடி சுவரை ஐந்தாறு அடிகள் அதிகமாக உயர்த்தி கட்டியிருந்தார். இரு வீட்டுக்கும் இடையில் இருந்த சங்கடம் இவனால் இன்னும் அதிகரித்து விட்டிருந்தது. இதுநாள் வரையிலும் அரைகுறையாகவேனும் முகம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகமும் வினோத்தும் இப்போதெல்லாம் நேர் எதிரில் சந்தித்தால் கூட தலையை குனிந்தபடியோ இல்லை எதிர் திசையில் பார்த்தபடியே கடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர்.

அபிநயா தனது பேக்கில் இருந்த அழுக்கு உடைகளை எடுத்து வெளியே எறிந்துக் கொண்டிருந்த நேரத்தில் "அபி.." என்றபடி அவளது அறைக்கு ஓடி வந்தான் தீபக்.

"ஏன்டா இப்படி கத்திட்டு வர.?" என்றாள் அவள்.

"செவ்வாய்கிழமை சாயங்காலம் ஒரு சன்னாசி இந்த பக்கம் போனாரு.. அம்மா கூப்பிட்டு நம்ம குடும்பத்து எதிர்காலம் பத்தி கேட்டாங்க. எல்லாருக்கும் நல்லதே நடக்கும்ன்னு சொன்னாரு அவரும். அப்புறம் அம்மா 'என் பொண்ணோட வாழ்க்கை எப்படி இருக்கும்'ன்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் உங்க பொண்ணால உங்க வீட்டுக்கே பிரச்சனை.. அவளோட குணம் நல்லாதான் இருக்கு.. ஆனா அவளோட விதி நல்லா இல்ல.. சேர கூடியவனோடு சேராம போனா அவளோட வாழ்க்கையே பாழ்ன்னு சொன்னார்.. அம்மா புரியலன்னு சொன்னாங்க. அப்புறம் அந்த சன்னாசி அம்மாக்கிட்ட மட்டும் எதையோ ரகசியமா சொல்லிட்டு போயிட்டாரு.." என்றான்.

அவன் சொன்னது அவளுக்கு புரியவேயில்லை. "ஓகே.. இதுக்கு என்ன அர்த்தம்.? அம்மாக்கிட்ட அவங்க என்ன சொல்லிட்டு போனாங்க.?" என்றாள் குழப்பமாக.

"அதுதான் எனக்கும் தெரியாதே.. அம்மா உன்கிட்ட வந்து எதையாவது சொன்னா உடனே அதை என்கிட்ட சொல்லு அபி.. இல்லன்னா அப்புறம் நம்ம வீட்டுல நடக்கற எதையுமே உன்கிட்ட சொல்ல மாட்டேன் நான்.." என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றான் தீபக்.

"தலையும் இல்லாம வாலும் இல்லாம ஒரு விசயத்தை சொல்லி என்னை குழப்பிட்டு இவன் என்னவோ உளவுத்துறை ரகசியத்தை பகிர்ந்துக்கிட்டது போல சொல்லிட்டு போறான்.." என்று சலித்துக் கொண்ட அபிநயாவிற்கு சன்யாசியின் வார்த்தைகளை பற்றி யோசிக்க தோன்றவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN