முகவரி 25

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கௌசல்யா இறந்த மறு வருடமே குணநாதன் சுமதியைத் திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து எப்போதுமே அனுவுக்கும் அவள் சித்திக்கும் ஆகாது. அதற்காக சுமதி அனுவைக் கொடுமை எல்லாம் செய்ய மாட்டாள்... ஆனால் அனு தன் கீழே இருக்க வேண்டும் என்று அதிகாரத் தோரணையை மட்டும் காட்டுவாள். அது அனுவுக்குக் பிடிக்காது. அதிலும்... சினிமாவில் வரும் வில்லிகளைப் போல் கபட நாடகம் ஆடி அனுவைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவாள்.

குணநாதனுக்கோ மத்திய அமைச்சர் பதவி தான் பெரிது. பிறகு எங்கே அவர் மகளை கண்டு கொள்வார். முன்பே அனுவைத் தாய் கௌசல்யா தான் பார்த்துக் கொள்வாள். இதில் பதின்ம வயதுப் பெண்ணான அனுவின் நிலை தான் பரிதாபத்திற்கு உரியதாகி போனது. அந்த பரிதாபம் அவள் படிக்கும் ஸ்கூல் வரை செல்ல... இதோ அவர்கள் முன் அவமானப்பட்டு நிற்கப் பிடிக்காமல் சென்னையில் தன் தாத்தா வீட்டிற்கு வந்து விட்டாள் அவள்.

செல்வராஜ் முன்பு பெரிய தொழிலதிபராய் இருந்தவர். தற்போது மனைவி உயிரோடு இல்லை. கௌசல்யா ஒரே மகள் அவருக்கு. மகள் இறந்த துக்கத்தில் தற்சமயம் தொழிலில் மிகவும் நொடிந்து விட்டார் அவர்... அதைத் தூக்கி நிறுத்த இந்த வயதிலும் பறந்து கொண்டிருப்பவர். குணநாதனுக்கும் செல்வராஜுக்கும் ஒத்துப் போகாது... அதனால் குணநாதன் அனுவை சென்னைக்கு அனுப்பி வைத்ததோட சரி... பின் இந்தப் பக்கமே வரவில்லை அவர்.

அனு சென்னை வந்து ஆறு மாதம் கடந்து விட்டது. இன்று சனிக்கிழமை... தலை குளித்து, காதோரமாய் இருந்த முடிகளை எடுத்து ஒரு கிளிப்பில் அடக்கியவள்... மீதி முடியைக் தளர விட்ட படி... வெளியே செல்லத் தன் சைக்கிளை இவள் எடுக்க, “பாப்பா... இன்னைக்கு பூ வைக்காம போறியே...” என்று பார்வதி ஓடி வர

“அட... ஆமாம் இன்னைக்கு ஒரு முக்கியமான கிளாஸ் ஆன்ட்டி. அதிலே இதை மறந்திட்டேன்... கொடுங்க” என்றவள் அவர் கொடுத்த வெள்ளை ரோஜாவை வாங்கி, தன் காதோரம் வைத்துக் கொள்ள

“ஏன் பாப்பா... உனக்கு வெள்ளை ரோஜா தான் பிடிக்குமா?”

“ஆமாம் ஆன்ட்டி...” கன்னம் குழிய சொன்ன அனு, “எனக்குப் பிடித்த ரோஜாவில் கூட வெள்ளை நிறம் இருக்கு. ஆனா என்னைப் பாருங்க… எவ்வளவு கருப்பா இருக்கேன்” எப்போதும் உள்ள தாழ்வு மனப்பான்மையில் இவள் குரல் ஒலிக்க

“அட… என்ன தங்கம் இப்படி சொல்லிட்ட... கரும்பு கூட கருப்பு தான்... ஆனா அதோட இனிப்பு எப்படியோ அப்படி தான் நீ பேசுற பேச்சும் பழகுற விதமும்...” பார்வதி அவளுக்காக இல்லை என்றாலும் உண்மையை அகமகிழ்ந்து சொல்ல

அதே நேரம், அனுவின் தோழி மீனாவின் சைக்கிள் மணி சத்தம் வெளியே கேட்கவும், “அச்சோ! அவள் வந்துட்டா போல... நான் வரேன் ஆன்ட்டி... பாய்…” என்றபடி தன் சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் அனுவையே பெருமை பொங்கப் பார்த்தார் பார்வதி.

முன்பு மூனீஸ்வரனும், பார்வதியும் குணநாதன் வீட்டில் தான் வேலை செய்தார்கள். அங்கு குணநாதனுக்கும் முனீஸ்வரனுக்கும் ஒரு சிலதில் ஒத்து வராமல் போக... கௌசல்யா தான் வயதான இவர்கள் இருவரையும் தனியே விட மனம் இல்லாமல்... இங்கு தன் தந்தை வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி விட்டாள். கெளசல்யாவிடம் இருக்கும் நிதானமும், பொறுமையும் அனுவிடம் இருந்தது இல்லை. அவளிடம் இருந்தது எல்லாம் அவசரமும், பிடிவாதமும் தான்.

வகுப்பு முடித்து வெளியே வந்த இரண்டு தோழிகளும் கடுப்பின் உச்சியில் இருந்தார்கள். பின்னே… மதியம் பனிரெண்டு மணி உச்சி வெயில் கொளுத்த… இருவரும் சைக்கிளை அல்லவா உருட்டிக் கொண்டு வருகிறார்கள்!

“ச்ச்சே.. இப்போ எல்லாம் இந்த சனிக்கிழமை ஏன்டா வருதோன்னு இருக்கு... அப்படியே வந்தாலும் இங்க கிளாஸ்க்கு வரவே பிடிக்கலை” மீனா வெறுப்பாய் சொல்லிக் கொண்டு வர

அனு, “கிளாஸ் என்ன டி பாவம் செய்துச்சு? எல்லாம் இந்த பாழாப் போன சைக்கிள் தான்... அது எப்படி இப்போ கொஞ்ச நாளா பஞ்சர் ஆகுதுனே தெரிய மாட்டேங்குது...” என்று தோழிக்கு மேல் அனு சலித்துக் கொள்ள

அதற்குள் இவர்கள் இருவரும் ஒரு மர நிழலை நெருங்கியிருக்க... அங்கு பைக் மேல் அமர்ந்திருந்த ரோட் சைட் ரோமியோக்களைப் பார்த்த மீனா, “எனக்கு என்னமோ இந்த குரங்குங்க மேலே தான் டி சந்தேகமா இருக்கு...” என்க

“சந்தேகம் என்ன டி சந்தேகம்… நிச்சயமா இந்த பரதேசிங்க தான் செய்திருக்கணும். அவனுங்களையும் அவனுங்க மூஞ்சிகளையும் பார்... இவனுங்க இங்க இருக்கிற அப்போ எல்லாம் நம்ம சைக்கிள் பஞ்சர் ஆகுது” அனு கோபத்தில் வெடிக்க

அந்த ரோமியோக்களை இருவரும் கடந்து செல்ல நெருங்கிய நேரம்…. ஒருவன்,
“மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல” என்று சத்தம் போட்டு பாட

தோழிகள் இருவருக்கும் ஊர்ஜிதம் ஆனது இவனுங்க தான் சைக்கிள் பஞ்சருக்கு காரணம் என்று. அதில் இன்னும் கோபம் துளிர்க்க, அனு அவனுங்களை முறைக்க

மற்றொருவன், “டேய் மச்சான்... ஒரு ஃபிகர் நம்மளைப் பார்த்து முறைக்குது டா... அப்போ மடங்கிடும்னு நினைக்கிறேன்...” சந்தோஷபட

அனு, ஆத்திரத்தில் தள்ளிக் கொண்டு வந்த சைக்கிளை நிறுத்தி விட்டு அவனுங்களிடம் சண்டைக்குப் போக எத்தனிக்க, “ஏய்... ஏய்... அனு வேணாம் டி...” மீனா தடுக்க

வேறொருவன், “ஹாய் பியூட்டி! என்ன… சண்டைக்கு வரீயா? வா... வா... மோதலில் தான் காதல் ஆரம்பிக்குமாம்… அப்போ நமக்கும் காதல் தான்…” பல சினிமாக்களைப் பார்த்து, கேட்டு சீரழிந்த கூட்டத்தில் இருப்பதை நிறுவிப்பது போல் ஒருவன் சொல்ல

விதிர்விதிர்த்துப் போனாள் அனு. ‘என்ன இது? இப்படி சுற்றி நின்று காதல் அது இதுன்னு கலாட்டா செய்றானுங்க...’ உள்ளுக்குள் உதறல் எடுக்க இவள் நினைத்துக் கொண்டிருந்த நேரம்

“தொப்பீர்...” யாரோ அவனுங்களை வண்டியோடு எட்டி உதைக்க, “ஐயோ! அம்மா...” என்றபடி ரோட்டோர மண்ணில் போய் விழுந்தார்கள் அந்த ரோட் சைட் ரோமியோக்கள்.

“என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க? நானும் இந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் பார்க்கிறேன்... இந்த பொண்ணுங்க கிட்ட வம்பு வளர்க்கிற மாதிரி அசிங்கமா பேசி சிரிச்சிட்டு இருக்கீங்க... நடங்க டா போலீஸ் ஸ்டேஷனுக்கு... இன்னைக்கு இருக்கு உங்களுக்கு…” யாரோ புதியவன் ஒருவன் ரோமியோக்களை புரட்டி எடுத்த படி மிரட்ட

“அண்ணா அண்ணா…. எங்களை விட்டுடுங்க ணா... இனிமே இந்தப் பக்கமே வர மாட்டோம் ண்ணா. வீட்டுக்குத் தெரிந்தா எங்களை சேர்க்க மாட்டாங்க… உதைப்பாங்க ணா” மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபதே வயதிருக்கும் அந்த இளவட்டங்கள் புதியவனிடம் கெஞ்ச

“அண்ணா… அண்ணா… அவங்களை விட்டுடுங்க. எங்க வீட்டுக்கு தெரிந்தா பிரச்சனை ஆகும்” மீனா இடைமறிக்க

“இனி இந்தப் பக்கமே உங்களைப் பார்க்கக் கூடாது! பார்த்தேன்…. தொலைச்சிடுவேன்” என்ற எச்சரிக்கையுடன் அவனுங்களை அந்தப் புதியவன் விட்டு விட

“ரொம்ப நன்றி ணா...” என்றபடி மீனா தோழியைப் பார்க்க… அவளோ, ‘பட்டிக் காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல் இமையைச் சிமிட்டாமல், பார்வையை விலக்கி கொள்ளாமல் அந்தப் புதியவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அதாவது ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.

அனு தான் அவனை சைட் அடித்தால்... ஆனால் அந்தப் புதியவனோ அனுவை பார்க்காதவனாக, மீனாவிடம் “இனிமேல் பார்த்துப் போங்க ம்மா” என்ற சொல்லுடன் அங்கிருந்து விலகியிருந்தான்

மீனா அனுவை உலுக்க, “என்ன டி… உதவி செய்தவருக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை? அதற்குள் அவர் போய்ட்டார் போல...” அனு விழித்தபடி கேட்கவும்

“என்னது! நன்றி சொல்லலையா? சரிதான்… நீ கிளம்பு தாயே” என்றவள் தோழியை இழுத்துக் கொண்டு செல்ல

“அப்போ… சொன்னீயா? எப்போ?” கேட்ட படி சுற்றும் முற்றும் அந்தப் புதியவனைத் தேடியவள், அவன் அங்கு இல்லை என்றதும் “அவர் நல்லா ஹேண்ட்சம்மா இருந்தார் இல்லை டி...” என்க

“என்ன டி... ஒரு மார்க்கமா போற போல... சைட் அடிச்சிட்டு வர்றதும் இல்லாம இப்படி எல்லாம் சொல்ற? கிளம்பு டி.. வீட்டுக்கு”

“உனக்கு சுத்தமா ரசனையே இல்லை மீனா. சினிமாவில் எல்லாம் இப்படி தான் ஹீரோ வந்து காப்பாத்துவாங்க. அதில் வர்ற ஹீரோ மாதிரி தான் டி இவர் இருந்தார்… அதான் சொன்னேன்”

“சொல்லுவ டி சொல்லுவ... நல்ல மொட்ட வெயிலில் நின்னுட்டு… ஹீரோ எப்படி இருப்பார்னு எனக்கு பாடம் எடுக்கிறா! முதலில் கிளம்பு டி” என்றவள் அனுவை இழுத்துக் கொண்டு செல்ல, மனமே இல்லாமல் அவளுடன் சென்றாள் அனு.

அனு இங்கு சென்னை வரும்போதே அவள் தந்தையிடம் சொல்லி விட்டாள்... அமைச்சர் மகள் என்ற முறையில் அங்கு எனக்கு எந்த விளம்பரமோ... கட்டுப்பாடுகளோ இருக்கக் கூடாது என்று. அதனால் தான் அப்பர் மிடில் கிளாஸ் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அதே பதினொன்றாம் வகுப்பில் இவளும் சேர்க்கப்பட்டு படிக்கிறாள். அதில் ஒரு வகுப்பு ஆசிரியர், சனிக்கிழமையில் மட்டும் எடுக்கும் ஸ்பெஷல் கிளாஸ்க்கு தோழிகள் மீனா, மாலதி மற்றும் அனு என்று மூவரும் வந்து போவார்கள். ஆனால் இன்றைய தினம் மாலதி மட்டும் வரவில்லை.

அதன் பிறகு தோழிகளுக்கு அந்த ரோட் சைட் ரோமியோக்களால் தொல்லை இல்லாமல் போக... ஏனோ அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் அனுவுக்கு அந்தப் புதியவன் முகம் மனதில் வந்து போக... மீண்டும் அவனைப் பார்ப்போமா என்று இவள் அவனைத் தேடத் தான் செய்தாள். பலன் இருபது தினங்கள் இவளுடைய தேடலுடன் நாட்களும் நகர்ந்தது….

ஒரு நாள் அனு காரில் சென்று கொண்டிருக்க... ஒரு இடத்தில் சிக்னலுக்காக நின்ற இவள் கார் கதவை யாரோ அவசரமாகத் தட்டினார்கள்... இவளும் வேகத்துடன் கதவைத் திறந்து என்ன ஏது என்று கேட்பதற்குள்... கையில் மூன்று வயது குழந்தையுடன் தடாலடியாய் ஒருவன் காரினுள் அமர

அனு, “ஏய்.. யார் நீ?” அவ்வளவு தான்.. வார்த்தைகள் ஏறியவனைக் கண்டதும் இவள் அதட்டல் நின்று விட்டது. ஏனென்றால் காரில் ஏறியது இருபது நாட்களுக்கு முன்பு இவள் சந்தித்த அந்தப் புதியவன் ஏறி இருந்தான். அதாவது இவள் தேடித் தேடி களைத்துப் போன அந்த ஹீரோ.

யார் முகத்தையும் காணமல் “சீக்கிரமா ஆஸ்பிட்டல் போங்க... இந்தக் குழந்தைக்கு அடி பட்டிருக்கு... கொஞ்சம் சீக்கிரம் போங்க” அவன் பரபரக்க

டிரைவர் அனுவைக் காண, “அண்ணா... சீக்கிரம் இங்கே பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு ஆஸ்பிட்டல் போங்க... தாமதப்படுத்தாதீங்க...” அனுவின் கட்டளையில் கார் மருத்துவமனையை நோக்கிச் பறந்தது.

கார் மருத்துவமனையை அடையும் வரை காருக்குள் இருந்த இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அங்கு சென்ற பிறகு தான் அனுவுக்குத் தெரிந்தது... ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த குழந்தைக்கு விபத்து ஏற்பட்டு விட... அந்தக் குழந்தையைத் தான் இந்தப் புதியவன் அவசரமாய் தூக்கிக் கொண்டு தன் காரில் ஏறி இருக்கிறான் என்று. சில சம்பிரதாயங்கள் முடிந்து…. குழந்தையை பரிசோதித்து... குழந்தைக்கு பெரியதாக ஒன்றும் இல்லை என்று அறியும் வரை இருவரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

சற்று நேரத்திற்கு எல்லாம் அனுவிடம் வந்த அந்தப் புதியவன், “ஹே... எவ்வளவு பணம் வைத்திருக்க? எவ்வளவு இருந்தாலும் கொடு...” என்று அவசரமாய் கேட்க

“என்னது பணமா... அதெப்படி கையில் இருக்கும்? கார்டு தானே என் கையில் இருக்கு...” இவள் வாய் விட்டே சொல்லி விட

“பணம் இல்லையா? அப்போ கழுத்தில் இருக்கிற செயினைக் கழட்டு...” இவன் இன்னும் அவசரப்படுத்த

“என்னது!” இவள் அதிர்ந்து விழிக்க

“என்ன முழிக்கிற? அங்கே அந்த குழந்தைக்கு சீரியஸா இருக்கு... இங்க பார் என் மோதிரத்தைக் கூட வைக்கப் போறேன்” அவன் படபடக்க

‘உன் மோதிரமும் என் இரண்டரை பவுன் பிளாட்டினம் செயினும் ஒண்ணா டா?’ இவள் மனதிற்குள் நினைத்ததை அவள் முகத்தை வைத்தே கண்டு கொண்டவன்

“கொடுன்னு சொல்கிறேன் இல்ல? கொடு” என்று அதட்ட, உடனே இவள் கழட்டிக் கொடுக்க... அடுத்த நிமிடமே அந்த இடத்தை விட்டு மறைந்திருந்தான் அவன்.

அனுக்கு கொடுக்க கூடாது என்று எண்ணம் இல்லை… அது அவளுடைய தாயின் செயின் என்பதால் தான் தயங்கினாள்.

அதன் பிறகு அனுவுக்கும் அந்த இடத்தை விட்டுப் போக மனம் இல்லை. முதல் காரணம் அந்தக் குழந்தை எப்படி இருக்கோ என்ற எண்ணம். இரண்டாவது, அந்தப் புதியவனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோழிகளுடன் மால் போகிறேன் என்று சொல்லி விட்டு வந்ததால்... யாரிடமும் எந்த தகவலையும் சொல்லவோ… சீக்கிரம் போக வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதால்... அனு அங்கேயே அமர்ந்திருக்க... இரண்டு மணி நேரத்திற்கு எல்லாம் கையில் ஜுஸுடன் அவள் எதிரே வந்து நின்றான் அந்தப் புதியவன்.

“இந்தா இதை குடி...” என்ற வார்த்தையில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

‘அடப் பாவி! இரண்டரை பவுன் செயினுக்கு இவ்வளவு தானா டா எனக்கு?’

அவள் மன ஓட்டத்தை மறுபடியும் கண்டு கொண்டவன், “இதற்கே பணம் பத்தல... எப்படி எப்படியோ சமாளித்தேன். ஹாங்... ரொம்ப தேங்க்ஸ்… சரி நீ கிளம்பு” அவன் முடித்து விட

‘என்னது கிளம்பவா? அப்போ என்னைத் தெரியலையா இவருக்கு?’ என்று நினைத்தவள் “உங்களுக்கு என்னைத் தெரியலையா?” வாய் விட்டே அவள் கேட்டு விட

சற்றே புருவம் சுருங்க யோசித்தவன், “இல்லையே!” என்பதாக தலை அசைக்க

“அடப்பாவி! அப்போ நான் தான் உன்னை நினைச்சிட்டு இருக்கேனா?” இவள் சன்ன குரலில் புலம்ப, அதே நேரம் அவனுக்கு அழைப்பு வர...

“சரி.. நீ கிளம்பு...” மறுபடியும் அதையே அவன் சொல்ல

“உங்க பெயர் என்னங்க?” அடக்க முடியாத ஆர்வத்தில் இவள் கேட்டு விட

இவளை விட்டு நான்கு அடி தள்ளி சென்று இருந்தவன்… போகிற போக்கில், “மிருடன்...” என்று சொல்லிவிட்டுச் செல்ல

இவள் காதில் விழுந்த வார்த்தையில், ‘என்னது... திருடனா! இப்படி ஒரு பேரா? ஒருவேளை, சினிமாவில் வர்ற மாதிரி கெட்டவங்க கிட்டயிருந்து திருடி... நல்லவங்களுக்குத் தருவாரோ… அப்போ இவரு பெரிய ஹீரோ தான் போல?’ என்று நினைத்தது அனுவின் உள்ளம். ஆனால் பாவம்! அவளுக்குத் தெரியவில்லை... கெட்டவர்களிடமிருந்து திருடினாலும் அதுவும் திருட்டு தான்! அங்கு திருடிய அவனும் திருடன் தான் என்று!...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN