சிக்கிமுக்கி 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சன்யாசி என்ன சொல்லி சென்றிருப்பார் என்ற யோசனையோடு அம்மாவை தேடி வந்தாள் அபிநயா.

"அம்மா.. சன்யாசியோடு பேசினியா நீ.?" என்றாள்.

ஆனந்தி ஆச்சரியத்தோடு மகளை பார்த்தாள். "அதுக்குள்ள அந்த பையன் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டானா.?" என்றாள்.

"நீ விசயத்தை சொல்லும்மா.."

ஆனந்தி யோசனை செய்தாள். மகளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று நெடுநேரம் குழம்பினாள்.

"என்னன்னு சொல்ல போறியா இல்லையா.?" என்று சிணுங்கினாள் அபிநயா.

அம்மா அவளை முறைத்தாள். "சாப்பாடு செய்றவக்கிட்ட வந்து எதுக்கு நொய் நொய்ங்கற.. போ அந்த பக்கம்.. போய் படிக்கிற வேலை எதாவது இருந்தா பாரு.. சின்ன புள்ளை மாதிரியே நடந்துக்கிறது இல்ல.. எதுக்கெடுத்தாலும் பெரிய மனுசதனம்.." என்று திட்டி அவளை விரட்டினாள்.

அபிநயா சோகத்தோடு அம்மாவை பார்த்தாள். "எனக்கு மட்டும் எதையுமே சொல்றது இல்ல. நான் மட்டும்தான் இந்த வீட்டுல அனாதை.." என்று புலம்பலாக சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

அப்பா தொலைக்காட்சியில் கவனமாக இருந்தார். அபிநயா அவரருகே வந்து அமர்ந்தாள். "அப்பா.." என்று இழுத்தாள்.

வினோத் அவளை திரும்பி பார்த்தார். "என்னடாம்மா.?" என்றார்.

"சன்யாசி என்னை பத்தி என்னப்பா சொன்னாரு.?" என்றாள் ஆவலோடு.

அப்பா தன் பார்வையை மீண்டும் தொலைக்காட்சி திரையை நோக்கி திருப்பினார். "உங்கம்மாளுக்கு வேற வேலை இருந்தா ஆகும்.. ரோட்டுல காவி வேட்டி கட்டிக்கிட்டு யாரு போனாலும் சரி.. உடனே கூப்பிட்டு கை நீட்டுறதும் ஜாதகத்தை நீட்டுறதுமா இருந்தா இப்படித்தான் தினம் ஒருத்தன் தினமொரு பிரச்சனை இருக்கறதா சொல்லுவான்.." என்றார்.

அபிநயா உதட்டை கடித்துக் கொண்டு அப்பாவை பார்த்தாள். 'கடைசி வரைக்கும் விசயம் என்னன்னு சொல்லமாட்டாரு போல இருக்கே..' என்று நினைத்தாள்.

"அந்த சன்யாசியை பத்தி யோசிக்காம நீ உன்னை நம்பு.." என்று கடைசியாய் ஒரு அறிவுரையும் சொன்னார் அவர்.

அபிநயாவிற்கு மூக்கு சிவந்தது.

"எல்லாமே இந்த தீபக் எருமையால வந்தது. அவன்தான் ரகசியம் சொல்றேங்கற பேர்ல என்னை உசுப்பி விட்டான். என்னை பத்திய ஒரு செய்தியை நான் அறிஞ்சிக்க கூட உரிமை இல்லையா. கொடுமை இது‌‌.." என்றபடி எழுந்து அங்கிருந்து சென்றாள்.

அப்பா அவளை திரும்பி பார்த்தார். மகள் புலம்பி சென்றதை நினைத்து சிரித்தார். "பிரச்சனை இல்லாத நாள் எது.? ஆனா அதுக்காக வாழாம அந்த பிரச்சனைக்குரிய நாள் கழியணும்ன்னு காத்துட்டு இருக்க முடியுமா.?' என்று நினைத்தார். 'என் பொண்ணால இந்த குடும்பத்துக்கு பிரச்சனைன்னா அது என்ன பெரிய விசயம். பிறகு ஊரான் வீட்டு பொண்ணாலயா எங்க வீட்டுக்கு பிரச்சனை வரும்.?' என்று எண்ணி சிரித்தார்.

அபிநயா மீண்டும் சமையலறைக்கே வந்தாள். ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு கடகவென குடித்தாள்.

ஆனந்தி குழம்பை தாளித்துக் கொண்டே மகளை திரும்பி பார்த்தாள்.

"யாரையாவது பார்க்கும் போது அவங்களோட சண்டை போடணும் போல தோணுறது யார் யார் கூட.?" என்றாள் அம்மா.

அபிநயா அம்மாவை முறைப்போடு பார்த்தாள். "நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்ல மாட்டிங்க. ஆனா உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லணுமா.? என்னோட ஒரே எதிரி அந்த கோணக்காலன் மட்டும்தான்னு உங்களுக்கே நல்லா தெரியும். இருந்தும் ஏன் கேட்கறிங்க.?" என்றவள் உதட்டை சுழித்தபடி வெளியே நடந்தாள்.

ஆனந்தி பெருமூச்சை இழுத்து விட்டாள்.

"உங்க பொண்ணு போற இடத்துல சண்டை மட்டும்தான் இருக்கும். அவ கட்டிக்க போறது தன்னோட எதிரியையாதான் இருக்கும்.. தினம் பொழுது விடியறதும் சண்டையோடுதான். தினம் பொழுது முடியறதும் சண்டையோடுதான்.. எதிரி யாருன்னு தெரிஞ்சா உங்க பொண்ணை அந்த எதிரிக்கிட்ட இருந்து விலக்கி வைங்க.. இல்லன்னா அந்த எதிரியால உங்க பொண்ணுக்கு ரத்த காயம் உண்டாகலாம்.. மான பங்கம் ஏற்படலாம். உங்க குடும்ப மானமே கூட போகலாம்.. இது எதுவும் நடக்க கூடாதுன்னா நீங்கதான் உங்க பொண்ணை பத்திரமா பார்த்துக்கணும்.." சன்னியாசி சொல்லி சென்றதை யோசனை செய்து கவலைக்கொண்டாள் ஆனந்தி.

"இவளுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு விதி.. கண்டிப்பா இது அந்த பையன் அன்புதான். ஆனா அவனால இவளுக்கு மான பங்கம் ஏற்பட்டா ஏற்கனவே இருக்கும் இரண்டு குடும்ப பகை இன்னும் அதிகமாகுமே.." என்று புலம்பினாள். தன் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் வழி என்னவென்று யோசித்தாள். 'காலேஜை நிறுத்திடலாமா.? இல்ல நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி தூரமா அனுப்பிடலாமா.?' என்று கேட்டு தன்னை தானே குழப்பிக் கொண்டாள்.

அவளது இந்த யோசனை இரவு வரையிலுமே இருந்தது. உறங்க முயன்ற வினோத் இவளின் முகத்தை பார்த்து சிரித்தார்.

"யாரு எதை சொல்லிட்டு போனாலும் நிஜம்ன்னு நம்புற.. சுய சிந்தனைன்னு ஒன்னு உனக்கே இல்லையா‌.?" என்றார் கிண்டலாக.

ஆனந்தி அவரை முறைத்தாள். "அந்த பையனால உங்க பொண்ணுக்கு மான பங்கம் ஏற்படும்ன்னு அவர் சொல்லி இருக்காருங்க.. உங்களுக்கு பயமே இல்லையா.?" என்றாள்.

"அதுக்காக என் பொண்ணை வேணா ரூம்ல அடைச்சி வைக்கலாமா.?" கிண்டலாக கேட்டபடி கட்டிலில் ஏறி படுத்தார் அவர்.

ஆனந்தி தயக்கத்தோடு கணவனை பார்த்தாள். "நம்ம.. தூரமா ஒரு பையனை பார்த்து நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாமா.?" என்றாள்.

அருகே இருந்த தலையணையை எடுத்து மனைவி மீது எறிந்தார் வினோத். "பச்சை புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறியா நீ.? போடி தூர.. என் புள்ளைக்கு அப்படியே மான பங்கம் ஆனா கூட அதை அவ சமாளிப்பா.. நீ ஒன்னும் உதவிக்கு போக தேவையில்ல.. குளிருக்கு பயந்து நெருப்புல தள்ளுறதை போல சொல்றா.." என்று எரிந்து விழுந்தார். ஆனந்தி அதிர்ந்து நிற்கும் போதே சுவர் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டார்‌.

'என் பயம் எனக்கு..' என்று நொந்தபடியே தலையணையை தூக்கி கட்டிலின் மீது வைத்தாள் ஆனந்தி.

அடுத்து வந்த இரண்டு நாளுமே கணவனும் மனைவியும் முறைத்தபடிதான் இருந்தனர். அபிநயாவும் தீபக்கும்தான் நடுவில் அப்பாவிகளாக விழித்தனர்.

வினோத் மனைவி சொன்னதை யோசனை செய்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு தன் மகள் மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் அன்புவின் மீதுதான் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்தைக்கு சென்ற வினோத் அங்கிருந்த ஆறுமுகத்தை கண்டதும் அவரருகே சென்றார்.

"இரண்டு வீட்டுக்கும் இடையில இருக்கற மரத்தை வெட்டலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன் நான்.. உங்களுக்கு சம்மதமா.?" என்றார்.

ஆறுமுகம் தன் பழைய கால நண்பனை யோசனையோடு பார்த்தார். வினோத் செய்வதில் அர்த்தம் இருக்கும் என்று புரிந்துக் கொண்டவர் "சரி.. வெட்ட ஆள் வர சொல்லிடுங்க.. காம்பவுண்டை சரி பண்ணி கட்ட நான் மேஸ்திரியை வர சொல்றேன்.." என்றவர் அங்கிருந்து சென்றார்.

அன்று மாலையில் இரண்டு வீட்டுக்கும் பொதுவில் இருந்த காம்பவுண்டின் இடையே கம்பீரமாக நின்றிருந்த வேப்பமரத்தை சுற்றி சுற்றி பார்த்த விறகு வெட்டி தன் ரம்பத்தை கையில் எடுத்தார். தன் வீட்டின் பக்கம் இருந்தவாறு மரத்தை சோகமாக பார்த்தாள் அபிநயா.

"மரத்தை வெட்ட வேணாம்ப்பா.." என்றாள் இருபத்தி ஏழாவது முறையாக.

"அது எதுக்கும்மா இங்கே இருந்துக்கிட்டு.? கண்ட நாயும் மரத்துல ஏறி வீட்டுக்குள்ள திருட வரும்.." என்றார் அவர்.

அபிநயா கலங்கும் விழிகளோடு மரத்தை பார்த்தாள். மின்சார ரம்பத்தை மரத்தின் மீது வைத்தார் மரவெட்டி. அபிநயாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. பல வருடமாய் வீட்டில் ஒரு உறுப்பினராய் மாறி விட்டிருந்த அந்த மரம் இன்று இல்லாமல் போவதை பார்க்க இயலாதவள் வீட்டுக்குள் சென்று புகுந்துக் கொண்டாள். ரம்பத்தின் சத்தத்தை காதில் கேட்க இயலாமல் இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டாள்.

அன்பு தன் அறையில் கோபத்தோடு அமர்ந்திருந்தான். "எதுக்கு மரத்தை வெட்டுறிங்க.?" என்றான் கோபத்தோடு.

அந்த அறையின் ஜன்னலோரம் நின்றபடி கீழே மரம் வெட்டப்படுவதை பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் மகன் புறம் கோபமாக திரும்பினார்.

"எல்லாம் உன்னால வரதுதான்டா.. நீ கையையும் காலையும் வச்சிக்கிட்டு சும்மா இருந்திருந்தா ஏன் இப்படி ஆக போகுது.? பக்கத்து வீட்டுக்கே கொள்ளைக்காரனை போல போனா இப்படித்தான் ஆகும்.." என்றார் எரிச்சலோடு.

அன்பு அவரை முறைத்தான். "நான் எதையும் கொள்ளையடிச்சிட்டு வரல.. சும்மா விளையாட்டுக்கு அந்த வீட்டுக்குள்ள போனதுக்கு ஒரே போர்க்களம் கட்டி மரத்தை வெட்டுறிங்க நீங்க.. இது உங்களுக்கே ஓவரா தெரியல.." என்றான்.

"விளையாட்டா.?" என்றவர் சுற்றும் முற்றும் எதையோ தேடினார். "எது கையில கிடைக்குதோ அதை எடுத்தே அடிப்பேன்டா.. உன் விளையாட்டுதான் இப்ப இவ்வளவு வினையாகி போய் நிற்குது.. உனக்கு அப்பவும் கூட மனசு குளிர்ந்திருக்காது.. போ.. போய் இன்னும் எதையாவது வம்பு பண்ணி வை.. இதுக்கு மேல அந்த ஆள் உன்னை போலிஸ்ல பிடிச்சி தந்தா கூட நான் வரமாட்டேன்.." என்றார் அவர்.

அன்பு ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் பற்களை கடித்தான்.

திங்கள்கிழமை காலையில் விடுதி வந்து சேர்ந்த அபிநயாவின் முகம் வருத்ததிலேயே இருந்தது‌.

"என்னடி ஆச்சி.?" என்று விசாரித்தாள் மீனா.

"எங்க வீட்டுல இருந்த மரத்தை வெட்டிடாங்க.‌." என்று கரகரத்த குரலில் சொன்னாள் அபிநயா.

"அடிப்பாவி.. இதுக்காக அழுதியா.? இப்படி தொண்டை அடைச்சிருக்கு.." என்று அதிர்ச்சியோடு கேட்ட மீனா அருகே வந்து அவளின் முகத்தை உற்று பார்த்தாள்.

"கண் சிவந்திருக்கு.. முகம் வீங்கியிருக்கு.. அப்படின்னா நிஜமாவே அழுதியா.?" என்றாள்.

அபிநயா தலையை குனிந்த வண்ணம் ஆமென தலையசைத்தாள். "எங்க அப்பா சின்ன புள்ளையா இருக்கும்போது வச்ச மரம் இது.. ரொம்ப வருசமா இருந்தது. அதை வெட்டியது கஷ்டமா இருக்கு.." என்றாள்.

அவள் வகுப்பறை வந்தபோது வகுப்பறை வாசலிலேயே காத்திருந்தான் அன்பு. இன்று அபிநயாவை வினோத் அழைத்து வந்து விட்டு சென்றிருந்தார். அதனால் அவனால் அவளை பேருந்தில் பார்க்க முடியவில்லை. மரம் வெட்டப்பட்டதில் அவளுக்கும் தன்னை போலவே விருப்பம் இல்லை என்பதை யூகித்திருந்தான் அவன்.

அபிநயா வராண்டாவின் மறு கோடியில் வரும்போதே அவளை நோக்கி ஓடினான். அவளின் முகத்தில் இருந்த வீக்கம் அவனுக்கு கவலையை தந்திருந்தது.

"அபி.. உனக்கு என்ன ஆச்சி.?" என்றான் அவளின் முகத்தை பற்றி.

அவனை கோபமாக பார்த்தவள் அவனின் நெஞ்சின் மீது குத்தினாள்‌. "உன்னாலதான் மரத்தை வெட்டினாங்க.. நீ மட்டும் எங்க வீட்டுக்குள்ள வராம இருந்திருந்தா அந்த மரம் அப்படியே இருந்திருக்கும்.." என்று விசும்பலோடு சொன்னவள் அவனை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

சட்டென அவளின் கையை பற்றி நிறுத்தினான் அன்பு. "சாரி அபி.. நாலு மாசம் கழிச்சி உங்க அப்பாவுக்கு திடீர்னு கோபம் வரும்ன்னு தெரியாது.." என்றான் சோகமாக.

'உன்னால எனக்கு ஆபத்து வர போகுதுன்னு சன்யாசி சொன்னதாலதான் எங்க அப்பா அந்த மரத்தை வெட்டுனாருடா கோணக்காலா..' என்று மனதில் சொன்னவள் அதை வெளியில் சொல்ல மனமின்றி அவனை தூர தள்ளி நிறுத்திவிட்டு வகுப்பறை நோக்கி நடந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN