சிக்கிமுக்கி 29

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் மீது மோதியவள் விழுந்து விடுவாளோ என்ற எண்ணத்தில் அனிச்சையாக அபிநயாவின் இடையை பற்றியிருந்தன அன்புவின் கரங்கள்.

இவன் ஏன் தன்னை விழுங்குவது போல பார்க்கிறான் என்று குழம்பினாள் அபிநயா.

"அபி என் லெட்டரை கொடுடி.." என்று அவளின் கையில் இருந்த கடிதத்தை பறித்துக் கொண்டு தூர நகர்ந்தாள் சுவேதா‌. அவளை பின்தொடர முயன்றவளை அசைய விடாமல் பிடித்து நிறுத்தி வைத்திருந்தான் அன்பு.

"என்னை விடு.." என்றவள் அவனின் கையை பார்த்தாள். நடுங்கியது அவனது கரங்கள். ஆனால் பிடி மட்டும் தளர்வுறவில்லை. 'இந்த பையனுக்கு என்ன ஆச்சி.? புதுசா வைரஸ் அட்டாக் ஆகி இருக்கா.?" என குழம்பியவள் "எதுக்கு என்னை இப்படி பார்க்கற.? இதுக்கு முன்னாடி என்னை பார்த்ததே இல்லையா நீ‌.?" என்றாள்.

அன்பு இமைகளை மூடி திறந்தான். அவளின் இதழ் அசைவில் ஆயிரம் பூகம்பத்தை உணர்ந்தான். அவளின் நுனி மூக்கில் சிறு துளியாய் இருந்த வியர்வை கூட அவனுக்கு அதிசயமாக தெரிந்தது.

"என்னடா பண்ற.?" என்று அவனின் காதோரம் கிசுகிப்பாக கேட்டான் குணா. நண்பனின் குரல் அன்புவின் செவிக்கு சென்று சேரவேயில்லை. அபிநயாவின் மூச்சு காற்று இசை பாடும் கீதம் தெளிவாக கேட்டது.

பொறுத்திருந்து பார்த்த அபிநயா தன் முழு பலத்தோடு அவனிடமிருந்து விலகினாள். அன்பு அவளை மீண்டும் தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தான். ஆனால் அவளோ இவனை முறைத்துவிட்டு தோழிகளோடு இணைந்து நடந்துப்போனாள்.

அவளின் பின்னால் நடக்க முயன்றவனை நிறுத்தினான் குணா. "எங்கடா போற.?" என்றான்.

"எனக்கு அவ வேணும்.." அபிநயாவை நோக்கி சுட்டுவிரலை நீட்டிக் கேட்டான்.

"குட்டச்சியா.? எதுக்கு.? மறுபடியும் சண்டை போட போறியா.?" என்றவனிடம் இல்லையென தலையசைத்தான் அன்பு. "அவளை ஹக் பண்ண.. கிஸ் பண்ண.. லவ் பண்ண.." அன்பு இயந்திரமாக சொல்ல குணா நெஞ்சத்தில் கை வைத்தபடி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

தன் காதுகள் இரண்டையும் தேய்த்து விட்டுக் கொண்டான். அபிநயா சென்ற திசையை திரும்பி பார்த்தான். அது அவள்தானா என்ற சந்தேகத்தில் கண்களை இரண்டையும் கசக்கி விட்டுவிட்டு மீண்டும் பார்த்தான். அது அபிநயாவேதான். சந்தேகமேயில்லை. ஆனால் இப்போது நண்பன் மீது சந்தேகம் வந்தது அவனுக்கு.

"நீ குட்டச்சியை லவ் பண்றியா.?" என்றான் அன்புவிடம். அவன் அபிநயாவின் பின் பாதத்தை பார்த்தபடியே ஆமென தலையசைத்தான்.

"அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னா உன்னை குழி தோண்டி புதைச்சிடுவாரு.." என்று எச்சரித்தான் குணா.

அன்பு குழப்பத்தோடு திரும்பி நண்பனை பார்த்தான். "நான் அவரை லவ் பண்ணல.. அவரோட பொண்ணைதான் லவ் பண்றேன்.." என்றான்.

"கவுண்டர் தரியா.? நல்லாவேயில்ல.." என்ற குணா அவனை இழுத்துக்கொண்டு வகுப்பறை நோக்கி நடந்தான்.

"இங்கே பாருடா நண்பா.. நீயும் நானும் பல வருசமா பிரெண்ட்ஸ்.. உன் வாழ்க்கையை பத்தி எனக்கும் அக்கறை இருக்கு. ஆனா இத்தனை வருசமா சண்டை போட்டுட்டு இருந்த நீ திடீர்ன்னு அவளை லவ் பண்ணா யாரா இருந்தாலும் நீ அவளை பழி வாங்க டிரை பண்றதாதான் நினைப்பாங்க.." என்று சொன்னான் குணா.

அன்பு அச்சத்தோடு நண்பனை பார்த்தான். "ஆனா நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்.. அவளை ரொம்ப பிடிக்கும்.." என்றான்.

நண்பனை தோளோடு கட்டிக்கொண்டான் குணா. "உன்னை நான் நம்புறேன்டா.. ஆனா அதுபோல அவளும் நம்பணும் இல்ல.. முதல்ல அவளோடு பிரெண்ட்ஸாக பாரு." என்றான்.

அன்பு சரியென தலையசைத்தான். அன்புவும் குணாவும் தங்களின் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

அபிநயா தன் புத்தகத்தில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். தன் அருகே நிழல் கண்டு நிமிர்ந்து பார்த்தாள். அன்பு அவளை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான். அபிநயா முகத்தை திருப்பி கொண்டாள். குணா அன்புவை அழைத்துச் சென்று அவனது இருக்கையில் அமர வைத்தார்.

அபிநயா புத்தகத்தின் மீதிருந்த தன் உள்ளங்கையை நகர்த்தினாள். அன்பு என்ற ஒற்றை வாசகம் ஒரே இடத்தில் ஒரு நூறு முறை கிறுக்குப்பட்டிருந்தது. அபிநயா அந்த பெயரை பார்த்தாள். சிந்தையின்றி கிறுக்கிய பெயர் அது. 'இந்த கோணக்காலன் பேரை ஏன் கிறுக்கி வச்சிருக்கேன்.?' என சலித்தபடியே பக்கங்களை திருப்பினாள். அந்த பக்கத்தின் ஒரு விளிம்பிலும் அன்புவின் பெயர் பதிந்து இருந்தது. கடைசி இரண்டு நாட்களாய் அந்த புத்தகத்தில் இருபது இடங்களில் அவன் பெயரை இப்படிதான் அவள் கிறுக்கி வைத்திருந்தாள்.

போர்டை பார்த்தாள். அரை பாதியை தனது கணக்கால் நிரப்பி இருந்தார் பேராசிரியர். அவசரமாக நோட்டை எடுத்து போர்டில் இருந்ததை எழுத ஆரம்பித்தாள். அன்புவின் பெயரை பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை அவளுக்கு. இந்த கணக்கை எத்தனை முறை போட்டு பார்த்தாலும் புரியாது அவளுக்கு. பேராசிரியர் சொல்லி தருகையில் தவற விட்ட எதையும் அவள் திரும்ப கற்றுக் கொண்டதாய் சரித்திரமே இல்லை.

அன்புவின் கரங்கள் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தன. அவனின் கண்கள் போர்டை பார்த்துக் கொண்டிருந்தன‌. ஆனால் அவனின் எண்ணம் முழுக்க அபிநயா மட்டும்தான் இருந்தாள்‌. இவனின் அரைகுறை கவனத்தை கவனித்தது போல பேராசிரியர் அடுத்த கணக்கின் கேள்வியை எழுதிவிட்டு "அன்பு நீ இதை சால்வ் பண்ணு.." என்று சொல்லிவிட்டு சென்று தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டார்.

"சந்தனக்கொடிக்கால் மானமே உன் கையிலதான்டா இருக்கு.. போர்ட்ல அபிநயான்னு எழுதி வச்சி குட்டையை கிளப்பி விட்டுடாத.." என்று எச்சரித்து அனுப்பினான் குணா.

அன்பு சரியென தலையசைத்துவிட்டு சென்றான். கணக்கு புரிய சில நிமிடங்களுக்கும் மேலே பிடித்தது. ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய கணக்கை இருபது நிமிடங்கள் செலவழித்து போட்டு முடித்தான். பின்னர் தனது இருக்கைக்கு திரும்பி வந்து அமர்ந்தான்.

அபிநயாவிற்கு கணக்கு புரிந்தது. ஆனால் ஃபார்முலா புரியவில்லை. ஆசிரியர் கணக்கு சரியென சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

"மீனு.. உனக்கு இந்த சம் புரிஞ்சதா.?" குழப்பத்தோடு கேட்ட அபிநயாவிடம் இல்லையென தலையசைத்தாள் அவள். "நான் நல்ல காலத்துலயே இதையெல்லாம் சரியா கவனிக்க மாட்டேன்.." என்றாள்.

அபிநயா அவளை முறைத்துவிட்டு போர்டை பார்த்தாள். இந்த கணக்கின் வழிமுறை தெரிந்தால் பரிட்சையில் சுலபமாய் மதிப்பெண் பெறலாம் என்று அவளுக்கே தெரியும். ஆனால் புரியாத ஒன்றை எப்படி புரிந்துக் கொள்வது என குழம்பியவள் தன் பேக்கை கையில் எடுத்தாள். அதிலிருந்த பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்துக் கொண்டவள் நேர் அருகே இருந்த அன்புவிடம் சென்றாள். அவனின் அருகே இருந்த கொஞ்சம் இடத்தில் அமர்ந்தவள் "தள்ளி உட்காரு குணா.." என்றாள்.

அபிநயா வந்து தன் மீது பாதி உடலை சாய்த்து அமர்ந்ததில் மூச்சு விட மறந்து போன அன்பு குணா நகர்ந்ததும் அவசரமாக தள்ளி அமர்ந்தான். அபிநயாவை ஆச்சரிய விழிகளோடு பார்த்தான். சூறாவளி காற்றாய் வெளி வர இருந்த மூச்சுக்காற்றை சிரமப்பட்டு மெதுவாக விட்டான்.

"இந்த சம் எனக்கு சுத்தமா புரியல.. இதுக்காக புரபொசரை தொந்தரவு செய்ய எனக்கு விருப்பமில்ல.‌ இந்த பத்து ரூபாயை வச்சிக்கிட்டு இந்த சம்மோட பார்முலாவை புரியற மாதிரி சொல்லி கொடு.." என்றாள் அன்புவிடம்.

அன்பு அந்த பத்து ரூபாய் தாளை கையில் வாங்கி பார்த்தான். "ஐ.. பத்து ரூபா.. ஃபைவ் ஸ்டார் வாங்கலாம்.." என்று காசை பிடுங்க முயற்சித்தான் குணா. அன்பு அவனை முறைத்துவிட்டு பணத்தை தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அபிநயாவின் கையில் இருந்த பேனாவை வாங்கினான். விரலோடு விரல் தீண்டுகையில் அவனின் விரல்களில் பூக்கள் பூத்தது போல இருந்தது. இன்னுமும் கூட அவனின் காலோடு தன் காலை உரசியபடிதான் அமர்ந்திருந்தாள் அவள். அவனுக்குதான் வட தென் துருவங்களின் குளிரும், பூமி மையத்தின் அணலும் ஒருசேர வந்து தாக்கிக் கொண்டிருந்தது.

அவளின் நோட்டில் கணக்கை எழுத ஆரம்பித்தான். அவனின் நீண்ட காலை பார்த்து பொறாமையில் வெந்துக் கொண்டிருந்த அபிநயாவின் முன் விரலை சொடுக்கிட்டான் அவன். "இங்கே பாரு.." என்றான்.

அபிநயா நோட்டில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். அன்பு கணக்கை அழகாய் விளக்கினான். அபிநயாவிற்கு ஒரே முறையில் ரொம்ப தெளிவாய் புரிந்துப் போனது. நோட்டை எடுத்து கொண்டவள் எழுந்து நின்றாள். "தேங்க்ஸ்.." என்றுவிட்டு தனது இருக்கையை நோக்கி நடந்தாள்.

"உனக்கு என்ன சந்தேகமா இருந்தாலும் என்னை கேளு.. நான் சொல்லி தரேன்.." என்றான் அவன். அபிநயா திரும்பி அவனை பார்த்தாள். "திடீர்ன்னு நல்லவனாகிட்ட போலிருக்கு.." என்று கிண்டலாக சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

"கொஞ்சம் கொஞ்சமா அப்ரோச் பண்ணுடா.. அவளை பயமுறுத்தி விரட்டிடாத.." என்று அன்புவிடம் சொன்னான் குணா.

"அவ என்கிட்ட வந்து கணக்கு போட்டுட்டு போயிருக்கா.. அப்படின்னா சீக்கிரமே நாங்க லவ் பண்ண போறோம்.. அப்புறம் எங்க அப்பா பைக்ல டபுள்ஸ் போக போறோம்.." என்றான் ஆசை கனவுகளோடு.

"ச்சை.. இதானா உன் ஆசை.? டபுள்ஸ் சைக்கிள்ல கூட போகலாம்.. ஆனா ஒரு கணக்கு போட்டு தந்ததுக்காக எந்த பொண்ணும் லவ் பண்ண மாட்டா.." என்றான் குணா.

"ஓ.." என்றபடி அபிநயாவை பார்த்தவன் சந்தேகமாக நண்பனை பார்த்தான். "நீ எப்படி மீனாவை லவ் பண்ண வச்ச.?" என்றான்.

"அது.. எங்க லவ் ஒரே டைம்ல மியூச்சுவலா வந்தது. பேசி பழகின பிறகு அவ லவ் சொன்னா. நான் ஓகே சொன்னேன்.." என்று சொன்னான் குணா.

அன்புவிற்கு தான் எப்படி செயல்படுவது என்று புரியவில்லை. அன்று மாலை வரையிலும் அதே யோசனையில்தான் இருந்தான்‌. பின்னர் குணாவை அழைத்து அவனை அபிநயாவிடம் தூதாக அனுப்பினான்.

"அபி.." தலையை கீறியபடி வந்து நின்றான் குணா.

"ஏன் குணா.?" என்றவளிடம் தயங்கியவன் "இந்த வாரம் ஊருக்கு போகாம இங்கேயே இருக்கலாமா.? ஞாயித்து கிழமை புல்லா என்ஜாய் பண்ணலாம்.. தியேட்டர்.. பார்க்.. இன்னும் நிறைய இடத்துக்கு போகலாம்.." என்றான்.

"எனக்கு ஓகே.." என்று சட்டென சொன்னாள் மீனா. ஆனால் அபிநயாவிற்குதான் தயக்கமாக இருந்தது. "எங்க அப்பாக்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.." என்றாள். விடுதிக்கு வந்ததும் அப்பாவுக்கு அழைத்து விசயத்தை சொன்னாள். சிறிது நேரம் யோசித்த வினோத் "சரி.. ஆனா பத்திரமா இருக்கணும்.. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஃபோன் பண்ணனும்.." என்றார்.

"தேங்க்ஸ்ப்பா.." என்றுவிட்டு ஃபோனை வைத்தவள், மறுநாள் "நான் ஞாயித்து கிழமை இங்கேயே இருக்கேன்.." என்று குணாவிடம் சொன்னாள்.

"உன் ஆளு ஊர் சுத்த வராடா.." என்று அன்புவிடம் சொன்னான் அவன். அன்புவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

அவர்களின் திட்டப்படியே ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைவரும் தயாராகினர். அபிநயாவும் மீனாவும் தங்களின் விடுதியை விட்டு வெளியே வந்தபோது அன்புவும் குணாவும் தூரத்தில் நின்றிருந்தனர். "கோணக்காலனும் நம்மளோடு வரானா.?" அதிர்ச்சியோடு கேட்டவளை கண்டு மீனா அதிர்ந்து போனாள்.

"அடிப்பாவி.. இது பிரெண்ட்ஸ் குரூப்பா ஊர் சுத்த போறது.. நாங்க இரண்டு பேர் மட்டும் போகும்போது உன்னை ஏன் கூட்டிப் போக போறோம்.?" என்றாள்.

அபிநயா "ஓகே.. ஓகே விடு.." என்றுவிட்டு குணாவின் அருகே சென்று நின்றாள்.

"முதல்ல எங்கே போறோம்.?" என்றாள்.

"புக் ஷாப்.." என்றான் அன்பு.

"அங்கேயா.? அப்படின்னா நாங்க வரல.." என்று ஒரு திடீர் குரல் ஒலித்தது. இவர்கள் நால்வரும் திரும்பி பார்த்தனர். சஞ்சயும் அவனின் மூன்று நண்பர்களும், சுவேதாவும் இருந்தனர்.

"இவங்களும் நம்ம கூட வராங்களா.?" என்று குணாவிடம் கேட்டாள் அபிநயா.

"ஆமா.. சஞ்சய் ப்ரோதான் இன்னைக்கு நமக்கு செக்யூரிட்டியா இருக்க போறாரு.." என்றாள் மீனா.

"ஓகோ.." என்று அபிநயா ஆச்சரியப்பட்ட நேரத்தில் "புக் ஷாப் எதுக்கு.? வாங்க நாம நல்ல படத்துக்கு போகலாம்.." என்றான் சஞ்சயின் நண்பன் ஒருவன்.

"அங்கே அப்புறம் போகலாம் ப்ரதர்.. முதல்ல புக் ஷாப் போகலாம்.." என்ற அன்பு அனைவருக்கும் முன்னால் நடந்தான்.

"சரி.. அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.." என்றபடி அவனை தொடர்ந்து நடந்தான் சஞ்சய். மற்றவர்களும் அவர்களை தொடர்ந்து நடந்தனர். இவர்கள் அனைவருக்கும் பின்னால் பத்தடி தூரத்தில் வந்துக் கொண்டிருந்த உருவம் ஒன்று தான் செய்ய போகும் காரியத்திற்கு நல்லதொரு காரணம் கிடைத்ததை எண்ணி சந்தோசப்பட்டது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN