முகவரி 26

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகும்... அனுவுக்கு மிருடன் ஞாபகம் முன்பை விட அதிகமாக அவளை சூழ்ந்தது.

அலைஅலையாக நெற்றியில் புரளும் அவனின் கேசம்... சிவந்த நிறம்... ஆண்மைக்கே இலக்கணமான உடற்கட்டும் அளவான மீசை… என அனுவை வசீகரிக்கத் தான் செய்தான் மிருடன். போதாக்குறைக்கு இவளை ஏற்றி விடத் தோழியாக மாலதி கூடவே வேறு இருந்தாள். மீனாவுக்கு, ஏதோ ஒரு ஆணுடன் தோழிகளை சம்மந்தப்படுத்தி... கோர்த்து விட்டு பேசினால் பிடிக்காது. அது யாராக.. யவராக இருந்தாலும் திட்டிவிடுவாள், அப்படி செய்யவும் மாட்டாள். ஆனால் மாலதி அப்படி இல்லை.

“என்ன… இன்றைக்கு உன் ஆளைப் பார்த்தீயா... என்ன கலர் டிரஸ் போட்டிருந்தான்? தலைவி தலைவனைக் காணாம துரும்பா போய்ட்டீங்க போல...” இப்படியான வார்த்தைகள் அவளிடம் அதிகம் வரும். இந்த வயதில் இப்படி பேசுவது சகஜம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படி சூழ இருப்பவர்களின் வார்த்தைகள் தான் நண்பரின் மனதை சலனப்படுத்தும். அப்போ இது காதல் தானோ... என்ற விதையை விதைத்து... அதில் தவறில்லை என்று அதையே பகிரங்கமாக செய்யவும் வைக்கும்.

உண்மையிலேயே மிருடனும், அனுவும் காதல் வசனங்களை இதுவரை பேசிக் கொள்ளவில்லை… பார்வையால் உருகி நிற்கவில்லை... அவன் அனுவைக் காப்பாற்றியதைப் பற்றியும்... அவனின் அழகை பற்றி சொல்லவும் தான் மாலதியிடமிருந்து இப்படியான பேச்சுகள் வந்தது. அதன் பிறகு பத்து தினங்கள் மிருடனை அனு சந்திக்கவில்லை.

ஒரு முறை… இவள், சேரிப் பிள்ளைகளுக்கு என்று பள்ளியில் சேகரித்த ஆடைகளைக் கொண்டு போய் சேர்ப்பதற்காக தோழிகளுடன் அங்கு சென்றிருக்க... இவள் சென்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால்... அன்று மிருடன் அந்த சேரிப் பிள்ளைகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க... அவனைப் பார்த்த இவளோ முழுவதுமாகத் தன் வசம் இழந்தாள். அவனின் கம்பீரமான தோற்றத்தால் அனுவை முன்பே கவர்ந்து இருந்தவனோ... இப்போது அவன் லாவகமாக எடுக்கும் பயிற்று முறைகளை பார்த்து இன்னும் அவன் பால் விழுந்தாள் அனு. இன்று மாலதி வேறு கூட வரவும், இவன் தான் அவன் என்று இவள் சுட்டிக் காட்ட,

“வாவ்! என்ன அழகு... என்ன கம்பீரம்... ஹேய்... பார்க்க அப்படியே கிரேக்க சிலை மாதிரி இருக்கார் டி... விட்டுடாத டி… உங்க இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு. அன்று உன்னைக் காப்பாற்றினார்... பிறகு ரோட்டில் இருந்த குழந்தையைக் காப்பாற்றினார்... இன்று சேரிப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறார்.... அப்போ இவர் பெரிய சமூகசேவகரா இருப்பார் டி... ரொம்ப... ரொம்ப... நல்லவர் டி... ஹி இஸ் ய ரியல் ஹீரோ டி” இப்படியாக மாலதி அடுக்க... கேட்டவள் மூளை இருந்தும் அதை அடகு வைத்து விட்டு... ஒருவித போதையில் திரிந்து கொண்டிருந்தாள் அனு.

போதாக்குறைக்கு அவள் பார்த்த சினிமாவில்…. ஹீரோ ஒரு குழந்தையைக் காப்பாற்ற ஹீரோயின் கையில் உள்ள வளையலை வலுக்கட்டாயமாய் பிடிங்கிக் கொடுப்பது போல் காட்சி வரவும்... பிறகு சொல்ல வேண்டுமா அனுவைப் பற்றி? பாவம்! அவள் மட்டுமா இப்படி? இந்த வயதில் உள்ள எல்லா பெண்களும் இப்படி அல்லவா இருக்கிறார்கள்! அதாவது, அவர்களைப் பொருத்தவரை வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் பொய் சொல்ல மாட்டான்! என்பது தான் அவர்களின் கருத்து.

இப்படியாக இருந்தவளை, மாலதி ஒரு நாள் வேறொரு காலேஜில் படிக்கும் தன் தோழியை சந்திக்க அனுவையும் அழைத்துச் செல்ல... நம்பி போனவளை அவளோ... நடுவழியிலேயே காதலன் அழைத்தான் என்று விட்டு விட்டுச் சென்று விட... தோழிகள் சென்றது ஸ்ரீ பெரும்புதூர் பைபாஸ் என்பதால்... அனுவுக்கு முதலில் பயம் கவ்விக் கொண்டது. இருந்தாலும் மனதிற்குள் இவள் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு அங்கு சென்று கொண்டிருந்த ஆட்டோக்களை நிறுத்த காண... அதுவோ உள்ளே ஆட்களுடன் சென்று கொண்டிருந்தது.

அனுவுக்கு வண்டி ஓட்டத் தெரியாது... சைக்கிள் தான் அவளுக்குப் பழக்கம். மாலதியை நம்பி கையில் போன் இல்லாமல் வந்து விட்டாள்... இப்போது என்ன செய்வது ஒரு கட்டத்திற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இவளுக்கு அழுகை வர பார்க்க... அதே நேரம் வானமும் தூறலைப் பொழிய.... “போச்சு டா... இன்றைக்கு நாம் ஒரு வழி ஆனோம்...” இவள் வாய் விட்டு புலம்பிய நேரம்... ஆபத்பாந்தவனாய் தன் டூ விலரில் அவளைக் கடந்து சென்றான் மிருடன்... அவன் போவதை பார்த்தால் அனுவை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஆனால் இவளோ அவனைக் கண்டு கொண்டவள், “ஹலோ மிஸ்டர் திருடன்!” இவள் அழைக்க, அந்தோ பாவம் அவள் குரலோ மழையோடு கலந்து தான் போனது திருடனுக்கு கேட்காமலே.

மிருடனைக் கண்டதும் அனுவுக்குப் போன உயிர் திரும்ப வர, இவனை விட்டால் எங்கே இங்கிருந்து செல்ல முடியாமல் போய் விடுமோ என்று பயந்தவள்... அவனை மறுபடியும் அழைக்க வழி தெரியாமல் அங்கு ரோட்டோரம் இருந்த கற்களில் ஒரு கூழாங் கல்லைத் தேடி எடுத்தவள் அதை சரியாய் அவன் முதுகை குறி பார்த்து இவள் வீச அதேநேரம் கொட்டும் மழையில் வண்டி ஓட்ட முடியாமல் மிருடன் நிற்க…. அவ்வளவு தான்! இவள் எறிந்த கல் அதி வேகமாய் தவறாய் அவன் புஜைத்தைத் தாக்கவும் “ஸ்.... ஆ....” இவன் அலற

அதற்குள் அவனருகில் வந்திருந்த அனு, “நல்லா வலிக்கட்டும்... எத்தனை தடவை உங்களை கூப்பிடறது மிஸ்டர் திருடன்...” என்க

“என்னது… திருடனா!” சற்றே கோபமாக அவளை இவன் உறுத்து விழிக்க...

“ஆமாம்… உங்க பெயர் திருடன் தானே? அப்படி தானே அன்று நீங்க சொன்னீங்க...” இவள் நினைவு படுத்த

“என்று?” இவன் தன் நினைவு அடுக்குகளில் தேட

“ஒரு நாள்... ரோட்டில் விபத்து... குழந்தையோட ஆஸ்பிட்டல்... ஜுஸ் வாங்கி கொடுத்தீங்களே...” இவள் துண்டு துண்டாய் அவனுக்கு நினைவு படுத்த

கண்கள் பளிச்சிட, “ஒஹ்... பிளாட்டினம் செயின்! நீயா?” இவன் தெரியாதது போல் கேட்க

“என் பெயர் ஒன்னும் பிளாட்டினம் செயின் இல்லை.. அனுதிஷிதா...”

அதே மாதிரி என் பெயரும் திருடன் இல்ல... மிருடன்...” இவனும் அவளையே பின்பற்ற

“ஆனா எனக்கு நீ திருடன் தான்... என் இதய திருடன்...” மனதிற்குள் சொல்லி கொள்வதாக நினைத்து அனு சற்றே தாழ்ந்த குரலில் சொல்ல... அந்த மழை சத்தத்திலும் மிருடனுக்கு அது சரியாகவே கேட்டது. அப்போது இன்னும் மழை வலுப்பெறவும்…

“சரி வா.. மழை அதிகமா இருக்கு. அங்கே போய் நிற்போம்...” அவன் அவளை ஒரு ஓரம் அழைத்துச் செல்லவும்

“ஆனா உங்களுக்கு அன்றைய விபத்து தான் ஞாபகம் இருக்கா... அதற்கு முன்னமே நாம் சந்தித்து இருக்கோம்... அது இல்லையா”

“அப்படியா? எனக்கு ஞாபகம் இல்லையே...”

“அது… கிளாஸ் முடிந்து வரும்போது சில பசங்க என் கிட்ட வம்பு செய்தப்போ நீங்க தான் என்னைக் காப்பாற்றுனீங்க...”

“நான் உன்னைக் காப்பாத்தினேன் சொல்ற... அப்போ நீ பயந்து ஒன்றும் செய்யாம நின்று இருக்க... யாராவது வம்பு செய்தா பயந்திட்டு நிற்பியா... ஏன்?”

அவனின் கேள்வியில் பெண்ணவளுக்கு கண்கள் விரிந்தது. கூடவே ‘இப்படி எல்லாம் என்னை யாரும் கேள்வி கேட்டு... இப்படியாக இருன்னு சொன்னது இல்லையே! அப்போ இவன் எனக்கானவனா?’ என்று நினைத்தது அனுவின் மனது.

மழை கொஞ்சம் நிற்கவும், “சரி கிளம்பலாமா?” மிருடன் கேட்க

“அது, நான் என் ஃபிரண்டு கூட வந்தேன். அவ லவ்வர் வரவும்… என்னை பாதியிலே கழட்டி விட்டுட்டுப் போய்ட்டா. போன் ரிப்பேர்…. அதனால் என் கையில் இப்போ போன் இல்லை. என்னை கொஞ்சம் நீ.. நீங்க… அண்ணா நகர் வரை ட்ராப் செய்ய முடியுமா?” பார்த்து இரண்டு முறையே ஆன… அதிலும் ஞாபகமே இல்லாத... ஒருவனிடம் உதவி கேட்கிறோமே... என்று முதலில் வராத தயக்கம் தற்போது அனுவுக்கு வர… அவள் திக்கித் திணறி உதவி கேட்க

“உனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாதா?” அவன் சகஜமாய் அவளிடம் கேள்வி கேட்க

“ம்ஹும்...” இவள் தலை அசைக்க

“சரி வா...”

மழை சுத்தமாக நின்றிருக்க... அவன் பின்னே அமர்ந்திருந்த அவளோ நொடிக்கு ஒரு முறை தும்மி கொண்டு வர... அவனோ தான் ஓட்டி வந்த பைக்கை ஒரு துணிக் கடை முன் நிறுத்தியவன், “நான் இங்கேயே இருக்கேன்.. நீ உள்ளே போய் உனக்கு வேண்டிய ட்ரெஸ்ஸை வாங்கி ட்ரையல் ரூமில் போட்டுட்டு... இந்த ஈர உடைய பேக்கில் வைத்து எடுத்துட்டு வா...” அவன் கட்டளையிட

“எதற்கு... இல்ல வேண்டாம்... வீட்டுக்குப் போய் பார்த்துக்கலாம் கிளம்புங்க...” இவள் தயங்க

“என்ன பார்ப்ப... யாரும் இல்லாத வீட்டில் என்னத்தை பார்ப்ப... ஈர துணியால் உனக்கு உடம்புக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு வந்திடப் போகுது போ...” இவனும் பிடிவாதமாய் நிற்க

அவனின் அக்கறையைக் கண்டு மனதிற்குள் உருகியவளோ... அவன் சொன்ன அவள் வீட்டில் யாரும் இல்லை என்ற வார்த்தையை ஏனோ அந்நேரம் வசமாய் மறந்து தான் போனாள் அனு.

அப்போதும் அவள் தயங்க... “இங்க பார்... நான் சொன்னதை செய்தா... அழைச்சிட்டுப் போறேன். இல்லனா இங்கேயே விட்டுட்டுப் போறேன்... நீயே போய்க்க...” அவன் தீவிரமாய் மறுக்க

அவன் குரல், தான் செய்வேன் என்பதை அவளுக்கு உணர்த்த... மறுநொடி உள்ளே சென்று அவன் சொன்னதைச் செய்தாள் அனு.

அவள் வெளியே வந்ததும்... பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் சென்றவன், “மழையில் நனைந்ததால் எனக்கே உடம்பு ஏதோ மாதிரி இருக்கு... வா, அப்படியே நீயும் செக் செய்துக்க...” என்றவன் உள்ளே சென்று விட, அவளுக்குமே ஈர ஆடையில் இருந்ததால் உடம்பு உதறத் தான் செய்தது. அதனால் இவளும் உள்ளே செல்ல அவளைப் பரிசோதித்து சளி, இருமலுக்கு மாத்திரை மட்டும் கொடுக்கவும்... அதை வாங்கிக் கொண்டு வெளியே இருவரும் வர... ஏனோ அனுவுக்கு உடல் அசதியில் கொஞ்சம் படுத்தால் தேவலாம் என்று தோன்றியது. அதை அவள் முகத்தில் இருந்தே கண்டு கொண்டானோ,

“இனி பைக் வேணாம்... கால்டாக்ஸி புக் செய்திருக்கேன்... வா...” என்றவனிடம்

“அப்போ உங்க பைக்?”

“அது இங்கே இருக்கட்டும்... நான் பிறகு என் நண்பன் கூட வந்து வண்டியை எடுத்துக்கிறேன்” என்றவன், “எல்லோருக்கும் மழையில் நனைந்தா... மறு நாள் தான் ஜுரம் வரும்... உனக்கு இன்றைக்கே வந்துடும் போல... என்ன தான் உன்னையை பார்த்துக்கிறியோ...” அவன் அக்கறையாய் கடிக்க...

ஏனோ அவனின் அக்கறை... கவனிப்பு... முன்னெச்சரிக்கைத் தனம்... பரிவு என்று அனைத்தும் அனுவைக் கவர்ந்தது. காரில் அவள் தூங்குகிறாள் என்று எந்த வித சலுகையும் அவன் எடுத்துக் கொள்ளாமல்... முன் சீட்டில் அவன் அமர்ந்து வந்த கண்ணியம் ஏனோ அனுவைக் கவர்ந்தது. இதை எல்லாம் விட... “நான் எல்லா இடத்துக்கும் அழைச்சிட்டு தான் போக முடியும்... இங்கே எல்லாம் நீ தான் செலவுக்கு பணம் தரனும்... ஏன்னா என் கிட்ட இப்போ அவ்வளவு பணம் எல்லாம் இல்லை..” மிருடன் ஒளிவுமறைவின்றி தன்னுடைய ஏழ்மையைச் சொல்ல... அவனின் நேர்மையால் இன்னும் அதிகமாகவே அவளுக்கு அவனை பிடித்தது. மொத்தத்தில் இன்றைய ஒரே நாளில்... மிருடனை மொத்தமாகப் பிடித்திருந்தது அவளுக்கு… அதாவது வாழ் நாள் முழுவதும் அவன் வேண்டும் என்ற நிலையில் பிடித்து போனது அனுவுக்கு.

இவள் தன் வீட்டின் முகவரி சொல்லாமலே கார் இவள் வீட்டின் முன் நிற்க... அதிலிருந்து இறங்கியவளைப், “பார்த்து போய்டுவ இல்ல? இல்ல நான் கூட வரவா?” மிருடன் கேட்க

வேண்டாம் என்று மறுத்தவள் உள்ளே செல்ல... அவள் உள்ளே செல்லும் வரை இவனோ... அந்த இடத்தை விட்டு அசையவில்லை. ஏதோ தோன்ற, இவள் திரும்பிப் பார்க்க... “உடம்பைப் பார்த்துக்கோ...” அக்கறையாய் முகத்தில் அத்தனை தவிப்புடன் அவன் சொல்ல.. தலை அசைத்து விட்டு... மயக்கத்துடன் உள்ளே சென்றாள் அனு. நிச்சயம் அது ஜுர மயக்கம் இல்லை! பிறகு...

மாத்திரையின் உபயத்தாலும்... உடல் அசதியாலும்... படுத்து தூங்கியவள்... மறுநாள் காலையில் தான் தெளிவாக எழுந்து நடமாடினாள் அவள் தன் அறை பால்கனிக்கு இவள் வந்து நிற்க... அங்கே எதிர் சரிவில் ஜர்கினை அணிந்த படி குளிரில் நின்று கொண்டிருந்தான் மிருடன். அவனை கண்டு கொண்டவள் ‘காலையில் ஆறு மணிக்கு... இவர் எப்படி இங்க.. என்ன செய்றார்...’ இவள் தன்னுள் கேட்டுக் கொண்டிருக்க

அவள் தன்னைக் கவனித்து விட்டாள் என்பதை உணர்ந்தவன், அவளை பார்த்து “இப்போ உனக்கு எப்படி இருக்கு?” உதட்டசைவால் கேட்டவன் கூடவே, “இன்னும் ஜூரம் இருக்கா?” தன் கழுத்து கீழே கை வைத்து அவன் பரிவாய் கேட்க

“இல்ல... போயே போயிந்தே...” இவள் விளம்பர பாணியில் உதட்டசைக்க

கண்கள் பளிச்சிட திருப்தியானவன், “ரெஸ்ட் எடு... எங்கேயும் போகாத” என்க...

அவள் சரி என்கவும் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் மிருடன். அவனின் அக்கறை அன்று முழுக்க அனுவுக்கு இனித்தது.

அதன் பிறகு வந்த நாட்களில் அனு படிக்கும் பள்ளியில் விடுமுறை விட்டு விட... அதனால் தினமும் இவள் ஸ்பெஷல் வகுப்புக்கு சென்று வர... அவளுக்கு வகுப்பு நடக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டின் வாசலில் இவளுக்காக முதல் நாளே காத்திருந்தான் மிருடன். அவனைக் கண்டு கொண்டவள் சந்தோஷத்துடன் சைக்கிளைப் பூட்டியவள் கண்ணில் மகிழ்ச்சியுடன், “நீங்க எங்கே இங்க?” சைகையாலேயே இவள் கேட்க

“இது என் வீடு... அதாவது... என் ஃபிரண்டோட வீடு எடுத்துத் இங்கு தங்கி இருக்கேன்” அவனும் சைகையிலே பதில் தர.. அனுவுக்கு கால் தரையில் நிற்கவில்லை.

‘அப்போ இனி தினமும் இவரைப் பார்க்கலாமா?’ என்று தான் அவளின் மனது நினைத்தது.

அதைப் பொய்யாக்காமல் தினமும் அவள் வரும் நேரம் தன் வாசலில் நிற்பவன், “வந்துட்டியா...” என்று அவன் கேட்க அதற்கு கிளம்பும் போது... “நான் கிளம்பறேன்...” என்று இவளும் கண்ணாலேயே பதில் தருவாள்.

அதை மீறி இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வையாலேயே... ஒருவரை ஒருவர் வருடிக் கொள்வார்கள்.


இப்படியே பத்து தினங்கள் செல்ல... அதன் பிறகு மூன்று நாளும் மிருடன் அனு கண்ணில் படவே இல்லை. முதலில் அவனைக் காணாமல் பெண்ணவளுக்கு அழுகை வர…. பின் அழுகை தவிப்பாகிப் போனது. மூன்று தினமும் அவனைக் காணாமல் ஏமாந்து போய் பொறுமையாக இருந்தவளுக்கு... நான்காம் தினம் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அதனால் ஒரு முடிவுடன் அவன் வீட்டுக்கே சென்று இவள் காலிங் பெல்லை அழுத்த... கொஞ்ச நேரம் சென்றே கதவைத் திறந்தான் மிருடன். இவள் கோபமாய் அவன் புறம் திரும்ப... ஏனோ அவனின் தோற்றமோ அவளின் கோபத்தை எல்லாம் காணாமல் போக வைத்தது.
 
Super Super Super maa.... Maturity இல்ல தான் school பசங்க love eppadi இருக்கும் nu romba romba arumai ah sollitinga semma maa.... Kandathe காட்சி kondathe kollam thaan... Avangaluku pirithu அறிந்து paakka தெரியாது... Athu அந்த vayasike உள்ளது..... Super Super maa... Health எப்படி இருக்கு...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN