சிக்கிமுக்கி 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புத்தக கடையினுள் நுழைந்தது நண்பர்கள் கூட்டம். அபிநயா அனைவரையும் விடுத்து முன்னால் நடந்தாள். அன்பு அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

"தனியா போகாதே.. தொலைஞ்சிடுவ.." என்றான். குணா தன் காதில் விழுந்த வார்த்தைகளால் குழம்பி போனான். நண்பன் வர வர சுத்த மோசமாகி கொண்டிருக்கிறான் என்று எண்ணினான் அவன்.

அபிநயா அந்த கடையை சுற்றிலும் பார்த்தாள். இரண்டு வாடிக்கையாளர்களும் கடைக்காரர் ஒருவரும் உள்ளே இருந்தனர்.

"இந்த மக்கள் கூட்டத்துல நான் தொலைஞ்சிடுவேனா.?" என்றாள் குழப்பமாக. வானத்துல வெள்ளை காகம் பறக்கிறது என்பதை விடவும் இது முட்டாள்தனம் என்று தோன்றியது அவளுக்கு.

அன்பு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளின் கையை விட்டான். அபிநயா அவனை முறைத்தபடி புத்தகங்களை பார்க்க சென்றாள்.

மற்றவர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்துச் செல்ல அன்பு அபிநயாவின் நிழல் போல பின்னால் தொடர்ந்தான்.

அபிநயா இலக்கற்று அங்கிருந்த புத்தகங்களை எடுத்து பிரித்து பார்த்தாள். புத்தகத்தின் வாசம் அவளை தன் வசமாக்கியது.

"இந்த புக் உனக்கு பிடிச்சிருக்கா. உனக்கு வேணும்ன்னா எடுத்துக்க.. நான் பே பண்றேன்.." என்றான் அன்பு.

அபிநயா அவனை குழப்பத்தோடு பார்த்தாள். "என் புத்தகத்துக்கு நீ ஏன் காசு செலவு பண்ணனும்.? மெண்டலாகிட்டியா என்ன.? கடிச்சி கிடிச்சி வச்சிடாத. தூர போ.." என்று அவனை விரட்ட முயற்சித்தாள்.

அன்பு அவள் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்த புத்தகத்தை கையில் எடுத்து பிரித்தான். அபிநயா அவனை விந்தையாக பார்த்துவிட்டு மீண்டும் புத்தகங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினாள்.

"அபி.. நீயும் நானும் பிரெண்ட்ஸ்தானே.?" என்று தயக்கமாக கேட்டான் அன்பு. அபிநயா திரும்பி பார்த்தாள். அவன் இவளையே ஆவலாய் பார்த்திருந்தான். இவளின் பதிலுக்காய் ஏங்கி நின்றது அவனது முகம். அந்த ஏக்கத்தை ஏமாற்றவும் அவளுக்கு மனம் வரவில்லை. அதே சமயத்தில் அவனின் திடீர் மாற்றத்தில் சிக்கி கொள்ளவும் விரும்பவில்லை. "இல்ல நாம எனிமிஸ்.." என்றவள் அவனின் ஏமாற்ற முகத்தை பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்பு தன் கையில் இருந்த புத்தகத்தால் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

மீனாவும் குணாவும் கடையின் இடது பக்க மூலையில் இருந்த புத்தக ஷெல்பில் காதல் கதைகள் இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தனர்.

பிசிகல் கெமிஸ்ட்ரி சம்பந்தமாக ஒரு புத்தகத்தை கையில் எடுத்தாள் அபிநயா. பிரித்து பார்த்தாள். புரியும்படி இருந்தன. இருக்கட்டுமென்று அதை பத்திரப்படுத்திக் கொண்டாள். அன்பு இருந்த திசையை திரும்பி பார்த்தாள். பேயோடு ஒரு இரவில் என்று ஆவிகள் சம்பந்தமான புத்தகம் ஒன்றை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்‌.

"அரை மெண்டல்.." என்று கடித்த பற்களிடையே சொன்னவள் புத்தக விற்பனையாளரிடம் வந்தாள். தன்னிடமிருந்த புத்தகத்தை காட்டினாள். அதை வாங்கியவர் விலையை சொன்னார். அபிநயா தன் பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து நேரத்தில் அன்பு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை மேஜை மீது வைத்தான். கடைக்காரர் மீதி சில்லறையை அபிநயாவிடம் நீட்டினார். அபிநயா சில்லறையை வாங்காமல் அன்புவை முறைத்தாள். அன்பு சில்லறையை வாங்கிக் கொண்டான். அபிநயாவின் புத்தகத்தையும் கையில் எடுத்துக் கொண்டான். வெளியே நடந்தான். வாசலுக்கு வந்து நின்றவனை பிடித்து தன் பக்கம் திரும்பினாள் அபிநயா. தன் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டவள் அவனின் கையில் பணத்தை வைத்தாள். அவனிடம் எதுவும் பேசாமல் சென்று இருக்கை ஒன்றில் அமர்ந்துக் கொண்டாள்.

நண்பர்கள் புத்தக வேட்டையில் இருந்தனர்.

அன்பு அபிநயாவை தன் பார்வையால் தின்றுக் கொண்டிருந்தான். அவள் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி புத்தகத்தை படிக்கையில் தன் இதயமே புரள்வது போல இருந்தது அவனுக்கு. அபிநயாவின் இடது கால் தரையில் பதிந்த வண்ணம் லேசாய் ஆடிக் கொண்டிருந்தது. அவளின் வெள்ளை நிற துப்பட்டா காற்றில் அசைந்தது. துப்பட்டாவோடு தன் மனமும் சேர்ந்து பறப்பதாய் உணர்ந்தவன் 'இந்த மாதிரி லூசுதனமான பீலிங்க்ஸ்ல சிக்காம லவ் பண்றதுக்கு என்ன வழி.?' என்று யோசித்தான்.

'அபி.. என் கஷ்டம் உனக்கு எப்ப புரியும்.?' என்று கவலையோடு நினைத்த அன்புவை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"நீ புத்தகம் வாங்கலையா.?" என்றாள்.

அன்பு தன் இடது கையில் இருந்த புத்தகத்தை அவள் முன்னால் காட்டினான். உடைந்த நிலாக்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. "காதல் கவிதைகளின் தொகுப்பு.." என்றான்.

அபிநயாவுக்கு அவனை பார்க்க பார்க்க அனைத்துமே விசித்திரமாக தெரிந்தது. "நீ ஏன் காதல் கவிதை படிக்கற.?" என்றாள்.

"அதுதான் எனக்கே தெரியலையே.." என்று முனகியவன் "ஏன் படிக்க கூடாதா.?" என்றான் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி.

"படி.. படி.." என்றவளுக்கு எந்த இடைவெளியில் அவன் அந்த புத்தகத்தை வாங்கியிருப்பான் என்று சந்தேகமாக இருந்தது. அவள் பிசிகல் கெமிஸ்ட்ரியை எடுத்த நேரத்தில்தான் இவன் இந்த புத்தகத்தை தேடி எடுத்தான்.

குணாவும் சுவேதாவும் மட்டும் புத்தகங்களை வாங்கி இருந்தனர். மற்ற நண்பர்கள் உள்ளே போனது போலவே வெளியே வரும்போதும் வெறும் கையை வீசிக் கொண்டே வந்தனர்.

"அடுத்ததாவது டைம் பாஸ் பண்ற இடமா போகலாம்.." என்றான் சஞ்சயின் நண்பன் ஒருவன்.

"ஆமா. கண்டிப்பா.. கோவிலுக்குள்ள அதிக நேரம் இருக்க கூடாது.. கிளம்பிடலாம்.." என்று கடுப்போடு சொல்லி விட்டு சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் சுவேதா.

சஞ்சய் தன் நண்பனை முறைத்தவிட்டு சுவேதாவை பின்தொடர்ந்து ஓடினான். "பேபி.. நாம அடுத்த வாரமும் புக் ஷாப் வரலாம்.." என்றான்.

அன்புவின் தோளில் கை போட்டபடி நடக்க ஆரம்பித்தான் குணா. "நிறைய புக்ஸ் இருக்குடா இங்கே.. நம்ம ஊரை விடவும் இங்கே அதிகமா இருக்கு.." என்றான்.

அபிநயாவோடு இணைந்து நடந்தாள் மீனா. "உன் புத்தகத்தை எனக்கும் கடன் கொடு.." என்று அவள் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கினாள்.

"சேர்ந்து படிக்கலாம் மீனு.." என்று அபிநயா சொன்னதும் சாலையிலேயே அவளை கட்டிக் கொண்டாள் மீனா. அன்புவும் குணாவும் அவர்களை பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினர்.

"இந்த பொண்ணுங்க மெண்டாலிட்டியை புரிஞ்சிக்கவே முடியலடா.." என்றான் குணா.

"என்னால என்னோடதையே புரிஞ்சிக்க முடியல.." என்று முனகிய அன்பு சினிமா தியேட்டரில் அபிநயாவின் அருகில் அமர்ந்தான். அபிநயாவின் மறுபக்கத்தில் அமர்ந்திருந்த மீனா படம் ஆரம்பிக்கும் முன்பே குணாவின் தோளில் சாய்ந்து விட்டாள்.

"லவ் பேர்ட்ஸோடு படம் பார்க்கவே வர கூடாது.." என்று கிண்டலடித்த அபிநயாவை குறும்பு சிரிப்போடு பார்த்து கண்ணடித்தாள் மீனா.

சற்று நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு திரைப்படம் தொடங்கியது. குழந்தைகள் திரைப்படம் அது. முழுக்க முழுக்க காமெடி இருந்தது. அபிநயா மட்டுமின்றி அனைவருமே வயிறு வலிக்கும் அளவிற்கு சிரித்தனர். திரைப்படம் முடிந்ததும் புன்னகை மறையாமல் இருக்கையை விட்டு எழுந்து நின்றாள் அபிநயா.

"இப்படி ஒரு காமெடி மூவியை இதுக்கு முன்னால நான் பார்த்ததே இல்ல. செமையா இருந்தது.." என்றாள் மகிழ்ச்சியோடு.

அன்புவிற்கு சந்தோசமாக இருந்தது அவள் சொன்னதை கேட்டு.

"அடுத்த வாரமும் மூவிக்கு வரலாமா.?" என்றான் வெளியே நடந்துக்கொண்டே.

"எங்க அப்பா திட்டுவாரு.. மக கேட்டான்னு அதிசயமா ஒரு வாரத்துக்கு விடுவாரு.. வாராவாரம் ஊர் சுத்துற அளவுக்கு நான் இன்னும் வளரல தம்பி.." என்றவள் கூட்டத்தில் யார் மீதும் மோதி விடாமல் நடக்க சிரமப்பட்டாள். அவர்களும் பின்னால் வந்த இளைஞர்கள் கூட்டம் இவர்களை தாண்டி செல்ல முயன்றது. அன்பு அபிநயாவை தன் அருகே இழுத்துக் கொண்டான். இளைஞர்கள் கூட்டம் அன்புவின் தோளில் இடித்துக் கொண்டு வெளியேறியது. முன்னால் நகர்ந்துக் கொண்டிருந்த அபிநயா கழுத்தை திருப்பி அன்புவை பார்க்க முயன்றாள். சட்டென்று அவளின் இடுப்பில் கையை வளைத்துப்போட்டு அவள் நடப்பதை நிறுத்தினான் அன்பு.

"படி இருக்கு அபி.." என்றான் கண்டிப்போடு. அபிநயாவிற்கு அவனின் ஸ்பரிசமும் அவனது கண்டிப்பில் நிறைந்திருந்த அக்கறையும் சிலிர்ப்பை தந்தது‌.

தன் கையை பின்னே இழுத்து அவளின் கையை பற்றியவன் அவளை அழைத்துக் கொண்டு நடந்தான். தியேட்டரின் வெளியே வந்ததும் நண்பர்கள் கூட்டம் ஓரிடத்தில் சேர்ந்து நின்றது. அவர்களின் அருகே சென்றதும் தன் கையை விடுவித்துக் கொண்ட அன்பு "அடுத்து எங்கேயாவது போறோமா.?" என்றான்.

சஞ்சய் தன் வாட்சை பார்த்தான். "டைம் இல்ல.. நாம சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்.." என்றான்.

அபிநயா வினோத்திற்கு ஃபோன் செய்து தான் பத்திரமாக இருப்பதாய் சொல்லிவிட்டு நண்பர்களோடு இணைந்து ஹோட்டலுக்குள் நுழைந்தாள். அன்புவும் அபிநயாவும் ஒரே வகை உணவை ஆர்டர் செய்தனர். குணாவும் மீனாவும் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக் கொண்டனர். அபிநயா அவர்களிடம் தாறுமாறாக எதையாவது சொல்லிவிடுவோமோ என்று பயந்து முகத்தை திருப்பிக் கொண்டாள். அவளின் மறுபக்கம் அமர்ந்திருந்த அன்பு உணவு உண்ணுவதில் கவனமாக இருந்தான். அபிநயாவிற்கு என்னவோ வித்தியாசமாக தோன்றியது. ஆமாம். அன்பு உணவு உண்ணுவது அவளின் கண்களுக்கு பேரழகாய் தெரிந்தது. 'சோறு திங்கறது கூட அழகா தெரியுது.. யாரோ எனக்கு செய்வினை வச்சிட்டாங்க போல இருக்கே‌..' என்று மனதுக்குள் புலம்பியவளுக்கு உண்ணும்போதும் கூட மனம் அவனை காண சொல்லி தொந்தரவு செய்துக் கொண்டிருந்தது.

"முன்னையெல்லாம் அவனை பார்த்தாலே கோபமா வரும் மீனு.. ஆனா இப்பதான் என்னவோ ஆயிடுச்சி. அந்த எருமை என்ன செஞ்சாலும் எனக்கு அழகாதான் தெரியுது.. கண் செக் பண்ணனுமா.? இல்ல மந்திரிக்கணுமான்னு தெரியல.." விடுதிக்கு வந்து சேர்ந்ததில் இருந்து ஐந்தாவது முறையாக இதையே சொன்னாள் அபிநயா.

"உனக்கு அவன் மேல லவ் வந்துடுச்சின்னு நினைக்கிறேன் அபி.." என்றாள் மீனா கொட்டாவியை விட்டுக் கொண்டே.

"ம்கூம்.. அவன் என் எதிரி.. மறந்துட்டியா நீ‌.? கொஞ்ச நாள் சண்டை போடாம இருந்தா லவ்வர் ஆயிட முடியுமா.? அதுவும் இல்லாம அவனை எங்க வீட்டுல யாருக்கும் பிடிக்காது.." என்றாள் அபிநயா படுக்கையில் ஏறி படுத்தபடி.

"உன் மனசு உனக்குத்தான் தெரியும்.. அவன் வேற எவளையாவது லவ் பண்ண பிறகு நீ பீல் பண்ணிடாத.. உனக்கு என்ன வேணும்ன்னு உனக்குதான் தெரியும். நீயே நல்லா யோசிச்சி பாரு.." என்ற மீனா உறங்குவதற்காக கண்களை மூடினாள்.

மீனா சொன்ன விசயம் அபிநயாவை மேலும் குழப்பி விட்டது. 'எனக்கு என்ன வேணும்.? கோணக்காலனா.? ஆனா அவனுக்குதான் என்னை பிடிக்காதே..' என்று யோசித்தவளுக்கு விடிய விடிய தூக்கமே வரவில்லை.

மறுநாளும் இதே நினைவோடு கல்லூரிக்கு சென்றவளை வன்முறையோடு வரவேற்றான் அன்பு. விகேஷின் முகத்தை பெயர்த்தெடுக்கும் முயற்சியில் இருந்தான் அவன். அவனையும் விகேஷையும் சுற்றி கூடியிருந்த மாணவர்கள் கூட்டம் அன்புவை பயத்தோடு பார்த்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளை நடந்த அபிநயா அன்பு ஆத்திரத்தோடு விகேஷின் தாடையில் குத்துவதை கண்டு முகத்தை திருப்பி கொண்டாள். முகம் எல்லாம் ரத்தம் வழிய தரையில் கிடந்த விகேஷை கொல்ல முயற்சிப்பது போல அடித்துக் கொண்டிருந்தான் அன்பு.

எங்கிருந்தோ ஓடி வந்தனர் குணாவும் சஞ்சயும். விகேஷிடமிருந்து அன்புவை விலக்கி எழுப்பி நிறுத்தினர். "என்னடா பண்ற நீ.?" என்று திட்டினான் குணா.

"இவனை நான் கொல்லாம விட மாட்டேன்டா.." என்ற அன்பு நண்பர்கள் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான்.

"இங்கே என்ன நடக்குது.?" என்ற அருள் குமரனை அன்பு திரும்பி பார்த்தான். அவர் கீழே கிடந்த விகேஷை பார்த்துவிட்டு அன்புவை முறைத்தார்.

"நீயும் இவனும் இப்பவே பிரின்சிபால் ரூம்க்கு வாங்க.." என்றவர் முன்னால் நடந்தார்.

விகேஷை அவனது நண்பர்கள் தூக்கி நிறுத்தினர். அவர்களின் உதவியோடு பிரின்சிபால் அறை நோக்கி நடந்தான் அவன். அன்பு அவனை முறைத்துக் கொண்டே அவனை பின்தொடர்ந்தான். குணாவும் சஞ்சயும் அவனின் பின்னால் செல்ல, மீனா அபிநயாவை இழுத்துக் கொண்டு பிரின்சிபால் அறை நோக்கி நடந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN