சிக்கிமுக்கி 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவையும் விகேஷையும் மாறி மாறி பார்த்தார் பிரின்சிபால்.

"இது காலேஜ் கேம்பஸா.? இல்ல மல்யுத்த களமா.?" என்றார் கோபத்தோடு.

"சாரி சார்.." என்றான் அன்பு தலை குனிந்தபடி.

கதவோரம் நின்றிருந்த அபிநயா குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

"இவன்தான் சார் என்னை அடிச்சான்.. நான் எதுவுமே பண்ணல சார்.." என்றான் விகேஷ். அவனின் முகத்தில் இருந்த காயங்களை கண்டு அன்புவின் மீது ஆத்திரப்பட்டார் பிரின்சிபால்.

"பொய் சொல்றான் சார்.." என்றான் அன்பு.

"இப்படி அடிக்கற அளவுக்கு என்ன பண்ணான் இவன்.?" என்றார் அவர்.

அன்பு உதட்டை கடித்தான். எதுவும் வாய் திறக்கவில்லை.

"நான்.. நான் எதுவுமே பண்ணல சார். இவன் வேணும்ன்னே என்னை அடிச்சிட்டான்.." என்றான் விகேஷ்.

பிரின்சிபாலுக்கு இப்போது விகேஷ் மீதுதான் சந்தேகம் வந்தது. அவன் எதையோ மறைக்க முயல்வது தெளிவாக தெரிந்தது. கேட்கும் முன்பே தான் தப்பு செய்யவில்லை என்று சொன்னவனின் குரலில் இருந்த தடுமாற்றத்தையும் அறிந்தார் அவர்.

"இவன் என்ன தப்பு பண்ணான்னு நீ சொன்னாதான் எங்களுக்கு தெரியும் அன்பு.." என்றார் அருள் குமரன்.

ஆழ்ந்து யோசனை செய்த அன்பு "நான்தான் அடிச்சிட்டேன்.. தப்பு என் மேலதான்.." என்றான்.

"இப்ப நான் கிளம்பலாமா சார்.?" என்றான் விகேஷ்.

அருள் குமரன் பிரின்சிபாலை யோசனையோடு பார்த்தார். பிரின்சிபால் அன்புவின் முகத்தை பார்த்தார். பின்னர் விகேஷை அங்கிருந்து போக சொல்லி சைகை காட்டினார். விகேஷ் அன்புவை முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் தப்பித்தால் போதுமென்று ஓடியது அனைவருக்கும் புரிந்தது.

"இப்ப சொல்லு என்ன நடந்தது.?" என்றார் பிரின்சிபால். அன்பு ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தான். "நான்தான்.." என்று ஆரம்பித்தவன் முன் கையை காட்டி நிறுத்தினார் அவர்.

"நீ ஏன் அடிச்சன்னு உண்மையான காரணம் சொன்னா நல்லது.." என்றார் கண்டிப்போடு.

அன்பு தயங்கினான். "எ.. என்.. லவ்வ.. என்.. என்னோட போட்டோவை ஆபாசமா மார்பிங் பண்ண போறதா பேசிட்டு இருந்தான். அதனால்தான் அடிச்சேன்.." என்றான்.

அறை வெளியே நின்றிருந்த குணாவும் சஞ்சயும் குழப்பத்தோடு அன்புவை பார்த்தனர்.

"இதுக்கா அடிச்ச.?" என்று ஆச்சரியப்பட்டார் அருள் குமரன்.

"ஏன் சார்.. எனக்கு மட்டும் மானம் இல்லையா.?" என்று திருப்பி கேட்டான் அன்பு. அவனின் வாதம் பிரின்சிபாலுக்கு நியாயமாக பட்டது.

"அவன் மேல கம்ப்ளைண்ட் தரியா.?" என்றார்.

"வேணாம் சார்.." மறுப்பாக தலையசைத்தான் அன்பு.

"மறுபடியும் அவனை அடிச்சிட்டு வந்து நிற்க கூடாது.. முதல்லயே என்கிட்ட வந்து சொல்லணும் சரியா.?" என்றார் அவர். அன்பு சரியென்று தலையாட்டினான்.

"அருள்.. அந்த பையனை கூப்பிட்டு வார்ன் பண்ணி விடுங்க.." என்ற பிரின்சிபால் அன்புவின் பக்கம் திரும்பினார். "அடிதடிக்கு போகும் முன்னாடி டீச்சர்ஸை கூப்பிட்டு பிரச்சனையை சொல்ல பாரு.." என்றார்.

"சரி சார்.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான். அறை வாசலில் நின்றிருந்த அபிநயாதான் பார்வைக்கு முதலில் தெரிந்தாள்.

"என்னையே அடிச்சிட்டான் இல்ல.. அந்த அன்பு ஆளோட உடம்புல பிட்டு துணி கூட இல்லாத மாதிரி மார்பிங்க்ல மாத்துடா.." என்று விகாஷ் தன் நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை அந்த வழியாய் சென்ற சுவேதாவின் காதில் விழுந்தது. அவள்தான் அவசரமாக ஓடிவந்து அன்புவிடம் விசயத்தை சொன்னாள்.

அவர்கள் பேசியது அபிநயாவை பற்றித்தான் என்பது அன்புவிற்கு முதல் நொடியிலேயே புரிந்து போய் விட்டது. விகாஷை தேடி ஓடியவன் அவனின் கையில் இருந்த போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தான். அத்தோடு விகாஷின் முகத்தையும் உடைக்க ஆரம்பித்தான்.

குணாவையும் சஞ்சையையும் தேடி ஓடிய சுவேதா "அன்புவுக்கும் விகாஷுக்கும் சண்டை.." என்று மட்டும் சொல்லி வைத்தாள். அவர்கள் இருவரும் வந்து பார்த்தபோது விகாஷை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் அன்பு.

அபிநயாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு விகாஷை கொல்லாமல் போனோமே என்று வருத்தமாக இருந்தது.

அபிநயா அவனின் பார்வையின் தாக்கம் தாங்க முடியாமல் தலை குனிந்தாள். மீனாவின் கை பற்றி அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

குணாவும் சஞ்சயும் அன்புவின் அருகே வந்தனர். "அவனை ஏன்டா அடிச்ச.?" என்றான் குணா.

"அதான் சொன்னேனே.." என்ற அன்பு வகுப்பறை நோக்கி கிளம்பினான்.

"விகாஷ்க்கு அன்பு மேல லவ்வா இருக்குமோ.?" என்று கேட்டான் குணா. சஞ்சய் அவனை விசித்திரமாக பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.

மதிய உணவு இடைவெளியில் யாருமற்ற தங்களின் வகுப்பறையில் ஜன்னலருகே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அன்பு. அவனின் மேல் நிழல் ஒன்று வந்து விழுந்தது. திரும்பி பார்த்தான். அபிநயா நின்றுக் கொண்டிருந்தாள். மீண்டும் வெளியே பார்வையை திருப்பிக் கொண்டான் அவன்.

அபிநயா அவனருகே அமர்ந்தாள். "விடுப்பா பரவால்ல.. நான் அவன் மீதி மூக்கை உடைச்சி விட்டுடுறேன்.." என்றாள்.

அன்பு சட்டென்று திரும்பி தன் கரங்களால் அவளின் முகத்தை பற்றினான். "எல்லா நேரத்திலும் விளையாட்டு புத்தியோடு இருக்காத அபி.." என்றான்.

அபிநயாவிற்கு படபடவென்று இதயம் துடித்தது. மயக்கம் வரும்போல இருந்தது அவனின் அருகாமை கண்டு. அவனின் கண்கள் அவளை கொள்ளை கொள்ள பார்த்தது. அந்த கரும்விழிகளில் தெரிந்த தன் முகத்தில் படபடப்பை கண்டவள் விழிகளை தாழ்த்தினாள். அவனின் கழுத்தில் இருந்த சிறு மச்சம் அவளின் விரல் தொடுகையை கேட்டது. தாடை பகுதியில் குட்டி குட்டியாய் வளர்ந்திருந்த முடிகள் அவனுக்கும் கூட தாடி வரும் என்ற நம்பிக்கையை தந்தது. தன் முகத்தை பற்றியிருந்த அவனின் கரங்களின் பத்து விரல்களின் உணர்வையும் உணர்ந்தாள் அவள். அவனின் சுட்டுவிரல் அவளின் கன்னங்களை வருடியதையும் உணர்ந்தாள். சுண்டு விரல்கள் இரண்டும் நடுங்கியதையும் உணர்ந்தாள்.

"விளை..யாடல.. நான் அவனை அடிக்கிறேன்னுதான் சொன்னேன்.." என்றாள் தடுமாற்றமாய். அவளின் அசையும் இதழ்களை பார்த்துக் கொண்டிருந்த அன்பு சட்டென குனிந்து அவளின் உதட்டில் முத்தம் பதித்தான்.

முதல் முத்தம் இருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஜென்மங்களின் கணக்கெழுத்தப்பட்ட ஏட்டில் பதியப்பட்ட முதல் முத்தம். இருவரின் உள்ளத்திலும் குற்றுயிராய் கிடந்த நேசத்திற்கு கிடைத்த முதல் பரிசு. பகையின் நிழலில் இம்முறையும் அழிந்து விடுவோமோ என்று பயந்திருந்த பாசத்திற்கு கிடைத்த முதல் நம்பிக்கை.

முத்தம் கனவை விட நிஜத்தில் உயிரோட்டமாக இருந்ததை உணர்ந்த அபிநயா திகைத்துப்போனாள். அன்பு தனது அவசர புத்தியை திட்டிக் கொண்டே அவளை விட்டு விலகினான். அபிநயா எழுந்து நின்றாள். அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. இதயம் வேறு மத்தளத்தின் இசையென டம் டம் என்று துடித்தது.

"ஹோவ்.." என்று மெல்லிய குரல் ஒன்று கேட்கவும் அபிநயாவும் அன்புவும் திரும்பி பார்த்தனர். சக மாணவர்கள் நால்வர் வகுப்பறை வாசலில் நின்றிருந்தனர். அன்புவும் அபிநயாவும் முத்தமிட்டுக் கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தயக்கத்தோடு உள்ளே வந்தனர்.

"சாரி.. நாங்க உங்களை டிஸ்டர்ப் பண்ண நினைக்கல.." கடமை உணர்ச்சியின் மிகுதியில் சொன்னான் ஒருவன். அருகில் இருந்தவன் அவனின் கையை கிள்ளினான். "உன்னை கேட்டாங்களா அவங்க.. அவங்க ஏற்கனவே கிஸ் பண்ணி முடிச்சிட்டாங்க.." என்றான் அவன்.

அபிநயாவிற்கு தன் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது. 'அன்பு எருமை.. என் மானத்தையே வாங்கிட்டான்..' என்று மனதுக்குள் புலம்பினாள்.

மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் வந்தனர். வியர்த்து போய் அமர்ந்திருந்த அபிநயாவை விசித்திரமாக பார்த்தபடி அவளருகே அமர்ந்தாள் மீனா.

"சுவேதா அந்த பேனை போட்டுட்டு வா.. அபிக்கு ஏனோ வேர்க்குது.." என்றாள் அவள் தோழி மேல் உள்ள அக்கறையில்.

பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் நால்வரும் களுக்கென்று சிரித்தனர். அபிநயா கண்களை மூடினாள். 'கடவுளே..' என்று புலம்பினாள்.

மீனா பின்னால் திரும்பி அந்த மாணவர்கள் நால்வரையும் பார்த்தாள். "பைத்தியகாரனுங்க.. எதுக்கு சிரிக்கறதுன்னு விவஸ்தையே இல்ல.." என்று திட்டினாள்.

மின்விசிறியின் ஸ்விட்சை தட்டிவிட்டு வந்த சுவேதா "உடம்பு ஏதும் சரியில்லையா அபி.?" என கேட்டபடி மீனாவின் அருகே அமர்ந்தாள். இல்லையென தலையசைத்தாள் அபிநயா. கடைசி வரிசையில் இருக்கும் மாணவர்கள் கூட்டம் தன்னையே பார்ப்பது போல இருந்தது அவளுக்கு.

நிமிடங்கள் கடந்த நேரத்தில் ஆசிரியர் வகுப்பெடுக்க வந்தார். தமிழ் வகுப்பு அது. சங்க இலக்கியம்.. அதுவும் காதலின் சிறப்பை கூறும் ஒரு செய்யுள்.. ஆசிரியர் பாடம் நடத்த தொடங்கியதும் அங்கிருந்து ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள் அபிநயா.

"கிளாஸ் ஆரம்பிச்சதுல இருந்து அன்பு உன்னையே பார்த்துட்டு இருக்கான்.." என்று அபிநயாவின் காதில் கிசுகிசுத்தாள் மீனா.

'இவ ஒருத்தி.. செகண்டுக்கு ஒருமுறை கமெண்ட்ரி தரா..' என்று சலித்துக் கொண்ட அபிநயாவிற்கு அன்புவின் பக்கம் பார்க்க பயமாக இருந்தது. முத்தமிட்ட நொடிகள் அடிக்கடி நினைவில் வந்து போனது. 'தேவைதான் எனக்கு.. அவனுக்கு சப்போர்டா ஆறுதல் சொல்ல போனேன் இல்லையா.. அதுக்குத்தான் இந்த வம்பு வந்து சேர்ந்திருக்கு..' என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.

'முத்தம் ஏன் தந்திருப்பான்.? அதுவும் எனக்கு ஏன் தந்திருப்பான்.? சகோதரின்னு நினைச்சி தந்திருப்பானா.? ச்சே.. இருக்காது.. தோழின்னு நினைச்சி தந்திருப்பானோ.? ம்கூம் நாம எந்த காலத்துல தோழமையா பழகினோம்.? ஒருவேளை லவ்வுல..?' அதற்கும் மேல் யோசிக்கவும் தயங்கினாள் அவள்.

வகுப்பு முடிந்தது கூட தெரியாமல் இருந்தவளின் தோளில் கை பதித்தாள் மீனா. "உனக்கு என்ன ஆச்சி.?" என்றாள்.

"எதுவும் இல்ல.." என்ற அபிநயா அடுத்த பாட வேளைக்கான புத்தகத்தை எடுத்து மேஜை மேல் வைத்தாள். படிப்பது போல முயற்சித்தாள். புத்தகத்தின் பக்கத்தில் அன்பு என்று அவள் கிறுக்கியிருந்ததுதான் முதல் பார்வைக்கு வந்தது. அவசரமாக பக்கங்களை திருப்பினாள். அவள் திருப்பிய பக்கமெல்லாம் அவன் பெயர்தான் கண் முன் வந்து நின்றது. படக்கென்று புத்தகத்தை மூடி வைத்தவள் தோழி தன்னை விசித்திரமாக பார்ப்பதை கண்டுக்கொள்ளாமல் போர்டையும் ஆசிரியரையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

அன்று மாலை வரையிலுமே அவளின் இதய படபடப்பு குறையவேயில்லை.

மாலையில் வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் கிளம்பினர். அபிநயா தன் பேக்கை எடுத்து தோளில் மாட்டினாள்.

மீனாவும் சுவேதாவும் காதல் பறவைகளாய் மாறி தங்களின் ஜோடிகளோடு பறக்க சென்று விட்டனர்.

"கமிடெட் ஆனவங்களோடு பிரெண்ஷிப்பே வச்சிக்க கூடாது.. எப்ப வேணாலும் கழட்டி விட்டுட்டுவாங்க.." என்று புலம்பியபடி நடந்தவளின் பின்னால் சிரிப்பு குரல் கேட்டது. அன்புவின் குரல்தான் அது என்பது திரும்பி பார்க்காமலேயே புரிந்தது.

"அபி ஒரு நிமிசம்.. இந்த நோட்ஸை வாங்கிட்டு போ.." என்றான் அன்பு.

அபிநயா கலவரமாய் அவனை திரும்பி பார்த்தாள். அவளை தாண்டி நடந்த அவள் வகுப்பின் பின் இருக்கை மாணவர்கள் ரகசியமாக சிரித்துக்கொண்டே சென்றனர்.

"எதுக்கு பயப்படுற.?" என்றபடி அவளை நெருங்கினான் அவன்‌. அந்த தளத்தின் வராண்டாவில் இருந்த மாணவர்கள் சட்டென்று காணாமல் போனது போல இருந்தது அவளுக்கு.

அபிநயாவின் அருகே வந்து அவளின் முகவாயை பற்றினான் அன்பு.

"நோட்ஸ் தரேன்னுதானே சொன்ன.?" என்றாள் அவள் தயக்கமாக.

அன்புவிற்கு சிரிப்பு வரும்போல இருந்தது. "அது சும்மா.. உன்னோடு பேசணும்ன்னு சொன்னேன்.." என்றான்.

"என்னோடு என்ன பேச போற.?" என்றாள் அவனின் முகத்தை ஆராய்ந்தபடி.

அவளின் தாடையை பற்றியிருந்த அவனின் கரத்தின் பிடி அனிச்சையாக இறுகியது. அவளின் கன்னங்கள் அவனின் தொடுதலில் புது வண்ணமெடுத்தது. அவளின் கன்னத்து சிவப்பு கண்டு எச்சில் விழுங்கினான் அவன். உடம்பில் புது ரத்தம் ஓடியது போல தோன்றியது.

அவனின் அருகில் நிற்பது ஆபத்து. அவன் மீண்டும் முத்தமிட வாய்ப்புள்ளது என்று மனம் அலறினாலும் கூட பின்னால் நகர மனம் வரவில்லை அவளுக்கு.

"உன் ஐஸ் க்யூட்டா இருக்கு.." என்றான் அதிக ஓசை வராத ஒரு குரலில்.

'அதை நான் சொல்லலாம்ன்னு நினைச்சேன்..' என்றது அவளின் மனம். அவனின் கண்களை பார்க்கும்போது அப்படித்தான் சொல்ல தோன்றியது அவளுக்கும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN