சிக்கிமுக்கி 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா தன் விடுதி அறையிலிருந்த ஜன்னலருகே நின்றுக் கொண்டிருந்தாள். கல்லூரியில் அவளை சிலையென நினைத்து சிதறாத பார்வையை பார்த்து நின்ற அன்புவிடம் இருந்து அவள் தப்பித்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

மானை அடித்து தின்ன நோட்டமிடும் புலியை போலவே அவளை பார்த்தான் அவன். அவனின் அந்த பார்வையை அவளால் எப்போதுமே மறக்க முடியாது.

சிந்தித்தபடியே நின்றிருந்தவளின் கை மெல்ல நீண்டது. ஜன்னலை மெதுவாக திறந்தாள். எதிரில் இருந்த கட்டிடத்தை பார்த்தாள். மாலை வெயிலுக்கு அரை இருளாய் தெரிந்தது எதிரில் இருந்த அறை. தன் போனை எடுத்து கேமராவை இயக்கி உருபெருக்கினாள். அன்பு பைனாக்குலரோடு நின்று இவள் திசையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை கண்டதும் அபிநயா ஜன்னலை சாத்திவிட நினைத்தாள். ஜன்னலின் கைப்பிடியை அவள் தொட்ட நேரத்தில் அவளின் போனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது.

"ஜன்னலை சாத்தாதே.." என்று அவன்தான் அனுப்பி இருந்தான். அபிநயா உதட்டு சிரிப்பை மறைத்தபடி ஜன்னலை சாத்தி தாளிட்டாள். "நீ சொன்னா நான் கேட்கணுமா.?" என்று கிண்டலாக கேட்டபடி வந்து கட்டிலில் விழுந்தாள்.

முத்தமிட்ட கணங்களை நினைக்கையில் சந்தோசமாக இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது. இரண்டு உணர்வுகளையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியபடி கட்டிலில் புரண்டாள். போனுக்கு மீண்டும் ஒரு செய்தி வந்தது. அவனேதான் அனுப்பி இருந்தான் "என்ன செய்ற.?" என்று.

"செவ்வாய் கிரகத்தை பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.." என்று பதில் அனுப்பினாள் இவள்.

"நல்லது.. ஆராய்ச்சியை அப்புறம் பார்ப்ப.. இப்ப என்னோடு பேசுறியா.?" என்று கேட்டு அனுப்பினான் அவன்.

"என்ன பேசணும்.?" என்றவளுக்கு பதிலென "அந்த கிஸ் பத்தி.." என்றான்.

"அதை பத்தி என்ன.?" அவளுக்கு திடீரென முகம் சிவந்து போனது.

"யார் முத்தம் தருவாங்கன்னு தெரியுமா.?" என கேட்டு அனுப்பினான்.

அபிநயா பதிலை அனுப்ப தயங்கினாள். "லவ்வர்ஸ்.." என்று அவனே பதிலும் அனுப்பினான். அபிநயாவிற்கு மூச்சு நிற்பது போல இருந்தது. போனை கட்டிலின் மீது கவிழ்த்து வைத்துவிட்டு இரு கைகளையும் முகத்தை மூடிக் கொண்டாள். "அன்புவுக்கு என் மேல லவ்.." என்றாள்.

அன்பு அதன் பிறகு செய்தி அனுப்பவில்லை.

அனுப்பிய செய்திக்கு ஏன் இன்னும் பதில் வரவில்லை என்று குழப்பத்தோடு கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். 'மறுபடியும் ஏதாவது அனுப்பி பார்க்கலாம்..' என அவன் நினைத்த நேரத்தில் அறைக்குள் வந்தான் குணா.

"அன்பு.. போன்ல என்னத்தை பார்த்துட்டு இருக்க.?" என கேட்டான்.

"சும்மாதான் என்றவன்.." போனை மேஜையின் மீது கவிழ்த்து வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"குட்டச்சியை ரொம்ப லவ் பண்றியா.? எப்ப பார்த்தாலும் அவளையே பார்த்துட்டு இருக்க.? சான்ஸ் கிடைச்சா அவ மேல பாஞ்சிடுவ போலிருக்கு.." என்றான் குணா.

"அப்படியெல்லாம் பாய மாட்டேன்.." என்றவனுக்கு வகுப்பறையில் தந்த முத்தம் நினைவிற்கு வந்தது. ஏற்கனவே பாஞ்சிட்டமோ என்ற எண்ணமும் வந்தது.

"சரி விடு.. வாலிப வயசுல இப்படித்தான் அவளை பார்க்கறதே பெரிய அதிசயமா தோணும்.. நாம காதலிக்கற பொண்ணை பிரபஞ்ச பேரழகி போல நம்ம மனசு மாத்தி காட்டும்.. நாமளும் நேரம் காலம் போறது தெரியாம அவங்களையே பார்த்துட்டு இருப்போம்.." என்று நண்பனுக்கு ஆறுதல் சொன்னான் குணா.

அன்பு அனைத்திற்கும் சரியென தலையசைத்தான். ஜன்னலை ஏக்கமாய் பார்த்தான்.

மீனா விடுதிக்கு வந்ததும் அபிநயாவும் அவளும் வழக்கம் போல நிறைய விசயங்களை பேசினர். அப்போதும் அன்பு தனக்கு முத்தம் தந்ததை பற்றி அபிநயா தோழியிடம் சொல்லவில்லை.

மறுநாள் கல்லூரிக்கு வந்தவளை நேற்றைய அதே பார்வை பார்த்தான் அன்பு. அவளுக்கு எங்கேயாவது சென்று ஒளிந்துக் கொள்ளலாமா என்று தோன்றியது.

"நம்ம கிளாஸ்ல லவ் பண்ற கப்புள்ல்ஸ் நிறைய பேர் இருக்காங்கடா.." என்று கடைசி இருக்கை மாணவன் ஒருவன் கிண்டலாக சொல்லியபடியே அன்புவை கடந்துச் சென்றான். அவன் தங்களைதான் சொல்கிறான் என்று அபிநயாவிற்கும் புரிந்தது. கோபம் வந்தது. அதே சமயம் நாணமும் அதிகம் வந்தது. நால்வருக்கு தெரிந்த விசயம் மொத்த பேருக்கும் தெரிந்தால் எவ்வளவு கிண்டலடிப்பார்களோ என்று இப்போதே பயந்தாள்.

மதிய உணவிற்கு விடுதிக்கு சென்றுவிட்டு திரும்பி வருகையில் குணாவும் மீனாவும் முன்னால் நடக்கையில் அன்புவும் அபிநயாவும் பின்னால் நடந்தனர். அபிநயாவின் கையை பற்றினான் அன்பு. அவள் தன் கையை உருவிக்கொள்ள முயற்சித்தாள். சுற்றி இருப்பவர்கள் யாராவது தன்னை பார்த்துவிடுவார்களோ என்று பயந்தாள். ஆனால் அன்பு அவளின் கையை விடவேயில்லை. அவனோடு கைக்கோர்த்து இருப்பது அவளுக்கும் பிடித்திருந்தது. அதனால் ஒரு குருட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். முன்னால் நடந்துச் செல்லும் மீனா திரும்பி பார்த்து இந்த கைகளின் இணைப்பை பற்றி கேட்டால் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றும் பயந்தாள். அதே வேளையில் கைக்கோர்த்து செல்லும் நொடிகள் கல்லூரி வாசலோடு முடிந்துவிடுமே என்றும் பயந்தாள்.

"நானும் இவளும் லவ் பண்றோம்.." அன்பு சொன்னது கேட்டு முன்னால் நடந்துக் கொண்டிருந்த இருவரும் திரும்பி பார்த்தனர். அவனை அதிர்ச்சியோடு பார்த்த அபிநயா அவனை விட்டு விலகி நின்றாள். ஆனால் அவன் சட்டென்று அவளின் தோளில் கைப்போட்டு அவளை தன் அருகில் நிறுத்தினான்.

குணா நண்பனை ஆச்சரியத்தோடு பார்த்தான். இரண்டே நாளில் நண்பன் தன் காதலில் வெற்றிக் கொண்டு விட்டானே என்று பெருமைப்பட்டான்.

மீனா தோழியை அதிர்ச்சியோடு பார்த்தாள். பிடிக்கல பிடிக்கல என்று சொல்லிக் கொண்டிருந்தவள் எப்படி இவ்வளவு விரைவில் காதலில் விழுந்தாள் என்று வியந்தாள் அவள்.

"எப்ப இருந்து லவ் பண்றிங்க.?" என்றாள் அன்புவிடம்.

"நேத்திருந்து.." என்ற அன்புவின் கரம் தன் காதலியின் இடையை இறுக்கமாக பற்றியது‌.

"நான் உன்கிட்ட சொல்லலாம்ன்னுதான் இருந்தேன் மீனு.." என்று தயங்கினாள் அபிநயா.

"பரவால்லப்பா.. நாம என்ன பத்து இருபது வருச பிரெண்ட்ஸா.?" என்று அவள் வேறு நேரம் காலம் பார்க்காமல் பழி வாங்கினாள்.

"நெஜமாப்பா.." என்றவளிடம் பொய் முறைப்பை காட்டியவள் "லவ்வர்ஸை டிஸ்டர்ப் பண்ண பாவம் எங்களுக்கு வந்து சேர வேணாம்.. நாங்க முன்னாடி போறோம்.. நீங்க பின்னாடி வாங்க‌‌.." என்றுவிட்டு குணாவின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அபிநயா அன்புவை தன்னிடமிருந்து தள்ளினாள். "உன்னை யாரு அதுக்குள்ள சொல்ல சொன்னது.?" என்றாள் அவனிடம் கோபமாக.

"ஏன் சொல்லக் கூடாது.. நாம லவ்வர்ஸ்.. கள்ளக்காதலா செய்றோம் மறைக்கிறது.?" என்று கேட்டான் அவன்.

"என் அப்பா நம்பர் தரேன்.. அவருக்கும் போன் பண்ணி விசயத்தை சொல்லு.." என்றாள். அன்பு அவளை முறைத்தான். "நான் சொல்ல மாட்டேன்னே நினைக்கிறியா.?" என்றான். உண்மையில் இப்போது அவள் அதிகம் பயந்து போனாள்‌. எதற்கும் துணிந்தவன் இவன்.. தன்னை விட பத்து மடங்கு பிடிவாதக்காரன் இவன் என்ற விசயம் நினைவிற்கு வந்ததும் ஓரடி பின் தள்ளி நின்றாள்.

"முந்திரிக்கொட்டை தனமா எதையாவது செஞ்சி வைக்காத.. எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை கொன்னு போட்டுடுவாரு.." என்றவள் அவனை விட்டுவிட்டு முன்னால் நடந்தாள். அன்பு பின்னால் ஓடிவந்து அவளை நிறுத்தினான். "ஓகே.. உனக்கு எப்ப சம்மதமோ அப்பவே எல்லார்க்கிட்டயும் சொல்லலாம்.. கோபப்படாதே.." என்றான் கொஞ்சலாக.

"மீனாக்கிட்ட மெதுவா சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா உன்னால அவளுக்கு இப்ப தெரிஞ்சி போச்சி.. அவ என்னை ஓட்டப்போறா.." என்று சிணுங்கியவளுக்கு தன் சிணுங்கல் மிகவும் புதியது என்று புரிய சில நொடிகள் ஆனது.

அன்பு அவளை அதிசயமென பார்த்தான். அவளின் சிணுங்கல் குரல் தன் இதயத்திற்து மயிற்பீலி வருடலை தரும் என்று அவன் நினைக்கவேயில்லை. அவனின் கண்களை பார்க்கும்போது தன்னை இப்போதே எங்காவது கடத்தி சென்று விடுவானோ என்று அவளுக்கு சந்தேகமாக இருந்தது. அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க நாணப்பட்டவள் தலைகுனிந்தாள்.

"கிளாஸ்க்கு டைம் ஆச்சி.." என்றாள் சிறுகுரலில்.

அன்பு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். மரங்கள் அடர்ந்து இருந்த அந்த பாதையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாவிட்டாலும் கூட நடந்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு பேர் இவர்களை விசித்திரமாக பார்த்துவிட்டு கடந்தனர்.

"என்ன பண்ற அன்பு.?" என்றவளின் உச்சந்தலையில் தன் தாடையை பதித்தவன் "பத்தே செகண்ட்.. ப்ளீஸ்.." என்றான்.

அவனின் இதயத்தின் மீது செவிகளை வைத்திருந்தவளுக்கு அவனின் இதயம் துடித்ததை போலவே திக்திக் என்றிருந்தது. நடந்துச் செல்லும் பாதசாரிகள் யாராவது தன் தந்தையின் நண்பர்களாய் இருப்பார்களோ.. இல்லை கல்லூரியில் பணியாற்றுபவர்களாக இருப்பார்களோ என்று எண்ணி எண்ணி பயந்தாள்.

அவனின் சட்டையிலிருந்து வந்த வாசம் அவளை அப்படியே நிற்க சொல்லி சொன்னது. அவனின் அணைப்பில் இருந்த ஏக்கம் அவளுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் இணைந்து அணைக்கலாம் என்று அவள் நினைத்த நேரத்தில் விலகி நின்றான் அன்பு.

"கிளாஸ்க்கு போகலாம்.." என்றான். அபிநயாவிற்கு தோற்று போனது போல உணர்வு ஏற்பட்டது. அவன் பற்றிய கையை பார்த்துக்கொண்டே அவனோடு நடந்தாள்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு குட்ட.." என்றான். அபிநாவிற்கு மிதப்பது போல இருந்தது.

"உனக்கு என்னை பிடிச்சிருக்கா.?" என்றான் திடீரென நின்று அவளை பார்த்தபடி.

அபிநயா அவனின் முகம் பார்த்தாள். அவளின் பதிலுக்காய் காத்து கிடந்தன அவன் விழிகள். என்ன பதில் தருவாளோ என்று பயந்திருந்த முகம் அது.

"பி.. பிடிச்சிருக்கு.." என்றாள்.

அன்பு புன்னகை பூத்தான்‌. அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தான். இருவரும் ஜோடியாய் வருவதை கண்டு வயிறு பற்றியெறிவது போல இருந்தது விகாஷிற்கு. ஆரம்பத்தில் நண்பர்களோடு கட்டிய பெட்டில் ஜெயிக்க அவள் மீது சென்று மோதியவன் அதே காரணத்தை வைத்து அன்புவிடம் அடியும் வாங்கினான். அந்த அடிக்கு திருப்பி பழி வாங்க நினைத்து அபிநயாவின் புகைப்படத்தை அலங்கோலமாய் சித்தரிக்க முயற்சித்தான். ஆனால் அவன் முயலும் முன்பே அன்பு வந்து அதற்கும் பலத்த அடிகளை தந்துவிட்டான். அது அவனுக்கு இன்னும் அதிக கோபத்தை தந்துவிட்டது. இம்முறையும் பழி வாங்கதான் நினைத்தான் அவன். இயல்பிலேயே கெட்டவனாய் இருந்தவனுக்கு தன்னை அடித்த அன்பு சிரித்த முகமாக இருப்பது துளியும் பிடிக்கவில்லை.

அன்புவும் அபிநயாவும் இணைந்த கரங்களோடே வகுப்பறைக்குள்ளும் நுழைந்தனர். "வாவ்.." என்றாள் சுவேதா. அபிநயா தன் இருக்கை வந்ததும் மனமின்றி தன் கையை விலக்கிக் கொண்டாள். அன்பு சிரிப்போடு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.

"உனக்கும் அவனுக்கும் நடுவுல என்ன நடக்குது.?" என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் சுவேதா.

"லவ் பண்றாங்களாம்.." என்று அவளிடம் கேலியாய் சொன்னாள் மீனா. அபிநயாவின் முகம் வருத்ததில் மூழ்கியது. "சும்மா.. கேலியா பேசிட கூடாதே.. உடனே பீல் பண்ணிடுவியே.." என்று கிண்டலடித்த மீனா அவளை அணைத்துக் கொண்டாள்.

"ஐ யம் ஹேப்பி பார் யூ.." என்றாள்.

"அவன் உனக்கு லெட்டர் எழுதிக் கொடுத்தான்னா உடனே என்கிட்ட காட்டுற.. நான் படிச்சிட்டுதான் உனக்கு தருவேன்.‌." என்றாள் சுவேதா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN