சிக்கிமுக்கி 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு நேர சில்வண்டுகள் தங்களின் சிறு சத்தங்களால் இசை பாட ஆரம்பித்த நேரத்தில் அன்புவின் போனுக்கு செய்தி ஒன்று வந்தது.

"என் பிரெண்ட்ஸ் எனக்கு நீ லவ் லெட்டர் எழுதி தரணும்ன்னு சொல்லுறாங்க.. அவங்க படிக்கறதுக்குதானாம்.." என்று அபிநயாதான் அனுப்பி இருந்தாள்.

"லவ் லெட்டரா.? அதெல்லாம் எனக்கு எழுத தெரியாதே.." என்று கட்டிலில் படுத்தபடி புலம்பிய நண்பனை திரும்பி பார்த்தான் குணா.

"தூங்க போற நேரத்துல என்னடா உளறிட்டு இருக்க.?" என்று கேட்டான் அவனிடம்.

"அபி லவ் லெட்டர் கேட்கறா.. ஆனா எனக்கு எப்படி எழுதுறதுன்னு தெரியலையே.." என்று கவலையோடு சொன்னான் அன்பு.

குணா தன் கட்டிலை விட்டு கீழே இறங்கி வந்தான். அன்புவின் நோட்டையும் பேனா ஒன்றையும் கொண்டு வந்து அவனிடம் தந்தான். "அவளை பார்க்கும்போது உனக்கு என்ன தோணுதோ அதை இதுல எழுது.. அவளை பார்க்கணும்ன்னு நினைக்கும்போதெல்லாம் உனக்குள்ள என்ன ஆகுதுன்னு எழுது. அவ்வளவுதான் லவ் லெட்டர் ரெடி.. மறக்காம எனக்கும் காட்டு.. நல்ல வரியா இருந்தா நானும் சுட்டுக்கறேன்.." என்ற குணா தன் கட்டிலுக்கு சென்று படுத்தான்.

அன்பு கட்டிலின் ஓரத்தில் இருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். 'லவ் பண்ண ஆரம்பிச்சதும் கஷ்டமான டாஸ்கா தராங்களே..' என்று மனதுக்குள் புலம்பியவன் "அன்புள்ள.." என்று ஆரம்பித்தான். நிறைய யோசித்தான். குறைவாக எழுதினான்.

இரவு மணி பன்னிரெண்டுக்கு குணா விழித்துப் பார்த்தபோது கூட எழுதிக் கொண்டுதான் அமர்ந்திருந்தான் அவன். 'ஒரே ராத்திரியில் வைரமுத்துவையே மிஞ்ச போறான் போலிருக்கு..' என்று நினைத்தபடி புரண்டு படுத்தான் குணா.

மறுநாள் பொழுது விடிந்து குணா எழுந்தபோது அன்பு குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கையருகே இருந்த நோட்டை கையில் எடுத்தான் குணா. புரட்டி பார்த்தான். ஒரு பக்கத்தில் அன்புள்ள என்று ஆரம்பித்த வார்த்தைகள் அந்த பக்கம் முழுக்க நிரம்பி இருந்தது. அவன் எழுதியதை படித்த குணா இவன்தான் உண்மையில் இதை எழுதினானா என்று சந்தேகித்தான். ஆனால் அவன் கையெழுத்தும் விடிய விடிய அமர்ந்து எழுதியுள்ளான் என்ற சாட்சியும் அவனை நம்ப வைத்தன. அவன் தூங்கி எழுந்ததும் 'செமடா நண்பா' என்று பாரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அபிநயா உற்சாகத்தோடு தயாராகினாள். அன்புவின் கண்களுக்கு தான் அழகாய் தெரிய வேண்டும் என்ற நினைப்பில் கவனமெடுத்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

அவளும் மீனாவும் விடுதியை விட்டு வெளியே வந்தபோது விடுதியின் முன்னால் இருந்த சாலையின் மறுபக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தார்கள் அன்புவும் குணாவும். தினம் பொழுதுகளில் அன்புவின் துணையோடு கல்லூரி சென்று திரும்பி வர அவளுக்கு பிடித்திருந்தது. இந்த நாட்கள் இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனை நெருங்கினாள்.

"ஹாய்.." என்று வலது கையின் நான்கு விரல்களை அசைத்தாள்.

"அதுதான் டெய்லியும் இரண்டு பேரும் பார்த்துக்கறிங்க இல்ல.? அப்புறம் எதுக்கு இந்த ஹாய்..?" என்று பொய்யாய் எரிச்சலடைந்தான் குணா.,

"என்னடி ரிவீட்டா.? மிதிச்சிடுவேன் பார்த்துக்க.." என்று குணாவை எச்சரித்த அன்பு தன் பேக்கை திறந்து நான்காய் மடித்த பேப்பர் ஒன்றை எடுத்து அபிநயாவிடம் நீட்டினான்.

"நீ கேட்ட லெட்டர்.." என்றான் வெட்க குரலில்.

"வாவ்.." என்ற மீனா அபிநயா கடிதத்தை வாங்கும் முன் தானே வாங்கிக் கொண்டாள்.

"பிரெண்ட்ஸ் படிக்கணும்ன்னு லெட்டர் கேட்ட ஒரே ஆள் அவதான். அதையும் உட்கார்ந்து எழுதிய ஒருத்தணும் நீதான்.." என்று கிண்டலடித்தான் குணா. அபிநயா அவனை பார்த்து உதட்டை கோணித்து பழிப்புக் காட்டினாள்.

"சும்மாவே பேய் மாதிரிதான் இருக்க.. இதுல பழிப்பு வேறயா.?" என்று அதற்கும் கிண்டலடித்தான் குணா.

அபிநயா கையை ஓங்கிக்கொண்டு அவனை அடிக்க சென்றாள். ஆனால் அன்பு அவளின் கையை பற்றி நிறுத்தினான். அவளின் கையை பற்றி அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி நடந்தான்.

கையில் இருந்த கடிதத்திலேயே பார்வையை பதிந்திருந்த மீனாவின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சாலையோரம் நடந்தான் குணா.

"அன்பு இந்த அளவுக்கு எழுதுவான்னு நான் நினைக்கவேயில்ல.." என்றாள் பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே.

"நானும்தான் நம்பல.. ஆனா அவன்தான் எழுதியிருக்கான்.." கர்வத்தோடு பதில் சொன்னான் குணா.

"இன்னைக்கு மாதிரியே தினம் எனக்கு வழித்துணையா வருவியா.?" அன்புவை அண்ணாந்துப் பார்த்துக் கேட்டாள் அபிநயா.

அவளின் தோளில் கையை போட்டு அணைத்துக் கொண்டே நடந்தவன் "தினமும்.. வாரமெல்லாம்... வருசமெல்லாம்.. வாழ்க்கையெல்லாம்.. ஜென்மமெல்லாம்.. உன்னோட துணையா நானிருப்பேன். அணைச்சா உன் மறுபாதியா உன்னோடு வருவேன்.. வெறுத்தாலும் உன் நிழலாவே வருவேன்.." என்றான்.

அபிநயா அவனின் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள். அன்ன நடை நடந்துக் கொண்டிருந்தவர்களுக்கு கால் கிலோ மீட்டரில் இருக்கும் கல்லூரி ஐந்தாறு கிலோ மீட்டருக்கும் அந்த பக்கம் சென்றுவிட கூடாதா என்று ஏக்கமாக இருந்தது.

"இப்ப பார்த்து எங்க அப்பா எதிர்ல வந்தா எப்படி இருக்கும்.?" என்று சிரிப்போடு கேட்டாள் அபிநயா.

"உன்னை என் முதுகு பின்னாடி ஒளிச்சி வச்சிப்பேன்.. 'நான் உங்க பொண்ணை ரொம்ப லவ் பண்றேன்.. நீங்க சம்மதம் தரலன்னா அவளை தூக்கிட்டு போய் கட்டிப்பேன்'னு வீரவசனம் பேசுவேன்.. அவர் கோபத்துல அடிச்சா வாங்கிப்பேன்.. உன்னை அவர் அடிக்க வந்தா அதையும் குறுக்க புகுந்து வாங்கிப்பேன்.." என்றான்.

அபிநயாவிற்கு சிரிப்பாக வந்தது. கோணக்காலன் தன் தந்தையிடம் அடி வாங்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யாமலிருக்க முடியவில்லை அவளால். 'அம்மா.. அப்பா.. என்னை விட்டுடுங்க..' என்று கதறுவதை நினைத்து பார்த்தவளுக்கு குலுங்கி சிரிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அருகில் அவன் இருக்கிறானே என்று அமைதியாகிக் கொண்டாள்.

கல்லூரியின் முகப்பிற்கு வந்ததும் அவனிடமிருந்து விலகி நின்றாள் அபிநயா. "ஏன்.?" என்றான் அவன்.

"பசங்க பார்த்தா கிண்டல் பண்ணி சிரிப்பாங்க.." என்றவளை தன்னருகே இழுத்துக் கொண்டான். "ஒரே காரணத்தை ஓயாம சொல்லாத.." என்றவன் அவளின் தோளில் கையை போட்டபடியே கல்லூரியினுள் நுழைந்தான். 'நல்லவேளை செக்யூரிட்டியை காணம்.. இல்லன்னா இவனையும் என்னையும் லத்தியிலயே சாத்தியிருப்பாரு..' என்று எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டாள் அபிநயா.

"அபி இந்தா உன் லெட்டர்.." என்று கடிதத்தை நீட்டினாள் மீனா. "செம லெட்டர்.. சுவேதாவுக்கும் மறக்காம கொடு.. அவதான் படிக்கணும்ன்னே காத்துட்டு இருந்தா.." என்றாள். அபிநயா புன்னகையோடு கடிதத்தை வாங்கி தன் பையில் வைத்துக் கொண்டாள். "அப்புறமா படிக்கிறேன்.." என்றாள் அன்புவிடம். அன்பு சரியென தலையசைத்து புன்னகைத்தான்.

தங்களது வகுப்பறைக்குள் அவர்கள் நுழைய இருந்த நேரத்தில் "அன்பு.." என்றபடி அங்கே வந்தார் செக்யூரிட்டி.

"என்னங்கண்ணா.." என்றவனை மூச்சிரைக்க பார்த்தவர் "பிரின்சிபால் கூப்பிடுறாரு.. சீக்கிரம் வா.." என்றார்.

குணாவையும் அபிநயாவையும் திரும்பி பார்த்தான் அன்பு. அவர்களும் இவனை போலவே விசயம் புரியாமல் செக்யூரிட்டியை பார்த்தனர்.

"என்னன்னு போய் பார்த்துட்டு வந்துடலாம்.." என்றபடி முன்னால் நடந்தாள் அபிநயா.

"அன்புவை மட்டுதான் வர சொன்னாங்க.." என்றார் செக்யூரிட்டி.

"அட நம்ம காலேஜ்ல நமக்கு இல்லாத உரிமையா.?" என்றவள் அவரை தாண்டிக் கொண்டு நடந்தாள்.

அன்பு பிரின்சிபால் அறைக்கு வந்தபோது ஐந்தாறு பேராசிரியைகள் அங்கே இருந்தனர்.

"குட் மார்னிங் சார்.." என்ற அன்புவை அங்கிருந்த அனைவருமே முறைத்தனர்.

"அன்பு என்ன இது.?" என்று தன்னிடமிருந்த போனை அவன் முன் காட்டினார் பிரின்சிபால். அவனின் புகைப்படம்தான். இடுப்பின் கீழிருந்த ஒற்றை உள்ளாடையை தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. 'நான் ஹேண்ட்ஸமா இருக்கேன்னா.?' என கேட்டு கேள்வி ஒன்றும் அதன் மேல் இருந்தது. அடுத்ததாய் ஆபாசமான கேள்விகள் கொண்ட செய்திகள் வரிசையாக இருந்தன. அந்த புகைப்படத்தை அவன் ஏற்கனவே பார்த்திருக்கிறான். அது அபிநயா எடுத்த புகைப்படம்தான்.

"இந்த காலேஜ்ல இருந்த மொத்த லேடிஸ் ஸ்டாப்ஸ்க்கும் வந்திருக்கு இந்த போட்டோ.. உன்னை நான் ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேன். ஆனா இப்படி பண்ணுவன்னு நினைக்கவேயில்லை.." என்று திட்டினார் அவர்.

அன்புவிற்கு முகம் சிவந்துபோனது. "அன்னைக்கு நீ உனக்கும் மானம் இருக்குதுன்னு சொன்னப்போது சந்தோசப்பட்டேன் நான். ஆனா நீ ரொம்ப மோசமா இருக்க.." என்றவரின் முகத்தில் இருந்த அருவெறுப்பு கண்டு அன்புவிற்கு அவமானமாக இருந்தது.

"சார் யாராவது தன் மேல தப்பு வரும்ன்னு தெரிஞ்சே தன் போட்டோவை அனுப்புவாங்களா.?" என்று நண்பனுக்காய் வாதாட வந்தான் குணா.

"இந்த போட்டோவை அனுப்பியதும் விகேஷ்ன்னு கதை சொல்ல போறிங்களா நீங்க.? இட்ஸ் நாட் மார்பிங்.. இவனோட அனுமதி இல்லாம இந்த போட்டோவை எடுத்திருக்க முடியாது.." என்று எரிந்து விழுந்தார் பிரின்சிபால்.

குணா மீண்டும் பேச ஆரம்பித்தபோது அவனை கைக்காட்டி நிறுத்திய அன்பு பிரின்சிபாலின் முன்னால் வந்து நின்றார். "இந்த போட்டோ எந்த நம்பர்ல இருந்து சென்ட் ஆச்சின்னு பார்க்கலாமா.?" என கேட்டான்.

பிரின்சிபால் போனை தந்தார். கைபேசி எண் புதிதாய் இருந்தது. அந்த எண்ணுக்கு அழைத்தான். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. போனை பிரின்சிபாலிடமே நீட்டினான்.

"சாரி சார்.. இது என் போன் நம்பர் கிடையாது. நீங்க வெரிபை பண்ணிக்கலாம். இது நான் கவனிக்காத நேரத்துல மறைஞ்சிருந்து எடுத்த போட்டோ.. நல்லா பார்த்தா உங்களுக்கே புரியும். அதையும் மீறி நான் உங்க பார்வைக்கு காம நாயகனாவோ, அதுவும் அம்மா வயசுல இருக்கும் லெக்சரர்ஸ்கிட்ட செக்ஸ் டாக் பேசுறவன்னு தெரிஞ்சா உங்க முடிவு என்னவோ அதையே செய்யுங்க.." என்றான்.

"இந்த பையன் மேல தப்பு இருக்காதுன்னுதான் நினைக்கிறேன்.." என்றார் மூத்த பேராசிரியை ஒருத்தர்.

"மிஸஸ் செங்கமலம்.. நீங்க நினைக்கிற மாதிரி இது சாதாரண விசயம் கிடையாது, இந்த நியூஸ் மட்டும் நம்ம கேம்பஸ்க்கு வெளிய போச்சின்னா அப்புறம் என்ன ஆகும்ன்னு யோசிச்சு பாருங்க. இந்த காலேஜோட ஸ்டூடண்ட் கெட்டவன்னு சொல்ல மாட்டாங்க.. மொத்த காலேஜூமே வல்கரானது பேசுவாங்க.. இந்த காலேஜோட பேர் இம்மியளவு கெட்டுப்போறதை கூட நான் விரும்பல.." என்றார் அவர் கண்டிப்போடு.

"அப்படின்னா உங்க காலேஜோட பேர் மட்டும்தான் உங்களுக்கு முக்கியமா சார்.? உங்க ஸ்டூடன்ட் ஒருத்தனைதான் தப்பா காட்ட யாரோ டிரை பண்ணி இருக்காங்க.. நீங்க ஸ்டூடன்டை காப்பாத்த டிரை பண்ணாம காலேஜ் மேல அவப்பெயர் வரக்கூடாதுன்னு பார்க்கறிங்க.. ஒரு பையனுக்கே இந்த நிலமைன்னா எங்களை மாதிரி பெண்பிள்ளைகளுக்கு இந்த காலேஜ்ல என்ன பாதுகாப்பு கிடைக்கும்.?" கோபத்தோடு கேட்டாள் அபிநயா.

"சட்டம் பேசுறிங்களா.? காலேஜ் கேம்பஸ்குள்ள இருக்கற பிரச்சனைகளையே தீர்க்க முடியாம போராடுறோம் நாங்க.. ஆனா இது இவனோட பர்சனல் ஸ்பேஸ்ல எடுத்த போட்டோ.. இதுக்கு எப்படி நாங்க பொறுப்பாக முடியும்.?" என்று அவரும் பதிலுக்கு கேட்டார்.

"நாங்க சைபர் க்ரைம்ல கேஸ் கொடுத்து கண்டுப்பிடிச்சிக்கறோம்.. நீங்க பீல் பண்ணாதிங்க.." என்றாள் மீனா.

பிரின்சிபால் யோசித்தார். இதற்கும் மேல் ஏதாவது பேசினால் மாணவர்கள் கூட்டத்தை கூட்டி போராட்டம் நடத்திவிடுவார்களோ என்று நினைத்து தயங்கினார். கேஸ் என்று சென்றாலே கல்லூரியின் பெயரும் உள்ளே இழுக்கப்படும் என்று பயந்தார்.

"நல்லா படிக்கற பையன் நீ.. உன் மேல இருக்கற அக்கறையினால்தான் உன்னை நேரா கூப்பிட்டு விசாரிக்கறேன் நான்.. இந்த விசயம் காலேஜ் நிர்வாகத்துக்கிட்ட போனா வீணா பிரச்சனைதான் வரும். அதனால இதுவே உனக்கு லாஸ்ட் அட்வைஸ்.. இனி உன் பேர் இப்படி கெட்டுப்போகாம பார்த்துக்க.." என்ற பிரின்சிபால் பேராசிரியைகளை பார்த்தார்.

"அந்த போட்டோ மெஸேஜையெல்லாம் அழிச்சிடுங்க.. இனி இப்படி நடக்காது.." என்றார். மாணவர்கள் புறம் திரும்பியவர் "கிளாஸ்க்கு டைம் ஆச்சி .. கிளம்புங்க.." என்றார்.

"நீங்க என்னை நம்புலன்னு எனக்கே நல்லா தெரியுது சார்.. காலேஜ் கரஸ்க்கு தெரிஞ்சா உங்களுக்கு பிரச்சனைங்கறதால இதை அப்படியே கட் பண்ணி விட பார்க்கறிங்க நீங்க.. ஆனா நான் இதை விடப்போறது இல்ல சார்.. இதுக்கு பொறுப்பானவங்களை தேடிப் பிடிச்சி கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்தி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நிருபிக்கிறேன்.." என்ற அன்பு நண்பர்களோடு சேர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்றான்.

பிரின்சிபால் அறையை விட்டு வெளியே வந்ததும் அபிநயாவை பார்த்து முறைத்த அன்பு "இந்த போட்டோ வெளியே லீக் ஆனதுக்கு நீயும் ஒரு காரணம்.. நீ அந்த போட்டோவை எடுக்காம இருந்திருந்தாலோ இல்ல உன் போனை நீ அசால்டா வைக்காம இருந்திருந்தாலோ இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN