முகவரி 27

P Bargavi

New member
அவனைக் காண முடியாத கோபத்திலும், தவிப்பிலும் அவசரமாக அழைப்பு மணியை பலமுறை அலற விட்டவள்... அவன் வந்து கதவைத் திறந்ததும், “ஹேய்! மிரு… என்ன ஆச்சு உங்களுக்கு?” இவள் பதற

“என்ன என்ன ஆச்சு?” அவள் கேள்வியையே இவன் திரும்ப படிக்க

“கையிலே கட்டு ப்பா...”

“ஆமாம்... ப்பா... கையில் கட்டு ப்பா...” அவன் விளையாட

“டேய் திருடா... கையில் கட்டு எப்படி வந்துச்சு? சொல்லு டா...” இவள் உரிமையில் வார்த்தையை விட

அவள் வார்த்தை கொடுத்த சந்தோஷத்தில் முகம் கனிய, அவனோ அவளையே காண... அப்போது தான் தான் சொன்ன வார்த்தையின் அர்த்ததை உணர்ந்தவள்... நாக்கைக் கடித்துக் கண்ணைச் சுருக்கி, “சாரி ப்பா...” என்று இவள் தலை குனிய

“பைக்கில் போகும்போது குறுக்கே நாய் வந்துடுச்சு. அதிலே கீழே விழுந்து... கையில் லைட்டா ஃபிராக்சர். அதனால் இந்த கட்டு...” அவன் பேச்சை மாற்ற

“ஐயோ! பாவம்...”

“எது நாயா?”

“பார்ரா! இது அரிது பழைய ஜோக். சரி… இதை ஏன் என் கிட்ட நீங்க சொல்லல?” இவள் தலையை சிலுப்பிக் கொண்டு சண்டைக்கு வர

“பார்ரா... மேடம் தலை எல்லாம் சிலுப்புறாங்க! ஆமாம்… என்னை எந்த உரிமையில் சொல்லச் சொல்ற?” இவன் பதில் கேள்வி கேட்க

‘ஆமாம்... எங்களுக்குள் என்ன உரிமை இருக்கு?’ அவனின் கேள்வியில் சற்றே தடுமாறியவள்... பின், “அன்னைக்கு... மழையில் நனைந்து எனக்கு ஜூரம் வந்தப்போ.. நீங்க எந்த உரிமையில் என்னை பார்த்துக்கிட்டிங்களோ... அந்த உரிமை...” இவளும் சளைக்காமல் பதில் தர

அதில் அவளை மெச்சுதலாய் நோக்கியவன்... “அது… நான் ஃபிரெண்டு என்ற முறையில் தான் உனக்கு செய்தேன்...” இவன் விடாக்கண்டனாய் பதில் தர

“நீயெல்லாம்... கையில் அடி வாங்கியிருக்க கூடாது... வாயில் அடி வாங்கி இருக்கணும் நீ...” இவள் முணுமுணுக்க

“ஹா...ஹா... ஹா...” வாய் விட்டே சிரித்தான் மிருடன்.

இத்தனை நாள் பழக்கத்தில்... இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரின் மனமும் ஏனோ இருவருக்கும் தெரிந்து தான் இருந்தது. அதனால் தான் இந்த உரிமை கலந்த பேச்சுகள் இருவரிடமும்.

“உங்களுக்கு அடி பட்டு இருக்கேன்னு நான் ஃபீல் செய்தா... சிரிக்கிறீங்களா...” இவள் முறுக்கிக் கொள்ள… அதற்கும் சிரித்து வைத்தான் மிருடன்.

மிருடன் தங்கியிருப்பது இரண்டு பேர் புழங்கும் அளவான சிறு வீட்டில். கூட இருந்த நண்பன் அலுவல் காரணமாய் குஜராத் சென்று விட... உடைந்த கையுடன் தனிமையில் அல்லல் படுகிறான் இவன். பகலில் ஒரு கம்பெனியில் வேலைக்குப் போகிறவன்... மாலை நேரத்தில் தன் மேற்படிப்புக்காக மாலை நேர கல்லூரிக்கும் செல்கிறான். இது தான் அவனின் தினசரி நிகழ்வு.

அவனுக்கு அப்பா அம்மா கிடையாது... அவன் வளர்ந்தது எல்லாம் அநாதை இல்லத்தில் தான். இவை எல்லாம் அவனைக் காண... இல்லை இல்லை அப்படி சொல்லக் கூடாது. தினமும் அவனுக்கு உதவ வந்த அனுவிடம் அவன் சொல்ல, அவள் தெரிந்து கொண்ட விஷயங்கள். அவனைக் காண வரும் சாக்கில் இருவருக்கும் முன்பை விட காதல் வளர்ந்தது. ஆனால் இருவரும் அதை பரிமாறிக் கொள்ளவில்லை.

அந்த ஆட்டத்திற்கும் ஒரு முடிவு வந்தது... “ஹேய்.. நாளைக்கு உனக்கு பர்த்டே இல்ல... அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே டு யூ...” மிருடன் அனுவை வாழ்த்த

அனுவின் பிறந்த நாள் பிப்ரவரி பதினான்கு அன்று காதலர் தினமும் கூட.

இவள் முகம் வாடி விட “அப்போ… நீங்க நாளைக்கு பார்ட்டிக்கு வரலையா?” இவள் ஏக்கமாய் கேட்க

“நோ... நாளைக்கு காதலர் தினம்! சோ... என் காதலியைப் பார்க்கப் போகிறேன்”

“என்னது காதலியா! அப்போ நானு... அதாவது எனக்கு முன்னுரிமை கொடுக்க மாட்டியா?”

“நீ என் ஃபிரண்ட்… அவ என் காதலி! சோ… அவ தான் முதலில்...” இவன் திட்டவட்டமாய் சொல்லி விட

மனதில் வலியுடன் கண்கள் கலங்க மேற்கொண்டு அவனிடம் விவாதிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகன்றாள் அனு.

அதன் பிறகும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாள் அவள். ‘அப்போ… நான் ஃபிரண்ட் தானா… வேற எதுவும் எங்களுக்குள்ள இல்லையா... நான் இவரை பாதிக்கலையா?’ என்றெல்லாம் எண்ணியது அவள் மனது.

இது எவ்வளவு நேரம் தொடர்ந்ததோ... இரவு பதினொன்று ஐம்பதுக்கு, ‘உன் வீட்டு மாடிக்கு வா’ என்று மிருடனிடமிருந்து அனுவுக்கு குறுஞ்செய்தி வர… கண்டவள் அதைத் தவிர்க்க.. அடுத்த நொடியே அவளை அழைத்தவன்... “இப்போ நீ மேலே வரல.. நான் உன் ரூமுக்கு வந்துவிடுவேன்... எப்படி வசதி?” அவன் மிரட்ட

“எல்லாத்துலையும் பிடிவாதம்.. பெருசா காதலியை பார்க்க போறேனு சொன்னவரு… அவளை போய் அதிகாரம் செய்ய வேண்டியது தானே…” என்ற முணுமுணுப்புடன் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாய் இவள் மேலே செல்ல... அங்கு ஓரிடத்தில் சிறியதாய் இவள் பிறந்த நாளுக்கு வாழ்த்தி அலாங்காரம் செய்திருந்தவன்... இவளைக் கண்டதும் அனுவைத் தன் கைகளில் ஏந்தி வட்டமிட்டவன், “ஹாப்பி பர்த்டே மை டியர் ஷிதா...” என்று வாழ்த்தி நிற்க...

அவளோ அதிர்ச்சியிலும், மயக்கத்திலும் நின்ற நேரம்... தன் கையில் வெள்ளை ரோஜாக்களால் நிறைந்த பூங்கொத்தை ஏந்தியபடி அவள் முன் ஒரு கால் முழந்தாலிட மண்டியிட்டவன், “ஐ லவ் யூ... செல்லம்மா! யூ லவ் மீ?” இவன் உயிரையே உறைய வைக்கும் குரலில் கேட்க

கண்ணில் நீருடன், “யெஸ்... யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஐ லவ் யூ… ஐ லவ் யூ திருடா....” இவளும் அவனுக்கு நிகரான காதலுடன் அவனை அணைத்துக் கொள்ள

தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நகைப்பெட்டியை எடுத்துப் பிரித்தவன்… அதிலிருந்து இதய வடிவிலுள்ள மோதிரத்தை எடுத்து தன்னவள் விரல்களுக்கு அணிவித்து, “உன் பிறந்த நாளுக்கு… மற்றும் இன்றைய காதலர் தினத்துக்கு... இந்த காதலனின் சின்ன காதல் பரிசு! இன்று என்னால் தங்கம் தான் முடிந்தது... கூடிய சீக்கிரம் உனக்கு வைரத்தால் போடணும் செல்லம்மா...” என்றவன் குனிந்து அவள் விரல்களுக்கு முத்தமிட்டவன் தன் நிலை அறிந்து மனவேதனையில் முடிக்க

அவன் முத்தத்தில் கிறங்கிப் போய் இருந்தவள், “ஹேய்... எனக்கு நீங்க எதைக் கொடுத்தாலும் பிடிக்கும்... திருடா.. கொடுப்பது என் திருடனாச்சே… ” என்றவள் “ஆமாம்! அதென்ன செல்லம்மா... என்னை யாரும் அப்படி அழைத்தது இல்ல தெரியுமா?” இவள் பேச்சை மாற்ற

“தெரியும்… இது என் ஷிதாவுக்கான ஸ்பெஷல்..”

“ஹேய்... எனக்கு ஷிதா கூட பிடிச்சிருக்கு. ஆமாம் யாரோ அவங்க காதலியைப் பார்க்கப் போகறதா சொன்னார்...” இவள் அவன் பேச்சை நினைவுபடுத்த

“இப்போ.. என் காதலியைத் தான் பார்த்துட்டு இருக்கேன்...” இவன் காதலாய் பதில் சொல்ல

அதில்… காதலோடு தன்னவனை நோக்கியவள், “அப்போ நிஜமாவே பார்ட்டிக்கு வர மாட்டீங்களா? ஃபிரண்ட்ஸ்… அப்பறம் தாத்தா கிட்ட எல்லாம் உங்களை அறிமுகப் படுத்தலாம்னு இருந்தேன்...”

“வேண்டாம் ஷிதா… அது சரி வராது” இவன் ஒரு மாதிரி குரலில் பிடிவாதமாய் மறுக்க

“சரி.. சரி... ஆமாம், இப்போ எப்படி இந்த வீட்டுக்கு வந்தீங்க?”

“உனக்குப் பிறந்த நாள் பார்ட்டி வைக்க... இங்கே சில அலங்கராங்களும் மற்ற வேலைகளும் செய்ய சில ஆட்கள் கிட்ட பொறுப்பை விட்டுருந்தார் உன் தாத்தா... அதில் நானும் ஒருவனா வந்து... என் செல்லம்மாவுக்காக சிலதைச் செய்ய நினைத்தேன்...”

அவள் ஆச்சரியமாக நோக்க, “இந்த வீட்டில் பின் தோட்டத்தில் ஒரு சின்ன கேட் இருக்கு... அதன் மீது தாவி உள்ளே இப்போ குதித்தேன்... அப்படியே உங்க வீட்டு நாய்களையும் இத்தனை நாளில் எனக்குப் பழக்கம் படுத்தி வைத்திருந்தேன். எப்படி உன் மாமன்?!” அவன் பெருமையாய் காலரைத் தூக்க

“நிச்சயமா... நீங்க திருட்டுப் பயல் தான்! திருடா... திருடா... திருட்டுப் பயலே...” தனக்காக தன் காதலன் செய்த சாகசத்தில் அவள் உருக... காதலாய் தன்னவளை அணைத்துக் கொண்டான் மிருடன்.

அதன் பிறகு இருவரும் சிறகில்லாமல் காதல் வானில் பறந்தார்கள்.

ஒரு நாள் திடீரென மிருடன் அனுவுக்கு அழைத்தவன், “ஷிதா... இரண்டு நாள் நான் ஊரில் இருக்க மாட்டேன். டேக் கேர்... கவனமா இரு...” பதட்டத்துடன் அவன் இரண்டே வரியில் தன் பேச்சை முடித்து விட...

பெண்ணவளுக்குள் குழப்பம் என்றாலும்... அவன் சொன்னபடி தன்னவன் வர காத்திருந்தாள் இவள். ஆனால் திரும்ப வந்தவனோ... நாலு நாள் சென்ற பிறக்கும் தன்னவளைத் தொடர்பு கொள்ளாமல் இருக்க... இவள் அழைப்பையும் அவன் ஏற்காமல் படுத்த... குழம்பிப் போனவள், அவனைக் காண அவன் வீட்டுக்கே வர... மிருடனோ ஒரு வார தாடியுடன் முகமும் உடலும் சோர்ந்து போக படுக்கையில் இருந்தான்.

“மிரு, என்ன ஆச்சு... ஜூரமா?” கோபத்தை எல்லாம் மறந்தவளாக பரிவாய் அவனைத் தொட்டுப் பார்த்துக் கேட்க

“ப்ச்சு... ஏன் இங்கே வந்த? நீ போ...” அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் இவன் முகத்தை திருப்ப

அதிர்ந்தவள், “என்ன ஆச்சு மிரு?”

“இன்னும் எனக்கு எதுவும் ஆகலை. ஏன்… எனக்கு ஏதாவது ஆகணும்னு நினைக்கிறீயா?”
“ஏன் மிரு… இப்படி என் மனசை கஷ்டப் படுத்துற மாதிரி பேசுறீங்க? நீங்க இப்படி இருந்தா நான் என்னன்னு கேட்கக் கூடாதா?”

கட்டிலில் இருந்து எழுந்தவன், “நான் எப்படி இருக்கேன் முதலில் அதைச் சொல்லு...”

“எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க” இவள் சன்ன குரலில் உண்மையை விளக்க...

“ஒஹ்... இப்பவே தெரிஞ்சிடுச்சா! நல்லது... இதுவரைக்கும் இல்லை ஆனா இனி என்கிட்ட இருந்து பறி போகத் தான் போகுது” இவன் ஆணித்தரமாய் பதில் தர

“என்ன போகப் போகுதுன்னு சொல்லுங்க... அதை உங்க கிட்ட இருந்து போக விடாம நான் பார்த்துக்கிறேன்” இவள் வாக்கு தர

“நிஜமா... உன்னால் முடியுமா?” தற்போது பிரித்தறிய முடியாத குரலில் அவன் கேட்க

“சத்தியமா மிரு! சொல்லுங்க...” அனு கெஞ்ச

“அது நீ தான்! அதாவது என் உயிரான நீ தான் என்னை விட்டுப் போக இருக்க...” அவன் கலக்கத்துடன் போட்டு உடைக்க

“வாட்?!” இவள் அதிர

அதிர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து அவளை தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டன், “நான் இப்போ எங்கே போயிட்டு வந்தேன் தெரியுமா? என் நண்பன் ஒருத்தன் தற்கொலைக்கு முயற்சி செய்தான்னு தெரியவரவோ அவனை பார்த்து வர போனேன்... ஆனா நான் போகிறதுக்குள்ளே அவன் இறந்துட்டான்… எல்லாம் முடிஞ்சிடுச்சு…” இவன் குரல் துயரத்தில் ஒலிக்க...

“ஏன் மிரு… அப்போ நானும் செத்துடுவேன்னு நினைக்கிறீங்களா… பயப்படுறீங்களா? அதான் இந்த சினிமாவில் வருமே... காதலிக்கு வியாதின்னு... அது மாதிரி எனக்கு ஏதாவது நோயா... அது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கா?” இவள் வேறு வித கோணத்தில் தன் கவலையில் கேட்க

பின்னே… எங்கேயோ சென்று வந்தவன்... முகச்சவரம் கூட செய்யாமல்.. சோக கீதமாய் நீ என்னை விட்டுப் போய்டுவ.. போய்டுவ.. என்று சொன்னால் அவளும் தான் என்னவென்று சொல்லுவாள்? அவளுக்குத் தெரிந்தவரை யோசித்து அவள் கேட்டாள்.

“சரியான சினிமா பைத்தியம் டி நீ! அங்க ஒருத்தன் செத்துட்டான்னு சொல்றேன்... இங்கே நீ என்ன பேச்சு பேசுற?” இவன் கோபப்பட

“அதில் எனக்கு கஷ்டம் இருக்கு தான்... ஆனா நீங்க பேசினது? நானாவது உங்களுக்குப் புரியற மாதிரி பேசினேன்... அதைக் கேட்டு நீங்க கோபப்படறீங்க. ஆனா நீங்க பேசினது எனக்கு சுத்தமா புரியல… தெரியுமா” இவள் சலித்துக் கொள்ள

“இறந்த என் நண்பன்... ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ண காதலித்திருக்கான்… அந்தப் பொண்ணும் தான். எட்டு வருஷ காதல்! ஆனா திடீர்னு அந்தப் பொண்ணு, என் அப்பா செத்துடுவேன்னு சொல்கிறாரு... அதனால் அவர் பார்த்த மாப்பிளையை கட்டிக்கப் போறேன்னு சொல்லிட்டு ஏழையான இவனை விட்டுட்டு திருமணமும் செய்துகிட்டா. கடைசிவரைக்கும் இவன் இவங்க காதலைச் சொல்லிப் பேசிப் பார்த்திருக்கான்.

ஆனா அந்தப் பொண்ணோ, என் வாழ்க்கையை வாழ விடு... மீறி எனக்கு தொந்தரவு கொடுத்தா... உன்னை போலீஸில் பிடித்துக் கொடுத்துடுவேன்னு சொல்லி இருக்கு. அதிலே மனசு உடைந்தவன்... தன் காதல் ஜெயிக்கலை என்ற விரக்தியில் விஷம் குடிச்சிட்டான்” இவன் வேதனையோடு சொல்லி முடிக்க

“பாவம் தான் அவர்! ஆனா இப்பவும் எனக்குப் புரியலை... இதில் நான் எப்படி?...”

அவள் வாக்கியத்தை முடிக்க விடாமல், “இதிலே என்ன புரியலை ஷிதா உனக்கு? நீ பணக்காரி... நான் ஏழை... உங்க அப்பா மத்திய அமைச்சர். அப்போ நீயும் ஒரு கட்டத்தில் என்னை விட்டுட்டு உன் அப்பா சொல்கிற பையனைத் தானே கல்யாணம் செஞ்சிக்குவ? அதைத் தான் நீ என்னை விட்டுட்டுப் போயிடுவேனு சொல்கிறேன்...” இவள் தன்னவளின் மேல் நம்பிக்கை இல்லாமல் அதை விட தங்கள் காதல் மேல் நம்பிக்கை இல்லாமல் பேச

என் மேல் நம்பிக்கை இல்லையா.. என் காதல் எப்படி பொய் ஆகும்? இப்படி எல்லாம் கோபப்படாமல்.... அதாவது அவன் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாத அனு, “நான் அப்படி எல்லாம் போக மாட்டேன்… இப்ப என்னை நம்புங்க...” இவள் உறுதி அளிக்க

“இல்லை… நீ போய்டுவ தான்... அவனுக்கு நடந்த நிலைதான் எனக்கும் நடக்கப் போகுது...” இவன் அதிலேயே நிலையாக இருக்க

இவள் அவன் கன்னத்தில் நாலு அறை விடாமல்... “என் மிரு செல்லம்.. என் திருடா... உங்க ஷிதா அப்படி எல்லாம் செய்வேனா? நான் என்றைக்கும் உன் செல்லம்மா தான்... நம்புங்க” இவள் அவனைக் கொஞ்ச

“உண்மையா நீ என்னை விட்டுப் போக மாட்டனா அப்போ நான் சொல்கிறதை செய்” இவன் வார்த்தையால் அவளை வளைக்க

“சொல்லுங்க...” தத்தியான பெண்ணவளோ இன்னும் கொஞ்சினாள்.

“வார்த்தை மாற மாட்ட இல்லை?” இவன் ஆழ்ந்த குரலில் கேட்க

“ம்ஹும்...” அனு

“அப்போ நாம் கல்யாணம் செய்துக்கலாம்” அவன் போட்டு உடைக்க

“ஒஹ்... செய்துக்கலாமே!” எப்போதும் போல் தன் அவசர புத்தியால் எதையும் ஆராயாமல், நிதானித்து யோசிக்காமல் இப்படி ஒரு பதிலை பட்டென்று தந்தாள் அனு.

“என்ன சொல்கிற ஷிதா?” இவன் அதிர

“நாம் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்கிறேன்” அனு அழுத்தம் திருத்தமாய் அவன் வார்த்தையையே திரும்ப படிக்க

“நிஜமாவா?”

“ஆமாம்...” கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்… திருமண வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது என்று எண்ணாமல்… ஏதோ அவன் ரோலர் கோஸ்டரில் விளையாட அழைத்தது போல் இவள் குதூகலத்துடன் பதில் அளிக்க

“ஆனா அதில் ஒரு சிக்கல் இருக்கே! நீ மேஜர் இல்லை…. மைனர்! நாம் எப்படி சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?” இவன் கவலைபட

“அது… என் ஃபிரண்ட் ஒருத்தி சொல்லியிருக்கா... ஊர் பக்கம் இருக்கிற கோவிலில் திருமணம் செய்ய கொஞ்சம் காசு கொடுத்தா... திருமணத்தை நடத்தி வைப்பாங்களாம்” தானாய் சிக்குகிறோம் என்று தெரியாமல் இந்த அனு என்ற ஆடு அவனுக்கு வாகாய் தலையை நீட்ட

விடுவானா மிருடன்?… “ஹேய்... அப்படியா? அப்போ அடுத்த மாதமே நான் ஒரு நாள் பார்க்கிறேன் ஷிதா.. நாம் திருமணம் செய்துக்கலாம்”


“ஏன் அடுத்த மாதம்? அடுத்த வாரமே பாருங்க மிரு...” இந்த வார்த்தையில் அழிந்தது குணநாதனின் மகளான அனுதிஷிதாவின் வாழ்க்கை. அதாவது, அப்படி அழிய வைத்தான் ஷிதாவின் காதலனான மிருடவாமணன்... இல்லை இல்லை இப்போதைக்கு அவளுடைய திருடன்!.... மிருடன்!...
Nice
 

சாந்தி கமல்நாத்

Guest
அடப்பாவி ..அப்போ இவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டானா ?எதுக்கு ??
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN