சிக்கிமுக்கி 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயாவின் வாடிய முகம் கண்டு எதற்காய் திட்டினோம் என்று தன்னையே நொந்துக் கொண்டான் அன்பு.

"நான் உன்னை குறை சொல்லல அபி.. கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தாலும் என்னை பாலியல் வழக்குல ஜெயிலுக்கு அனுப்பி இருப்பாங்க.. அதைதான் சொல்ல வந்தேன் நான்.." என்றான்.

அபிநயா அவன் சொன்னதை புரிந்துக் கொண்டாள். கைதி உடையோடு இவனை தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் ஒப்படைக்க அவளுக்கும் மனமில்லை.

"அந்த பன்னாடை யாருன்னு கண்டுபிடிச்சதும் தூக்கிப்போட்டு மிதிக்கப்போறேன் நான்.." என்றாள் கோபத்தோடு.

"பொறுமையா இரு.. யாருன்னு கண்டுபிடிக்கலாம்.. மதியம் சாப்பிட போகும்போது உன் போனை எடுத்துட்டு வா.. பார்க்கலாம்.." என்ற அன்பு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் உள்ளே வரலாமா என்று கேட்டான். அவர் இவர்கள் நால்வரையும் பார்த்துவிட்டு உள்ளே வரச்சொல்லி சைகை காட்டினார்.

நால்வரும் உள்ளே வந்து அமர்ந்தனர். மற்ற மாணவர்கள் இவர்களை குறுகுறுவென பார்த்தனர்.

"ஏன் லேட்டு.?" என மீனாவிடம் கேட்டாள் சுவேதா.

"அப்புறமா சொல்றேன்.." என்று கிசுகிசுத்த மீனா ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.

அன்புவிற்கு உள்ளம் எரிமலையாக இருந்தது. தனது பெயரை கெடுக்க நினைத்தது விகேஷ்தான் என்று நம்பியவனுக்கு விகேஷின் பற்கள் அனைத்தையும் தட்ட வேண்டும் போல இருந்தது.

அபிநயா மதிய உணவு இடைவெளியின்போது தன் போனை விடுதியிலிருந்து எடுத்து வந்தாள். கல்லூரி வளாகத்தில் மரத்தடி ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த அன்புவின் அருகே வந்தவள் போனை அவனிடம் தந்துவிட்டு அவனருகில் அமர்ந்தாள்.

"இதுல என்னத்தை கண்டுபிடிக்கப்போற.?" என்று சந்தேகத்தோடு கேட்டாள் மீனா.

"இந்த போன்லதான் ஒரிஜினல் போட்டோ இருக்கு.. அந்த போட்டோ லெக்சரர்ஸ் போனுக்கு போயிருக்குன்னா அந்த போனுக்கு இதுல இருந்துதான் போட்டோ போயிருக்கணும்.." என்ற அன்பு போனை ஆன் செய்தான்.

"நான் யாருக்கும் அனுப்பல.. ப்ராமிஸ்.." என்றாள் அபிநயா.

"அது எனக்கும் தெரியும்.. வேற யாராவது எடுத்து கூட அவங்களோட போனுக்கு அனுப்பி இருக்கலாமில்ல.? நீதான் போனை கூட கவனிக்காம இருக்கற ஆளாச்சே.." என்ற அன்புவை முறைத்தவள் எதுவும் திட்டிவிடக்கூடாது என்றெண்ணி மௌனம் காத்தாள். அன்பு போனின் முகப்பிலிருந்த புகைப்படத்தை கண்டு புன்னகைத்தான். அபிநயா நாக்கை ஒரு பக்கமாய் நீட்டிக் கொண்டு எடுத்து வைத்திருந்த செல்பி அது. பார்க்கும்போதே சிரிப்பை வரவழைக்கும் புகைப்படம் அது.

போனில் இருந்த செய்தி தொடர்பு செயலிகளை முதலில் சோதித்தான். அனைத்தும் பெரும்பாலும் காலியாக இருந்தது. செய்தியில் அவன் அனுப்பிய செய்திகள் மட்டும்தான் இருந்தன. கோணக்காலன் என்ற பெயரை கேட்டால் கோபம் கொள்பவன் அவளின் போனில் அந்த பெயரை கண்டு உள்ளம் மகிழ்ந்தான்.

ப்ளூடூத் போன்றவற்றையும் சோதித்தான். எந்த போனோடும் கனெக்ட் ஆகாமல் இருந்தது. ஒருவேளை போட்டோவை டிரான்ஸ்பர் செய்ததும் அதன் கனெக்டிவிட்டியை அழித்திருக்கலாம் என்பதை புரிந்துக் கொண்டான்.

"உன் போன் வேஸ்ட்.. போட்டோ யாருக்கு சென்ட் ஆச்சின்னு கண்டுபிடிக்க முடியல.. இப்ப இருக்கும் ஒரே ஆப்சன் இந்த போன் நம்பர்தான்.." என்றவன் தன் போனில் நம்பரை பதித்து கால் செய்தான். எதிர்முனை ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது.

"பரதேசி ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான்.. போலிஸ்ல கேஸ் தந்தா நியூஸ் எங்கப்பாவுக்கும் போகும்.. அவர் என்னை கண்டபடி திட்டுவாரு. அதுனா கூட பரவால்ல.. இப்படி ஒரு போட்டோ எடுத்திருக்கற உன் பொண்ணு யோக்கியமான்னு கேட்டு வினோத் மாமாக்கிட்ட சண்டைக்கு போவாரு.. பேய் வேசத்துல ரூம்குள்ள புகுந்த கடுப்புலயே இன்னும் இருக்காங்க இரண்டு பேரும். இந்த விசயம் சிக்குச்சின்னா இதான் சாக்குன்னு மறுபடியும் சண்டை போட்டு ஊரை கூப்பிடுவாங்க.." என்றான்.

நண்பனின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பினான் குணா. "நீயாடா இதையெல்லாம் பேசுறது.? பத்து வருசமா இரண்டு குடும்பமும் வெட்டவா குத்தவான்னு இருந்ததே அப்ப எல்லாம் எங்கடா போச்சி இந்த அறிவு.?" என்றான்.

"அப்ப நாங்க லவ் பண்ணல.. சண்டை போட்டுட்டு இருந்தோம்.." என்றான் அன்பு.

"சரி அதை விடுங்க.. இப்ப இந்த நம்பர் யாருதுன்னு கண்டுபிடிக்கணும் அதுவும் போலிஸ்க்கு போகாம.." என்றாள் அபிநயா.

"ஆமா.. ஆனா எப்படி.?" மீனா குழப்பமாக கேட்டாள். அனைவரும் அன்புவின் முகத்தை பார்த்தனர்.

"பர்ஸ்ட் மார்க் எடுக்கறத உன் மூளை இப்போதாவது உருப்படியா எந்த ஐடியாவாவது தருமா.?" என கேட்டான் குணா.

அன்பு யோசித்தான். "பேர் கண்டுபிடிக்கற ஆப்களில் போட்டு பார்க்கலாம்.." என்று சொன்னாள் அபிநயா. அன்பு மறுப்பாக தலையசைத்தான். "அந்த நம்பர் யார் போன்லயும் சேவ் ஆகி இருக்காது. கண்டிப்பா புது நம்பர்.. பேக் ஐடி தந்து வாங்கிய நம்பர்.. உனக்கு சந்தேகமா இருந்தா நீ உன் போன்ல போட்டு செக் பண்ணி பாரு.." என்றான்.

அபிநயாவின் போனை வாங்கி குணா சோதித்து பாரத்தான். அன்பு சொன்னது போல எந்த பெயரும் அந்த எண்ணுக்கு இல்லை.

"ஆனா நாம வேற எப்படி கண்டுபிடிக்கறது.?" என்று கேட்ட மீனாவை பார்த்து புன்னகைத்த அன்பு எதிரே கையை காட்டினான். விகேஷ் தூரத்தில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தான். "அவனை தூக்கி போட்டு மிதிச்சா போதும்‌. ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.." என்றான்.

அபிநயா விகேஷின் முதுகை வெறித்தாள். "ஆனா நாம மறுபடியும் பிரச்சனை பண்ணா காலேஜ் கரஸ்க்கு விசயம் போயிடும்.." என்றாள் எச்சரிக்கையோடு.

"ஆமா.. அவனை தூக்கிப்போட்டு மிதிக்கறதுக்கு பதிலா நைசா கூப்பிட்டு விசாரிச்சி பார்க்கலாம்.." என்று தன் திட்டத்தை சொன்னான் குணா.

அபிநயா யோசித்தாள். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாமல் கண்டுபிடிக்க வேண்டுமானால் அவனை காக்காய் பிடித்தாக வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டாள்.

பிற்பகல் வகுப்பிற்கு செல்ல அனைவரும் எழுந்து கிளம்பினர்.

"உருப்படியான யோசனையை அப்புறமா யோசிக்கலாம்.." என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான் அன்பு.

அன்புவின் மீது கொண்ட பாசம் அபிநயாவின் மூளையில் கிறுக்குதனமான திட்டமாக உதயமானது. அன்று மாலையில் விடுதி வந்து சேர்ந்ததும் விகேஷின் போன் நம்பரை தோழிகளிடம் கேட்டு வாங்கினாள். ஹாய் என்று அவனுக்கு அனுப்பினாள்.

"ஹாய் அபி.." என்று அவன் உடனடியாக பதிலை அனுப்பினான்.

'என் நம்பர் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அவன்தான் போட்டோவை டிரான்ஸ்பர் பண்ணி இருக்கணும்..' என்று யூகித்தாள்.

"தேங்க்ஸ்.." என்று அனுப்பினாள் இவள்.

"எதுக்கு.?" என்று கேட்டவனிடம் "நோட்ஸ் தந்ததுக்கு.. எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது.." என்று அனுப்பினாள்.

"இங்கே பாருடா இந்த மைனாவை.. தானா வந்து வலையில சிக்குது.." என்று தன் நண்பர்களிடம் போனை காட்டினான் விகேஷ்.

"நண்பன் காட்டுல அடைமழைதான்.." என்று ஒருவன் கிண்டல் செய்தான்.

"பார்க்கலாம்.. மைனா நல்லபடியா சிக்குமா இல்ல பறந்து போகுமான்னு.." என்ற விகேஷ் கைபேசி திரைக்கு பார்வையை திருப்பினான்.

"நீ நல்லா படிச்சி நல்ல மார்க் வாங்கின்னா எனக்கும் சந்தோசம்.." என்று அனுப்பினான் அவளுக்கு. அவள் அதற்கும் தேங்க்ஸ் என்று அனுப்பினாள்.

அன்பு தன் புகைப்படம் இப்படி ஆபாச பேச்சுக்கு உள்ளாகி விட்டதே என்று வருத்தப்பட்டான். அந்த ஒரு நினைவே தலைக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருந்தது. விடுதி அறையில் குறுக்க மறுக்க நடந்தவன் தன் எண்ணத்தை எப்படி திசை திருப்புவது என்று யோசித்தான். அபிநயாவுக்கு போன் செய்தான். அவள் முதல் ரிங்கிலேயே போனை எடுத்தாள்.

"ஹலோ.." என்றாள் இசை விளையாடும் குரலில்.

"போனை கையிலயே வச்சிருந்தியா உடனே எடுத்துட்ட.?" என்றவன் ஜன்னலை திறந்து எதிரே இருந்த கட்டிடத்தை பார்த்தான்.

"கேம் விளையாடிட்டு இருந்தேன்.." என்று பொய்யை சொன்னவள் இருக்கையை விட்டு எழுந்தாள். ஜன்னலருகே வந்து அதனை திறந்தாள். எதிர் கட்டிடத்தில் இருந்த உருவம் கையை அசைத்தது. முகம் தெளிவாய் தெரியாவிட்டாலும் அவன்தான் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளும் தன் கையை அசைத்தாள்.

"எனக்கு ஒரு முத்தம் வேணும்.." என்றான் அவன். கையில் இருந்த போன் நழுவுவதை போல இருந்தது அபிநயாவுக்கு.

"மு.. முத்தமா.?" என்றாள் தடுமாற்றமாக.

"ஆமா.." என்றான் அவன் திடகாத்திரமாக.

"ஆனா எ.. எப்படி.? எங்க ஹாஸ்டலுக்குள்ள நீயும் வர முடியாது.. உங்க ஹாஸ்டலுக்குள்ள நானும் வர முடியாது.." என்றவளுக்கு தான் சொன்ன பதிலை நினைக்கையில் சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. 'அபி.. உனக்கும் கிஸ் பண்ண ஆசையா இருக்குங்கற மாதிரியே பேசுறியே..' என்று மனதுக்குள் புலம்பினாள்.

அன்பு சிரிப்பது போனில் கேட்டது. அவளுக்கு முகம் சிவந்து போனது. "நேர்ல தர முடியாது.. நீ போன்ல கொடு.." என்றான். அபிநயா ஜன்னலை விட்டு தள்ளி வந்து சுவரில் சாய்ந்தாள். நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"நான் போன்ல தரமாட்டேன்.."

"அப்படின்னா நேர்ல மட்டும்தான் தருவியா.?" என்று கேட்டவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.

"நான் அப்படி சொல்லல.." என்றாள் அவசரமாக.

"உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் குட்ட.." என்றவன் இப்போது அடைமொழி சொல்லி அழைக்கையில் கோபம் ஏதும் வரவில்லை. அடைமொழியே செல்லப்பெயர் போல தோன்றியது. இருவரும் இரவு வரை பேசிக் கொண்டிருந்தனர். குணாவும் மீனாவும் தங்களின் அரட்டையை முடித்துவிட்டு விடுதி அறைக்கு வந்தபோது போனில் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் உறக்கும் வரையிலுமே பேசிக் கொண்டேதான் இருந்தனர். அர்த்தமற்ற பேச்சுகளும் வார்த்தையற்ற மௌனங்களும் காதலின் வெளிப்பாடுதான் என்பதை இருவருமே இப்போதுதான் உணர்ந்தனர்.

மறுநாள் கல்லூரியில் அபிநயாவை கண்டதும் சிநேகமாய் புன்னகைத்தான் விகேஷ். அவளும் அன்பு அறியாதவாறு புன்னகைத்தாள்.

அன்று மாலையில் அருள்குமரன் அன்புவை அழைத்து பேசினார். "அந்த போட்டோ விவகாரத்துக்கு என்னை மேற்பார்வையா போட்டிருக்காங்க.." என்றார்.

"சார் உண்மையிலேயே அதை நான் அனுப்பல.." என்றான் அன்பு.

"நீ அனுப்பி இருக்க மாட்டன்னு நானும் நம்புறேன் அன்பு.. ஆனா ஆதாரம் கிடைக்கற வரைக்கும் நம்ம பிரின்சிபாலோட கண்ணோடத்துல நீதான் குற்றவாளி.." என்றார்.

"இது விகேஷ்தான் சார்.." என்றவன் மேலும் பேசும் முன் அவரே தொடங்கினார். "அது விகேஷா இருக்க சான்ஸ் இருக்கு. ஆனா போட்டோ உன்னோடது. போட்டோவுல இருக்கற பேக்கிரவுண்ட் உன் வீடுன்னு நல்லாவே தெரியுது. உன் வீட்டுல எடுக்கப்பட்ட போட்டோ எப்படி அவன் கைக்கு போச்சி. இதை முதல்ல கண்டுபிடிக்கணும்.. அந்த போட்டோவை நீதான் உன் போன்ல வச்சிருந்தியா.?" என்றார்.

அன்பு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான். அபிநயாதான் புகைப்படம் எடுத்தாள் என்ற விசயம் தெரிந்தால் அவளுக்கு பிரச்சனை வருமே என்று யோசித்தான்.

"அது என் பிரெண்ட் எடுத்த போட்டோ சார்.. சும்மா விளையாட்டுக்கு எடுத்திருக்கான். அதை எனக்கு அனுப்பி வச்சான்.. நான் அந்த போட்டோவை அழிக்கலாம்ன்னுதான் இருந்தேன். ஆனா எப்படி ஸ்ப்ரெட் ஆச்சின்னு தெரியல.." என்று சொல்லி சமாளித்தான்.

"அப்படின்னா சரி.. நான் அந்த போன் நம்பர் மூலமாவே ட்ரேஸ் பண்றேன்‌. நீயும் உசாரா இரு.. இனி அந்த மாதிரி போட்டோஸ் எதுவும் எடுத்து வைக்காத.." என்றவர் கிளம்பினார். இரண்டடி நடந்த பிறகு யோசனையோடு இவனை திரும்பி பார்த்தார். "அபியும் நீயும் சண்டை போட்டுட்டு இருந்திங்களே அது என்ன ஆச்சி.? சமாதானமா.?" என்றார்.

"சமாதானம்தான் சார். நானும் அவளும் லவ் பண்றோம்.." என்றான். அருள் குமரன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தார். அபிநயாவும் அவனும் சண்டை போட்டுக்கொண்ட காட்சிகள் அத்தனையும் அவரின் நினைவுக்கு வந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN