சிக்கிமுக்கி 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருள் குமரன் அன்புவிடம் திரும்பி வந்தார். "நீயும் அவளும் லவ் பண்றிங்களா.?" என்றார்.

"ஆமா சார்.. ரொம்ப சின்சியரா.." என்றவனின் தோளில் தட்டி தந்தார் அவர்.

"உன் அளவுக்கு தைரியம் எங்க காலத்துல யாருக்குமே இல்ல‌.. ப்ரபொசர்க்கிட்டயே தன் லவ்வை பத்தி சொல்றவன் நீயாதான் இருப்ப.. சரி நல்லா வாழு.. உலகமே காதலோட மையப்புள்ளியில் சுழன்றுட்டு இருக்கும்போது காதல் பண்ணாதன்னு உன்கிட்ட அட்வைஸா பண்ண முடியும் நான்.?" என்றார்.

அன்பு முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது.

"ஆனா ஒரு டவுட்.. அவ இப்பவே உன்னை இந்த மிதி மிதிக்கிறாளே.. நாளைக்கு கல்யாணம் பண்ண பிறகு அடிச்சாவோ உதைச்சாவோ என்னடா பண்ணுவ.?" என்றார் கவலையோடு.

"எனக்கு என் லவ் மேல நம்பிக்கை இருக்கு சார்.." என்றான் அன்பு கம்பீரத்தோடு.

"ஒரு காலத்துல பொம்பள புள்ளைங்க சொல்லிட்டு இருந்த டயலாக்கை இப்ப உன்னை சொல்ல வச்சா பார்த்தியா.. அங்கே நிக்கறா அவ.." என்றவர் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார்.

அன்புவிற்கு சிரிப்பு வந்தது அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்து. 'குட்டச்சியோட மகிமை அப்படி..' என்றது அவன் மனம்.

கல்லூரி நேரத்தின் இடைவெளியின் போது மீனாவோடும் சுவேதாவோடும் சேர்ந்து அபிநயா மரத்தடி ஒன்றின் கீழ் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். மரத்தின் கீழ்மட்ட கிளை ஒன்றின் மீது அமர்ந்துக் கொண்டிருந்த சஞ்சய் மரத்தின் இலைகளை கிள்ளி கிள்ளி சுவேதாவின் மீது எறிந்துக் கொண்டிருந்தான். சுவேதா அவ்வப்போது அந்த இலைகளை தள்ளிவிட்டுவிட்டு திரும்பி பார்த்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அன்புவும் குணாவும் தண்ணீர் பாட்டிலோடு தூரத்தில் வந்துக் கொண்டிருந்தனர்.

"இப்பலாம் நீயும் அபியும் பேசிக்கும்போது பார்க்க எங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குடா.." என்றான் குணா.

"எமோசனலா பேசுற போல.." கிண்டலாக கேட்ட நண்பனின் தோளில் இடித்தான் குணா. "நீங்க சந்தோசமா இருந்தா எங்களுக்கு நிம்மதியா இருக்குடா.." என்றான் சிரிப்போடு அவன். அன்புவிற்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. அபிநயாவும் தானும் சண்டை போட்டுக் கொண்டதால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்துக் கொண்டான் அவன்.

"நீயும் அன்புவும் கிஸ் பண்ணிக்கிட்டிங்களா.?" தூரத்தில் வரும் அன்புவை பார்த்துக் கொண்டே அபிநயாவிடம் கேட்டாள் மீனா.

அபிநயா அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். "அப்படின்னா உண்மையாவே கிஸ் பண்ணிக்கிட்டிங்களா.?" என்று சுவேதா அதிர்ச்சியோடு கேட்டாள். குத்துமதிப்பாக கேட்டதற்கு கிடைத்த பதில் மீனாவையும் அதிர்ச்சியாக்கியது.

"கனவுல் கிஸ் தந்ததுக்கே பல் விளக்குனியே.. நிஜத்துல என்ன பண்ண.?" மீனா இன்று அவளை பழிவாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடே தனது கேள்விகளை ஆரம்பித்தாள்.

"மீனு அது.. நீங்க நினைக்கற மாதிரி இல்ல.." என்று சமாளிக்க முயன்றாள் அவள்.

சஞ்சய் தான் அமர்ந்துக் கொண்டிருந்த மரக்கிளையை விட்டு கீழே குதித்தான். "இப்ப லவ் பண்ணவங்க கூட கிஸ் பண்ணிக்கிட்டாங்களாம்.. ஆனா நீ இத்தனை மாசம் ஆகியும் கூட ஒரு கிஸ்.. அட்லீஸ்ட் இந்த புறங்கையிலயோ உள்ளங்கையிலயோ கூட தரல.." என்று சுவேதாவிடம் சண்டைக்கு வந்தான் அவன்.

சுவேதாவின் நிலை கண்டு அபிநயாவிற்கு சிரிப்பு வரும்போல இருந்தது.

தண்ணீரோடு அவர்களின் அருகே வந்த அன்பு பாட்டிலை அபிநயாவிடம் நீட்டினான். "இங்கே என்ன சண்டை.?" என்றான்.

"நீயும் இவளும் கிஸ் பண்ணிக்கிட்டதால சுவேதா தனக்கு கிஸ் தரலன்னு சஞ்சய் சண்டை போடுறாரு.." என்று விளக்கம் சொன்னாள் மீனா.

அன்பு தன் உள்பக்க கன்னத்தை கடித்தபடி அபிநயாவை பார்த்தான். சற்று முன் அவளை அவர்கள் ஓட்டி இருப்பார்கள் என்பது அவனுக்கு வருத்தத்தை தந்தது. அவள் அன்புவை பார்த்து என்னவெனும் விதமாய் தலையை ஆட்டினாள். ஒன்றுமில்லையென தலையசைத்த அன்புவிற்கு இந்த கேலி கிண்டல்கள் இல்லாத இடத்திற்கு அவளை கடத்திச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

மாலையில் கல்லூரி முடிந்ததும் அவளை தன்னோடு சேர்த்து ஐஸ்கீரீம் கடைக்கு அழைத்துச் சென்றான் அன்பு. அவளிடம் ஐஸ் ஒன்றை வாங்கி நீட்டியவன் "மதியம் உன்னை எல்லோரும் ரொம்ப கிண்டல் பண்ணியிருப்பாங்க.. சாரி.." என்றான்.

அபிநயா ஐஸையும் அவனையும் மாறி மாறி பார்த்து சிரித்தாள். "பிரெண்ட்ஸ்ன்னா அப்படிதானே.. அதுக்குதான் இந்த ஐஸா.? நான் கூட என் மேல இருக்கற பாசத்தால வாங்கி தந்தியோன்னு நினைச்சேன்.." என்றாள்.

"பாசம்தான் குட்ட.. உனக்கு வேணாம்ன்னா இன்னும் நிறைய வாங்கி தரேன்.." என்றான்.

"இதே போதும்.. அப்புறம் காய்ச்சல் வந்தா எங்க அப்பா ரொம்ப பீல் பண்ணுவாரு.." என்றாள் அவள்.

அவளின் தோளில் கைப்போட்டபடி நடந்தவன் "உங்க அப்பாவை விட அதிகமா நான் பீல் பண்ணுவேன்.." என்றான்.

அபிநயா அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். "ஆனா நீ என்னை விட ஏன் இவ்வளவு உயரமா இருக்க.?" என்றாள் சோகமாய்.

"மழை வந்தாலும் வெயில் வந்தாலும் உனக்கு குடையா நானே இருக்கலாமேன்னுதான்.." என்றான்.

அவளின் விடுதி வாசலில் அவளை விட்டுவிட்டு தனது விடுதிக்கு திரும்பினான் அன்பு. அபிநயாவை பிரிந்திருப்பது இப்போதே கஷ்டமாக தோன்றியது அவனுக்கு.

அபிநயா தன் அறைக்கு வந்ததும் உடையை மாற்றிக் கொண்டு ஜன்னலை திறந்து மேஜையின் முன்னால் அமர்ந்தாள். மீனா வரும்வரை அன்புவோடு போனில் பேசலாம் என்று நினைத்து அவனுக்கு போன் செய்தாள். அர்த்தமற்ற வார்த்தைகளில் காதலின் அர்த்தங்களை கண்டுபிடித்து பேசி சிரித்தனர் இருவரும்.

இரவு உணவு உண்ணும்போது கூட ஆளுக்கொரு செல்பியை எடுத்து பரிமாற்றி அனுப்பி வைத்துக் கொண்டனர்.

"எல்லோரும்தான் காதலிக்கிறாங்க. ஆனா எல்லோருமே பைத்தியமா ஆயிடுறது கிடையாது.." என்று கிண்டலடித்தாள் மீனா.

"போடி லூசு.." என்ற அபிநயாவிற்கு இப்படி பைத்தியமாக இருப்பதே மிகவும் பிடித்திருந்தது.

இரவில் தந்தையிடமும் தாயிடமும் போனில் சில வார்த்தைகளை பேசிவிட்டு உறங்க ஆரம்பித்தாள் அபிநயா.

அன்பு நல்ல உறக்கத்தில் இருந்தான். "அன்பு.." என்று அபிநயா காதோரத்தில் கத்தியழைக்கும் ஒலியை கேட்டு பதறியெழுந்தான் அன்பு. முகமெங்கும் வியர்வை பூத்திருந்தது. புறங்கையால் வியர்வையை துடைத்தவன் எழுந்துச் சென்று விளக்கின் ஸ்விட்சை இயக்கினான். விளக்கின் ஒளியில் குணா எழுந்து அமர்ந்தான்.

"ஏன்டா பாத்ரூம் போறியா.? துணைக்கு வரட்டா என்ன‌.?" என்றான் தூக்க கலக்கத்தோடு.

"இல்ல.." என்றவன் தன் போனை தேடி எடுத்து அபிநயாவின் போனுக்கு அழைப்பு விடுத்தான். "அபிக்கு ஏதோ பிரச்சனை போல.. என்னை கத்தி கூப்பிட்டா.." என்றான் நண்பனிடம்.

குணா தன் கை கடிகாரத்தை எடுத்து பார்த்தான். "மணி பதினொன்றரை ஆகுதுடா.. அமைதியா வந்து தூங்குடா.." என்றான்.

இல்லையென தலையசைத்த அன்பு சென்று ஜன்னலை திறந்தான். பெண்கள் விடுதியின் மொத்த அறையிலும் விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

"ஏதோ பிரச்சனை.." என்றவன் தன் அறையை விட்டு வெளியே ஓடினான். குணா மீண்டும் எழுந்து அமர்ந்தான். ஜன்னல் வழி தெரிந்த பெண்கள் விடுதியை கண்டவன் முகத்தை துடைத்துக் கொண்டு நண்பனை பின்தொடர்ந்தான்.

விடுதியின் கதவு சங்கிலியால் இணைக்கப்பட்டு பெரிய பூட்டாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டவன் எரிச்சலோடு திரும்பினான்.

"ஆம்பள பசங்க ஹாஸ்டலுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பூட்டு.?" என்றான் கடுப்போடு.

"ஆம்பள பசங்கங்கறதாலதான் இந்த பூட்டே.. நீங்க பாட்டுக்கு நடுராத்திரியில் சுவரேறி குதிச்சி ஓடிட்டா உங்க பேரண்ட்ஸ்க்கு யார் பதிலை சொல்வது.?" என கேட்டுக் கொண்டே வந்தார் வார்டன்.

"சார் அது.." என்றவன் தன்னை வெளியே அனுப்ப சொல்லி கேட்பது எப்படி என்று தயங்கி நின்ற வேளையில் பூட்டை திறக்க ஆரம்பித்தார் அவர்.

"ஆம்பள பையன்னுக்கு இன்னேரத்துக்கு இங்கே என்ன வேலை.?" என்றவர் பூட்டை விடுவித்து இரும்பு கதவை மூச்சை பிடித்துக்கொண்டு தள்ளி ஓரம் சேர்த்தினார்.

"ஒரு அர்ஜென்ட் வேலை சார்.. என் பிரெண்டுக்கு வயித்து வலி. என்னை ஒரு அஞ்சி நிமிசம் வெளியே விடுங்க.. நான் போய் மாத்திரை வாங்கிட்டு வந்துடுறேன்.." என்றான் அன்பு.

அதே நேரத்தில் குணா அங்கே வந்து சேர்ந்தான். "யார் அவனுக்குதான் வயித்து வலியா.?" என்று கேலியாக கேட்டார் வார்டன்.

"ஆமா சார்.." என்ற குணா சட்டென்று தன் வயிற்றை பிடித்தான். 'குரங்கு கூட பழகினா மரத்துக்கு மரம் தாவியே ஆகணும்ங்கறதுதான் தலைவிதியே..' என்று அவனின் மனம் வேறு பழமொழி சொன்னது.

"பக்கத்துல கேர்ள்ஸ் ஹாஸ்டல்ல ஏதோ பிரச்சனை.. நான் அதை பார்க்க போறேன்.. நீங்க வெளியே போக முடியாது.. என் ரூம்ல லெப்ட் சைட் செல்ப்ல மாத்திரை.." வார்டன் முழுவதும் சொல்லும் முன்பே கதவை தாண்டி ஓடிவிட்டிருந்தான் அன்பு. அடுத்ததாய் இருந்த கேட்டிலும் பெரிய பூட்டுதான் இருந்தது. வார்டனிடமே மீண்டும் திரும்பி ஓடி வந்தான். "சாவி கொடுங்க சார்.." என்றான் அவசர குரலில்.

"அவன் ஆளுக்குதான் பிரச்சனைன்னு சொல்லி நடுராத்திரி தூக்கத்துல இருந்து எழுந்துட்டான் சார்.. லேடிஸ் ஹாஸ்டல்ல லைட் எரிவதை கண்டு ஓடி வந்துட்டான்.." என்று விவரித்தான் குணா.

வார்டன் ஆச்சரியத்தோடு அன்புவை பார்த்தார். "நிஜமாவா.?" என்றார் அவனிடம்.

"சார்.. ப்ளீஸ் சார்‌.. கேட்டை திறந்து விடுங்க.." கைக்கூப்பி அவரிடம் கெஞ்சினான் அவன்.

வார்டன் பின்னந்தலையை சொறிந்துக் கொண்டே வந்து கேட்டை திறந்தார். "வாங்க போகலாம்.." என்று அவர் திரும்பி பார்த்து இவர்களை அழைத்தார். குணா அவரருகே வந்தான். "நாம போலாம் சார்.. அவன் போய் பத்து நிமிசம் ஆச்சி.." என்றான். வார்டன் நம்பிக்கை இல்லாமல் திரும்பி பார்த்தார். அவர் கேட்டை திறந்த கணமே வெளியே பாய்ந்து விட்ட அன்பு வேகத்தோடு சாலையில் ஓடினான்.

"அங்கேயே ஏற்கனவே பிரச்சனை.. இவனும் போய் எந்த ஏழரையை இழுத்து விட போறானோ.!?" என்றவர் பெண்கள் விடுதிக்கு செல்லும் சாலையில் இறங்கி நடந்தார். குணா நண்பனின் மீது இருந்த அக்கறையில் வார்டனை தாண்டிக் கொண்டு வேகமாக நடந்தான்.

அபிநயா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

"உனக்கு பிடிச்ச சாக்லேட் எது.?" என்று சாயங்காலம் கேள்வி கேட்ட குணா மீனாவின் கனவிலும் வந்து அதே கேள்வியை கேட்டுக் கொண்டிருந்தான்.

"எனக்கு பைவ்ஸ்டார்தான் பிடிக்கும்ன்னு எத்தனை முறை சொல்வது.?" என்று தூக்கத்திலேயே பதிலை சொன்ன மீனா புரண்டு படுத்தாள். அவள் தன் கழுத்தில் அணிந்துக் கொண்டிருந்த செயினில் இருந்த டாலர் அவளின் கழுத்தை நறுக்கென்று குத்தியது. "ஸ்ஸ்.." என்று வலியில் முனகியபடியே அனிச்சை செயலாய் செயினின் டாலரை கழுத்தை விட்டு தூரமாய் தள்ளினாள். அதே நேரத்தில் அரை கண்களை திறந்து பார்த்தாள். அவளின் கட்டில் இருந்த எதிர் திசையில் இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த ஒரு உருவம் கருப்பு நிழலாய் அவளின் கண்களுக்கு தெரிந்தது.

"ஆஆஆ.." என அவள் கத்திய கத்தலில் அபிநயா திடுக்கிட்டு விழித்தாள். தன் படுக்கையின் அருகே இருந்த ஸ்விட்சை தட்டிவிட்டாள். விளக்கு ஒளிர ஆரம்பித்ததும் மீனாவை நோக்கி ஓடி வந்தாள். "என்ன ஆச்சி.?" என்றாள்.

மீனா எதிரே கையை காட்டினாள். அபிநயா திரும்பி பார்த்தாள். சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்துக் கொண்டிருந்த விகேஷ் மெதுவாக முகத்தை நிமிர்த்தி அவர்கள் இருவரையும் பார்த்தான்‌. பற்கள் தெரியும்படி அருவெறுப்பாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN