நிகரில்லா வானவில்

நீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .

அத்தியாயம் 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் தோழி செவ்வந்தி.. இரு வருட இடைவெளிக்கு பிறகு கதை உலகத்திற்கு வந்திருக்கேன்.. என் அறிவையும் மீறி சில எழுத்து பிழைகள் இருக்கலாம்... பிழைகள் இருக்கும் இடம்தோறும் என்னை மன்னித்து விடுங்கள்..

கட்டப்பஞ்சாயத்து ரவுடி மகேஷ்க்கும் போலிஸ் அதிகாரி சக்திக்கும் இடையில் இருக்கும் தீரா பகையையும் அவர்களது ஆண்டுகள் கடந்த அழியா காதலையும் சொல்லும் கதை இது..
இது ஆணவக்கொலையை பற்றி பேசும் ஒரு சமூக நாவல்தான்.. ஆனால் காதலையும் நட்பையும் கலந்து யாரையும் சாகடிக்காமதான் எழுதியிருக்கேன்.. ஏனா எனக்கு இந்த அழுக்காச்சி கதை எழுதறதுல அவ்வளவா இஷ்டம் இல்ல.. அதனால் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாவே கற்பனை கலந்து நீங்க எதிர்பாராத திருப்பங்களோடு கதையை எழுதியிருக்கேன்..

என்னோட மற்றொரு நாவலான கை பிடித்த கண்ணாலா நாவல்தான் வாசகர்களின் பெரும் விருப்பங்களில் ஒன்றென தெரிந்தும் இதை நான் முதலில் வெளியிட காரணம்.. இக்கதையோடு கடைசி வரை வரப்போகும் அன்பு நெஞ்சங்களுக்காகதான்
..

அழகான காலை பொழுது. சக்தி தனது கல்லூரி வளாகத்திற்குள் நெஞ்சில் வாழும் லட்சிய கனவுகளோடு நுழைந்தாள்.

"ஏய் சக்தி நில்லு"

திரும்பி பார்த்து முறைத்த சிவசக்தியை பார்த்து கண் அடித்தான் மகேஷ்வரன்.

"நான் கிளாஸ் ரூமுக்கு போறேன். நீ பேசி முடிச்சிட்டு வா" எனச் சொல்லி விட்டு கிளம்பினாள் கலையரசி.

சிவசக்தியும் கலையரசியும் பல வருடங்களாக தோழிகள். இருவருக்கும் சொந்த ஊர் துளசிப்பட்டி. தாமரையூர் கலைக்கல்லூரியில் இரண்டாம் வருட மாணவிகள்.
"என்ன வேணும் மகேஷ்? எதுக்காக இப்படி தொல்லை பண்ற?"

கோபத்தில் முகம் சிவந்து நின்று கேட்டவளை மிக அருகில் கண்டவுடன் தன் சுற்றுப்புறத்தையும் சுயப்புத்தியையும் மறந்தே போனான் மகேஷ்.
'என்னா அழகுடா சாமி! இவ மனுஷியாக இல்ல தேவதையா? கடவுளே இவ இப்படியே என் முன்னாடி நிற்கும் போதே என் ஆயுளை முடிச்சிட்டு.இவளை பார்த்துக்கொண்டே சாவரதை விட வேற என்ன இன்பம் உலகத்துல இருந்துட போகுது?' தன்னை மறந்து யோசித்து நின்றவனை பொறுமை இழந்து பற்களை கடித்து கொண்டு பார்த்து நின்றாள் சிவசக்தி.

மகேஷ் எதோ ஓர் விதத்தில் சிவசக்தியிடம் ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தான். ஆனால் அதை வெளிக்காட்டும் அளவுக்கு சிவசக்தியிடம் போதிய தைரியம் இல்லை. சக்தியின் சாதியும் மகேஷின் சாதியும் வேறு வேறு. இவர்கள் காதலித்தால் அந்த காதல் கைக்கூட சாத்தியமே இல்லை. இதை நன்றாக அறிந்து வைத்திருந்தாள் சக்தி. ஆனால் மகேஷ் கண் கெட்ட குருடன் போல சக்தி பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தான்.

மகேஷ் வாயை திறந்த படி சக்தியை பார்த்துக் கொண்டிருந்தான். சக்தியோ எல்லை மீறிய கோபத்தோடு மகேஷை முறைத்து கொண்டு இருந்தாள். மகேஷின் பக்கத்தில் நின்றிருந்த அவனின் நண்பன் சாமிநாதன் தன் சிரிப்பை மறைக்க வேறு திசைக்கு முகத்தை திருப்பினான்.

வகுப்புக்கு நேரமாயிற்று எனும் விதமாக மணி அடித்தனர்.
மகேஷை மேலும் கீழும் பார்த்து விட்டு வகுப்புக்கு செல்ல திரும்பினாள் சக்தி.

மணியோசையில் சுயநினைவு பெற்ற மகேஷ் சட்டென சக்தியின் கைப்பிடித்தான். காதலியுடனான முதல் தீண்டல். அவள் கைகளையே பார்த்து கொண்டு இருந்தவன் சில வினாடிகளுக்கு பிறகு அவளின் முகத்தை பார்த்தான்.

தன் கையை பிடித்து நிறுத்திய அவனின் கையை உணர்ச்சிகளின்றி பார்த்து கொண்டிருந்தாள் சக்தி.
"மன்னித்து விடு"என்றபடி அவள் கையை விட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "நான் தீண்டத்தகாத சாதி என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்ததா?"என்றாள்.
அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். அவன் ஏதோ கூற வாய் திறக்கும் முன் வேக நடையில் சென்று விட்டாள் சக்தி.

"சக்தி...." அவனின் கத்தல் சத்தம் அவளின் காதுகளை அடையவே இல்லை.

"கிளாஸ்க்கு நேரமாச்சு. வா போகலாம்." தன்னை தன் நண்பன் இழுத்து செல்வது கூட தெரியாமல் சக்தி சென்ற திசையை பார்த்தப் படி இருந்தான் மகேஷ்.

ஆசிரியர் நடத்திய பாடம் கொஞ்சமும் புரியவில்லை. வகுப்பை கவனித்து இருந்தால்தானே புரிவதற்கு?

கல்லூரியில் கடைசி வருட மாணவன் மகேஷ். கடந்த வருடத்தில் சக்தியை முதன்முதலாக பார்த்தவுடனே தன் மனதை அவளிடம் பறி தந்து விட்டான். முதல் பார்வையில் வந்து விட்ட தன் காதலையென்னி அவன் இன்று வரையிலும் ஆச்சரியப் படுகிறான். பல வருடங்களாக பழகிய பிறகு வரும் காதலையே நம்பாதவன் மகேஷ். ஆனால் அவனுக்கு சக்தியுடன் வந்த காதல் ஒரு அதிசயம். அவனின் காதல் அவனுக்கே ஒரு மாய உணர்வு. 'இதுதான் காதலா' என்று அவன் தன்னையே ஆச்சரியத்துடன் கேட்க வைத்த அளவிற்கு சக்தி அவன் நெஞ்சில் குடி புகுந்திருந்தாள்.

சக்தி தன்னை காதலிக்கிறாள், ஆனால் ஏதோ ஒரு காரணம் கொண்டு மறைக்கிறாள் என்று நம்பியிருந்த மகேஷிற்கு அவள் சாதியை தடை கல்லாய் பயன்படுத்துவாள் என்று நினைக்கவேயில்லை. சாதி என்றாவது ஒரு நாள் தன் வாழ்வில் இடறி விடும் சிறுகல்லாய் இருக்கலாம் என்று நினைத்த மகேஷ் அது தன் காதலின் முதல் அடியிலேயே வானுக்கும் பூமிக்குமாக மதிற் சுவறாய் அமையும் என நினைக்கவில்லை.

மகேஷின் தந்தை தன் சாதியை குலதெய்வமாக நினைப்பவர். ஆனால் மகன் மீது அவர் கொண்ட பாசம் அவரின் சாதிவெறியை தூக்கி எறியும் என மனதார நம்பிக் கொண்டிருக்கின்றான்.

வாழ்க்கை மிகவும் எளிதானது. முதலில் சக்தி மனதை வெல்ல வேண்டும், பின்னர் அப்பாவிடம் அடம் பிடித்து தன் காதலை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும், அவ்வளவுதான். இப்படித்தான் இது நாள் வரை மகேஷ் மனதில் என்னிக் கொண்டிருக்கின்றான்.

"மகேஷ்..." தன் தோளை தட்டிய தோழனை திரும்பி பார்த்தான்.

"என்ன சாமிநாதா?"

"எனக்கு பசி உயிர் போகுது. நீ சாப்பிட வரியா இல்லையா?"

கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவன்"மதியம் ஆயிடுச்சா?"என்றான்.

"அநியாயத்துக்கு ஓவரா பண்ணாத மகேஷ்."

"சத்தியமா டைம் போனதே தெரியலை. லவ் ஏதாவது பண்ணாதானே உனக்கு அது புரியும்."

"இடம் பொருள் மறக்க வைக்கிறதுதான் காதல்னா அது எனக்கு தேவையேயில்லை.இப்ப சாப்பிட வரியா இல்லையா?"

"வரேன்டா." டிபன் பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு சாமிநாதனை பின் தொடர்ந்தான்.

அவர்களின் சாப்பிடும் இடமான வேப்ப மரத்தடிக்கு செல்கையில் சக்தியின் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பினான் மகேஷ்.

மகேஷின் சிறு வயது நண்பன் செல்வாவிடம் சிரித்துப் பேசக் கொண்டிருந்தாள் சக்தி.

செல்வாவோடு மகேஷ் கொண்ட நட்பு முறிந்து பல வருடங்கள் ஆகி விட்டது. சிறு சண்டையில் ஆரம்பித்த பிரச்சனையில் மகேஷ் அறியாமல் செல்வாவின் சாதியை வைத்து இளக்காரமாக பேசிவிட்டான். ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டும் கூட மகேஷுடன் பேச மறுத்து விட்டான் செல்வா.

ஆனால் இன்று செல்வா சக்தியுடன் சிரித்து பேசவும் மகேஷிற்கு கோபம் தலைக்கேறி விட்டது.

"செல்வா..." மகேஷின் கர்ஜனையில் அவன் அருகில் நின்றிருந்த சாமிநாதன் ஓரடி தள்ளி நின்றான். செல்வாவும் சக்தியும் தங்களின் உரையாடலை நிறுத்தி விட்டு மகேஷை பார்த்தனர்.

இரட்டை எட்டில் சக்தியை நெருங்கியவன் அவளின் கைப்பிடித்து தன் அருகில் இழுத்து நிறுத்தினான்.

"கையை விடு மகேஷ்." தன் கையில் சிக்கியிருந்த அவளின் கையை விடாமல் இருக்கி பிடித்தவன், "நீ ஏன் இவன் கூட பேசிட்டு இருக்க?" என்றான் செல்வாவை முறைத்தப்படி.

குழப்பமாக செல்வாவை பார்த்தாள் சக்தி. செல்வாவோ தன் நக்கல் சிரிப்பை அடக்கிக் கொண்டு மகேஷை பார்த்தான்.

"நானும் அவளும் ஏன் பேசக் கூடாது?" என்றவன் சட்டென சக்தியின் கைப் பிடித்து தன் அருகே இழுத்தான்.

சக்தியின் தோளில் கைப் போட்டபடி மகேஷை பார்த்தவன் "நான் இவளோடு பேசினா உனக்கென்ன கஷ்டம்? நீ என்ன இவளுக்கு அண்ணனா தம்பியா? இல்ல மாமனா மச்சானா?" என்றான்.

"அவளை தொடாத செல்வா.."

"ஏன்"என்றபடி அவளின் கழுத்தை சுற்றி கைப் போட்டு அவளின் தோளில் முகம் வைத்தான்.

ஆத்திரத்தில் முகம் சிவந்து நின்ற மகேஷை பார்த்தப் படி தன் பின் நின்ற செல்வாவிடம் "என்ன பண்ற நீ" என்றாள்.

"அமைதியா நில்லு" அவளின் காதுகளில் சத்தமில்லாமல் கூறியவன் மகேஷை கிண்டலாக பார்த்தான்.

"நாங்க உன்கிட்ட எதாவது பிரச்சனை பண்ணோமா? இல்லையே. நீயா வந்து ஏன் எங்களோட நேரத்தை வீணடிக்கிற?"

பற்களை கடித்து படி அருகில் வந்தவனை பின்னால் தள்ளி விட்ட சக்தி"இவன் என் பெரியப்பா பையன். என் அண்ணன். நீ தேவையில்லாம எங்க விசயத்துல தலையிடாத." என்றாள்.

"ச்சே..." சலித்து கொண்ட செல்வாவை திரும்பி நின்று முறைத்தவள் " உன் விளையாட்டுல என்னை பகடை காயா யூஸ் பண்ணாத" என அடிக் குரலில் கூறிவிட்டு நகர்ந்தாள்.

தன்னை கடுப்போடு பார்த்த மகேஷிடம் "ஆமா அவ என் தங்கை தான். உன்னை கடுப்பேத்ததான் அப்படி பேசினேன். நீ டைம் பாஸ்க்கு தானே அவ பின்னால சுத்துற? காதலிக்கற மாதிரி சீன் போடாத, சரியா? உன்னை மாதிரி பசங்களை பத்தி எனக்கு தெரியாதா?" என்றான்.

"நான் அவளை நேசிக்கிறேன் செல்வா." அமைதியான குரலில் கூறியவற்றை இளக்காரமாய் பார்த்தவன், " காதலிக்கறது ஒருத்திய, கல்யாணம் செய்ரது இன்னொருத்திய. காதலுங்கற வார்த்தை அசிங்க பட காரணமே உன்னை மாதிரி ஆளுங்க தான்." என்று பொரிந்தான்.

"உனக்கு எதுவும் தெரியாது செல்வா..." திரும்பி நடந்தவனின் கைப் பிடித்து நிறுத்தியவன், "மன்னிச்சிரு, நான் கிண்டலுக்கு தான் அப்படி சொன்னேன்." எனக் கூறி விட்டு நகர்ந்தான்.

தன்னை விட்டு விலகி செல்லும் செல்வாவின் முதுகை பார்த்தப் படி நின்றவனை உலுக்கினான் சாமிநாதன்.

"அவன் இன்னமும் அதே செல்வா தான்"

"ஆமா சாமிநாதா. நான்தான் குருடனாவே இருக்கேன். பேசாம இவனை கடத்திக்கொண்டு போயிரலாமா?"

"பைத்தியமா நீ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை சக்தியை கடத்த நினைச்ச. இப்போ இவனை கடத்தனுங்கற. நட்போ காதலோ எதிராளிக்கும் முடிவெடுக்க வாய்ப்பு கொடுடா."

'சக்திக்கிட்ட இது வரை நேரடியா காதலை சொல்லல. சும்மா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா என்னையும் பத்தோடு பதினொன்னாதான் நினைப்பா... ஓகே நாளைக்கே அவக்கிட்ட காதலை சொல்லனும்...செல்வாகிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாச்சி. அவன் மன்னிக்க மாட்டேங்கறான். அவனை வழிக்கு கொண்டு வர ஒரு திட்டம் போட்டாகனும்.'
யோசனையில் இருந்தவனை தோளை தொட்டு உலுக்க "என்ன சாமிநாதா" என்றான் மகேஷ்.

"யாரு மாமா சாமிநாதன்?" சந்தியாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் மகேஷ்வரன்.

நெற்றியில் பூத்திருந்த வியர்வையை துடைத்தபடி எழுந்தமர்ந்தான்.

"தூக்கத்துல ஏதாவது உளறி இருப்பேன்." சந்தியாவின் கையில் இருந்த காபி கோப்பையை வாங்கி வாயருகே கொண்டு சென்றான்.

"பல் விளக்காம காபி குடிச்சா சாமி கண்ணைக் குத்தும்."

கலகலவென சிரித்தவன் "நீ இன்னும் குழந்தையா என்ன? பல் விளக்காம காபி குடிச்சா உடம்புக்கு கெட்டதுன்னு சொல்லலாம். அதை விட்டுட்டு சாமி பூதம்ன்னு காலங்காத்தால காமெடி பண்ணிக்கிட்டு" என்றான்.

பதினெட்டு வயது சந்தியாவிற்கு பல விசயங்கள் நன்றாகவே புரிந்துதான் இருந்தது. அதில் ஒன்று மகேஷ்வரன் ஊரின் முன்பும் உறவின் முன்பும் போட்டு திரியும் முகமூடி. அவன் சந்தியாவிடம் மட்டும்தான் சிரிப்பான், அதுவும் தனிமையில் மட்டுமே.

ஊரை பொறுத்தவரை மகேஷ்வரன் ஒரு கட்டப் பஞ்சாயத்து செய்யும் ரவுடி. இதை நம்புவதற்கு சந்தியாவிற்கு இன்று வரை தயக்கம் தான். ஆனால் அவன் செய்யும் ரவுடியிசத்தை காதால் கேட்கையில் சந்தியா எக்கச்சக்கமாய் குழம்பி போவாள்.
சந்தியா அவனிடம் கட்டப்பஞ்சாயத்து பற்றி கேட்கும் போது ஏதாவது சொல்லி மழுப்புவான். தான் ஒரு ரவுடி என அவளிடம் அவன் ஒத்துக் கொண்டதும் இல்லை. அதே சமயம் மறுத்ததும் இல்லை.

அவனைப் பொறுத்தவரை சந்தியா அவனின் குலசாமி. அவளின் முகம் கண்டால் அவனின் முழு கவலையும் தீர்ந்து விடும்.

காபி கோப்பையை திருப்பி தந்தவனிடம் "பாட்டி வரச் சொன்னாங்க" என்றாள்.
"குளிச்சிட்டு வரேன்" என எழுந்தான்.

"மாமா"

"ம்..."

"சாமிநாதன்னு தூக்கத்துல உளறினிங்களே...அது நம்ம மைவிழியோட பெரியப்பாதானே..?"

குளிப்பதற்காக துண்டு ஒன்றை கையில் எடுத்தவன் ஆச்சரியத்துடன் அவளை திரும்பி பார்த்தான். ஏனெனில் சாமிநாதனின் பெயர் அவனின் குடும்பத்தை விட்டும் இந்த ஊரை விட்டு விலகிப் போய் பத்தொன்பது வருடங்களாகி விட்டது.
"மைவிழியோட பாட்டி சாக கிடக்கறாங்க...அவங்க சாமிநாதன்னு சொல்லி சொல்லி அழுவாங்கன்னு மைவிழி சொல்வா...அவரு பத்தொன்பது வருசத்துக்கு முன்னாடி காணாம போய்விட்டாராம். அவர் என்ன ஆனார்ன்னு உங்களுக்கு தெரியுமா?"

நம்பிக்கை நிறைந்த கண்களோடு தன்னை கண்ட சந்தியாவிடமிருந்து விலகி நடந்தவன் "எனக்கென்ன தெரியும்?"என்றான்.

"அவர் என்ன ஆனார்ன்னு உங்களுக்கு மட்டும்தான் தெரியும்ன்னு சொன்னாங்க..."

"யாரு சொன்னாங்க" என்றவனின் உறுமலில் சந்தியா ஓரடி பின்னால் நகர்ந்தாள்.
"சி...சிவ...சக்...தி..."

அவள் அப்பெயரை சொல்லி முடிக்கையில் துண்டுஅவன் கையிலிருந்து நழுவி விழுந்திருந்தது...

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்பு உள்ளங்களே..
 
OP
Sevanthi durai

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Akka namba maivizhi ithula yum varangala
இல்லம்மா.. ஆனா இந்த கதைக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கு.. கடைசி வரை படிச்சி பாருங்கம்மா
 
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN
Top