சிக்கிமுக்கி 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விகேஷை கண்டதும் அபிநயாவும் உரத்த குரலில் கத்தினாள். விகேஷ் மெதுவாக எழுந்து நின்றான்

"இங்கே என்ன பண்ற நீ.?" என்று கேட்ட மீனாவிற்கு இதயம் இன்னமும் படபடவென்று அடித்துக் கொண்டது.

மீனாவும் அபிநயாவும் கத்திய சத்தம் கேட்டு மற்ற அறைகளில் இருந்தவர்கள் அங்கே ஓடி வந்தனர்.

"அபி.. மீனு.. என்னாச்சி.. சீக்கிரம் கதவை திறங்க.." என்று பதட்டமாய் சொன்னபடி அறையின் கதவை தட்டினார்கள் மற்ற மாணவிகள்.

அபிநயாவும் மீனாவும் விகேஷை முறைப்போடு பார்த்தனர். விகேஷ் கேலி சிரிப்போடு சென்று அந்த கதவை அவனே திறந்தான். அபிநயாவும் மீனாவும் குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"வேண்டாம்ன்னு சொன்னேன் கேட்டியா.? இப்ப பாரு நல்லா மாட்டிக்கிட்டோம்.." என்றவாறு கதவை திறந்த விகேஷ் எதிரில் இருந்தவர்களை கண்டு தலையை சொரிந்தான். "சாரி கைய்ஸ்.. தேவையில்லாம உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.." என்று வழிந்தான்.

"தள்ளுங்க.. என்ன சத்தம் இங்கே.?" என்றபடி முன்னால் வந்து நின்றார் வார்டன்.

அபிநயாவும் மீனாவும் அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போய் இருந்தனர்.

"சாரி மேடம்.. நான் வேணாம்னுதான் சொன்னேன்.. ஆனா அபிதான் என் பேச்சை கேட்கல.. நீ என் ரூம்க்கு வரலன்னா அப்புறம் நான் உன்னோடு பிரேக்அப் பண்ணிப்பேன்னு சொல்லி மிரட்டினா.." என்று தயங்கி தயங்கி சொன்னான்.

அவனை அங்கே பார்த்த உடனே அவனின் கன்னத்தில் அறைய நினைத்த வார்டன் அவன் சொன்ன செய்தியை கேட்டு அபிநயாவை முறைத்தார்.

"என்ன இது அபி.?" என்றார்.

"மேடம்.. சத்தியமா நான் அவனை வர சொல்லல.. இவன்தான் எங்க ரூமுக்கு வந்திருக்கான்.. இப்ப என் மேலயே பொய் பழி போடுறான்.." என்ற அபிநயாவிற்கு பயத்திலும் கோபத்திலும் கால்கள் இரண்டும் நடுங்கின.

விகேஷ் அதிர்ச்சியோடு அபிநயாவை பார்த்தான். "ஏன் பொய் சொல்ற அபி‌.?" என்றான் கரகரத்த குரலில்.

அபிநயாவிற்கு அவனை மிதிக்க வேண்டும் போல இருந்தது.

"நடந்தது என்னன்னு நீ சொல்லு மீனா.." என்ற வார்டன் அபிநயாவையும் விகேஷையும் ஒரே கண்ணோடத்தோடு முறைத்தார்.

"நான் கண் விழிச்சி பார்த்தபோது அவன் சுவத்துல சாஞ்சி உட்கார்ந்திருந்தான் மேடம். பார்த்துட்டு பயந்து கத்தினேன் நான்.. நான் கத்திய சத்தம் கேட்டுதான் அபியே எழுந்தா.." என்றாள்.

"பொய் மேடம்.. பொய்.. நானும் அபியும் கிசுகிசுப்பா பேசிய சத்தம் கேட்டுதான் மீனா எழுந்தா. எங்களை பார்த்துட்டு கத்தினா. அவ கத்தியதும் அபியும் கத்தினா.. இப்ப மாத்தி பேசுறா.." என்றான் விகேஷ்.

மூவரையும் மாறி மாறி பார்த்த வார்டன் தன் போனை எடுத்து அழைப்பு ஒன்றை விடுத்தார்.

"அண்ணா.. இங்கே எங்க ஹாஸ்டலுக்கு வா.. சின்ன பிரச்சனை.." என்றுவிட்டு போன் இணைப்பை துண்டித்து வைத்தவர் "நீ முதல்ல வெளியே வா.." என்று விகேஷை மிரட்டி அழைத்தார்.

விகேஷ் தயங்கியபடியே வெளியே நடந்தான்.

தனக்கு உதவியாய் இருக்கும் பெண்மணியை அழைத்த வார்டன் "போய் கேட்டை திறந்து விடுங்க.. என் அண்ணன் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.." என்றவர் வரவேற்பை நோக்கி நடந்தார்.

மாணவிகள் அபிநயாவை பற்றி தங்களுக்குள் கிசுகிசுத்தபடி வார்டனை தொடர்ந்து நடந்தனர்.

விடுதியின் வரவேற்பறைக்கு வந்ததும் விகேஷை கோபத்தோடு பார்த்தார் வார்டன். "லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள நுழைஞ்சது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.? ஜெயிலுக்கு போக தயாரா இரு.." என்று மிரட்டியவர் அபிநயாவையும் அதே கோபத்தோடு பார்த்தார்.

"பார்க்க நல்ல பொண்ணு மாதிரி இருக்க.. ஆனா ஏன் இப்படி செஞ்ச.?" என்றார்.

"மேடம் அவன் எங்க ரூம்க்கு வந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. அவன் பிராடு. பொய் சொல்றான்.." என்றாள் அவள்.

"மேடம் இங்கே பாருங்க என் போனை‌.. அவ எனக்கு அனுப்பிய மெஸேஜ்.." என்றவன் தனது செய்தி செயலியை திறந்து காட்டினான்.

"விகேஷ்.. அர்ஜென்டா ஒரு விசயம் பேசணும்.." என்று முதல் செய்தி அபிநயா போனிலிருந்து சென்றிருந்தது.

"சொல்லு அபி.." என்று அவன் உடனே கேட்டு அனுப்பி இருந்தான்.

"நேர்லதான் பேசணும்.." என்று இவள் அனுப்பியதற்கு "நாளைக்கு காலேஜ்ல பார்த்துக்கும்போது பேசலாம்.." என்று அவன் அனுப்பியிருந்தான்

"நீ இன்னைக்கு நைட் என்னை பார்க்க வரலன்னா அப்புறம் நான் எப்பவுமே உன்னோடு பேச மாட்டேன்.. பிரேக்அப்பும் பண்ணிடுவேன்.." என்று இவளது போனிலிருந்து ஒரு செய்தியும் "அப்படி செஞ்சிடாத.. உன்னோடு பேசலன்னா எனக்கு நான் செத்துடுவேன்.. ஆனா நைட் எப்படி உள்ளே வரதுன்னு தெரியல.." என்று அவனது போனிலிருந்து ஒரு செய்தியும் சென்றிருந்தது.

"பின்பக்க காம்பவுண்ட்ல கண்ணாடி சீசா பதிக்காத ஒரு இடம் இருக்கும். அந்த இடத்துல ஏறி உள்ளே வந்துடு. கிழக்கு பக்கம் பாத்ரூம் பைப்பை பிடிச்சி மேலே ஏறி வந்தா அங்கே ஒரு ஜன்னல் செல்ப் இருக்கும். அது பக்கத்துல ரிப்பேரான வெண்டிலேசன் பேன் இருக்கும். அதை சும்மாதான் மாட்டி வச்சிருப்பாங்க.. அதை எடுத்து கீழே வச்சிட்டு உள்ளே வா.." என்று அனுப்பியிருந்தாள் அபிநயா.

"சரி.. உன் ரூமை மறக்காம திறந்து வை.." என்று அனுப்பியிருந்தான் அவன்.

"நைட் மணி பத்துக்கு நீதான் இதை அனுப்பி இருக்க அபி.." என்று போனை காட்டினார் வார்டன்.

"நான் இல்ல மேடம்.." என்றவளை முறைத்தவர் மீனாவிடம் "உங்க ரூம்க்கு போய் அவளோட போனை எடுத்துட்டு வா.." என்றார். மீனா அவசரமாக தங்களது அறைக்கு ஓடினாள்.

சுற்றியிருந்த மாணவிகள் அதிர்ச்சியோடு தங்களின் வாய் மீது கையை வைத்தனர். அபிநயாவை அருவெறுப்போடு பார்க்க ஆரம்பித்தனர்.

"ஹாஸ்டலுக்குள்ள நுழையுறதுக்கு புத்திசாலித்தனமா திட்டம் போட்டு தந்திருக்க.. இதுதான் நீ கத்துக்கிட்ட ஒழுக்கமா.?" என்றார் வார்டன்.

வார்டனின் குற்றச்சாட்டலும் மாணவிகளின் பார்வையும் அபிநயாவிற்கு ஒரு மாதிரியான அவமான உணர்வை தந்தன. தன்னை நம்புவதற்கு யாரும் இல்லை. தனக்கு எதிராய் உள்ள மாபெரும் பிரச்சனையிலிருந்து தான் தப்பிப்பது எப்படி என்று நினைத்தவளுக்கு அழுகை வரும்போல இருந்தது. விகேஷ் அவளை பரிதாபத்தோடு பார்த்தான். அவனின் போன் சொல்லும் செய்தியை நம்புவோர் ஏன் தான் சொல்லும் வார்த்தைகளை நம்ப மறுக்கின்றனர் என்று வேதனை கொண்டாள் அவள். பார்வை தரையை நோக்கி கீழிறங்கியது. கண்கள் இரண்டும் கலங்கின.

"அபி.." என்று ஒரு திடீர் குரலை கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்தாள் அபிநயா. கலங்கிய கண்களில் அன்புவின் உருவம் மங்கலாய் தெரிந்தது. பாதியாய் சாத்தியிருந்த விடுதியின் கதவை திறந்துக் கொண்டு மூச்சிரைக்க ஓடி வந்தவன் வந்த வேகத்தில் அவளை அணைத்துக் கொண்டான்.

"யார் நீ.? இங்கே என்ன பண்ற.?" என்று வார்டன் கேட்ட கேள்விகள் அவனின் காதுகளை சேரவேயில்லை.

அபிநயா அவனின் தோளை கட்டிக் கொண்டாள். குலுங்கி குலுங்கி அழுதாள். வார்டனும் மற்ற மாணவிகளும் இதென்ன புது கூத்து எனும் எண்ணத்தோடு அவர்களை பார்த்தனர்.

"இட்ஸ் ஓகே.." என்று அபிநயாவின் காதோரத்தில் சொன்னான் அன்பு. அபிநயாவிற்கு அந்த வார்த்தையும் அழுகையைதான் தந்தது. பலமாய் அழுதுக் கொண்டிருந்தவளின் முதுகை வருடி தந்தவன் எதிரில் வந்த மீனாவை பார்த்து "என்ன ஆச்சி.?" என்றான்.

அவனது கேள்வியை கண்டு அங்கிருந்தவர்கள் குழம்பிய நேரத்தில் விகேஷ் இருந்த திசையை கை காட்டினாள் மீனா.

புரியாமல் திரும்பி பார்த்தான் அன்பு. விகேஷ் தன் கன்னத்தை தடவியபடி அவனை பார்த்தான். அன்பு அபிநயாவை விட்டு விலகினான். வேகமாக சென்று விகேஷின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

"ஸ்ஸ்..ப்பா.." என்று பயந்து தள்ளி நின்ற வார்டன் "லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள ரவுடியிசம் பண்றிங்களா.?" என்றார் கோபத்தோடு.

அன்புவின் ஹாஸ்டல் வார்டனும் குணாவும் அங்கே வந்தனர்.

"அன்பு அவனை விடு.." என்று நண்பனை விலக்கி நிறுத்தினான்.

அன்புவின் வார்டன் தன் சகோதரியிடம் வந்தார். "என்ன ஆச்சி.?" என்றார்.

"அந்த பொண்ணு இந்த பையனை ஹாஸ்டலுக்கு வரவச்சி இருக்கா.. நாளைக்கு கரஸ்ல கம்ப்ளைண்ட் தரணும்.. அப்படியே இவங்க பேரண்ட்ஸை வரசொல்லி இந்த பொண்ணையும் டிஸ்மிஸ் பண்ணணும்.." என்றார். அவர் சொன்னது கேட்டு அதிர்ந்த அன்பு மீண்டும் சென்று விகேஷின் முகத்தில் குத்தினான். விகேஷ் தன் கையை ஓங்கினான்‌. ஆனால் அவனின் கையை பற்றிய அன்பு அவனின் கழுத்திலும் தாடையிலும் குத்துக்களை விட்டான்.

"அவனை கொன்னுடாத.. இந்த பக்கம் வா.." என்று அன்புவை இழுத்தார் அவனின் வார்டன்.

"சார் அவன் டிராமா பண்றான்.." என்றான் அன்பு ஆத்திரத்தோடு. அபிநயாவிற்கு அன்பு சொன்னது கேட்டு நெகிழ்ச்சியாக இருந்தது.

"அவன் என்ன செஞ்சான்னு நான் விசாரிக்கிறேன் விடு.. நீ என்னை நம்பு.. அந்த பொண்ணு அழறா பாரு.. அவளை கூட்டிப்போய் தண்ணீர் கொடுத்து சமாதானம் சொல்லு.." என்றார்.

"அண்ணா நீங்க என்ன பண்றிங்க.? அந்த பொண்ணு மேல தப்பு இருக்கு.." என்றார் அபிநயாவின் வார்டன்.

"இதான் தப்பு.. கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.. உனக்கு டிரஸ்ட் இஸ்யூ இருக்கறது தப்பு இல்ல. ஆனா அந்த பொண்ணும் தன் வாதத்தை நிருபிக்க நீ வாய்ப்பு தரணும்.." என்றவர் தனது விடுதியில் நடந்ததை தங்கையிடம் சொன்னார்‌. "அந்த பையன் இன்ஸ்டிங்ஸாலாயே இவ்வளவு தூரம் வந்திருக்கான்.. அவனோட ஆளுக்குத்தான் பிரச்சனைன்னு சொன்னப்ப நான் கூட நம்பவே இல்ல. ஆனா இங்கே வந்த பிறகுதான் அவனோட உள்ளுணர்வை பத்தி தெரிஞ்சது.." என்றார்.

அன்பு அபிநயாவை பார்த்தான். அதற்குள் முகம் வீங்கி விட்டிருந்தது. அவளருகே வந்தவன் அவளை அணைத்து கொண்டு நடந்தான். பக்கத்திலிருந்த நாற்காலி ஒன்றில் அவளை அமர வைத்தான்.

"இந்த உள்ளுணர்வையெல்லாம் நீங்க நம்புறிங்களா.?" கேலியாக கேட்ட பெண்கள் விடுதி வார்டனுக்கு அபிநயா இப்போது தன் இரண்டாவது காதலனிடமும் நாடகமாடுவது போல தோன்றியது.

"உனக்கு அப்ப எட்டு வயசு.. பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம் இரண்டு பேரும். ஆத்தங்கரையோர மணலுல வீடு கட்டி விளையாடிட்டு இருந்தோம். திடீர்ன்னு எனக்கு வேர்த்து கொட்டுச்சி. பயத்துல கை கால் நடுங்குச்சி. இதயம் கூட படபடன்னு அடிச்சிக்கிச்சி. ஏன் எனக்கு அப்படி நடக்குதுன்னு காரணம் புரியாம திரும்பி பார்த்தேன். களிமண் எடுக்க போன நீ ஆத்துல மூழ்கிட்டு இருந்த.. நான் உடனே கத்தி கூப்பாடு போட்டதுல பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து உன்னை காப்பாத்தினாங்க.. நான் அப்ப திரும்பி பார்க்கலன்னா இன்னைக்கு நீ என் கண் முன்னாடி நின்னுட்டு இருந்திருக்க மாட்ட.. மத்தவங்களோட உள்ளுணர்வை நம்புறதால நீ ஒன்னும் குறைஞ்சிட மாட்ட.." என்றார் ஆண்கள் விடுதியின் வார்டன்.

அவரின் சகோதரி எதுவோ பேச முயல்வதை கண்டவர் அவரே ஆரம்பித்தார். "இது ஒரு லேடிஸ் ஹாஸ்டல்.. இத்தனை பொண்ணுங்க உன் பாதுகாப்புல இருக்காங்க.. ஒரு பையன் உள்ளே வந்திருக்கான்னா அதுல உன் தப்புதான் நிறைய இருக்கு.. அதை முதல்ல நீ கவனி.." என்றார் கோபத்தோடு.

மேஜை மேல் இருந்த தண்ணீர் டிரம்மை கண்ட அன்பு சென்று ஒரு டம்ளர் தண்ணீரை பிடித்து வந்தான். அபிநயாவிடம் நீட்டினான். அவள் தேம்பிக் கொண்டிருந்தாள்.

"ஒன்னும் ஆகல.. அழாத விடு.. இந்தா தண்ணியை குடி.." என்றான் அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தபடி. அவள் தேம்பியழுதபடியே தண்ணீரை கையில் வாங்கினாள். இரண்டு விழுங்கு குடித்தாள். தேம்பியபடியே தண்ணீர் டம்ளரை அருகே வைத்தாள். அன்பு அவளின் கன்னங்களை துடைத்து விட்டான். அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

"அவன் பொய் சொல்றான்.." என்றாள் அபிநயா.

"தெரியும்.. அந்த பிராடை நான் மிதிக்கிறேன்.. நீ அழாத.." என்றான் அவன் ஆறுதலாய்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN