முகவரி 28

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அரவணைக்கத் தாய் தந்தையர் பக்கத்தில் இல்லை... கண்டிக்க உடன்பிறப்புகள் இல்லை… நல்வழியில் புத்தி சொல்ல, நல்ல நண்பர்கள் கூட இல்லை. அப்படி இருந்த மீனாவைக் கூட பிரிந்து வந்து விட்டாள் அனு. இப்படி யாருடைய துணையும் இல்லாமல் இந்த வயதில் யாரும் எடுக்கக் கூடாத முடிவை எடுத்தாள் அவள்.

‘தன் காதலன்… தன் உயிருக்கும் மேலானவன்… இனி தன்னுடைய வாழ்வே அவனோடு தான்!’ என்ற நிலைப்பாட்டில் தான் அவள் மனது இருந்தது. அதாவது, சராசரிப் பெண்ணாக குடும்ப வாழ்வைத் தவிர வேறு பக்கங்களை யோசிக்கவில்லை அவள். அவளைச் சொல்லியும் குற்றம் இல்லை... கிடைக்காத ஒன்றின் மேல் தானே ஈர்ப்பும் ஆசையும் அதிகம் ஆகும்? அப்போது அது கிடைக்கும் பட்சத்தில்... அதை யார் கொடுக்கிறார்களோ அவர்கள் சொல்வதும் செய்வதும் சரி என்றும் வேதவாக்காகவும் தானே தோன்றும்?

அதன் விளைவு… தன் ஆருயிர் காதலன் மனது துன்பப் படக் கூடாது என்பதற்காகவே... திருமணத்திற்கு சம்மதித்தாள். காதலுக்கு பிறகு அடுத்து திருமணம் தானே? அதை என்றோ எப்போதோ செய்யப் போகிறோம்... அதை இப்போதே செய்து கொண்டால் என்ன இதுவே அவள் எண்ணம்.

அவளுடைய வயதோ பதினேழு... எண்ணி நான்கு அல்லது ஐந்து மாதமே தெரிந்த இருபத்தி மூன்று வயதே ஆன ஆண்மகன் மிருடனை நம்பித் தன் மீதி வாழ்வை பிணைத்துத் கொள்ள நினைத்தது அந்த தேன்சிட்டு.

அனு சொன்னது போல்... தன் நண்பனின் ஊரில், இவர்களின் திருமணம் எளிமையாக... இனிமையாக நடந்து முடிந்தது. மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்துக் கட்டாமல்... தங்கச் சங்கிலியில் தாலி சேர்த்து... தன்னவளுக்குப் போட்டு விட்டான் மிருடன். மெட்டி என்ற கலாச்சாரம் எல்லாம் அவர்களுக்குள் இல்லை. அதைச் செய்ய சொல்ல பெரியவர்கள் அல்லவா இருக்க வேண்டும்? இதுவோ அவசரகதியில் நடந்த பொம்மை திருமணம் அல்லவா… தங்களின் காதலை உரிமையாய் பரிமாறி கொள்ள தாலி என்ற அடையாளம் வேண்டும்… ஒருவேளை இப்படி தான் நினைத்ததோ இருவரின் மனது… திருமணம் முடிந்த பின்னரும் மிருடன் அனுவை அவள் வீட்டிலேயே தங்க சொல்லி விட்டான்…. அவள் மேஜர் ஆன பிறகு திருமண ரகசியத்தை வெளியிட்டு கொள்ளலாம் என்று அவன் சொல்ல…. வழமை போலவே பூம்… பூம்… மாடாய் தலையை அசைத்தால் அனு முன்பு போலவே எப்போதும் போல் அனுவுக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் தன் காதல் மணவாளனை கணவனை ரகசியமாய் சந்திக்கவும் தவறவில்லை அவள்.

திருமணம் முடிந்து விட்டது… அதன் பிறகு என்ன... கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் இருவரும் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றார்கள். எல்லா கணவன் மனைவியைப் போல் உரசல்... கொஞ்சல்… கெஞ்சல்... அழுகை... ஊடல் கூடல் என்று சென்றது அவர்கள் வாழ்க்கை.

மனைவிக்கு வண்டி ஓட்டுவதிலிருந்து அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான் மிருடன். அதனோடு கணவன் பாடத்தையும் சொல்லி தரவும் தவறவில்லை அவன். இதற்கு இடையில் மிருடன் வேறு ஒரு நல்ல வேலைக்கு முயற்சிக்க.. அதற்காக அவன் வெளியூர் சென்றிருந்த நேரம்... அனு வாழ்வில் நடந்தது அப்படி ஒரு சம்பவம்...

ஒரு நாள்…. குணநாதனின் கட்சியில் இருப்பவரும் அனுவுக்குத் தெரிந்தவருமான ஒருவர் அனுவை போனில் அழைக்க, “ஹாய் அங்கிள்... எப்படி இருக்கீங்க? சொல்லுங்க” இவள் கேட்க

“அனு, நான் சென்னை வந்து இருக்கிறேன் என்னிடம் உன் அப்பா... உனக்கான சில பொருட்களை கொடுத்து விட்டிருக்கார். நீ யாரையும் வீட்டுக்கு வர கூடாதுனு சொல்லிட்டியாமே.. அதான் என்கிட்ட கொடுத்தனுப்பினார். நீ வந்து வாங்கிக்க அனு” என்றவர், அவள் சம்மதம் சொன்னதும்... இவர் எந்த இடம் என்று சொல்ல... தன் ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள் அவள். ஆமாம் இப்போதெல்லாம் அவள் எங்கு செல்வது என்றாலும் ஸ்கூட்டி தான். இது அவள் கணவனின் கட்டளை

இவள் ஹோட்டல் வாசலின் முன் வண்டியை நிறுத்தவும்... ஒருவன் வந்து அவள் வண்டியை வாங்கிக் கொள்ள... இவளிடம் பேசியவரின் பி.ஏ இவளிடம் நெருங்கியவன்... “வாங்க மேடம்…. சார் உங்களுக்காகத் தான் வெயிட் செய்திட்டு இருக்கார்” என்று அழைத்துச் செல்ல… அதன் விளைவு அறையை பதிவு செய்தவனின் பெயரை அனு கேட்டு அறிந்து கொள்ள முடியாமல் போனது.

இவள், “அங்கிள்...” என்றபடி ஓர் அறையின் உள்ளே நுழைந்ததும்... கூட வந்த பி.ஏ அவசரமாய் அறையின் கதவை வெளிப்பக்கம் பூட்டி விட... சர்வமும் அடங்கியது அனுவுக்கு. இது என்ன விளையாட்டு… அப்படி விளையாட இதை யார் செய்தது…. கடத்தலா… நடுக்கத்துடன் விழிகளை சுழற்றியவளுக்கு அந்த அறையில் யாரும் இல்லை... என்பது தெரிந்தது… கையிலும் போன் இல்லை. வண்டி பெட்டியில் வைத்து விட்டாள். இப்போ என்ன செய்வது... இவள் கத்த, கூச்சலிட…. ம்ஹும்…. எந்த பயனும் இல்லை. நேரம் தான் கடந்தது

‘அப்போ… அங்கிள் தப்பானவரா? கெட்டவரா? வீட்டில் என்னைக் காணாமல் தேடக் கூட ஆள் இல்லையே!’ என்று ஆற்றாமையோடு மனதிற்குள் புலம்பியவளுக்கு… கழிவிறக்கத்தில் விழிகளில் கண்ணீர் உதிர்த்தது.

“மிரு... மிரு... எங்க இருக்கீங்க... நீங்களாவது என்னைத் தேடுவீங்களா?...” என்று இவள் வாய் விட்டே அரற்ற... எங்கோ இருந்த மிருடனுக்கோ... மனதை ஏதோ செய்தது.

‘ஏன் எதற்கு என்னை கடத்தணும்? அப்பா மேல் உள்ள கோபமா... வன்மமா?’ ஒன்றும் புரியாமல் பல மணிநேரம் கத்தி… யோசித்து அனு சோர்ந்து போயிருந்த நேரம் யாரோ கதவைத் திறக்க முற்பட... அப்பாடா என்று உயிர் வர…. இவள் ஓடிச் சென்று கதவிடம் நிற்க, உள்ளே நுழைந்தார்கள் காவலர்கள்.

ஆமாம்… இந்த இடத்தில் தவறான தொழில் செய்யப்படுவதாகவும்… அப்படி செய்யும் பெண்களைக் கைதி செய்ய வந்துள்ளதாக அவர்கள் கூற… அதிர்ந்து போனாள் அனு. இவள் தன் நிலையை விளக்க... வந்தவர்கள் காதில் வாங்கவில்லை. காரணம் அனு சொல்வது பொய் என்பதற்கு சாட்சியாக... அந்த அறையின் குளியலறை உள்ளே இருந்தான் ஒரு ஆடவன். பின் எப்படி நம்புவார்கள்? அனுவுக்குத் தலையே சுற்றிவிட்டது. இவ்வளவு நேரம் அவன் இருப்பது கூட தெரியாமல்… ஒரே அறையில் அவனுடன் இருந்து இருக்கிறாள் அவள்.

தான் மத்திய அமைச்சர் குணநாதனின் மகள் என்று இவள் எவ்வளவோ சொல்லி வாதிட... இவளை வைத்து இவள் தந்தையைப் பழிவாங்க என்று வந்த அந்த கூட்டம் எதையும் காதில் வாங்கவில்லை. மற்ற பெண்களோடு பெண்களாய் இவளையும் நிற்கவைத்து புகைப்படம் எடுக்க, கூனிக் குறுகிப் போனாள் அனு. அங்கு வந்திருந்த பத்திரிகைக்காரர்களிலிருந்து... போலீஸ்காரர்கள் வரை இன்னும் கேவலமாய் இவளை பேச... உயிர் இருந்தும் பிணமாகிப் போனாள் அவள்.

ஆனால் அனுவின் நல்லநேரம்… அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவனுக்கு அனு தொழிலதிபர் செல்வராஜின் பேத்தி என்று சிறிதாய் சந்தேகத்தில் தெரிந்திருக்க... அதை அவன் அவரின் பி.ஏ விடமும், டி.சி.பி இடமும் தெரிவிக்க... அவர்கள் இருவரும் இங்கு விரைந்து வந்து செயல்படுவதற்குள்... அங்கு நெருப்பின் மேல் நின்றிருந்தாள் அனு.

அதற்குள் அவள் தாத்தாவின் பி.ஏ வந்து விட.... அனுவின் புகைப்படங்களும், அவளைப் பற்றிய தகவலும் விரைந்து பத்திரிகையாளர்களிடம் இருந்து அகற்றப் பட்டது...

செல்வராஜிவின் பி.ஏ, “பாப்பா... இந்த நேரத்தில் நீ தனியா டூ வீலரில் போக வேண்டாம்... காரில் போங்க... நான் இங்கே மற்றதை எல்லாம் முடிச்சிட்டு வரேன்” என்று சொல்லவும்,

அவ்வளவு தான்... அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அம்பாய்... அந்த இடத்தை விட்டு உடல் உதற... முகம் வெளுக்க... காரில் ஏறிக் கொண்டாள் அனு. அவள் ஏறிய மறு நொடி... அவள் விழிகளோ இவ்வளவு நேரம் கொட்டாத அருவி நீரைக் கொட்டியது. வீட்டிற்குள் வந்தால் அவளை அன்பாய் தாங்கி ஆதரிக்க யாருமே இல்லை. ஏன்… என்ன டி இப்படி செய்திட்ட என்று கண்டித்து கோபப்பட ஒரு ஜீவனும் அங்கு இல்லை.

அவள் தாத்தாவோ, ஷார்ஜாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு நடுவராய் சென்றிருக்க... அவளின் தந்தையோ ஒரு சினிமா நடிகையுடன் உல்லாசமாய் தன் பொழுதை வேறொரு நாட்டில் கழித்துக் கொண்டிருந்தார். ஆனால் இங்கு அவர்களின் வாரிசோ பாதுகாத்து அரவணைக்க ஆளில்லாமல் ஜூரத்தில் இருந்தாள். ஆமாம்… அழுது அழுது அனுவுக்கு ஜூரமே வந்து விட்டது. அவளுக்கு நடந்த விஷயம் வெளிநாட்டில் இருக்கும் தாத்தா... அப்பா யாருக்கும் தெரியாது. வெளிநாடு சென்றால் இங்கு நடப்பது எதையும் சொல்லக் கூடாது என்பது அவர்களுடைய பி.ஏ க்களுக்கு எழுதப்படாத சட்டம்.

கோடி கோடியாய் பணம் இருக்கிறது… அனு கூப்பிடும் குரலுக்கு வந்து நின்று அவளைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அவள் கேட்பது எல்லாம்... அவளுக்கு நடந்த அநியாயத்திற்கு... அவளைப் பேசியவர்களை அங்கேயே நிற்க வைத்து நாலு அரை அறைந்து பல்லைக் கழற்றவில்லையே என்பது தான். அப்படி எல்லாம் செய்ய யாரோ ஒரு பி.ஏ.வுக்கு வருமா? உரிமை உள்ளவர்களுக்குத் தானே வரும்?

அந்த உரிமையைத் தந்தை... தாத்தாவை விட, தன் காதலனான... கணவனான.. காவலனான... உயிரானவனான அவளின் மிரு செய்வான் என்பதைத் தான் அவளின் மனது எதிர்பார்த்தது. உடல்நிலை சரியானதும் ஏனோ அவனைத் தான் அவளின் மனது தேடியது. உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் மிருவின் வீட்டை நோக்கி.

சைக்கிள் என்றால் தானே இவள் அவனைக் காண வந்தது தெரியாமல் பாதுகாப்பாய் ஒரு மறைவான இடத்தில் அதை விட முடியும்? அதற்கான இடத்தைக் சுட்டி காட்டி அவளை அப்படி செய்ய சொன்னதும் மிருடன் தான். இன்றும் வழக்கம் போல் இவள் சத்தமில்லாமல் மறைவான அதன் இடத்தில் சைக்கிளை நிறுத்த

“டேய் மச்சான்... நீ சரியான கில்லி டா... மிருடவாமணனா கொக்கா? சாதிச்சிட்ட மச்சான்!” என்று உள்ளே இருந்து ஒரு ஆண் குரல் கேட்க

“டேய்... நீ வேற நேரம் காலம் தெரியாம… கொஞ்சம் சும்மா இரு டா” மிருடன் பதில் தர

“யப்பா... யப்பா... என்ன ஒரு தன்னடக்கம்! நம்ம தொகுதி மக்களுக்கு அநியாயம் செய்த அந்த மத்திய அமைச்சர் குணநாதன் பொண்ணு பேர் என்ன? ஆஹ்ம்... அனுதிஷிதா... அவ மேலே களங்கம் ஏற்படுத்த... காதலிக்கிற மாதிரி நடித்து... தட்டித் தூக்கி இருக்கீயே! நீ எங்க கிட்ட எல்லாம் சொன்ன மாதிரி செய்திட்டியே டா... சூப்ப்பர் மச்சான்!

என்ன… இந்த விஷயம் நியூஸ் பேப்பரில் வர்றதுக்குள்ள... உன் பிளானை எல்லாம் சொதப்பிட்டான் அந்த பி.ஏ. இருந்தாலும்... நீ சொன்னதை செய்ததினாலே நிச்சயம் நம்ம தலைவர் உனக்கு ஏதாவது கொடுப்பார் டா... அவரை வந்து பாரு மச்சான்”

இன்னும் உள்ளே இருப்பவன் என்னென்ன பேசி இருப்பானோ... அனுவும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் மிருடன் என்ன சொல்கிறான் என்பதையும் கேட்டிருப்பாளோ... ஆனால் அவளின் அவசரம்...

அதற்குள் அனு, “படார்...” என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, அவளைப் பார்த்ததில் பேசிக் கொண்டிருந்த நண்பன் தெனாவட்டாய் அவளைப் பார்க்க... இவ்வளவு நேரம் நாற்காலியில் தலை சாய்த்து கண் மூடியிருந்த மிருடன் சத்ததில் கண்களை விழிக்க... அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், உடல் மொழியுமே அவன் செய்த துரோகத்தை அப்பட்டமாய் அனுவுக்குப் படம்பிடித்துக் காட்ட… கூடவே அவன் கண்களோ ரத்தமென சிவந்திருக்க

துரோகம்... துரோகம்... துரோகம்.... எப்படியான துரோகம்… அனு மனம் முழுக்க இப்படியான வார்த்தைகளே அலையாய் அடிக்க

“யாரு டா நீ… உன் உண்மையான பெயர் என்ன... என் அப்பாவை பழிவாங்கிறதிற்க்காக என் வாழ்க்கையை அழித்தது நீ தானா? எப்படி எல்லாம் நடித்து என்ன ஏமாற்றி இருக்க டா!” தான் கேட்ட விஷயங்களில் அதிர்ச்சியில் அனு மிருடனைப் பார்த்துப் பேசிய வார்த்தைகள் இது தான்.

“ஷிதா...” மிருடன் அகப்பட்டு கொண்டவனாய் அதிர்ந்து போய் ஏதோ சொல்ல வர

“ஏய்.. என்ன ரொம்ப பேசுற நீ? ஆமாம் எல்லாம் இவன் தான் செய்தான். எங்க கிட்ட சொல்லிட்டு தான் செய்தான்… உன் அப்பன் மாதிரி துரோகிக்கு நாங்க பாடம் சொல்லிக் கொடுக்க நினைத்தோம்... அதைத் தான் என் நண்பன் செய்தான். அந்த ஆளுக்கு மகளா பிறந்த நீ மட்டும் என்ன நல்லவளாவா இருப்ப...” நண்பன் முடிப்பதற்குள் அவன் கன்னத்தைப் பதம் பார்த்து இருந்தது மிருடனின் விரல்கள்.

“வெளியே போ டா... இனி ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்கக் கூடாது. மீறி இருந்த... உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. வெளியே போ டா...” இப்படி ரவுத்திரமாய் கத்தியது மிருடன் தான்.

‘நண்பனின் வார்த்தைக்கு இல்லை என்று மறுப்பு சொல்லவில்லை... அவனை வெளியே அனுப்புவதில் தான் குறியாக இருக்கிறான். அப்போ அப்போ... இவன் தான் அனைத்தும் செய்திருக்க வேண்டும்... இவனையா நான் உயிராக நேசித்தேன்? என் வாழ்வை இவனை நம்பியா ஒப்படைத்தேன்… என் மன வலிகளுக்கு ஆதரவாக இவனைத் தேடினேனே... இப்போது கூட எனக்கு நடந்த அநியாயத்தை இவனிடம் கொட்ட ஓடி வந்தேன்... கடைசியில் அந்த துரோகி இவன் தானா?! அனுவுக்கு அதிர்ச்சி... அதிர்ச்சி... அதிர்ச்சி... வரும்போது இருந்ததை விட... இப்போது இன்னும் அதிர்ச்சியில் சிலையேன இவள் நிற்க...

அவள் முகத்தில் வந்து போன பாவத்தில் “ஷிதா...” மிருடன் அவளிடம் நெருங்க

“ச்சீ... என் கிட்ட வராதே... துரோகி! நீ எல்லாம் நல்ல குடும்பத்தில் நல்ல தாய்க்கு பிறந்திருக்க மாட்ட டா... பொறுக்கி..” இவள் ஆங்காரமாய் கத்த

“ஏய்! அடித்து... பல்லை எல்லாம் உடைச்சிடுவேன். என்ன பேச்சு பேசுற நீ?” இவனும் ஆத்திரத்தில் எகிற

“ஆமாம்… உன் தாய் நல்லவ இல்லை. அதனால் தான் உன்னை அனாதையா போட்டுட்டுப் போய்ட்டா. உன் பிறப்பு சரியில்லை… அதான் என் அப்பா மேலுள்ள வஞ்சத்தில் நீ என் வாழ்வையே அழிச்சிருக்க...” நிதானம் இல்லாமல் ஏமாந்த அவமானத்தில் இவள் அவனை அடிக்க

“வார்த்தையை நீ அதிகமா விடற ஷிதா. வேண்டாம்… உனக்கு நல்லது இல்லை...” அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு இவன் எச்சரிக்க

“ஓஹ்... உனக்கு ரோஷம் வேற வருதா? ச்சீ... உன்னுடைய பிறப்பு என்னனே தெரியாத நாய் நீ... நீ என் வாழ்க்கையை அழிப்பியா? அநாதை நாயா”

அவள் முடிக்கவில்லை தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்தவன், “ஆமா டி... உன் வாழ்க்கையை அழிக்கத் தான் நான் வந்தேன்… அதற்கு என்ன இப்போ?”

“உன்னை நம்பினேனே டா.... எப்படி டா உன்னால் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை எனக்கு செய்ய முடிந்தது?” இவ்வளவு நேரம் ஆங்காரமாய் இருந்தவள்... தன் உயிரானவன் வாய் மொழியாகவே இப்படியான வார்த்தைகளைக் கேட்டதும் மடங்கி அழ

ஆங்காரத்தனமாய் இருந்தவளை எதிர்கொள்ள முடிந்தவனால்... இப்படி அழும் மனைவியை எதிர்கொள்ள முடியாமல் போக, “ஷிதா...” பரிவாய் தன்னவளின் கேசத்தை இவன் வருட...

பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள் “ச்சீ... என்ன தொடாதே... பொறுக்கி...”

“என்ன டி சும்மா சும்மா பொறுக்கி பொறுக்கினு சொல்ற... நான் உன் புருஷன் தானே… தொட்டா தான் என்ன?” இவன் தன் அடையாளத்தை நிலைநிறுத்த நினைத்தானோ

“அடப்பாவி! ஒரு மனைவிக்கு செய்யக் கூடாத துரோகத்தையும், பாவத்தையும் எல்லாம் செய்திட்டு... புருஷன்னு வேற சொல்கிறயா?

ஓஹ்... அதனால் தான் என்ன அடுத்தவன் கூட பங்கு போட இருந்தீயா? இல்லை… நாலு சுவற்றுக்குள்ள நான் கதறி சின்னாபின்னம் ஆகிறதை பார்க்க இருந்தியா? அச்சோ... பாவம் நீ பார்க்க ஆசைப்பட்டது நடக்கலையே... அப்போ என்னை திரும்ப சின்னாபின்னம் ஆக்கணும்னு உனக்கு வெறி வரும் இல்ல?”

“ஏய்... அசிங்கமா பேசாத டி... நான் அப்படி நினைத்து உன்னை நெருங்கினது உண்மை தான். ஆனா...” இவன் விளக்கம் தர முற்பட

அந்த வார்த்தைகள் அவள் மூளைக்குள் மின்னல் என பாய அதிர்ச்சியில், “ஓஹ்... நீ நினைத்த... அதான் என்னிடம் நெருங்கின...” கண்கள் எங்கோ நிலைகுத்த, பித்துப் பிடித்தவள் போல் வாய் ஓயாமல் அனு இதையே சொல்லி கொண்டிருந்தால் பின்னே? அஅவளுடைய காதல் கணவன் பொய்த்துப் போனானே! அவள் வேறு எப்படி இருப்பாள்... மிருடனுக்கே அவளைக் கண்டு பயம் கண்டது. ஆனால் அவனோ தான் செய்ய இருந்த பாவத்திலிருந்து மீள முடியாமல் இருந்தவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பாகி போக

“என் வாழ்வை அழிக்க உனக்கு யார் அதிகாரம் தந்தது? ஓஹ்... நீ என் புருஷன் இல்ல... அந்த உறவைக் கொண்டு தானே நீ என்னை நெருங்கின... அப்போ அந்த உறவை நான் கொடுக்காமல் போனா?”

“ஷிதா...” மிருடன் அதிர்ச்சியோடு அவள் முன் மண்டியிடவும்

எதையும் கண்டு கொள்ளும் நிலையில் ஷிதா இல்லை... “ம்ம்ம்.... ஆமாம்... அந்த உறவு நமக்குள்ளே இல்லைனு ஆகணும். அதற்கு சாட்சியாவும்... அடையாளமாவும் இருக்கிற இந்த தாலி எனக்கு வேண்டாம்... ஒரு நம்பிக்கை துரோகி என்றைக்கும் என் கணவனாக முடியாது” அதை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் அடுத்த நொடியே தன் கழுத்திலிருந்த தாலி செயினைக் கழற்றியவள்… ஸ்தம்பித்து சிலையென இருந்தவனின் முகத்தில் விட்டெறிந்தவள்,

“இந்த வினாடியிலிருந்து உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. அதாவது நீ என் கணவன் இல்லை. அவன் செத்துட்டான்... என் மிரு செத்துட்டான்... செத்தே போய்ட்டான். என்றைக்குமே நீ என் மிருவாக முடியாது....”

வார்த்தைகளை அவனுக்கு வலிக்க வேண்டும் என்று தான் கொட்டினாள். ஆனால் அதனுடைய வலியைத் தாங்க முடியாமல் இவள் தான் கையில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள். எவ்வளவு நேரம் அவள் அழுது கொண்டிருந்தாளோ… இல்லை இவன் தான், தன் மடியில் வந்து விழுந்த தாலி செயினை வெறித்துக் கொண்டிருந்தானோ... அனுவின் போனுக்கு அழைப்பு வர... தன் சிந்தனையில் இருந்து கலைந்தவளுக்கு அப்போது தான் தான் இருக்கும் இடம் தெரிய... இனி செத்தாலும் மிருடன் முகத்தில் முழிக்கக் கூடாது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினாள் அனு.

எந்த தன்மானம் உள்ள பெண்ணும் செய்ய வேண்டிய செயலைத் தான் அனு செய்திருக்கிறாள். தன் வாழ்வை அழித்தவனை... தன் உயிரானவனைத் துச்சமென தூக்கி எறிந்து தண்டனை கொடுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் இவள் தீர்ப்பு எழுதி தண்டனை தர… ஆனால் மிருடவாமணன் அந்த தண்டனைக்கு உரியவனா?...
 

UMAMOUNI

Member
ஷிதா செய்தது சரிதான் . அவள் அப்பா செய்த தவறுக்காக இவள் எப்படி தண்டனை பெறுவாள்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஷிதா செய்தது சரிதான் . அவள் அப்பா செய்த தவறுக்காக இவள் எப்படி தண்டனை பெறுவாள்
நன்றிங்க சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN