சிக்கிமுக்கி 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா அன்புவின் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாத குட்ட.." என்று சமாதனம் சொல்லிக் கொண்டிருந்தான் அன்பு. தூரத்தில் நின்றிருந்த மாணவிகள் அவர்கள் இருவரையும் வேற்றுகிரகவாசிகளை போல அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அபிநயாவின் வார்டனுக்கு அன்புவையும் அபிநயாவையும் பார்க்க சகிக்கவில்லை. 'எப்படி இப்படி வெட்கமில்லாமல் இருக்கிறாள் அவள்.?' என்று அபிநயாவை பற்றி யோசித்தார். ஆனால் பழைய வாட்ச்மேன் வேலையை விட்டு நின்று ஒரு மாதம் ஆகியும் புது வாட்ச்மேன் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் தன் மீது இருக்கும் தப்பை பற்றி யோசிக்க மறந்து விட்டார்.

அபிநயாவின் போனை எடுத்து வந்த மீனா அதை பெண்கள் விடுதியின் வார்டனிடன் தந்தாள்.

"அபியோட போன் மேடம்.." என்றாள். வார்டன் தன் அண்ணனை முறைத்துக் கொண்டே அந்த போனில் இருந்த செய்தி செயலியை திறந்தாள்.

"உன் டிராமா போதும் பொண்ணே.. அந்த பையனுக்கு நீதான் மெஸேஜ் அனுப்பி இருக்கன்னு ஆதாரம் கிடைச்சிடுச்சி.." என்று தன் கையில் இருந்த போனின் திரையை மற்றவர்களிடம் காட்டினார் அவர்.

அபிநயாவிற்கு அதிர்ச்சியில் அழுகை நின்றுப்போனது. அன்புவை விட்டு விலகியவள் போனை குழப்பத்தோடு பார்த்தாள். "நான் நிஜமா அதை அனுப்பல மேடம். சத்தியம்.." என்றாள். அன்பு விகேஷை ஆத்திரம் குறையாமல் பார்த்தான். 'என்ன பண்ணி இருப்பான் அவன்.?' என்று சிந்தித்தான்.

"அவனும்தான் சத்தியம் பண்றான் நீயும்தான் சத்தியம் பண்ற.. யாரை நம்பட்டும் நான்.? இவனோடு பிரேக்அப் பண்றதா மெஸேஜ் அனுப்பி இருக்க.. ஆனா அவனை அணைச்சிக்கற.. நீ காலேஜ் வந்தது லவ் பண்ணவா இல்ல படிக்கவா.? அதுவும் ஒரே டைம்ல இரண்டு பேரை லவ் பண்றது மனசாட்சிக்கே விரோதமான செயல்.. உனக்கு அதெல்லாம் புரியுதா.?" என்றார் வார்டன்..

அபிநயா மறுப்பாக தலையசைத்தபடி எழுந்து நின்றாள். "இல்ல மேடம்.. இவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.." என்றான் அன்பு அபிநயாவோடு இணைந்து எழுந்து நின்றபடி.

"ரோகிணி நீ ரொம்ப ஓவரா போற.. சின்ன பொண்ணுக்கிட்ட பேசுற பேச்சா இது.?" என்று சகோதரியை மிரட்டினார் அன்புவின் வார்டன்.

"உங்களோட பள்ளி பருவ காதலி சின்ன வயசுலயே செத்துட்டாங்கற காரணத்துக்காக நீங்க வேணா சன்னியாசியா இன்னைக்கு வரைக்கும் வாழ்ந்துக்கிட்டு இருக்கற எல்லா காதலர்களுக்கும் வக்காலத்து வாங்கலாம். ஆனா நானும் உங்களை மாதிரி இருக்க மாட்டேன்.." என்ற ரோகிணி தன் போனை எடுத்தார்.

"மகளிர் காவல் நிலையத்துல இருப்பவங்களை வர சொல்றேன்.. அவங்ககிட்டயே நீங்க உங்க நியாயத்தை சொல்லிக்கங்க.." என்றார்.

அபிநயாவின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது. அன்பு ரோகிணை நோக்கி நடந்தான்.

"அந்த போனை இப்படி கொடு.." என்று தங்கையின் கையில் இருந்த போனை வாங்கிய அன்புவின் வார்டன் "ஹாஸ்டல்க்கு சாதாரண வார்டன்தான் நீ.. எல்லாத்தையும் முடிவெடுக்கற உரிமை உனக்கு கிடையாது. நாளைக்கு காலேஜ் கரஸ்ல சொன்னா அவங்க என்ன செய்யணுமோ அதை செய்வாங்க.. அநியாயமா ஒரு அப்பாவி பொண்ணோட லைப்பை ஸ்பாயில் பண்ணிடாத நீ.. இப்ப இருக்கற டெக்னாலஜியில யார் போன்ல இருந்து யாருக்கு வேணாலும் மெஸேஜ் அனுப்பிக்கலாம். அந்த பையன் முகத்தை பார்த்தாலே தெரியலையா உனக்கு அவன் முழு பொறுக்கிங்கறது.?" என்றவர் அபிநயா பக்கம் பார்த்தார். "நீ அழாதம்மா.. உன் மேல தப்பு இல்லன்னா உன்னை யாராலும் தண்டிக்க முடியாது.." என்றார்.

"அவ மேல எந்த தப்பும் இல்ல.. ஒருத்தரை பத்தி எதுவும் தெரியாம அவங்களோட கேரக்டரை பத்தி தப்பா நினைக்கற மைன்ட் செட்ல இருந்து முதல்ல வெளியே வாங்க.. இது உங்களோட பாதுகாப்புக்குள்ள இருக்கற ஹாஸ்டல்லன்னு ஏற்கனவே எங்க சார் உங்களுக்கு நியாபகப்படுத்திட்டாரு.. ஒரு இளம்பெண்ணோட ரூம் வரை ஒரு பொறுக்கி வந்ததுக்கு காரணம் இந்த ஹாஸ்டலோட நிர்வாகம்தான் காரணம்.. நியாயப்படி நாங்கதான் உங்க மேல கம்ப்ளைண்ட் தரணும்.." என்ற அன்பு வார்டன் பின்னால் நின்றிருந்த விகேஷின் வயிற்றில் ஒரு உதையை விட்டான்.

"உனக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம்.? நீயா வந்துதான் அவளை இடிச்ச. அதுக்கு நான் அடிச்சேன். ஆனா நீ என் போட்டோவை லேடி புரபொசர்ஸ்க்கு அனுப்பி என் மேல வீண்பழியை போட பார்த்த.. ஆனா அத்தோடு முடிஞ்சிடுச்சி இல்லையா.? அந்த பிரச்சனையில் கூட நான் ஆதாரம்தான் தேடினேனே தவிர உன்னை வந்து மிதிக்கல.. அப்புறம் ஏன்டா எங்க லைப்ல வந்து இப்படி டார்ச்சர் பண்ற.?" என்றான் எரிச்சலோடு.

"அவனை ஏதாவது பண்ணிடாதடா.. இப்படி தூர வா.. ஏற்கனவே பல பிரச்சனை.." என்று அன்புவை தூர இழுத்தான் குணா.

"ஓ.. நீதான் புரபொசர்க்கு தப்பு தப்பா போட்டோ அனுப்பியவனா.?" என்று இளக்காரமாக கேட்ட ரோகிணியின் கையை பற்றினார் அவரின் அண்ணன்.

"எதுவும் தெரியாம பேசாத.. அவன் ரொம்ப நல்ல பையன்.." என்றார்.

"குணா விகேஷை கூட்டிட்டு வா.. நாளைக்கு அவனை கரஸ்ல ஒப்படைக்கலாம். அவங்க என்ன முடிவு வேணாலும் எடுக்கட்டும்.." என்றார். குணா வார்டனை குழப்பமாக பார்த்துவிட்டு விகேஷின் அருகே நடந்தான். விகேஷ் தன் இரு கைகளையும் உயர்த்தினான். "நானே வரேன்.. லேடிஸ் ஹாஸ்டல் வரைக்கும் வந்தவன் பாய்ஸ் ஹாஸ்டலுக்கு வர மாட்டேனா.?" நக்கலாக கேட்டுக் கொண்டே முன்னே நடந்தான். குணா மீனாவை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு விகேஷை பின்தொடர்ந்து நடந்தான்.

"நீதான் அந்த பொண்ணோட பிரெண்டாம்மா.?" மீனாவை பார்த்து கேட்டார் ஆண்கள் விடுதி வார்டன்.

"ஆமா சார்.." என்றவளிடம், "அந்த பொண்ணை கூட்டிப்போய் தூங்க வை.. காலையில் எல்லாமே சரியா போயிடும்.." என்றார் அவர்.

"ரொம்ப தேங்க்ஸ் சார்.. எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியவங்க கூட எங்களை நம்பல. ஆனா நீங்க நம்புனிங்க.. உங்களோட உதவியை என்னைக்குமே மறக்க மாட்டோம் சார்.." என்ற மீனா அபிநயாவை அழைத்துக் கொண்டு நடந்தாள்.

அபிநயா அன்புவை கலங்கும் கண்களோடு பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

ரோகிணியின் கையில் இருந்த அபிநயாவின் போனை பிடுங்கினார் அன்புவின் வார்டன். "இதை நானே கரஸ்ல ஒப்படைச்சிக்கிறேன்.." என்றார்.

"நீங்க அதுல இருப்பதை அழிக்க போறிங்களா.?" ரோகிணி சந்தேகமாக கேட்க இல்லையென தலையசைத்தவர், "அழிச்சிட்டா அப்புறம் எப்படி அந்த பையன் செஞ்ச தில்லுமுல்லை பத்தி சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்ல புகார் தெரிவிக்க முடியும்.?" என்றார். ரோகிணிக்கு தன் அண்ணன் சொல்வதை பற்றி நம்பிக்கையே இல்லை. நாளை காலையில் தான் எடுத்த அதே முடிவைதான் மேலிடமும் எடுக்க போகிறது என்று நம்பினார் அவர்.

"அன்பு வா.. நாம போகலாம்.. விடியறதுக்குள்ள எதுவும் மாறிட போறது இல்ல.." என்றார். படிகளேறி சென்றுக் கொண்டிருந்த அபிநயாவை பார்த்தபடியே அங்கிருந்த சென்றான் அன்பு.

"எல்லோரும் போய் தூங்குங்க.." என்று மாணவிகளை அனுப்பினார் வார்டன். பின்னர் விடுதியின் கேட்டை பூட்ட கிளம்பினார்.

மாணவிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

அபிநயா அன்று இரவெல்லாம் உறங்கவேயில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள். அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்த மீனா "அழாம இரு.." என்று அடிக்கடி சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நான் எந்த ரூம்ல தூங்கட்டும்.?" என்று கேட்டபடியே விடுதிக்குள் நுழைந்த விகேஷின் பின்னங்கழுத்தை பற்றினார் வார்டன். அன்புவும் குணாவும் அதிர்ச்சியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"சார் என்னை விடுங்க.." என்ற விகேஷை தனது அறைக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளினார். விகேஷ் அதிந்துப் போய் அவரை பார்த்தான். ஒன்றும் புரியாமல் அவரை பின்தொடர்ந்த அன்புவையும் குணாவையும் பார்த்தவர் "அந்த கதவை தாழ் போடுங்க.." என்றார். இருவரும் உள்ளே வந்து கதவை தாழிட்டனர்.

"உன் போனை குடுடா.." என்று விகேஷிடம் கையை நீட்டினார் அவர். அவன் மறுப்பாய் தலையசைத்ததும் குனிந்தவர் அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டார்.

"என்னை யார்ன்னு நினைச்சி தலையாட்டிட்டு இருக்க.. மகனே உன்னை இங்கே வெட்டி புதைச்சிட்டு உன்னை பத்திய தடமே இல்லாம பண்ணிடுவேன் நான்.." என்றவர் அவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தார்.

"இதுல இவனோட பேரண்ட்ஸ் நம்பரை எடு.." என்று போனை அன்புவிடம் நீட்டினார்.

"சார் என் பேரண்ட்ஸ் வெளிநாட்டுல இருக்காங்க.." என்றவனை முறைத்து பார்த்தார்.

"உன் அப்பா அம்மா பக்கத்துல இல்லன்னா இப்படியெல்லாம் தப்பு பண்ண சொல்லுதா.?" என்றார் கோபத்தோடு.

"சார் என் மேல எந்த தப்பும்.."

"அங்க சொன்ன அதே பொய்யை என்கிட்டயும் சொல்ல டிரை பண்ணாத.. அப்புறம் விடியும்போது உயிரோடு இருக்கமாட்ட நீ.." என்று மிரட்டினார் வார்டன்.

"அநியாயமா மிரட்டுறிங்க.." என்ற விகேஷை பார்த்து சிரித்தவர் "நீ உண்மையை சொல்லு. நான் மிரட்டல.." என்றார்.

விகேஷின் போனில் உள்ளதை ஆராய ஆரம்பித்தான் அன்பு. அவனின் செய்தி செயலியில் அபிநயா போனில் இருந்து அனுப்பப்பட்ட செய்திகள் வரிசையாக இருந்தன. வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தான். ஒரு இடத்தில் அவனின் அரைகுறை ஆடை புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. "இந்த போட்டோவை எல்லா லேடி புரபொசருக்கும் அனுப்பி வச்சிடு.." என்ற செய்தியும் உடன் இருந்தது.

"போனை கொடுடா.. நானும் பார்க்கறேன்.." என்று குணா கையை நீட்டினான். அன்பு போனை பின்னுக்கு இழுத்து மறைத்துக் கொண்டான். "நீ பார்க்க வேண்டாம்.." என்றவன் வார்டனிடம் வந்தான். "சார் கொஞ்சம் பேசணும்.." என்றான்.

வார்டன் விகேஷை விட்டுவிட்டு இவனோடு வந்தார். அன்பு பற்களை கடித்தபடி விசயத்தை சொன்னான். வார்டன் கோபத்தோடு விகேஷை பார்த்தார். "இப்ப என்ன செய்றது.?" என்றார்.

"தெரியல சார்.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.." என்றான்.

"டென்சன் ஆகாதே.. டென்சன்லதான் நிறைய தப்பு செய்வோம்.." என்றவர் யோசிக்க ஆரம்பித்தார். அவரே மறுநாள் பெண்கள் விடுதிக்கு சென்று தன் சகோதரியிடம் தனிப்பட முறையில் சிலவற்றை பேசிவிட்டு வந்தார்.

அழுது வீங்கிய முகத்தோடு கல்லூரிக்கு சென்ற அபிநயா அன்புவை தேடினாள். "அன்பு இன்னைக்கு காலேஜ் வரல.. அவனுக்கு தலைவலி.." என்று தகவலை சொன்னான் குணா. அவளின் போனை அவளிடமே தந்தான்.

"பிரச்சனையை எங்க ஹாஸ்டல் வார்டனே தீர்த்துட்டாரு.. நீ எதுக்கும் கவலைப்படாத.." என்றவன் அபிநயா தன் போனிலிருந்து அன்புவிற்கு போன் செய்ய முயல்வதை கண்டு "அவனுக்கு போன் பண்ணாத.. ஸ்விட்ச் ஆப்ன்னு வரும்.. தலைவலிங்கறதால போனை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டு இருப்பான்.." என்றான். அபிநயாவின் போனிலும் ஸ்விட்ச் ஆப் என்றுதான் வந்தது.

"ரொம்ப உடம்பு சரியில்லையா.? நான் போய் பார்க்கட்டா.?" என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "நேத்து உங்க ஹாஸ்டல்ல நடந்த சம்பவத்தால எங்க ஹாஸ்டலுக்கும் சேர்த்து நிறைய ரூல்ஸ் போட்டிருக்காங்க.. எங்க ஸ்டூடன்ட்ஸை தவிர வேற யாரும் உள்ளே வர கூடாது.." என்றான்.

அபிநயாவிற்கு முகம் வாடிப்போய்விட்டது. "சாயங்காலம் போன உடனே அவனை எனக்கு போன் பண்ண சொல்லு.." என்றாள். சரியென்று தலையசைத்துவிட்டு நகர்ந்த குணாவிற்கு அபிநயாவை நினைத்து கவலையாக இருந்தது.

அபிநயா மாலையில் விடுதிக்கு வந்தபோது அவளை அழைத்து பேசினார் ரோகிணி. "உங்க அப்பா ரொம்ப கேட்டுக்கிட்டதாலதான் போனை வச்சிக்கற உரிமையை உனக்கு நான் தந்தேன்.. ஆனா இனியும் நீ போனை யூஸ் பண்றதா இருந்தா ஹாஸ்டல்ல தங்க வேண்டாம். அப்படி ஹாஸ்டல்ல தங்க விரும்பினா போனை இங்கே என்கிட்ட கொடுத்துடு. உனக்கு கால் வந்தா நானே கூப்பிட்டு தரேன்.. இல்லன்னா போனை வீட்டுல வச்சிட்டு வா.. ஒரு போனால எவ்வளவு பிரச்சனை.?" என்றார்.

அபிநயா ஒன்றும் பேசாமல் தன் போனை அவரிடம் தந்தாள்.

அன்புவிற்கு தலைவலி எப்படி இருக்கிறதோ என்று கவலைப்பட்டுக்கொண்டே அன்றைய இரவை கடந்தாள். ஆனால் அன்பு மறுநாளும் கல்லூரிக்கு வரவில்லை.

"விகேஷ் என்ன ஆனான்.?" என்று குணாவிடம் விசாரித்தாள். "அவன் வேற ஒரு பிரச்சனையில் சிக்கிட்டான். காலேஜ்ல இருந்து‌ அவனை தூக்கிட்டாங்க. போலிஸ் அவனை பிடிச்சிட்டு போயிடுச்சி.." என்றான்.

"அப்படி என்ன பிரச்சனை.?" குழப்பமாக கேட்டவளிடம் "எனக்கும் தெரியாதுப்பா.. இதை மட்டும்தான் எங்க வார்டன் என்கிட்ட சொன்னாரு.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN