சிக்கிமுக்கி 39

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரி நாட்கள் அழகாய் சென்றுக் கொண்டிருந்தன.

அன்புவும் அபிநயாவும் நிறைய பேசினார்கள். எதிர்காலத்தை பற்றி நிறைய யோசித்தார்கள்.

அஞ்சனா இவர்களின் நட்பு கூட்டத்தில் ஒருத்தியாக மாறினாள். சுவேதாவிற்கும் அஞ்சனாவை பிடித்திருந்தது.

முதல் செமஸ்டர் தேர்வு முடிந்தது.

மீண்டும் கல்லூரி வந்தவர்களுக்கு நாட்கள் ஓடிய வேகத்தை கண்டறியவே முடியவில்லை. நட்புகளின் இடையே நடந்துச் செல்கையில் தூரங்கள் அனைத்தும் குறைந்து விடுகிறது என்பதை அனைவருமே புரிந்துக் கொண்டனர். வகுப்பறைகள் சொர்க்கமாக மாறிக் கொண்டிருந்தன. மரத்தடிகளும் கல்லூரி வளாகத்தில் இருந்த படிக்கட்டுகளும் வராண்டா கைப்பிடிகளும் அவர்களின் சுற்றுலா தளங்களாக இருந்தன.

கல்லூரி ஆரம்பித்த புதிதில் பயந்து தயங்கி பேசிய சீனியர் மாணவர்களோடு இப்போது கலகலப்பாக பேச முடிந்தது. கல்லூரி கேன்டினில் அக்கவுண்ட் வைத்து காப்பி பருகும் அளவிற்கு அவர்களோடு நெருங்கி பழகி விட்டிருந்தனர்.

மாலை நேரம் வகுப்புகள் முடிந்த நேரத்தில் தங்களின் வழக்கமான மரத்தடிக்கு வந்து அமர்ந்தனர் அன்புவும் அவனது நட்பு கூட்டமும்.

"இந்த வாரம் வீட்டுக்கு போக வேணாம்.. நாம எல்லோரும் சேர்ந்து ஊர் சுத்தலாமா.?" என்று கேட்டான் குணா மீனாவை பார்த்தவாறு.

"சான்ஸ் இல்ல கண்ணா.. எங்க வார்டன் விட மாட்டாங்க. வீட்டுக்கு போகலாம். இல்லன்னா காலேஜ் போகலாம். ஷாப்பிங் போறதா இருந்தா கூட அரை மணி நேரம்தான் டைம். அதுவும் நாங்க வேற யார் கூடவாவது பேசுறது அவங்களுக்கு தெரிஞ்சா உடனே எங்க வீட்டுக்கு போன் பண்ணிடுவாங்க.." என்றாள் அபிநயா.

"எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்காங்க.? ஐ ஹேட் தட்.." என்றபடி மீனாவின் தோளில் சாய்ந்தான் குணா.

"அவங்க போடுற ரூல்ஸ் இவங்க நல்லதுக்குதான். உனக்கு அதெல்லாம் புரியாது.. அதான் காலேஜ்ல இவ்வளவு டைம் இருக்கே. இங்கே பேசி பழகினா போதாதா.?" என கேட்டான் அன்பு. குணா அவனை முறைப்போடு பார்த்தான்.

"வாரா வாரம் பஸ்ஸோட லாஸ்ட் சீட்டுல உட்கார்ந்துக்கிட்டு நீயும் அவளும் கொஞ்சிகிட்டு வரிங்க. நான் அதை பத்தி கம்ப்ளைண்ட் பண்ணேனா.?" என கேட்டான் அவனும் பதிலுக்கு.

"இதெல்லாம் வேற நடக்குதா.?" என்றபடி சுவேதாவும் மீனாவும் அபிநயாவின் இருபக்க தோளையும் பிடித்து உலுக்கினர். அஞ்சனா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அபிநயாவை பார்த்தாள்.

"குணா பொய் சொல்றான்.." என்ற அபிநயா சிவந்த தன் கன்னங்களை மறைக்க முகத்தை மூடிக் கொண்டாள்.

"உன்னை பத்தி நல்லா தெரியும்.. பொய் சொல்லாத.." என்ற சுவேதா அபிநயாவிற்கு மேலும் வெட்கத்தை தந்தாள்.

அன்பு பேருந்தின் பின் இருக்கையை யோசித்து பார்த்தான். அவனை அறியாமல் உள்ளம் பூரிப்பில் துள்ளி குதித்தது.

அஞ்சனா தன் கைகடிகாரத்தை பார்த்தாள். "பஸ்க்கு டைம் ஆச்சி நான் கிளம்பறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.." என்று கையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

"நாமளும் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பணும்.." என்ற குணா மீனாவின் தோளில் தன் முகத்தை தேய்த்தான். "தள்ளி போங்கப்பா.." என்றாள் அவள்.

"வாடா போகலாம்.." என்று குணாவின் கைப்பிடித்து எழுப்பி நிறுத்தினான் அன்பு.

"நாளைக்கு பார்க்கலாம் சீனியர்.." அனைவரும் சஞ்சயிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

"நான் உன்னோடு பஸ் ஸ்டாப் வரை வரேன்.." என்ற சஞ்சய் சுவேதாவோடு சேர்ந்து இணைந்து நடந்தான்.

அன்பு விடுதிக்கு வந்ததும் வழக்கம்போல ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான். அபிநயாவும் எதிர் ஜன்னலை திறந்தாள். பின்னர் மேஜையின் முன்னால் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.

"உங்க இரண்டு வீடும் சமாதானம் ஆயிடுச்சா.?" அபிநயாவிடம் கேட்டாள் மீனா. அபிநயா இல்லையென தலையசைத்தாள்.

இந்த இரண்டு மாதங்களாக இரண்டு வீட்டையும் சமாதானப்படுத்தி வைக்கும் முயற்சியில் ரகசியமாக ஈடுப்பட்டிருந்தனர் அன்புவும் அபிநயாவும்.

ஒருமுறை அபிநயா தன் வீட்டில் செய்திருந்த பலகாரத்தை எடுத்துக் கொண்டு அன்புவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினாள். கதவை திறந்த அர்ச்சனாவிடம் "எங்க அம்மா தந்துட்டு வர சொன்னாங்க.." என்று பலகார தட்டை நீட்டினாள். அர்ச்சனாவால் அதை நம்பவே முடியவில்லை. ஆனந்தி தனக்கு ஏன் பலகாரம் தந்துவிட வேண்டும் என்று யோசித்தாள். "சீக்கிரம் வாங்கிக்கங்க ஆன்டி.. எனக்கு படிக்கற வேலை இருக்கு.." என்று அபிநயா தரையை பார்த்தபடி சொல்லவும், அவள் குழப்பம் தீராமலேயே அந்த பலகார தட்டை வாங்கிக் கொண்டாள்.

அபிநயா தன் வீட்டில் உள்ளவர்கள் யாராவது தன்னை பார்த்துவிடுவார்களோ என பயந்துக் கொண்டு சீக்கிரம் தன் வீட்டிற்குள் வந்து புகுந்துக் கொண்டாள்.

"மறக்காம பலகார தட்டை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துடு கோணக்காலா.. பலகாரம் உங்க வீடு வரைக்கும் வந்த விசயம் தெரிஞ்சா எங்க அம்மா என் தோலை உறிச்சிடுவாங்க.." என்று உடனடியாக அவனுக்கு செய்தியும் அனுப்பினாள்.

"ஏங்க இங்க பாருங்களேன்.. பக்கத்து வீட்டுல இருந்து பலகாரம் தந்துவிட்டிருக்காங்க.." என்று பலகாரதட்டை கணவனிடம் காட்டினாள் அர்ச்சனா. ஆறுமுகத்தால் அதை நம்பவே முடியவில்லை. "இத்தனை வருசமா இல்லாம இன்னைக்கென்ன புதுசா தந்திருக்காங்க.?" என்றார் சந்தேகமாக.

"இந்த சில்லுவண்டுங்க இரண்டும் சண்டை போடுறதை நிறுத்திட்டதால தந்திருப்பாங்க போலிருக்கு.." என்று தன் யூகத்தை சொன்னாள் அவள்.

பலகார தட்டு காலியானதும் அதை தானே சென்று கொடுத்து வருவதாக சொல்லி எடுத்துச் சென்றான் அன்பு. அப்பாவும் அம்மாவும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தனர். அவர்களின் அதிர்ச்சியை அவனும் உணர்ந்தே இருந்தான். அதை நினைக்கையில் சிரிப்பு பொங்கி வர காத்திருந்தது.

அபிநயாவை வர சொல்லி தட்டை ரகசியமாக கொடுத்துவிட்டு வந்தவன் தன் வீட்டில் பலகாரம் செய்தவுடன் மறக்காமல் அதை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு சென்றான்.

ஆனந்திதான் வந்து கதவை திறந்தாள். இவனை கண்டதும் அதிர்ந்துப் போனாள். அவனின் கையில் இருந்த பலகார தட்டும் அவளுக்கு சந்தேகத்தை தந்தது. "எங்க அம்மா இதை உங்கக்கிட்ட தந்துட்டு வர சொன்னாங்க.." என்றான். ஆனந்தி குழப்பத்தோடு பக்கத்துவீட்டை பார்த்தாள். யாரும் வாசல் திண்ணையில் இல்லை.

"என்கிட்ட கொடுக்க சொன்னாங்களா.?" சந்தேகத்தோடு கேட்டாள் ஆனந்தி.

"ஆமா ஆன்டி.." என்றவன் அவளிடம் அந்த தட்டை வலுக்கட்டாயமாக தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். தட்டோடு உள்ளே வந்த ஆனந்தி "என்னங்க பக்கத்து வீட்டுல இருந்து பலகாரம் தந்துவிட்டிருக்காங்க.." என்றாள் குழப்பம் நிறைந்த குரலோடே.

வினோத் தட்டை பார்த்ததும் கோபம் கொண்டார். "என் பொண்ணு ரூம்க்கு நடுராத்திரியில அந்த பொறுக்கி வருவான். அவங்க பலகார தட்டை தந்தா அதை மறந்துட்டு நாம வாங்கிக்கணுமா.? உன்னை எவன்டி பலகார தட்டை வாங்க சொன்னது.?" என்று கத்தினார்.

பலகாரத்தை ருசி பார்க்கலாம் என நினைத்து தனது அறையிலிருந்து வெளியே வந்த அபிநயா அப்பா கத்தியது கேட்டு படிகட்டு சுவரிலேயே ஒண்டி நின்றாள். 'சிக்குனா சிதறு தேங்காய்தான்.. கோணக்கால நாம மாட்ட போறோம்டா..' என்று மனதுக்குள் அவள் புலம்பிய நேரத்தில் "விடுங்க. அதையே நினைச்சிட்டு இருக்காதிங்க. அதுங்க ஏதோ சின்ன புள்ளைங்க. இன்னைக்கு சண்டை போடுவாங்க. நாளைக்கு கூடிப்பாங்க. நாம அப்படி இருக்க முடியுமா.?" என்றாள் ஆனந்தி.

அப்பாவுக்கு சமாதானம் ஆகவேயில்லை. தன் செல்ல மகளை நடு இரவில் அழ வைத்தவன் வீட்டு பலகாரத்தை ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் அவரின் கோப பார்வையை கவனிக்காமல் பலகாரத்தை எடுத்து சுவைத்த தீபக் "அம்மா ரவா லட்டு செம.." என்றான்.

தீபக்கை முறைத்து பார்த்தவர் அருகே வந்து பலகார தட்டை மனைவியின் கையிலிருந்து தள்ளி விட்டார். தட்டு ரவா லட்டோடு சேர்ந்து சுவற்றில் மோதி கீழே விழுந்தது. லட்டு துகள் துகளாக தரையில் இறைந்தன.

"இன்னொரு முறை அந்த வீட்டுல இருந்து பலகாரம் வந்தது பாயாசம் வந்ததுன்னு வாங்கி உள்ளே வச்சன்னா உன் பல்லை கழட்டிடுவேன்.." என்று மனைவியை திட்டினார் வினோத்.

அம்மாவிற்கு கோபமாக வந்தது. மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும்போது கணவனை வறுத்தெடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவள் அவரின் இப்போதைய கோபத்தை சட்டை செய்யாமல் நகர்ந்தாள்.

வினோத் தரையில் விழுந்து கிடந்த தட்டை கையில் எடுத்தார். "இதை கொண்டுப்போய் கொடுத்துட்டு அவங்களை நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்.." என்று கிளம்பினார். அபிநயா அவசரமாக ஓடி வந்து நின்று அவரை மறித்தாள்.

"வேணாம்ப்பா.." என்றாள் அவசரமாக.

அப்பா சந்தேகத்தோடு அவளை பார்த்தார். என்ன காரணத்தை சொல்வதென்று யோசித்தாள் அபிநயா.

"இல்லப்பா.. உங்களுக்கும் அவங்களுக்குமே சுத்தமா ஆகலையே அப்புறம் ஏன் நீங்க அவங்க வீடு தேடி போகணும்.. விடுங்க நான் கொண்டுப் போய் தந்துட்டு வந்துடுறேன்.. மதியாதார் தலைவாசல் மிதிச்ச பாவம் உங்களுக்கு எதுக்கு.?" என்றபடி அவரின் கையில் இருந்த தட்டை மெதுவாக வாங்கினாள்.

"ஏன்க்கா அந்த மதியாதார் வீடு உனக்கு பொருந்தாதா.?" என்று தீபக் வேறு காலம் நேரம் பார்க்காமல் கேட்டான்.

"நாம சின்ன புள்ளைங்கடா.. ஆனா அப்பா அப்படியா.? அவருக்குன்னு கௌரவம் இருக்கு. ஒரு தட்டை கொடுக்க பக்கத்து வீட்டுக்கு போனா அவரோட கௌரவத்துக்கு கரெக்டா இருக்குமா என்ன.? நானே கொடுத்துட்டு வந்துடுறேன்.." என்ற அபிநயா தட்டோடு வெளியே ஓடினாள்.

அவளின் போன் மாடியில் இருந்தது. அன்புவிற்கு எப்படி செய்தி அனுப்புவது என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே பக்கத்து வீட்டை நோக்கி நடந்தாள். அன்பு அவர்களின் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தான். இவளை கண்டதும் திண்ணையை தாண்டி ஓடி வந்தான்.

"என்ன ஆச்சி.?" என்றான் கிசுகிசுப்பாக.

"எங்க அப்பா தட்டை தூக்கி வீசிட்டாரு.. இந்த ப்ளான் பெயிலியர்.." என்றவள் தட்டை அவனிடம் தந்தாள்.

"அங்கே என்னடா பண்ற.?" இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வெளியே வந்த பாட்டி இருவரையும் பார்த்துவிட்டு சந்தேகத்தோடு கேட்டாள்.

"உங்க தட்டை தெரு நாய் ஒன்னு தூக்கிட்டு போயிட்டு இருந்தது. அதுக்கிட்ட இருந்து பிடுங்கி கொண்டு வந்தேன்.." என்ற அபிநயா ஒழுங்கு காட்ட இருந்த வாயை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

"தட்டை எப்படிடா நாய் தூக்கிட்டு போச்சி.?" என்று இப்போது பேரனிடம் சந்தேகத்தை கேட்டாள் பாட்டி.

"நான்தான் பாட்டி திண்ணையில் உட்கார்ந்து ரவா லட்டு சாப்பிட்டு இருந்தேன். திடீர்ன்னு விக்கிக்கிச்சி. தண்ணி குடிக்கலாம்ன்னு உள்ளே வந்தேன். அதுக்குள்ள நாய் தட்டை தூக்கிட்டு போயிருக்கு.." என்று அவசரத்திற்கு சொல்லி சமாளித்தான்.

"நீயெல்லாம் என்ன பையனோ.? தெரு நாய் தட்டை தூக்கிட்டு போற அளவுக்கா அலட்சியமா இருப்ப.?" என கேட்டு நெற்றியில் அடித்துக் கொண்ட பாட்டி அங்கிருந்து சென்றாள். பெருமூச்சோடு கதவில் சாய்ந்தவன் "இவங்களை சமாதானம் செய்ய இந்த ஜென்மத்துல முடியாது போலிருக்கே.." என்று புலம்பினான்.

நடந்ததை மீனாவிடம் சொல்லிய அபிநயாவிற்கு "இவங்க சமாதானம் ஆகி.. நாங்க ஊரறிய லவ் பண்ணி, வேலைக்கு போய், இரண்டு பேரும் கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை தடைகளை பார்க்கணுமோ.?" என்றாள் கவலையோடு.

மீனா சிரித்தாள். "நீங்கதானே பிரிச்சி வச்சிங்க. அப்படின்னா நீங்கதான் சேர்த்தும் வைக்கணும்.." என்றாள்.

"இப்படி இரண்டு பேரும் லவ் பண்ணுவோம்ன்னு தெரிஞ்சிருந்தா சண்டையே போட்டிருக்க மாட்டோமே.." என்றாள் அவள் சலிப்போடு.

மறுநாள் கல்லூரியில் அன்புவை தனியே அழைத்தாள் அஞ்சனா. அவன் மற்றவர்களை பார்த்துவிட்டு அவளோடு சேர்ந்து சென்று தனியாய் நின்று பேசினான். அபிநயா அவர்களின் முகத்தையும் உதட்டசைவையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

பத்து நிமிடங்களிற்கும் மேல் பேசிவிட்டு அன்பு வந்ததும் அவனிடம் என்னவென்று சைகையால் கேட்டாள் அபிநயா. "ஒன்னுமில்ல.." என்று உதட்டசைத்தவன் தன்னை தாண்டி நடந்த அஞ்சனாவிற்கு புன்னகைத்து வழியனுப்பி வைத்தான்.

நண்பர்கள் வகுப்பை நோக்கி நடக்கையில் அபிநயா அன்புவின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

"அரை மணி நேரமா இரண்டு பேரும் அப்படி என்ன பேசிட்டு இருந்திங்க.?" என்றாள்.

அன்பு அவளின் கன்னத்தை கிள்ளினான்.

"அரை மணி நேரமெல்லாம் இல்ல.. பத்து நிமிசம் கூட ஆகியிருக்காது.." என்றான் கிண்டலாக.

"சரி சொல்லு.. என்ன பேசினிங்க.?" என்றாள் அவள் அவனின் கையை தட்டிவிட்டுவிட்டு.

அன்பு அவளை செல்லமாக முறைத்தான். ஆனால் அவளோ தன் நெஞ்சுக்கு நேராக கைகளை கட்டியபடி அவனை நிஜமாகவே முறைத்தாள்.

"அது.. அவங்க அம்மா என்னை இந்த ஞாயித்து கிழமை அவங்க வீட்டுக்கு வர சொல்லி இன்வைட் பண்ண சொன்னாங்களாம். அதைதான் அஞ்சனா என்கிட்ட சொன்னா.." என்றான் அவன் தோளை குலுக்கியபடி.

அபிநயா சந்தேகத்தோடு அவனை பார்த்தாள்.

"இதுக்கு ஏன் தனியா போய் பேசணும்.?" என்றாள்.

"அவளோடு நாம சாதாரண பிரெண்ட்ஸா பழகறது மட்டும்தான் மத்தவங்களுக்கு தெரியும்.. அவளோட பிரச்சனையில் நான் இன்வால்வ் ஆனது நம்ம பிரெண்ட்ஸ்க்கு தெரியாது இல்லையா.? இவ என்னோடு பப்ளிக்கா பேசினா அப்புறம் அவங்க சந்தேகபடுவாங்களோன்னு பயப்படுறா. இந்த சமூகம் தன்னை தப்பா பார்க்குமோன்னு நினைக்கற அவளோட எண்ணம் அவளை விட்டு மறையவே இல்ல.." என்றான் கவலையோடு.

அபிநயாவிற்கு அஞ்சனாவை நினைக்கையில் விந்தையாக இருந்தது. 'சமூகம் தப்பா பார்க்கும்ன்னா அப்புறம் ஏன் பேசணும்.? பழகணும்.?' என்று குழம்பினாள். நேராய் பேசியிருந்தால் கூட நண்பர்கள் வீட்டுக்கான அழைப்பில் ஒன்றாய் சேர்ந்திருக்கும் ஆனால் இப்படி தனியே அழைத்து பேசினால் அது அல்லவா சந்தேகத்தையும் பலவித கேள்விகளையும் எழுப்பும் என்று எண்ணி குழம்பினாள்.

"அவ கூப்பிட்டதுக்கு நீ என்ன சொன்ன.?" என்றாள் அன்புவிடம்.

"நான் வர முடியாது. எனக்கு வேலை இருக்குன்னு சொல்லிட்டேன்.." என்றவன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு வகுப்பை நோக்கி நடந்தான்.

"அப்படி என்ன வேலை.?" என்ற அபிநயாவிற்கு அன்பு ஏன் திடீரென அந்நியமாகி போனான் என்ற எண்ணம் வந்தது.

"என்ன வேலையா.?" என்று அவளை அதிர்ச்சியோடு கேட்டவன் "என் லவ்வரோடு சேர்ந்து சந்தனக்கொடிக்கால் வரை டிராவல் பண்ண போறேன்.." என்றான்.

அபிநயாவின் முகம் சட்டென்று பிரகாசமானது. அவனின் தோளில் ஒரு அடியை தந்தாள். "நான் கூட வேற என்னவோன்னு நினைச்சி பயந்துட்டேன்.." என்றாள்.

"லூசு.." அவளின் நெற்றியில் சுட்டுவிரலால் சுட்டி விட்டவன் அவளின் கைப்பற்றி அழைத்துக் கொண்டு வகுப்பறை நோக்கி நடந்தான்.

வேதியியல் சம்பந்தமான அனைத்து வகுப்புகளுமே அபிநயாவிற்கு உற்சாகத்தோடு இருந்தது. படிக்க படிக்க பிடித்திருந்தது. மேலும் மேலும் அறிந்துக் கொள்ள சொல்லி மூளை ஆவலை தூண்டி விட்டது. வேதியியல் சம்பந்தமாக எழுதுவதும் அவளுக்கு பிடித்திருந்தது. பள்ளியில் இருந்ததை விடவும் இப்போது கையெழுத்து அழகாகி போனதை போல இருந்தது. அதிலும் மிகவும் பிடித்த புத்தகங்களில் யாரும் அறியாத பக்கங்களில் ரகசியமாக அன்புவின் பெயரை எழுதுகையில் அந்த கையெழுத்து ஆயிரம் மடங்கு அதிக அழகானது போல இருந்தது.

ஒருமுறை எதேச்சையாக அவளின் புத்தகத்தை திறந்து பார்த்த அன்பு தனது பெயரை புத்தகங்களின் பக்கங்களில் கண்டுவிட்டு ஆச்சரியமடைந்தான். தன்னை போலவே அவளும் பெயரை கிறுக்குகிறாள் என்பது அவனுக்கு சந்தோசத்தை தந்தது, தன் பெயர் இருந்த ஒற்றை பக்கத்தை மட்டும் அவள் அறியா வண்ணம் தனியே கிழித்து வைத்துக் கொண்டான்.

அன்றைய நாளில் மதிய உணவை உண்ணுகையில் "அஞ்சனா அன்புகிட்ட என்ன பேசினாளாம்.?" என்று கேட்டாள் மீனா.

"அவளோட வீட்டுக்கு வர சொல்லி அவங்க அம்மா கூப்பிட்டாங்கன்னு சொன்னாளாம்.." என்றாள் அபிநயா.

"அஞ்சனாவோடு பழக ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது அபி.. அவ சில நேரங்களில் ரொம்ப வித்தியாசமா நடந்துக்கறா.. அன்னைக்கு ஒருநாள் குணாவோட கர்ச்சீப் கீழே விழுந்துடுச்சி. அந்த கர்ச்சீப்பை கவனிக்காம குணாவும் என்னோடு பேசிகிட்டு வந்தான். கர்ச்சீப்பை கையில எடுத்தவ மீனான்னு என்னை நிறுத்தி என்கிட்ட கர்ச்சீப்பை தந்தா. குணா பக்கத்துலயேதான் இருந்தான். 'குணாவோட கர்ச்சீப் கீழே விழுந்துடுச்சி'ன்னும் என்கிட்டயே சொன்னா.. குணா கர்ச்சீப்பை வாங்க கையை நீட்டினான். ஆனா இவ கர்ச்சீப்பை என்கிட்ட தந்துட்டு போயிட்டா.. 'இவ என்ன லூசா.?'ன்னு கேட்டுட்டு குணா கர்ச்சீப்பை வாங்கிட்டு போயிட்டான். நான் போய் அவளை நிறுத்தி 'ஏன் நீ கர்ச்சீப்பை அவன்கிட்ட தராம என்கிட்ட தந்த'ன்னு கேட்டதுக்கு 'நான் அவனோடு பேசினா நீ சந்தேகப்படுவியோன்னு நினைச்சிதான் உன்கிட்ட தந்தேன்'னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு போயிட்டா.. எனக்கு ஒரு செகண்ட் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சி.." என்றாள் மீனா.

அபிநயா சிறு சிரிப்போடு அவளின் தோளை தட்டி தந்தாள்.

"விடு இதெல்லாம் மேட்டரா.?" என்றாள்.

"இல்ல அபி.. நல்லா நினைச்சி பாரேன்.. குணாவோடு அவ சாதாரணமா பேசுற வரைக்கும் நான் சந்தேகப்பட போறது இல்ல. ஆனா இவளே தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிட்டு எதுக்கு நம்மோடு பழகணும்.? நாம அப்படி நினைப்போம்ன்னு நினைச்சா பழகாம விலகி போக வேண்டியதுதானே.? ஏன் இப்படி அரைகுறை நம்பிக்கையோடு பழகணும்.? சமூகத்து மேல இவ்வளவு பயப்படுறா.. அப்புறம் ஏன் குணாவோன கர்ச்சீப்பை கீழே இருந்து எடுக்கணும்.? அது எப்படியோ கடக்கட்டும்ன்னு நினைச்சி விட்டு விலகி போக வேண்டியதுதானே.?" என்ற மீனாவிற்கு இன்னமும் அந்த சம்பவம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. இத்தனை மாத நட்பில் அவளை பற்றி நன்கு அறிந்து விட்டிருந்த அபிநயா தனது இடது கையால் அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

"டேக் இட் ஈஸி பேபி.. அவ அப்படிதான்னு தெரிஞ்ச பிறகும் ஏன் அதையே நினைச்சி உன்னை நீயே குழப்பிக்கற.?" என்றாள்.

உணவை முடித்துக் கொண்டு கல்லூரியை நோக்கி நடக்கும்போது கூட அதையேதான் பேசிக் கொண்டு வந்தாள் மீனா. "அன்புவை வீட்டுக்கு வர சொல்லி கூப்பிட்டிருக்கா.. இதை நம்ம முன்னாடி சொல்லி இருந்தா கூட நாம தப்பாவே எடுத்திருக்க மாட்டோம்.. எங்களுக்கு அழைப்பு இல்லையான்னுதான் கேட்டிருப்போம்.. ஆனா இப்ப அவ தனியா கூட்டிப்போய் அழைச்சதாலதான் எனக்கு சந்தேகமே வருது.. அவங்க அம்மாவே கூப்பிட்டிருங்காங்களா.? இல்ல இவளே அன்புவோடு ரொமான்ஸ் பண்ண.." மீனா சட்டென தன் பேச்சை நிறுத்திக் கொண்டு அபிநயாவை திரும்பி பார்த்தாள். "சாரி.." என்றாள் காதுகளை பிடித்தபடி.

அபிநயா அவளை முறைப்போடு பார்த்தாள். அவளை தாண்டிக் கொண்டு செல்ல முயன்றாள். மீனா சட்டென அவளை பிடித்து நிறுத்தினாள். "சாரி பேபி.. ஏதோ வாய் தவறி வந்துடுச்சி.." என்றாள் சோகமாக. அபிநயாவின் குணம் மீனாவிற்கு நன்றாக தெரியும். அன்புவை மற்ற பெண்களோடு கதைக்காக ஜோடி சேர்த்து பேசுவதை கூட விரும்பவில்லை அவள்.

"இனி இப்படி பேச மாட்டேன்.." என்றபடி அப்பாவியாய் அபிநயாவின் முகத்தை பார்த்தாள் மீனா.

"இதுவே லாஸ்ட் வார்னிங்.." என்ற அபிநயா அவளின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

"மை ஸ்வீட் ஹார்ட்.." என்ற மீனா தோழியின் தாடையை பிடித்து கொஞ்சினாள். அபிநயா சிரித்துக் கொண்டே அவளை பார்த்தாள்.

"நல்லா ஐஸ் வைக்கிற.. வருங்காலத்துல உனக்கும் குணாவுக்கும் நடுவுல சண்டை வந்தா கூட நீ இப்படி ஐஸ் வச்சே அவனை கவுத்துடலாம்.." என்றாள் கிண்டலாக.

"என்ன ஐஸ்.?" குணாவின் குரல் கேட்கவும் தோழிகள் இருவரும் திரும்பி பார்த்தனர். குணாவும் அன்புவும் அவர்களின் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.

"ஐஸ்ல என்ன ஐஸ்.? கப் ஐஸ்.. குச்சி ஐஸ்.. கோன் ஐஸ்தான்.." என்று அபிநயா சொல்ல மீனா வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.

"இப்பயெல்லாம் இவ காமெடிங்கற பேர்ல ரொம்ப டார்ச்சர் பண்றாடா குணா.." என்று அன்பு பொய்யாக சலித்துக் கொள்ள குணா மீனாவுக்கு போட்டியாக சிரித்தான்.

கதை பேசியபடி சிரித்துக் கொண்டே நடந்த அவர்கள் நால்வருமே தூரத்தில் நின்றிருந்த அஞ்சனாவை கவனிக்கவில்லை. அவளுக்கு அன்புவோடு மட்டும்தான் இயல்பாக பழக முடிந்தது. அதனால் அன்பு இல்லாத நேரத்தில் சஞ்சய் கூட்டத்தோடு சேர்ந்து அவள் உணவு உண்ணுவதில்லை. தனியாக தூரமாக வந்து யார் பார்வையிலும் படாமல் உணவை உண்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இன்றோ அவள் உணவு உண்டுக் கொண்டிருந்த இடத்தை கடந்துச் சென்ற மீனாவும் அபிநயாவும் அவளை பற்றி பேசியதை அவர்கள் அறியாமலேயே கேட்டுவிட்டாள் அவள்.

உணவு பிசைந்த கைகளை சுத்தம் செய்துவிட்டு டிபன் பாக்ஸையும் தண்ணீர் பாட்டிலையும் கையில் எடுத்துக் கொண்டு நடந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கின. அவள் அன்புவை தன் சகோதரன் போல பார்த்து வந்தாள். இப்படி யாராவது தன்னை பற்றி தவறாக எண்ணி விடுவார்களோ என்றெண்ணிதான் ஒதுங்கியே இருந்தாள். ஆனால் இன்று அவள் பயந்தது போலவே அவளை மீனா தவறாக எண்ணி விட்டாள் என்று நினைத்தவளுக்கு மனம் பாரமாக இருந்தது.

அன்றைய நிகழ்விற்கு பிறகு அஞ்சனா அன்புவோடு கூட அதிகம் பேசவில்லை. அவனாக அழைத்து பேசினால் மட்டுமே அவனோடு பேசினாள். மற்ற நேரங்களில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அவளின் திடீர் மாற்றம் அன்புவிற்கும் புரியவில்லை. அவளின் இயல்பே அதுதானோ என்றெண்ணி அமைதியாக இருந்துக் கொண்டான் அவனும்.

அந்த வாரத்தில் சனிக்கிழமை மாலையில் அன்பு குணாவோடு சேர்ந்து ஊருக்கு கிளம்பினாள் அபிநயா. வழக்கம்போல இருவர் அமரும் இருக்கை ஒன்றில் அமர்ந்துக் கொண்டனர் அபிநயாவும் அன்புவும். அவர்களின் கொஞ்சல் மொழிகளை காதில் வாங்க கூடாது என்று முடிவெடுத்த குணா அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு இரண்டு வரிசைகள் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். பேருந்தில் அவ்வளவாக கூட்டமும் இல்லை.

ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த அபிநயா அன்புவின் பக்கமாகதான் திரும்பி அமர்ந்திருந்தாள். அது ஏன் எவ்வளவு பேசினாலும் தீராத பொருளாகவே காதல் இருக்கிறது என்று அவளுக்கே சில சமயங்களில் சந்தேகம் வருவதுண்டு. தன் சிறு வயது கனவு ஒன்றை அவனிடம் விவரித்துக் கொண்டிருந்தாள் அவள். பேருந்தின் பாடல் ரசிக்க வைப்பதை விட அபிநயாவின் குரல் தன்னை முழுமையான ரசிகனாக்குவதாக உணர்ந்தான் அன்பு.

அவளின் பேச்சுகள், அந்த கனவை பற்றி அவள் விவரிக்கும் தோரணை, அவளின் உதட்டசைவில் இருக்கும் புது கலைகள், அவளின் குரலை ரசிக்கையில் தான் அறியும் புது புது இசைகள், ஜன்னல் தாண்டி வீசும் காற்றோடு பறந்தபடி நடனமாடிக் கொண்டிருந்த அவளின் வெண்மை நிற துப்பட்டா, காது அழகா இல்லை கம்மல் அழகா என்று போட்டி வைத்தால் அவளின் முக அசைவிற்கு ஏற்றார் போல அசைந்துக் கொண்டிருந்த கம்மலுக்கு இரண்டாம் இடத்தை அளிக்கும் அழகான செவி மடல்கள், அவனின் முகத்தை ஆச்சரியப்பொருள் போல பார்த்துக் கொண்டு அங்கும் இங்கும் மீனாக ஓடிக் கொண்டிருந்த கரும் விழிகள்.. என்று அவளின் அருகில் தன் புத்தியின் மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் தொலைத்து விட்டான் அன்பு.

சில நிமிடங்களுக்கு பிறகு பேசி முடித்த களைப்பில் அன்புவின் தோளில் சாய்ந்து உறங்கி போனாள் அபிநயா. அன்புவின் வலது கை அவளை தன் தோளோடு அணைத்திருந்தது. அவனது இடது கையில் இருவருக்குமான பயணசீட்டுகள் இருந்தது. அவளின் கழுத்தை தாண்டி பறந்துக் கொண்டிருந்த அவளின் துப்பட்டா அவனின் முகத்தில் படர்ந்துக் கொண்டிருந்தது.

பேருந்தில் பாடிக் கொண்டிருந்த பாடல் முடிந்து அடுத்த பாடல் துவங்கியது.

'உயிரே.. உன் உயிரென நான் இருப்பேன்.. அன்பே.. இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்..'

"பர்பெக்ட் சாங்க்.. பக்கத்துல மை டியர் லவ்வர் கேர்ள்.. இந்த பஸ் தன் பயணத்தை முடிக்காம நேரா போய்க்கிட்டே இருந்தா ஆகாதா.?" என்றான் அன்பு காற்றோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN