சிக்கிமுக்கி 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"திங்கள்கிழமை காலையில காலேஜ் போகும்போதுதான் மறுபடியும் பேசிக்க முடியும்.." என்று சிணுங்கலோடு சொன்னாள் அபிநயா.

"போன் பண்ணு பேசலாம்.." என்ற அன்பு தங்களின் தெரு வந்ததும் அவளின் கையை விட்டுவிட்டு பின்வாங்கி மெதுவாக நடந்தான். அபிநயா தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

"பஸ் லேட்டாடி.?" அம்மா இவள் வந்ததும் கேட்டாள்.

"இல்லம்மா.." என்றவள் தன் கை கடிகாரத்தை பார்த்தாள். பத்து நிமிடத்திற்கும் மேல் தாமதமாகி இருந்தது. அன்புவோடு பேசிக் கொண்டு வந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை.

"அம்மா.. சர்க்கரை வாங்கிட்டு வந்துட்டேன்.." என்றபடி வீட்டுக்குள் வந்த தீபக் அபிநயாவை கிண்டலாக பார்த்தான்.

"என்னக்கா புது புது பிரெண்டெல்லாம் பிடிச்சிட்ட போல.." என்றான் கண்களை சிமிட்டியபடி.

அபிநயா புரியாமல் அவனின் முகத்தை பார்த்தாள். அவன் அவளை கிண்டலாக பார்த்துக் கொண்டே கிச்சனுக்கு சென்றான். அம்மாவிடம் சர்க்கரை பொட்டலத்தை தந்துவிட்டு திரும்பி வந்தான்.

அவன் தன் அறைக்கு செல்லுகையில் அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள் அபிநயா. "என்னடா பிரெண்ட்ஸ்.?" என்றாள்.

"அதான் கோணக்காலனுடனான உன் புது பிரெண்ட்ஷிப்.." என்றவனை அப்படியே தள்ளிக்கொண்டு சென்று அவனின் அறைக்குள் நுழைந்தாள். கதவை சாத்திவிட்டு அவன் பக்கம் திருப்பினாள்.

"அம்மா அப்பாக்கிட்ட சொல்லிடாத செல்லம்.." என்றாள் கெஞ்சலாக.

"பிரெண்ட்ஸா இருந்தா சொன்னாலும் தப்பில்லையே.." என்றான் அவன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

"தீபக்.. எனக்கு அவனை பிடிச்சிருக்குடா.." என்றாள் கெஞ்சலுடன்.

"வருசம் முழுக்க சண்டை போட்டு அந்த வீட்டையும் இந்த வீட்டையும் பகை பண்ணி விட்டுட்டு இப்ப பிடிச்சிருக்குன்னு சொல்றியா.? உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கா.?" என்றான் அவன் சீறலாக.

"இனி சண்டை போட மாட்டோம்டா.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "இதுவரைக்கும் நடந்த சண்டைக்கு யார் பொறுப்பு.? இரண்டு குடும்பமும் ரொம்ப நாளா பேசிக்கறது இல்ல.. அன்னைக்கு அப்பா ரவா லட்டு தட்டை தட்டி விட்டதை மறந்துட்டியா.? உன் லவ் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சதுன்னு வை.. உன்னை கட்டி வச்சி அடிச்சி துவைப்பாரு.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

அபிநயா முகம் சோர்ந்துப்போய் கட்டிலில் அமர்ந்தாள். "நான் சண்டை போட்டதெல்லாமே தப்புதான்டா.. ஆனா அன்புவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அவன் இல்லாம எதிர்காலமே இல்லன்னு தோணுது.. ப்ளீஸ் அப்பாக்கிட்ட இதை மட்டும் சொல்லாம இரேன்.. இந்த இரண்டு குடும்பமும் சமாதானம் ஆயிடுச்சின்னா போதும். அப்புறம் எங்க லவ் மேட்டரை ஈஸியா ஏத்துப்பாங்க.." என்றாள்‌.

தீபக் யோசித்தான். "நீங்க நிஜமாவே சண்டை போட மாட்டிங்களா.?" என்றான் சந்தேகத்தோடு.

"சத்தியமா.." என்று காற்றோடு கையை அடித்தாள் அவள்.

"ம்.. சரி.. கொஞ்ச நாளைக்கு நான் சொல்லல.. ஆனா நீங்க சீக்கிரம் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்கணும்.. சரியா.?" என்றான்.

"டன்.." என்றவள் எழுந்து வந்து அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.

"உன் பாசம் போதும்.. ஆனா அவன்கிட்ட ரொம்ப வழிஞ்சிட்டு இருக்காத.. கையை பிடிச்சி பேசுறது கட்டி பிடிக்கறதெல்லாம் வேண்டாம்.. இல்லன்னா நான் அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்.. எப்பவும் நாலடி தள்ளி நின்னே பேசு.. நாம ரொம்ப கட்டுப்பாடான பேமிலி. அதை மறந்துடாத.." என்றவனுக்கு அவளை விட தான் பத்து வயது பெரியவனாகி விட்டதை போல தோன்றியது.

"ஓகே.." என்று கட்டை விரலை உயர்த்தி காட்டியவள் தனது அறையை நோக்கி ஓடினாள்.

இரவு உணவு உண்ணுகையில் அப்பா "பாடமெல்லாம் படிக்க ஈஸியா இருக்கா.?" என்றார் அபிநயாவிடம்.

"ஈஸியாதான் இருக்குப்பா.." என்றவளிடம் "ஹாஸ்டல் சாப்பாடு இப்ப ஓகேவா.?" என்று கேட்டாள் அம்மா.

"நல்லாவே இல்ல.." என்று உதட்டை பிதுக்கியவளுக்கு அது ஒன்றுதான் குறையாகவே இருந்தது.

"நாலு நாளைக்கு நீயே சமைச்சி சாப்பிட்டு பாரு. அப்புறம் ஹாஸ்டல் சாப்பாடு செமையா இருக்குன்னு சொல்வ.." என்று கிண்டலடித்தான் தீபக்.

இரவு உறங்கும் முன் அன்பு அபிநயாவிற்கு குட்நைட் என்று செய்தி அனுப்பினான். அவளும் பதில் அனுப்பிவிட்டு உறங்கினாள்.‌

ஞாயிற்று கிழமையில் தலை குளித்து வந்த அபிநயாவிற்கு தலையில் பேன் பொடுகு இருக்கிறதா என பார்த்து தலை வாரி விட்டாள் அம்மா. அப்பா அவள் கேட்ட நோட்டுகளையும் பேனாக்களையும் வாங்கி வந்தார்.

அன்பு தன் அம்மாவின் மடியில் தலை வைத்தபடி ஹாலின் தரையில் படுத்திருந்தான். கூரையில் மின்விசிறி ஓடிக் கொண்டிருந்தது. பாட்டி அவனின் காலில் இருந்த நகங்களை வலிக்காமல் வெட்டிக் கொண்டிருந்தாள். அவனின் தலையை வருடிவிட்டபடியே தொலைக்காட்சி திரையை பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

முகத்தை மூடியிருந்த அம்மாவின் புடவை முந்தானையை விலக்கிவிட்டு தாயின் முகம் பார்த்தவன் "அம்மா ஒரு சந்தேகம் கேட்கட்டா.?" என்றான்.

"ம்‌.." என்ற அர்ச்சனா திரையை விட்டு பார்வையை விலக்கவில்லை.

"நாம ஏன்ம்மா எப்பவும் பக்கத்து வீட்டோடு சண்டையாவே இருக்கோம்.?" என்றவனின் மேல் வந்து விழுந்தது வார இதழ் ஒன்று. அதை வீசிய அப்பாவை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

"உன்னாலதான்டா எங்களுக்குள்ள சண்டையே வந்துச்சி.? அப்புறம் ஏன்டா பச்சை புள்ளையை போல கேட்கற.?" என்ற ஆறுமுகத்துக்கு அவன் மீது கொலைவெறியாக வந்தது.

"அதுதான் நாங்க இரண்டு பேருமா இப்ப சண்டை போடுறது இல்லதானே.. அப்புறமும் ஏன் சண்டை போடுறிங்க.? சமாதானம் ஆக வேண்டியதுதானே.?" என்றான் அப்பாவை முறைத்தபடி.

"சமாதானம் செய்ற அளவுக்கா நீ பண்ணி இருக்க.? வயசு புள்ளை ரூம்க்கு நடு ராத்திரி போயிருக்க.." என்றார் அவர் கடுப்போடு.

"வயசு புள்ள.. அந்த குட்டச்சியை அப்ப நான் அப்படி பார்க்கவே இல்ல.." என்று முனகியவன் திரும்பி படுத்துக் கொண்டான். அவன் புரண்டதால் அர்ச்சனாவின் தொடையில் சுளீரென வலியெடுத்தது. "எருமை.. இது என்ன தலையணையா.? மடி மேல புரளாதேன்னு எத்தனை முறை சொல்றது.?" என்றவள் அவனின் தோளில் ஒரு அடியை விட்டாள்.

"போம்மா‌.. தலையணையை விட இங்கேதான் நல்லா தூக்கம் வருது.. இனி தலையை தூக்கிக்கிட்டு புரண்டுக்கறேன்.." என்றவன் மீண்டும் அவளின் முந்தானையை தூக்கி முகத்தின் மீது போட்டுக் கொண்டு கண்களை மூடினான்.

"அந்த காலை கொடுடா.." என்ற பாட்டி பேரனின் வலது காலை மடி மீது இருந்து எடுத்து கீழே வைத்தாள். அன்பு இடது காலை உயர்த்தினான். பாட்டி அவனின் காலை பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அவனின் அந்த காலின் நகங்களையும் வெட்ட ஆரம்பித்தாள்.

மறுநாள் கல்லூரி புறப்பட்டவனின் சட்டையில் இருநூறு ரூபாயை திணித்தார் அப்பா. "பார்த்து செலவு பண்ணுடா.." என்றார்.

காலணியை அணிகையில் அருகில் வந்த பாட்டி தன்னிடமிருந்த ஐநூறை அவனிடம் நீட்டினாள். "புதன் கிழமை உங்க அத்தை வந்திருந்தா.. அண்ணனுக்கு தெரியாம வச்சிக்கன்னு தந்தா.. நான் என்ன பண்றேன் இந்த காசை.. நீயாவது நல்லா செலவு பண்ணு.. ஆனா நான்தான் தந்தேன்னு உங்கப்பன்கிட்ட சொல்லாத.." என்றுவிட்டு நழுவினாள்.

அன்பு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பணத்தை பேக்கில் போட்டுக் கொண்டான்.

அவன் வாசற்படி தாண்டுகையில் அம்மா நூறு ரூபாயை கையில் தந்தாள். அவனின் சீவிய தலையை கைகளால் படிய நீவி விட்டாள். "வயசு பையன் காலேஜ் போகுது. அதுவும் ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு கூட வராம ஹாஸ்டல்ல இருக்க போகுது.. இருநூறு ரூபா பத்துமான்னு யோசிக்கறது கூட இல்ல. உங்க அப்பா இன்னமும் ப்ளாக் அன்ட் வொயிட் கால கட்டத்துலயே இருக்காருடா.." என்றவள் அவனின் சட்டை கசங்கியிருப்பதை பார்த்து அதையும் அழுத்தி தேய்த்து சரிசெய்தாள்.

"பத்திரமா போய்ட்டு வா.. மறக்காம அம்மாவுக்கு தினம் போன் பண்ணு.. வயிறு நிறைய சாப்பிடு.. இருட்டுல எழுந்து வெளியே எங்கேயும் போயிடாத.. மறக்காம ஹாஸ்டல் ரூமை தாழ்பா போட்டுட்டு தூங்கு.. உன் செருப்பையும் கட்டில் அடியில் போட்டுக்கடா.." என்றாள்.

"படிக்கதானே போறேன்.. நான் என்ன சுடுகாட்டுக்கு மந்திரிக்கவா போறேன்.. இத்தனை அட்வைஸ் பண்ற.?" என்றவன் "சாயங்காலம் போன் பண்றேன்.. டாடா.." என்றுவிட்டு சாலையில் இறங்கி நடந்தான்.

"பத்திரமா போய்ட்டு வாடா.." என்று இன்னுமா ஒருமுறை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா.

"பொம்பள புள்ளைக்கு சொல்ல வேண்டிய அட்வைஸெல்லாம் ஆம்பள புள்ளைக்கு சொல்றாங்க.." தன் அப்பாவின் பைக்கின் மீது சாய்ந்து நின்றிருந்த அபிநயா கிண்டலோடு சொன்னாள்.

"போலாமா அபி.?" என்ற அப்பா ஓடி வந்து பைக்கில் ஏறினார்.

வாசலில் வந்து நின்ற அம்மாவிடமும் தம்பியிடமும் கை அசைத்துவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்தாள் அபிநயா.

பேருந்து நிறுத்தத்தில் தன் பைக்கை நிறுத்திய வினோத் மகளை பேருந்தின் முன் பக்க இருக்கையில் அமர வைத்துவிட்டு கீழே இறங்கினார்.

"பத்திரம்.. யார் கூடவும் சண்டை போடாத.. பசங்களோடும் சார் கூடவெல்லாம் வம்பு இழுத்துட்டு இருக்காத.. லவ்வு கிவ்வுன்னு எந்த நாயாவது லெட்டரை தூக்கிட்டு வந்தா பயந்துடாத.. உடனே அப்பாவுக்கு போன் பண்ணு.. நான் வந்து அவனை கவனிச்சிக்கறேன்.." என்றவர் கண்டக்டரின் பக்கம் திருப்பினார். "காலேஜ் ஸ்டாப்புல பத்திரமா மகளை இறக்கி விட்டுடுங்க.." என்றார்.

நடத்துனர் அன்பு இருக்கும் திசையை பார்த்தார். அவன் நடத்துனரை பார்த்து பற்களை காட்டி சிரித்தான். "உன் பொண்ணு சின்ன பப்பா.. நான் ஸ்டாப் பார்த்து இறக்கி விடணுமா.?" என முணுமுணுத்தவர் பேருந்தின் ரேடியோவை இயக்க சென்றார்.

"பஸ்ஸை பார்த்து மெதுவா ஓட்டுங்க டிரைவரே.." என்ற வினோத் மகளுக்கு கையசைத்துவிட்டு தன் பைக்கில் ஏறி அமர்ந்தார். பேருந்து அங்கிருந்து நகர்ந்ததும் தன் வீட்டை நோக்கி கிளம்பினார்.

அபிநயாவின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் குணா. அவனின் அருகே வந்து அமர்ந்த அன்பு "என்னடா இங்கேயும் ஒரு லிட்டில் பிரின்சஸ் இருக்காங்க போலிருக்கு.." என்றான் கிண்டலாக.

அபிநயா பின்னால் திரும்பி பார்த்தாள். நாக்கை வெளியே நீட்டி அவனுக்கு ஒழுங்கு காட்டினாள். அன்புவிற்கு சிரிப்பாக வந்தது. "க்யூட்டா இருக்க.." என்றான். அவள் உதட்டை ஒரு பக்கமாக இழுத்து கோணித்தபடி கிண்டல் செய்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.

ஜன்னல் வெளியே இருக்கும் கடைகளை பார்த்துக் கொண்டு வந்த குணா பெருமூச்சோடு இவன் பக்கம் பார்த்தான். "கடைசி வரைக்கும் அவங்க அப்பா சொன்னது உன் காதுல ஏறுலதானே.?" என்றான்.

அன்பு சிரித்தபடியே இடம் வலமாக தலையசைத்தான். "வாலிப வயசுல இப்படியெல்லாம் பல தடைகள் வரத்தான் செய்யும். நாமதான் கண்டுக்காம போய்க்கிட்டே இருக்கணும்.." என்றான்.

"போடா புண்ணாக்கு.. ஒருநாள் இல்ல ஒருநாள் அவங்க அப்பா உன்னை தூக்கி போட்டு மிதிக்க போறாரு.. அப்ப நான் மித்ர துரோகியானாலும் பரவால்லன்னு உன்னை அவர்கிட்ட அடி வாங்க விட்டுட்டு ஓட போறேன்.." என்றான்.

அன்பு பதில் ஏதும் பேசவில்லை. குணா சந்தேகத்தோடு அவனை பார்த்தான். அவனும் அபிநயாவும் கண்களால் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

குணா அவனை முறைத்துவிட்டு திரும்பி கொண்டான்.

அன்புவின் விழி மொழிகள் புரிந்து புன்னகைத்தாள் அபிநயா. அவளின் மௌன மொழிகள் புரிந்து பதில் புன்னகை புரிந்தான் அன்பு. தங்களுக்குள் இருந்த காதல் இருவருக்கும் பிடித்திருந்தது. அந்த காதலின் வழியில் பயணிப்பதும் பிடித்திருந்தது.

இந்த பேருந்து பயணத்திற்காகவே ஒவ்வொரு வாரமும் வீட்டிற்கு வந்தார்கள். கல்லூரியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக் கொண்டார்கள். கடித பரிமாற்றங்கள், கண் சைகைகள், சிறு சிறு புன்னகைகளே அவர்களின் காதலுக்கு பரிணாம வளர்ச்சியை தந்துக் கொண்டிருந்தது.

தன்னை விட்டு விலகி நின்ற அஞ்சனாவோடு அன்புவே சென்று பேசினான். அவளின் மன அழுத்தத்தின் காரணம் புரியாவிட்டாலும் கூட அவளுக்கு மன அழுத்தம் உள்ளது என்பதை புரிந்துக் கொண்டு அவளை கலகலப்பாக மாற்ற முயன்றான். அபிநயாவோடு பேசி முடித்த மீதி நேரங்களை அஞ்சனாவிற்காக ஒதுக்கினான். சந்தர்ப்பம் கிடைத்தபோது அவளின் வீட்டிற்கு சென்று அவளின் அம்மாவோடும் பேசினான். அஞ்சனாவிற்கான சின்ன சின்ன உதவிகளை அவனே பார்த்து பார்த்து செய்தான். அவளின் பிறந்தநாளுக்கு சுடிதார் ஒன்றை வாங்கி பரிசளித்தான். அவளுக்கு தேவையான நோட்டுகளையும் புத்தகங்களையும் வாங்குவதற்கு துணையாய் உடன் சென்றான்.

அன்பு அவளோடு நெருங்கி பழகுவது மீனாவிற்கும் சுவேதாவிற்குமா சுத்தமாக பிடிக்கவில்லை. கலகலப்பாக பேசுபவர்களை விட தயங்கி நின்று பேசுபவர்களிடமே அதிகம் வஞ்சம் இருக்கும் என்பதை அவர்கள் இருவரும் நம்பினர்.

"எதுக்கு அன்பு அவளோடவே சுத்திட்டு இருக்கான்.?" என்று அடிக்கடி அபிநயாவிடம் கேட்டார்கள் இருவரும்.

"தங்கச்சி மாதிரிப்பா அவ.. நானே எப்படி அவனை சந்தேகப்படுறது.?" என்ற அபிநயாவிற்கு உண்மையிலேயே அவர்கள் இருவரையும் கண்டு எந்தவித சந்தேகமும் வரவில்லை.

அன்பு அஞ்சனா வீட்டிற்கு செல்கையில் ஒருமுறை அவளையும் உடன் அழைத்துச் சென்றான்.

"என் வயித்துல இந்த புள்ளை பிறந்திருக்க கூடாதா.?" என கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் அஞ்சனாவின் அம்மா. அபிநயாவிற்கு பெருமையாக இருந்தது அவளின் பாராட்டை கேட்டு. அதை தன் தோழிகளிடமும் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள்.

"லூசு மாதிரி இருக்காத அபி.. அவ பேச்சே சரி இல்ல.. குணாவையோ சஞ்சய் ப்ரோவையோ நேரா கண்ணை பார்த்து கூட பேச மாட்டேங்கிறா.. அவங்க இருக்கற இடத்துல இவ தனியா கூட இருக்க மாட்டேங்கிறா.. இதை சொன்னா நீ உடனே 'அவளுக்கு ஆண்களை பிடிக்கலப்பா'ன்னு வரிஞ்சி கட்டிட்டு வக்காலத்து வாங்க வருவ.. அவளுக்கு ஆண்களை பிடிக்கலன்னா அன்புவோடும் பழகாம ஒதுங்கிதான் இருக்கணும்.." என்று காரமாக சொன்னாள் மீனா.

"ஆமா.. அவ மனசுல நேர்மை இருந்தா எல்லார்க்கிட்டயும் ஒரே மாதிரி பேசி பழகணும்.." என்று சுவேதாவும் மீனாவோடு சேர்ந்துக் கொண்டு பேசினாள்.

அபிநயா அவர்களை கவலையோடு பார்த்தாள். அவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று குழம்பினாள். அருகில் யாரோ விக்கியழும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தாள். அஞ்சனா கண்களை துடைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடினாள்.

"நீங்க பேசியதை கேட்டுத்தான் அவ அழறா.." என்ற அபிநயா அஞ்சனாவை தேடிக் கொண்டு சென்றாள்.

கூடைப்பந்து விளையாடிவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்த அன்பு அழுதுக் கொண்டு சென்ற அஞ்சனாவை கண்டு அவளின் பின்னால் ஓடினான். அவளின் கையை பற்றி நிறுத்தினான்.

"அஞ்சனா ஏன் அழற.?" என்றான் கவலையோடு. தன் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து அவளிடம் நீட்டினான். அவள் வேண்டாமென மறுத்தாள். "அபி தப்பா நினைப்பாங்க.." என்றாள்.

அவளை சமாதானம் செய்யலாம் என்று பின்தொடர்ந்து வந்த அபிநயா அவள் சொன்னது கேட்டு சலித்து போனாள். சமாதானம் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டு திரும்பி நடந்தாள்.

அபிநயா திரும்பி செல்வதை கவனித்த அன்பு அஞ்சனாவின் தோளை பற்றி அவளின் முகத்தை பார்த்தான்.

"அவ ஏன் தப்பா நினைக்க போறா.? நீ ஏன் எப்பவும் இப்படியே யோசிக்கற.? அவ ரொம்ப நல்லவ.." என்றாள்.

மறுப்பாக தலையசைத்தாள் அஞ்சனா. "அவங்க பிரெண்ட்ஸெல்லாம் நம்ம இரண்டு பேரையும் சேர்த்து வச்சி ஏதேதோ பேசுறாங்க.. நிச்சயம் அபி என்னை தப்பாதான் நினைச்சிட்டு இருப்பாங்க.. இனி நீங்க என்னோடு பேசாதிங்க.." என்றவள் கண்களை துடைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடினாள்.

அன்பு தன் கர்ச்சீப்பை கசக்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அபிநயாவிடம் வந்தான். "அவளை நீ ஏதாவது சொன்னியா‌.?" என்றான் வருத்ததோடு.

"நான் இல்ல.. மீனுவும் சுவேதாவும் கிண்டலுக்கு என்னவோ சொன்னாங்க. உடனே அவ அழுதுட்டு ஓடிடா.. ரொம்ப வித்தியாசமான கேரக்டர் அவ.." என்ற அபிநயாவிற்கு அஞ்சனாவை இந்த ஜென்மத்தில் புரிந்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையே இல்லை. கல்லூரி வருடமே இன்னும் ஓரிரு மாதங்களில் முடிய இருக்கிறது. ஆனால் அஞ்சனா என்ற கதாபாத்திரம் எப்போது அழும் எப்போது சாதாரணமாக பேசும் என்பதை அவளால் கணிக்கவே முடியவில்லை. அன்புவும் அபிநயாவின் அருகில் சில நிமிடங்களில் அஞ்சனாவை பற்றி மறந்து போனான்.

தீபக் தன் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வெளியே நடந்தான். சந்தனக்கொடிக்கால் செல்லும் பாதையில் இறங்கி நடந்தான். பன்னிரெண்டாம் வகுப்பிற்கான ஸ்பெஷல் கிளாஸ் அதற்குள் துவங்கி விட்டது. அதை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டே நடந்தவன் சாலையின் வளைவில் திரும்பியபோது ஆறுமுகத்தின் பைக் அவனை தாண்டிக் கொண்டு சென்றது.

"அங்கிள்.." என்று தீபக் கத்திழைக்கவும் சட்டென்று பிரேக்கடித்து நின்றார் அவர். திருப்பியவர் இவனை குழப்பத்தோடு பார்த்தார்‌.

"வீட்டு வரைக்கும் லிப்ட் கொடுங்க அங்கிள்.." என்றவன் அவர் பதில் சொல்லும் முன்பே ஓடிச்சென்று பைக்கில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

ஆறுமுகத்திற்கு குழப்பம் மிகுந்தது. சிறு பையனை பைக்கிலிருந்து இறக்கி விடவும் அவருக்கு மனம் வரவில்லை.

"உங்க அப்பா பார்த்தா உன்னை திட்ட போறாருடா.." என்றார். அந்த பையனோடு பேசி கிட்டத்தட்ட பதினொரு வருடம் ஆகி விட்டது என்பதால் அவனை எப்படி அழைப்பது என்று கூட அவருக்கு தெரியவில்லை.

"அவர் திட்ட மாட்டாரு.. நீங்க போங்க அங்கிள்.." என்றவன் அவரை இடுப்போடு கட்டிக் கொண்டான். அவனுக்கு பயமே இல்லை. ஆனால் அவருக்கு பயமாகவே இருந்தது. இன்றைக்கு தெருவில் பஞ்சாயத்து நிச்சயம் என நினைத்துக் கொண்டே வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கினார்.

தெருவிற்குள் நுழையும் முன்பே பைக்கை நிறுத்தியவர் "இங்கேயே இறங்கிக்கிறியா.?" என்றார். பாவம் சிறு பையன் நடக்க சலித்து பைக்கில் ஏறி விட்டான். அவனை ஏன் வீட்டில் திட்டு வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணினான் அவர்.

"இல்ல அங்கிள்.. என்னை எங்க வீட்டு பக்கத்துலயே இறக்கி விட்டுடுங்க.." என்றவன் தான் இப்போதைக்கு இறங்க போவதில்லை என்பது போல அமர்ந்திருந்தான்.

பெருமூச்சோடு பைக்கை கிளம்பிய ஆறுமுகம் தன் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினார். "தேங்க்ஸ் அங்கிள்.." என்றபடியே பைக்கிலிருந்து இறங்கி கொண்டான் அவன்.

"ம்.." என்றுவிட்டு தன் பைக்கை ஓரம் கட்டினார் அவர். பையனை பக்கத்து வீட்டில் திட்டி விடுவார்களோ என்ற பயத்தோடு திண்ணையிலேயே அமர்ந்தார்.

தீபக் காலணியை கழட்டி விட்டுவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த வினோத் "என்னடா சீக்கிரம் வந்துட்ட.." என்றார் இவனை பார்த்து.

"பக்கத்து வீட்டு அங்கிள் லிப்ட் தந்தாருப்பா.." என்றவன் தன் பேக்கை கழட்டி ஓரமாக வைத்தான்.

"அம்மா காப்பி.." என்றான்.

வினோத் அவனை சந்தேகமாக பார்த்தார். "பக்கத்து வீட்டு அங்கிளா.? யாரு அந்த கோணக்காலனா.?" என்றார் குழப்பத்தோடு.

"அப்பா உங்களுக்கு மனசாட்சி இருக்கா.. அன்பு மச்சி எனக்கு அங்கிளா.?" என்றான் அம்மா கொண்டு வந்து தந்த காப்பியை கையில் வாங்கியபடி. ஆனந்தி காப்பி டம்ளரை பின்னால் இழுத்தாள்.

"முகமெல்லாம் வேர்வையில பூத்து போய் இருக்கு.. போய் முகம் கழுவிட்டு வா.." என்றுவிட்டு காப்பி டம்ளரை தரையில் வைத்தாள்‌.

"பின்ன யாருடா‌.?" என்றார் அப்பா.

"ஆறுமுகம் அங்கிள்ப்பா.. கஷ்டப்பட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்.. அவரே பைக்கை நிறுத்தி 'வாடா நானும் வீட்டுக்குதான் போறேன்.. ஏறிக்க'ன்னு சொன்னாரு.. நான் வரலன்னுதான் சொன்னேன்.. 'ஏன்டா சின்ன புள்ளையில நான் தூக்கி வளர்த்த பையன் நீ.. என் கூட பைக்ல வர கூட என்னடா தயக்கம்.?'ன்னு கேட்டாரு.. நான் யோசிச்சிதான் பைக்ல ஏறினேன். தெரு முனையிலயே இறங்கிக்கிறேன்னு கூட சொன்னேன்.. ஆனா அவர்தான் 'உங்கப்பனை பார்தது பயப்படுறியா.? ஆறுமுகம் அங்கிள்தான் கூட்டி வந்தாருன்னு சொல்லு.. எதுவும் திட்ட மாட்டார்'ன்னு சொல்லி வீட்டு பக்கத்துல இறக்கி விட்டாரு.." என்றான்‌.

ஆனந்திக்கு ஆறுமுகத்தை நினைத்ததும் பழைய சகோதர பாசம் பொங்கியது. வினோத் எதுவும் சொல்லவில்லை. அவருக்கும் குழப்பம் மட்டும்தான் இருந்தது. 'பசங்களும் சண்டை போட்டுக்கறது இல்ல.. பெரியவங்க நாம ஏன் முறைச்சிட்டு திரியணும்.?' என்று எண்ணினார்.

அதன் பிறகு தீபக் தினமும் ஆறுமுகம் பைக்கிலேயே வந்தான். அவரே நேரம் பார்த்து வந்தாரோ இல்லை இவனே அவரின் வருகைக்காக காத்திருந்து சாலையில் இறங்கினானோ என்னவோ. ஆனால் இருவருமே தினமும் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டனர். பைக்கில் போகும்போது அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் அளவுக்கு நெருங்கியும் விட்டனர். அதை அபிநயாவிற்கும் போன் செய்து சொன்னான் தீபக்.

"நமக்காக உன் தம்பி ரொம்ப உழைக்கிறான் போலிருக்கு.. ஸ்வீட் பாய்.." என்று அபிநயாவிடம் சொல்லி மகிழ்ந்தான் அன்பு.

"பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்ங்கற மாதிரி உங்க சண்டையால அவங்க பிரிஞ்சி இருந்தாங்க.. உங்க பாவத்துக்கு தீபக் பரிகாரம் செய்றான்.. கல்யாணம் செய்யும்போது மறக்காம மச்சினனுக்கு மோதிரம் போட்டு விட்டுடுடா.." என்று நண்பனுக்கு கிண்டலாக அறிவுரை சொன்னான் குணா.

ஆனந்தியும் அர்ச்சனாவும் காய்கறி வாங்கையிலும் கடைக்கண்ணிகளுக்கு செல்கையிலும் சாடை மாடையாக பேசிக் கொண்டனர்.

"அந்த கத்தரிக்காய் சொத்தை.." என்று அர்ச்சனாவின் கையில் இருந்த காயை வாங்கி ஆனந்தி மீண்டும் காய் கூடையில் போடும் அளவுக்கு விரைவிலேயே நெருங்கி விட்டனர்.

அடுத்த வாரத்திலேயே அவர்களது குல தெய்வ பண்டிகை வந்தது. 'பக்கத்து வீட்டாரை அழைக்கலாமா.?' என்று கேட்டாள் ஆனந்தி.

"நான் போகல.. வேணா நீ போய் கூப்பிட்டுக்கோ.." என்றவர் ஆனந்தி அழைக்க சென்றதும் குட்டி போட்ட பூனையாக வீட்டுக்குள் நடந்தார். அவள் திரும்பி வந்ததும் அவசரமாக முன் சென்று நின்று "என்ன சொன்னாங்க.." என கேட்டார் தவிப்போடு.

"நிச்சயம் குடும்பத்தோடு வருவதா சொன்னாங்க.." என்றவளுக்கும் உள்ளம் பூரித்தது. அந்த குடும்பத்துடனான பழைய பாச பந்தத்தை அவளும் நினைத்து பார்த்தாள். பல வருடங்களுக்கு பிறகு சொந்தம் கூடியதில் மகிழ்ச்சி அவளுக்கு.

பரிச்சைகளுக்கு படிக்க வேண்டி இருந்ததாலும் கல்லூரியில் ஆண்டு விழா நெருங்கி விட்டதாலும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை அபிநயாவால். அவளோடு சேர்ந்து இருக்கும் இடத்திலிருந்தே அன்புவும் கடவுளை வேண்டிக் கொண்டான்.

"நாங்க இரண்டு பேரும் இப்ப போலவே எப்போதும் சேர்ந்து இருக்கணும்.." என்று இருவருமே தனி தனியாக கடவுளை வேண்டிக் கொண்டனர்.

கடவுளின் மைன்ட் வாய்ஸ் : உங்க ரைட்டர் சரியான கிரேஸிப்பா.. வம்பு எப்ப வேணாலும் வரும். இப்படி இருக்கையில என்கிட்ட நீங்க இந்த மாதிரி வரமெல்லாம் கேட்கலாமா.?

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN