முகவரி 29

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாளே செல்வராஜ் இந்தியா வந்தவர் பேத்தியைப் பார்த்து அவர் கேட்ட முதல் கேள்வியே, “என்ன பாப்பா... என்ன நடந்தது... உன்னை இப்படி செய்ய எவனுக்கு துணிவு இருக்கு இங்க? எவன் அது?” அவர் சரமாரியாய் கேட்க

இவளோ தன் துக்கத்தை யாரிடம் கொட்டலாம் என்று இருந்தவள், “தாத்தா... தாத்தா... நான் மோசம் போய்ட்டேன் தாத்தா… நம்பி ஏமாந்துட்டேன்! என் கணவனே எனக்கு இப்படி செய்வான்னு நான் நினைத்துக் கூடப் பார்க்கலை தாத்தா” அனைத்தையும் சொல்லி விட

“என்னது கணவனா!... அப்போ உனக்கு?...” அவ்வளவு தான்… இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அதன் பின் அதிர்ச்சியில் அவர் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்திருக்க... உயிரற்ற உடலாக மண்ணில் சரிந்தார் அவர்.

தன்னுடைய செயலால் தாத்தாவின் உயிர் பறிபோனதே என்ற அதிர்ச்சியில் இவளும் மயங்கி விழ… திரும்ப அவள் கண் விழித்த போது ஊரே அவள் வீட்டில் கூடியிருந்தது. அவள் தாத்தாவின் உடலை நடுநாயகமாய் கூடத்தில் கிடத்தியிருக்க...

“ஹும்... என்னத்த சொல்ல… நல்லா வாழ்ந்த மனுஷன். பொண்டாட்டி இறந்ததும் சுத்தமா உடைந்திட்டார்... அதிலேயே தொழிலும் போச்சு”

“ஆமா, பிறகு அவர் மகளும் போய் சேர்ந்துட்டா... அதன் பிறகு செல்வராஜ் வாழ்ந்தது எல்லாம் ஒப்புக்குத் தான்”

“அதனாலேயே இரவு பகலா தொழில் தொழில்னு அது பின்னாடியே ஓடின மனுஷன்... இன்றைக்கு ஒரேடியா போய்ட்டார்...”

“ஆண் வாரிசு இல்லாத வீடு... அவர் மருமகன் தான் எல்லாம் செய்யப் போகிறான் போல...”

இப்படியான பேச்சுகள் அங்கு சூழ… அவைகளை அனு காதில் வாங்கினாலும் ஜடமென ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள் அவள்.

‘இப்போது என்ன செய்யணும்?’ ‘உங்க வழக்கம் என்ன?’ இப்படியான சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தபடி... மவுனமாய் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார் குணநாதன். ஆனால் சுமதி அப்படி இல்லாமல்... தான் தான் இந்த வீட்டுப் பெண் என்பது போல் எல்லோரையும் தன் அதிகாரத்தில் வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்து அந்த வீட்டில் கூடிய கூட்டமும் குறைய... பின் மூவரும் தங்கள் அறைகளில் முடங்கினார்கள்.

அதிர்ச்சியிலும்... தவிப்பிலும்... அனுவுக்கு மறுபடியும் ஜுரம் வந்து விட, தன் அறையே கதி என்று அவள் இருக்க... மருத்துவர்கள் வந்து போனார்கள்… ஏன், சில நேரத்தில் சுமதி கூட அவளை வந்து பார்த்து விட்டு போவாள்... ஆனால் அவள் தந்தை மட்டும் அவளை வந்து பார்க்கவில்லை.

அதுவே அவளுக்குத் சொல்லியது தன் தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை. தெரிந்து கொண்டவர் அதையே அவளிடம் வந்து கேட்டு திட்டி நாலு அடி அடித்திருந்தால் கூட அனு வாங்கியிருப்பாள்... ஏன் தான் ஏமாந்ததைச் சொல்லி தன் வலியைத் தந்தைக்கு உணர்த்தியிருப்பாள்... ஆனால் இப்படி முகம் கொடுக்காமல் இருக்கும் தந்தையிடம் அவளால் என்ன செய்ய முடியும்... உடல் அவதியும் அதிகமாகவே அவளைப் படுத்தி எடுத்தது. எதை சாப்பிட்டாலும் வாந்தி வாந்தி என்று வெளி வந்தது... சோர்வில் எப்போதும் படுத்தே இருந்தாள் அவள்.

இதற்கு இடையில் ஒரு நாள் அனு காது படவே, “நம்ம பொண்ணு செய்தது தப்பு தான்... படிக்கிறேன் சொல்லிட்டு இங்கே வந்து சீரழிந்திருக்கா. நம்ம கிட்ட இல்லாத பணமா... இவ ஏன் அந்த தொழில் செய்யணும்? எல்லாம் ஒரு ஜாலி தான்... பாழாய்ப் போன உடம்பு சுகம் தான்” மேற்கொண்டு நாக்கில் நரம்பில்லாமல் சுமதி சொல்ல இருந்த வார்த்தைகளை வாங்க முடியாமல் காதுகள் இரண்டையும் இருக்க மூடிக் கொண்டாள் அனு.

கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது... ‘நான் ஒன்றும் அப்படிப் பட்டவள் இல்லை என்று கத்த அனுவுக்குள் வேகம் வந்தது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லையே... ‘ச்சீ.. என்ன மாதிரி மனுஷி இவர்... அன்று அந்த இடத்தில் கூட குணநாதன் பொண்ணாம்மா நீ... செல்வராஜ் சார் பேத்தியா... அச்சோ! உன்னைப் போய் தப்பாக நினைத்தோமே... நீ கிளம்புமா கிளம்புமா...’ இப்படியான வார்த்தைகளைச் சொல்லித் தான் அவளை கவுரவமாக அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் சித்தி என்றிருக்கும் இவர் எவ்வளவு கேவலமாகப் பேசுகிறார்! சரி… அவர் பேசிட்டு போகட்டும்… ஆனால் என் தந்தை எப்படி இதை நம்பலாம்... நான் அவர் மகள் இல்லையா? அவர் ரத்தம் இல்லையா?’

‘ஆமாம்… நீ அவர் மகள் தான்... அதனால் தானே நான் உனக்கு தண்டனை கொடுத்தேன்... நம்பிக்கை துரோகம் செய்தேன்’ அவள் சிந்தனையை இடை வெட்டியது மிருடனின் இப்படியான குரல்.

அனுவை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டாலும், அவள் சோர்ந்தே படுத்திருக்க... அதில் அவளுக்கு முழு உடல் பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது... அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற செய்தியே! அதிர்ச்சியில் அனு ஸ்தம்பித்து நின்று விட... அவளின் தந்தை குணநாதனோ அதிர்ச்சியில் மயங்கி விழ... பரிசோதித்ததில் அவருக்கு ஸ்ட்ரோக் என்றார்கள் மருத்துவர்கள். வாய் பேச்சும் போக… அது மட்டுமில்லாமல் ஒரு பக்க கை மற்றும் காலின் செயல்பாட்டை இழந்தார் அவர்.

‘இந்த நேரத்தில் குழந்தையா... எங்கள் காதல் சின்னமா... இக்குழந்தை எனக்கு வரமா... இல்லை மேலும் நான் அசிங்கப்பட என்னுள் தங்கி இருக்கா? ச்சே...ச்சே... இது எனக்கு வரம் தான்... ஆனால் ஆனால்...’

மேற்கொண்டு சிந்திக்க முடியாமல் குழம்பியவள் தன் நிலையை விளக்கி, தந்தைக்கு தைரியம் சொல்ல இவள் அவர் அறைக்கு தட்டி தடுமாறி நுழைய... மகளைக் கண்டதும் எந்த தந்தையும் காணக் கூடாத ஒரு அருவருப்பு பார்வையுடன்... முகத்தைத் திருப்பிக் கொண்டார் குணநாதன்.

அனுவுக்கு சர்வமும் அடங்கியது. இருந்தும் மனதைத் தேற்றியவள் ஒருவேளை நாம் உண்மையைச் சொன்னால் தந்தைக்கு குணமாக வாய்ப்பு இருக்கு என்ற எண்ணத்தில், “அப்பா.. அது வந்து ப்பா...” இவள் ஆரம்பித்த நேரம்

“ஐயயோ! ஐயயோ! நம்ம குடும்பம் எப்படி எல்லாம் வாழ்ந்த குடும்பம்… இந்த வீட்டுப் பொண்ணு நீ இப்படி செய்யலாமா? இப்படி சோரம் போய் வந்து நிற்கிறியே... எவனாவது ஒருவனா இருந்தா... கண்டுபிடித்து கட்டுடா தாலியைன்னு சொல்லி மிரட்டலாம். இல்ல… நம்மகிட்ட இருக்கிற சொத்து, பத்தைக் காட்டி கூட அவன உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம். ஆனா... இந்த குழந்தைக்கு யார் அப்பன்னு தெரியலையே... எத்தனை பேர் அப்பன்னு தெரியலையே… ச்சீ... ச்சீ...” என்று வார்த்தைகளை சரமாரியாக கொட்டிய படி அங்கு வந்தாள் சுமதி.

“நல்லா இருந்த உன் தாத்தாவை நீ செய்த அசிங்கமான காரியத்தால் எமலோகம் அனுப்பின... இப்போ உன் அப்பாவையும் அனுப்ப இப்போ பேச வந்திருக்கியா? எனக்கு இருக்கிற ஒரே உறவு.. துணை அவர் மட்டும் தான் ம்மா... என்னங்க, இவளால் உங்களுக்கு ஏதாவது வந்திடப் போகுதுங்க... பேசாம கொஞ்சம் பணத்தை மட்டும் கொடுத்து இவளைக் கண்காணாமல் எங்கேயாவது அனுப்பி விடவா?” அவள் இன்னும் இன்னும் அடுக்கிக் கொண்டு போக

அனுவின் பார்வை என்னமோ... நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என்பது போல்... தன் அப்பா என்ன நினைக்கிறார் என்ற நிலையை அறிய அவரிடமே தன் பார்வையை பதித்திருந்தாள் அவள்.

ஆனால் அவரோ பேச முடியாத அந்த நிலையில் கொலைவெறியை தன் முகத்தில் காட்டியவர் சைகையால் அவளை வெளியே போகச் சொல்ல... கண்ணீருடன் ஜடமாய் அங்கிருந்து வெளியேறினாள் அனு. இந்த சம்பவத்திற்குப் பிறகு அவள் தந்தையை பிறகு காணவில்லை... காண விரும்பவும் இல்லை அவள்.

அதன் பிறகும் சுமதி சும்மா இல்லாமல்... அனுவைத் தேளாய் கொட்ட… அதற்கு எல்லாம் இவள் எந்த எதிர்வினையும் காட்டாமல் இருக்கவும்... இன்னும் பொங்கியவள், “இங்கே பார், என் தம்பி கிட்ட சொல்லியிருக்கேன்... வருவான்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவனைக் கட்டிக்கோ...” இவள் கட்டளையிட

அனு, “நீ யார் அதை என்னை செய்யச் சொல்ல?”

அனுவின் நேரடி தாக்குதலில் அதிர்ந்தவள், “பின்ன… பிள்ளை பிறந்தா எவனை அப்பன்னு சொல்லுவ? ஒருவனா இருந்தா கை காட்டி சொல்லலாம்...”

இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்க கேட்க… அனுவுக்கு சுமதி மேல் கோபம் வந்ததை விட... மிரு மேல் தான் வன்மம் வளர்ந்தது. ‘இதற்கு எல்லாம் நீ தானே டா காரணம்’ மறுத்துப் போன மனதுடன் மறுபடியும் கேட்டுக் கொண்ட படி கண்களை மூடித் தன் வேதனைகளை விழுங்கியவள், “யாராவது கேட்டால் என் புருஷன் செத்துட்டான்னு சொல்லுவேன்...”

இவள் ஆணித்தரமாய் பதில் தர... அதில் அதிர்ந்த நிலையில் அங்கிருந்து அகன்றது என்னமோ சுமதி தான். இப்படியான மனநிலையில் இருக்கும் போது தானா மிருடன் அவளை மறுபடியும் சந்திக்க வேண்டும்…

“ஷிதா...” மிருடன் தான்

அவனைக் கண்டதும், “உன்னை யார் உள்ளே விட்டது... கதவு திறந்திருந்தா... கண்ட நாயும் உள்ளே நுழைந்திடுமா… ஏய் வாட்ச்மேன்… அங்கே என்ன செய்கிற?” இது தான் அவள் பேசிய முதல் வார்த்தை.

மனைவியின் பேச்சில் தன் கோபத்தைக் கண்கள் மூடி அடக்கிக் கொண்டவன், “நமக்கு பாப்பா வரப் போகுதா... ஏன் ஷிதா என் கிட்ட சொல்லலை?” இவன் தன்மையாகவே கேட்க

அவனுடைய தன்மையில் இவளுக்குள் இன்னும் கோபம் எழ, “சொல்லணுமா… நீ யார் எனக்கு? அதாவது என் குழந்தைக்கு…”

“நம்ம குழந்தைக்கு அப்பா”

அவன் பதிலில் பல்லைக் கடித்தவள், “அச்சச்சோ! அப்படியா... ஆனா எனக்கு என்னமோ நீ என்னை என்ன தொழிலுக்கு அனுப்பினியோ... அதிலே யாருனே...” அவள் சித்தி தினம் தினம் சொல்வதை இவள் சொல்ல வர

“படார்ர்ர்ர்...” என்ற சத்தத்துடன் அவள் அறையிலிருந்த கண்ணாடி உடை படவும் தான் அனுவின் பேச்சு பாதியில் நின்றது. அதாவது இப்படியாக கண்ணாடியை உடைத்து அவள் பேச்சை நிறுத்தியிருந்தான் மிருடன்.

“இனி இன்னொரு முறை உன்னிடமிருந்து இப்படியான வார்த்தைகள் வந்தது... உன்னை உயிரோட புதைச்சிடுவேன்” அவன் கண்ணில் கொலைவெறியைக் கண்டவள் ஓர் அடி பின்வாங்க, “என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா... அதான் என்னை பழிவாங்கி நீ சாதிச்சிட்டியே! பிறகு உனக்கு என்ன வேணும்?”

“எனக்கு என் குழந்தை வேணும்” மிருடன்

“இது உன் குழந்தை இல்லை” அனுவோ ஆணித்தரமாய் மறுக்க

“ஏய்...” கொலைவெறியுடன் மிருடன் மனைவியை நெருங்க

“ஆமாம் இது உன் குழந்தை இல்லை. நீ என்னைக் கொன்றாலும் சரி… இதான் உண்மை. என் வயிற்றில் வளர்வது உன் குழந்தை இல்லை. இனி நீ என்னைத் தொடரணும்னு நினைத்தா... என்னோட கணவன் நீதான் என்ற அடையாளத்தையோ அல்லது உன்னுடைய மனைவி நான் தான் என்ற அடையாளத்தையோ நீ எனக்கு கொடுக்க நினைத்தா... தந்தை என்ற பாசத்தோடு... என் குழந்தை கிட்ட நீ பழக நினைத்தா... அப்போது எந்த இடமாக இருந்தாலும் என்னுடைய பதில் இதுவாகத் தான் இருக்கும்!

இப்படி ஒரு வார்த்தையை என் வாய்மொழியாக இந்த உலகம் முழுக்க… நான் சாகும் வரை சொல்லணும்னு நீ நினைத்தா... தாராளமா என்னையும் என் குழந்தையையும் நீ தொடரலாம்…. நெருங்கலாம்…. உனக்கான அடையாளத்தை எங்களுக்கு நீ கொடுக்கலாம். இப்ப நான் சொன்னது எல்லாம் நடக்கும். இது நம்ம குழந்தை மேல் சத்தியம்” இது தான் என் முடிவு என்பது போல் அன்று வீறு கொண்டு நின்றாள் அனு.

மனைவியின் பிடிவாதத்தைக் கண்டவன்... தன்னுள் எதுவோ மடிய

“போறேன் டி... நான் போறேன்... எப்போ நான் கட்டின தாலியைத் தூக்கி எறிஞ்சிட்டு... நம்ம குழந்தை மேலேயே சத்தியம் வாங்கி இப்படியான வார்த்தைகளை சொன்னாயோ... இனி இந்த வினாடியிலிருந்து உன் முன்னாடி நான் வர மாட்டேன். அப்படியே வந்தாலும் கணவன் என்ற அடையாளத்தோட உன்னை நெருங்க மாட்டேன்.

ஆனா நீயா அதற்கான அடையாளத்தோட என்னைத் தேடி வந்தாலோ... இல்லை வெளியே சொன்னாலோ... அந்த வினாடி... அந்த நொடி... நம்மைப் படைத்த அந்த கடவுளே வந்தாலும்... உன்னை என்கிட்டயிருந்து பிரிக்க முடியாது. அது மட்டும் இல்லை டி... நானே நினைத்தாலும் உன்னை என் கிட்டயிருந்து காப்பாற்ற முடியாது. இதுவரை நீ பார்க்காத... சாட்சாத் இந்த மிருடவாமனின் முகத்தை நீ பார்ப்ப... நீ கொட்டிய வார்த்தைகளை எல்லாம் எண்ணி வச்சிக்கோ. We will meet soon... உனக்கு அப்போ பதில் தரேன்” என்ற எச்சரிக்கையுடன் வெளியேறினான் மிருடன்.

விழிகளில் பிரித்து அறிய முடியாத ஒரு பாவத்துடன் அவன் வெளியேற... சிலையென நின்றாள் அனுதிஷிதா. கண்டதும்

உலகம் அறியாத வயதில் காதல்... அவசர கதியில் திருமணம்... அதன் பின் கணவனின் துரோகம்... வயிற்றில் குழந்தை... தற்போதோ நிரந்தர பிரிவு! இதற்கா தன் மீதம் உள்ள வாழ்க்கையை... காதல் என்ற பெயரில் சிறைபடுத்திக் கொண்டாள் அனு.

அவள் மட்டுமா? படிக்க வேண்டிய வயதில்... இப்படி ஒரு முடிவை எடுக்கும் ஆண்... பெண்... இருவரின் வாழ்விலும் ஏதோ இப்படியான சில கருப்பு பக்கங்கள் இருக்கத் தானே செய்கிறது... அதிலிருந்து அனுதிஷிதா மாதிரி வென்று வெளியே வந்தவர்கள் சிலராக இருக்கலாம்... ஆனால் அதனால் வாழ்வை அழித்துக் கொண்டவர்கள் கோடியில் அல்லவா இருக்கிறார்கள்...

அதன் பின் படுக்கையிலிருந்த அவள் தந்தை எட்டு மாதத்தில் இறந்து விட... மான்வி பிறந்ததும்... புதுக்கோட்டை வந்து விட்டாள் அவள்.

முன்பு மகளுக்காக கூட கணவனை ஏற்க மறுத்த அவள் மனது... இன்று அதே மகளுக்காக கணவனுடைய வீட்டில் தங்க வைத்துள்ளது. காலங்கள் தான் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் ஒரு மனிதனுள் விதைக்கிறது! அது உண்மை தானே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN