சிக்கிமுக்கி 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரியின் ஆண்டு விழாவுக்கான வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன. அருள் குமரனைதான் அதற்கு நிர்வாகியாகவும் தேர்ந்தெடுத்து இருந்தனர். இலக்கியம், கலை, விளையாட்டு மூன்றும் விழாவில் முக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர்.

ஆண்டு விழாவில் கவிதை வாசிக்க போவதாக சொல்லி தன் பெயரை பதிந்து விட்டு வந்தாள் அபிநயா.

"குட்டச்சி கலக்க போறாடா.." என்று ஆரம்பிக்கும் முன்பே பெருமைப்பட்டான் அன்பு.

"இவ கவிதை வாசிக்க ஆரம்பிச்சதும் அரங்கத்துல இருக்கும் மத்த எல்லோரும் எழுந்து ஓடாம இருந்தாலே வெற்றிதான்.." என்று கிண்டலடித்த குணாவின் தலையில் கொட்டி வைத்தாள் மீனா.

"என் பிரெண்டை பத்தி குறையா சொல்லாத.." என்றாள். அபிநயா அவளை பார்த்து புன்னகைத்தாள்.

குணை தலையை தடவிக்கொண்டே அபிநயாவை முறைத்தான். "குட்ட இதுக்காக நான் உன்னை பழி வாங்கப்போறேன்.." என்றான்.

"பார்க்கலாமே.." என்று சொல்லி சிரித்த அபிநயா மேடையில் ஏறும்போது கை கால்கள் நடுங்காமல் இருந்தால் போதும் என்று எண்ணி கவலைப்பட்டாள்.

அன்புவின் நண்பர் குழுவில் இருந்த அனைவருமே ஏதேனும் ஒரு போட்டியில் கலந்துக் கொள்ள பெயர் கொடுத்து இருந்தனர். ஆனால் அஞ்சனா மட்டுமே மௌன சாமியாரினியாய் இருந்தாள்.

அன்பு அவளை தனியே அழைத்து "நீ எந்த போட்டியிலும் கலந்துக்கலயா.?" என்று கேட்டான்.

"எனக்கு கூட்டத்தை பார்த்தா பயமா இருக்கும்.. ஏதாவது சொதப்பிடுவேனோன்னு பயமா இருக்கு.. எங்க அப்பா இறந்துப் போகும் முன்னால ஸ்டேஜ் ஏறி பரதநாட்டியம் பெர்பாமன்ஸ் பண்ணி இருக்கேன்.. ஆனா இப்ப எப்படி.?" என கேட்டவளுக்கு குரல் கரகரத்திருந்தது.

அவளை தோளோடு அணைத்துக் கொண்ட அன்பு அவளின் தலையை வருடி விட்டான். "அவர் உன்னை விட்டுட்டு எங்கே போயிருக்க போறாரு.? நீ சுவாசிக்கற காத்துலயும், உனக்கு பார்வை தரும் ஒளியிலயும், உன் செவி சேரும் ஒலியிலேயும் அவரேதான் இருப்பாரு. அவர் உன் கூடவே இருந்தாலும் நீதான் இல்லன்னு நினைச்சி கவலைப்படுற.." என்றான்.

அஞ்சனா தன் கண்களை துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். "தேங்க்ஸ்.. நீங்க என் கூட பிறக்காம போனது என் துரதிஷ்டம்.." என்றாள்.

"இப்பவும் அதே தப்பைதான் பண்ற.. கூட பிறக்கலன்னாலும் சகோதர பாசம் அதேதான்.. ஆனா நீதான் உன்னையும் நம்ப மாட்டேங்கற.. கூட இருப்பவங்களையும் நம்ப மாட்டேங்கற.." என்றான் கண்டிப்புடன்.

"சாரி.." என்று உடனடியாக மன்னிப்பு கேட்டவளை பார்த்து புன்னகைத்தான்.

"ஆண்டு விழாவுல பரதநாட்டியம் ஆடுறியா.? நான் அருள் குமரன் சார்கிட்ட பேசுறேன்.." என்றான் அன்பு.

அஞ்சனா யோசித்தாள். "சோலோ பெர்பாமன்ஸ்தான்.. ஆனா நீங்க மேடையில நிற்கணும்.. ஓகேவா.?" என்றாள்.

"ஓகே.." என்றவன் அவளோடு இணைந்து அருள் குமரனின் அலுவலக அறைக்கு நடந்தான். அன்பு அவரிடம் விசயத்தை சொன்னதும் உடனடியாக மகிழ்ந்தார் அவர்.

"தேங்க்ஸ் அன்பு.. மொத்த நிகழ்ச்சியிலும் பரதநாட்டியம் ஒன்னுதான் மிஸ்ஸாகியிருந்தது. இனி விழா பெர்பெக்டா இருக்கும்.." என்றார்.

"பார்த்தியா.. நீ இல்லாம விழா கூட முழுமையடையல.." என்று சொல்லியபடி அலுவலக அறையை விட்டு அஞ்சனாவோடு வெளியே நடந்தான் அன்பு.

"நீங்க கூட இருந்தாதான் எனக்கே என்னோட முக்கியத்துவம் தெரியுது.." என்றவளின் தலையை கலைத்து விட்டவன் "நான் எப்பவும் உன்னோடுதான் இருக்கேன். ஆனா நீதான் எங்க கூட்டத்துல சேராம ஒதுங்கியே இருக்க.. மத்தவங்களும் என்னை போலதான். யாரும் சிங்கம்புலி கிடையாது. நீ மட்டும் எல்லோர் கூடவும் நார்மலா பேசி பழக ஆரம்பிச்சா அப்புறம் நீ என்னை விட மத்தவங்கதான் ரொம்ப நல்லவங்கன்னே சொல்லுவ.. எல்லோரும் அந்த அளவுக்கு நட்புக்கு உயிரை தரவங்க.." என்றான்.

அஞ்சனாவுக்கு அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. அவளால் அந்த கூட்டத்தில் கலக்கவே முடியவில்லை. அந்த கூட்டத்தில் எப்போதும் அபிநயாதான் நடுநாயகமாக இருந்தாள். அனைவரும் அவளைதான் பாராட்டினார்கள். அவளைதான் கிண்டலடித்தார்கள். அவளிடம்தான் வம்பு வளர்த்தார்கள். அவளை பார்க்கையில் லேசாக பொறாமை கூட தோன்றியது அஞ்சனாவிற்கு.

அன்பு என்னதான் தங்கை போல் என்று சொல்லி பழகினாலும் கூட பெரும்பாலான நேரத்தை அவன் அபிநயாவோடுதான் செலவிட்டான். அதுவும் அஞ்சனாவிற்கு பொறாமையை தந்தது. அவர்கள் இருவருக்கும் உள்ள காதலை அவள் வெறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை வெறுத்தாள்.

அன்பு தன் நட்பு கூட்டத்தை நோக்கி நடக்க அஞ்சனா தனது தனி வழியில் பிரிந்து நடந்தாள். அன்பு தன் கூட்டத்தாரோடு வந்து அமர்ந்த பிறகே அஞ்சனா தன்னோடு வரவில்லை என்பதை புரிந்துக் கொண்டான். 'கிரேஸி கேர்ள்..' என நினைத்தவனிடம் ஒரு குச்சியையும் வண்ண தாள்களையும் தந்தாள் அபிநயா.

"இதை ஒட்டிக் கொடு.." என்றவள் தன் கையில் இருந்த பந்திற்கு வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.

"இது எதுக்கு.?" தன் மடியில் இருந்த குச்சியை காட்டி கேட்டான் அன்பு.

"மீனு மேஜிக் பண்ண போறா.. அதுக்குதான்.. நல்லா ஸ்ட்ராங்கா ஒட்டி வை.." என்றவள் பந்தில் கவனமாக இருந்தாள்.

அன்பு வண்ண தாள்களை வியப்போடு பார்த்தான். "மீனா சொதப்பிட மாட்டா இல்ல.?" என்றான் சந்தேகமாக.

அருகே இருந்த குணா குச்சியை எடுத்து அவனது தோளில் அடித்தான்.

"அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீ உன் தொகுப்பாளர் ஒர்க்கை சொதப்பி வைக்காம இரு அதே போதும்.." என்றான்.

"இவ என் கண் முன்னாடி இருந்தா போதும்.. நான் சொதப்பவே மாட்டேன்.." என்று அபிநயாவை கை காட்டியவன் அவளின் கழுத்தை கட்ட முயன்றான்.

"டிஸ்டர்ன்ஸ் மெயின்டன் பண்ணுங்க.." என்று எச்சரித்தபடி அவர்களின் மீது காகித பூக்களை தூக்கி எறிந்தான் மரத்தில் அமர்ந்திருந்த சஞ்சய்.

"சாரி சீனியர் கவனிக்கல.." என்ற அன்பு குச்சியில் வண்ண தாள்களை ஒட்ட ஆரம்பித்தான்.

சுவேதா தன்னிடமிருந்த உடையை கவனத்தோடு தைத்துக் கொண்டிருந்தாள். கோமாளிக்கான உடை அது. குணா கோமாளி வேடத்தில் மேடை ஏறி நாட்டுக்கு நல்லது என்ற பெயரில் ஒரு சொற்பொழிவை ஆற்ற இருக்கிறான். அவனுக்காகதான் அவள் இதை தயாரித்துக் கொண்டிருந்தாள்.

சுவேதா இரண்டாமாண்டு மாணவிகள் கூட்டத்தோடு சேர்ந்து மயிலாட்டம் ஆட இருந்தாள். சஞ்சய் அன்புவோடு சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருந்தான். அனைவருமே ஒருத்தருக்கொருத்தர் உதவிகளை செய்துக் கொண்டு இருந்தனர்.

அவர்களை பார்த்தபடி கல்லூரி கட்டிடத்தின் மாடியில் நின்றிருந்த அஞ்சனாவிற்கு இவர்களின் நட்பை பார்த்தால் பொறாமை மட்டுமே உண்டாகும். ஆனால் நட்பிற்காக செய்யும் உதவிகளும், நட்பிற்கு துணை நிற்கும் நேரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அவள் அறியவில்லை. சுயநலமற்ற அன்பிற்காக சுயநலமில்லாமல் தன்னையே அற்பணிக்க வேண்டும் என்ற விசயம் அவளுக்கு தெரியவில்லை. எதுவுமே செய்யாமல் நட்புகளின் கூட்டத்தில் கூட கலந்துக் கொள்ளாமல் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் அவளை கொண்டாட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் போனது இவர்களுக்கு.

சஞ்சய் தான் அமர்ந்திருந்த மரக்கிளையை விட்டு கீழே குதித்தான். தன்னிடமிருந்த நோட்டை பார்த்தபடி "அன்பு ஒரு டவுட்.." என்றான்.

"சொல்லுங்க சீனியர்.." என்ற அன்பு வண்ணத்தாள்கள் சுற்றிய குச்சியை அபிநயாவின் அருகே வைத்துவிட்டு சீனியர் பக்கம் திரும்பினான்.

"இருபத்தி நாலாவது பெர்பாமன்ஸ் வாசுவும் நிவாஸும்.. இவங்களை எப்படி மேடைக்கு கூப்பிடுறது.?" என்றான் குழப்பத்தோடு.

"இங்கேயே இத்தனை டவுட்.. நிச்சயம் நீங்க இரண்டு பேரும் சொதப்ப போறிங்க.." என்று சமயம் பார்த்து கிண்டலடித்தாள் சுவேதா.

"உங்க அளவுக்கு சொதப்பி வைக்க மாட்டோம்.." என்ற அன்பு "அடுத்த திறமையாளர்களான நமது சீனியர்கள் வாசுவும் நிவாஸும் மேடைக்கு வந்து கிராமப்புற பாடல் ஒன்றை நமக்காக பாடுவார்கள்.. இது ஓகேவா சீனியர்.?" என கேட்டான்.

சஞ்சய் இடம் வலமாக தலை அசைத்தான். "அவங்க உனக்கு மட்டும்தானே சீனியர்ஸ் எனக்கு இல்லையே.. பார்க்கறவங்களுக்கும் இல்லையே.." என்றான்.

"அதுக்காக நான் அவங்களை பேர் சொல்லி கூப்பிட முடியுமா.? அப்புறம் அவங்க ராகிங் செய்வாங்க.." என்றான் அன்பு.

"நான் சொல்லல.." என்ற சுவேதாவோடு சேர்ந்து அபிநயாவும் ரகசியமாக சிரித்தாள்.

"இவங்க பேரை நான் வாசிச்சிடுறேன்.." என்று அந்த விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தான் சஞ்சய்.

அஞ்சனா வீட்டிற்கு சென்றதும் தான் தனது கல்லூரி ஆண்டு விழாவில் பரத நாட்டியம் ஆட இருப்பதாக அம்மாவிடம் சொன்னாள். அம்மாவும் ரொம்ப சந்தோசப்பட்டாள். மகளும் மற்ற பிள்ளைகளை போல சகஜமாக மாறி வருவது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அபிநயா தினமும் கண்ணாடி முன் நின்று கவிதையை வாசித்துப் பார்த்தாள். அதை கண்டு மீனா "எனக்கே மனப்பாடம் ஆயிடுச்சி.. பேப்பர் பார்த்து படிக்க போற நீ ஏன் இத்தனை முறை ரிகர்சல் பார்க்கற.?" என்று சலித்துக் கொண்டாள்.

"இல்ல மீனு.. ஸ்கூல்ல நானும் கோணக்காலனும் சண்டை போட்டுக்கதான் நேரம் இருந்தது. இந்த மாதிரி ப்ரோகிராம் நடந்தா கூட நாங்க இரண்டு பேரும் எப்ப வேணாலும் சண்டை போட்டுப்போன்னு எங்களை எந்த விழாவிலும் கலந்துக்க கூட விட மாட்டாங்க. முதல் முறையா மேடை ஏற போறேன் இல்லையா.? அதான் கொஞ்சம் பயமா இருக்கு.." என்றவளின் அருகே எழுந்து வந்த மீனா அவளின் முகவாயை பற்றினாள். அபிநயா பதற்றம் குறையாத கண்களோடு அவளை பார்த்தாள்.

"உன்னால முடியும் அபி.. இதை நீ யாருக்கு சொல்ல நினைக்கிறியோ அவங்களை மனசுல நினைச்சிக்க. கண்டிப்பா ஒரு இடத்துல கூட தடுமாறாம வாசிச்சிடுவ.." என்றாள்.

அபிநயா சரியென தலையசைத்தாள். "கை தட்டி என்கரேஜ் பண்ணுவதானே.?" என்றாள்.

மீனா சிரிப்போடு அவளை கட்டிக் கொண்டாள். "கண்டிப்பா.. நாங்க எல்லாம் பிரெண்ட்ஸ்ன்னு வேற எதுக்கு இருக்கோம்.?" என்றாள். அபிநயா பெருமூச்சோடு மீண்டும் கவிதையை வாசித்து பார்க்க ஆரம்பித்தாள்.

அன்புவின் பெற்றோரும் அபிநயாவின் பெற்றோரும் ஆண்டுவிழா நாளில் காலை நேரத்திலேயே கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்டனர். அபிநயாவும் அன்புவும் அவர்களிடம் மீனாவையும், சுவேதா சஞ்சயையும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

மீனாவின் பெற்றோர் வந்ததும் அவளும் தன் நண்பர்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். குணா அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டான். "அங்கிள் காப்பி கொண்டு வரட்டா.? ஆன்டி ஜூஸ் கொண்டு வரட்டா.?" என்று அவளின் பெற்றோரிடம் நிமிடத்திற்கு ஒருமுறை கேட்டு வைத்தான்.

அன்புவின் குடும்பமும் அபிநயாவின் குடும்பமும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொண்டாலும் கூட இன்னும் தங்களின் பிள்ளைகள் இருவரும் பேசிக் கொள்ளாமல்தான் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள். அதுக்கேற்றார் போல இவர்களும் கூட பெற்றோர் முன்னால் பேசிக் கொள்ளாமலேயே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தனர்.

சஞ்சய்யின் பெற்றோர் கல்லூரிக்கு வந்ததும் அவர்களின் கண்கள் சுவேதாவைதான் முதலில் தேடின. "அம்மா.. அப்பா.. எப்ப வந்திங்க.?" என்று அவர்களை கண்டதும் ஓடிச்சென்று வரவேற்றாள் அவள். அவளை சந்தேகத்தோடு பார்த்தனர் அபிநயாவும் மீனாவும்.

"இப்பத்தான் குட்டிம்மா.. உன் பேரண்ட்ஸ் வந்துட்டாங்களா.?" என கேட்டார்கள் அவர்கள்.

"அவங்க உங்களுக்காகதான் பந்தல் கீழே உட்கார்ந்து காத்திருக்காங்க.." என்று தன் பெற்றோரை நோக்கி கை காட்டினாள்.

"சரிடாம்மா.. நாங்க அவங்களோடு பேசிட்டு இருக்கோம்.. நீ கவனமா இரு.." என்று அவளின் கன்னம் தட்டி விட்டு நகர்ந்தாள் சஞ்சய்யின் அம்மா.

"ஓ மை காட்.. அதுக்குள்ள மாமியார் மாமனாரை காக்கா பிடிச்சிட்டியா.?" என்ற மீனாவின் வாயை அவசரமாக பொத்தினாள் சுவேதா.

"எங்க இரண்டு பேமிலியும் தூரத்து சொந்தமாம்.. இதை ஒரு பங்ஷன்ல மீட் பண்ணும்போதுதான் நாங்களே தெரிஞ்சிக்கிட்டோம்... புள்ளை நல்லா இருக்கு நம்ம சஞ்சய்க்கு பேசி வைக்கலாமான்னு அவங்களே பேசிட்டு இருக்காங்க.. நீங்க உங்க ஆர்வ கோளாறுல எதையாவது சொல்லி எங்களை பிரிச்சி விட்டுடாதிங்க.." என்றாள் கெஞ்சலாக.

"தூரத்து சொந்தம்ன்னு நீ ஏன் முன்னாடியே சொல்லல.." என்று சந்தேகமாக கேட்ட அபிநயாவிடம் "அப்புறமா சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன்.. இதை மிஸ்டேக்கா எடுத்துக்கிட்டு பழி வாங்கி வச்சிடாதிங்க.. நீங்க இரண்டு பேருமே என் உயிர்தோழிகள். அதை மனசுல வச்சிக்கிட்டு இந்த அப்பாவி பொண்ணை மன்னிச்சி விட்டுடுங்க.." என்றாள்.

"ஓகே இனி எது நடந்தாலும் எங்ககிட்ட சொல்லணும் சரியா.?" என்று எச்சரித்துவிட்டு அவளை விலகி நின்றனர் இருவரும்.

அன்பு அஞ்சனாவின் தாயை காணாமல் அவளிடம் சென்று விசாரித்தான். "நான்தான் வர வேணாம்ன்னு சொல்லிட்டேன்.. அம்மா இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கும். சரியா பெர்பாமென்ஸ் பண்ண மாட்டேன்னு தோணுச்சி அதான்.." என்றவளை விசித்திரமாக பார்த்தவன் அவளின் குணமே அதுதான் என்று புரிந்து அந்த பேச்சை விட்டுவிட்டான்.

"வா.. என்னோட பேரண்ட்ஸ்கிட்ட உன்னை இன்டிட்டியூஸ் பண்ணி வைக்கிறேன்.." என்று அவளை அழைத்தான்.

அஞ்சனா மறுப்பாக தலையசைத்தாள். "நான் வரல.. அவங்க ஏதாவது தப்பா நினைப்பாங்க.." என்றாள் தயக்கமாக.

அன்புவிற்கு முதல் முறையாக எரிச்சல் வந்தது அவள் சொன்னதை கேட்டு. "எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க.." என்றான்.

அவனின் கோபத்தை குரலில் உணர்ந்தவள் "சாரி நான் அப்படி சொல்ல வரல.. எனக்குதான் கொஞ்சம் தாழ்வு மனபான்மை.. தப்பா எடுத்துக்காதிங்க.." என்றவள் அவனை விட்டு விலகி நடந்தாள்.

அன்பு சலிப்போடு அவளை பார்த்தான். எப்போதுதான் அவளும் சாதாரண பெண்களை போல நடந்துக் கொள்வாளோ என்று கவலையாக இருந்தது.

தீபக் அந்த கல்லூரி வளாகத்தை பல முறை வட்டம் அடித்துவிட்டான். அந்த கல்லூரியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்பாவும் அம்மாவும் தன்னை இங்கே அனுப்ப மாட்டார்கள் என்பது புரிந்ததும் அக்காவின் மீது சிறு பொறாமை வந்தது.

கல்லூரி கட்டிடம் ஒன்றின் இரண்டாம் தளத்தில் நின்றபடி கீழே இருந்த பாதையில் நடந்து வந்துக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் தீபக். "என்னடா மச்சான் பண்ற இங்கே.?" என கேட்டு அவனின் தோளில் கை போட்டான் அன்பு.

அவனை திரும்பி பார்த்த தீபக் "உனக்கும் அபிக்கும் கொடுத்து வச்ச வாழ்க்கை இல்ல.? பேரண்ட்ஸ் கட்டுப்பாடு இல்லாம நல்லா லவ் பண்ணிட்டு சுத்துறிங்க.." என்றான். அன்பு உடனடியாக மறுத்து தலையசைத்தான். "இல்ல.. எங்க ஹாஸ்டல் வார்டனெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.." என்றான்.

"என்னவோ எங்க அப்பாவுக்கு தெரியாதவரை சந்தோசம்தான். தெரிய வந்ததுன்னாதான் உனக்கு சங்கே.." என்றான்.

மாணவர்கள் கூட்டம் வண்ணத்து பூச்சி கூட்டமாக அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. பெற்றோர்களும் உறவினர்களும் அமர்ந்திருந்த பந்தலின் கீழே அமர்ந்திருந்தனர் அன்புவின் குடும்பமும் அபிநயாவின் குடும்பமும்.

"அம்மா இவ ஹேர் ஸ்டால் நல்லா இருக்கா.? நானே பின்னி விட்டேன்.." என்று சுவேதாவின் தலையை பெற்றோரிடம் காட்டி கேட்டாள் அபிநயா.

"செம.." என்றார் அப்பா.

அபிநயா புன்னகைத்துவிட்டு தோழியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

"என்னோட ரப்பர் பேண்ட் எங்கேடா.?" என கேட்டபடி பெற்றோர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான் சஞ்சயின் நண்பன் ஒருவன்.

"அபிதான்டா எல்லாத்தையும் வச்சிருந்தா.." என்றான் அவனோடு வந்தவன்.

"அன்புவோட லவ்வரா.? அவக்கிட்ட ஏன்டா தந்த.? இந்த கூட்டத்துல அந்த குட்டச்சியை நான் எங்கேன்னு தேடுவேன்.?" என்றபடி நடந்தான் அவன். "அபி பேக் இங்கேதான் இருக்கு.." என்று மேஜை மேல் கிடந்த பேக்கை கண்டு நிம்மதி பெருமூச்சி விட்டவன் பேக்கின் முன்னால் அமர்ந்திருந்தவர்களிடம் "சார் இந்த பேக்கோட சொந்தக்கார பொண்ணை பார்த்திங்களா.? நல்லா குட்டையா இருப்பா.." என்றான்.

ஆனந்தி எதிர் திசையை கை காட்டினாள். "அந்த வழியாதான் போனா.." என்றாள்.

"தேங்க்ஸ் மேடம்.." என்ற அவன் தன் நண்பனோடு அங்கிருந்து நடந்தான். "அந்த மேடத்தை பார்த்தியாடா.. குட்டச்சியோட அசப்பு அடிக்குது இல்ல.?" என வியப்போடு கேட்டுக் கொண்டே சென்றான் அவன்.

வினோத்தின் அருகே அமர்ந்திருந்த ஆறுமுகமும் அர்ச்சனாவும் குழப்பத்தில் அமர்ந்திருந்தனர்.

"இந்த பையன் ஏதோ உளறி இருப்பான் போல.." என்றாள் ஆனந்தி. வினோத் அவளை திரும்பி பார்த்து முறைத்தார். ஆனந்தி திருதிருவென விழித்தபடி மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். சஞ்சய்யின் நண்பன் சொல்லிச்சென்றது அங்கிருந்த நால்வரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவர்கள் எப்போது காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று வியப்பாகவும் இருந்தது. அதே வேளையில் வினோத்திற்கு அன்புவின் மீது கோபமாகவும் வந்தது. இந்த கூட்டத்தில் தனது கோபத்தை காட்ட கூடாது என்று எண்ணி பொறுமை காத்தார் அவர்‌.

"அம்மா.." என்றபடி சற்று நேரத்தில் அங்கே ஓடி வந்தான் தீபக்.

"பங்சன் ஆரம்பிக்க போகுது.. நாம ஸ்டேஜ்க்கு முன்னாடி போய் உட்காரலாம் வாங்க.." என்றவன் அபிநயாவின் பேக்கை எடுத்து தன் தோளில் மாட்டிக் கொண்டான்.

பிற்பகல் வேளையில் முதல்வரின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

அன்புவம் சஞ்சய்யும் ஆளுக்கொரு மைக்கை பிடித்தபடி ஸ்டேஜில் நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

"ஆட்டமும் பாட்டமும் மகிழ்ச்சியிலும் சோகத்திலும் நம் வாழ்வோடு கலந்திருப்பது. அதனால் எங்களின் முதல் திறமையாளரையும் ஆட்டத்தோடு இந்த கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும்படி அன்போடு அழைக்கிறோம்.. அன்புமிகு சீனியர் ரம்யா அவர்கள் பாரத மாதா வேடத்தில் நாட்டுப்பற்று பாடலுக்கு நடனமாட வருகிறார்.. அனைவரும் தங்களின் கரகோசத்தால் நம் பாரத மாதாவிற்கு உற்சாக வரவேற்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.." என்று அன்பு சொல்லி முடித்துவிட்டு ஓரமாக சென்று நின்றான். திரை மேலுயர்த்தப்பட்டது. ரம்யா பாரத மாதாவாக தேசிய கொடியை கையில் ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள். நாட்டுப்பற்று பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும் தனது நடனத்தை ஆரம்பித்தாள்.

ரம்யாவின் நடனம் முடிந்ததும் அனைவரும் கைகளை தட்டி தங்களின் பாராட்டை தெரிவித்தனர். அடுத்தடுத்து வந்த மாணவர்களும் தங்களின் திறமைகளை பெற்றோர் முன்பும் ஆசிரியர்கள் முன்பும் வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.

"அடுத்ததாக நமது மேஜிக் பெண்புலி மீனா தனது திறமையால் உங்களை ஆச்சரியப்படுத்த போகிறார்.." என்று அறிவித்தான் சஞ்சய்.

திரை விலகியது சுற்றிலும் இருந்த இருளின் இடையே வட்டமாக பொழிந்துக் கொண்டிருந்த விளக்கொளியின் கீழ் நின்றிருந்த மீனா பார்வையாளர்களை பார்த்து வணக்கம் வைத்தாள். வணக்கம் வைத்தபடியே ஒற்றை கையை மட்டும் விலகினாள். இரண்டு கைகளுக்கும் இடையில் திடீரென்று ரோஜா பூ மாலை ஒன்று வந்தது. பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்ததை கண்டு மகிழ்ந்தவள் மாலையை தன் கழுத்திலேயே அணிந்துக் கொண்டாள். பின்னர் பார்வையாளர்களை குழப்பமாக பார்த்துவிட்டு மாலையை கையில் எடுத்து கீழே உதறினாள். மாலையிலிருந்து வண்ண பிளாஸ்டிக் பூக்கள் தரையெங்கும் கொட்டின. "வாவ்.." என்று பார்வையாளர்கள் வியந்தது அவளுக்கும் கேட்டது. தலையை இடம் வலமாக அசைத்துவிட்டு மாலையை தூக்கி எறிந்தாள் மீனா.

தன் கோட் பாக்கெட்டிலிருந்து பலூன் ஒன்றை எடுத்தாள். ஊதினாள். பெரிதானதும் பலூன் உடைந்தது. உள்ளிருந்து பண தாள்களாக கீழே இறைந்தன. பலூன் உடைந்த சோகத்தோடு கர்ச்சீப்பை எடுத்து கண்களை துடைத்தாள். பின்னர் அதையும் தரையில் உதறினாள். தரை முழுக்க இலைகள் பறந்தன.

அந்த கர்ச்சீப்பையும் தூர எறிந்துவிட்டு கையை உதறினாள் நீண்ட வண்ண தாள்களால் சூழப்பட்ட குச்சி அவளின் கைக்கு வந்தது. அதையே அப்படியும் இப்படியும் ஆட்டினாள். அந்த குச்சியே சற்று நேரத்தில் புத்தகமாக மாறியது. புது உடையாக மாறியது. சாக்லேட்களாக மாறியது. அவள் தனது மேஜிக்கால் அங்கிருந்த மொத்த பேரையுமே வாய் பிளக்க வைத்துவிட்டாள். தலை குனிந்து அவள் வணக்கம் சொன்ன பிறகே அனைவரும் தங்களின் வியப்பிலிருந்து மீண்டுவந்து கைகளை தட்டினர்.

திரை விழுந்ததும் அபிநயா ஓடிச்சென்று தோழியை கட்டிக் கொண்டாள். "செம பேபி.." என்றாள். "பயந்துட்டியா.?" என்றாள் அவளின் நெற்றி வியர்வை பார்த்து.

"ஆமா.. கோட்டுக்குள்ள இருக்கற பொருட்களை தப்பா வெளியே எடுத்து சொதப்பிடுவேனோன்னு பயந்துட்டேன்.." என்றவள் "நிஜமா நல்லா இருந்ததா.?" என்றாள்.

"நல்லாவா.? செமையோ செம.." என்று மீண்டும் இறுக்க கட்டிக் கொண்டாள் அபிநயா.

"எங்களின் மேஜிக் ஜாம்பவான் மேஜிக்கால் அரங்கத்தையே தெறிக்க விட்டு விட்டார் என்றே நம்புகிறோம்.. அடுத்ததாக கிராமிய பாடல் ஒன்றை தங்களின் தேன் குரலால் பாட வருகிறார்கள் வாசுவும் நிவாஸும்.." என்று மைக்கில் சொல்லிவிட்டு ஓரம் நகர்ந்தான் சஞ்சய்.

மாணவர்கள் ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமையை காட்டிக் கொண்டிருந்தார்கள். குணா கோமாளி வேஷத்தில் வந்து நாட்டின் நடப்பை அரசியல் வசனமாக பேசினான். அஞ்சனா பரதநாட்டியம் ஆடினாள். எந்த இடத்திலும் சொதப்பவில்லை. ஆனால் பார்வையில் இருந்த கடுமை அவளை விட்டு விலகவேயில்லை. தன்னைதானே மிரட்டியபடி நாட்டியம் ஆடுகிறாளோ என்று அன்பு குழம்பினான். அனைவருக்கும் தந்தது போல அவளுக்கும் கை தட்டுகளை தந்தனர் பார்வையாளர்கள்.

அடுத்ததிற்கு சஞ்சயை பேச சொல்லிவிட்டு நாட்டியம் முடித்துவிட்டு வந்த அஞ்சனாவிடம் பேச சென்றான் அன்பு. அவளின் முகம் இன்னமும் கடுகடுவென்றுதான் இருந்தது.

"சூப்பரா ஆடின.. எல்லோருக்கும் உன் நாட்டியம் பிடிச்சிருந்தது.." என்றான். அஞ்சனா அவனை பார்த்து புன்முறுவல் பூத்து விட்டு நகர்ந்தாள். அந்த புன்னகை உண்மையில்லை. அவளுக்கு தன் நடனத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. கை தட்டியவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அனைவரும் இரக்கப்பட்டு கை தட்டினார்கள் என்றே எண்ணினாள்.

நிறைய பேச்சு போட்டிகளும், ஆடல்களும், பாடல்களும் நடந்து முடிந்தன.

"அடுத்ததாக எங்களின் கவி பேரரசி அபிநயா அவர்கள் தங்களின் கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்துக் கொள்வார்.." என்று சஞ்சய் சொல்ல "கவி பேரரசியா.?" என கேட்டு சிரித்தான் அன்பு.

"அந்த கவிதை உனக்காகதானாம்.." என்று கடைசி நொடியில் தகவலை சொன்னான் சஞ்சய். அன்பு அதிர்ச்சியோடு அவனை பார்த்தான். "நிஜமாவா.? எனக்காகவா.?" என்றான்.

"ஆமா.. ஆனா பிராடு எல்லோர் முன்னாடியும் உன் பேரை சொல்ல முடியாதுன்னு கடவுள்ன்னு தலைப்பை மாத்திட்டா.." என்றான்.

அன்பு ஆச்சரியத்தோடு மேடையை பார்த்தான். திரை விலகியது. அபிநயா மைக்கை ஒரு கையிலும் பேப்பர் ஒன்றை ஒரு கையிலும் பிடித்தபடி நின்றிருந்தாள்.

"வணக்கம்.. நான் வாசிக்க போகும் கவிதையின் தலைப்பு கடவுள்.. கடவுளுடனான என் காதலை சொல்வதே இக்கவிதை.." என்றுவிட்டு வாசிக்க ஆரம்பித்தாள்.

"காலங்கள் கடந்து
படர்ந்துக் கொண்டிருக்கும்
யவ்வனம் நிரம்பிய நிலங்கள் நோக்கி
மெல்ல மெல்ல புலம் பெயரும்
மானுடத்தை போல
உன் இதழின் சிறு புன்னகை
தரும் காந்தத்தில் வாழ்வின்
உயிர் கயிரை கண்டதாக நம்பி
கரை கடந்து ஓடி வருகிறது
என் நெஞ்சில் நான் ஒளித்து வைத்த
எடைகளிலும் கணங்களிலும்
அடைக்க இயலா
என் பிரியத்தின் தொகுப்பு.!
கால ஓட்டத்தில் உந்தன்
வடிவம் தெரியாமல்
தேடி அலைகிறேன் நான்!
காணும் இடமெங்கும்
நீதான் இருந்தாய்!
அதை அறியா பேதை நான்!
தொலையாத என் தேசத்தில்
கங்க கிரீட அரசனாய் நீ!
அழியா என் நினைவில்
அரளி மாலை சூடிய மன்னனாய் நீ!
காத்திருந்த ஆண்டுகளில்
கடைசி நிமிட புன்னகையாய் நீ!
வேகும் வெயில் போர்வையில்
வியர்வையின் ஒற்றைதுளி குளிர்ச்சியாய் நீ!
இருள் கொண்ட இரவில்
கண்சிமிட்டி சிரிக்கும் விண்மீனாய் நீ!
சித்திர கதைதனில் வாளோடு
சண்டையிடும் நாயகனாய் நீ!
பார்க்கும் இடமெங்கும்
நான் தேடும் தேடல் நீ!
என் செவி தொடும் இசைகளில்
உன் மூச்சின் சத்தத்தை
தேடி அலைய விட்ட ராட்சஸனும் நீ!
வசந்த கால பூக்களின் மகரந்தம் நீ!
அந்தி வேளை மலர்களின் வாசமும் நீ!
இவ்விதி கொண்ட வாழ்வில்
என் உயிரின் இழையில்
ஒட்டிக் கொண்டிருக்கும் ஜீவனாய் நீ!"

கவிதையை வாசித்துவிட்டு கூட்டத்தை பார்த்தாள். முதல் கை தட்டலை வினோத்தான் தந்தார். அடுத்த நொடியே மற்றவர்களும் தங்களின் கைகளை தட்டினார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN