என் நெஞ்சுநேர்பவளே -18(2)

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ENN-18(2)


கிழக்கு வெளுத்திடும் நேரம் பூலோக சொர்க்கங்களின் மிச்சம் உதட்டின் புன்னகையாய் உறைந்திருக்க விடிந்திருந்தது அவர்களின் வரவேற்பு தினம்.

முதல் கூடலின் முற்று பெறா களவுகளின் அரும்பெரும் உணர்வுகளை முழுதாய் உணர விடாமல் அறிபறியாய் அமைந்தது அடுத்த நாள் பயணம்.. வந்த அலுப்பிலும் வரவேற்பிற்கான திட்டமிடலிலும் அன்றைய பொழுது கழிய அன்றைய இரவு, சொல்லொண்ணா காதலின் பரிமாற்றமாய் முடிந்தது..

திருமண தினத்திற்கு மாறாய் இன்றைய வரவேற்பில் விதுரன் சுரபி ஜோடியை விஞ்சி நின்றது இவர்கள் இணை.. விழிகள் ஒருவரை ஒருவர் தாங்கி, மலரிதழ்கள் மலர்ந்து கிடந்த காட்சியில் மொத்த குடும்பத்தின் நிம்மதியை காண முடிந்தது.

பின்னே இவர்களின் இந்த சந்தோஷத்திற்காக குடும்பம் மொத்தமும் இரு வருடங்களாய் சில பல வேலைகளை செய்து கொண்டிருந்ததே.

ஆதிரன் ஆரதியை பார்த்துக் கொண்டிருந்த மீனா "ஏங்க ரதி கிட்ட மாப்பிள்ளை எல்லா உண்மையும் சொல்லிருப்பாரா?"

"எனக்கும் அப்பிடித் தான் தோணுது மீனா.. இல்லைனா இவ கோவம் அவ்ளோ சீக்கிறத்துல போயிருக்காதே."

"ஆனால் நம்ம கிட்ட அதை பத்தி எதுவும் கேக்கலையேங்க. தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்கலை."

"நம்ம கிட்ட தனியா பேச சந்தர்ப்பம் இருந்திருக்காது..நாம ஊருக்கு போகும் முன்னாடி பேசுவோம்."என்று இவர்கள் முடிவு பண்ணி வைத்திருக்க, அதற்கு சமயம் கிட்டவே இல்லை.

ஆதியும் ரதியும் வரவேற்பு முடிந்து மறுநாள் கிளம்ப முடிவு செய்திருந்ததால் அவர்களோடே கிளம்ப முடிவு செய்திருந்தனர் மற்றவர்கள். ரயிலிற்கும் பதிவு செய்திருந்தனர்..

ஆனால் மறுநாள் எழும் போதே ரதிக்கு காய்ச்சல் அடிக்க என்ன செய்வது என்று தடு மாறினார்கள்..

"ரதி இங்கயே இருக்கட்டும் ஆதி. நீ உன் வேலைய முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போ. காய்ச்சல் வந்த புள்ளைய அலைக்கழிக்க கூடாது.."என்று அமுதா சொல்லவும், மற்றவர்களுக்கும் அதுவே சரியென பட ரதியை விட்டுவிட்டு கிளம்ப முடிவு செய்தனர்..

ஆதிக்குத் தான் இந்நிலையில் அவளை விட்டுச் செல்ல மனதே இல்லை.. ரதியை நாடி அவர்கள் அறைக்கு சென்றான்.. அங்கு அலைச்சலிலும் காய்ச்சலின் வீரியத்திலும் துவண்டு போய் கிடந்தாள் ஆரதி. இவன் வருவதைப் பார்த்தவள்,

"என்னாச்சு ஆதி. ஏன் முகம் டல்லா இருக்கு.."

"உன்னை விட்டுட்டு ஊருக்கு போக மனசில்லடி.. பேசாம கார்த்தியை எல்லாத்தையும் பார்த்துக்க சொல்லிடவா.."

"அந்த ஈவென்ட் உங்களுக்கு ரொம்ப முக்கியம்னு தெரியும் ஆதி.. நீங்க இல்லாம அங்க கார்த்தி அண்ணா எத்தனைய சமாளிப்பாங்க.. ஒரு டூ டேஸ் தான. ஃபங்சன் முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போங்க.."

"ப்ச் போடி.. நீ இப்படி காய்ச்சலோட கிடக்கும் போது என்னால எப்படி வேலை செய்ய முடியும்.. ஒவ்வொரு நிமிஷமும் நினைப்பு உன்கிட்ட தான் இருக்கும்."என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

ஆரதி நகர்ந்து அவன் மடியில் தலை வைத்துக் கொண்டாள்..

"எனக்கு ஒண்ணுமில்ல ஆதி. சாதாரண காய்ச்சல் தான். நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்.. நான் வேற சென்னைக்கே வந்தது இல்ல.. நீங்க திரும்பி வந்ததும் நல்லா ஊர் சுத்தி பார்த்துட்டு மூணு நேரமும் பிரியாணி சாப்பிட்டு என்ஜோய் பண்றோம்.."என்று அவன் கன்னம் கிள்ளி சிரித்தாள்.

அவள் உள்ளங்கையை எடுத்து முத்தமிட்டவன் "கண்டிப்பா ஆரு குட்டி."என்று சொன்னவன் மனம் ஒரு வழியாய் சமாதானம் ஆகி இருந்தது..

ஆதியுடன் ரதி குடும்பமும் ரஞ்சி குடும்பமும் கிளம்பி விட ஆரதியும் அமுதாவின் கவனிப்பில் உடல் நலம் தேறியிருந்தாள்..

இரண்டாவது நாள் காலை சமையல் அறையில் சுரபி அமுதா சமையல் வேளையில் இறங்கியிருக்க, ஆரதி அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.

"அத்தை ரொம்ப போரடிக்குது.. எங்கயாச்சும் போய்ட்டு வருவோமா.."

"சரிடாமா நான் விது கிட்ட சொல்றேன். சாயந்தரம் பீச்சுக்கு போய்ட்டு வரலாம்."என்றார் அமுதா.

அவர் சொன்னது போலவே மாலை அறிவழகன் அமுதா கவிநிலா விதுரன் சுரபியுடன் மெரினா கடற்கரை வந்திருந்தாள் ஆரதி..

நீண்டு விரிந்திருந்த நீலக் கடல், கரை தொட்டு முத்தமிடும் பேரிரைச்சல், தொடுவானமும் மூழ்கிப் போகும் ஆழியில், அதன் அழகில் உள்ளம் விரிய, விழிகள் நிறைய பார்த்திருந்தாள் அந்த நீல தேவதையை.

நீல பெண்ணவளின் நீண்ட அலைகள் அடி பாதத்தை சுரண்டி உவகை கொள்ள வைக்க சிறு குழந்தையாய் குதித்து மகிழும் இதயமும்.

எத்தனை முறை கண்டாலும் சலிப்பு தாரா மகிழ் சுரபி அவள்.. ஆரதிக்கு அந்த நீலக் கடலை வாரி அணைத்துக் கொள்ளும் அளவு ஆசை பிறந்தது. ஆவலாய் அலையை தீண்டிட ஓட முயன்றவளை கைபிடித்து தடுத்தார் அமுதா.

இவள் பாவமாய் அவர் முகம் நோக்கிட,"காய்ச்சல் வந்த உடம்பு ரதிமா. ஈரம் பட வேண்டாம்."என்று அமுதா சொல்ல, சோர்ந்து போனது முகம்.

"அலையில் நனையறதை விட அதோட அழகுல நனையறது இன்னும் மனசுக்கு சந்தோசமா இருக்கும்டா."

"ம்மா பின்ற போ.. அப்பப்போ கவிதாயினி ன்னு நிரூபிக்கறீங்க."என்று கவி அமுதாவை புகழ சின்னதாய் ஒரு வெட்கம் ஒட்டிக்கொண்டது அவர் முகத்தில்.

"நீங்க கவிதை எழுதுவீங்களா அத்தை?"என இரு மருமகள்களும் ஒரு சேர கேட்டிட,

"அதெல்லாம் செம்மயா எழுதுவாங்க அண்ணி. எங்க அப்பா கூட அம்மாவோட கவிதையில தான இம்ப்ரெஸ் ஆகி பின்னாடியே சுத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க."

"வாவ்... லவ் மேரேஜா..சொல்லவே இல்ல.."என்ற ஆரதியின் கேள்விக்கு இப்போது பதில் அளிப்பது அறிவழகன் முறையாயிற்று.

"ரெண்டு பேரும் ஒரே காலேஜ் தான்மா.. உங்க அத்தை தமிழ் டிபார்ட்மென்ட். நான் பிகாம். இவளோட கவிதை காலேஜ் மேகசீன்ல வந்திருந்தது. அதை பார்த்து பிடிச்சு இவள பாராட்ட போனேன்.. அப்பிடி ஆரம்பிச்சது எங்க நட்பு. ஒரு கட்டத்துல எனக்கு காதலா மாறுச்சு. அதை இவள் கிட்ட சொன்னபோது ஒத்துக்கவே இல்லை. இந்த வயசுல லவ் பண்றது தப்பு. இது வெறும் ஈர்ப்புன்னு விலகி போய்ட்டா.

அதன் பிறகு என்கிட்ட பேசுறதையே நிப்பாட்டிட்டா. நானும் இவள போர்ஸ் பண்ணல. எப்பயாவது என் லவ் அவளுக்கு புரியும்னு விலகி இருந்தேன். படிச்சு முடிச்சேன். நல்ல வேலை தேடிகிட்டேன். நாலு வருஷம் கழிச்சு இவங்க வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணிட்டேன்.."என்று அறிவழகன் சொல்லி முடிக்கவும் ரதி மனதில்,

'ஆதி அப்பிடியே அத்தையை போல.'என்று தான் நினைத்தாள்..

"அப்போ அத்தை நீங்க மாமாவை லவ் பண்ணலையா."என்று அதி முக்கியமான கேள்வியை முன் வைத்தாள் சுரபி.

"அதெல்லாம் எனக்கும் உங்க மாமாவை காலேஜ்ல இருந்தே பிடிக்கும் தான்.. ஆனால் அந்த வயசுல அதை ஈர்ப்புன்னு தான் நினைக்க முடிஞ்சுது.. அதோட இவரு எந்த அளவுக்கு உறுதியா இருக்காருன்னு தெரிஞ்சுக்க தான் விலகி போனேன். ஆனால் இவரோட விலகல்ல என்னோட காதலை புரிஞ்சுக்கிட்டேன். பிறகு உங்க மாமாவுக்காக காத்திருந்தேன்."என்று சொல்லவும் இருவரையும் கண்டு வியந்திருந்தனர் இரு மருமகள்களும்.

சுரபி மெதுவாய் அவள் கணவனிடம் "உங்களுக்கு இப்படி எதுவும் காவியக் காதல் கதையெல்லாம் எதுவுமில்லையா."என்று கண்களை சுருக்கி கேட்க,

"ஏன் உன்மேல இருக்குற காதல் எல்லாம் காவிய காதல்ல சேர்த்தி இல்லையா."

"கல்யாணத்துக்கு பின்னாடி வரது எல்லாம் அந்த லிஸ்ட்ல வராது விது.."

"எப்போ வந்தாலும் அது காதல் தாண்டி குள்ளச்சி."என்று அவளை பார்த்து கண்ணடிக்க சுரபியின் முகம் செஞ்சாந்தில் குளித்து கிடந்தது.

ஆரதியின் முகத்தில் பலவித யோசனை கலவைகள். ஆதி முதலில் தன்னை மறுத்ததற்கான காரணம் ஓரளவு புரிந்தாலும் இப்போதைய திருமணம் அதற்கு முன்பு அவன் நடந்து கொண்ட முறைகள், தன்னை பார்த்தும் பார்க்காதது போல் விலகி சென்றது என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தது.

'விட்டிருந்தால் அவனே அனைத்தையும் சொல்லியிருப்பான். தானே எல்லாத்தையும் தெரிந்து கொள்வது என வீம்பு பிடித்தாயிற்று.. இனி என்ன செய்வது. எப்படி கண்டுபிடிப்பது ' அனைத்தையும் உழட்டி கொண்டவள் அந்த எண்ணத்திலேயே வீடும் வந்து சேர்ந்தாள்.

இரவு உணவு உண்டுவிட்டு அறைக்கு வந்தவளை வரவேற்றது ஆதியின் அழைப்பு.அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அவனின் 'ஆரும்மா'வில் உருகி நின்றாள்.

'எங்கடா வச்சிருந்த இவ்ளோ லவ்வை இத்தனை நாளா 'என்று மைண்ட்வாய்ஸ் ஒரு புறம் ஓடிக்கொண்டிருந்தது..

"ஆரும்மா.."என மீண்டும் அழைத்ததில் வெறும் "ம்ம் "மட்டும் கொட்டி வைத்தாள்.

"காய்ச்சல் சரி ஆகிடுச்சா?"

"ம்ம் "

"என்னை மிஸ் பண்ணுனியா?"

"ம்ம்.."

"என்னாச்சு!! பட பட பட்டாசு புள்ள வாயில இருந்து வெறும் ம்ம் மட்டும் வருது. "

"நீங்க அப்பிடியே அத்தையை போல."ரதி சட்டென இப்படி சொல்லவும் ஆதிக்கு புரியவில்லை..

"என்னடா.. அந்த குட்டி மண்டைக்குள்ள என்ன ஓடுது.."

"அத்தை மாமாவோட லவ் ஸ்டோரி இன்னைக்கு தான் தெரிஞ்சுது."

"ஒ.."என யோசித்தவனுக்கு அவன் முதல் மறுப்பின் நினைவு வரவும் மனம் ஒரு படபடப்பை அடைந்தது.

"ஆரு..."என்று தயக்கமாய் அவன் அழைக்க,

"உங்க பக்கம் இருக்குற நியாயம் புரியுது ஆதி. அந்த நிலைமைல நீங்க மறுத்தது உங்க நல்ல குணத்தை காட்டுது.. நான் தான் கொஞ்சம் அவசரப் பட்டுருக்கேன். பொறுமையா எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணி இருக்கலாம். அதை விட்டுட்டு கோவத்தை பிடிச்சு தொங்கிட்டு இருந்துருக்கேன்.. உங்க அளவுக்கு ஒரு வேளை நான் நல்ல பொண்ணு இல்லையா ஆதி."

"அடி வேணுமா ஆரும்மா. அவங்க அவங்க மன நிலைக்கு ஏத்த மாதிரி நாம நடந்துருக்கோம். அவ்ளோ தான்... அதனாலேயே நான் ரொம்ப பெரிய அப்பாடக்கர் ஆகிட மாட்டேன். என்னை உயிரா நேசிச்ச உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிருக்கேன். உனக்கே தெரியாம நிறைய திருட்டு வேலை செஞ்சுருக்கேன். நீ வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்குற அளவுக்கு பிரஷர் குடுத்துருக்கேன். கல்யாணத்துக்கு இடைப்பட்ட நாள்ல உன்னை அவ்ளோ தவிக்க விட்டுருக்கேன்.. உன்னை நிறைய அழவச்சிருக்கேன். இப்ப வரைக்கும் என்ன ஏதுன்னு எந்த உண்மையும் தெரியாம கூட என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்ட நீ எனக்கு பொக்கிஷம் டி.

என்னோட அழகான ராட்சசி. என்னோட ஆருக்குட்டி.. உன்னை அவ்ளோ அவ்ளோ லவ் பண்றேன்டி.. "என்று இடைவிடாது பேசியவன் இறுதியில் கைபேசி நனைந்து நமத்துப் போகும் அளவுக்கு முத்தங்களை பதித்தான் அவள் காதில்..

சிலிர்ப்பாய் ஒன்று ஊடுருவி கால் பாதம் கூசிடும் அளவு மெய் சிலிர்க்க வைத்தது அவன் பேச்சும் முத்தங்களும்.

"ஆஆதி..."என்று குழைவாய் விழுந்தது இவள் குரல்.

"இப்பவே உன் பக்கத்துல இருக்கனும் ஆரு.. எலும்பெல்லாம் நொறுங்கி போற அளவுக்கு இறுக்கமா அணைச்சுக்கணும்.. எப்பவும் என்னை கொல்ற அந்த கண்ணை திறக்க விடாம முத்தம் கொடுத்துட்டே இருக்கனும்னு பைத்தியம் போல மனசு பிராண்டி தள்ளுது.."

"அப்போ உடனே ஓடி வர வேண்டியது தானே. "இன்னும் உள்ளே போய் ஒலித்தது அவள் குரல்..

"வரத்தான் போறேன்.."

திருமணத்திற்கு முன் வரும் ஸ்வீட் நத்திங்ஸ் எல்லாம் இப்போது பேசி தீர்த்துக் கொண்டிருந்தனர்..

மறுநாள் மாலை அப்பொழுது தான் குளித்து முடித்து ஈர முடியை காய வைத்துக் கொண்டிருந்தவளின் பின்னின்று அணைத்தது ஆதியின் கரங்கள்.அவன் வரவை எதிர் பராதவள் அவன் புறம் திரும்பி விழி விரித்து,

"ஹே எப்ப வந்தீங்க. நாளைக்கு காலையில் தானே வரதா சொன்னீங்க."

"அது சும்மா. இப்படி திடுதிப்புனு வந்து நின்னா தான இப்படி விரிஞ்சு கிடக்குற முட்டைக்கண்ண ரசிக்க முடியும்."

"என் கண்ணு அவ்ளோ பெருசாவா இருக்கு?"சிணுங்கினாள் இவள்..

"பின்ன!! உனக்கு மஞ்சள் பூசி விட்டதும் பார்த்தையே ஒரு பார்வை..என்னை கொத்தா தூக்கி உள்ள போட்டுருச்சு உன் கண்ணு."

"ஆமா!! தூக்கி போட்ட ஆளுதான் அப்பிடி வீஞ்சிகிட்டு திரிஞ்சீங்களாக்கும்.."இவள் உதட்டை சுழித்து பழிப்பு காட்ட, அதை இரு விரலில் பிடித்து தன் வசம் கொண்டவன்,

"இல்லைனா எப்படி உன்னை பிரிஞ்சு போறதாம்.. எட்டி நின்னே இந்த பாடு.. கிட்ட மட்டும் வந்திருந்தேன் உங்க அம்மாச்சி வீட்லயே டேரா போட்டுருப்பேன்."என்று சொல்ல கலகலத்து சிரித்தாள் ரதி.

தன் அணைப்பில் இருந்த ரதியை மடியில் அமர்த்திக் கொண்டவன் தோள் வளைவில் முகம் பதித்தான்..

"ஆரும்மா உன் கிட்ட சில விஷயம் சொல்லணும்.."

"ஃபிளாஷ்பேக்கா.."

"ம்ம்.."

"சொல்லிடுங்கப்பா.. எனக்கும் யோசிச்சு யோசிச்சு கடுப்பாவுது."

"சொன்ன பிறகு என் மேல கோவப்பட கூடாது.."

"சரிஇஇஇ"

"சண்டை போடக் கூடாது.."

"ஓகேஏஏ "

"அதி முக்கியமா அடிக்க கூடாது.."

"சுயூர் சுயூர்.."அவள் சொன்ன பாவனையில் சிரித்தான் ஆதி.

"ம்ம். உன்னை முதல்ல பார்க்கும் போதே என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்துச்சு ஆரும்மா.. ஒரு மாதிரி பிடித்தம்.. அதை காதல்ன்னுலாம் என்னால சொல்ல முடில..

அதன் பிறகு உன்னோட பார்வையில் வந்த மாற்றம் என் அருகாமை உன்கிட்ட ஏற்படுத்தின பாதிப்பு, நீ என்கிட்ட பழகிய விதம் எல்லாமே எனக்குள்ள ரொம்ப பெரிய பாதிப்பை உருவாக்க ஆரம்பிச்சது..

ஆனால் அதை காதல்ன்னு ஏத்துக்க முடியாம தடுத்தது நம்ம ரெண்டு பேர் வயசும் தான்.. வெறும் ஈர்ப்பை காதல்ன்னு எடுத்துறக் கூடாதுன்னு ஒரு முடிவோட தான் உன்கிட்ட விலகி போனேன்.

ஆனால் உன்னோட வருத்தமும் கண்ணீரும் சத்தியமா அவ்ளோ பாதிச்சுது.. அதும் நீ வெளிப்படையா உன்னோட காதலை சொன்னப்ப, உன் கன்னத்தை தாங்கி கண்ணுல முத்தம் குடுத்து நானும் லவ் பண்றேன்டின்னு சொல்லணும்னு அப்பிடி ஒரு வேகம்.. ஆனால் அப்பிடி பண்றது ரொம்ப பெரிய தப்புன்னு மூளை ஒரு பக்கம் ஓங்கி ஓங்கி கொட்டுது. அதான் உன்கிட்ட பேசாம வேகமா வீட்டுக்கு வந்துட்டு அப்பவே ஊருக்கு போக முடிவு பண்ணேன்.

ஆனால் கார்த்தி விடல. பிறகு நீ வீட்டுக்கு வரும் போதும் உன்னை ஃபேஸ் பண்ண முடியாம தான் ஓடி ஒளிஞ்சேன்.அப்பிடியே ஊருக்கு போயிரலாம்னு தான் முடிவு பண்ணேன். ஆனால் நீ உன்னை நான் தப்பா நெனச்சுட்டேன்னு ஃபீல் பண்றதா கார்த்தி சொல்லவும் உன்கிட்ட பேச முடிவு பண்ணேன்.

அப்போதைக்கு உன் மனசுல இந்த காதல் அது இதுன்னு எதுவும் இருக்க கூடாதுனு தான் உன்கிட்ட அப்பிடி பேசுனது.. ஆனால் பேச பேச எனக்கு அவ்ளோ வலிச்சுது.. நீ என்னை அடிச்சுட்டு பிறகு என்னை வெறுக்குற மாதிரி பேசுனது ரொம்பவே வலிச்சுது. ஆனால் அப்போ எனக்கு அதுதான் தேவையா இருந்துது..

ஈரோடு விட்டு சென்னை வந்த பிறகு காலேஜ் படிப்புனு பிஸி ஆகிட்டாலும் உன் நினைப்பு போகவே இல்லை..

ஒவ்வொரு வருஷம் திருவிழா அப்பவும் செவ்வந்தி புதூர் வருவேன்.. உன்னை மறைஞ்சிருந்து பார்ப்பேன்.. அடுத்த ஒரு வருசமும் எனக்கு அதுதான் உயிர்ப்பு குடுக்கும். உன் கண்ணுல எனக்கான தேடல பார்க்கும் போது வருத்தம் சந்தோசம்னு மனசு தவிக்கும்.

கடைசியா ரெண்டு வருஷம் முன்னாடி உங்க அம்மாச்சி வீட்டுக்கு வந்தேன் "அதுவரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தவள் ஆச்சிரியமாய் அவனை திரும்பிப் பார்த்தாள்..

"அப்போ எங்க வீட்ல எல்லாருக்கும் முன்னாடியே தெரியுமா!!!"என்று வியப்பாய் கேட்டவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான்.

"ம்ம்.. ஆமா.. முதல்ல உங்க அம்மாச்சி அப்பிச்சி கிட்ட தான் உன்னை லவ் பண்றதை சொன்னேன். ரெண்டு பேருக்குமே என்னை பிடிச்சு போச்சு போல. நான் சொன்னதும் அவ்ளோ சந்தோசம் அவங்க முகத்துல. பிறகு உங்க அப்பா அம்மாவ வர வெச்சு பேசுனாங்க.பிறகு எங்க பேமிலி உங்க பேமிலி எல்லாரும் மீட் பண்ணி பேசுனதுல எல்லாருக்கும் பிடிச்சு போச்சு.

உங்க அக்கா கல்யாணம் முடிஞ்ச பிறகு நம்ம கல்யாணம் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணாங்க.. எங்க பக்கமும் என் அண்ணன் கல்யாணம் முடிஞ்சு தான் நம்ம மேரேஜ்னும் முடிவு பண்ணாங்க. உன் கிட்டயும் அப்பவே சொல்லிக்கலாம்ன்னு நான் சொல்லவும் ஒத்துக்கிட்டாங்க..

அதுக்கு பிறகு தான் நான் ஈரோடுல ஆராதனை ஸ்டார்ட் பண்ணேன்.உன்னோட பேரோட அர்த்தம் தான் ஆராதனை.. அப்பப்போ உன்னை உனக்கு தெரியாம பார்த்துட்டு தான் இருந்தேன்.

உன் பிரண்ட் மூலமா ஆராதனைக்கு வேலைக்கு வர மாதிரி ஏற்பாடு செஞ்சேன். கல்யாணத்தில் நீ என்னை முறச்சிட்டு திரிஞ்ச போதே தெரிஞ்சு போச்சு எதுவும் ஈஸியா முடிய போறது இல்லைனு..

அப்போதைக்கு உன் முன்னாடி லவ் பன்றேன்னு சொல்லிட்டு வந்து நின்னுருந்தா நீ செருப்பு பிய்ய பிய்ய அடிப்பேன்னு புரிஞ்சுது.. அதான் உன்னை தெரியாத மாதிரியே நடந்துகிட்டு உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரதுன்னு யோசிச்சேன்.

இடையில உங்க அக்காவுக்கு வரன் அமையவே இல்லைங்கவும் ரீசன் கேட்ட போது ராகு கேது இருக்குன்னு சொன்னாங்க. லக்கிலி விதுவுக்கும் அதனால தான் பொண்ணே அமையல. கடைசியா அவங்க ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்தி போகவும் விது கிட்ட உங்க அக்கா போட்டோ காட்டி பேசுனோம்.

அவனுக்கு சுரபிய ரொம்ப பிடிச்சு போச்சு. அதே போல உங்க அக்காவுக்கும் பிடிச்சி போகவும் நம்ம லவ்வைப் பத்தி அதன் பிறகு தான் அவங்க ரெண்டு பேருக்கும் சொல்லி இருக்காங்க...

உன்னை நேரடியா என்னால சம்மதிக்க வைக்க முடியாதுன்னு தோணவும் ரெண்டு வீட்டுலயும் கலந்து பேசுனேன். ஒரே வீட்டுல பொண்ணு எடுக்கறதா உன் கிட்ட அன்னிக்கு எதேச்சையா சொன்னதை இங்க யூஸ் பண்ண வச்சேன். உங்க வீட்ல முதல்ல ஒத்துக்குவே இல்லை..

கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்குனேன். கல்யாணத்துக்கு முன்னாடி நீ ரொம்ப அப்செட்டா இருக்குறத பார்த்து எல்லாரும் என்னை செம்ம திட்டு. ஆனால் எனக்கு அப்போ உன்மேல் ரொம்ப கோவம்.. "

"எதுக்காம்.."என்றவள் குரலில் அப்பிடி ஒரு உஷ்ணம்.. அதை உணர்ந்தவன் உடனே பம்மினான்.

"அதில்ல ஆருகுட்டி என்னை மனசுல வச்சிட்டு வீம்புக்கு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டன்னு கோவம்.."என்று சொல்லவும் சட்டென அவன் மடியை விட்டு எழுந்து தள்ளி அமர்ந்தாள்.

நெருங்க முயன்றவனை "ஒழுங்கா இப்படியே உக்காந்து பேசு.."என்று தடுக்க,

"பாரு கோவப்படற.."

"பின்ன கொஞ்சுவங்களாமா. நீ ஒரு பக்கம் உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்லைங்கற மாதிரி சுத்துவ. இன்னொரு பக்கம் தள்ளி போகுற அக்கா மேரேஜ். நான் ஒத்துக்கிட்டா தான் எங்க அக்கா கல்யாணம் நடக்கும்ங்கற மாதிரி ஒரு செட்டப். வேற என்ன செய்ய முடியும் என்னால.

பிடிக்காத கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு பைத்திக்காரி மாதிரி இருந்தேன்டா.. இதுல நீ கோவமா இருந்தியாம்.."

"டி தங்கம்.. சாரி டி.."என்று அவள் கைகளை பற்ற,

"ஒன்னும் வேண்டாம் போ.."என்று உதறினாள்.

"அந்த சூழ்நிலைல கூட அடுத்தவனை கல்யாணம் பண்ணிக்க முடியாம மேடையை விட்டு எழ முடிவு பண்ணும் போது தான் நீ தடுத்த. அப்போ பக்கத்துல உன்னை மாப்பிள்ளையா பார்த்த நிமிஷம் தாண்டா போன உசுரு திரும்பி வந்துச்சு..

"ஆனால் அதுக்கு பிறகு உன் மேல அவ்ளோ கோவம். ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். ஆனால் மனசு மூளைல சத்தியமா அப்பிடி ஒரு நிம்மதி. ஆனாலும் நிறைய கேள்விகள் கோபம்னு பொங்கிட்டு கிடந்தப்ப தான் ஏங்கி கிடைச்ச மழை மாதிரி உன்னோட பார்வை..

அதுக்கு பிறகு ஏதோ ஒரு சமாதானம் மனசுக்குள்ள. நீ செஞ்சதுக்கு கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும்னு. சட்டுனு நெஞ்சடைச்சுட்டு கிடந்த அத்தனை கோவமும் விலகி போய் நீ மட்டும் போதும், இப்ப இருக்குற இந்த காதல் மட்டும் போதும்னு நிலைக்கு வந்துட்டேன் ஆதி.."என்று சொல்லி முடிக்கவும் வெகு ஆதூரமாய் பார்த்திருந்தான் அவளை..

மெல்ல படுக்கையை விட்டு எழுந்தவன் அவள் முன் நின்று கன்னத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.. அவள் அவனை அண்ணாந்து பார்த்திருக்க அவள் விழிகள் நோக்கி குனிந்ததில் இவள் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொண்டன.

மூடிய இமைகளின் மீது ஒற்றி எடுத்தது ஆயிரம் முத்தங்களை அவன் இதழ். முத்தங்களின் ஒவ்வொரு இடைவெளியிலும் சத்தமின்றி ஒலித்தது ஐ லவ் யூக்கள்..


(அடுத்த எபியோட கதை முடியப் போவுது மக்களே )
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN