சிக்கிமுக்கி 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன நடந்தது என்று அன்புவிடம் விசாரித்தான் குணா. அன்பு நடந்ததை சொல்லவும் அவனை முறைத்த குணா "லூசாடா நீ.? அஞ்சனாவோட கேரக்டர் ரொம்ப வித்தியாசமா இருக்குன்னு உனக்குமே தெரியும். அப்புறம் ஏன்டா இப்படி செய்ற.?" என்றான் கோபத்தோடு.

"பாவம்டா அவ. ரொம்ப பயந்த சுபாவம். என்கிட்ட மட்டும்தான் பேசுற.. அதுக்கும் அபி குறுக்க வந்து நின்னா என்ன செய்வேன் சொல்லு.?" என்றான்.

"அபி என்னைக்குமே அந்த பொண்ணை தப்பா பார்த்ததோ நினைச்சதோ கிடையாது. அந்த பொண்ணுதான் தப்பா பார்ப்பாங்க தப்பா பார்ப்பாங்கன்னே எங்க எல்லோரையும் இம்சை பண்ணிட்டு இருக்கா.. அந்த பொண்ணு அபிக்கு மட்டும் எரிச்சலை தரல. எங்க எல்லோருக்குமேதான் எரிச்சலை தரா.. அந்த பொண்ணு மேல உனக்கு அக்கறையும் பரிதாபமும் இருந்தா அதை நாங்க எப்பவும் குறை சொல்லல.. ஆனா அதே பரிதாபத்தை எங்ககிட்டயும் எதிர்பார்க்காதடா.." என்றவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வெளியே நடந்தான்.

அன்பு தலையை பிடித்தபடி மேஜையின் மீது தலை வைத்து படுத்தான். அஞ்சனாவின் அழுத முகம் கண்ணில் வந்து போனது. அபிநயாவின் சிவந்த கண்களும் நினைவிற்கு வந்தது. அமைதியாக அமர்ந்திருக்க மனம் வராமல் எழுந்தவன் அபிநயா எங்கிருக்கிறாள் என்று தேடி நடந்தான்.

வகுப்பறைகளை தாண்டி நடக்கையில் காலியாக இருந்த வகுப்பு ஒன்றிலிருந்து அபிநயாவின் விம்மல் சத்தம் கேட்டது. அன்பு நடப்பதை நிறுத்தினான். தலையை கோதிக்கொண்டு அந்த வகுப்பறைக்குள் நுழைந்தான். சுவேதாவும் மீனாவும் அவனை முறைத்தனர்.

"அன்பு.." என்று அபிநயாவின் காதோரம் கிசுகிசுத்தாள் சுவேதா. அவளின் தோளில் பதிந்திருந்த முகத்தை நிமிர்த்தியவள் தன் முகத்தை துடைத்துக் கொண்டு அன்புவின் பக்கம் பார்த்தாள்.

"ஏன் இப்படி பண்ற அபி.?" என்றவனுக்கு அவளின் அறைப்பட்ட கன்னத்தை பார்க்கையில் தனக்கு பைத்தியம் பிடிக்கும்போல இருந்தது.

"என்னை டிஸ்டர்ப் பண்ணாதே அன்பு.. இப்ப பேச வேண்டாம்.." என்றாள் அவள்.

"அபி சாரி.." என்றவனிடம் இல்லையென தலையசைத்தவள் "என்கிட்ட ஏன் சாரி கேட்கற.. நான் வேணா போய் அந்த அஞ்சனாகிட்ட சாரி கேட்டுட்டு வரேன்.." என்றாள்.

அன்பு அவளை முறைத்தான். பின்னர் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான்.

"சாரியை கூட மனசார கேட்கல. அதுக்குள்ள கிளம்பிட்டான்.." என்று அவனை திட்டினாள் மீனா.

"இரண்டு பேருக்கும் நடுவுல எத்தனையோ சண்டை வந்திருக்கு. ஆனா ஒருதடவை கூட அதுக்கு மத்தவங்க காரணமா இருந்தது இல்ல. ஆனா இப்ப சம்பந்தமே இல்லாத அஞ்சனாவால எங்களுக்குள்ள சண்டை வருது.." என்ற அபிநயா மீண்டும் தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அவளின் கண்ணீர் தோழிகள் இருவருக்கும் வருத்தத்தை தந்தது.

அன்பு அஞ்சனாவின் வகுப்பறையை தேடி சென்றான். அவள் தன் பேக்கை அணைத்தபடி தன் இருக்கையில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவள் சாதாரண மன நிலைக்கு வந்து விட்டாள் என்று புரிந்துக் கொண்டவன் திரும்பி நடந்தான்.

அன்று முழுக்கவே அபிநயா சிரிக்கவே இல்லை. சோர்ந்த முகத்தோடே இருந்தாள். தோழிகள் கூட நிறைய ஜோக்குகளை சொன்னார்கள். தோழிகளின் மனம் வருந்த கூடாது என்று சிரித்தவளுக்கு அந்த சிரிப்பு கண்களையே தொடவில்லை.

மாலை கல்லூரி முடிந்து போகையில் அபிநயாவின் அருகே வந்த குணா "அவன் திட்டியதையோ அடிச்சதையோ மனசுல வச்சிக்காத அபி.. அவனுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. திடீர்ன்னு தான் தெரசாவா மாறிட்டதா நினைச்சிட்டு இருக்கான். கொஞ்ச நாளுல சரியாகிடுவான்.." என்றான். அபி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாலும் கூட அன்பு தன்னை நம்பாமல் அவளை நம்பி விட்டானே என்ற வேதனையை மறக்கவில்லை.

அன்பு விடிய விடிய அபிநயாவை பற்றியும் அஞ்சனாவை பற்றியுமே யோசித்துக் கொண்டிருந்தான். பந்த பாசங்களின் இடையே வளர்ந்த அபிக்கு அஞ்சனாவின் மனநிலையை எப்படி புரிய வைப்பது என்று யோசித்தான். அஞ்சனாவிற்கு அதிகபடியான தன்னம்பிக்கை வரவைக்க என்ன செய்யலாம் என்றும் யோசித்தான்.

அபிநயாவும் விடிய விடிய அன்புவை நினைத்தபடியே படுத்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் குணாவிற்கும் முன்னால் கல்லூரிக்கு கிளம்பிய அன்பு கல்லூரியின் நுழைவாயில் அருகிலேயே அபிநயாவிற்காக காத்திருந்தான். அபிநயா வந்ததும் அவளை நோக்கி நடந்தான். ஆனால் அபிநயா முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள். இவளை சமாதானம் செய்ய எத்தனை நாட்கள் ஆகுமோ என்று சலிப்போடு நினைத்தவன் அபிநயாவின் பின்னால் நடந்தான்.

"ஹேய் உனக்கு தெரியுமா.? விகேஷும் அஞ்சனாவும் லவ் பண்ணிட்டு இருந்தாங்களாம்.. அவளை அவன் எக்குத்தப்பா போட்டோ எடுத்ததாலதான் இப்ப ஜெயில்ல இருக்கானாம்.." என்று வரலாறு பிரிவு மாணவன் ஒருவன் தன் நண்பனிடம் சொன்னது கேட்டு அதிர்ந்துப்போய் நின்றான் அன்பு.

"அவனாலதான் அவ பிரகனென்ட் ஆனான்னு கூட கேள்விபட்டேன் நான்.." என்றான் இன்னொருத்தன்.

அந்த கல்லூரி முழுக்கவே அந்த விசயம்தான் காட்டு தீயாக பரவிக் கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்பதை தாமதமாகவே புரிந்துக் கொண்ட அன்பு அஞ்சனாவை தேடி ஓடினான். அதே வேளையில் அவளும் எதிர்பக்கமிருந்து அழுதபடி ஓடிவந்தாள்.

"அஞ்சனா.." என்று அன்பு அவளை தடுத்து நிறுத்தினான். ஆனால் அவளோ தன் கண்களை துடித்தபடியே அவனை தாண்டிக் கொண்டு ஓடினாள்.

கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த அஞ்சனாவிற்கு அழுகை நிற்கவேயில்லை. அவளை பற்றி மற்ற மாணவர்கள் பேசிக் கொண்டது அவளின் காதுகளில் ஓயாமல் ஒலித்தது. இப்படி ஒரு நாள் வருமோ என்று நினைத்ததுதான் பல நாட்களாக பயந்துக் கொண்டிருந்தாள் அவள். மாணவர்கள் அனைவருமே அவளை கேவலமாக பார்த்தனர். எள்ளி நகையாடினர். சில மாணவர்கள் வந்து எங்களுக்கும் காதலியாக இருக்க வருகிறாயா என கேட்டு கிண்டலடித்தார்கள். உன்னால மொத்த பொண்ணுங்களுக்குமே கெட்ட பெயர் என்று சக மாணவிகளும் அவளை திட்டினார்கள். அனைத்தையும் நினைத்து பார்த்தவள் கண்ணீரோடு சாலையை பார்த்தாள். தூரத்தில் லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. விம்மியபடியே சாலையில் இறங்கினாள்.

காதலித்தவனோ ஏமாற்றினான். நண்பர்களாக வேண்டியவர்களோ இதுதான் சந்தர்ப்பம் என்று புறம் பேசியும் நேரடியாய் வந்து கொடுஞ்சொற்களால் திட்டியும் மனம் மகிழ்ந்தனர். இந்த சமுதாயத்தில் தன்னால் நிலைபெற்று வாழ இயலாது என்று நினைத்தபடியே லாரி வரும் பாதையில் நடந்தாள் அஞ்சனா.

மனிதனாய் பிறந்தவன் ஆயிரம் தவறுகள் கூட செய்யலாம். ஆனால் என்றுமே தன்னம்பிக்கையை இழக்க கூடாது என்பதை அறியாத அப்பேதை தன் காதில் விழுந்த சொற்களே தன்னை கொன்று விடும் என்று எண்ணி பயந்து சாவை முன் கூட்டி அழைத்துக் கொள்ள லாரியின் வருகை பார்த்து காத்திருந்தாள்.

அன்புவிற்கு கோபமாக வந்தது. தான் அபிநயாவை நம்பி சொன்ன விசயங்களை அவள் இப்படி காற்றில் தூற்றி விடுவாள் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அபிநயாவை தேடி வகுப்பிற்கு சென்றான். அந்த வகுப்பிலும் கூட அனைவரும் அஞ்சனா பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அபி.." என்றபடி அவளின் அருகே வந்தது அவளின் கையை பற்றினான்.

நிமிர்ந்து பார்த்தவள் "என்ன.?" என்றாள்.

"நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.." என்றான் கோபத்தோடு.

"அந்த அஞ்சனா பொண்ணு ஓடிட்டு இருந்த லாரி முன்னாடி பாஞ்சிட்டாளாம்.. எல்லோரும் அங்கேதான் போய்ட்டு இருக்காங்க.." பக்கத்து வகுப்பு மாணவன் ஒருவன் விசயத்தை சொல்லிவிட்டு ஓட்டமாக ஓடினான். அன்புவிற்கு இதயம் ஒரு நொடி நின்றது போல இருந்தது. அபிநயாவின் கையை விட்டுவிட்டு வெளியே ஓடினான். வகுப்பிலிருந்த மற்ற மாணவர்களும் ஓடினார்கள். அபிநயாவும் தன் தோழிகளோடு ஓடினாள்.

காலை நேரத்தில் தார்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் பலவும் அப்படி அப்படியே நின்றிருந்தன. அன்பு சாலைக்கு வந்தபோது லாரியின் முன்னால் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஞ்சனா உயிருக்கு போராடியபடி துடித்துக் கொண்டிருந்தாள். சுற்றியிருந்தவர்கள் பலர் அவளை வீடியோ எடுத்தார்கள். சிலர் மட்டுமே போலிசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்தார்கள்.

அஞ்சனாவை கண்டதும் பாய்ந்தோடி சென்று அவளை தன் மடியில் கிடத்தினான் அன்பு. "அஞ்சனா ஏன் இப்படி பண்ண.?" என கேட்டவனுக்கு அவளை இந்த நிலமையில் கண்டதும் கண்களில் கண்ணீர் கசிந்தது.

மாணவர்கள் கூட்டம் கண்டு அருகே வந்து பார்த்த பேராசியர்கள் "எல்லோரும் கேம்பஸ்குள்ள போங்க.." என்று விரட்டினார்கள்.

அஞ்சனாவின் முகமும் கூட ரத்தத்தில் நனைந்திருந்தது. அவளை கண்டதும் அபிநயாவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது. அருகே இருந்த மீனாவின் மேல் தலை சாய்ந்தாள்.

"எல்லோரும் கிளம்புங்க.." என்றபடி அங்கே வந்த அருள் குமரனை கண்டதும் அபிநயாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்கள் மீனாவும் சுவேதாவும்.

"அன்பு உயிர் இருக்கா.?" என்றபடி அவனின் அருகே வந்து மண்டியிட்டார் அருள் குமரன்.

"மூச்சு இருக்கு சார்.." என்றவனின் குரல் நடுங்கியது கண்டவர் அவனின் தோளில் தட்டி தந்தார்.

"ஒண்ணும் ஆகாது நீ பயப்படாதே.." என்றவர் ஆம்புலன்ஸ்க்கு யார் போன் பண்ணது.? போன் பண்ணி எவ்வளவு நேரம் ஆச்சி.?" என்று விசாரித்தார்.

"அந்த பொண்ணு ஏன்ப்பா இப்படி செஞ்சா.?" என்று கேட்ட அபிநயாவிற்கு கைகளும் கால்களும் நடுங்கின. அஞ்சனாவின் அடிப்பட்ட உடல் கண்களிலேயே இருந்தது.

"அவ ஒரு முட்டாள். நீ அதை நினைக்காத விடு.." என்று தோழிக்கு சமாதானம் சொன்னாள் சுவேதா.

ஆம்புலன்ஸ் வந்ததும் அஞ்சனாவோடு சேர்ந்து மருத்துவமனைக்கு கிளம்பினார் அருள் குமரன். அவரோடு அன்புவும் ஆம்புலன்ஸில் ஏறினான். "அன்பு நீ கிளாஸ்க்கு போ.." என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தவன் "ப்ளீஸ் சார் நானும் வரேன்.." என்று கெஞ்சலோடு ஏறிக் கொண்டான்.

கல்லூரி முழுக்க அஞ்சனாவை பற்றிய செய்தியே பரவிக் கொண்டிருந்தது. அவள் இறந்திருப்பாள் என்று சிலரும் இறந்து விடுவாள் என்று சிலரும் பேசிக் கொண்டார்கள். அஞ்சனாவை பற்றி நினைத்து அபிநயாவும் நண்பர்களும் கூட கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

தொலைக்காட்சி செய்திகளில் அஞ்சனாவின் விபத்து பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். காதலன் பிரிந்ததால் தற்கொலைக்கு முயன்றாளா என்ற ரீதியில் சந்தேகித்து செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி முதல்வர் மற்ற பேராசிரியர்களை அழைத்து விவாதித்துக் கொண்டிருந்தார். அவள் லாரியின் முன்னால் பாய்ந்ததற்கான காரணம் தேடி கொண்டிருந்தார்கள் அவர்கள். அவளின் விபத்தில் கல்லூரியிர் பெயர் இடை சிக்கி விட கூடாது என்றும் கவனமாக இருந்தார். ஊடகத்தாருக்கு போன் செய்து தங்களின் பெயரை செய்திகளில் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மாலையில் கல்லூரி முடிந்ததும் அபிநயாவும் மற்றவர்களும் அஞ்சனாவை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்.

அஞ்சனா ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையின் வராண்டாவில் அன்புவும் அஞ்சனாவின் அம்மாவும் அமர்ந்திருந்தனர். அஞ்சனாவின் அம்மா காலையில் இருந்து அழுதுக் கொண்டேயிருந்தாள். பைல் ஒன்றோடு அஞ்சனாவின் அம்மாவிடம் வந்தார் அருள் குமரன். "இதுல ஒரு கையெழுத்து போடுங்க அம்மா.. அஞ்சனாவுக்கு இன்னொரு ஆப்ரேஷன் பண்ணனும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. நீங்க கையெழுத்து போட்டாதான் ஆப்ரேஷனுக்கான வேலையை தொடங்குவாங்க.." என்றார்.

அஞ்சனாவின் அம்மா அழுதுக் கொண்டே பைலில் கையெழுத்திட்டாள். காலையிலிருந்து அஞ்சனாவின் மருத்துவத்துக்கான பைல்களை நிரப்பியதும் மருத்துவர்களை சந்தித்து பேசியதும் அருள் குமரன்தான். விசாரணைக்கு வந்த காவல் துறையிடமும் வழக்கை பற்றி சொல்லி அவ்விசயத்தை அவரேதான் கையாண்டுக் கொண்டிருந்தார்.

அருள் குமரன் கையெழுத்து பைலோடு நகர்ந்த பிறகு "அழாதிங்கம்மா.." என்று அஞ்சனாவின் அம்மாவிற்கு ஆறுதல் சொன்னான் அன்பு‌.

காலையிலிருந்து அஞ்சனாவிற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்து விட்டன. இப்போது மூன்றாவது அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. ஆனால் அவளினங உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. அவளின் உயிரை பிடித்து நிறுத்த வேண்டுமென்று மருத்துவர்கள் காலையிலிருந்து போராடிக் கொண்டிருந்தார்கள்.

அபிநயாவும் மற்றவர்களும் மருத்துவமனைக்குள் வந்தனர். வரவேற்பறையில் அவளை பற்றிய விபரங்களை சொல்லி அவள் எங்கே என்று கேட்டனர். வரவேற்பறை பெண் தகவலை சொல்லும் முன்பே குணா அன்புவை கவனித்து விட்டான்.

"அன்புவும் அம்மாவும் இங்கேதான் இருக்காங்க.." என்று அமர்ந்திருந்தவர்களை கை காட்டினான்.

அபிநயாவும் தோழிகளும் அம்மாவின் அருகே வந்தனர். "அழாதிங்கம்மா.." என்று அஞ்சனா அம்மாவின் தோளில் கை வைத்து ஆறுதல் சொன்னாள் அபிநயா.

தரையை பார்த்து அமர்ந்திருந்த அன்பு இவளின் குரலை கேட்டு கோபத்தோடு நிமிர்ந்தான். "இங்கே ஏன் வந்த.?" என்றான் ஆத்திரத்தோடு.

மருத்துவமனை வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் அன்புவின் குரல் கேட்டு திரும்பினர். அன்புவையும் அபிநயாவையும் வியப்போடு பார்த்தனர். அன்பு அவர்களை கவனித்துவிட்டு அபிநயாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

குணாவும் மற்றவர்களும் அன்புவோடு செல்வதா என யோசித்தனர். எப்போதும் போல சண்டை போடுபவர்களை அப்புறமாக சமாதானம் செய்துக் கொள்ளலாம் என நினைத்தவர்கள் அஞ்சனாவின் அம்மாவை சுற்றி இருந்த இருக்கையில் அமர்ந்தனர். அம்மாவிற்கு ஆறுதல் மொழிகளை சொல்ல ஆரம்பித்தனர்.

மருத்துவமனை கட்டிடத்தை விட்டு வெளியே வந்த அன்பு மரத்தடி ஒன்றின் கீழ் வந்ததும் அபிநயாவின் கையை விட்டான்.

"இங்கே எதுக்கு வந்த.?" என்றான் கோபத்தோடு.

அவனின் கோபம் அவளுக்கு புரியவில்லை. "நீ தேவையில்லாம எதுக்கு கோபப்படுற.?" என்றாள் எரிச்சலோடு. "தெரிஞ்ச பொண்ணு சூஸைட் அட்டெம்ட் பண்ணி இருக்காளே பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆனா நீ ஏன் என்னை கேள்வி கேட்கறன்னுதான் தெரியல.." என்றாள்.

அன்பு தன் இரு கைகளையும் தட்டினான். "நல்லா நடிக்கற.. இதுதான் குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறதுன்னு சொல்வாங்க. அந்த பொண்ணு சூஸைட் அட்டெம்ட் பண்ண நீயே காரணமா இருந்துட்டு இப்ப பார்க்கவும் வந்திருக்க பார்த்தியா.. அங்கேதான் உன் மனிதநேயம் தெரியுது.‌." என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் "இப்பவும் கூட என்ன நடந்ததுன்னு என்கிட்ட விசாரிக்கல. ஒரு வார்த்தை என்கிட்ட கேட்கல.. ஆனா நான்தான் காலேஜ் முழுக்க வதந்தியை பரப்பி அவளை சூஸைட் பண்ணிக்க தூண்டி விட்டிருக்கேன்னு நீயே நம்புற.." என்றாள் உணர்ச்சியில்லாத குரலில்.

"அந்த விசயத்தை நீ ஸ்ப்ரெட் பண்ணி விடலன்னு சொல்ல போறியா.? நான் உன்னை எவ்வளவு நம்பினேன் தெரியுமா.? அஞ்சனாவுக்கும் விகேஷ்கும் இடையில் நடந்ததை உன்னை நம்பி சொன்னேன். ஆனா நீ ஒரு செகண்ட் கூட யோசிக்காம எல்லாத்தையும் காலேஜ் முழுக்க சொல்லி இருக்க.. காதல்ல நம்பிக்கையை காப்பாத்துவது எவ்வளவு முக்கியம்ன்னு உனக்கு தெரியுமா.?" என்றவனுக்கு கடைசி வாக்கியத்தை சொல்லும்போது குரல் உடைந்து விட்டிருந்தது.

"காதல்ல நம்புறது அதை விட முக்கியம். நீ சொன்ன விசயத்தை நான் வதந்தியா பரப்பி விடலன்னு நான் சத்தியம் பண்ணாலும் நீ நம்பமாட்ட.." என்றவள் ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

"அவ தற்கொலை முயற்சி பண்ணதுக்கு இவ்வளவு நேரம் வருத்தப்பட்டேன் நான். ஆனா இனி அவ செத்தே போனா கூட கொஞ்சமும் பீல் பண்ண மாட்டேன்.. காலேஜ்ல இருந்த ஸ்டூடன்ட்ஸ் நடக்காத ஒன்னை பேசிக்கலையே.. அவதானே விகேஷை நம்பி ஏமாந்தா.. அதுக்கும் நானே காரணமா.? அவளோட பிரகனென்சி.. அதுக்கும் நானா காரணம்.? காலேஜ்ல படிச்சிக்கிட்டு லவ்வுங்கற பேர்ல கண்ட கருமத்தையும் செஞ்சிட்டு அவமானம் தாங்க முடியாம அவ செத்தா நான் பொறுப்பாக முடியுமா.? வெளியே தெரிஞ்சா மானம் போயிடும்ன்னு நம்புறவ ஏன் அந்த தப்புக்களை செய்யணும்.?" என்றாள்.

அன்பு அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். அபிநயாவின் வாதம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை. அஞ்சனா சாக கிடந்தாள். அவளுக்காக அபிநயா வருத்தப்பட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டான் அவன். இறப்பிலும் கூட கவலைப்பட மாட்டேன் என்று சொல்பவளை கொடூரமானவளாக பார்த்தான்.

"அப்படின்னா நீ யோக்கியமா.? அவ செஞ்சது தப்புன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு.? அவ எப்படி விகேஷ் கூட சுத்தினாலோ அது போலதானே நீயும் என் கூட சுத்தின. நீயும் காலேஜ்லதானே என்னை லவ் பண்ணிட்டு சுத்தின.." என்றான்.

அபிநயாவிற்கு அவன் கேட்ட கேள்வி சுவாசத்தையே நிறுத்தி விட்டது போல இருந்தது.

"நீ கோபத்துல வார்த்தையை விடாதே.. நாம அப்புறமா பேசலாம்.." என்றவள் அங்கிருந்து கிளம்ப முயற்சித்தாள். அன்பு எட்டி அவளின் கையை பற்றினான்.

"இன்னைக்கு இதை பேசி முடிக்காம நான் உன்னை விட போறது இல்ல.. நீயும்தான் என்னை காதலிச்ச.. இதுக்காக நீ என்ன பண்ண போற.?" என்றான்.

"நீயும் விகாஷும் ஒன்னா.? இல்ல நானும் அஞ்சனாவும்தான் ஒன்னா.? நீ நல்லவன்னு நான் உன்னை முழுசா நம்புறேன்.." என்றவளின் முன்னால் கையை உயர்த்தி காட்டி அவள் பேசுவதை நிறுத்தினான்.

"இரண்டு ஜோடிக்கும் இடையில எந்த வித்தியாசமும் இல்ல.. விகேஷ் மாதிரி நானும் உன்னை ஏமாத்திட்டு போக ஒரு செகண்ட் கூட ஆகா.."

"ஆனா நீ எது செஞ்சாலும் நான் உனக்கு ஒன்னும் இடம் தர மாட்டேன்.." என்றவளை கண்டு சிரித்தவன் "உன்னை எத்தனை முறை நான் கிஸ் பண்ணி இருக்கேன் தெரியுமா நான்.. காதலனுக்கு முத்தம் தர இடம் தந்தவ நான் கேட்டிருந்தா எல்லாத்துக்கும்தான் இடம் தந்திருப்ப.. உனக்கு தோன்றினா அந்த பீலிங்க்ஸ் புனிதம்.. அதே அவளுக்கு தோணினா அது சபலமா.? மனுசங்களா பிறந்தவங்க எல்லோரும்தான் இடறி விழுவாங்க. விழுந்தவங்களை பார்த்து கை தட்டி சிரிக்காதே.. இந்த மாதிரி நானெல்லாம் கிடையாதுன்னு சந்தோசப்படாதே.. நீ இடறி விழவும் ஒரு செகண்ட் கூட ஆகாது.. அவளை விட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவ கிடையாது.." என்றவன் மருத்துவமனை நோக்கி நடக்க இருந்த நேரத்தில் அவனின் கை பற்றி நிறுத்தினாள் அபிநயா. அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

"நான் உன்னை லவ் பண்ணது தப்புன்னு சொல்ல வரியா நீ.?" என்றாள் கரகரத்த குரலில். அவன் காதலோடு தந்த முத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கு தப்பானவள் பட்டம் கட்டி விட்டானே என்று நினைத்தவளுக்கு இதயம் வலித்தது‌.

"இல்ல.. நான் உன்னை லவ் பண்ணது தப்புன்னு சொல்ல வரேன்.. மனுசங்களோட வீக்னெஸை பயன்படுத்தி அவங்களுக்குள்ள தாழ்வு மனப்பான்மையை வர வைக்கற உன்னை காதலிச்சது பாவம்ன்னு நினைக்கிறேன்.. இன்னைக்கு அந்த பொண்ணை ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிட்டோம்ன்னு ரொம்ப சந்தோசப்படாதே.. உன் வாழ்க்கை நிச்சயம் அதை விட மோசமாதான் அமையும்.. சின்ன பொறாமைக்காக இன்னைக்கு ஒருத்தியை கொல்ல நினைச்சவ நாளைக்கு எது வேணாலும் செய்வ.. உன்னை காதலிச்சது எவ்வளவு தப்புன்னு இவ்வளவு சீக்கிரம் புரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. இனி எப்பவும் என் முகத்துல விழிக்காதே.. ஐ ஹேட் யூ.." என்றவன் அவள் பற்றியிருந்த தன் கையை உதறிக்கொண்டு மருத்துவமனை நோக்கி நடந்தான்.

அபிநயாவிற்கு என்ன செய்வதென்று கூட தெரியவில்லை. மரத்தில் சாய்ந்து நின்றவளுக்கு அவன் சொல்லிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒற்றை நொடியில் தன் காதலையே தர குறைவாக மதிப்பிட்டு விட்டானே என்று நினைத்தவளுக்கு அழுகை பொங்கி வந்தது. ஆனால் அழ கூட தெம்பு இல்லாத அளவிற்கு ஏமாற்றம் நெஞ்சை தாக்கியிருந்தது.

ஒருவகையில் அவன் சொன்னது உண்மைதான் என்று அவளுக்கும் கூட தோன்றியது. எந்த விதத்தில் தான் அவனை நம்பினோம் என்று யோசித்தாள். நம்பியதே தவறுதான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு அவனோடு பேசி சிரித்த நிமிடங்கள் அத்தனையும் காற்றில் கலந்து போனது போல இருந்தது. அவனோடு சேர்ந்து வாழ்வோம் என்று நம்பி அவள் கட்டி வைத்திருந்த கற்பனையாலான காதல் கோட்டை அப்படியே இடிந்து தரை மட்டமானது போல இருந்தது.

நேரங்கள் மட்டும் கடந்துக் கொண்டிருந்தது. அபிநயா அசைய கூட மனமில்லாமல் மனதுக்குள்ளேயே அழுது வெந்துக் கொண்டிருந்தாள்.

அபிநயாவோடு வெளியே சென்ற அன்பு அவன் மட்டும் தனியே வந்தது கண்டு நண்பர்கள் அனைவருமே சந்தேகித்தனர். அபிநயா வருவாள் வருவாள் என்று வாசலையே பார்த்திருந்தார்கள். நேரம் மட்டுமே நகர்ந்தது. அவள் வரவேயில்லை.

"நான் ஹாஸ்டலுக்கு கிளம்பறேன்.‌." என்ற மீனா சுவேதாவோடு சேர்ந்து வெளியே நடந்தாள். சஞ்சயும் கை கடிகாரத்தை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். குணா மட்டும் நண்பனோடு சேர்ந்து அமர்ந்திருந்தான்.

மருத்துவமனையின் வெளியே வந்ததும் அபிநயாவைதான் தேடினாள் மீனா.

"அபி அங்கே இருக்கா.." என்று கை காட்டினாள் சுவேதா. அவள் நின்றிருந்த கோலம் கண்டு இருவரும் அவளருகே ஓடினார்கள்.

"அபி.." தன் தோளை பற்றிய தோழிகளை பார்த்தவள் சாய்ந்திருந்த மரத்திலிருந்து எழுந்து நின்றாள்.

"கி..கிளம்பலாமா.?" என்றாள் துக்கத்தில் அடைத்துக் கொண்ட தொண்டையோடு.

"ம்.." என்றபடி அவளோடு இணைந்து நடந்த இரு தோழிகளுக்கும் அவளது வேதனை பொங்கிய முகத்தை கண்ட பிறகு அன்புவுக்கும் அவளுக்கும் இடையில் என்ன நடந்தது என்று விசாரிக்க கூட மனம் வரவில்லை.

அபிநயா உயிருள்ள பிணம் போல மீனாவின் கை பிடித்து நடந்தாள். சாலையில் பிரியும் இடம் வந்ததும் அவர்களிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள் சுவேதா‌.

அன்பு பைத்தியம் பிடித்தவனை போல அமர்ந்திருந்தான். அபிநயாவோடு அவன் பேசி வந்த எந்த வார்த்தைகளுக்காகவும் அவன் வருந்தவில்லை. ஆனால் அஞ்சனாவின் இந்நிலமைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று நினைந்து வேதனை கொண்டான். அஞ்சனாவின் அம்மா அழுவது காணும் போதெல்லாம் அவனுக்கு மனம் துடித்தது.

"அன்பு டைம் ஆச்சி.. நாமும் கிளம்பலாமா.?" என்று கேட்டான் குணா.

அன்பு அவனை நிமிர்ந்து பார்த்தான். ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றிருந்த அஞ்சனா இன்னும் வெளியே கொண்டு வரப் படவில்லை. இந்த ஆபரேசனாவது அவளின் உயிரை காப்பாற்றுமா என்று காத்து கிடந்தான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN