முகவரி 30

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எல்லாமுமாய் இருந்த ஒருவரின் துரோகம் தான் இனி யாரும்… எதுவும் வேண்டாம் என திமிர... நிமிர... செய்யும் அது தான் அனுதிஷிதாவின் வாழ்விலும் நடந்தது…

இன்று…

அனு அனைத்தையும் சொல்லி முடித்து அழ... அவளை அணைத்துக் கொண்டவள், “உங்களுக்குள்ள இவ்வளவு நடந்திருக்கா! நான் என்ன சொல்ல… இதையெல்லாம் மீண்டு வந்து இன்று நீ என் தம்பியிடம் பேசுவதே அதிகம் அனு. எப்படிப்பட்ட துயரத்திலிருந்து வெளியே வந்திருக்க... உனக்கு நடந்தது எல்லாம் அநியாயம்!” என்று அவளுக்கு ஆறுதல் அளித்த வெண்பா

“ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லை... நிச்சயம் இதை என் தம்பி செய்திருக்க மாட்டான்” உறுதியாய் மறுக்க

“நீங்க உங்க தம்பிக்கு தானே பேசுவீங்க...” அனு

“இல்லை அனு... நிச்சயமா இல்லை... அவன் என் தம்பி என்பதற்காக இப்படி சொல்லவில்லை. அவன் கோபக்காரன்தான்... பிடிவாதக்காரன் தான்... ஆத்திரக்காரன் தான்... ஏன்... அடாவடிக்காரனும் தான்... ஒத்துக்கிறேன். ஆனால் இப்படி ஒரு பாவத்தை மட்டும் உனக்கென்று இல்லை… எந்த பெண்ணுக்கும் அவன் செய்ய மாட்டான். மாட்டான் என்ன மாட்டான்... மனதால் கூட நினைக்க மாட்டான்”

“அவர் வாயாலேயே ஆமாவென்று ஒத்துக்கிட்டார் அண்ணி...”

“அது தான் எனக்கும்.... புரியல” சற்றே கலங்கியவள், “ம்ஹும்... நிச்சயமா இல்லை... அவன் என் கூடப் பிறந்தவன் இல்லைன்னு உனக்குத் தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியலை. அவன் அப்பா அம்மா இல்லாத ஒரு அநாதை அனு...”

அனு தெரியும் என்பதாக தலை அசைக்கவும்,

“என் அப்பா அம்மாவுக்கு நாங்க இரண்டு பெண்கள். ஆண் வாரிசு இல்லை... அம்மாவுக்கும் கர்ப்பப்பையில் கோளாறு... ஆண் வாரிசுக்காக ஏங்கியவர்கள்... ஒரு முறை நாங்க எல்லோரும் ஹோமுக்குப் போயிருந்த போது... இவன் சுட்டித் தனத்தைப் பார்த்து... இவன் தான் என் ஆண் வாரிசுன்னு அப்பா தூக்கிட்டு வந்துட்டார்.

ஆனால் அவனை வளர்த்து முழுமையாகப் அவன் வளர்ச்சியை பார்க்க முடியாமல்.. அப்பா அம்மா இருவரும் ஒருசேர இறந்துட்டாங்க. அதன் பிறகு அவனை வளர்த்தது எல்லாம் என் அக்கா சரளா தான். அவனுடைய அம்மா... உலகம்… எல்லாம் அவ தான். அக்கா நல்ல இருந்தவரை இவன் அவள் கையில் படுத்து தான் தூங்குவான். அப்படி ஒரு பாசம்! அவள் மேல்… நான் சொல்றேன்… அவ வளர்த்த பிள்ளை இவன்… நிச்சயம் தப்பு செய்ய மாட்டான்”

“ம்ஹும்... இல்ல அண்ணி… நிச்சயம் அவர் தான் செய்திருக்கார். அன்றைக்கு இவர் ஃபிரெண்டு சொல்லும்போது இவர் இல்லைன்னு மறுக்கவே இல்லை அண்ணி. என் தந்தைக்காகத் தான் பழிவாங்கினேன் என்று இவரே சொன்னாரே...” அனு எதையும் காதில் வாங்காமல் தன் பிடிவாதத்திலேயே நிற்க…

இதற்குமேல் வெண்பா என்ன செய்வாள்? ‘மிருடன் தானே இவளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்... ஆனால் தம்பி கொடுப்பானா?’ என்று நினைத்தது அவள் மனது.

“அப்படி பழிவாங்க உன்னைக் கட்டினவன் தான், மொடாக் குடிகாரனாக மாறி... அவன் வாழ்வில் வர நினைத்த பெண்களை எல்லாம்... கடித்துக் குதறிகிட்டு இருந்தானாமா... நீ என்னத்தை புரிந்து அவன் கூட குடும்பம் நடத்தினாயோ...” வெண்பா கேட்டது என்னமோ சாதாரணமாகத் தான். ஆனால் அந்த வார்த்தைகள் அனுவுக்கு வலிக்கத் தான் செய்தது. பின்னே… மிருடனைப் பற்றி அவள் என்ன அறிந்திருந்தாள்?

அனுவின் முகபாவத்தில் அவளின் எண்ணத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவளோ, “நிஜம் தான் அனு... உன்னைத் தவிர அவன் வாழ்வில் யார் வந்தாலும்... அவர்களை உயிரோடு புதைக்கவும் அவன் தயாராகத் தான் இருந்தான். இது எங்களுக்கும் தெரியும். அப்படிப் பட்ட தம்பி உன்னிடம் தப்பாக நடந்துக்க முயன்ற போது எனக்கு கோபம் வந்ததே தவிர... இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று நினைக்கலை. ஆனால் என் கணவர் பிறகு சொன்னார்... அவன் மனைவி என்பதால் தான் அப்படி எல்லாம் நடந்துக்கிறான்... இப்போதாவது நம்ம வீட்டுப் பிள்ளை மேல் நம்பிக்கை வை என்று... அந்தப் போக்கிரி இப்படி எல்லாம் என்னை ஏமாற்றுவான் என்று நான் என்ன கனவா கண்டேன்...” தம்பியைப் பற்றி ஆரம்பித்தவள் பின் அனுவின் மனநிலையை மாற்ற சகஜமாய் பேச்சு கொடுக்க

“உண்மை தான் அண்ணி... அவர் எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வார்னு நானும் கனவில் கூட நினைக்கலை அண்ணி...” இவ்வளவு நேரம் வெண்பா சொன்னதை எல்லாம் யாரையோ பற்றியது என்பது போல் இருந்தவள்... இறுதியில் மட்டும் இப்படியான பதிலைத் தர

வெண்பாவுக்கோ, ‘ஐயோ! இந்தப் பிள்ளை... நல்லவிதமாக யோசிக்காதா?’ என்று தோன்றியது.

“சரி அனு… சாயங்காலம் கோவிலுக்குப் போய் வா... ஆனால் நீ வரும்போது இப்படி வரக் கூடாது… சரியா? இப்போ கொஞ்ச நேரம் ஓய்வு எடு. பிறகு இதைப் பற்றி பேசலாம்” என்றபடி இரண்டு அடி எடுத்து வைத்து நகர்ந்தவள், பின் என்ன நினைத்தாளோ… பழையபடி அனுவின் பக்கத்தில் அமர்ந்து அவளைத் தன் தோள் சாய்த்தவளோ...

“இவ்வளவு நேரம் நான் மிருடன் அக்காவாகப் பேசினேன்... இப்போ உன் அம்மாவா உன்னை சிலது கேட்கலாமா?” என்றவள் அனு அனுமதி தராமலே எடுத்துக் கொண்டவள், “அவன் உன் காதலை நிரூபின்னு சொல்லி கேட்டா... உடனே நீ பெற்றோர்களைப் பற்றி யோசிக்காமல் திருமணம், குடும்ப வாழ்வுன்னு இறங்கிவிடுவியா... நீ உன் சுயத்தில் நின்றிருக்கலாமே... இப்படி செய்து தான் என் காதலை நிரூபிக்க வேணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லைன்னு நீ அவன் முகத்துக்கு நேரா சொல்லி இருக்கலாமே... அவன் நான் செத்துவிடுவேன் சொல்லி மிரட்டி இருந்தாலும் நீ உன் சுயத்தில் நின்றிருக்கணும் அனு... அன்றைய வயதில் இருவரும் செய்த தப்பில்... இருவரும் அதற்கான தண்டனையை அனுபவித்தாலும்... அவன் மனதிற்குள் போராடி தண்டனை அனுபவித்தான் என்றால்... நீ தானே டா காலம் முழுக்க இந்த சமூகத்துக்கு முன் சிலுவை சுமக்கிற...”

“அம்மா...” ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவள், வெண்பாவின் வார்த்தையில் உள்ள கனம் தாங்காமல் அவள் மடியிலேயே முகம் புதைத்துக் கதற... வெண்பாவுக்குத் தான் மனது பதறியது. ‘இந்தச் சின்ன வயசில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்குது..’ என்று நினைத்தவள் அதன் பின் அனுவைத் தேற்றுவதில் முனைப்பாக இருந்தவள் அதன் பின் இப்படியான பேச்சுகளை எடுக்கவில்லை.

மாலை வழக்கத்தை விட சீக்கிரமாகவே மிருடனின் கார் வீட்டினுள்ளே நுழைந்தது... வந்ததும் முதலில் அவன் தேடியது மனைவியைத் தான். அவள் வீட்டில் இல்லை என்றதும், “அக்கா… ஷிதா எங்கே?” இவன் வெண்பாவிடம் கேட்க

தம்பியை ஒரு பார்வை பார்த்தவள், பின்… தான் இடுப்பில் சொருகியிருந்த முந்தாணையை உதறிக் காட்டி, “நான் ஒன்றும் அவளை மிரட்டி உருட்டி முடிஞ்சி வைக்கல டா....” என்க

மிருடனுக்கு சிரிப்பு பொங்கியது… அதை வாய்க்குள்ளே அடக்கியவன், “அக்கா, அவ சின்னப் பொண்ணு... எதுவா இருந்தாலும் பக்குவமா சொல்லு… புரிஞ்சிக்குவா… கேட்டுக்குவா”

“ஆமா டா... கல்யாணம் செய்து... ஒரு குழந்தையைப் பெற்று... இருபத்தி மூன்று வயதில் நிற்கிற அவ இப்ப குழந்தைனா... அப்போ பதினேழு வயதில் அவ உன் கண்ணுக்கு என்ன குமரியா தெரிந்தாளா?”

இக்கேள்வியில் தங்கள் விஷயம் அக்காவுக்குத் தெரிந்து விட்டது என்பதை அறிந்தவனின் முகமோ சிரிப்பைத் துடைக்க... வில்லென நிமிர்ந்தவன், “அப்போ நீயும் நான் அதை செய்திருப்பன் என்று நினைக்கிறீயா க்கா?” அவன் குரலில் அப்படி ஒரு வலி…

“டேய்... ச்சே...ச்சே...” தம்பியை சமாதானம் செய்ய முயன்று பின் அமைதியானவள், “நான் நம்புவது பெரிசு இல்லை டா… உன் மனைவி நம்புகிறாள்... அதற்கு என்ன செய்யப் போற?”

“செய்கிறேன்.. எதையோ செய்கிறேன்...” இவன் சுள்ளென்று பதில் தர

இவளுக்குள் கோபம் எழ, “என்னடா எதையோ செய்யப் போற... மறுபடியும் மான்வியைக் கடத்தி வைத்து உன் பொண்டாட்டியை மிரட்டப் போறியா?”

“அக்கா... எங்க விஷயத்தில் தலையிடாதே...”

“அடித்துப் பல்லை உடைப்பேன் படவா… எதுடா உங்க விஷயம்? பதினேழு வயசுப் பெண்ணைக் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவ... கேட்டா... இது எங்க சொந்த விஷயம்னு சொல்ல வேண்டியது... இந்தக் காலத்துப் பிள்ளைங்க எதை கற்றுக்கிறீங்களோ இல்லையோ இதைக் கற்று வைத்திருக்கீங்க... பெற்றவங்க கிட்டயே keep spaceனு சொல்ல வேண்டியது... இது தப்புன்னு சொன்னா... தப்புக்கு என்ன அளவுகோல்னு கேட்க வேண்டியது... மீறி கேட்டா... உங்க விஷயத்திலே நாங்க தலையிடலை... அப்போ எங்க விஷயத்தில் நீங்க தலையிடாதிங்கனு சொல்ல வேண்டியது. எங்களுக்கும் எந்த விஷயத்தில் தலையிடனும்… தலையிட கூடாதுனு தெரியும் டா…

ஏன்… அப்படி கேட்கிற நீங்க என்ன வானத்தில் இருந்தா குதித்து வந்தீங்க... எங்க கூட குடும்பமா தானே வளர்ந்து வரீங்க... அப்படி நாங்க தலையிடக் கூடாதுனா இந்த பூமியில் நீங்க பிறந்த உடனே உங்களை நீங்களே பார்த்துகோங்க.. வளர்த்துக்கோங்க. பதினெட்டு வயது வரை உங்க வாழ்க்கைக்கு நாங்க வேணும்... அதன் பிறகு எங்களை நீங்க தலையிடாதிங்கன்னு சொல்ல வேண்டியது... என்னடா நியாயம் இது?” ஊசிப் பட்டாசாய் இவள் வெடிக்கவும், தம்பி தலையில் கைவைத்து அமர்ந்து விட... அவன் யோசிக்கட்டும் என்ற எண்ணத்தில் இவள் அங்கிருந்து விலகினாள்..

சற்று நேரத்திற்கு எல்லாம் தமக்கையைத் தேடி வந்தவன், “அவ எங்க தான் க்கா போயிருக்கா... போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்கிறா... சொல்லு க்கா...” இவன் அழாத குறையாக கெஞ்ச

“இப்படி மூஞ்சியை வைத்தே... எல்லோரையும் ஏமாத்துடா” நொடித்தவள், “அனு... கோவிலுக்குப் போயிருக்கா...” என்று சொல்ல

“கோவிலுக்கா... அவளை எதுக்கு தனியா அனுப்பின... என் கிட்ட சொல்லியிருந்தா... வரும்போது நான் கூட்டிட்டு வந்திருப்பேன் இல்ல... சரி நான் போய் அழைச்சிட்டு வரேன்...” இவன் கிளம்ப

“டேய்... டேய்... அடங்குடா... இதே ஊரில் தனியா ஐந்து வருடம் வாழ்ந்தவளுக்கு... கோவிலில் இருந்து வரத் தெரியாதா? போ… போய் ஓய்வு எடு. அவள் வந்ததும் உன் தலைவலிக்கு காபி கொடுத்து அனுப்பறேன்”

“எல்லா முடிவையும் நீயே எடு” இவன் முணுமுணுப்புடன் நகர

“ஐயா எடுத்த முடிவைத் தான் பார்க்கிறேனே!” இவளும் தம்பிக்கு குட்டு வைக்க, இதழ்களை அழுந்த மூடியபடி அங்கிருந்து அகன்றான் மிருடன்.

இவன் தன் அறை பால்கனியில் நின்றிருந்த நேரம்... கதவுக் குமிழி திருக... பின் மனைவி உள்ளே வரும் அரவம் கேட்கவும், “ஏன் டி… ஒரு மனுஷன் வந்ததும் உன்னைத் தேடுவான்னு தெரிய வே...” என்ற கேள்வியுடன் திரும்பியவனின் பேச்சு பாதியிலேயே அதிர்ச்சியுடன் நின்று போனது. அதாவது இன்ப அதிர்ச்சியில்...

எதையும் காதில் வாங்காமல் கணவனை நெருங்கியவள், “இந்தாங்க காபி...” அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் கப்பை கையில் திணித்தவள்... அங்கு டீபாய் மேல் அவன் அலங்கோலமாய் போட்டு வைத்திருந்த வார மாத இதழ்களை... குனிந்து இவள் அடுக்க... கண் கொட்டாமல் மனைவியின் அழகை ரசித்தான் இவன்.

இதென்ன… இன்று தான் மனைவியைப் புதிதாக காண்கிறானா? ஆமாம்… இந்த ஷிதா அவனுக்குப் புதிது தான். முன்பு எப்போதும்... அனுவை பாவாடை சட்டை, ஜீன்ஸ் என்று பார்த்து வந்தவனுக்கு... இன்று அழகான போச்சம்பள்ளி புடவையில்... அதற்கு ஏற்ற தோதான நகைகளுடன்... இரண்டு பக்கத் தோள்களிலும் பூச்சரம் வழிந்து அசைந்து ஆட... நெற்றி வகிட்டில் குங்குமத்துடன்... கை வளையல் குலுங்க ரவிவர்மா ஓவியம் என நின்ற மனைவியைப் பார்த்த மிருடனின் மனதில் மனைவியின் அழகில் கர்வம் கொள்ள வைக்க... அதுவே இவள் எனக்கானவள் என்ற உரிமையைத் தர... அது தந்த காதலில்... காபி குவளைக்கு வலிக்குமோ என்ற எண்ணத்தில் மெல்ல அதை ஓரம் வைத்தவன்...

ஆனால் மனைவியை மட்டும் அதிரடியாய் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்திருந்தவன்... இறுக்க அணைத்து மனைவியை சுவரில் சாய்த்தவனின் இதழ்களோ... பட்டும் படாமல் அவள் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்து... பின், “என் செல்லம்மா...” என்ற சொல்லுடன் அவள் கழுத்து வளைவில் ஊர்வலம் நடத்த... இதெல்லாம் அதிரடியாய்... மின்னல் வேகத்தில் நடந்ததால்... முதலில் அனுவுக்கு ஒன்றும் தெரியவில்லை. தெரிந்தபோது... கணவனின் மீசை முடிகள் கழுத்தில் உரச... “செல்லம்மா…” என்ற கொஞ்சலுடன் அவன் கரைவது தான் அவளுக்குத் தெரிந்தது.

கரைந்தவன் இறுதியாய் அங்கும் இதழ் பதிக்க... “ச்சீ....” என்ற சொல்லுடன் அதிரடியாய் இவள் பிடித்துத் தள்ள...

முதலில் தடுமாறியவன்... பின் சமாளித்து நின்று, “என்ன டி ச்சீ? நான் உன் புருஷன் தானே... நீ என் பொண்டாட்டி தானே...” இவன் சீற

“அப்படின்னு நான் சொல்லவே இல்லை.. நான் அதை ஏற்கவும் இல்லை...” இவளும் சீற

“அப்போ நீ எனக்கு யார் டி?”

“உங்க மகளுக்கு அம்மா...”

“ஓஹ்... அப்படியா... அப்போ என் மனைவி என்ற அங்கீகாரத்தை உனக்கு கொடுக்காமலே... என் மகளைச் சுமக்கிற அங்கீகாரத்தை உனக்கு நான் கொடுத்திருக்கேனா... குட்... குட்…”

இவள் ரவுத்திரத்துடன் முறைக்க, “என்ன டி முறைக்கிற... மாமா உனக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கேன்... இந்த தியாகத்துக்கு... காலம் முழுக்க நீ என்னை இறுக்க அணைத்து உம்மா... கொடுத்துட்டே இருக்கணும் டி... வேணும்னா மறுபடியும் அந்த தியாகத்தை செய்யவா...” இவன் பல்லை இளிக்க

“ச்சே... பொண்டாட்டி கிட்ட இப்படி பேச உங்களுக்கு வெட்கமா இல்ல...”

“பார்ரா... இப்போ மட்டும் என் பொண்டாட்டியா... சரி... என்ன கேட்ட... ஆஹ்... வெட்கமா இல்லை டி... கட்டின புருஷனை.... நீ என் புருஷன் இல்லைன்னு நீ சொல்லும்போது உனக்கு வராத வெட்கம் எனக்கு மட்டும் வந்திடுமா என்ன?”

“நான் கேட்பது என்ன... நீங்க சொல்றது என்ன... உங்க கிட்ட மனுஷி பேசுவாளா...”

“உன்னை யாரு டி... பேசச் சொன்னா... ஒண்ணு என்ன கொஞ்சு... இல்லை நான் கொஞ்சம் போது தடுக்காமலாவது இரு...” இவன் அசால்டாய் வழி சொல்ல

“டேய்...” மேற்கொண்டு அனு பேசுவதற்குள்... பிள்ளைகள் உள்ளே வந்து விட... கணவன் மனைவிக்கான பேச்சு அதோடு முற்றுப் பெற்றது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN