சிக்கிமுக்கி 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விடுதிக்கு வந்து சேர்ந்ததும் மீனா பாத்ரூமிற்கு சென்று உடை மாற்றி முகம் சுத்தம் செய்து வந்தாள். அவள் வந்து பார்த்தபோது அபிநயா சுவற்றை வெறித்தபடி முட்டிக்காலை கட்டியபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

"அபி.." தோழியின் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தாள். "அன்பு ஏதாவது சொல்லிட்டானா.?" என்றாள்.

அபிநயா இடம் வலமாக தலையசைத்தாள். கட்டிலில் சாய்ந்து படுத்தாள். மீனா அவளின் அருகே வந்து அமர்ந்தாள். அவளின் தலையை வருடி விட்டாள்.

"உங்க இரண்டு பேருக்கும் இடையில் என்ன நடந்ததுன்னு என்னால யூகிக்க முடியல அபி.." என்றவளின் மடியில் தலையை வைத்தாள் அபிநயா.

"அந்த பொண்ணு தற்கொலை முயற்சி செஞ்சதுக்கு நான்தான் காரணம்ன்னு அவன் சொல்றான். அந்த பொண்ணுக்கும் விகேஷ்க்கும் இடையில் இருந்த உறவை பத்தி நான்தான் காலேஜ் முழுக்க சொன்னதாவும் அதனாலதான் அந்த பொண்ணு தற்கொலை முயற்சி செஞ்சதாகவும் சொல்றான்.." என்றவளின் குரல் வறண்டு போய் இருந்தது.

மீனாவுக்கும் அன்புவின் மீது கோபமாக வந்தது. அவன் எப்படி அபிநயாவின் மீது பழி போடலாம் என்று நினைத்தாள்.

"விடு.. இரண்டு நாள் கழிச்சி புத்தி தெளிஞ்சதும் வந்து சாரி கேட்டுடுவான்‌‌.." என்ற மீனாவிடம் மறுப்பாக தலையசைத்தவள் அன்பு தன்னிடம் வாதாடியதை பற்றி முழுதாக விவரித்தாள்.

மீனாவிற்கு அன்புவை சுத்தமாக பிடிக்கவில்லை. அபிநயாவின் மனம் எந்த அளவிற்கு காயம் பட்டிருக்கும் என்று புரிந்துக் கொண்டவள் "பீல் பண்ணாதப்பா.. அவனை பத்தி யோசிக்காத.." என்றாள்.

அன்பு தன்னோடு கிளம்பி வருவான் என்று காத்திருந்தான் குணா. பித்து பிடித்தது அமர்ந்திருந்த அன்புவின் தோளை தொட்டார் அருள் குமரன்.

"நீ ஹாஸ்டலுக்கு கிளம்பு அன்பு.. டைம் ஆச்சி.." என்றார்.

"நான் போகல சார்.. அஞ்சனா கண் விழிக்கும் முன்னாடி என்னை போக சொல்லாதிங்க சார்.." என்றான் கெஞ்சலாக.

அஞ்சனாவின் அம்மாவை பார்த்தார் அருள் குமரன். அவள் அழுதபடி அரை மயக்கத்தில் இருக்கையில் சாய்ந்திருந்தாள். அருள் குமரன் அன்புவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

வாசலில் வந்ததும் அன்புவின் கையை விட்டவர் "நீ என்ன பைத்தியமா.? நீ இங்கேயே இருந்தா மட்டும் அந்த பொண்ணு கண் விழிச்சிடுவாளா.? அப்புறம் எதுக்கு டாக்டர்ஸ்ம் ஹாஸ்பிட்டலும். நீ அந்த பொண்ணை நினைச்சி ரொம்ப பயப்படுறன்னுதான் காலையிலிருந்து உன்னை இங்கே இருக்க வச்சேன். ஆனா இனியும் நீ இங்கிருந்து கிளம்பலன்னா அது சரி வராது. இன்னும் கொஞ்ச நேரத்துல அஞ்சனாவோட தாத்தா பாட்டி தாய்மாமா எல்லாரும் வந்துடுவாங்க. அவளை கவனிச்சிக்க இத்தனை பேர் இருக்கும்போது உனக்கு இங்கே என்ன வேலை.? நானே இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கிருந்து கிளம்ப போறேன்.. ஒரு பிரெண்டா நீ இவ்வளவு நேரம் இருந்ததே போதும். இப்ப கிளம்பு.. நாளைக்கு வந்து பாரு.. மீறி இங்கேயே இருக்க நினைச்சா நாளைக்கு கூட நீ இங்கே வர முடியாதபடி செஞ்சிடுவேன்.." என்றார் மிரட்டலாக.

"என்னை ஏன் சார் புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்க.? அந்த பொண்ணு பாவம் சார்.. நான் எப்படி ஹாஸ்டல்ல போய் இருப்பேன்.? எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் சார்.." என்றான் தலையை பிடித்தபடி.

அருள் குமரன் பெருமூச்சோடு அவனை தன்னோடு அணைத்துக் கொண்டார். குணாவுக்கும் அவனை பார்க்கையில் பரிதாபம் மிகுந்தது.

"அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது. நீ பயப்படாம போ.." என்றார். குணாவை பார்த்து "இவனை கூட்டி போ.." என்றார்.

குணா நண்பனின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அன்பு இயந்திரம் போல நண்பனோடு நடந்தான்.

விடுதிக்கு வந்ததும் அன்புவின் அலமாரியை திறந்து மாற்று உடையை எடுத்த குணா அதை அன்புவிடம் தந்தான். அன்பு அவனை பொலிவிழந்த விழிகளோடு பார்த்தான்.

"உன் சட்டையெல்லாம் ப்ளட் ஸ்டெயினா இருக்கு.. போய் குளிச்சிட்டு டிரெஸ் மாத்திட்டு வா.." என்றான்.

அன்பு இயக்கி விட்ட பொம்மையை போல் எழுந்தான். குணா தந்த உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றான். கையின் ஓரங்களில் இருந்த அஞ்சனாவின் ரத்தம் கண்டவனுக்கு அழுகை வந்தது. தன்னை தாண்டி ஓடியவளை ஒரு நொடி பிடித்து நிறுத்தி இருக்க கூடாதா என்று நினைத்து வெம்பினான்.

அஞ்சனாவிற்கு நடந்த விபத்திற்கு தான்தான் முழு காரணம் என்று நம்பினான். தன் மீது கொண்ட கோபத்தைதான் அபிநயாவிடம் காட்டினான். குற்ற உணர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பழியை தூக்கி எதிராளியின் மீது போடுவதே சுலபமாக இருந்தது. ஷவரில் இருந்து கொட்டிய தண்ணீர் அவனின் அழுகையை துடைத்து சென்றது. ஆனால் மனதின் குமுறலை குறைக்கவில்லை.

குளித்துவிட்டு வந்தவனுக்கு முன்பை விட அதிகமாக மன பாரம் இருந்தது. அஞ்சனாவின் ரத்த முகம் மீண்டும் மீண்டும் சிந்தையில் வந்தது. அவளின் நெற்றியிலும் கழுத்தில் இருந்த காயங்கள் அவனை பயமுறுத்தின.

குணா அவனுக்கு குடிக்க தண்ணீர் தந்தான். தண்ணீரை கடகடவென குடித்தவனுக்கு தாகம் தீரவில்லை. ஆனால் இன்னொரு டம்ளர் தண்ணீரை குடிக்கவும் விருப்பம் வரவில்லை.

"அஞ்சனா செத்துடுவாளாடா.?" என்றான் சுவற்றை வெறித்தபடி.

"லூசு மாதிரி பேசாத.. அந்த பொண்ணு பிழைச்சிப்பான்னு நம்பு. செத்துட்டா மட்டும் என்ன பண்ண முடியும்.? விதி யாரை விட்டது.?" என்றான் குணா.

விதி அஞ்சனாவிற்கு வந்ததாய் அன்புவிற்கு தோன்றவில்லை. மாறாக தனக்கே வந்ததாக எண்ணினான்.

இரவில் நண்பனின் வற்புறுத்தலுக்காய் சென்று உணவை உண்டு வந்தான். ஒருநாளுக்கு மட்டும் என்று ஹாஸ்டல் வார்டனிடம் கெஞ்சி தன் போனை அறைக்கு வாங்கி வந்தான். அஞ்சனாவின் அம்மாவிற்கு அழைத்து அஞ்சனாவின் நலம் விசாரித்தான். அஞ்சனா ஐ.சி.யூவில் இருக்கிறாள் என்று சொன்னாள் அம்மா. எந்த விசயமாக இருந்தாலும் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தான்.

விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தான். அடிக்கடி போனை எடுத்து பார்த்தான். அஞ்சனாவின் அம்மா தனக்கு போன் செய்வாரோ என்று எதிர்பார்த்தான். தன்னையும் மீறி அவன் தூங்க முயன்றபோது அவனின் கனவில் அஞ்சனா ரத்த வெள்ளத்தின் இடையே துடிதுடித்துக் கொண்டிருந்தாள். பேன் ஓடியும் வியர்வை குறையவில்லை. நண்பனின் அருகே இருந்தும் கூட பயம் நெஞ்சை விட்டு அகலவில்லை.

அழைக்காத கடவுளையும் அழைத்தான். தெரியாத சாமிகளையும் நினைத்தான். அஞ்சனாவின் உயிரை காப்பாற்றி தரும்படி மனதோடு கெஞ்சினான்.

விடிகாலை நேரத்தில்தான் உறங்கினான்.

அபிநயாவும் இரவெல்லாம் விழித்தபடிதான் இருந்தாள். அன்பு சொன்ன சொற்கள் மட்டும் தேய்ந்த டேப்ரிகார்டின் இசையாய் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது. ''விகாஷுக்கும் அன்புவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்ல. எனக்கும் அஞ்சனாவுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்ல..'' என்று நடு இரவில் உளறிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையிலேயே மருத்துவமனை நோக்கி ஓடினான் அன்பு. அஞ்சனாவின் இறப்பு செய்தி தன்னிடம் தெரிவிக்கப்பட கூடாது என்று பயந்திருந்தான். ஐ.சி.யூவின் முன்னால் ஒரு நடுத்தர வயது மனிதர் இருந்தார். அவரை தாண்டிக் கொண்டு சென்று ஐ.சி.யூ கதவின் வழி அஞ்சனாவை பார்த்தான். முகத்தில் ஆக்சிஜன் டியூப் இணைக்கப்பட்டிருந்தது‌. அவளின் உடலில் ஏகப்பட்ட ஒயர்கள் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. நிறைய இடத்தில் பெரிய பெரிய கட்டுக்களை போட்டிருந்தார்கள். முகத்திலும் கூட நிறைய இடங்களில் பேண்டேஜ் ஒட்டி இருந்தார்கள்.

"நீங்க யார்.?" அன்புவின் தோளில் கை வைத்து கேட்டார் அந்த நடுத்தர வயது மனிதர். அன்பு திரும்பி பார்த்தான். "அஞ்சனாவோட பிரெண்ட்.." என்றான்.

"அக்கா சொன்னா.. நான் அஞ்சனாவோட மாமா.." என்றார் அவர்.

அன்புவிற்கு பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. இருபத்தி நாலு மணி நேரத்துல கண் விழிச்சிட்டா அவ உயிருக்கு ஆபத்து இல்லன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க.." என்றார்.

அன்புவிற்கு இப்போதுதான் கால் பங்கு உயிர் வந்தது போல இருந்தது.

"உங்க கூட கொஞ்சம் பேசணும்.. அப்படி வரிங்களா.?" என்றார் அவர்.

அன்பு அஞ்சனாவின் முகத்தை ஒருதரம் பார்த்துவிட்டு அவரோடு சேர்ந்து நடந்தான்.

கேண்டினுக்கு வந்து இரண்டு காப்பியை வாங்கிய அஞ்சனாவின் மாமா மேஜை ஒன்றின் அருகே வந்து அமர்ந்தார். அவருக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் அன்பு.

"காப்பி குடிங்க.." கப்பை நீட்டினார் அவர்‌. அன்பு நடுங்கும் விரல்களோடு கப்பை கையில் எடுத்தான். இன்னமும் நடுக்கம் குறையவேயில்லை அவனுக்கு. இதயத்தின் துடிப்பும் சரியான நிலைக்கு வரவில்லை.

"ரொம்ப நாளாச்சே இவ இன்னும் இப்படி ஏதும் செய்யலையேன்னு கொஞ்ச நாளாவே நினைச்சிட்டு இருந்தேன் நான்.." என்றவரை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு.

"அவ செல்ப் ஹார்ம் பண்ணிக்கறதுல அனுபவசாலி.."

அவர் சொன்னது கேட்டு அன்புவிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

"அவங்க அப்பா இறந்தபோது கையை கட் பண்ணிக்கிட்டா.. ரொம்ப கஷ்டப்பட்டு காப்பாத்தினோம். அந்த பையன் விகேஷ் ஏமாத்திட்ட போது கூட தூக்கு போட டிரை பண்ணா.. அக்காதான் பார்த்து தடுத்து நிறுத்தினா.. இப்ப காரணமே இல்லாம லாரி முன்னால பாஞ்சிருக்கா.." என்றவர் பெருமூச்சோடு காப்பியை குடித்தார்.

'அவளுக்கு ஷெல்ப் ஹார்ம் பண்ணிக்கற பழக்கம் இருக்கா.?' என நினைத்த அன்புவிற்கு வியப்பாக இருந்தது.

"கவுன்சிலிங் கூட அனுப்பினோம். ஆனா நாலஞ்சி நாளைக்கு மேல அவ போக மாட்டா.. அவளோட இந்த கேரக்டர் தெரிஞ்சேதான் அக்கா அவளை மறுபடி காலேஜ் அனுப்பாம வச்சிருந்தா.. நீங்கதான் கன்வின்ஸ் பண்ணி அவளை மீண்டும் காலேஜ் கூட்டி போனிங்கன்னு கேள்விப்பட்டேன்.. இந்த முறை அவ ஏன் இப்படி செஞ்சான்னு உங்களுக்கு தெரியுமா.?" என்றார்.

"அவளுக்கும் விகேஷ்க்கும் இடையில் நடந்தது காலேஜ் ஸ்டூடன்ஸ்க்கு தெரிஞ்சிடுச்சின்னு இப்படி பண்ணிட்டா.." என்றவன் காப்பி கோப்பையை இறுக்கினான்.

"விதி.. இந்த மாதிரி ஒரு செல்ப் கான்பிடென்ஸ் இல்லாத ஒரு பொண்ணு எங்க குடும்பத்துல வந்து பிறக்கணும்ன்னு விதி.. தனிமை எல்லோருக்கும் வரம் கிடையாது.. இவளை போல ஷெல்ப் ஹார்ம் பைத்தியங்களுக்கு தனிமைதான் தீனியே.." என்றவர் தன் நெற்றியை தேய்த்தபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார்.

"மறுபடியும் கவுன்சிலிங் அனுப்ப போறிங்களா சார்.?" தயக்கமாக கேட்டான் அன்பு.

மறுப்பாக தலையசைத்தார் அவர்.

"அவளையும் அக்காவையும் எங்க கிராமத்துக்கே கூட்டி போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப வருசம் முன்னாடியே அக்காவை கூப்பிட்டேன். ஆனா அவதான் புருசன் செத்த வீட்டை விட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா.. அவளோட முட்டாள்தனத்தால இப்ப புள்ளையையும் கொன்னுடுவா போலிருக்கு. இனியும் இங்கேயே விட்டு வச்சா சரிவராது. கிராமத்துல அண்ணன் தம்பி மாமன் மச்சான்னு பெரிய குடும்பம் எங்களோடது.. அங்கே வந்த பிறகு இவ இப்படி ஷெல்ப் ஹார்ம் பண்ணிக்க மாட்டான்னு நம்புறேன்.. கொஞ்ச நாளைக்காவது இடமும் மாறி இருந்தாதான் அவளுக்கும் நல்லாருக்கும்.." என்றார்.

அன்புவிற்கு அவர் சொல்வதும் சரியென்றே தோன்றியது.

"நீங்க செஞ்ச உதவிகளுக்கு நன்றி சொல்லலாம்ன்னுதான் கூப்பிடேன்.. அஞ்சனாவுக்கு உங்களை போல ஒரு பிரெண்ட் கிடைச்சது எனக்குமே சந்தோசம்.." என்றவர் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்.

அன்பு காலி கோப்பையை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து நின்றான். அன்புவின் தலையை கோதி விட்டார் அவர்.

"அவளை நினைச்சி நீங்க ரொம்ப பயப்படுறன்னு தெரியுது. ஆனா இனி பயப்படாதிங்க.. அவ நல்லாயிடுவா.. நீங்க பயப்படாம காலேஜ் போங்க.. அவ நடமாட ஆரம்பிச்ச பிறகுதான் அவளை கிராமத்துக்கு கூட்டி போக போறோம்.. அதுவரை உங்களுக்கு நேரம் இருக்கும்போது வந்து அவளை பாருங்க.." என்றார்.

அன்பு சரியென தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அஞ்சனாவின் மாமா ஐ.சி.யூ வார்டை நோக்கி நடந்தார்.

அன்பு கல்லூரிக்கு வந்தபோது ஒரு பாடவேளை நேரமே முடிந்திருந்தது. வகுப்பிலிருந்த பேராசிரியை அவனை திட்டி உள்ளே அழைத்தாள்.

அபிநயா அன்பு இருந்த திசையை பார்க்கவில்லை. அவனும் இவளை பார்க்கவில்லை.

குணா கல்லூரி வந்த அடுத்த நிமிடமே அன்புவிற்கும் அபிநயாவிற்கும் இடையில் நடந்த சண்டையை பற்றி சொல்லி விட்டாள் மீனா. நடந்ததை அறிந்த குணாவிற்கும் நண்பனின் மீது கோபம் வந்தது. ஆனால் நண்பனின் தற்போதைய மனநிலையை புரிந்து வைத்திருந்தவனுக்கு அவனை விட்டு விலகி நிற்கவும் மனம் வரவில்லை.

"அஞ்சனா எப்படி இருக்கா.?" நண்பனிடம் கிசுகிசுப்பாக கேட்டான் குணா.

"ம்.." என்ற அன்பு அதற்கு மேல் எதையும் பேசவில்லை.

இடைவேளை நேரத்தில் அன்புவும் அபிநயாவும் ஒரே நேரத்தில் தங்களின் இருக்கையிலிருந்து எழுந்தனர். வெளியே செல்ல நினைத்து நடந்தவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நடக்க கால்கள் இரண்டும் மோதி கொண்டன. நிமிர்ந்து பார்த்தவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு விலகி நடந்தார்கள்.

அடுத்து வந்த மணி துளிகளில் மட்டுமல்ல அடுத்த வந்த நாட்களிலும் கூட அப்படியேதான் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.

கல்லூரி முடிந்ததும் மருத்துவமனை நோக்கி ஓடினான் அன்பு. மற்ற கல்லூரி மாணவர்கள் சொன்ன செய்தி மூலம் அஞ்சனா உயிருக்கு ஆபத்தில்லை என்பதை அறிந்துக் கொண்டாள் அபிநயா. முதல் நாள் அஞ்சனா குணமாக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டவளுக்கு இப்போது ஏனோ மனம் வெறிச்சோடி இருந்தது. மகிழவும் தோணவில்லை. வெறுக்கவும் தோணவில்லை.

அஞ்சனா பிற்பகல் வேளையில் கண் விழித்து பார்த்ததாக மருத்துவமனையில் செய்தியை சொன்னார்கள். அன்புவிற்கு அரை உயிர் வந்தது போல இருந்தது. இப்போதுதான் சிரமமில்லாமல் மூச்சு விட முடிவதை போல தோன்றியது.

சனிக்கிழமை மாலையில் வீட்டிற்கு கிளம்பினாள் அபிநயா. அன்பு அஞ்சனாவை பார்த்துக் கொள்ள நினைத்து இங்கேயே தங்கி விட்டான். மகனின் தோழி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற விசயம் அறிந்த ஆறுமுகமும் அர்ச்சனாவும் அவனை அங்கேயே இருந்துக் கொள்ள சம்மதத்தை தந்தனர். நண்பனுக்கு துணையென குணாவும் அவனோடே தங்கிவிட்டான்.

பேருந்தில் தனியாக பயணிக்கையில் அபிநயாவிற்கு துக்கம் மட்டுமே மேலோங்கி இருந்தது. அன்புவோடு பேசி பழகிய அத்தனையும் கனவை போல கரைந்து போய் விட்டிருந்தது.

ஜன்னல் வழி வீசிய காற்றையோ பேருந்தில் இசைத்துக் கொண்டிருந்த பாடலையோ எதிர் இருக்கையில் அமர்ந்தபடி மழலை பேசிக் கொண்டிருந்த குழந்தையையோ ரசிக்க தோணவில்லை அபிநயாவிற்கு. அன்புவின் நினைவுகளை தன் நெஞ்சில் இருந்து அழிக்க வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டாள்.

சந்தனக்கொடிக்கால் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கியவள் சாலையை கூட சரியாக கவனிக்காமல் நடந்தாள். நடந்துக் கொண்டிருந்தவளை பிடித்து நிறுத்திய ஒரு பாட்டி "பஸ் வருது பாப்பா.." என்றார்.

தன்னை தாண்டி சென்ற பேருந்தை பார்த்தவளுக்கு கண்ணீர் குளம் கட்டியது. அஞ்சனாவிற்கு பதில் தானே அந்த லாரியில் சிக்கி இருந்தால் அன்பு தன்னை இன்னும் அதிகம் நேசித்திருப்பானா என்று கூட யோசித்தாள். ஒரு காரணத்தோடு வருவதை காதலென்றும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயல்பாய் அமைந்த காதலில் அதிகரிக்கும் அன்பும் இயல்பாக அமைய வேண்டும் என்று நினைத்தாள். அவனை பற்றி இப்போதே அறிந்துக் கொண்டோமே என்று நினைத்து ஒருமுறை மகிழ்ந்தாள். ஆனால் மறுகணமே அவன் தன்னை பிரிந்ததை நினைத்து அழுதாள்.

கலங்கிய கண்களை சிமிட்டிக் கொண்டு சாலையை கடந்தவள் எதிர் கடையில் மாட்டியிருந்த பேய் பொம்மை மாஸ்கை கண்டு நெஞ்சம் வெந்தாள். காதலென்ற நதியில் இறங்கியதற்கு பதிலாக முன்பை போல சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கலாம் என்று நினைத்தாள். அப்போதெல்லாம் இப்படி ஒரு வலியே அவளுக்கு வந்ததில்லை. அன்புவை அடித்து நொறுக்கும்போது சந்தோசம் மட்டுமே இருக்கும்.

காதல் என்ற பெயரில் தன்னை வேதனையின் எரிமலை குழிக்குள் தள்ளி விட்டுவிட்ட அன்புவை வெறுத்தாள். அவனை அறிந்திருக்கவே கூடாது என்று ஆசைப்பட்டாள்.

முகம் வாடி வீட்டிற்கு வந்த மகளை யோசனையோடு பார்த்தார் வினோத்.

"உடம்பு சரியில்லையா அபி.?" என கேட்டவர் எழுந்து வந்து அவளின் உடல் வெப்பத்தை சோதித்தார்.

"லேசா தலைவலிப்பா.. வேற ஒன்னும் இல்ல.." என்றவள் அவரை கடந்து தன் அறைக்கு சென்றாள். ஏதோ சரியில்லை என்பது தெளிவாக புரிந்தது அவருக்கு.

அபிநயா வழக்கம் போல இல்லை. வீட்டிலிருந்த யாரோடும் கலகலப்பாக பேசவில்லை. உணவை கோழி கொத்துவது போல பருக்கை பருக்கையாக எடுத்து தின்றாள். தீபக் வலுக்கட்டாயமாக வம்பிழுத்த போது கூட அவனோடு சண்டைக்கு போகவில்லை. அம்மாவிற்கு இன்னொரு மாமியாராய் மாறி சிறு விசயத்திற்கும் குறை சொல்லவில்லை. அப்பாவோடு வழக்கம் போல கொஞ்சவில்லை.

ஞாயிற்று கிழமை அன்பு காலையிலேயே மருத்துவமனை வந்து விட்டான். அஞ்சனாவை தானே கவனித்துக் கொள்வதாக அவளின் குடும்பத்தாரிடம் சொன்னான். கடந்த சில நாட்களாக அவன் அஞ்சனா மீது காட்டிய அக்கறையை அறிந்த அவளின் குடும்பமும் அவனை மருத்துவமனையில் இருக்க சம்மதித்தது.

அஞ்சனாவிற்கு தாகம் ஏற்படுகையில் தண்ணீர் குடிக்க வைத்தான். அவளுக்கு ஊசி போடும் நேரங்களை கவனித்து நர்ஸ்களிடம் நினைவுப்படுத்தினான். அவளின் அருகே அமர்ந்து கதை போல எதையாவது பேசினான்.

அஞ்சனா அவனோடு எதுவும் பேசவில்லை. யாரோடும் பேசவில்லை. சிலை போல இருந்தாள். அவளை பேச சொல்லி சுற்றி இருந்தவர்கள் எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தனர். ஆனால் அவள் அசையவில்லை. அன்புவை பார்க்கும்போது உண்டாகும் அந்த சினேக புன்னகை கூட அவளின் கண்களில் தென்படவில்லை.

அபிநயா தன் அறையிலேயே அடைந்து கிடந்தாள். ஞாயிற்று கிழமையானால் அம்மா எண்ணெய் தேய்த்து விடுவாள். தலை குளிக்க சொல்வாள். ஆனால் இன்றோ ஆனந்தி கத்தி கத்தி அழைத்தும் கூட அபிநயா கீழே வரவில்லை.

"உனக்கு என்னடி வந்துச்சி.? வந்ததிலிருந்து பேய் பிடிச்சவளை போலவே உட்கார்ந்திருக்க.." என்று அம்மாவும் கூட திட்டினாள்.

காலை உணவிற்கு கூட வராமல் அறையில் அமர்ந்திருந்தவளை தேடி வந்தான் தீபக்.

கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவளின் அருகே வந்து அமர்ந்தான்.

"அபி.. உனக்கும் அன்பு மச்சிக்கும் சண்டையா.?" என்று தன் யூகத்தை கேட்டான்.

அபிநயா கசந்த சிரிப்போடு அவனை பார்த்தாள். "சண்டை.. சண்டைதான்.." என்றாள் உணர்வற்ற குரலில்.

மகன் மகளின் மனதில் உள்ளதை கேட்டறிந்து விடுவான் என்று நம்பி படியேறிய அப்பா அபிநயா சொன்னது கேட்டு குழம்பினார். அன்புவும் அவளும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டார். இந்த வாரம் வீட்டிற்கு வந்ததும் அவளின் காதலை பற்றி விசாரிக்க நிறைய யோசித்து வைத்திருந்தார் அவர். 'நான் வேணுமா அவன் வேணுமான்னு முடிவு பண்ணு.' என்று சினிமா வசனமெல்லாம் யோசித்து வைத்திருந்தார். தன் மகள் இந்த வார விடுமுறையில் தன்னை அழ வைத்து விடுவாளோ என்று குழம்பியிருந்தார். மகள் கண்ணீரோடு காதலை சொன்னதும் கோபம் தீர்ந்து பக்கத்து வீட்டு கோணக்காலனையே தன் மருமகனாக ஏற்றுக் கொள்வோமோ என்று நினைத்தும் பயந்துக் கொண்டிருந்தார்.

"காலேஜ்ல ஒரு பொண்ணு சூஸைட் பண்ணிக்கிட்டதுக்கு நான்தான் காரணம்ன்னு சொல்லிட்டான் அவன்.." என்றவள் எழுந்து அமர்ந்தாள்.

தீபக் அவளை புரியாமல் பார்த்தான். "அவன் என்ன சொன்னான் தெரியுமா தீபக்.?" என்றவளுக்கு சொல்லும் முன்பே கண்ணீர் கன்னம் தாண்டியது.

"நான் அவனை காதலிச்சது தப்பாம்.. அவனோடு பேசியது பழகியது எல்லாமே தப்பாம். என்னோட பீலிங்ஸையே அசிங்கப்படுத்திட்டான்.. என்னை உயிரோடு கொன்னுட்டான்.." என்றவள் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள். கடந்த மூன்று நாட்களாக நெஞ்சில் தேக்கி வைத்திருந்த துக்கம் இப்போது கண்ணீராக புறப்பட்டது.

அவள் சொன்னது இப்போதும் தீபக்கிற்கு புரியவில்லை. ஆனால் அன்பு தன் சகோதரியின் மனதை உடைத்து விட்டான் என்று மட்டும் புரிந்துக் கொண்டான்.

"அழாதே அபி.. நான் அன்புவை அடிக்கறேன்.." என்றான்.

மறுத்து தலையசைத்தபடி அவனின் தோளில் சாய்ந்தவள் "தப்பு முழுக்க என் மேல்தான் இருக்கு தீபக்.. அவனை லவ் பண்ணதே பெரிய தப்பு.. அவனை நம்பியது தப்பு.. அவனோடு நான் செலவு பண்ண ஒவ்வொரு செகண்டுமே தப்பு.." என்றவள் நெஞ்சம் விம்மி அழுதாள். அவள் அழுவதை கண்டு தீபக்கிற்கும் கண்கள் கலங்கியது. அவளை அணைத்துக் கொண்டவனுக்கு ஆறுதல் எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

"எல்லாம் சரியா போயிடும் அபி.." கரகரத்த குரலில் சொன்னான். ஆனால் அபிநயாவிற்கு தெரியும் எதுவும் சரியாகாது என்று. அதனால் அவளின் அழுகையும் நிற்கவில்லை. அவளின் மன வேதனையும் தீரவில்லை.

படிக்கட்டில் அமர்ந்திருந்த வினோத்திற்கு மகளின் சிறு விம்மல் சத்தம் இதயத்தில் வேதனையை தந்தது. பாசமாக வளர்த்த மகள் பக்கத்து வீட்டு பொறுக்கியை காதலித்து ஏமாந்திருக்கிறாள் என்ற விசயம் அவருக்கு கோபத்தை தந்தது. அப்போதும் கூட தன் மகள் எதுவும் அறியாத அப்பாவி பெண்.. பக்கத்து வீட்டு பொறுக்கிதான் பொய் வசனம் பேசி மகளை ஏமாற்றி விட்டான் என்று நம்பினார். மகளின் மனதை சரிப்படுத்தும் வழி தெரியவில்லை அவருக்கு.

"செத்துடணும் போல தோணுது தீபக்.." என்றவளை இறுக்க அணைத்துக் கொண்ட தீபக் "அப்படி சொல்லாத அபி.. நீ சொன்னதை கேட்டா அப்பாவும் அம்மாவும் ரொம்ப வருத்தப்படுவாங்க.. உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம். நீ ஏன் சாகணும்.? எங்களை விடவுமா அவன் முக்கியமா போய்ட்டான்.?" என்றான்.

அபிநயா சொன்னது கேட்டு வினோத்திற்கு ரத்த ஓட்டமே நின்று போனது போல இருந்தது. அரும்பாடு பட்டு வளர்த்த தன் செல்ல மகள் இப்படி ஒரு வார்த்தையை சொல்லும் அளவுக்கு மனதை உடைத்த அன்புவின் மீது கொலை வெறி கொண்டார்.

அபிநயா குலுங்கி அழுதபடியே இருந்தாள். தீபக் தன்னால் முடிந்த அளவிற்கு ஆறுதல் மொழிகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

மகளின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அன்பு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் என்று ஆத்திரம் கொண்டார் வினோத். 'பச்சை புள்ளை மனசை நாசம் பண்ணிட்டியேடா..' என்று மனதுக்குள் கறுவினார்.

"அவனோடு நான் வேணா பேசி பாரக்கட்டுமா.?" என்று தீபக் குழப்பத்தோடே கேட்டான்.

அபிநயா வேண்டாமென்று தலையசைத்தாள். "அவனை இனியும் லவ் பண்ணா என்னை போல முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க.. ஆரம்பத்திலயே அவனை பத்தி தெரிஞ்சிக்கிட்டது நல்லது.. இனி அவன் நிழலை கூட மிதிக்க மாட்டேன் நான்.. இது சத்தியம்.. அப்பா அம்மாவுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அவனை லவ் பண்ணதுக்கு சரியான தண்டனை கிடைச்சிடுச்சி எனக்கு.. இனியும் அந்த தப்பை உயிருள்ள வரை செய்ய மாட்டேன்.." என்றாள் அழுகையின் இடையே.

தீபக்கிற்கு அன்புவின் மீது உண்மையிலேயே கோபம் வந்தது. வினோத் பெருமூச்சோடு எழுந்து நின்றார். மகள் மீது வைத்திருந்த பாசத்தால் அவள் செய்த காதல் அவரின் கண்களுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் மகள் தன் மனதிலிருந்த காதலை தூக்கி எறிந்துவிட்டாள் என்ற விசயம் அளவுக்கு அதிகமான சந்தோசத்தை தந்தது. பருவத்தில் வரும் காதலின் மீது அவருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் தன் மகள் மீது வைத்திருந்த குருட்டு தனமான பாசத்தின் காரணமாய் அவள் அன்புவை திருமணம் செய்து வந்திருந்தாலும் கொஞ்சமாக திட்டிவிட்டு ஏற்றுக் கொண்டிருந்திருப்பார் இந்த அப்பா. ஆனால் இப்போது அபிநயா அவனை வெறுத்ததோ நிம்மதியையே தந்துவிட்டது.

மகளை சமாதானம் செய்யும் வழியை யோசித்தவர் கடைக்கு சென்று ரசகுலா வாங்கி வந்தார்.

"அபி.." என்றார் கீழிருந்தபடியே.

அம்மாவின் கத்தலுக்கு கூட வராதவள் அப்பாவின் அழைப்பில் ஓடோடி வந்தாள். அப்பா அவளின் அருகே வந்தார். அவளின் கலைந்த கூந்தலை முகத்தை விட்டு ஒதுக்கி விட்டவர் "தலைவலியால முகமெல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சி.. போய் முகத்தை சுத்தம் பண்ணிட்டு வா.." என்றார்.

அபிநயா குளியலறைக்கு சென்றாள். முகத்தை சோப்பு போட்டு கழுவினாள். கண்களில் சோப்பின் நுரை பட்டு கண்கள் எரிந்தது.

முகத்தை டவலால் துடைத்தபடி வந்தவளின் கண்களை கண்ட வினோத் "என்ன ஆச்சி.?" என்றார்.

"சோப் கண்ணுல பட்டுடுச்சிப்பா.." என்றாள் கலங்கிய விழிகளோடு.

"இன்னும் குழந்தையாவே இருக்காதம்மா.. காலம் கெட்டு கிடக்குது.. குழந்தை மனசுள்ளவங்களை சுலபமா ஏமாத்திடுவாங்க.." என்றவர் ரசகுலா பாக்ஸை மகளிடம் நீட்டினார்.

"இதை சாப்பிடு.. உனக்கு பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்.." என்றார்.

அபிநயா புன்னகைத்தாள். ரசகுலாவை பார்த்து அல்ல. தந்தையை பார்த்து.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN