சிக்கிமுக்கி 45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா திங்கள் கிழமை கல்லூரிக்கு வந்தாள். பழைய காயங்களை மறந்து புது தெம்போடு வந்தாள். அன்பு அவளை கண்டு கொள்ளவேயில்லை. அவளும் அவனை கண்டுக் கொள்ளவில்லை. நண்பர்களுக்குதான் இடையில் போராட்டமாக இருந்தது. மீனாவாலும் சுவேதாவாலும் அன்புவிடம் முகம் கொடுத்து பேச முடியவில்லை. குணா அவ்வப்போது அபிநயாவோடு பேசினான். ஆனால் அவளை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்ச்சிக்குள் மூழ்கியது போல இருந்தது.

அஞ்சனாவின் உடல்நலம் அவள் எழுந்து அமரும் அளவுக்கு முன்னேறிவிட்டது. அவளின் மாமா அவளை வியாழக்கிழமையில் தங்களோடு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். அன்பு அதுவரையிலும் தினம் மாலை வேளைகளில் சென்று அவளோடு பேசினான். அவள் பேசவில்லை. ஆனால் அவன் பேசுவதை குறைக்கவில்லை. நிறைய முறை மன்னிப்பும் கேட்டான். அவனுக்குள் இருந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட மறையவேயில்லை. நொடி நேரத்தில் அஞ்சனா இறந்திருப்பாள் என்ற ஒரு விசயமே அவனின் மூளையை குடைந்துக் கொண்டிருந்தது.

வியாழக்கிழமை மாலையில் குணாவோடு சேர்ந்து மருத்துவமனைக்கு சென்றான் அன்பு. அஞ்சனாவின் பொருட்களை எடுத்து பேக்கில் வைக்க அவளின் அம்மாவிற்கு உதவி செய்தான். "ஊருக்கு போன பிறகு மறக்காம போன் பண்ணுங்கம்மா.." என்றான்.

"கண்டிப்பா பண்றேன்ப்பா.. இத்தனை நாளா நீ செஞ்ச உதவியை என்னைக்குமே நான் மறக்கமாட்டேன்ப்பா.." என்றாள் அவள். அஞ்சனாவின் மாமாவும், தாத்தா பாட்டியும் அவனுக்கு தனிப்பட்ட முறையில் நன்றிகளை தெரிவித்தனர்.

"நீ எதுக்கும் கவலைப்படாத அஞ்சனா. எல்லாமே சரியா போயிடும்.. உன் நல்ல மனசுக்கு உனக்கு ஒரு கெட்டதும் நடக்காது.." என்று சொல்லி அவளை மருத்துவமனையிலிருந்து வழியனுப்பி வைத்தான் அன்பு.

அவனும் குணாவும் மருத்துவமனையை விட்டு விடுதிக்கு திரும்புகையில் "அந்த பொண்ணுதான் நல்லாகிட்டா இல்ல.? இனியாவது அபிக்கிட்ட போய் சாரி கேளுடா.." என்றான் குணா.

அன்பு நடப்பதை நிறுத்திவிட்டு நண்பனை பார்த்தான். "நான் ஏன் சாரி கேட்கணும்.?" என்றான் அடுத்த அடியை எடுத்து வைத்தபடி.

"ஏனா நீ அவகிட்ட பேசிய எல்லாமே தப்புடா.."

"இல்ல.. நான் சரியாதான் பேசினேன்.. அவளோட திமிருக்கு நான் அந்த பதிலை கூட தரலன்னா எப்படி.? அவளோட மைண்ட்செட் எப்படி தெரியுமா.? அவ செஞ்சா அது காதல்.. மத்தவங்க செஞ்சா அது பருவக்கோளாரு.. தன்னை நல்லவங்களாவும் மத்தவங்களை கெட்டவங்களாவும் பார்க்கற அவளை லவ் பண்ணதே நான் பெரிய தப்புதான். அவ அப்படிதான்னு நான் முதல்லயே யோசிச்சி இருக்கணும்.. முட்டாள்தனமா லவ் பண்ணிட்டேன்.." என்ற அன்புவின் மீது கோபம் வந்தது குணாவிற்கு.

"நீதானே காதலிச்ச.? அதுல அவ தப்பு எங்கே இருக்கு.?" என்றான் மனம் பொறுக்காமல்.

"அவ காதலிச்சது தப்புன்னோ இல்ல என்னை காதலிச்சது தப்புன்னோ நான் சொல்ல வரல.. ஆனா தான் மட்டும்தான் புனிதமா காதலிக்கறதாவும் மத்தவங்க டைம் பாஸ்க்கு சுத்துவதாவும் நினைக்கறா பார்த்தியா.. அதான் தப்பு.." என்றான்.

"அவ இப்படி நினைச்சிருக்கவே மாட்டா.." என்ற நண்பனை பார்த்து சிரித்த‌ அன்பு "அஞ்சனாவை பத்தி அவ என்ன சொன்னான்னு உனக்கு தெரியாது.. சாக கிடக்கற ஒரு பொண்ணை ஜட்ஜ் பண்ண அவளுக்கு என்ன உரிமை இருக்குன்னு எனக்கு தெரியல.." என்றான்.

"அவ மேல தப்பா இல்ல உன் மேல தப்பான்னு எனக்கு சரியா சொல்ல தெரியல.. ஆனா இதுக்காக நீங்க இரண்டு பேருமே பீல் பண்ணுவிங்க. இதை மட்டும் உறுதியா சொல்றேன் நான்.." என்ற குணா விடுதிக்கு வந்ததும் தனது பாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அன்பு தன் வழக்கமான ஜன்னலோர மேஜையின் மீதுதான் அமர்ந்தான். ஜன்னல் கூட திறந்துதான் இருந்தது. ஆனால் எதிரே இருந்த கட்டிடத்தை பார்க்கவில்லை அவன்.

அபிநயாவும் கடந்த சில நாட்களாக அந்த ஜன்னலை திறக்கவேயில்லை.

மறுநாள் வீட்டிற்கு செல்ல பேருந்து ஏறினான் அன்பு. அபிநயா விடுதியிலேயே தங்கிவிட்டாள். அவளும் மீனாவும் சேர்ந்து வர போகும் தேர்வுக்காக லீவு நாட்களில் கவனமெடுத்து படிக்க திட்டமிட்டிருந்தனர்.

சந்தனக்கொடிக்காலில் பேருந்து நின்றதும் இறங்கிய குணா "நாளைக்கு கிரிக்கெட் கிரவுண்ட்ல பார்க்கலான்டா.." என கையசைத்துவிட்டு தன் வீடு இருந்த பாதையில் இறங்கி நடந்தான்..

அன்பு தங்களது தெரு இருந்த திசையை நோக்கி நடந்தான். அவன் பேருந்து நிலைய கடைகளை கடந்து நடந்தபோது அவனின் மீது வந்து மோதினான் தீபக். அன்பு அவனை பார்த்துவிட்டு விலகி நடக்க முயன்றான். ஆனால் அவனின் வழியிலேயே மீண்டும் குறுக்கிட்ட தீபக் அன்புவின் அடி வயிற்றில் ஒரு குத்து விட்டான். அன்பு வயிற்றை பிடித்தபடி அவனை குழப்பத்தோடு பார்த்தான்.

"எங்க அபியை அழ வைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு.?" என கேட்ட தீபக் மீண்டும் அவனை நோக்கி கையை நீட்டினான். சட்டென்று விலகி நின்ற அன்பு "சின்ன பையனாச்சே அடிக்க கூடாதேன்னு பார்க்கறேன்.. அமைதியா போயிடு.." என்றான் எரிச்சலோடு.

"சின்ன பையனா இருந்தா என்ன.? நேரா என்னோடு மோது.." என்ற தீபக் "உன்னை நான் எவ்வளவு நம்பினேன் தெரியுமா.? அபியை அழ வைக்காம பார்த்துப்பன்னு நினைச்சேன்... ஆனா நீ லவ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாளுலயே அவ மனசை உடைச்சிட்ட.." என்றவன் அன்பு அசந்திருந்த நேரத்தில் மீண்டும் ஒரு குத்து விட்டான். அன்பு அவனை அறைய தன் கையை ஓங்கினான். விலகிக்கொண்ட தீபக் "அபியை இதுக்கு மேல டிஸ்டர்ப் பண்ணா உன்னை சும்மாவே விட மாட்டேன் நான்.." என்று விட்டு அன்பு தன்னை எட்டி பிடிக்கும் முன் அங்கிருந்து கிளம்பி விட்டான். அன்புவால் தீபக்கை போல வேகமாக நடக்க முடியவில்லை. சின்ன பையன் என அவன் நினைத்திருந்த தீபக் கை விரல் முட்டிகளிலேயே குத்து விட்டதில் அவனுக்கு அடி வயிற்றில் வலியே உண்டாகி விட்டது.

"கொரங்கு பையலே.. மறுபடியும் கையில சிக்கு.. உன் காதை கடிச்சி நாய்க்கு போடுறேன்.." என்று முனகிக் கொண்டே தன் வீடு இருந்த திசையை நோக்கி நடந்தான் அன்பு.

அவன் அடுத்த வளைவை தாண்டியபோது அவனெதிரே வந்து நின்றார் வினோத். 'இவரும் அடிக்க வந்திருக்காரா.?' என்று சந்தேகப்பட்ட அன்புவிற்கு அவரை நோக்கி கை உயர்த்த தோணவில்லை.

"பொம்பள புள்ளையை படிக்க காலேஜ்க்கு அனுப்பினா படிக்க விடுங்க தம்பி.. ஏன் காதல் கன்றாவின்னு சின்ன புள்ளை மனசை கெடுக்குறிங்க.. டைம் பாஸ்க்கு லவ் பண்றது.. உடனே பிரேக் அப் பண்றது.. இதெல்லாம் எதுக்கு.? இதுக்கு மேலயாவது எந்த வேலைக்காக காலேஜ் போனிங்களோ அதை மட்டும் பாருங்க.. என் பொண்ணை தேவையில்லாம இன்னொரு முறை சீண்டுனிங்கன்னு ஏதாவது செய்தி என் காதுக்கு வந்தா மாறு கை மாறு கால் வாங்கிருவேன் பார்த்துக்கங்க..." என்று புன்சிரிப்போடே சொல்லியவர் அவனை முறைத்துவிட்டு கடந்து செல்ல முயன்றார்.

"உங்க பொண்ணு குழந்தை இல்லையே.. அவளும்தானே என்னை லவ் பண்ணா.. அவளையும் மறக்காம மாறு கை மாறு கால் வாங்குங்க.." என்றவனின் சட்டையை சட்டென பிடித்தார் வினோத்.

"உன் பொறுக்கித்தனத்தை பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும்டா.." என்றவரின் கையை பற்றினான் அன்பு. அவரின் கையை தன் சட்டையை விட்டு விலக்கும் அளவிற்கு அவனுக்கு பலமில்லை என்பதை தாமதமாகதான் புரிந்துக் கொண்டான் அன்பு. ஆனாலும் பற்றி விட்ட கையிலிருந்து கையை விலக்கிக் கொள்ள தன்மானம் இடம் தராததால் அவரின் கையை அப்படியே பிடித்துக் கொண்டிருந்தான். அவரின் முறைத்த கண்களை எதிர்க்கொண்டு பார்த்தவன் "நான் பொறுக்கின்னா என்னை லவ் பண்ண உங்க பொண்ணு பொறுக்கி இல்லையா.?" என்றான்.

வினோத் பற்களை கடித்தார். "என் பொண்ணை பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் கிடையாது.. அவ சுத்த தங்கம்.. நீ என்னவெல்லாம் பேசி ஏமாத்தினன்னு தெரியல.. ஆனா உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்ணது தப்புன்னு அவ இப்ப நல்லா புரிஞ்சிகிட்டா.. ஆனா இனியும் உன் பொறுக்கித்தனத்தை அவக்கிட்ட காட்டலாம்ன்னு நினைக்காத.. உன்னை பார்த்தே உடனே வகுந்துடணும்ன்னுதான் இருந்தேன்.. கடைசி தடவையா வார்னிங் தரேன்.. என் பொண்ணு பக்கத்துல கூட நெருங்க ட்ரை பண்ணாத.." என்று மிரட்டலாக சொன்னவர் அவனின் சட்டையை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.

அன்பு வியர்த்த நெற்றியை துடைத்துக் கொண்டான். வினோத்தின் கோப விழிகள் உண்மையிலேயே அவனை பயமுறுத்தி விட்டன. 'சரியான பஜாரிங்க குடும்பம்..' என நினைத்தவன் வினோத் சென்ற திசையை திரும்பி பார்த்தான். அவர் அவனின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்.

"தன் பொண்ணு யோக்கியமாம். நான் கெட்டவனாம்.. அதானே.. பொண்ணு புத்திதானே அப்பனுக்கும் இருக்கும்.. லவ் பண்ணதுக்கே சட்டையை பிடிக்கிறார்.. பைத்தியகார பேமிலி.. பிரேக்அப் பண்ணதை மொத்த குடும்பத்துக்கிட்டயும் சொல்லி சீன் போட்டிருக்கா போலிருக்கு அந்த நியாயவதி..' என எரிச்சலோடு எண்ணியவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை நெருங்கியதும் 'இன்னும் அவங்க அம்மாதான் பாக்கி.. அவங்களும் வந்தா சரியா போயிடும்..' என நினைத்தபடியே தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அஞ்சனாவின் உடல்நலம் பற்றி அவனது பெற்றோர் விசாரித்தார்கள். தகவலை சொன்னவன் இரவு உணவை உண்டுவிட்டு தனது அறை நோக்கி கிளம்புகையில் "நீயும் அபியும் லவ் பண்றிங்களா.?" என்றார் ஆறுமுகம்.

உண்ட உணவு சட்டென ஜீரணமாகி விட்டதை போலிருந்தது அன்புவிற்கு. "உங்களுக்கு யார் சொன்னது.?" என கேட்டவனுக்கு பக்கத்து வீட்டார் தன் வீட்டாரோடு சண்டை போட்டிருப்பார்களோ என்று புது சந்தேகம் வந்தது.

"உன் காலேஜ்ல இருந்த பசங்க பேசிக்கிட்டாங்க.." என்று அம்மா குறுக்கே புகுந்து சொன்ன பின்தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. எங்கே தன் சட்டையை பிடித்தது போல தந்தையையும் தாயையும் வினோத் நடுரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டிருப்பாரோ என்று எண்ணி பயந்து விட்டாருந்தான் அவன்.

"அவளை எந்த நாய் லவ் பண்ணும்.? பசங்க யாராவது விளையாட்டுக்கு சொல்லிட்டு இருந்திருப்பாங்க.. அதை நீங்களும் நிஜம்ன்னு நம்பி கேட்கறிங்க.." என்றவன் மாடியை நோக்கி நடந்தான்.

"அப்ப நீ உண்மையிலேயே அபியை லவ் பண்ணலையா.?" என கேட்ட அர்ச்சனாவின் குரலில் மறைக்க இயலாம ஏமாற்றம் இருந்தது. இது அன்புவிற்கே புது ஆச்சரியத்தை தந்தது.

"அவளை நான் லவ் பண்ணல.. எவனாவது லவ் பண்ணான்னா அவனுக்கு சுத்தமா மூளையே இல்லன்னு அர்த்தம்.. அந்த பஜாரியை லவ் பண்றதுக்கு பதிலா நான் நேரா போய் டிரெயின் முன்னாடியே பாஞ்சிடுவேன்.." வெறுப்போடு சொல்லிவிட்டு சென்றனை குழப்பமாக பார்த்தவனர் அர்ச்சனாவும் ஆறுமுகமும். நான் பக்கத்து வீட்டு பெண்ணை காதலிக்கிறேன்.. என்னையும் அவளையும் சேர்த்து வைங்க என்று மகன் தங்களின் காலில் விழுந்து கதற போகிறான் என எண்ணி காத்திருந்த பெற்றோருக்கு அவனின் வெறுப்பு அதிர்ச்சியை தந்து விட்டது.

இரவு உறங்கும்போது தன் வயிற்றை தேய்த்தபடியே உறங்கினான் அன்பு. வினோத்தைதான் எதிர்க்க முடியவில்லை. தீபக்கையாவது ஒரு மிதி மிதித்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் அன்புவை பார்க்கும் இடங்களிலெல்லாம் முறைத்தார் வினோத். அவரின் பார்வையில் படாமல் இருக்க ஆசைக்கொண்டான் அன்பு. தீபக்கும் பார்த்த நேரத்திலெல்லாம் வெறித்து பார்த்து விட்டான் சென்றான். மறுபடியும் அவன் அடிக்க வந்தால் அவனின் கையை உடைத்து வைக்கலாம் என காத்திருந்த அன்புவிடம் தீபக் மீண்டும் நெருங்கவில்லை.

வார விடுமுறை முடிந்து கல்லூருக்கு போன அன்புவிற்கு அபிநயாவை பார்க்கும் போதெல்லாம் அஞ்சனா உயிருக்கு போராடிய நிலையோடு சேர்த்து வினோத் மிரட்டியதும், தீபக் அடித்ததும் நினைவிற்கு வந்தன. "இந்த பஜாரியோடு பிரேக்அப் பண்ணதே நல்லதுதான்.." என்று அவளின் காது படவே முனகினான். அபிநயா அவனை கொலை வெறியோடு முறைத்தாள். அவனை பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. எதேச்சையாக அவனை பார்த்தால் கூட அவனை பார்த்த தன் கண்களையே வெறுத்தாள்.

அவர்களின் முறைப்போடே கல்லூரியின் தேர்வும் நடந்து முடிந்தது.

அடிக்கடி போன் செய்வதாக சொல்லி மீனாவிடமிருந்து விடைபெற்று தந்தையின் பைக்கில் ஏறினாள் அபிநயா.

கல்லூரியின் கோடை விடுமுறையை அவளால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. தன் அறையின் ஜன்னலை திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்புவின் முகத்தையோ முதுகையோ பார்த்தாள். அதனால் அந்த ஜன்னலை திறக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை. தீபக் தனது ஸ்பெசல் கிளாஸை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். அதனால் அபிநயா நேரத்தை போக்கும் வழி தெரியாமல் தந்தையின் கடைக்கு சென்று கேஷ் கவுண்டரில் அமர்ந்து எதிரே இருந்த கடைதெருவை நோட்டம் விட்டபடி நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.

அன்பு வேலை வெட்டி இல்லையென்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கற்றுக்கொள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்தான்.

அபிநயா மீனாவிடமும் சுவேதாவிடமும் கான்பரன்ஸில் தினம் பேசினாள்.

அன்பு அவ்வப்போது அஞ்சனாவின் தாயாருக்கு போன் செய்து அஞ்சனாவின் நலனை விசாரித்தான். சில வாரங்களுக்கு பிறகு அஞ்சனாவே அவனோடு பேச ஆரம்பித்தாள். அதிகம் பேசமாட்டாள். அவன் சொல்லும் வார்த்தைகளை கேட்டு "ம்.." என்ற ஒற்றை எழுத்தை மட்டும் பதிலாய் உரைப்பாள்.

அன்பு தன்னம்பிக்கை பற்றி பேசும் புத்தகங்கள் வாங்கி அஞ்சனாவின் மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவளுக்குள் ஒரு சதவீத மாற்றத்தையாவது அந்த புத்தகங்கள் கொண்டு வருமா என்று காத்திருந்தான். ஆனால் அவன் மறுபடி போன் செய்யும்போதும் அஞ்சனா ம்மை தவிர வேறு பேசவில்லை. அன்புவை பிடித்த குற்ற உணர்ச்சியும் அவனை விட்டு போகவில்லை.

அபிநயாவும் அவனும் சந்திக்கும் சூழல் வரும் போதெல்லாம் கீரியும் பாம்புமாக முறைத்துக் கொண்டனர் இருவரும்.

கல்லூரி திறக்கும் நாளும் வந்தது. அபிநயாவும் அன்புவும் இரண்டாமாண்டு மாணவர்களாக கல்லூரியில் காலடி எடுத்து வைத்தனர். அன்பு இன்னும் கொஞ்சம் உயரமாகி விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். அபிநயாவின் உடையில் மாற்றம் ஏற்பட்டதாக அவளின் தோழிகள் சொன்னார்கள். ஆனால் அன்பு அபிநயாவின் சண்டை இன்னும் தீரவேயில்லை என்றும் புரிந்துக் கொண்டார்கள்.

வகுப்பில் வந்து இருக்கையில் அமருகையில் ஒரே மேஜை வரிசையில் இந்த கடைசியில் அமர்ந்தாள் அபிநயா. அதற்கு நேராக இருந்த மேஜையின் அந்த கடைசி ஓரத்தில் அமர்ந்தான் அன்பு.

இரண்டாமாண்டு வந்த பிறகு குணாவை அதிகம் மிரட்டினாள் மீனா. அவனும் அவளின் சொல்லை கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.

சுவேதா சஞ்சய்யோடு பேசும் போதெல்லாம் அவளின் குரலில் அதிக கொஞ்சல் நிரம்பி வழிந்தது.

நண்பர்கள் கூட்டத்தில் அபிநயா இருந்தால் அங்கே அன்பு இருக்க மாட்டான். அன்பு இருந்தால் அபிநயா இருக்க மாட்டாள். அது நண்பர்களுக்குதான் கஷ்டத்தை தந்தது.

கல்லூரி பாடத்தை விரும்பி படித்தாள் அபிநயா. அன்பு ரசித்து படித்தான். அபிநயாவின் படிக்கும் திறனும் மனப்பாட திறனும் போன வருடத்தை விட இப்போது அதிகரித்திருந்தது. பாடம் சொல்லி தர வந்த பேராசியர்கள் அனைவரையும் விரும்பினார்கள் அன்புவும் அபிநயாவும்.

ஒருநாள் விகேஷின் நண்பர்கள் தாங்கள்தான் அஞ்சனா பற்றிய சேதியை கல்லூரி முழுக்க சொன்னதாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டு அவர்களை அடித்து உதைத்து அன்புவிடம் இழுத்துச் சென்றான் சஞ்சய். "இவங்கதான் அஞ்சனா பத்தி சொல்லி இருக்காங்க.." என்று சஞ்சய் சொன்னதும் அவர்களை அடிக்க சென்றான் குணா. "அது எனக்கு அப்பவே தெரியும்.." என்றான் அன்பு. குணா அடிக்க ஓங்கிய கையை இறக்கி விட்டுவிட்டு நண்பனை அதிர்ச்சியோடு பார்த்தான். விகேஷின் நண்பர்களை சஞ்சய் இழுத்து வந்ததை கண்டு அபிநயாவும் அவளின் தோழிகளும் அங்கே ஓடி வந்தனர்.

"எனக்கு அப்பவே தெரியும்.. ஏன்டா அஞ்சனா நியூஸை காலேஜ்ல பரப்புனிங்கன்னு கேட்டு நல்லா நாலு மிதி தந்தேன் நான் கூட.." என்ற அன்புவை கோபத்தோடு முறைத்த குணா "அப்புறம் ஏன்டா அபிநயாகிட்ட நீ இன்னும் சாரி கேட்கல.." என்றான்.

"விசயத்தை மட்டும்தான் அவ சொல்லல.. ஆனா அவ மனசுல அஞ்சனாவை பத்தி கேவலமான எண்ணம் இருக்குதானே..? அது எந்த விதத்துல நியாயம்.? அவளை போல கேவலமான எண்ணம் கொண்டவளை லைப்ல சந்திச்சதே பாவம்.." என்றவன் தன்னை முறைத்தபடியே தோழிகளோடு சேர்ந்து நாலடி தள்ளி நின்றுக் கொண்டிருந்த அபிநயாவை வெறுப்போடு வெறித்தான்.

"அவன் ரொம்ப ஓவரா பண்ணிட்டான்.." என்று தோழிக்கு ஆறுதல் சொன்னார்கள் மீனாவும் சுவேதாவும்.

"நான் என் வாழ்க்கையில் செஞ்ச ஒரே உருப்படியான காரியம் இவனை பிரேக்அப் செஞ்சதுதான்.. அஞ்சனாவை பத்தி தப்பா நினைச்சா நான் தப்பான கேரக்டர்.. ஆனா லவ் பண்ற பொண்ணு மேல நம்பிக்கை இல்லாம நீதான் அவளை பத்தி தகவலை காலேஜ்ல பரப்பி விட்டன்னு குற்றம் சொன்ன இவன் யோக்கியமான கேரக்டரா.? நம்பிக்கை இல்லாத ஒரு இடத்துல காதலியா இருந்ததை நினைச்சி வருத்தப்படுறேன்.." என்றவளை எரிச்சலோடு பார்த்தான் அன்பு.

அபிநயாவின் மீது காட்ட முடியாத கோபத்தை விகேஷின் நண்பர்கள் மீது காட்டினான் அன்பு. அவர்களை ஆளுக்கொரு உதை உதைத்துவிட்டு விலகி வந்தவன் அபிநயாவின் முன்னால் வந்து நின்றான். "யோக்கியத்தை பத்தியெல்லாம் நீ பேசாத.." என்றான் கடுப்போடு.

"கண்டிப்பா நீதான் பேசணும்.. சின்ன பிரச்சனைகள் வந்தாலும் யார் மேலயாவது பழியை தூக்கி போடும் குணமுள்ள நீதான் யோக்கியதையை பத்தி பேசணும்.." என்றவள் அவனை கடித்து வைப்பதை போல பார்த்தாள்.

"அவனோடு என்ன பேச்சு.? வா அபி நாம போகலாம்.." என்று அவளின் கை பிடித்து தூர இழுத்து வந்தாள் சுவேதா.

அபிநயா அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் நண்பனை தன் பக்கம் திருப்பினான் குணா.

"நீ சேடிஸ்ட் தெரியுமா.?" என்றான்.

"அவளை விட அதிகமா இல்ல.." என்றவன் நண்பனின் கையை விலக்கி விட்டு அங்கிருந்து சென்றான்.

குணா அன்றைய நாள் முழுக்க அன்புவோடு சரியாக பேசவேயில்லை.

விடுதிக்கு வந்தபிறகு "அவளுக்காக நண்பனோடு சண்டை போடுற.? என்னை விட அவ முக்கியமா போயிட்டாளா.?" என்றான் குணாவிடம்.

குணை அவனை முறைத்தான். "உனக்குதான் அபிநயாவை விட அந்த அஞ்சனா முக்கியமா போயிட்டா.. லவ்வுங்றது என்ன தெரியுமா.? எதிர் காலத்தை நம்பி மனசுல உண்டாகும் ஆசை.. வழிபோக்கரை போல வந்துட்டு போன அஞ்சனாவுக்காக நீ உன் எதிர்காலத்தையே தொலைச்சிட்ட.. ஆனா அந்த தவறு கூட உனக்கு இன்னும் புரியலன்னு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு.." என்றவனிடம் அன்பு பதில் எதுவும் பேசவில்லை. குணாவும் அதன்பிறகு அதை பற்றி அவனிடம் பேசவில்லை.

மறுநாள் அன்பு கல்லூரிக்கு வந்தபோது அபிநயா கல்லூரி காம்பவுண்ட் சுவரின் மேல் அமர்ந்திருந்தாள். முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் அவளின் முன்னால் நின்று திருக்குறளை ஒப்புவித்துக் கொண்டிருந்தான். 'இரண்டாம் ஆண்டு வந்தவுடனே கொம்பு முளைச்சிடுச்சின்னு நினைப்பு..' என்று அவளை மனதுக்குள் கருவினான் அன்பு.

கணுக்காலை விட்டு ஒரு இஞ்ச் மேலே இருந்தது அவள் அணிந்திருந்த ஜீன்ஸ். இரண்டு காலிலும் முட்டியின் கீழே நைந்த போய் கிழிந்தது போன்ற ஸ்டைலில் இருந்தது அந்த ஜீன்ஸ். முட்டியை விட்டு ஒரு இஞ்ச் மேலேயே முடிந்திருந்தது அவளின் டாப். துப்பட்டா போடவில்லை. முடியை அப்படியே பறக்க விட்டிருந்தாள். ஏன் இந்த கல்லூரிக்கு ஹேர்ஸ்டைல் கோட் இல்லையென்று கோபத்தோடு நினைத்தான் அன்பு. அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு ரத்தம் கொதிப்பது போலவே இருந்தது.

அன்புவை கவனித்த அபிநயா "நீ போடா தம்பி.." என்று முதலாம் ஆண்டு மாணவனை அங்கிருந்து அனுப்பினாள். காம்பவுண்ட் சுவற்றின் மீதிருந்து கீழே குதித்தவள் கையிலிருந்த நோட்டு புத்தகத்தை சுழற்றியபடி வகுப்பறை நோக்கி நடந்தாள். அன்புவை மனதுக்குள் திட்டினாள். 'இந்த பன்னாடை முகத்துல விழிச்சிருக்கேன்.. இந்த நாள் எப்படி போக போகுதோ.?' என்று எரிச்சலோடு நினைத்தாள்.

வகுப்பில் அன்று கணக்கு ஒன்றை நிறைவு செய்ய சொல்லி அபிநயாவிடம் சொன்னார் பேராசிரியர். அபிநயாவிற்கு கணக்கின் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

"எனக்கு தெரியல சார்.. இன்னொரு முறை சொல்லி கொடுங்க.." என்றவள் மீண்டும் தனது இருக்கையிலேயே அமர்ந்துக் கொண்டாள்.

"முட்டாள்களையெல்லாம் காலேஜ்ல சேர்த்தினால் இப்படிதான் பதில் வரும்.." என்றி அன்பு முனகியது அபிநயாவிற்கே கேட்டது.

"நீ கொஞ்சம் நிறுத்து.. உனக்கும் அவளுக்கும் ஒத்து போகலன்னா அத்தோடு விடு.. இன்னும் சின்ன பையனை போல சில்ற தனமா சண்டை போட்டுட்டு இருக்காதே.." என்று எரிந்து விழுந்தான் அவனின் அருகில் அமர்ந்திருந்த குணா.

அன்பு குணாவையோ அபிநயாவையோ பார்க்கவில்லை. நோட்டில் உருண்டுக் கொண்டிருந்த பேனாவையே கவனித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் இருந்த பேராசியர் மற்ற மாணவர்களை பார்த்தார். "இந்த சம் யாருக்கெல்லாம் புரியல.?" என்றார் அபிநயா முதல் ஆளாய் கையை தூக்கினாள். வகுப்பிலிருந்த மற்ற மாணவர்களும் தயக்கமாய் ஒவ்வொருவராக கையை உயர்த்தினார்கள். அன்புவையும் இன்னும் மூவரையும் தவிர அனைவருமே கையை உயர்த்தி இருந்தார்கள். குணாவும் சேர்ந்துதான் கையை தூக்கி இருந்தான்.

"சாரி.. நான்தான் பாடம் நடத்திட்டு இருந்த அவசரத்துல உங்களுக்கு புரிஞ்சதா புரியலையான்னு பார்க்காம போயிட்டேன்.. இன்னும் இரண்டு முறை சொல்லி தரேன்.." என்றவர் போர்ட்டில் கணக்கை எழுத எழுத ஆரம்பித்தார்.

அபிநயாவும் மற்றவர்களும் அவர் நடத்தியதை உன்னிப்பாக கவனித்தனர்.

"உங்களுக்கு புரியலன்னா உடனே என்கிட்ட கேளுங்க.. எனக்கு உங்களோட புரிதலை விட வேற எதுவும் முக்கியம் கிடையாது.." என்றார் பேராசிரியர்.

அந்த பேராசிரியர் வகுப்பு முடிந்து போனதும் "தேங்க்ஸ் அபி.." என்று மாணவர்கள் சிலர் அவளுக்கு நன்றியை கூறினார்கள். அபிநயா அவர்களுக்கு தன் புன்னகையை பதிலாக தந்தாள்.

"உன் ஒருத்தனுக்கு புரிஞ்சதுன்னா எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு அர்த்தம் கிடையாது. உன்னோட கண்ணோட்டம் மாதிரியே மத்தவங்களும் யோசிக்க மாட்டாங்க.." என்று சொன்ன குணா நோட்டில் இருந்த கணக்கை இன்னொரு முறை சரிபார்த்துக் கொண்டான்.

அன்பு அன்று கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பியபோது அவனின் முன்னால் தயக்கமாக வந்து நின்ற மாணவி ஒருத்தி அவனிடம் கடிதம் ஒன்றை நீட்டினாள்.

"என்ன இது.?" என கேட்டபடியே அவன் அந்த கடிதத்தை பிரித்து பார்த்த நேரத்தில் அந்த பெண் அங்கிருந்து ஓடி விட்டாள். அது ஒரு காதல் கடிதம் அவனை உருகி உருகி காதலிப்பதாக வரிக்கு வரி எழுதியிருந்தாள் அவள். கடிதத்தை கசக்கி தூக்கி எறிந்தான் அன்பு. ஏனெனில் அவனால் எந்த பொண்ணையும் தன் காதலியாக எண்ணி பார்க்க முடியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN