என் நெஞ்சுநேர்பவளே -19(நிறைவுற்றது )

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ENN -19
(இறுதி அத்தியாயம் )

நேசமது வான்மழையாய்
வஞ்சமின்றி பொழிந்து
சாரலாய் தூறலாய்
பனிப்பொழிவாய்
நிகழ்ந்திடும் அவன் ஆளுமைக்குள்
அடைக்கலமாய் சரண்
புகுந்தது என் நேசம்..

வாசலுக்கும் வீதிக்கும் இடைப்பட்ட தூரத்தை நடந்தே தேய்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் அவன் வரவிற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தது.

திருமணம் முடிந்து நான்கு மாதம் ஆன நிலையில் அன்று செவ்வந்தி புதூரில் திருவிழாவிற்கென அமுதா அறிவழகன் கவி என ஆரம்பித்து ரஞ்சி குடும்பம் வரையிலும் அனைவரும் வந்தாயிற்று.

ஆனால் அந்த ஆராதனையை கட்டிக் கொண்டு அழும் ஆதி மட்டும் வந்த பாடில்லை.சற்று நேரத்தில் சாமி பல்லக்கு வீட்டிற்கு வந்துவிடும். அதற்குள் அவன் வர வேண்டுமே எனதான் இத்தனை அலைப்புறுதலும். பின்னே இவர்களின் காதலின் அச்சாரமே இந்த நிகழ்வு தானே.. மீண்டும் ஒரு முறை அவன் கைகளால் மஞ்சள் பூசிக் கொள்ள அவ்வளவு ஆசை அவளிடத்தில்.

ஆயிற்று சாமி வருவதற்கு அறிகுறியாய் கொட்டும் முழக்கங்களும் வான வெடி சத்தமும் வீட்டின் அருகினில் கேட்க ஆரம்பிக்கவும் தொங்கிப் போன முகத்துடன் உள்ளே சென்றவள் மற்றவர்களுடன் சேர்ந்து பூஜைக்கு தயாராய் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

"ரதிம்மா மாப்பிள்ளை எப்ப வாராருன்னு போன் பண்ணி கேட்டியா?"என்று கேட்ட சிவகாமியிடம்,

"ஏன் உங்க கூட்டு களவாணி மாப்பிள்ளைக்கு நீயே போன் போட்டு கேக்குறது.."என்று அவன் வராத கோவத்தில் இடக்கு மடக்காய் பதில் அளிக்க, அவள் தலையில் வந்து கொட்டினார் மீனா.

"வாயக் குறைடி.."என்று அதட்டியவர் அமுதாவைப் பார்த்து சங்கடமாக புன்னகைத்தார்.அதைக் கண்ட அமுதா,

"என்னாச்சு ரதிக்கு இன்னும் கோவம் போகலையா.."

"அதெல்லாம் சென்னைல இருந்து வந்த உடனே ஒரு மூச்சு அழுது தீர்த்து சமாதானம் ஆகிட்டா.. ஆனா வேணுக்குன்னே அப்பப்போ வம்பிழுக்குது கழுதை."என்று செல்லமாக ரதியின் முதுகில் அடித்தார்..

ஆமாம் ஆரதி சென்னையில் இருந்து ஈரோடு வந்ததும் ஆதியை கூட்டிக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்குத் தான் சென்றாள். சிவகாமியையும் முத்துச்சாமியையும் ஊரிலிருந்து வந்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

"என்னாச்சு மாப்பிள்ளை..எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கா."என்று திரு குழப்பத்துடன் கேட்க,

"ரதிக்கு நடந்ததை சொல்லிட்டேன் மாமா.."

"அச்சோ உங்க கிட்ட ரொம்ப சண்டை போட்டாளா தம்பி.."என்று மீனா பதட்டத்துடன் கேட்க.

"அதெல்லாம் இல்லத்த.. நல்லா தான் பேசுனா. இங்க வரவும் தான் இப்படி ரியாக்ட் பண்ற.. நீங்க பயப்படாதீங்க. நான் பேசி கூட்டிட்டு வரேன்."என்று அவர்களுக்கு ஆறுதலாய் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான்.

ஆனால் அவன் ரதியோ கூலாக கால் ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருந்தாள்.

"ஓய்.. அங்க எல்லோரையும் டென்ஷன் பண்ணிட்டு இங்க ஹாயா காலாட்டிடு படுத்திருக்க.."என்று கேட்டவாறு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.

"நான் கோவமா இருக்கேனாக்கும்.."என்று உர்ரென முகத்தை வைத்துக்கொள்ள,அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்,

"பார்த்தா தெரியலையே.."

"பார்த்தா தெரியாது.. பார்க்க பார்க்க தான் தெரியும்.."

"ஹாஹா.. டையலாக்கு ரொம்ப பழசுடி..ஆமா எதுக்கு இப்படி வெட்டி சீனு போட்டுட்டு உக்காந்துருக்க.."

"இல்லையே படுத்துருக்கேனே.."

"டி.. நிஜமா முடிலடி... என்ன தான் இந்த மண்டைக்குள்ள ஓடுது.."என்றவாறு அவள் தலையை பிடித்து ஆட்டினான்..

"ஷ்ஷ்... முடிய கலைக்காதீங்க.."என்று அவன் கையை தட்டி விட்டவள்."கொஞ்சம் பொறுமையா இருங்க. வெயிட் அண்ட் சீ.." என்று நம்பியார் ரேஞ்சுக்கு கையை பிசைந்தாள்..

அதன் பிறகு ஆதி பேசிய எதையும் காதில் வாங்காமல் வீட்டிலும் யாரு கூடவும் பேசாமல் முகத்தை ஒன்றரை முழத்திற்கு தூக்கி வைத்துக்கொண்டே திரிந்தாள்.. மீனா சிவகாமிக்கு போன் போட்டு புலம்பியதில் அவரும் முத்துசாமியும் அடித்து பிடித்து வந்திருந்தனர் தங்கள் மகள் வீட்டிற்கு..

அவர்கள் வந்ததும் ரதியை சமதனப் படுத்த முயல, கை காட்டி தடுத்தவள், "உங்க எல்லார் கிட்டயும் ஒன்னே ஒன்னு கேக்குறேன்..ஏன் இப்படி பண்ணுனீங்க.."என்று கோவமாய் கத்த, ஆதியே ஒரு நிமிடம் திகைத்துப் போனான்..

'என்னடா இவ நிஜமாலுமே கோவமா இருக்காளா..'என்று மனதில் ஓட அவள் கையை பிடித்தான்.

"ஆரும்மா ஏன் இவ்ளோ கோவப்படற."என்றவனை முறைத்து கையை உருவிக் கொண்டாள்.

"கேக்குறேன்ல ஏன் இப்படி பண்ணுனீங்க.."என்று மீண்டும் கத்தினாள்.

"ரதிம்மா எல்லாம் உனக்காக தான்டா பண்ணோம்.."

"எனக்கே தெரியாம எதுக்கு என் லவ்வை சேர்த்து வைக்க இவ்ளோ மெனக்கெட்டீங்க.."என்று சற்று இறங்கிய குரலில் கேட்க, சத்தியமாய் மற்றவர்களுக்கு புரியவில்லை. இவள் கோவமாக இருக்கிறாளா இல்லையா என்று.

"தங்கப்புள்ள நாங்க உனக்கு கெடுதல் ஏதும் நினைக்கலடா."

"அப்புச்சி நான் நீங்க யாரும் கெடுதல் செஞ்சீங்கன்னு சொல்லவே இல்லை.. நானு ஒருத்தர விரும்பிருக்கேன்னு தெரிஞ்சும் எந்த கோவமும் இல்லாம எங்கள சேர்த்து வைக்க இப்படி குடும்பமே சேர்ந்து பிளான் செய்யற அளவுக்கு இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களேன்னு தான் கேக்குறேன்.. உங்க யாருக்கும் நான் தப்பு பண்ணிருக்கேன், உங்க கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறச்சிருக்கேன்லாம் தோணவே இல்லையா.. அவ்ளோ பாசமா எல்லாருக்கும் என்மேல.."என்று சொல்லியவாறு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவள் விசும்பி அழ ஆரம்பித்தாள்..

அவள் பேச்சில் திகைத்து நின்றவர்கள் அவள் அழுகையில் பதறி அருகில் வந்தனர்..

"ரதிம்மா.."

"தங்கப்புள்ள.."

என்று ஆளாளுக்கு அழைத்து பேசி சமாதானம் செய்தனர்..

"எங்க பேத்தி சந்தோசம் தான் சாமி எங்களுக்கு முக்கியம்.. அதுக்கோசரம் தான் இத்தனையும் பண்ணோம்.. இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா.."என்றவாறு அவள் கண்ணீரை துடைத்து விட்டார் சிவகாமி.

"உங்க கிட்ட நான் இவரை லவ் பண்ணது சொல்லாதது என் தப்பு தானே.."என்றாள் விம்மலுடன்.

"லூசுப்புள்ள.. யாராச்சும் இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பாங்களா. அதுவும் நீ ஒன்னும் எங்கள ஏமாத்திட்டு ஊர் சுத்தலையே.. கல்யாணம் வரைக்கும் ஆதி தம்பி மேல கோவமா தானே இருந்த."

"ம்ஹும்.. எம்மேல தப்பு தான்..'

"ஆமாம் தப்பு தான்... உனக்கு பிடிக்காம கல்யாணத்துக்கு சரின்னு சொன்னது மட்டும் தான் உன் தப்பு.. இந்நேரம் ஆதி தம்பி எங்க கிட்ட பேசாமலோ இல்ல பேசின பிறகு நாங்க ஒத்துக்காம வேற ஒரு மாப்பிள்ளை பேசி முடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும் சொல்லு. எங்களுக்காக உன் வாழ்க்கைய வீண் பண்ணுவியா.."என்று மீனா அதட்டவும் ரதி பாவமாய் முழித்தாள்..

அதைக் கண்டு சிரித்தவார் அவள் தலையில் லேசாய் கொட்டி "உடனே மூஞ்சிய பாரு.. அப்பிடியெல்லாம் எதுவும் நடந்துருக்காதுடி. உன் முகத்தை பார்த்தே மனச தெரிஞ்சுக்க முடியும்.. நீ திருவிழாவுல இருந்தே சரி இல்லைனு கொஞ்சம் தெரியும். அப்போதைய நிலைமைல ஒரு அம்மாவா எனக்கு நிறைய பயம் இருந்துச்சு.. ஏன்னா உன் வயசு அப்பிடி..

உங்க அம்மாச்சியும் உன்னை கவனிச்சு இருக்காங்க.. அப்போவே ஆதி தம்பி மேல கொஞ்சம் சந்தேகம் தான். அதும் தம்பி ஊருக்கு போன நைட்டு நீ ரொம்ப வருத்தப்பட்டுருக்க. எனக்கு போன் பண்ணி பேசுனாங்க.

சரி கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக்கலாம்னு விட்டோம். நீயும் கொஞ்சம் நார்மல் ஆகவும் சரி ஏதோ அந்த வயசுல வந்த ஈர்ப்புன்னு சொல்லி விட்டுட்டோம். திரும்ப ஆதி தம்பி பேசுறப்ப தான் எல்லா விஷயமும் தெரியும்..

அந்த வயசுல நீ லவ்வை சொல்லியும் ரெண்டு பேர் நன்மைக்காகவும் விலகி இவ்ளோ நாள் காத்திருந்து முறையா எங்க கிட்ட வந்து பேசுன ஆதியை ரொம்பவே பிடிச்சிருந்தது.. ஆனால் நீ கோவமா இருக்கீனு தெரியவும் தான் ஆதி தம்பி சொல்றபடி செஞ்சோம். அப்பவும் உனக்கு உண்மைய சொல்லாம கல்யாணம் வரைக்கும் போனதுல எங்களுக்கு கஷ்டமா தான் இருந்துச்சு. தம்பி ரொம்ப வேண்டி கேட்கவும் தான் ஒத்துக்கிட்டோம்.

இப்ப உண்மை தெரிஞ்சு நீ எங்க கோவப்படுவியோன்னு தான் எங்களுக்கு பயமே.. நீ என்னடானா இப்படி அழுதுட்டு உக்காந்திருக்க.."என்று மீனா நீண்டதாய் சொல்லி முடிக்க அவரை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்..

பிறகென்ன ஒரே பாசமழை தான்.. என்னதான் ஓவராக கொஞ்சிக் கொண்டாலும் அவ்வப்போது இப்படி எதாவது அவள் குடும்பத்தினரை வம்பிழுப்பாள்..

பிறகு சாமி ஊர்வலம் வீட்டின் வாசலில் வந்து விடவும் பூஜைக்காக வந்து வாசலில் நின்றனர். தேங்காய் பழம் வைத்து பூஜை முடிந்ததும் மஞ்சள் நீர் ஊற்ற ஆரம்பிக்க ரதி நைசாக நழுவி பின்கட்டுக்கு வந்து விட்டாள்..

சுவரில் சாய்ந்து கண்மூடி பழைய நிகழ்வை மனதில் ஓட்டிக்கொண்டிருந்தவள் தன் கன்னங்களில் பட்ட மஞ்சளின் ஜில்லிப்பில் விழி திறந்தாள்..

மஞ்சள் நீர் தலையில் இருந்து சொட்டு சொட்டாய் வடிந்த நிலையில் அவளை பார்த்து மோகனப் புன்னகை சிந்தியவாறு நின்றிருந்தான் ஆதிரன்..

"எப்ப பார்த்தாலும் என்னை ஏங்க வச்சு திணறடிக்குறதே வேலையா வச்சுட்டு இருக்கீங்க.."

அவள் பின்புறம் கைகோர்த்து பிடித்தவன் "ஆமாம்!! எனக்காக எதிர்பார்க்குற உன் கண்ணு எப்பவும் என்னை கொலையா கொல்லுதுடி. அதுக்காகவே இப்படி அடிக்கடி செய்யணும் போல தோணுது.. நான் என்ன செய்யட்டும் சொல்லு.."

"எனக்கும் இது பிடிச்சு தொலையுதே."என்று முனுமுனுத்தாள்..

"இப்படியே வாய்க்குள்ளயே பேசுனா நானும் உன் வாய்க்குள்ள பேச வேண்டி வரும்."என்று புருவம் உயர்த்த,

"அச்சோ ஆள விடுங்க எல்லாரும் இருக்காங்க.."என்று அவனிடம் இருந்து விடுபட்டு ஓடினாள்..

பிறகு கார்த்தி தன் அம்மா அப்பாவுடன் வந்து ரஞ்சியை பெண் கேட்க மலரும் சம்மதித்தார்.. அங்கேயே பேசி பூ வைத்து விட்டு சென்றனர். தடவழி பார்க்க வருவதற்கு நாள் குறித்து விட்டும் சென்றனர்..

மறுநாள் காலை அனைவரும் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர்.. பிறகு பிரகாரத்தில் வந்து அமர ஆதியின் சட்டையில் புறா எச்சமிட்டு விட அதை சுத்தம் செய்ய வெளியே குழாயடிக்கு வந்தான். ஆரதியும் அவனுக்கு உதவி செய்ய பின்னாடியே வந்தாள்..

சட்டையை சுத்தம் செய்து கொண்டிருந்தவனிடத்தில் "நீங்க முதல் முறை இந்த ஊருக்கு வந்தப்ப இதே இடத்துல ஒரு வார்த்தை சொன்னீங்க நியாபகம் இருக்கா ஆதி.."என்று ரதி கேட்க இவன் விழித்தான்..

"இத்தனை வருஷம் கழிச்சு கேக்குறியே ஆரும்மா.. ஏன் அப்பிடி என்ன சொன்னேன் நான்.. எனக்கு நியாபகம் இல்லையே.."

"நல்லா யோசிங்கப்பா.. அந்த வார்த்தை தான் உங்க மேல நான் வச்ச காதலுக்கு அடித்தளம். அந்த வார்த்தைனாலே தான் நீங்க அவ்ளோ திட்டி விலகி போன பின்பும் எப்படியும் என்னை தேடி வருவீங்கன்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கைய விதைச்சிருந்தது.."என்று சொல்லவும் வெகுவாய் யோசித்தான் ஆதி..

"அப்பிடி உனக்கு ஹோப் தரது போல நான் எதுவுமே பேசலையேடா.."

"நீங்க என்னை பாக்குறதுக்கு ஜஸ்ட் கொஞ்ச நேரம் முன்னாடி தான் பேசுனீங்க.. அப்போ என்னை உங்களுக்கு தெரியாது.."என்று சொல்லவும் மூளையை கசக்கி யோசித்தவனிடத்தில் பளிச்சிட்டது..

"ஆரும்மா !! அன்னைக்கு நான் கார்த்தி கிட்ட சொன்னதை நீ கேட்டியா. அப்போ என் பக்கத்துல தான் இருந்தியா "என்று வியப்பாய் ஏறிட்டு நோக்க, அவள் இதழ் பிரியா சிரிப்புடன் ஆம் என தலையசைத்தாள்.

"எனக்கும் அடுத்தவங்க இப்படி மஞ்சள் பூசி விடறதுலாம் பிடிக்கவே இல்லைன்னு சொல்லிட்டு இருந்தேன்.. எதேச்சையா நீங்க பேசுனத கேட்கவும் ரொம்ப ஆச்சிரியம். இப்படி பட்ட பசங்க இருக்கறது அதிசயம்ன்னு தோணுச்சு.

அதே நீங்க என் கன்னத்துல மஞ்சள் பூசவும் அப்பிடி ஒரு ஷாக். அந்த நிமிஷம் நீங்க கோவில்ல சொன்னது தான் என் மைண்ட்ல ஓடுச்சு.. அப்பவே அந்த நிமிசத்தில் இருந்து தான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சேன்.."என்று சொல்லவும் இவன் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

"நான் உனக்கு மஞ்சள் பூசுனது இப்ப வரைக்கும் ஏன் அப்பிடி செஞ்சேன்னே தெரியல.. ஏனோ அந்த நிமிஷம் சட்டுனு ஒரு ஸ்பார்க் மாதிரி தான் இருந்துச்சு..பூசின பிறகு அதுக்கு ரொம்ப வருத்தப்பட்டேன்..

ஏனோ உன்மேல ஒரு ஈர்ப்பு வருதுன்னு புரிஞ்சு விலகி இருக்க ட்ரை பண்ணும் போது தான் உன்கிட்ட இன்னும் கிளோஸ் ஆனேன். உன்னோட ஒவ்வொரு அசைவும் பார்வையும் என்னை புரட்டி போடும்..

ஆனாலும் நம்ம வயசு வச்சு தான் விலகி போனேன். ஆனா நீ அன்னைக்கு நான் பேசுனத கேட்டு இவ்ளோ ஸ்ட்ரோங்கா இருப்பீனு தெரியவே இல்லடி.. நிஜமா என்ன சொல்றதுன்னே தெரில.."

"ஒரு ஐ லவ் யூ சொல்லுங்க போதும்."ஒரு நிமிடம் திகைத்து பின் அவள் குறும்பில் சிரித்தான்.

"ஹே இது கோவில்டி.."

"இந்த அம்மன் தான் ஏதோ ஒரு வகைல நம்ம சேர்த்து வச்சிருக்காங்க. சோ நீங்க சொன்னா அவங்க சந்தோசம் தான் படுவாங்க.. ம்ம் சொல்லுங்க.."என்று ரதி சொல்லவும், ஆதி சுற்றும் முற்றும் பார்க்க அந்த இடம் அரளி பூச்செடிகள் அடர்த்தியாய் இருந்ததால் சற்று மறைவாக தான் இருந்தது. யாரும் பார்க்க மாட்டார்கள் என்று எண்ணியவன் சற்று நெருங்கி அவள் கைகளை பிடித்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டவன்,

"இந்த ஒரு ஐ லவ் யூக்குள்ள அடங்கிப் போறது என் நேசமில்ல ஆரும்மா.. என்னோட ஆயுசு முழுக்க ஒவ்வொரு நிமிஷமும் என் மனசு சொல்லிட்டே இருக்கும் ஆயிரம் ஐ லவ் யூ..அந்த அளவுக்கு உன்னை நேசிக்குறேன் காதலிக்குறேன். உன்னோட சண்டை போடுவேன் கோவப்படுவேன் சீண்டுவேன் கேலி செய்வேன் அதை எல்லாத்துக்கும் மேல உன்னை காதலிப்பேன்.. ஐ லவ் யூ டி ஆரு."என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட,அவன் நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள் ரதி..

"தம்பி இது கோவில்.."என்று அங்கு வந்த ஒரு பெரியவர் சொல்ல.ஆதியை விட்டு விலகிய ரதி,

"இது வேண்டுதல் தாத்தா.. செய்யலைன்னா சாமி குத்தம் ஆகிரும்ல.."என்று சொல்லவும்,

"குறும்புக்கார புள்ளைக.."என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.அவர் சென்றதும் சற்று எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்ட ரதி,

"ஐ லவ் யூ மாமா.."என்று கட்டிக்கொண்டாள்..

ஆரதியின் காதலும் குறும்பும்
ஆதிரனின் பொறுப்பும் நேசமும்
இவர்கள் குடும்பத்தின் பாசமும்
ஈடில்லா நட்பும்
என்றும் தொடர்ந்திட
இறைவனை வேண்டிக் கொள்வோம்.


💞 சுபம் 💞
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN