சிக்கிமுக்கி 46

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவிற்கு அபிநயா மீது வெறுப்பு இருந்தது. ஆனால் அவனால் அவளை தவிர எந்த பெண்ணையும் காதல் பார்வையோ காம பார்வையோ பார்க்க முடியவில்லை. அவளை வெகுவாக சிரமப்பட்டு வெறுத்துக் கொண்டிருந்தான். அந்த காரணத்தால் இப்போது முற்றும் துறந்த ஒருவனின் மனநிலையில் இருந்தான். அல்லது இருக்க முயற்சித்தான்.

அபிநயா தன் தோழிகளை தவிர வேறு யாரையும் மனதில் நினைக்கவில்லை. முக்கியமாக அன்புவை கனவில் கூட நினைக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள். ஆனால் கனவில் மட்டுமல்ல நினைவிலும் கூட அவனோடு அவள் சேர்ந்து சுத்திய நிமிடங்கள் திரைப்படம் போல காட்சிக்கு வந்துக் கொண்டுதான் இருந்தன.

முதலாமாண்டில் படித்துக் கொண்டிருந்த ஜீவா என்ற மாணவன் அபிநயாவிற்கு அசிஸ்டென்ட் போல வந்து சேர்ந்தான். சில பாடங்களில் உள்ள சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முதலில் அன்புவிடம்தான் சென்றான். ஆனால் அன்பு நேரமில்லை என சொல்லி தவிர்த்து விட்டான். அதனால் அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக அபிநயா அன்ட் நண்பர்களிடம் வந்து சேர்ந்தான். அவன் சந்தேகம் கேட்ட பாடம் அபிநயாவிற்கு பிடித்த பாடம் என்பதால் எப்படியோ இருவரும் விரைவில் நண்பர்களாகி விட்டனர்.

கல்லூரி முடிந்து கதை பேசும் நேரங்களிலெல்லாம் அவனும் வந்து இவர்களோடு சேர்ந்துக் கொண்டான். சீனியர் மேடம் அபிநயாவை தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டவனுக்கு அவளின் கடந்த கால காதலை பற்றி தெரியாது. ஆனால் தன் சீனியர் மேடம் அபூர்வமாக சில நேரங்களில் வானத்தை ஏக்க பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பதை காண்பான். விடுதியில் தங்கி படிப்பவளுக்கு வீட்டு நினைவு வந்து விட்டது போல என எண்ணுவான்.

ஒருநாள் அவளின் பழைய பாட புத்தகத்தை தனது தேவைக்காக வாங்கி சென்றான். வீட்டில் சென்று புத்தகத்தை பிரித்தவன் அதிலிருந்து விழுந்த கடிதத்தை கையில் எடுத்தான்.

"சீனியர் எனக்கு ஏதும் லவ் லெட்டர் எழுதி இருக்காங்களா.?" என்று விஷமதனமாக நினைத்தபடி கடிதத்தை பிரித்தான்.

"என்னோட சர்க்கரை கட்டிக்கு உன்னில் பாதியான வெல்லகட்டி காதலன் எழுதும் காதல் கடிதம்.." என்ற ஆரம்பத்தை படித்தவன் "இது சீனியருக்கு வந்த லெட்டர் போல.. ஆனாலும் சர்க்கரை கட்டி வெல்லக்கட்டியெல்லாம் இவங்களே ஓவரா தெரியல.?" என கேட்டுக் கொண்டே அடுத்து இருந்ததை படிக்க ஆரம்பித்தான்.

"கடிதம் எழுத உட்கார்ந்தேன். கடிதம் எழுத வரவில்லை பெண்ணே. நினைவெல்லாம் குடியிருக்கும் உன்னை ரசித்துக் கொண்டிருக்கவே நேரம் போதாமல் தவிக்கிறேன் நான். எழுத்தை எழுத எந்தன் விரல்களுக்கும் துணிவில்லை. என் காதலை எந்த வார்த்தைகள் உன்னிடம் கொண்டு சேர்க்கும் என்றும் புரியவில்லை. சரியான சொற்களை தேடி அலைந்தவனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது பெண்ணே. கடிதம் வேண்டுமென்று முன்கூட்டியே சொல்லியிருந்தால் உன் பாத கொலுசையாவது திருடி வந்திருப்பேன். அதன் இசை கேட்டாவது எதையேனும் எழுதியிருப்பேன். ஆனாலும் உனக்குதான் என் மீது சிறிதும் கருணையில்லை. உன் விழி பார்வையை சற்று கடன் தந்திருந்திருக்க கூடாதா.? புது சூரியன் படைத்து அதன் வெளிச்சத்திலாவது நிச்சயம் கடிதம் எழுதியிருப்பேனே. உந்தன் புன்னகையை கொஞ்சமே கொஞ்சம் எனக்கும் தந்திருந்தால் போதும். இந்த காகிதம் அன்பின் ஆலாபனையை தாங்க இயலாமலேயே உடைந்து விழுந்திருக்கும். என் மனதின் பாசத்தை உருவகமாக மாற்ற முடிந்திருந்தால் இந்த பிரபஞ்சத்திலும் அதற்கு இடம் போதியிருக்காது. இந்த உண்மையை உன்னிடம் நான் உரைத்தால் அதை நம்ப உனக்கும் மனம் இருக்காது.

உன் விரல் தீண்டும் நொடிகள் கோடி கோடியாய் வேண்டும் எனக்கு. உன் நிழல் தீண்டும் யோகம் லட்சம் கோடி ஆண்டுகளுக்கும் வேண்டும். உன் செவிப்பறைகளில் என் வார்த்தைகள் மட்டுமே கொஞ்சலோடு ஊஞ்சலாட வேண்டும். உன் கன்னத்து குழிகளில் என் விரல்கள் காலமெல்லாம் நடனமாட வேண்டும்.

உன் நிழல் பிரியாத நாட்கள் வேண்டும். உன் குரல் என் செவியோடு உரையாடும் ஆயுள் வேண்டும். வாழ்க்கை முடிந்தாலும் அங்கும் நீ வேண்டும். இந்த புவியின் ஆயுள் அளவுக்கு உன்னோடு நான் வாழ வேண்டும். அப்போதும் போதாதடி.. என் மூச்சிலும் பேச்சிலும் உள்ள நீயே என் உயிரிலும் உதிரத்திலும் முழுதாய் வேண்டும்.."

"இதுக்கு மேல இதை படிச்சா என்னை மாதிரி சன்யாசிக்கு புது ஜோடியில்ல வேணும்.?" என்று சொல்லி சிரித்த ஜீவா கடிதத்தின் கடைசி வரியை பார்த்தான். அன்பு என்று எழுதியிருந்தது.

"அட அன்புவும் சீனியரும் லவ்வர்ஸா.? இவ்வளவு நாளா இது தெரியாம இருந்துட்டேனே.?" என்றவனுக்கு இருவரையும் ஜோடியாக கற்பனை செய்து பார்க்கையில் நன்றாக இருப்பதாகதான் தோன்றியது.

மறுநாள் கல்லூரி சென்றவுடனே கடிதத்தோடு அபிநயாவிடம் ஓடினான் ஜீவா. அவளின் வகுப்பறைக்குள் நுழைந்தவன் அவளை காணாமல் "சீனியர் எங்கே.?" என்று சுவேதாவிடம் விசாரித்தான்.

"அவ எதையோ மறந்து வச்சிட்டு வந்துட்டதா சொல்லி ஹாஸ்டலுக்கு திரும்பி போயிருக்கா.. எதுக்காக கேட்கற.?" என்றபடி வகுப்பறைக்குள் வந்தாள் மீனா.

கடிதம் இருந்த பாக்கெட்டை தொட்டு பார்த்தவன் "சும்மாதான்.. சிலபஸ்ல ஒரு டவுட்.." என்று விட்டு வெளியே நடந்தான்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும் கடிதத்தை கையில் எடுத்தவன் "மதியமா வந்து சீனியர்க்கிட்ட தந்துடலாம்.." என எண்ணியபடி நடந்தான். தன் இருக்கையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்த அன்பு பற்களை கடித்தபடி தலை குனிந்தான். 'அவளை எந்த நாய் பார்க்க வந்தா உனக்கென்ன.? அந்த உதவாக்கரைக்கு எந்த பைத்தியக்காரன் லெட்டர் தந்தாதான் உனக்கென்ன.?' என தன்னையே கேட்டு திட்டிக் கொண்டான்.

மதிய நேரத்தில் வகுப்பு முடிந்ததும் அபிநயாவை தேடி வந்தான் ஜீவா. அபிநயாவும் மீனாவும் அதே நேரத்தில் தங்களின் வகுப்பிலிருந்து வெளியே செல்ல நடந்துக் கொண்டிருந்தனர். வகுப்புக்குள் நுழைந்து அவர்களின் அருகே வந்தவன் அபிநயாவிடம் கடிதத்தை தந்தான். "மறந்துப்போய் புத்தகத்தோடு தந்துட்டிங்க.." என்றான் சிவந்த கன்னங்களோடு. "சாரி.. நான் அதுல இருந்ததை படிக்கணும்ன்னு படிக்கல. எதேச்சையா பார்த்தேன். சும்மா நாலு வரி மேலோட்டமா படிச்சேன்.. சாரி.." என்றான்.

அன்பு அபிநயாவின் பக்கம் பார்க்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தான். கண்கள்தான் ஒரு ஓரமாக சென்று அவனை பழி வாங்கின. அவர்கள் பேசிக் கொண்டது கேட்காவிட்டாலும் கூட ஜீவா நெளிந்து குழைந்து பேசிக் கொண்டிருக்கும் முறையே சரியில்லை என நினைத்தான். எழுந்து சென்று அவளின் சங்கை கடித்து குதற வேண்டும் போல இருந்தது. கடிதம் தந்தவனை அப்படியே இழுத்துச் சென்று பாதாள கிணற்றில் தள்ளி விட சொல்லி இரைச்சலிட்டது மனம். அரைத்த பற்களின் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வேண்டும் என நினைத்தவனுக்கு‌ அபிநயாவோடு ஜீவா பேசிக் கொண்டிருந்த நொடிகள் நரகமாய் வலியை தந்தது. அவன் அந்த வலியை ஏற்றுக் கொள்ள தயாராயில்லை. ஆனாலும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல இருந்தது.

ஜீவா மன்னிப்பு கேட்டதை பார்க்கையில் க்யூட்டாக தெரிந்தது அபிநயாவிற்கு. அவனின் கன்னத்தை கிள்ளியவள் "படிச்சா என்ன போச்சி.? இந்த உலகத்துல கவிஞர்கள் எழுதாததா இதுல இருந்திருக்க போகுது.?" என்றவளுக்கு கடிதத்தில் இருக்கும் செய்தி நினைவிற்கு வந்ததும் மனம் பாரமானது. அதில் எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்று உணர்ந்தவளுக்கு அந்த கடிதத்தை படித்து துள்ளி குதித்த கணங்கள் ரணமாய் தோன்றியது.

"அன்பு வா ஹாஸ்டலுக்கு கிளம்பலாம்.." என்றபடி எழுந்து நின்றான் குணா. வாசலை நோக்கி நடந்தவன் நான்கடி சென்றபிறகே நண்பன் தன்னோடு வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பி பார்த்தான். அன்பு இன்னும் தனது இருக்கையிலிருந்து எழாமல் உட்கார்ந்திருந்தான்.

"அன்பு.. டேய் அன்பு.." என்று கத்தியழைத்தான் குணா.

குணாவின் கத்தல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் அபிநயா. அவன் அவளைதான் முறைத்துக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதே வெறுப்பாக இருந்தது. மூக்கு சிவக்க இவளும் அவனை முறைக்க ஆரம்பித்தாள். 'பொய்யன்..' என்று மனதுக்குள் கருவினாள்.

"அன்பு.." அவனின் அருகே சென்று தோளை உலுக்கினான் குணா. அன்பு எழுந்து நின்றான். நண்பனோடு சேர்ந்து வெளியே நடந்தான். அபிநயாவை தாண்டி செல்கையில் "இந்த காலத்து பொண்ணுங்களே தனி ரகம்டா.. தினம் பத்து பேரோடு சுத்துறாளுங்க.. இதுங்களையும் லவ் பண்றாங்களே அவனுங்களை சொல்லணும்.." என்று எரிந்து விழுந்தான்.

"பார்த்து பழகிய காதலுக்கு பருவகோளாருன்னு பேர் கொடுத்த உன்னை விட இங்கே யாரும் கேடு கெட்டு போயிடல.." என்று அபிநயாவும் பதிலுக்கு திட்டினாள்.

அன்பு இவளின் அருகே வந்தான். "என்னடி வேணும்ன்னே வம்பிழுக்கிறியா.?" என்றான்.

"நீதான்டா சாடை பேசிட்டு போன புண்ணாக்கு.. நீ அவ்வளவு யோக்கியமா இருந்தா நேரா பேச வேண்டியதுதானே.?" என்றவளை மேலும் நெருங்கிய அன்பு "விட்டா நீயும் அவனும் அடிக்கற கூத்துக்கு விளம்பரம் செய்ய சொல்லுவ போல.." என்றான்.

"எருமை மாட்டுக்குன்னே ஒரு புத்தி இருக்கும். அது எப்பவும் மாறாதுங்கறதுக்கு நல்ல உதாரணம்தான் நீ.. உன்னை மாதிரி ஒருத்தன் சொன்னதையும் நம்பி ஏமாந்தேன் பாரு.. நான் நிஜமா அந்த அஞ்சனாவை விட மோசம்தான்.." என்றவள் கையிலிருந்த கடிதத்தை கசக்கி அவன் முகத்தில் வீசிவிட்டு வெளியே நடந்தாள்.

மீனா அன்புவை முறைத்துவிட்டு தோழியின் பின்னால் ஓடினாள்.

"ஏன் நீங்க சீனியரை இப்படி திட்டுறிங்க.?" என்று குழப்பமாக கேட்ட ஜீவாவின் சட்டை காலரை பிடித்த அன்பு "காலேஜ் வந்தா படிக்கற வேலையை மட்டும் பாருடா.. எவ கிடைப்பான்னு ஏன் சுத்திட்டு இருக்க‌.?" என்று கேட்டான். ஜீவா திருதிருவென விழித்தான்.

"நான்.. நான்.." அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினான்.

தரையில் கிடந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த குணா "உன் வீரத்தை சின்ன பையன்கிட்ட காட்டி சீன் போடாம வா.." என்று நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான். அன்பு ஜீவாவை முறைத்துக் கொண்டே சென்றான்.

"அவளை பிடிக்கலன்னு சொல்லி விலகிட்டா விலகியே இரு. எதுக்காக அவளோடு பேச வருபவனை முறைக்கிற.?" என்று திட்டியவன் நண்பனின் கையில் கடிதத்தை திணித்தான்.

"போடுற சண்டையாவது உருப்படியான காரணத்துக்கு போட்டா ஆகும்.." என்று கடுகடுத்துவிட்டு முன்னால் நடந்தான்‌.

கையில் இருந்த கடிதத்தை கிழித்து வீசலாம் என நினைத்தவன் எதேச்சையாக கடிதத்தை கவனித்ததும் குழம்பினான். குணா பிரித்து தந்து விட்டு சென்றிருந்த அந்த கடிதத்தில் அவனின் கையெழுத்துதான் இருந்தது. தான் அபிநயாவுக்கு எழுதிய கடிதம்தானா அது என புரிந்ததும் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.

"நான் தந்த லெட்டரையே கசக்கி எறிஞ்சிட்டு போறா.. இவளையெல்லாம் லவ் பண்ண என்னைதான் சொல்லணும்.." என்று அதற்கும் அவளையே திட்டியவனை திரும்பி பார்த்து முறைத்த குணா "பைத்தியம்ன்னா அது நீதான்டா.." என்று எரிந்து விழுந்துவிட்டு நகர்ந்தான்.

"சீனியருக்கும் அன்பு அண்ணாவுக்கும் சண்டையா மீனுக்கா.?" இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு மாலை வேளையில் அபிநயா அருகில் இல்லாத போது கேட்டான் ஜீவா.

"ஆமா.. அன்பு சரியான லூசு.. அநியாயமா அபியோட மனசுல ஆசையை வளர்த்து ஏமாத்திட்டு போயிட்டான்.." என்றவளிடம் "அப்படி என்ன ஆச்சி மீனுக்கா.?" என்று கேட்டான் அவன்.

மீனா நடந்ததை அவனிடம் விவரித்தாள்.

"அபி அஞ்சனாவை கேவலமா பேசிட்டான்னு அவனுக்கு கோபம்.. தன்னை அவன் கேவலமா பேசிட்டான்னு அபிக்கு கோபம்.. அதே கோபத்துல இன்னைக்கு வரைக்கும் சண்டை போடுறாங்க.." என்றாள் மீனா.

"சீனியரும் பாவம்.. அன்பு அண்ணாவும் பாவம்.. அவங்க சண்டையை தீர்த்து வைக்க நீங்க முயற்சி செய்யலையா.?" என கேட்டவனிடம் "பேசி பார்த்தோம். இரண்டு பேருமே கேட்கல.‌." என்றாள் மீனா.

அபிநயா அவ்வப்போது சோகமாக வானம் பார்க்க காரணம் அன்புதான் என தெரிந்துக் கொண்ட ஜீவாவிற்கு அபிநயாவை நினைத்து மனம் வருத்தப்பட்டது. இருவரையும் சேர்த்து வைக்க தன்னால் முடியுமா என்று யோசித்தான்.

"அன்பு அண்ணா மனசுல இன்னமும் சீனியர் இருக்காங்க. அதனாலதான் நான் சீனியரோடு பேசியவுடனே என்னை திட்டினாங்க. சீனியர் மனசுலயும் அன்பு அண்ணா இருக்காங்க. அதனாலதான் அன்பு அண்ணா தந்த லெட்டரை கூட இன்னமும் பத்திரமா வச்சிருக்காங்க. ஒருத்தர் மனசுல ஒருத்தர் இருந்தும் ஏன் சண்டை போடணும்.?" என்று யோசித்தவனுக்கு ஐடியா ஏதும் கிடைக்குமா என்று மூளையை கசக்கினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN