சிக்கிமுக்கி 47

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா தன் முன்னால் இருந்த கண்ணாடியை வெறித்து பார்த்தாள். நெற்றியின் ஓரத்தில் இருந்த வெட்டுக்காய தழும்பு அன்புவும் அவளும் சண்டையிட்டுக் கொண்ட நாட்களை நினைவுப்படுத்தின.

"அந்த பைத்தியக்காரனை எதுக்காக நினைக்கற அபி.? அவன் உன்னை எவ்வளவு இன்சல் பண்ணான்னு மறந்துட்டியா.? ஏன் எந்த சூடு சொரணையும் இல்லாம இருக்க.?" என்று பிம்பத்தை பார்த்து சோகமாக கேட்டாள்.

"இந்த மொத்த உலகத்தையும் சல்லடை போட்டு சலிச்சா கூட அந்த குட்டச்சியை போல மோசமானவளை பார்க்க முடியாதுடா குணா.." வழக்கம் போல காலை நேரத்திலேயே அபிநயாவை திட்டிக் கொண்டிருந்தான் அன்பு.

'இவன் ஒரு தொல்லைடா சாமி.. திட்டுறேன் திட்டுறேன்னு வருசம் முழுக்க அவளையே நினைச்சிட்டு இருக்கான்.. அவ்வளவு பாசம் இருந்தா நேர்ல போய் பேசிக்க வேண்டியதுதானே..' வழக்கம் போல மனதுக்குள் புலம்பியபடி கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தான் குணா.

அன்பு கல்லூரிக்குள் நுழைந்த கணமே அவனை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு ஓரமாக சென்றான் ஜீவா.

"என் கையை விடு.." என்று உதறினான் அன்பு.

"ஒரு நிமிசம்.. உங்ககிட்ட பேசணும் அண்ணா.." என்றவனை முறைப்போடு பார்த்தவன் "என்ன.?" என்றான்.

"அன்னைக்கு நான் சீனியர்க்கு லெட்டர் கொடுக்க வந்ததை பார்த்து நீங்க அவங்களை சாடையா திட்டினிங்க இல்லையா.?" என கேட்ட ஜீவாவை கோபத்தோடு பார்த்தவன் "நீ ஏன் தேவையில்லாததை பேசுற.?" என்றான் அன்பு.

"நீங்க மட்டும் மிஸ் அண்டர் ஸ்டேன்டிங்கா சீனியரை திட்டலாம். ஆனா சீனியர் மிஸ் அண்டர் ஸ்டேன்டிங்க்ல மத்தவங்களை திட்ட கூடாதா.?" என்றவனை தன்னிடமிருந்து தூர விலக்கி தள்ளினான் அன்பு.

"உன் மூலமா தூது விட்டிருக்காளா அவ.?" என்றான் எரிச்சலோடு. அவனை கண்டு ஜீவாவிற்கே கோபமாக வந்தது.

"நீங்க எழுதிய லெட்டரை எதேச்சையா படிச்சதால நீங்க அவங்களை உண்மையா லவ் பண்றிங்களோன்னு நினைச்சி அதுக்காகதான் உங்களை சேர்த்து வைக்க நினைச்சேன். ஆனா நீங்க நான் பேச வருவதை கூட காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறிங்க.. சீனியர் ஏன் உங்களை விட்டு பிரிஞ்சாங்கன்னு இப்பதானே தெரியுது.. உங்களை போல ஒரு சேடிஸ்டை லவ் பண்றதுக்கு பதிலா அவங்க சும்மாவே இருந்திருக்கலாம்.." என்றவன் இதை சொல்லி முடிக்கும் முன் அவனின் சட்டையை கொத்தாக பிடித்தான் அன்பு.

"அவளை விட அதிகமா பேசுற நீ.. உன்னை நான் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டேனா? என் லவ்வை எடைப்போட நீ யார்டா.? நான் அவளை எவ்வளவு லவ் பண்ணேன் தெரியுமா.? அத்தனையையும் ஒரு செகண்ட்ல அழிச்சிட்டா.." என்று அன்பு கொந்தளித்த நேரத்தில் ஜீவாவின் சட்டையில் இருந்த அவனது கையை தள்ளி விட்ட அபிநயா ஜீவாவுக்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்றாள். வகுப்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்தவள் ஜீவாவை அன்பு மிரட்டுவதை கண்டு ஓடி வந்து விட்டாள்.

"உன் ரவுடியிசத்தை இவன்கிட்ட ஏன் காட்டுற.?" என்றவளை முறைத்தான் அன்பு.

"நான் ரவுடியாடி.?" என்றான் கைகளை முறுக்கியபடி.

"ஆமான்டா ரவுடி.
ரவுடியை ரவுடின்னுதான் சொல்வாங்க.. சின்ன பையனை மிரட்டுற.. என் மேல இருக்கற கோபத்தை ஏன்டா இவன் மேல காட்டுற.?" என்றவள் ஜீவாவின் கையை பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து நடந்தாள். "நீ ஏன்டா அவன் கூடவெல்லாம் போய் சண்டை போட்டுட்டு இருக்க.?" என்றவள் தூரம் வந்த பிறகு அவனின் சட்டை காலரை சரி செய்து விட்டாள்.

என் காதலை குறைவாக மதிப்பிட்டு விட்டானே என்ற கோபத்தில் ஜீவாவின் சட்டையை பிடித்த அன்பு அபிநயா அவனை அங்கிருந்து அழைத்து சென்று விடவும் இன்னும் கோபமானான். "தூதும் விட்டுட்டு ரவுடி பட்டமும் கட்டிட்டு போறா.." என்று உள்ளுக்குள் தகித்தவன் அவள் ஜீவாவின் சட்டை காலரை சரி செய்வதை கண்டு அடங்காத ஆத்திரத்தில் பற்களை அரைத்தான்.

"சாரி சீனியர்.. நான்தான் உங்க சண்டையை தீர்த்து வைக்கலாம்ன்னு நினைச்சி அன்பு அண்ணாக்கிட்ட பேச போனேன்.." என்ற ஜீவாவை ஆச்சரியமாக பார்த்தவள் "நீ ஏன்டா அவன்கிட்டயெல்லாம் பேச போற.. அவனே ஒரு செங்கல் சைக்கோ.. திடீர்ன்னு கடிச்சி கூட வச்சிடுவான்.. இனி அவன் பக்கத்துல போகாதே.." சின்ன குழந்தையிடம் பூச்சாண்டியை பற்றி விளக்குவதை போல சொன்ன அபிநயா "நீ கிளாஸ்க்கு கிளம்பு டைம் ஆச்சி.." என்று அவனை அனுப்பி வைத்தாள்.

ஜீவா அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். நான்கு அடிகள் சென்றவன் அன்பு இருந்த இடத்தை பார்த்தான். அன்பு கண்களை மூடியபடி பற்களை கடித்துக் கொண்டு இருந்தான். "உண்மையிலேயே சைக்கோதான் போல.." என்று முனகியபடியே வகுப்புக்கு கிளம்பினான் ஜீவா.

"என்னோடு போட முடியாத சண்டையை அவனோடு போட்டிருக்கான் பைத்தியக்காரன்.." என திட்டிக் கொண்டே வகுப்பு இருந்த இரண்டாம் தளத்தை நோக்கி நடந்தாள் அபிநயா.

அபிநயா படி ஏறிய அதே நேரத்தில் அன்புவும் படியேறினான். இருவரும் இடித்துக் கொண்ட பிறகே ஒருவரையொருவர் பார்த்தனர். "இவனா.?" என்று அவளும் "இவளா.?" என்று அவனும் வெறுப்போடு முனகிய நேரத்தில் "தள்ளுங்கடா டேய்.." என்று யாரோ கத்தினார்கள். இருவரும் சத்தம் வரும் திசையை பார்த்தார்கள்.

பிரின்சிபால் அறையிலிருந்த பழைய மர பீரோ ஒன்றை மாடியிலிருந்த அறை ஒன்றில் வைக்க எடுத்துச் சென்றுக் கொண்டிருந்த இரு பணியாட்கள் மேல் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கையில் அவர்களின் கைகளில் இருந்து வழுக்கியது அந்த மர பீரோ. அதனால்தான் கீழே வந்து கொண்டிருந்தவர்களை எச்சரித்தனர். அன்புவும் அபிநயாவும் மட்டும்தான் அந்த நேரத்தில் படிகளில் ஏறிக்கொண்டு இருந்தனர். ஏறிக் கொண்டிருக்கவில்லை. முதல் படியிலேயே முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

பீரோ ஒன்று படிகளில் வேகமாக உருண்டு வருவதை கண்டு அபிநயா அதிர்ந்து நின்றாள். அது அவளை நெருங்க இருந்த நேரத்தில் அவளையும் தள்ளிக்கொண்டு படி முடிவுகளின் ஓரத்தில் இருந்த புல் தரையை நோக்கி பாய்ந்தான் அன்பு.

மேலிருந்து உருண்டு வந்த பீரோ தரையில் வந்து மோதி நின்றது. மாணவர்கள் மாடியிலிருந்தும் கீழிருந்தும் அந்த பீரோவை அதிசயமென பார்த்தனர். மேல் படியிலிருந்து இறங்கி வந்த இரண்டு பணியாட்களும் அந்த பீரோவை கையில் தூக்குகையில் நான்கைந்தாய் பிரிந்து வந்தது அது.

"உடைச்சிட்டோம் இதை.." என்று இருவரும் வருத்தப்பட்டனர். பிரின்சிபால் இதற்கு என்னவெல்லாம் திட்ட போகிறாரோ என்று எண்ணி கவலைப்பட்டனர்.

தரையில் கிடந்த அபிநயாவின் முகம் பார்த்தான் அன்பு. அவளின் மேல் இருந்தவனின் கைகள் இரண்டும் அவளின் பின்னந்தலைக்கு பாதுகாப்பென தரையில் இருந்தன. பயத்தில் கண்களை மூடியிருந்த அபிநயாவின் கரம் அன்புவின் சட்டை துணியை இறுக்க பற்றியிருந்தது.

மூச்சுக்காற்று சீரான இடைவெளியில் தன் முகத்தில் மோதியது கண்டு கண் விழித்தாள் அபிநயா. அன்புவின் முகம் நெருக்கத்தில் இருந்தது. அவனது உருவம் அவளை ஆக்கிரமித்திருந்தது. போன வருடத்தை விட இப்போது கொஞ்சம் அடர்ந்து விட்ட அவனின் மீசையை பார்த்தவள் பார்வையை மேலே ஏற்றினாள். தன் அதரங்களை பார்த்துக் கொண்டிருந்த அவனின் விழிகளை கவனித்தவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து விட்டாள்.

அவளின் நெற்றி வியர்வையை கண்டவன் அதிகம் பயந்து விட்டாளோ என்று கவலையோடு எண்ணினான். அவள் காலையில் கவனித்து கண்ணாடியில் திட்டிய அதே காய தழும்பை கண்டவன் அந்த அடி விழுகையில் அவளுக்கு‌ அதிகம் வலித்திருக்குமோ என்று கவலை கொண்டான்.

"அபி.." மீனாவின் குரலில் திகைத்துப்போன அபிநயா தன் மேல் இருந்தவனை தள்ளி விட நினைத்த நேரத்தில் அவனே எழுந்துக் கொண்டான்.

அபிநயா அவசரமாக எழுந்து நின்றான். இருவரும் கீழே விழுந்து எழுந்து பத்து நொடிகள் கூட கடந்திருக்காது. ஆனால் அதற்குள்ளாகவே நிறைய சிந்தித்து விட்டனர்.

அன்பு பீரோ இருந்த இடத்தை பார்த்தான். பணியாட்கள் இருவரும் அதை தூக்க முயன்றபோது அது நான்காய் பிரிந்து போனதையும் கண்டான்.

மீனா அபிநயாவின் தலையை வருடி விட்டாள். "தலையில எங்கேயாவது அடி பட்டுடுச்சா அபி.?" என்றவள் அவளின் பின்னந்தலையை தன் உள்ளங்கையால் அழுத்தி தேய்த்து விட்டாள்.

"அடி படல மீனு.." என்று நகர்ந்துக் கொண்ட அபிநயா தரையில் கிடந்த தன் புத்தக பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

"கிளாஸ்க்கு போகலாம் வா.." தோழியின் கை பிடித்து அழைத்துச் சென்ற மீனா "இனியாவதூ பீரோவை பார்த்து தூக்குங்க அண்ணா.." என்றாள் பணியாட்களிடம்.

"நாங்க என்ன பாப்பா செய்வோம்.? படி வழுக்கி விட்டுடுச்சி.." என்றார் அதில் ஒருவர்.

அன்பு புல் தரையின் ஓரத்தில் இருந்த தன் புத்தகத்தை கையில் எடுத்தான். எங்கிருந்தோ ஓடி வந்த குணா "உனக்கு ஒன்னும் ஆகலையே.." என்றான்.

இல்லையென தலையசைத்தவனின் கையை பற்றினான் குணா. அவனின் முழங்கை கை பகுதியில் கீறல்கள் இருந்தன. "அடிப்பட்டிருக்கு போல.. வா மருந்து போட்டுப்ப.." என்றான்.

காயத்தை பார்த்தான் அன்பு. அவளை இழுத்துக் கொண்டு வந்து விழுந்தபோது அவளின் கை விரல் நகங்கள் கீறி உண்டான காயம் அது என்பதை புரிந்துக் கொண்டான்.

"சின்ன காயம்தானே.? இதுக்கு என்ன மருந்து போடுறாங்க.. வா கிளாஸ்க்கு போகலாம்.." என்று நண்பனை அழைத்துக் கொண்டு படிகளை ஏறினான் அன்பு.

"அவ மேல இன்னமும் லவ் இருப்பதாலதானே அவளை காப்பாத்தின.?" தன் மனதின் சந்தேகத்தை கேட்டான் குணா. அதே நேரத்தில் மீனாவும் இதே கேள்வியைதான் அபிநயாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல.. திடீர்ன்னு ஒரு ஆபத்து வரும்போது எந்த மனிதரா இருந்தாலும் இப்படிதான் செய்வாங்க.‌ இது காதல் கிடையாது.." என்று மீனாவிடம் அபிநயா சொன்ன அதே பதிலைதான் அன்புவும் குணாவிடம் சொன்னான்.

வகுப்பிற்குள் நுழைந்ததுமே அன்புவின் கண்கள் அபிநயாவை தேடிதான் சென்றன. வகுப்பறை வாசலில் நிழல் ஆடியதும் அபிநயாவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அன்பு அவளின் முகத்தை பார்த்தபடியே வந்து இருக்கையில் அமர்ந்தான். கீழே விழுகையில் அவனின் சட்டையில் ஒட்டிக் கொண்ட தன் நெற்றி திருநீற்றின் அடையாளத்தை கண்ட அபிநயா சட்டென்று தலையை குனிந்துக் கொண்டாள்.

மீனா தன்னிடமிருந்த சாக்லேட்டை எடுத்து தோழிக்கு தந்தாள். "சாப்பிடு.. பயம் போயிடும்.." என்றாள். அபிநயா புன்னகையோடு சாக்லேட்டை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாள்.

ஜீவா தன் வகுப்பறையில் அமர்ந்தபடி சற்று முன் தான் கண்ட விசயத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் வகுப்பிற்குள் நுழைந்த நேரத்தில் கடகடவென சத்தம் ஒன்று கேட்டது. திரும்பி பார்த்தான். எதிரே இருந்த கட்டிடத்தின் படிகளின் கீழே இருந்த தரையில் அன்புவும் அபிநயாவும் விழுந்து கிடந்தார்கள். படியின் முடிவில் மரபீரோ ஒன்று இருப்பதையும் பார்த்தவனுக்கு விசயம் என்றவென்று புரிந்தது. உன்னை தூதாக அனுப்பினாளா என்று சற்றுமுன் கேட்டவனேதான் இப்போது அவள் அடிபடுவதை விரும்பாமல் காப்பாற்றி இருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டான்.

"அன்பு அண்ணா இன்னமும் சீனியரை லவ் பண்றாரு. ஆனா அதை வெளியே சொல்ல மாட்டேங்கிறாரு.. எப்படியாவது அவர் மனசுல இருப்பதை வெளியே கொண்டு வந்தே ஆகணுமே.." என்று சபதம் போல எண்ணினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN