முகவரி 31

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெண்பா ஊருக்குச் சென்று விட... தன் மனைவி இப்படியான ஒரு அலங்காரத்தில் தன் வீட்டிற்குள் வலம் வரும் தருணத்திற்காக மிருடன் தவம் இருந்திருப்பான் போல.... அவள் வந்ததிலிருந்து பதினாறு வயது ஆண் மகனாக தன்னவளையே சுற்றி வந்தான் அவன்.

வீட்டு வேலையாள்... சமையல்காரர்கள் முதல் தோட்டக்காரர்கள் வரை, சமையலிலிருந்து ஏன்… விடுமுறை வரை வீட்டு எஜமானியான அனுவைத் தான் அவர்கள் கேட்க வேண்டும். அப்படி கேட்க வைத்தான் மிருடன். அது மட்டுமா…

அனுதிஷிதா தான் இந்த வீட்டு எஜமானி... அவள் தான் என் மனைவி... என்பதை வாய் மொழியாகச் சொன்னதை விட... தன் செயலில் மிருடன் காட்டினான் என்றால் அது தான் உண்மை. ஊரில் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொண்டாலும்... ஒரு சில பேர் வம்பு வளர்க்கத் தான் செய்தார்கள். ஆனால் அதை எல்லாம் மிருடனின் ஆளுமையும், அதிகாரமும் அவர்களை மேற்கொண்டு வம்பு பேச விடாமல் தான் செய்தது.

எல்லாவற்றையும் விட அனு.... அந்த ஊரில் வந்த நாளாக அவள் வாழும் வாழ்வை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.... அவளின் நேர்கொண்ட பார்வையும்... நிமிர்ந்த நடையும்... அப்படிப்பட்டவளைத் தப்பாய் பேச நாக்கு வருமா... மிருடனும் ஒளித்து மறைத்து எதையும் பேசவில்லை.

“நாங்கள் இருவரும் முன்பே கணவன் மனைவி… சில பல பிரச்சனைகளால் பிரிந்திருந்தோம்... இப்போது சேர்ந்துட்டோம்... அவ்வளவு தான்” அவன் கடைசியாக சொன்ன அவ்வளவு தான் என்ற வார்த்தைக்குப் பிறகு அவனை யாராவது வேறு கேள்வி கேட்க முடியுமா என்ன... இப்படியாகத் தன் மனைவி மதிப்பு மரியாதையோடு ஊரில் நடத்த செயல் பட்டவன்...

ஒரு நாள் ஊர் தலைவர் கோவில் சீரமைப்புக்குப் பண விஷயமாய்... மிருடனிடம் பேசியிருக்க, அவருக்குப் பணம் தருவதாகச் சொல்லியிருந்தவன்... அவரை அலுவலகத்திற்கு வரச் சொல்லாமல்... தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரை தன் வீட்டிற்கு வரச் சொன்னவன்… அவர் வந்திருப்பதை அரை மணி நேரம் சென்ற பிறகே மனைவிக்கு இவன் தெரிவிக்க...

அனு, “என்ன இப்படி செய்திட்டிங்க? நான் பசங்களைப் பார்த்துக்கிட்டு ரூமிலேலே இருந்துட்டேன்... அவர் வந்திருப்பதை நீங்க முன்னமே சொன்னா என்ன?”

“நான் வேண்னுன்னே தான் சொல்லலை... அன்றைக்கு உன் தாத்தா வீட்டில் மரம் விஷயமாய்... உன் கிட்ட அந்த ஆள் வந்து எப்படி எல்லாம் பேச்சு பேசினான்.. என் பொண்டாட்டியை பேசினால் நான் சும்மா விட்டுவிடுவேனா... இன்னும் அரை மணி நேரம் கழித்தே நீ கீழே போ... ஆதி இரண்டு லட்சம் தருவான் அதைக் கொடுத்திடு...”

அனு, “மிரு.. இதெல்லாம் சரியில்லை... அவர் வயதில் பெரியவர்...” இவள் கண்டிக்க

“நான் செய்வது எதைத் தான் டி நீ சரின்னு சொல்லியிருக்க? பெரிய மனுஷனா… அந்த ஆளா... அந்த ஆளுக்கு பணத்தைக் கொடுத்தா ஈஈன்னு பல்லைக் காட்டுவான். பெருசா பேச வந்துட்டா… நான் சொன்னதைச் செய் டி....”

“நீங்களும் தான் அன்னைக்கு என்ன என்னமோ பேசினீங்க...”

“நான் உன் புருஷன்... நீ என்னை பேசலாம்... நான் உன்னை பேசலாம்.. அந்த ஆள் எப்படி டி பேசலாம்... சரி போனை வச்சிட்டு கிளம்பு...” அவன் வைத்து விட

‘மனுஷன் ஏதோ நல்ல மூடில் இருக்கார் போல… அதான் இதோட என்னை விட்டுட்டார்...’ என்ற நீண்டமூச்சுடன் அனு கீழே வர…

இவளைக் கண்டதும் தலைவர் எழுந்து நின்று, “வணக்கம் ம்மா... எப்படி இருக்கீங்க... வாமணன் தம்பி கோவில் பண விஷயமா வரச் சொன்னாங்க...” அவர் பவ்வியமாய் சொல்ல

அனு, “உட்காருங்க அங்கிள்... ஏதாவது குடிக்கக் கொடுத்தாங்களா... கோவில் விஷயமா அவர் என் கிட்டவும் பேசினார்... இப்போதைக்கு இரண்டு லட்சம் கொடுக்கச் சொல்லியிருக்கார்... மீதியைக் கோவில் வேலைகள் பொருத்து அவர் தருவார் அங்கிள். இதை வாங்கிக்கோங்க...” அதாவது கணவன் சொல்லாததையும் சேர்த்துச் சொன்னவள், ஆதியிடமிருந்து பணத்தை வாங்கி இவள் தர

“பெரிய மனுஷங்கனா பெரிய மனுஷங்க தான்... உன் அப்பா மாதிரியே... உன் வீட்டுக்காரரும்... கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள் தான்....” என்று வந்தவர் வாய் எல்லாம் பல்லாய் புகழ

அனுவுக்கோ மனதிற்குள் ஐயோ என்று ஆனது. ‘என் அப்பா பேச்சை எடுத்தாலே அந்த மனுஷன் ஆடுவார். இதிலே…. அவரை மாதிரினு சொல்லி காலில் இவரே சலங்கையைக் கட்டி விட்டுடுவார் போல! இதை அவர் எதிரில் சொல்லியிருந்தா உள்ளதையும் பிடிங்கிட்டு இல்ல மிரு இவரைத் துரத்தியிருப்பார்!’ என்று நினைத்தது அவளின் மனது. அந்த அளவுக்கு கணவனைப் புரிந்து வைத்திருந்தாள் அவள்.

அதென்னமோ மிருடன் சொன்னது உண்மை தான். மனிதர்களுக்கு இருக்கும் மதிப்பை விட... பணத்திற்கு தான் இப்போதெல்லாம் மதிப்பு. பணத்தைப் பார்த்ததும் அன்று பேசிய இதே வாய்... இன்று எப்படி எல்லாம் பேசிவிட்டுப் போகுது!

இப்போதெல்லாம் மிருடன் தன் மனைவி இவள் என்பதில் ஒரு படி மேலே போய் அவனுக்கான உரிமையையும் தானே எடுத்துக் கொண்டான் அவன். அதாவது தினசரி அவன் வாழ்வில் அனு இல்லாமல்... ஒரு விடியலே இல்லை என்ற நிலைக்கு... மனைவியைக் கொண்டு வந்தானோ இல்லையோ... தன்னைத் தானே கொண்டு வந்தான் அவன்.

காலையில் இவன் எழுந்து குளித்து வந்தால்... கையில் காபியோடு மனைவி நிற்க வேண்டும். பின் அவனுக்கு உணவு பரிமாறி... அவனுக்கு வேண்டியதைப் பார்த்து... இவள் வாசல் வரை வந்து அவனை வழி அனுப்ப வேண்டும். ஆபீஸ் போனாலும் இடையிடையில்... ‘குழந்தைங்க சாப்பிட்டாங்களா... நீ சாப்பிட்டாயா... இன்றைக்கு இந்த file வேணும், கொடுத்தனுப்பு... ரெண்டு நாள் ஊருக்குப் போறேன்... என் டிரஸ் எடுத்து வைத்திடு... இன்னைக்கு டாக்டர், பேபியை செக் செய்ய வருவார்... கூட இரு அதற்குள் நான் வந்துவிடுகிறேன்.... இன்று செக்கப்புக்கு பேபியை அழைச்சிட்டு ஆஸ்பிடல் போகணும்... கிளம்பி இரு நான் வந்துவிடுகிறேன்’ இப்படியான வார்த்தைகளால் தன் மனைவியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டே இருந்தான் மிருடன்.

இதில் எதற்குமே... அனு கணவனிடம் முகம் திருப்பவில்லை... ‘நாம் இங்கிருந்தா அவர் நம்மைத் தானே கேட்பார்... அப்போ நாம் தானே செய்ய வேண்டும்?’ இது தான் அனுவின் எண்ணம். அதாவது அவ்வளவு வெள்ளேந்தியாக கணவன் விஷயத்தில் இருந்தாள் அனு. நாள் முழுக்க இவ்வளவு தூரம் தன்னவளைத் தேடுபவன் இரவு நேரப் படுக்கையின்போது மட்டும் தனி அறை தான் அவனுக்கு. அனு, மான்வியுடன் ஒரு அறையிலும்... மிருடன் ஜீவாவுடன் வேறொரு அறையிலும் படுத்துக் கொள்வான். சில நேரத்தில் ஜீவா, அனு அறையிலும் தூங்குவான்.

இப்படியான இவர்களின் உறவையும் மாற்றுவதற்கான வழியும் ஒரு நாள் வந்தது.

அன்று தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஜீவா, கல் தடுக்கி கீழே விழுந்து விட... அடி பலம் என்பதால்... அழுகையிலும், அதிர்ச்சியிலும் சிணுங்கிக் கொண்டே இருந்தவன்... அன்று முழுக்க அனுவைப் படுத்தி எடுத்து விட்டான் அவன். யாரிடமும் செல்வது இல்லை... எதற்கெடுத்தாலும் அழுகை, சிணுங்கல்... அனுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவளை விட்டு இறங்கவும் இல்லை அந்த வாண்டு.

மதியம் சாப்பிட வந்த மிருடன், “டேய் ஜீவா, ஏன் டா இப்படி அம்மாவைப் படுத்தி எடுக்கிற? கொஞ்ச நேரம் அப்பா கிட்ட வா”

அவன் செய்த… சொன்ன எந்த சமாதானத்திற்கும் மகனோ அசரவே இல்லை. அதே சிணுங்கலுடன், “ம்ஹும்...” தாயின் கழுத்தை இவன் கட்டிக் கொள்ள

“ஜீவா தங்கம்... அழாத. நீ ஒன்னும் அப்பா கிட்ட போக வேண்டாம்... அம்மா கூடவே இரு. என் தங்கம் சமத்து தானே நீ” என்று அனு மகனை சமாதானம் செய்தவள், “அவனை விடுங்க… நான் பார்த்துக்கிறேன்... நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றவள் மகனை வைத்துக் கொண்டே கணவனுக்குப் பரிமாற...

ஏனோ இந்த சூழல் மிருடனுக்கு மிகவும் பிடித்துப் போக... அவளைத் தடுக்காமல்... “இப்படி சேரில் உட்கார்ந்துகிட்டே பரிமாறு ஷிதா...” தன்னை ஒட்டி மனைவிக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட, அவளும் அமர்ந்து பரிமாறவும்...

ஒரு வாய் உண்டவன், “எப்படியும் அவன் உன்னை சாப்பிட விடப் போவது இல்ல... இந்தா நான் சாப்பிடும்போதே நீயும் ஊட்டிக்கொள்...” என்றவன் அவள் முன் ஒரு கவளத்தை நீட்ட

“வேணாங்க... நீங்க சாப்பிடுங்க... நான் பிறகு ஸ்பூன் போட்டு சாப்பிடுவேன்...” இவள் மறுக்க

“அதுக்கும் உன் பிள்ளை உன்னை விட்டா தானே... பேசாம சாப்பிட்டு... சீக்கிரம் அவனைத் தூங்க வை... இந்தா இத வாங்கிக்கோ...” அவன் கை நீட்டியது நீட்டிய படி இருக்க

மகன் அலப்பறையில் மேற்கொண்டு மறுக்க முடியாமல் இவள் உணவை வாங்கிக் கொள்ள... அன்றைய உணவு தேவாமிர்தமாய் இனித்தது மிருடனுக்கு.

ஜீவாவின் அலப்பறை இரவு வரை தொடர்ந்தது. அனுவுடன் அவள் அறையில் படுக்கச் சென்றவன்... கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் தந்தையைக் கேட்டு அழ ஆரம்பிக்க... அவனைக் கணவனிடம் கொடுத்து விட்டு இவள் வந்து தன் அறையில் படுக்க... இதோ இப்போது தான் கண் மூடி இருப்பாள் அனு. உடனே அவள் அறை கதவு தட்டப் படவும்... இவள் தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று திறக்க,

“என்னடி பிள்ளை இவன்... காலையிலிருந்து படுத்தி எடுக்கிறான்... என் கிட்ட வந்ததும் நீ வேணும்னு ஒரே அழுகை... பிறகும் என்னைக் கேட்டு அழப் போறான்... இந்தா இவனைத் தூக்கிட்டு என் அறைக்குப் போ... நான் பேபியைத் தூக்கிட்டு வரேன்” என்றான் உள்ளே சென்று தூங்கும் மகளைத் தூக்கிய படி,

“நான் எல்லாம் பத்துத் பதினைந்து பிள்ளைகளைப் பெற்றுக்க ஆசைப்பட்டேன்... இப்போ நான் பெற்றதுங்க இரண்டும் அதற்கெல்லாம் வழி இல்லாமல் செய்துடுங்க போல...” என்ற சலிப்புடன் வெளியே வந்தவன்... மனைவி இன்னும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன டி நின்றுகிட்டே தூங்குறீயா... உன்னை என் அறைக்கு தானே போகச் சொன்னேன்? சரி வா...” அவன் முன்னே செல்ல

அனுவுக்கு கால்கள் பின்னியது. பகலில் கணவனை ஒட்டி அவனுக்கு சேவகம் செய்வது வேறு... அன்று அவன் நடந்து கொண்ட முறைக்கு பிறகு பகலில் கூட கணவனின் அறைக்கு இப்போதெல்லாம் அனு செல்வது இல்லை. இன்று எப்படி நடந்து கொள்வானோ... ஒருவித கலக்கம் இவளுக்குள் தயக்கத்தைக் கொடுக்க...

அந்த தயக்கம் எல்லாம் மகனுக்கு இல்லையே!
“ம்மா... அப்பா கிட்ட போலாம்...” தூக்க கலக்கத்தில் ஜீவா சொல்ல

ஏதாவது வம்பு செய்தால்... பிள்ளைகளைக் கணவனிடம் விட்டுவிட்டு வெளியே வந்து விட வேண்டும் என்ற முடிவுடன் இவள் அவன் அறைக்குள் நுழைய, அவனோ தன் கிங் சைஸ் கட்டிலில் மனைவி… மகனுக்கு என்று ஒரு பக்க இடத்தை விட்டு விட்டு… இவன் ஒரு பக்கம் படுத்து கொள்ள… அதை பார்த்த அனு இதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள் அவள்.

உள்ளே வந்ததும் ஜீவா தந்தையிடம் செல்ல... “டேய் நாள் முழுக்க ஆபிஸ் டென்ஷனில் இருந்துட்டு வந்திருக்கேன்... என்னை கொஞ்ச நேரம் தூங்க விடு டா... நீ இப்படியே அலப்பறை செய்துட்டு இருந்த... உன்னை பூச்சாண்டி கிட்ட கொடுத்திடுவேன் பார்...” மகனுக்கு மிரட்டல் இட்டாலும் அவன் கைகள் என்னமோ அவனைத் தன் நெஞ்சில் மேல் போட்டுக் கொண்டு தட்டித் தூங்க வைத்தது.

அதன் பின் மறுநாள் வழக்கமான விடியலாக இருவருக்கும் இருந்தது. அதன் பிறகு அனுவின் படுக்கை என்பது கணவனின் அறை என்றே மாறி போனது.

அப்படி இப்படி என்று நாட்கள் செல்ல... இரண்டு மாதத்தில்... மான்வி முழுமையாக குணம் அடைந்து விட்டதால்... குடும்பத்துடன் இவன் சென்னைக்குச் செல்ல தயாராக…

“ஷிதா... இங்கே உனக்கு, குழந்தைகளுக்கு வேண்டிய... முக்கியமானதை எடுத்துக்கோ... அந்த வீட்டில் உன் பொருள் வேறு ஏதாவது இருக்கான்னு பார்த்து பார்வதி ஆன்ட்டியை எடுத்துக் கொடுக்கச் சொல்கிறேன்...”

இவன் சொன்னது போல்... அனு, மான்வியின் சில பொருட்களை அந்த வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்த பார்வதி... அனு அன்று கைப்பட எழுதிய கடிதத்தை சரியாய்... தவறுதலாய்… மிருடனிடம் சேர்ப்பிக்க...

மனைவியின் கடிதத்தைப் படித்தவன்... அன்று இரவு முழுக்க... வீட்டிற்கு வராமல்... அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டான் மிருடன். அப்படி அந்த கடிதத்தில் இருந்தது இது தான்...

‘அன்புள்ள என் திருடனுக்கு... என்னடா திருடன்னு அழைக்கிறாளேனு பார்க்கறீங்களா... இன்று ஒரு நாள் இப்படி அழைச்சிக்கிறேன்... ஏன்னா... பிறகு தான் நான் இருக்க மாட்டேனே!

என் அப்பாவைப் பழி வாங்க.. என் கிட்ட பொய்யாக நடித்து நீங்க என்னை ஏமாற்றி இருக்கலாம். ஆனா நான் உங்களை மனதார விரும்பினது உண்மை. இந்த உலகம் எப்படி எல்லைகள் அற்றதோ... அதே மாதிரி தான் நான் உங்கள் மேல் வைத்திருந்த காதலும்...

நல்லா கேட்டுக்கோங்க... முன்னாடி நான் வைத்திருந்தேனு தான் சொல்கிறேன்... இப்போ அதே அளவு உங்கள் மேல் வெறுப்பு தான் இருக்கு... நீங்க செய்த மாதிரி நானும் உங்களைப் பழி வாங்க கிளம்பி இருக்கலாம். எனக்கு அது வேண்டாம்... பழி வாங்கணும் என்ற எண்ணத்தால் கூட நான் உங்களை நெருங்கக் கூடாதுன்னு நினைத்தேன்...

ஆனால் நான் உங்க மனைவி தான் என்பதை என் வாயால் சொல்ல வைக்க.. இன்று நீங்க என்னை அசிங்கப்படுத்தி... பிரச்சனை கொடுப்பது... அப்படி நமக்குள் ஏதாவது நடந்தா... அது கணவன் மனைவிக்கான உறவுன்னு... நீங்க சொல்லிக்கலாம்... ஏன் என் மனசாட்சி கூட அப்படி தான் சொல்லும். ஆனா நான் சொல்ல மாட்டேன்.

இப்பவும் சொல்றேன்... என் மிரு நீங்க இல்ல.. அவர் ஒருத்தர் மட்டும் தான்! மான்விக்கு நீங்க தான் அப்பா... அதை நான் மறுக்க மாட்டேன். அவளை உங்க கிட்டவே கொடுத்திடுறேன்... ஆனா என் கணவர் நீங்க இல்லை. அதற்கான அடையாளத்தையோ... உரிமையையோ... நான் எங்குமே எப்போதுமே என்றைக்கும் நீங்க என்ன செய்தாலும் உங்களுக்குத் தர மாட்டேன்... நிச்சயமா தர மாட்டேன்... என் உடம்பில் உயிர் இருக்கிற வரைக்கும் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.

உங்களால் நான் அடைந்த வலிகள்... வேதனைகள் அவ்வளவு! ஆனா அதையும் நான் தண்டனையா ஏற்றுக்கிட்டேன். பதினாறு வயதில்… என் தாத்தா, அப்பாவை நான் ஏமாற்றினேனே... அதற்கு எனக்கு தண்டனை வேண்டாமா? அதனால் தான் எல்லாவற்றையும் தாங்கி வாழ்ந்தேன். என்னைப் பெற்றவர்களுக்கு நான் துரோகம் செய்தேன்... எனக்கு நீங்க துரோகம் செய்தீங்க... அதோடு கணக்கு முடிந்தது... இனி எந்த விதத்திலும் நமக்குள் உறவு இல்லை...

அதற்காக ரொம்ப நாள் எல்லாம் நான் இருக்க மாட்டேன்... இன்றே இப்போதே... நான் என் வாழ்க்கையை முடித்துக்கப் போகிறேன்... எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் செய்றீங்களா? நான் இறந்துவிட்டால்.. ஒரு கணவனா நீங்க எனக்கு எதுவுமே செய்யக் கூடாது... ஏதோ ஒரு அநாதைப் பிணமா நான் போனா போதும்... அதை மட்டும் செய்திடுங்க மிரு... இறப்பிலாவது என்னை நிம்மதியாகப் போக விடுங்க... அது போதும் எனக்கு.

இப்படிக்கு,
அநாதையான
அனுதிஷிதா.’

மனைவியின் கடிதத்தைப் படித்து மனவேதனையுடன் கண்களை மூடி சேரில் தலை சாய்த்து இருந்தவனின் இதழ்களோ, “ச்சே! வெறும் சதைக்காக அலையும் ஆண்கள் பட்டியலில் என்னையும் சேர்த்து விட்டுட்டியே! என் காதலை நீ உணரவே இல்லையா டி?... பழிவாங்கினேன்.. பழிவாங்கினேன்.. துரோகம் செய்தேன்… இதே முகமூடியில் தான் என்னை பார்ப்பாயா… அப்படி என் மேல் நம்பிக்கை வராமல் போக… எங்கே எப்படி தவறினேன்? இந்தக் கடிதத்தைப் படிக்கும் போது நான் எப்படி உணர்வேன் என்று என்னைப் பற்றி ஒரு நொடி நீ யோசித்துப் பார்த்தீயா… நீ எழுதின ஒவ்வொரு வார்த்தையும் சாவின் விளிம்பில் என்னை நிற்க வைச்சிட்டியேடி … இதைப் படித்த நான் இனி நடைப் பிணம்! இதற்கு பதில் நீ என்னை உயிரோடு தீயிட்டு கொளுத்தியிருக்கலாம் டி… சாகத் துணிந்த அளவுக்கு நீ என்னை வெறுக்கிறாயே... ஏன்?” அந்த ஆறடி மனிதன் கர்வத்தோடும்... ஆணவத்தோடும்... தலை நிமிர்ந்து வாழ்ந்தவன் இன்று மொத்தமாய் உருக்குலைந்து தான் போனான்.

“இந்த அளவுக்குப் பிடிவாதத்துடன் சாக இருந்தவ... அதை செயல்படுத்தாமல் போக பேபியின் விபத்து தான் காரணமா? அப்போ இன்று வரை என்னுடன் நீ என் வீட்டில் இருப்பதற்கு என் பிடிவாதம் தான் காரணமா... ஒரு நொடி கூட என் காதல் உன்னைப் பாதிக்கலை எனும்போது இனி நான் உன்னைப் பிடித்து வைக்க விரும்பலை... உன்னை விட்டுவிடுகிறேன்... ஆனா அதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவு படுத்திட்டு விடுகிறேன்....” இப்படியாகத் தான் முணுமுணுத்தது அவன் இதழ்கள்...

எப்போதும் அனு தான் கணவனிடமிருந்து விலகியிருப்பாள். ஆனால் இப்போதெல்லாம்... மனைவியுடனான இடைவெளியை அதிகப்படுத்தினான் மிருடன்..


இதோ, இவர்கள் ஊருக்குச் செல்லும் நாளும் வர... கார் பயணத்தில் தன் மடியில் உறங்கும் இரண்டு பிள்ளைகளோடு பிள்ளையாய்... தன் தோளில் முகம் புதைய உறங்கிய படி வரும் மனைவியைப் பார்த்தவன், “தூக்கத்தில் கூட என்னைத் தேடுபவளா டி... என்னையை விட்டு சாகத் துணிந்த?!” என்று நினைத்தவனின் தொண்டைக்குழியோ கசந்து வழிந்தது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN