சிக்கிமுக்கி 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சனிக்கிழமை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பினாள் அபிநயா. மீனா தனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து இவளுக்கும் குணாவிற்கும் டாடா காட்டினாள்.

பேருந்து நகர ஆரம்பித்ததும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள் அபிநயா. மூன்று வரிசைக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் அன்பு. அவனின் வளர்ந்த காலை எரிச்சலோடு பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் இவள். "பார்க்கற இடமெல்லாம் இவனேதான் இருக்கான்.." என்று திட்டினாள்.

பேருந்தில் பாடல் மெல்லிசையாய் ஒலிக்க ஆரம்பித்தது. அபிநயா தன் பாதங்களால் தாளம் போட ஆரம்பித்தாள்.

பேருந்து பாதி தூரம் கடந்த நேரத்தில் அவளுக்கு போன் செய்தாள் அஞ்சனா. போனை பேக்கிலிருந்து எடுத்த அபிநயா ஜன்னலோரம் சாய்ந்து அமர்ந்தாள்.

"ஹலோ அஞ்சனா.." என்றாள். நேற்று மாலையில் அவள் தனக்கு நிச்சயதார்த்தம் என்று சொன்னதிலிருந்தே அபிநயாவுக்கு குஷிதான். மாப்பிள்ளையை பற்றி நேற்று சரியாக விசாரிக்காமல் விட்டு விட்டோமே இன்று நன்றாக விசாரிப்போம் என்று நினைத்து பேச ஆரம்பித்தாள்.

"ம்.. அபி.." அஞ்சனா தயங்கி தயங்கி பேசும்போது அபிநயா புரிந்துக் கொண்டாள் மீண்டும் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று. அஞ்சனாவை போல ஒரு விசித்திரமான பெண்ணை தான் சந்தித்ததே விசித்திரம்தான் என்று சில நேரங்களில் எண்ணி சிரிப்பாள் அபிநயா.

"என்ன அஞ்சு.?" என்றாள் கனிவோடு.

"நான்.. நான் இந்த நிச்சயத்தை நிறுத்திடட்டா.?" என்றாள்.

"ஏன் அஞ்சு.?"

"ம்.. அன்பு அண்ணா நேத்து திட்டிட்டாருப்பா.. எனக்கு இன்னும் சரியான மெச்சூரிட்டி வரலன்னு சொல்றாரு.. விகேஷ் மாதிரியே பன்னீரும் என்னை ஏமாத்திடுவார்ன்னு சொல்றாரு.. நேத்தெல்லாம் தூக்கமே வரல அபி.. காலையிலிருந்து நான் இன்னும் சாப்பிடல.." என்றாள்.

அபிநயா ஜன்னல் கம்பியில் நெற்றியை முட்டிக் கொண்டாள்.

"லூசா நீ.?" என்றவளிடம் அன்பு அக்கறையோடு திட்டியதை பற்றி முழுதாக சொன்னாள். அவள் சொன்னதை கேட்ட அபிநயாவிற்கு அன்பு மீதுதான் கோபமாக வந்தது.

"உன் வாழ்க்கையை நீதான் வாழ போற அஞ்சனா.. உனக்கு மனசுல குழப்பம் இருந்தா கொஞ்ச நாளைக்கு உன் நிச்சயத்தை தள்ளி கூட போடு.. ஆனா இன்னொருத்தர் சொல்றாங்கன்னு கேட்டு பன்னீரை வேணாம்ன்னு சொல்லாத.. இன்னும் சில மாதம்.. சில வருசங்களுக்கு பழகி பாரு.. பிடிக்கலன்னா விலகு. ஏதோ ஒரு காட்டெருமை சொன்னதுக்காக விலகாதே.. அவனுக்கு அவன் லைப்ல என்ன முடிவெடுக்கணும்ன்னே தெரியாது. அவன் உனக்கு அட்வைஸ் பண்றானா.? அவன் பேச்சையெல்லாம் கேட்ட உன் லைப்பே நாசமா போயிடும். இதை மட்டும் கன்பார்மா சொல்வேன் நான்.." முதலில் அறிவுரையாக ஆரம்பித்தது கடைசியில் அன்புவை திட்டுதலோடு முடிந்தது.

அஞ்சனாவுக்கு மேலும் குழப்பம் பிடித்துக் கொண்டது. ஆனால் அன்பு சொன்னதை விட அபிநயா சொன்னது சரியென்று தோன்றியது. நிச்சயம் முடிந்த பிறகு இருக்கும் இடைப்பட்ட மாதங்களில் அவனை பற்றி தெளிவாக அறிந்துக் கொள்ளலாமே என்று எண்ணினாள்.

"எதுவும் உன் கையை மீறி போயிட போறது இல்ல அஞ்சு.. பன்னீர் மேல வைக்கிற நம்பிக்கையை விட அதிகமா நீ உன் மேல வை. உன் லைப் நிச்சயம் நல்லா இருக்கும்.. ஆலோசனையை எல்லார்கிட்டயும் கேட்கலாம். ஆனா முடிவு எப்போதும் உன் கையில் மட்டும்தான்.. இன்னைக்கு அந்த புண்ணாக்கு சொல்லுதுன்னு பன்னீரை வேணாம்ன்னு சொல்லாதே. அப்புறம் உனக்கு வேற ஒருத்தன் கூட கல்யாணம் ஆன பிறகும் அவன் அதைதான் சொல்வான்.. உனக்கு நாலஞ்சி குழந்தைங்க பிறந்த பிறகும் அதையே சொல்வான். நம்மாள எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க முடியாது.."

அபிநயா சொன்னதற்கெல்லாம் "ம்.. ம்.." என்று பதிலை சொன்னவள் சில நிமிடங்களுக்கு பிறகு போனை வைத்தாள்.

அபிநயா தன் போனை பேக்கில் பத்திரப்படுத்திவிட்டு அன்புவை பார்த்தாள். அவன் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு எதையோ கேட்டுக் கொண்டிருந்தான்.

"பஸ்ல நல்ல பாட்டுதான் பாடுது.. ஆனா இந்த பன்னாடைக்கு போன்ல பாட்டு கேட்டு சீன் போடணுமாம்.." என்று முனகினாள்.

பேருந்து நின்றதும் தன் ஹெட்செட்டை கழட்டி கால்சட்டை பாக்கெட்டில் திணித்துக் கொண்ட அன்பு பேருந்து நிலையத்தை கடந்து நடந்தான். அவனை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்த அபிநயா பேருந்து நிலையம் தாண்டியதும் "டேய் கோணக்காலா நில்லுடா.." என்றாள்.

அன்பு குழப்பத்தோடு திரும்பினான். அபிநயா அவனை முறைத்தபடி அருகே வந்தாள். அன்று தீபக்கிடம் அவன் வாங்கிய அதே இடம்தான் அது.

"அஞ்சுவை தப்பு சொல்ல நீ யாருடா.?" என்றாள் இரண்டு கைகளையும் கட்டியபடி. தோளோடு மாட்டியிருந்த அவளின் பேக்கின் பிடியை தாண்டி காற்றில் பறந்துக் கொண்டிருந்தது துப்பட்டா. விடுதியிலிருந்து கிளம்பும் போது ஸ்டிக்கர் பொட்டின் மீது அவள் வைத்திருந்த மஞ்சள் நிற விபூதி பாதி காணாமல் போயிருந்தது. அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் 'பேசி தொலைடா அன்பு.. அவ முகத்தை ஏன் பார்க்கற.?' என்று கூச்சலிட்டது.

"ஏனா அவ லைஃப் மேல எனக்கு அக்கறை இருக்கு.." என்றவனின் கணுக்காலில் உதை தந்தவள் "அவளை அப்படி திட்டி வச்சிருக்கியே.. இப்ப அவ சூஸைட் பண்ண டிரை பண்ணா அவளோடு சேர்ந்து நீயும் செத்து போவியா.?" என்றாள் கோபத்தோடு.

கணுக்காலில் அடி பட்டதும் காலை தூக்கி உதறி கொண்டிருந்தவனுக்கு அவளின் கேள்வி அதிர்ச்சியை தந்தது. நேற்று இரவு அஞ்சனாவை தான் எப்படி திட்டினோம்‌ என்று யோசித்து பார்த்தான். போனை வைக்கும் முன்பே அஞ்சனா அழுகையில் விக்கியது நினைவிற்கு வந்தது. அக்கறையின் காரணத்தால் திட்டியவனுக்கு அவளின் அழுகை பற்றி யோசிக்க தோன்றாமல் போனது அப்போது.

அவசரமாக தன் போனை தேடி எடுத்தான்.

"அவ தற்கொலை பண்ணிக்கல.." என்று பதில் சொன்ன அபிநயாவை நிமிர்ந்து பார்த்தான்.

"இப்பதான் போன் பண்ணி நான் என்ன பண்ணட்டும்ன்னு கேட்டா.. உன் விருப்பப்படி செய்.. ஆனா எந்த பேய் பேச்சையும் கேட்காதேன்னு சொன்னேன்.." என்றவளின் குரலில் கெத்து கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக தோன்றியது அன்புவிற்கு.

"போன வருசத்துல அவ உனக்கு பிரெண்டா இருந்தா.. ஆனாலும் தற்கொலைதான் செஞ்சா.. இப்ப எனக்கு பிரெண்டா இருக்கா.. ஆனா தற்கொலை பண்ணிக்கல.. இப்ப அவளோட வருங்கால மாப்பிள்ளை அவளை ஏமாத்திட்டு போனா கூட தற்கொலை பண்ணிக்க மாட்டா.. இந்த மொத்த உலகமும் சேர்ந்து அவளை திட்டினாலும் குறை சொன்னாலும் கூட அவ தன் தைரியத்தை இழக்க மாட்டா.. இதுதான் உன் நட்புக்கும் என் நட்புக்கும் இடையில் இருக்கற வித்தியாசம்.. நம்பி பிரெண்டா பழகற பொண்ணை கூட்டுல வளர்க்கற பறவையை போல பார்த்துக்கிட்டா அப்படிதான் நடக்கும்.. அவளுக்கான ஸ்பேஸ் என்னதுன்னு புரிய வைக்காம.. அவளோட மனோபாவத்தோடவே போய் அவளை அவளோட மனசிறைக்குள்ள இருந்து வெளியே கொண்டு வராம 'நானும் பிரெண்டு.. நீ என் பிரெண்டை தப்பு சொல்லிட்ட'ன்னு சீன் போட்டுட்டு திரிய கூடாது.." என்றவளை எரிச்சலோடு பார்த்தவன் "உன் பிரெண்ட்ஷிப்பால அவ மாறினான்னு ரீல் ஓட்டாதே சரியா.? போன வருசம் இதே மாசத்துலதான் அவளை விகேஷ் ஏமாத்தினான். ஒரு வருசம்தான் முடிஞ்சிருக்கு. உடனே அவ இன்னொருத்தனை லவ் பண்றா.. இது அவளோட நிலையில்லாத மனசைதான் காட்டுது.. இப்படி இருந்தா அவளை யார் வேணாலும் ஏமாத்துவாங்க.." என்றான்.

"ஒருத்தனை பிரேக்அப் பண்ணிட்டா இன்னொருத்தனை லவ் பண்ண கூடாதுன்னு சட்டம் ஒன்னும் இல்லையே.. அப்படி.." என்ற அபிநயா "அப்ப நீ ஏன் இன்னும் வேற எவனையும் லவ் பண்ணல.?" என்று அன்பு கேட்கவும் தடுமாறி போனாள்.

"நான்.."

"அவளுக்கு எது நல்லதுன்னு அவளை விட எனக்கு நல்லா தெரியும்.. அவளோட லவ் ரொம்ப தப்பு.." என்றவனை முறைத்தவள் "அப்ப நான் இன்னொருத்தனை லவ் பண்ணாலும் தப்பா.?" என்று கேட்டு சிரித்தாள்.

"ஆ.." அவன் ஆமென சொல்லும் முன்பே "உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.. நீ என்னை ஏமாத்திட்ட.. நீ என்னை நம்ப வச்சி கழுத்தறுத்த.. ஆனா நான் லவ் பண்ணதான் போறேன்.. என்னை பிரேக்அப் பண்ண நீயே நிம்மதியா வாழும்போது உன்னை நினைச்சே சாக எனக்கு மட்டும் என்ன தலைவிதி.? உன்னை விட நல்ல பசங்க இந்த பூமியில் இருந்துட்டுதான் இருக்காங்க.. என் லைப்ல இருந்து உன்னை ஒழிச்சதை கொண்டாடவே இன்னொருத்தனை தேடி பிடிக்கிறேன் இரு.." என்றவள் அவள் அங்கிருந்து நகரும் முன் அவளின் கையை பிடித்தான். அங்கிருந்த சுவற்றில் அவளை தள்ளினான். அபிநயாவிற்கு முதுகு வலித்தது. வலியால் முனகியபடி நேராய் பார்த்தாள்‌.

"உன்னால எவனையும் லவ் பண்ண முடியாது. நீ யாரையும் லவ் பண்ணவும் கூடாது.. ஒரே விசயத்தை இரண்டு முறை சொல்ல வைக்காத என்னை‌. உன்னை எவனாவது லவ் பண்ணா அவனை உதைப்பேன்.. நீ யாரையாவது லவ் பண்ணா உன்னையும் மிதிப்பேன்.. வார்னிங் இது.." என்று கண்கள் சிவக்க கர்ஜித்துவிட்டு கிளம்பினான் அன்பு.

அபிநயா கண்களை மூடி பற்களை கடித்தபடி முதுகில் வலியை பொறுத்துக் கொள்ள முயற்சித்தாள். சற்று முன் என்ன நடந்தது என்று யோசித்தாள். அன்பு தன்னை மிரட்டியதை நினைத்து பார்த்தாள். அவனின் கர்ஜனை அவளை குழப்பி விட்டது. சிறிது பயமுறுத்தியும் விட்டது.

கைகெட்டிய அளவுக்கு முதுகை தொட்டு தேய்த்து விட்டுக் கொண்டவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

"இவனுக்கு என்ன வந்தது.?" என கேட்டவளுக்கு அவன் மிரட்டியது மீண்டும் நினைவிற்கு வந்தது. "பைத்தியக்காரன்.." என்று திட்டினாள்.

அன்பு தனது அறையில் பேக்கை வீசிவிட்டு முன்னும் பின்னும் நடந்துக் கொண்டிருந்தான். "இன்னொருத்தனை லவ் பண்ணுவாளாம்.." என்றவன் எதிரே இருந்த சுவற்றை எட்டி உதைத்தான். உதைத்த காலில் சுளீரென வலியெடுத்தது.

"அந்த குட்டச்சியை எவன் லவ் பண்றான்னு நானும் பார்த்துடுறேன்.." என்று கர்ஜித்தபடி குட்டி போட்ட பூனை போல அந்த அறையில் சுற்றினான்.

அபிநயா வீட்டிற்குள் வந்ததும் "ஏன்ம்மா.. முதுகை தேய்ச்சிக்கிட்டே வர.?" என்று கேட்டார் வினோத்.

"சும்மாதான்ப்பா.." என்றவள் அன்புவை மனதுக்குள் திட்டியபடியே மாடி ஏறினாள்.

அம்மா கொண்டு வந்து தந்த சிப்ஸை கொறித்துக் கொண்டே டிவியை பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.

அம்மா சமையலையிலிருந்து கத்தினாள். டிவியின் சத்ததில் அம்மாவின் அழைப்பு சரியாக காதில் விழவில்லை சுவேதாவிற்கு. டிவியின் சத்தத்தை குறைத்துக் கொண்டு "என்னம்மா.?" என்றாள்.

"உன் போன் ரொம்ப நேரமா ரிங் ஆகுதுடி.." என்று அம்மா கத்தினாள்.

"சரி நான் பார்க்கறேன்.. நீ கத்தாதே.." என்ற சுவேதா போன் இருந்த மேஜைக்கு சென்றாள். அஞ்சனா அழைத்திருந்தாள்.

"என் பிரெண்ட் அஞ்சனா போன் பண்ணியிருக்காம்மா.. நான் பேசிட்டு வந்துடுறேன்.." என்றுவிட்டு மொட்டை மாடிக்கு கிளம்பினாள் சுவேதா.

மாலை நேர தென்றல் காற்று சிலுசிலுவென வீசியது. "ஹலோ அஞ்சு.. மாப்பிள்ளை சார் என்ன பண்றாரு.?" என்று கேட்டாள்.

"வேதா.. என் மைன்ட் முழுக்க குழப்பமா இருக்கு.." என்ற அஞ்சனா அன்பு தன்னை திட்டியதும் அபிநயா தனக்கு தந்த அறிவுரையும் இவளிடம் சொன்னாள்.

"அன்பு பேச்சை கேட்காதே.. அவன் ஒரு எருமை மாடு.." என்று எரிச்சலோடு சொன்னாள் சுவேதா.

"அதுதான் எனக்கு குழப்பமே.. நீயும் அன்புவை திட்டுற.. அபியும் அன்புவை திட்டுறா.. அன்பு மேல உங்களுக்கு என்ன கோபம்ன்னு கேட்டாலும் சொல்லவே மாட்டேங்கிறிங்க.. அன்பு உங்களை திட்டிடாரா.? அபியும் அன்புவும் சண்டை போட்டுக்கிட்டாங்களா.? எப்ப கேட்டாலும் சரியான பதில் சொல்லாம தட்டி கழிக்கிறிங்க நீங்க.. இன்னைக்காவது நீயாவது உண்மையை சொல்லேன்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN