சிக்கிமுக்கி 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அஞ்சனாவின் குணம் என்னவென்று சுவேதாவிற்கும் தெரியும். அதனால்தான் அபிநயாவும் அன்புவும் அஞ்சனாவின் காரணமாக சண்டை போட்டுக் கொண்டதை பற்றி அவளிடம் சொல்லாமல் மறைந்திருந்தனர்.

இப்போது இவளே காரணம் கேட்கிறாளே என்ன செய்வது என்று குழம்பினாள் சுவேதா.

"என்ன காரணம்ன்னு சொல்லு சுவேதா.. அவங்க இரண்டு பேரும் எந்த அளவுக்கு லவ் பண்ணிட்டு இருந்தாங்கன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவங்க சண்டை போட்டுக்கிட்டத என்னால இன்னைக்கு வரைக்குமே நம்ப முடியல.." என்றாள்.

"நீ சூஸைட் பண்ண டிரை பண்ணதாலதான் அவங்களுக்குள்ள சண்டை வந்தது.." என்ற சுவேதா நடந்ததை முழுமையாக அவளிடம் சொன்னாள்.

தன்னால்தான் அபிநயாவும் அன்புவும் பிரிந்தார்கள் என்பதை சுவேதாவால் நம்பவே முடியவில்லை.

"இப்படி நடக்கும்ன்னு எனக்கு தெரியாது.. அன்பு அண்ணா எனக்காக அபியை திட்டி இருக்காரு.. சாரி ஸ்வேதா.." என்ற அஞ்சனாவிற்கு பேசும்போதே குரவில் அழுகை கூடி விட்டது.

"உன் மேல தப்பு இல்ல அஞ்சனா. அவங்கதான் சண்டை போட்டுக்கிட்டாங்க. நீ அவங்களை நினைச்சி கவலைப்படாதே.. இந்த காலை கட் பண்ணிட்டு உன் ஆளுக்கு போன் பண்ணி அவரோடு கடலை போடு.. எல்லாம் சரியா போயிடும்.." என்று ஆறுதல் சொன்னாள் சுவேதா.

சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு சுவேதா போன் அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அஞ்சனாவிற்கு மனது கஷ்டமாக இருந்தது. கண்களில் தத்தளித்த கண்ணீர் கண்களிலேயே நின்றிருந்தது.

"அன்பு அண்ணா ஏன் இப்படி செஞ்சாரு.?" என்று வருத்தப்பட்டவள் அன்புவிற்கு போன் செய்தாள்.

அன்பு போனை எடுத்ததும் இவளின் நலம் விசாரித்தான். இவளின் திருமணம் பற்றி எதிர்மறை அபிப்பிராயம் கொண்டிருந்தவனுக்கு தனது கடுஞ்சொல் அவளை பாதித்து இருக்குமோ என்றும் பயந்தான்.

"நான் நல்லாருக்கேன்.." என்ற அஞ்சனா சிறிது நேர தயக்கத்திற்கு பிறகு "அபி ரொம்ப நல்லவங்க.." என்றாள்.

அன்பு தன் அறையின் ஜன்னல் வழியே அபிநயா அறையின் மூடியிருந்த ஜன்னலை வெறித்தான். தான் சண்டையிட்டதை பற்றி அஞ்சனாவிடம் அபிநயாதான் சொல்லியிருப்பாள் என்று நம்பியவனுக்கு அபிநயா மீது கோபம் வந்தது. "அவ சொன்னதை நம்பாதே.. அவ உன்னை பத்தி என்ன சொன்னான்னு உனக்கு தெரியாது.." என்றான்.

"ஏன் நீங்க இப்படி இருக்கிங்க.? அபிநயா உங்களை விட நல்லவ.. நானும் நல்லா யோசிச்சி பார்த்தேன். உங்களோடு போட்டுக்கிட்ட சண்டைக்கு இத்தனை நாளா அவ என்னோடு பேசியிருக்கவே கூடாது. நானா தேடி போய் பேசினாலும் கூட ஒருமுறை கூட என்னை பத்தி தப்பா சொன்னதில்ல அவ.. மத்தவங்களா இருந்திருந்தா 'உன்னாலதான் அவனுக்கும் எனக்கும் சண்டை வந்தது. என்னோடு எப்போதுமே பேசாதேன்னு சொல்லி இருந்திருப்பாங்க.." என்றாள் அஞ்சனா.

"அவளை பத்தி என்கிட்ட பேசாதே அஞ்சனா.." என்றான் இவன் சட்டென.

"இல்ல அன்பு. அவங்களை பத்தி உங்களுக்கு சரியா தெரியல. அவங்களை மிஸ் பண்ணா உங்களுக்குதான் நஷ்டம்.. அவங்களை போல ஒரு பொண்ணு உங்களுக்கு கிடைக்கவே மாட்டாங்க.." என்றவள் அன்பு பதில் சொல்லும் முன் அவளே பேச ஆரம்பித்தாள். "எனக்கும் பன்னீருக்கும் நிச்சயத்தார்த்தம்.. கண்டிப்பா நீங்க இங்கே வரணும்.." என்றாள்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நிச்சயத்தார்த்தை நடத்த இருக்கிறாளே என்று அஞ்சனா மீது கோபம் வந்தது.

"உனக்கு பயமே இல்லையே.? அவன் உன்னை ஏமாத்திட்டு போயிட்டா என்ன செய்வ.?" என்றான் பெருமூச்சோடு.

"பயம் இல்ல.. முதல்ல இருந்தது.. விகேஷ் என்னை விட்டுட்டு போயிடுவாரோன்னு நினைச்சி பயந்துட்டு இருப்பேன்.. ஆனா இப்ப இல்ல.. ஏனா நான் என்னை நம்புறேன்.. பன்னீர் என்னை விட்டுட்டு போக மாட்டார்ன்னு நம்புறேன்.. அப்படி அவர் விட்டுட்டே போனாலும் நான் இரண்டு நாள் அழுந்துட்டு அடுத்த நாளை சாதாரண நாளா வரவேற்பேன். ஏமாத்திட்டு போறவங்களே நிம்மதியா இருக்கும்போது நான் ஏன் அழணும்.?" என்று கேட்டாள்.

அவளின் கேள்வி அன்புவிற்கு திகைப்பை தந்தது. இவளா இதை பேசுவது என்று குழம்பினான்.

"நான் மாறிட்டேன் அன்பு. இங்கே கிராமத்து சூழ்நிலையும் மத்த மனுசங்களை படிச்சபோது கிடைச்ச அனுபவமும் என்னை ஓரளவுக்கு மாத்திடுச்சி. நான் மறுபடியும் பழைய அஞ்சனாவா மாற விரும்பல. சாக ஆசைப்படல.. இப்பவெல்லாம் கையை அறுத்துக்கணும்ன்னு தோணுறதே இல்ல.. நான் ரசிக்க வானம் இருக்கு‌. என் பிரச்சனையை சொல்லி அழ தாத்தா, பாட்டி, அம்மா, மாமா இன்னும் என் தலையணையும் இருக்காங்க. என் சந்தோசத்தை பகிர்ந்துக்க எனக்குன்னு தோழிங்க இருக்காங்க. என் மகிழ்ச்சியை கேட்டு தலையாட்ட பூக்களும் ஆட்டுக்குட்டியும் இருக்குது. என்னை சுத்தி இத்தனை பேர் இருக்காங்க.. இவங்களை விட்டுட்டு போக விரும்பல. இந்த கூட்டத்துல நானும் ஒரு ஆளா கலந்துக்க ஆசையா இருக்கு. அதுக்காகதான் பன்னீருக்கு ஓகே சொன்னேன். ஏனோ அவனை பத்தி நினைச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது. நீங்க அவனை பார்க்கல இன்னும். ஊருக்கு வருவிங்க இல்லையா.. அப்ப பாருங்க. உங்களுக்கும் அவனை பிடிக்கும்.. உங்களுக்கு பிடிச்சவங்களை நீங்க எப்பவும் மிஸ் பண்ணிடாதிங்க.‌." என்றவள் இணைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அன்பு காதிலிருந்து போனை கீழிறிக்கினான். அஞ்சனாவின் திருமணம் பற்றி இப்போதும் அவனுக்கு முழு சம்மதம் இல்லை. ஆனால் அவள் மாறியது அவனுக்கு சந்தோசமே. நட்பு அனைத்தையும் மாற்றும். அனைவரையும் மாற்றும் என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அபி மீனுவுடனான நட்பு அவளை மாற்றியிருக்கிறது. ஆனால் தன் நட்பு ஏன் மாற்றவில்லை என்று யோசித்தான். உண்மையில் தான் நட்பாய் பழகாமல் அவளை பொத்தி பாதுகாக்க முயற்சித்தேனோ என்று யோசித்து குழம்பினான்.

சிந்தையில் ஏதேதோ எண்ணங்களோடு இருந்தவனுக்கு எதிர் வீட்டு ‌ஜன்னல் வழியே தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் தாமதமாகதான் கவனத்தில் பதிந்தது.

அபிநயா அவனை விழியசைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். எதிர் திசையிலிருந்து அடித்த காற்று அவளின் முகத்தில் மென் தென்றலாக பரவிக் கொண்டிருந்தது. அவளின் கண்களை பார்த்தவனுக்கு அவளின் கையை பற்ற வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அவளை பார்க்கும்போதெல்லாம் ஆசையின் அனல் அதிகம் வீசிக் கொண்டிருந்தது. அவளை பிரிந்த நாளில் இருந்து கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அது. ஆனால் தன் வைராக்கியத்தை இறுக்கி பிடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளை நினைக்கவும் அவளை பார்க்கவும் கூட பிடிக்கவில்லை. தனக்கும் தன் மனதுக்குமான போராட்டத்தில் இன்று வரை மனதை தன் ஆட்சியின் காலடியில் போட்டு மிதித்தபடி கெத்தாக நின்றுக் கொண்டிருக்கிறான். அந்த கெத்தை இனியும் அப்படியே வைத்திருக்க ஆசைக்கொண்டான்.

அபிநயாவின் விரல்கள் ஜன்னல் கம்பிகளை இறுக்கி பிடித்திருந்தது. அந்த கை விரல்களின் சந்துகளில் தன் கை விரல்களை இணைக்க வேண்டும் என்று விருப்பப்பட்ட அதே நேரத்தில் அந்த ஜன்னலை படீரென சாத்திவிட்டு அங்கிருந்து நகர வேண்டும் என்றும் தோன்றியது.

இவனது மனது அவளுக்கு புரிந்ததோ என்னவோ. தன் ஜன்னலை சாத்தினாள்‌ அபிநயா. பட்டென்று சாத்திவிட மனம் வரவில்லை. மெதுவாக தள்ளி சாத்தினாள். மறையும் அவளின் உருவத்தை அதே இடத்தில் நிறுத்தி வைக்க துடிதுடித்தது அவன் மனம். அவள் ஜன்னலை சாத்திக் கொண்டதும் தன் ஜன்னல் கம்பியில் முதுகை பதித்தபடி மறுபக்கம் திரும்பி நின்றான்.

மண்டையில் மாடபுறா ஒருபுறம் நின்று சிறகடித்தது. தன்னை விடுவிக்க சொல்லி அவனிடம் கெஞ்சியது. மறுபக்கம் இருந்த வேட்டை நாய் அந்த மாடபுறாவை தனக்கு உணவாக தர சொல்லி கேட்டு குரைத்துக் கொண்டிருந்தது.

தலையை பிடித்தபடி சுவரோடு சரிந்து அமர்ந்தான். அபிநயாவை பற்றிய நினைவுகளை தன் மனதிலிருந்து சுரண்டி எடுத்துவிட வாய்ப்பு இல்லையா என்று கவலையோடு தன்னையே கேட்டான்.

"எவளுக்காக நீ அபியை வெறுத்தாயோ அவளுக்கே உன்னை விட அபியைதான் பிடிச்சிருக்கு. உன்னோட சண்டை தப்பு. உன்னோட கோபம் தப்புன்னு ஒரு நொடியில சொல்லிட்டா. ஆனா நீ.. உன்னை காதலிச்சவக்கிட்ட உன்னை காதலிச்சதே தப்புன்னு சொல்லி சண்டை போட்டு பிரிஞ்ச.. உன்னை போல ஒரு காரணத்தை சொல்லி பிரிஞ்சவங்க இந்த உலகத்துலயே யாரும் இருக்க மாட்டாங்க.." என்று அவனின் மனம் அவனை குத்திக்காட்டி திட்டியது.

அபிநயா தன் படுக்கையில் கவிழ்ந்தபடி அன்புவின் நினைவை தன் சிந்தையிலிருந்து விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அந்த ஜன்னலை திறந்து மீண்டும் அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது.

இரவு உணவு உண்ணும் போது அஞ்சனாவின் நிச்சயதார்த்தம் பற்றி பெற்றோரிடம் சொன்னாள் அபிநயா.

"சின்ன வயசுலயே ஏன் அவ கல்யாணம் செய்றா.?" என்று கேட்டார் அப்பா.

"அவ வயசுல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.." என்று நேரம் பார்த்து சொன்ன அம்மாவை முறைத்தார் வினோத்.

"அந்த பொண்ணை பத்தி உங்ககிட்ட முழுசா சொல்லலப்பா.." என்றவள் அஞ்சனாவை பற்றிய விவரங்களை வீட்டில் சொன்னாள்.

அபிநயா சொன்னது கேட்டு வினோத்திற்கும் ஆனந்திக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

"நீ அந்த காலேஜ்க்கு இனி போகாதே.. நாங்க உன்னை இங்கேயே எங்காவது சேர்த்து விடுறோம்.." என்றார் அப்பா.

அபிநயா திடுக்கிட்டு போய் அவரை பார்த்தாள். "அப்பா அந்த பொண்ணு தற்கொலை முயற்சி செஞ்சதுக்கு நான் என்ன செய்வேன்.?" என்றாள்.

"அதே காலேஜ்ல இன்னொரு விகேஷ் இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.? நான் காலேஜ் கவுன்சில்கிட்ட வந்து பேசுறேன் இரு.." என்றார் அவர்.

"அப்பா.. அது முடிஞ்சி போன விசயம்.. அதை பெரிசு பண்ணாதிங்க.. அந்த பையன் இப்ப ஜெயில்ல இருக்கான்.. கேர்ள்ஸ் சேப்பாதான் இருக்காங்க.. இன்னும் அஞ்சாறு மாசத்துல செகண்ட் இயர் முடிய போகுது. இப்ப எப்படி நான் காலேஜ்ல இருந்து நிற்க முடியும்.? நானும் மீனுவும் மாஸ்டர் டிகிரியும் அங்கேயே படிக்கலாம்ன்னு இருக்கோம்.." என்றாள் அபிநயா.

அப்பா முறைப்போடு உணவை தள்ளி வைத்துவிட்டு எழுந்து நின்றார்.

"உன் பேரண்ட்ஸ்தானே நாங்க.? உங்க காலேஜ்ல அப்படி ஒரு பிரச்சனை நடந்திருக்கு. ஆனா எங்ககிட்ட சொல்ல தோணல உனக்கு. இது தைரியமா இல்ல திமிரா.? பொம்பள புள்ளைன்னு செல்லம் தந்தா நீ உன் இஷ்டத்துக்கு இருப்பியா.? வாராவாரம் வீட்டுக்கு வர.. உன் கையில் போன் இருக்கு. ஆனா இந்த விசயத்தை பத்தி ஒன்னரை வருசம் கழிச்சி சொல்ற.. அதுவும் ஏதோ ஒரு பொண்ணுக்கு நிச்சயம்ங்கற காரணத்தால சொல்ற.." என்றார் கோபத்தோடு.

அபிநயாவிற்கு கண்கள் கலங்கியது. இரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டது. அப்பா அவளின் கண்ணீரை கண்டு பற்களை கடித்தார். தனது கோபத்தை இப்படி ஒரு நொடியில் உடைத்தெறிந்து விட்டாளே என்று மகள் மீது புது கோபம் வந்தது.

"இப்ப எதுக்கு அழற.? நான் என்ன உன்னை அடிச்சேனா.?" என்றார் அவளின் அருகே அமர்ந்து.

உணவை உண்டு முடித்துவிட்ட அம்மா அப்பாவின் தட்டை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மீதி பொருட்களை எடுத்து சென்று சமையலறையில் வைத்தாள்.

"இப்படின்னு தெரிஞ்சிருந்தா நானும் பொம்பள புள்ளையாவே பிறந்திருப்பேன்.." கார குழம்பால் நாக்கு எரியவும் சர்க்கரையை எடுத்து ஒரு ஸ்பூன் உண்டபடி சொன்னான் தீபக்.

"ஏன்டா இப்படி சொல்ற. எனக்கு நீதான்டா ரொம்ப பிடிக்கும்.." என்ற ஆனந்தியை பார்த்து புன்னகைத்தவன் "எனக்கும் உன்னைதான் அதிகமா பிடிக்கும் அம்மா.." என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN