சிக்கிமுக்கி 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"நான் உன் நல்லதுக்குதானே சொன்னேன்.? இதுக்கு ஏன் அழற.?" என கேட்ட வினோத் தன் மகளின் கண்களை விட்டு இன்னும் கீழிறங்காத கண்ணீரை துடைத்து விட்டார்.

"யாராவது காலேஜை பாதியில் நிறுத்துவாங்களா.? அந்த காலேஜ்ல ஒரு விகாஷ் இருந்தா இன்னொரு காலேஜ்ல அவனை போல இன்னொரு முகேஷ் இருக்க மாட்டானா.? கெட்டவங்க இல்லாத இடம் எங்கப்பா இருக்கு.?" என வருத்தமாக கேட்டாள் அபிநயா.

"என் பயமெல்லாம் உனக்கு புரியாது.." என சலித்துக் கொண்ட தந்தையின் முகவாயை பற்றி தன் பக்கம் திருப்பினாள்.

"நான் பத்திரமா இருந்துப்பேன்ப்பா.." என்றாள் கெஞ்சலாக.

"இந்த பிரச்சனை வந்த முதல் நாளுலயே இதை நீ என்கிட்ட சொல்லியிருந்தா நானும் சரின்னு விட்டிருப்பேன். ஆனா நீ ஒன்னரை வருசமா என்கிட்ட எதுவும் சொல்லல.. இதே மாதிரி இனியும் இருப்ப.. உன்னை நம்பி எப்படி நான் காலேஜ் அனுப்பட்டும்.?" என்றவரின் குரலில் மீண்டும் கோபம் தென்பட்டது.

தான்தான் தவறு செய்தோம் என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு கல்லூரியில் நடக்கும் விசயங்களை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்குமோ என்று எண்ணினாள்.

"நான் உன்னை என் பிரெண்ட் மாதிரி நடத்துறேன்.. அப்பவும் கூட நீ என்கிட்ட எல்லாத்தையும் மறைக்கற.." என்றார் அவள் மீது குற்றம் சாட்டும் விதமாக.

"சாரிப்பா.. இனி எதையும் மறக்க மாட்டேன்.. ப்ராமிஸ்.." என்று தாடையை பிடித்து கொஞ்சியவளை ஓரக்கண்ணால் பார்த்தார் அவர். சற்றுமுன் எரிமலை போல பொங்கிய கோபம் சட்டென குறைந்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டவர் மகளின் தலையை வருடி விட்டார்.

"இன்னொரு முறை வேற ஏதாவது விசயம் வேற யார் மூலமாவது என் காதுக்கு வந்து சேர்ந்தா அப்புறம் அவ்வளவுதான்.." என்று மிரட்டியவரிடம் "இனி நான் குட் கேர்ள்.. அஞ்சனா நிச்சயத்துக்கு போகட்டா.?" என்றாள்.

அப்பா யோசித்தார். உணவு தட்டை அருகே இழுத்து வைத்து உண்ண ஆரம்பித்தார். அவர் என்ன பதில் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தாள் அபிநயா.

"அதுக்குதான் இன்னும் நாள் இருக்கு இல்ல. அப்புறம் என்ன.? மெதுவா யோசிச்சி சொல்றேன்.." என்றவரை ஏமாற்றமாக பார்த்தவளுக்கு தந்தை தன்னை அஞ்சனா வீட்டிற்கு அனுப்புவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அந்த வாரத்தில் அபிநயா கல்லூரிக்கு சென்றாள். சுவேதா தான் அஞ்சனாவிடம் சொன்ன விசயங்களை பற்றி சொன்னாள். அஞ்சனா மனம் வருத்தப்படுவாளே என்று கவலைக் கொண்டாள் அபிநயா.

"அவ நேத்து சாயங்காலம் கூட போன் பண்ணா.. அவளுக்கு அன்பு மேலதான் கோபம்.. உன்னை அவ தப்பா நினைக்கவும் இல்ல.. தப்பா சொல்லும் இல்ல.." என்று சொன்னாள் சுவேதா.

அஞ்சனாவிற்குள் இந்த அளவிற்கு மாற்றம் வந்தது அபிநயாவிற்கும் சந்தோசத்தை தந்தது.

ஜீவா முன்பை விட அதிகமாக அபிநயாவோடு சேர்ந்து சுற்ற ஆரம்பித்தான். அவனுக்கான இடைவேளை நேரம் முழுக்க அபிநயாவோடுதான் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.

"இந்த பையன் என்னோட வால் மாதிரி ஆகிட்டான்.." என்று சொல்லி சிரித்தாள் அபிநயா.

"ஆமா.. அழகான பட்டு வால்.." என்ற ஜீவா அபிநயாவின் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து தேய்த்தான்.

"ச்சீ.. அமைதியா இரு.. நாய்க்குட்டி மாதிரி செய்யாதே.." என்று அவனது முகத்தை அந்த பக்கமாக தள்ளிவிட்டு சிரித்தாள் அபிநயா.

"நாய்க்குட்டியும் அழகானதே.." என்று இருகைகளின் இடையே தன் முகத்தை வைத்து செல்லமாக ஒழுங்கு காட்டினான் ஜீவா.

அபிநயா சிரித்தபடியே அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள். "ஆமா அழகு குட்டி.." என்றாள்.

அவர்கள் அமர்ந்திருந்த மரத்தின் நேர் எதிரே இருந்த பெஞ்சின் மீது அமர்ந்திருந்தான் அன்பு. அபிநயாவும் ஜீவாவும் கொஞ்சிக் கொள்வதை கண்டு ஆத்திரப்பட்டான். அந்த ஆத்திரத்தை அவன் தன் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிடம் காட்டியதில் அந்த தண்ணீர் பாட்டில் நசுங்கி உருக்குலைந்து போனது.

தன் காலடியில் தண்ணீர் சிதறியது கண்டு சட்டென கால்கள் இரண்டையும் நகர்த்திக் கொண்ட குணா "உனக்கு என்னடா வந்தது.?" என்றான்.

"அந்த நாய் ஏன் எப்பவும் இவளோடவே சுத்திட்டு இருக்கு.?"

யாரை சொல்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தான் குணா. ஜீவாவும் அபிநயாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அவங்க சிஸ்டர் அன்ட் பிரதரா பழகறாங்க.. உனக்கு என்ன.?" என்றான்.

"சிஸ்டர்.. ப்ரதர்.. மண்ணாங்கட்டி.. அவன் கை காலை உடைச்சி வைக்க போறேன் நான்.." என்று எரிச்சலோடு சொன்னவன் அங்கிருக்க கூட பிடிக்காமல் எழுந்து சென்றான்.

"டேய் நில்லுடா.. கிளாஸ்க்கு இன்னும் டைம் இருக்கு.." என்று பின்னால் ஓடினான் குணா.

"எங்கே போனாலும் அந்த கோணக்காலன் தொல்லை தாங்க முடியல.. பார்க்கற இடத்துலயெல்லாம் இருக்கான்.." என்ற அபிநயாவின் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான் ஜீவா. "நீங்க அவரை பார்க்காதிங்க சீனியர்.." என்றான்‌.

"நானும் பார்க்கவே கூடாதுன்னுதான் இருக்கேன். ஆனா என்ன செய்யட்டும்.? கையில பதிஞ்ச மருதாணி மாதிரி ஒட்டிட்டு இருக்கான்.." என்றாள்.

"நீ அவனை விடு.. நாம அஞ்சனா நிச்சயத்துக்கு போறோம்.. செமையா கலக்குறோம்.." என்று சொன்னாள் மீனா.

"நான் அங்கேயும் வருவேனே.." என்றான் ஜீவா.

"வா.. போகலாம்.. உனக்கில்லாத உரிமையா.?" என்றாள் அபிநயாவும்.

தானும் அஞ்சனா கிராமத்திற்கு செல்ல போகிறோம் என்ற குஷியோடு தன் வகுப்பறை நோக்கி துள்ளிக் கொண்டு சென்றான் ஜீவா. அவன் வகுப்பறையை சென்றடையும் முன் குறுக்கே வந்து நின்றான் அன்பு. அருகே இருந்த ஆண்கள் கழிவறைக்கு அவனை கை பிடித்து இழுத்துச் சென்றான். ஜீவாவிற்கு சிறிது பயம் இருந்தது. ஆனாலும் இவன் தன்னை என்ன செய்ய போகிறான் என்ற எதிர்பார்ப்பின் ஆவலும் இருந்தது.

"என்ன செய்ய போறிங்க என்னை.?" ஆர்வத்தோடு கேட்டவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டான் அன்பு. திகைத்துப்போய் தன் கன்னத்தை பற்றினான் ஜீவா.

பற்களை கடித்தபடி அவனை பார்த்தான் அன்பு. "காலேஜ்க்கு வந்தா படிடா ***. எதுக்கு அவ பின்னாடி சுத்திட்டு இருக்க.? நானும் பார்த்துட்டு இருக்கேன். நீயும் ஓவரா போயிட்டு இருக்க.. அவளோடு ஒட்டி உரசி பேசணுமா நீ.?" என்றவன் மீண்டும் கையை ஓங்கினான். ஜீவா தன் கன்னத்தை பற்றியபடி ஓரடி பின்னால் நகர்ந்தான்.

"அவளுக்கும் எனக்கும் சண்டை. அதனால நீ உள்ளே புகுந்துடலாம்ன்னு நினைக்கிறியா.?" என கோபமாக கேட்டவனை உணர்ச்சிகளற்று பார்த்த ஜீவா "நான் அவங்களை என் அக்கா மாதிரி பார்க்கறேன்.." என்றான்.

"அக்கா.. அவ என்ன உன் கூடவேவா பிறந்தா.? பிறகேன்டா அவளை அக்கான்னு சொல்ற.? இதே காலேஜ்ல எத்தனை ஆயிரம் பேர் இருக்காங்க.. ஆனா உனக்கு அபியேதான் கிடைச்சாளா.?" என கேட்டவன் ஜீவாவின் வயிற்றில் உதைக்க இருந்த நேரத்தில் அந்த கழிவறைக்குள் நுழைந்தான் குணா. "அடப்பாவி.. அவன் கை காலை உடைச்சி வைக்கிறன்னு நீ சொன்னதும் சும்மா சொல்றன்னு நினைச்சேன். உண்மையாவே அடிக்கிறியேடா.. அறிவிருக்கா உனக்கு.?" என கேட்டு வேகமாக வந்து இருவருக்கும் இடையில் நின்றான்.

காற்றில் இருந்த தன் காலை கீழிறக்கி கொண்டான் அன்பு. "உன்னை அவளோடு இன்னொரு முறை பார்த்தா கொன்னுடுவேன்.." என்று ஜீவாவிடம் விரல் நீட்டி எச்சரித்தான்.

கன்னத்தை பிடித்தபடி சிலையாக நின்றிருந்த ஜீவாவை பரிதாபமாக பார்த்தான் குணா. "இவனுக்காக நான் சாரி கேட்கறேன்டா.. இவன் ஒரு பைத்தியம்.. இவன் அடிச்சதை எதுவும் மனசுல வச்சிக்காத.." என்றான்.

ஜீவா எதுவும் பேசாமல் வெளியே நடந்தான். அன்பு நண்பனை முறைத்தான். "உன்னை யார் உள்ளே வர சொன்னது‌.?" என்றான்.

"மிரட்டிட்டு இருக்கியோன்னு நினைச்சி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா பாவி.. இப்படி அவனை அடிச்சி வச்சிருக்க.. அறிவிருக்கா உனக்கு.?" என்றான் கோபத்தோடு.

"அப்பதான்டா அவளை நெருங்கி பேசாம இருப்பான்.. சும்மா மிரட்டி வச்சா அமைதியா இருப்பானா.?" என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

"உன்னை என்னால புரிஞ்சிக்க இந்த ஜென்மத்துல முடியாதுடா சாமி.." புலம்பிக் கொண்டே அவனின் பின்னால் நடந்தான் குணா.

"அவளை நீ லவ் பண்றியா.?" வகுப்பிற்கு போகும் வழியில் நண்பனிடம் கேட்டான் குணா.

"அந்த பைத்தியக்காரியை எவன் லவ் பண்ணுவான்.? நெஞ்சமெல்லாம் வஞ்சம் வச்சிருக்கறவ அவ.." என்றவன் வகுப்பிற்குள் நுழைந்த உடனே அவளைதான் தேடி பிடித்து முறைத்தான்‌.

"இந்த மெண்டல் மறுபடியும் ஏன் என்னை முறைக்குது.?" என்று எரிச்சலோடு கேட்ட அபிநயா வழக்கம்போல முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அன்பு அன்றைய நாள் முழுக்க அடிக்கடி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

'ஜீவா தான் அடி வாங்கியதை பத்தி அபிக்கிட்ட சொல்லிட்டா அவ்வளவுதான்.. மறுபடியும் இரண்டு முள்ளம் பன்றிகளும் சண்டை போட ஆரம்பிச்சிடும். அவங்களுக்கு அடிப்படுதோ இல்லையோ இடையில இருக்கற எங்களுக்குதான் அடிபடும்..' என்று சோகமாக நினைத்தான் குணா.

அபிநயா மாலையில் கல்லூரி முடிந்து வெளியே செல்லுகையில் ஜீவாவை தேடினாள். கல்லூரி முடிந்ததும் ஓடி வந்து விடுபவன் இன்னும் ஏன் தன்னை காண வரவில்லை என்று அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்து அவனை தேடினாள்.

மறுநாள் அவள் கல்லூரி வந்தபோது கூட அவனை காணவில்லை.

"ஜீவா இன்னைக்கு காலேஜ் வரல போல.. உடம்பு ஏதும் சரியில்லையோ என்னவோ.?" என்றவளுக்கு அவனை நினைத்து கவலையாக இருந்தது.

"நானும் அவனை மிஸ் பண்றேன்.." என்றாள் சுவேதா. எப்போதும் சீனியர் சீனியர் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவன் திடீரென ஒருநாள் வராமல் போகவும் மூவருக்குமே கை ஒடிந்தார் போல இருந்தது.

"அந்த நாய் இன்னைக்கு காலேஜ் வரல.. இதே மாதிரி தொலைஞ்சிட்டா ரொம்ப நல்லது.." என்று மரத்தடியில் நின்றபடி குணாவிடம் சொன்னான் அன்பு.

"தேவையில்லாம அவனை திட்டாதடா.. பாவம் அவன். அவன் உன்னை என்ன செஞ்சான்னு இந்த திட்டு திட்டுற.?" என்று கோபமாக கேட்டான் குணா.

"அவன் ஏன் என் ஆள் பின்னாடி சுத்துறான்.?" என்று எரிச்சலாக கேட்டவன் தூரத்தில் அமர்ந்து தோழிகளோடு பேசிக் கொண்டிருந்த அபிநயாவை வெறுப்போடு முறைத்தான்.

"அவ உன் ஆள் இல்லடா.. பிரேக்அப் பண்ணிக்கிட்டிங்க.‌. மறந்துட்டியா.?"

"பிரேக்அப் பண்ணா இன்னொருத்தன் கூட கொஞ்சி பேசணும்ன்னு அவசியம் கிடையாது.." என்றவனை தன் கையிலிருந்த புத்தகத்தால் அடித்தான் குணா.

"அவ இன்னொருத்தனை லவ் பண்ண கூட உரிமை இருக்கு.. பிரிதலின் சோகத்துல கண்டதையும் பிணாத்தாத.." என்றான்.

மறுநாள் காலையிலும் ஜீவா அபிநயாவின் கண்களில் தென்படவில்லை.

"அந்த பையனுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல போல‌.." என்று வருந்திய அபிநயா தோழிகளோடு சேர்ந்து அவனது வகுப்பறை தேடி சென்றாள்.

அவ்வப்போது ஜீவாவோடு இணைந்து கல்லூரிக்கு வரும் அவனின் வகுப்பு தோழனை கண்ட மீனா அவனருகே சென்று ஜீவாவை பற்றி விசாரித்தாள். அவனோ அவர்களை பார்த்து திருதிருவென விழித்தான்.

"அவன் வீட்டு போன் நம்பர் உன்கிட்ட இருந்தா கொடு.." என்றாள் சுவேதா.

மறுப்பாக தலையசைத்தவன் "நீங்க அவனோடு பேச முடியாது.." என்றான்.

"ஏன்.?" குழப்பமாக கேட்ட மீனாவிடம் "அவன் முந்தாநேத்து சூஸைட் பண்ணிக்கிட்டான்.." என்றான் அவன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN