சிக்கிமுக்கி 52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜீவாவின் நண்பன் சொன்னது கேட்டு அதிர்ந்து போனாள் மீனா.

"சூஸைடா.? அவன் ஏன் சூஸைட் பண்ணான்.? இப்ப எப்படி இருக்கான்.?" என்றாள் அவசரமாக.

தன் எதிரில் இருப்பவன் சொன்னதை அபிநயா நம்பவே இல்லை. ஜீவா அப்படி ஏதும் செய்திருக்க மாட்டான் என்று நம்பினாள். அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவனுக்கு எந்த கஷ்டமும் இல்லை என்று நினைத்தாள்.

ஜீவாவின் நண்பன் சுவேதாவையும் மீனாவையும் அதிர்ச்சியோடு பார்த்தான். அவனோடு அமர்ந்திருந்த மற்ற நண்பர்களும் சோகத்தோடு தலையை குனிந்துக் கொண்டனர். ஒருத்தன் ரகசியமாக தேம்பியது சிறு சத்தமாக அபிநயாவின் காதில் விழுந்தது. "நேத்து காலையிலயே அவன் பாடியை எரிச்சிட்டாங்க.. அவன் இறந்தது நிஜமாவே உங்களுக்கு தெரியாதா.? எப்பவும் அவனோடுதானே இருப்பிங்க நீங்க.?" என்றான் ஜீவாவின் நண்பன்.

மீனாவின் கண்களில் கண்ணீர் கொடகொடவென்று கொட்டி விட்டது. சுவேதா தடுமாற்றமாக தனக்கு பின்னால் இருந்த சுவற்றில் சாய்ந்தாள்.

"நீ பொய்தானே சொல்ற.?" கரகரத்த குரலில் கேட்டாள் அபிநயா.

"இல்லங்க.." என்றவன் தன் கண்களோரம் படிந்த ஈரத்தை சுட்டு விரலால் துடைத்துக் கொண்டான்.

"நாங்க நேத்து முழுக்க அவனோட இறுதி சடங்குலதான் இருந்தோம்.." என்றான் மற்றொருவன்.

"முந்தாநேத்து சீனியர் ஒருத்தர் பாத்ரூம்ல வச்சி அவனை அடிச்சிட்டாரு. பயங்கர அடி.. அவனை இதுவரை அவங்க அம்மா அப்பா கூட அடிச்சது இல்ல.. நீங்களே பழகிட்டுதானே இருக்கிங்க. அவன் எந்த அளவுக்கு செல்லம்ன்னு உங்களுக்கே தெரியும் இல்லையா.? அந்த சீனியர் பேட் வேர்ட்ஸ்ல கேவலமா திட்டி அடிச்சிடவும் அவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சின்னு நினைக்கிறேன்.. அன்னைக்கு முழுக்க முகமெல்லாம் ரத்த காயத்தோடுதான் இருந்தான். பசங்களெல்லாம் கூட அவனை ரொம்ப கிண்டல் பண்ணாங்க.. 'ரொம்ப பீல் பண்றேன்டான்னு சொல்லி அழுதான் எங்ககிட்ட.. நாங்கதான் இதெல்லாம் பிரச்சனையான்னு நினைச்சி அசால்டா இருந்துட்டோம்.. முந்தாநேத்து வீட்டுக்கு போன உடனே அநியாயமா தூக்கு போட்டுக்கிட்டான்.. சின்ன வயசுல இப்படி ஒரு முடிவை அவசரப்பட்டு அவன் எடுப்பான்னு நான் நினைச்சி கூட பார்க்கல.." என்றவன் சொல்லி முடித்ததும் குலுங்கி அழ ஆரம்பித்தான். உடன் இருந்தவர்களும் தங்களின் கண்களை துடைத்துக் கொண்டனர். வகுப்பிலிருந்த மற்றவர்கள் அவர்களை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மீனா அனிச்சையாக முகத்தை மூடினாள். "சீனியர்.." என்று அவன் அழைக்கும் செல்ல குரல் காதுகளில் ஒலித்தது. பழகிக் கொண்டிருந்தவன் திடீரென இறந்தானே என்று நினைக்கையில் அவளுக்கு இதயமே வெடித்து விடும்போல இருந்தது. சுவேதா விம்மலாய் அழ ஆரம்பித்தாள்.

"அன்புவை சும்மாவே விட கூடாதுடா.. அவன் அடிச்சதாலதான் ஜீவா சூஸைட் பண்ணிக்கிட்டான்.." என்று அழுகையின் இடையே சொன்னான் ஜீவாவின் மற்றொரு நண்பன். அவன் இதை சொல்ல ஆரம்பிக்கும்போதே "சிஸ்டர்.." என்று வகுப்பிலிருந்த மாணவர்கள் சிலர் அபிநயாவை நோக்கி ஓடி வந்தனர்.

அழுதுக் கொண்டிருந்த ஜீவாவின் நண்பன் அவசரமாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான். மீனா திரும்பி பார்த்தாள். அபிநயா மயக்கமாக தரையில் விழுந்து கிடந்தாள். சுவேதாவும் மீனாவும் அழுத நேரத்தில் அவள் மட்டும் அதிர்ச்சியாய் நின்றிருந்ததை கண்ட ஜீவாவின் நண்பன் அவள் இப்படி மயங்கி விழுவாள் என்று நினைக்கவேயில்லை.

"அபி.." தோழியின் அருகே குனிந்து அவளை எழுப்ப முயற்சித்தாள் சுவேதா. ஜீவாவின் நண்பன் அருகே இருந்த மாணவன் தந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி அபிநயாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

"சீனியர் ஒருத்தங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.." என்ற அந்த வகுப்பு மாணவர்களின் குரல் அடுத்தடுத்த வகுப்புகளுக்கும் போய் சேர்ந்தது.

"அபி எழுடி.." மீனா தோழியின் தோளை உலுக்கினாள். அபிநயா கண் திறக்கவேயில்லை. விசயம் அறிந்து ஆசிரியர்கள் சிலரும் அங்கே வந்து விட்டனர்.

"என்ன ஆச்சி.?" என கேட்டார் ஒரு பேராசிரியை.

"பேசிட்டு இருந்தாங்க.. திடீர்ன்னு மயங்கி விழுந்துட்டாங்க மேடம்.." என்றான் ஜீவாவின் வகுப்பு மாணவன் ஒருவன்.

அருள் குமரன் அபிநயாவின் அருகே மண்டியிட்டார். அவளின் கன்னத்தை தட்டினார். அபிநயாவின் முகம் முழுவதுமாக தண்ணீரில் நனைந்து இருந்தது. ஆனால் அவளிடம் மாற்றமே இல்லை.

"இந்த காலத்து பசங்களே இப்படிதான்.. டயட் மெயிண்டன் பண்றேன்னு சரியா சாப்பிடுறதே இல்ல.. வாரத்துக்கு இரண்டு பேர் இப்படிதான் மயக்கம் போட்டு விழறாங்க.." என்றார் பேராசிரியை ஒருவர்.

அன்பு தன் பையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான். பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை கவர் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான். "எனக்கு என்னவோ போல இருக்குடா.." என்றான் குணாவிடம்.

"ஏன்.?" குணா புரியாமல் கேட்டான்.

"தெரியலடா.." என்றவன் பெஞ்சின் மீது தலை சாய்த்து படுத்தான்.

"எல்லாம் தள்ளுங்க.." என்ற அருள் குமரன் அபிநயாவை தூக்கினார்.

"ஹாஸ்பிட்டல் கொண்டு போகலாம்.. நீங்க யாராவது வரிங்களா மேம்.?" என்றார் பேராசிரியைகளிடம். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு பேராசிரியை முன்னால் வந்தார். சுவேதாவும் மீனாவும் அருள் குமரனை பின் தொடர்ந்தனர்.

அருள் குமரன் தந்த கார் சாவியை கையில் வாங்கிய மாணவன் அவரின் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு ஓடினான். அவர்கள் வரும் முன்பு கதவை திறந்து விட்டான்.

அபிநயாவை பின் சீட்டில் கிடத்திய அருள் குமரன் வேகமாக காரை எடுத்தார். மீனாவும் சுவேதாவும் வழியெங்கும் அபிநயாவை அழைத்தபடியே இருந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பேராசிரியை "பயப்படாதிங்கம்மா.. அவளுக்கு ஒன்னும் ஆகாது.. இது வெயில் மயக்கமா இருக்கும்.." என்றார்.

அருள் குமரன் தன் போனை பின்னால் நீட்டினார். "அவளோட பேரண்ட்ஸ்க்கு கால் பண்ணுங்க.." என்றார்.

போனை வாங்கிய மீனா "அங்கிள் நம்பர் உனக்கு தெரியுமா.?" என்றாள் சுவேதாவிடம். அதிர்ச்சியில் அவளுக்கு போன் நம்பர் கூட மறைந்துவிட்டது‌. சுவேதா நடுங்கும் கரங்களால் போனை வாங்கி நம்பரை பதிந்து வினோத்திற்கு அழைத்தாள்.

மறுமுனையில் வினோத் போனை எடுத்ததும் "அங்கிள் நான் சுவேதா பேசுறேன்.. அபிக்கு திடீர்ன்னு மயக்கம் வந்துடுச்சி.. நாங்க அவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போறோம்.. நீங்க வரிங்களா.?" என்றாள் தடுமாற்றமாக.

"மயக்கமா.? ஹாஸ்பிட்டல் போற அளவுக்கா.?" என்றவருக்கு சேதியை கேட்டதற்கே கை கால்கள் நடுங்கியது. "எந்த ஹாஸ்பிட்டல்ம்மா.?" என்றார்.

"ஹாஸ்பிட்டல் கேட்கறார் சார்.." என்று அருள் குமரனிடம் சொன்னாள் சுவேதா‌.

"இங்கே வந்த பிறகு போன் பண்ண சொல்லு.." என்று அவர் சொன்னதையே வினோத்திடம் சொல்லி விட்டு போன் இணைப்பை துண்டித்தாள் சுவேதா.

வகுப்பிற்கு பேராசிரியை வந்து பத்து நிமிடத்திற்கும் மேலாகிவிட்டது.

அன்பு அடிக்கடி தன் நெஞ்சை தடவிக் கொண்டான். உடம்பை முன்னும் பின்னுமாக நெளித்தான்.

தன் மீது வந்து சாய்ந்த அன்புவை தள்ளி விட்டான் குணா. "ஏன்டா‌.? கொஞ்ச நேரம் நேரா உட்காருடா.." என்றான் எரிச்சலோடு. மீனா வேறு இன்னும் வகுப்பிற்குள் வரவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தான் அவன்.

"ஒரு மாதிரியா இருக்குடா.. ஹார்ட் வெடிக்கற மாதிரி இருக்கு.." என்றவனிடம் தண்ணீரை நீட்டினான் குணா. "இந்தா அந்த தண்ணீரை குடி.. சரியா போயிடும்.." என்றான்.

"இல்லடா.. நிறைய தண்ணி குடிச்சிட்டேன்.." என்ற அன்பு அபிநயா அமரும் இடத்தை பார்த்தான். "அவங்க மூணு பேரும் எங்கடா போனாங்க.?" என்று திணறலாக அவன் கேட்ட அதே நேரத்தில் "மேம்.. அன்புவுக்கு உடம்பு சரியில்லை.." என்று பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியையிடம் சொன்னான் குணா.

பாடம் நடத்துவதை விட்டுவிட்டு திரும்பி பார்த்த பேராசிரியை "இன்னைக்கு உங்க கிளாஸ்க்கு என்ன ஆச்சி.? இப்பதான் அபியை ஹாஸ்பிட்டல் கூட்டி போனாங்க.. இப்ப இவனுக்குமா.?" என்றார் சலிப்போடு.

அன்பு அதிர்ச்சியோடு எழுந்து நின்றான். "அபிக்கு என்ன ஆச்சி.?" என்றான் முன்னால் நடந்தபடி.

"அந்த பொண்ணுக்கு மயக்கம் வந்துடுச்சின்னு அருள் சார் அவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போயிருக்காங்க.. இப்ப உனக்கு என்ன ஆச்சின்னு சொல்லு.." என்றபடி முன்னால் வந்தார் பேராசிரியை.

அன்பு பேராசிரியைக்கு பதிலை சொல்லாமல் வேகமாக வெளியே ஓடினான்.

பேராசிரியை குணாவை முறைப்போடு பார்த்தார். "இவனுக்குதான் உடம்பு சரியில்லையா.?" என்றார்.

"உண்மைதான் மேடம்.. உடம்பு சரியில்லைன்னுதான் இவ்வளவு வேகமாக ஹாஸ்பிட்டலுக்கு ஓடுறான்.." என்று மானசீகமாக நெற்றியில் அடித்தபடி சொன்னான் குணா. வகுப்பிலிருந்த மாணவர்கள் அவன் சமாளிப்பதை கண்டு கலகலவென சிரித்தனர்.

குணா தயங்கி தயங்கி பேராசிரியையை பார்த்தான். "அவனுக்கு துணையா நானும் போகட்டுமா மேடம்.‌? ப்ளீஸ்.!" என்றான் கெஞ்சலாக.

பேராசிரியை தன் நெற்றியை பற்றினார். "கெட் அவுட்.." என்றார் கோபத்தோடு.

'கொடுமை..' என நினைத்தபடியே குணாவும் வெளியே ஓடினான்.

மருத்துவமனையில் அபிநயாவிற்கு ஊசியை போட்டு குளுக்கோஸ் இறக்கினார் மருத்துவர். "கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடுவாங்க.." என்றார்.

அருள் குமரன் தன் நெற்றி வியர்வையை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு மற்றவர்களை பார்த்தார். "அவ எழுந்ததும் காலேஜ்க்கு கிளம்பிடலாம்.. டோன்ட் வொரி.." என்றார்.

"தேங்க்ஸ் சார்.." என்றாள் சுவேதா.

"இது என் கடமைதான்ம்மா.. உங்களுக்கு நாங்களும் ஒரு பேரண்ட்ஸ் போலதானே.." என்றவர் தன் சக பணியாளரை பார்த்தார். "வரிங்களா மேம்.. கேன்டின் போய் ஒரு டீ சாப்பிட்டு வருவோம்.." என்று அழைத்தார். தேனீர் பிரியரான அவருக்கு அடிக்கடி தேனீர் நினைவு வந்து விடும்.

பேராசிரியை அபிநயாவின் முகத்தை பார்த்தார். "நாங்க இவளுக்கு துணையா இருக்கோம் மேடம்.." என்றாள் மீனா.

"இல்ல.. நீங்களும் வாங்க.." என அழைத்தார் அருள் குமரன்.

"இல்ல சார்.. நாங்க இப்பதான் சாப்பிட்டோம்.. டீ வேண்டாம்.. நீங்க போய்ட்டு வாங்க.." என்று சொன்னாள் சுவேதா.

அருள் குமரனும் பேராசிரியையும் அங்கிருந்து சென்ற பிறகு அபிநயாவின் கட்டிலின் மீது வந்து அமர்ந்தாள் சுவேதா.

"அன்புதான் ஜீவாவை அடிச்சான்னு பசங்களில் ஒருத்தன் சொன்னான்.. அது உன் காதுளையும் விழுந்ததா.?" என்றாள் தயக்கமாக.

மீனா ஆமென்று தலையசைத்தாள். "அவங்க அப்படிதான் சொல்லிக்கிட்டாங்க.. அன்புதான் அவனை கெட்ட வார்த்தையில் திட்டி அடிச்சிருக்கான்.." என்றாள். இதை சொல்லும் போதே அவளுக்கு குரல் தளுதளுத்து விட்டது.

"எப்பவும் கூடவே சுத்திட்டு இருப்பான்.. நாய்க்குட்டினாலும் சிரிப்பான்.. பேய்க்குட்டினாலும் சிரிப்பான்.. அவனுக்கு இப்படி ஆச்சின்னு நம்பவே முடியல.." என்றாள் மீனா.

ஜீவாவின் நினைவில் சுவேதா தன் உதட்டை அழுந்த கடித்தாள். ஆனால் அவளின் விம்மல் குரல் அந்த உதட்டை தாண்டி வெளியே கேட்டது. சத்தமில்லாமல் அழ நினைத்தவளுக்கு தொண்டை நெருப்பாக எரிந்தது. கண்ணீர் சூடாக கன்னத்தில் உருண்டது.

மீனா சுவர் பக்கம் திரும்பி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது‌.

கழிவறைக்குள் புகுந்த ஜீவாவின் நண்பன் ஒருவன் தன் பேன்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த தன் செல்போனை வெளியே எடுத்தான். அந்த கழிவறையினுள் வேறு யாராவது இருக்கிறார்களா என பார்த்துவிட்டு தன் போனை ஆன் செய்து ஜீவாவின் போனிற்கு அழைத்தான்.

"லூசு பயலே.. நீ செத்துட்டன்னு நாங்க சொன்னதும் அந்த அபி அக்கா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா.. போடா நீயும் உன் டிராமாவும்.. அவங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா நிஜமாவே உனக்கு சங்குதான்டி மச்சி.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN