சிக்கிமுக்கி 53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அருள் குமரன் தன் சக பேராசிரியையுடன் இணைந்து கேன்டினில் அமர்ந்து தேனீர் அருந்திய வேளையில் அந்த மருத்துவமனைக்குள் புயலாக நுழைந்தான் அன்பு.

கல்லூரிக்கு அருகில் இரண்டு மருத்துவமனைகள் இருந்தன. மற்றொரு மருத்துவமனைக்குதான் முதலில் சென்றான். அங்கிருந்த வரவேற்பறை பெண்ணிடம் விசாரித்ததில் கல்லூரி மாணவி யாரும் அங்கே வரவில்லை என்பதை அறிந்துக் கொண்டான். இரண்டாவதாக இந்த மருத்துவமனைக்கு வந்தவன் நேராய் வரவேற்பறை பெண்மணியிடம் ஓடினான்.

"பக்கத்து காலேஜ்ல இருந்து எந்த ஸ்டூடன்டாவது இங்கே வந்து அட்மிட் ஆகி இருக்காங்களா மேடம்.? இருபது வயசு பொண்ணு.." என்றான் இரைத்த மூச்சை சீராக விட முயன்றபடியே.

கம்ப்யூட்டரை தட்டியபடி நிமிர்ந்த பெண் "நேம் சொல்லுங்க.." என்றாள்.

"அபி.. அபிநயா.." என்றான் அவசரமாக.

"ரூம் நம்பர் தெர்டின்.." அவள் சொன்னதும் வேகமாக உள்ளே ஓடினான் அன்பு.

மருத்துவமனை வாசலுக்கு வந்து சேர்ந்த குணா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளே வந்தான். அன்பு அந்த ஹாலின் கடைசியில் ஓடி கொண்டிருப்பதை பார்த்தவன் அவன் ஓடிய அதே திசையில் ஓடினான்.

மீனாவுக்கும் சுவேதாவுக்கும் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. ஜீவாவின் முகமே மனம் முழுக்க நிறைந்து இருந்தது.

அபிநயாவின் மயக்கம் கொஞ்சமாக தெளிந்தது. எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல் அரை தூக்கத்தில் இருந்தவள் தோழிகளின் அழுகுரலில் முழு மயக்கம் தெளிந்து பதறியடித்து எழுந்து அமர்ந்தாள். கையில் ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸை பார்த்தவள் என்ன நடந்தது என்று யோசித்தாள்.

"ஜீவா நேத்து செத்துட்டான்.." ஜீவாவின் நண்பன் சொல்லியது அபிநயாவின் நினைவில் வந்தது. கண்களில் கண்ணீர் சிந்தியது. முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

தோழிகள் இருவரும் அவளை திரும்பி பார்த்தனர். "ஜீவா.." என்ற மீனாவிற்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது. அபிநயாவை தங்களோடு அணைத்துக் கொண்டார்கள்.

"அவனை ரொம்ப மிஸ் பண்றேன் அபி.." என்று அழுதாள் சுவேதா.

கேன்டினிலிருந்து வெளியே நடந்தார்கள் பேராசிரியர்கள் இருவரும்.

"சார் உங்களோடது ஓ நெகடிவ்வா.?" என கேட்டு அழுதபடி அவர்களின் எதிரே வந்து நின்றாள் பெண் ஒருத்தி.

"என்னோடது ஓ நெகடிவ்தான்.." என்றார் பேராசிரியை.

"என் பிரதர் ஆக்ஸிடென்ட் ஆகி ரொம்ப சீரியஸா இருக்காரு.. அவருக்கு ஆபரேசன் நடக்கணும்ன்னா ப்ளட் வேணும்.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க‌.." என்று கெஞ்சினாள் அப்பெண்.

பேராசிரியை அருள் குமரனின் முகம் பார்த்தார். "ப்ளட் டொனேட் செய்ய கொஞ்சம் பயம்.. கூட வரிங்களா.?" என்றார்.

அருள் குமரன் அவரை புரியாமல் பார்த்தார். "ஊசின்னா பயம் சார்.." பேராசிரியை தயக்கமாக சொன்னார். அருள் குமரனுக்கு சிரிப்பு வரும்போல இருந்தது.

"போகலாம் வாங்க.." என்று அவரை அழைத்துக் கொண்டு அந்த பெண்ணின் பின்னால் நடந்தார். 'நாங்க திரும்பி வரதுக்குள்ள அபி கண்ணை விழிச்சிட்டா சரி..' என்று எண்ணினார்.

அதே நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அன்பு. "அபி உனக்கு என்ன ஆச்சி.?" என்றான்.

தோழிகள் இருவரும் அபிநயாவை விட்டு விலகினர். சுவேதாவும் மீனாவும் தங்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார்கள்.

"நீ ஏன் இங்கே வந்த.?" என்று கோபத்தோடு கேட்டாள் சுவேதா. அவளின் கோபம் அபிநயாவிற்கு புரியவில்லை.

"நான் அபியை பார்க்க வந்தேன்.." என்றவன் தன் வழியில் நின்றிருந்த சுவேதாவை விலக்கி நிறுத்திவிட்டு அபிநயாவை நோக்கி ஓடினான்.

"ஏன் உன்னை ஹாஸ்பிட்டல் சேர்த்து இருக்காங்க.?" என்று கவலையோடு கேட்டான். அபிநயாவிற்கு அவனின் திடீர் பாசம் மனதை நெகிழ செய்தது.

"எதுக்கு இங்கே வந்து நடிச்சிட்டு இருக்க அன்பு.?" மீனா விழியின் ஈரத்தை துடைத்துக் கொண்டு கேட்டாள்.

அன்பு குழப்பத்தோடு அவளை பார்த்தான். "உங்க இரண்டு பேருக்கும் என்ன ஆச்சி.?" என்றான் எரிச்சலாக.

"உன்னாலதான் ஜீவா செத்து போனான்.." என்று சொல்லும்போதே உடைந்து அழுதாள் சுவேதா.

அபிநயா அதிர்ச்சியோடு சுவேதாவை பார்த்தாள். "சுவேதா நீ என்ன சொன்ன.?" என்றாள் திணறலாக.

"இவன்தான் ஜீவாவை கெட்ட வார்த்தையில் திட்டி அடிச்சிருக்கான் அபி.. ஜீவா சாக காரணம் இவன்தான்.." என்றாள் மீனா.

அன்பு கட்டிலை விட்டு எழுந்தான்.

"யார் இறந்தது.?" என்றான் குழப்பமாக.

"ஜீவா.. நீதான் அவனை கொன்னுட்ட.." என்று அவனின் தோளில் அடித்தாள் சுவேதா.

"ஜீவா.? அவன் ஏன்.? அதுக்கு நீ ஏன் என்னை காரணமா சொல்ற.?" என்றவனை முறைத்தாள் மீனா.

"நீ அவனை பேட் வேர்ட்ஸ்லயே திட்டியிருக்க.. அவனை அடிச்சிருக்க.." என்றாள்.

அன்பு கழிவறை விசயத்தை நினைத்து பார்த்தான். அவனை திட்டி அடித்தது நினைவிற்கு வந்தது. அந்த காரணத்திற்காக அவன் இறந்தானா என்று குழப்பமாக எண்ணினான்.

"ஆனா இதுக்கு ஏன் அவன் சாகணும்.?" என்று கேட்டான் அன்பு.

அபிநயா தலையை பிடித்தபடி கட்டிலை விட்டு இறங்கினாள்.

"ஜீவாவை ஏன் திட்டி அடிச்ச.?" என்றாள் சுவற்றை பிடித்து நின்றபடி.

திரும்பி பார்த்த அன்பு அவளருகே ஓடி வந்தான். "நீ படுத்துக்க.." என்றான்.

"நீதான் அவனை திட்டி அடிச்சியா.? அவன் உன்னை என்ன பண்ணான்.? அவன் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா.? அவனை அடிக்க உனக்கெப்படி மனசு வந்துச்சி.?" என்றாள் அழுகையோடு.

அன்பு பற்களை கடித்தான். "இரண்டடி அடிச்சதுக்கு யாரும் சாக மாட்டாங்க.. அவனுக்கு வேற ஏதாவது காரணமா இருந்திருக்கலாம்.." என்றான்.

அந்த அறைக்குள் நுழைந்த குணா "யார் இறந்தாங்க.?" என்றான்.

"எங்க ஜுனியர் ஜீவா.." என்று சொல்லிவிட்டு கண்களை கசக்கிய மீனா "அவனை உன் பிரெண்டுதான் அநியாயமா கொன்னுட்டான்.. அவனை அடிச்சி திட்டி இருக்கான்.. அந்த முட்டா பயலும் அதையே அவமானம்ன்னு நினைச்சி தற்கொலை பண்ணியிருக்கான்.." என்றாள் அழுகையின் இடையே.

குணா அதிர்ச்சியோடு நண்பனை பார்த்தான்.

"நீயும் என்னை குறை சொல்ல போறியா.?" என்று அவனிடம் கேட்டான் அன்பு.

"அந்த பையன் இறந்துட்டான்டா முட்டாள்.. லெட்டர் ஏதாவது எழுதி வச்சிருந்தா போலிஸ் உன்னைதான் தேடி வரும்.." என்ற‌ குணா நெற்றியை பிடித்தான். "வார்னிங் தரேன்னுதானே போன.? உன்னை யார் அவனை அடிச்சி திட்ட சொன்னது.?" என்றான்.

"டேய்.. அவன் சாவான்னு நான் என்ன கனவா கண்டேன்.?" என்று எரிச்சலாக கேட்ட அன்புவை கை பற்றி தன் பக்கம் திருப்பினாள் அபிநயா.

"அவனை ஏன் நீ அடிச்ச.? அவன் எவ்வளவு நல்ல பையன் தெரியுமா.?" ஆதங்கமாக கேட்டாள்.

அன்பு தன் கையை விடுவித்துக் கொண்டு அவளை முறைத்தான்.

"நான் அவன் சாகணும்ன்னு நினைச்சி அடிக்கல.. உன் பின்னாடியே எப்பவும் சுத்திட்டு இருக்கான்னு வார்ன் பண்ணி விட்டேன் அவ்வளவுதான். அவன் இதுக்கெல்லாம் செத்து போனா நான் எப்படி காரணம் ஆக முடியும்.?" என்றான்.

"வார்ன் பண்ணி விட்டியா.? எனக்காகவா.?" என்று கேட்ட அபிநயா அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டாள். மயக்கத்தில் இருந்து எழுந்தாலும் கூட அவனின் கன்னத்தை சுளீரென தாக்கியது அந்த அறை.

"அவன் என் பின்னாடி சுத்தினா உனக்கு என்ன போகுது.? உனக்குதான் என்னை பிடிக்கலன்னு சொல்லி பிரிஞ்சி போயிட்ட இல்ல.. அப்புறம் ஏன் இப்படி.? என் மொத்த வாழ்க்கையையும் நாசம் பண்ணாதான் உனக்கு நிம்மதியா இருக்குமா.?" என்றாள் கோபத்தோடு.

"அபி.. அவன் இப்படி பண்ணுவான்னு இவனுக்கு மட்டும் எப்படி தெரியும்.?" நண்பன் மீது மலையளவு கோபம் இருந்தாலும் கூட அவனுக்கு ஆதரவாகவே பேசினான் குணா.

மீனா குணாவை முறைத்தாள். "அசால்டா பதில் சொல்லாதிங்க இரண்டு பேரும்.. அவன் தற்கொலை பண்ணிக்கற முடிவுக்கு போயிருக்கான். அப்ப எந்த அளவுக்கு இவன் அவனை அடிச்சிருப்பான்.?" என்றாள் கோபமாக.

திடீர் கொலைக்காரன் ஆகி விட்டது அன்புவிற்கு குழப்பத்தை தந்தது. அபிநயாவிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"சா.. சாரி அபி.." என்றான் தயக்கமாக.

"உன் சாரியை நீயே வச்சிக்கிட்டு ஜீவாவை எனக்கு திருப்பி கொடு.." என்ற அபிநயாவிற்கு கண்ணீரால் கண்கள் இரண்டும் மங்கலானது.

"அ.. பி.." அன்பு அவளுக்கு சொல்ல சமாதான வார்த்தைகள் தேட இருந்த நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தான் ஜீவா. அங்கிருந்தவர்களை பார்த்தவன் ஓடி சென்று அபிநயாவை கட்டிக் கொண்டான்.

"சாரி சீனியர்.. சாரி.. சாரி.. ப்ளீஸ்.. மன்னிச்சிடுங்க.. உங்களுக்கு இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்ல.‌." என்றான் கரகரத்த குரலில்.

அந்த அறையினில் இருந்த மற்றவர்கள் ஜீவாவை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

அபிநயா தன்னை கட்டியணைத்து நின்றிருந்தவனை பார்த்தாள். "ஜீவா.." என்றாள் தயக்கமாக.

விலகி நின்ற ஜீவா தன் கண்களை துடைத்துக் கொண்டு அவளை பார்த்தான். "சாரி சீனியர்.." என்றான்.

"நீ செத்துட்டன்னு சொன்னாங்கடா.." என்றாள் அவள் அவனின் தலையை வருடியபடி.

"அவங்க சும்மா சொன்னாங்க சீனியர்.. இது.. இது டிராமா.." என்றவனை தன் பக்கம் வேகமாக திருப்பினான் அன்பு.

"டிராமாவா.?" என்றவன் அவனின் சட்டையை தன் இடதுகையால் பற்றினான். "உன் டிராமாவால இவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னடா செய்றது.?" என்றவன் அவனை அறைய தன் வலது கையை உயர்த்தினான். ஜீவா பயந்துப்போய் கண்களை மூடினான். அன்புவின் கையை பற்றிய அபிநயா "இன்னொரு முறை நீ அவனை அடிச்சா அப்புறம் நடக்கறதே வேற.." என்றாள் எச்சரிக்கும் விதமாக.

"நீயும் இவனுக்கு சப்போர்ட் பண்றியா.?" கோபமாக கேட்ட அன்புவை கண்கள் திறந்து பார்த்த ஜீவா "நீங்கதானே என்னை முதல்ல அடிச்சிங்க.? இதுவரை என் பேரண்ட்ஸ் கூட என்னை பேட் வேர்ட்ஸ்ல திட்டியதே இல்ல.." என்றான். இதை சொல்லும்போதே அவனுக்கு குரல் கரகரத்து போய் விட்டது.

அன்புவின் இடது கையை ஜீவாவின் சட்டை காலரிலிருந்து எடுத்து விட்டாள் மீனா. "நீ ஏன் இப்படி இருக்க அன்பு.? காரணமே இல்லாம இவனை அடிக்கற ரூல்ஸை உனக்கு யார் தந்தது.? எங்க முன்னாடியே இவனை அடிக்க டிரை பண்ற.. பாத்ரூம்ல வச்சி எவ்வளவு அடிச்சியோ.." என்றாள்.

ஜீவா தன் சட்டையை மேலே தூக்கினான். அவனின் வயிற்று பகுதியில் உண்டான உதைப்பட்ட காயம் கன்றிப்போய் இருந்தது.

அபிநயாவிற்கு அவனின் கன்றி போன காயத்தை கண்டு மீண்டும் அழுகை வந்தது. "நீ மனுசனா மிருகமா அன்பு.?" என்று கேட்டாள் சுவேதா.

மூவரும் சேர்ந்து தன்னை குற்றம் சாட்டுவது அன்புவிற்கு கோபத்தை தந்தது. "இவன் நடிக்கிறான்.‌." என்றான்.

"அப்படின்னா இந்த காயம் உன்னால உண்டாகலையா.?" ஜீவாவின் வயிற்று பகுதியை கை நீட்டி கேட்டாள் அபிநயா.

அன்பு பதில் சொல்லாமல் தரை பார்த்தான்.

"இவன் உன் பின்னாடி ‌ஓவரா சுத்தினான். அதனால்தான் அடிச்சேன்.." என்றான் சில நொடிகளுக்கு பிறகு.

"அஞ்சனா சிஸ்டர் கூடதான் உங்களோடு ஓவரா பழகினாங்க.. ஆனா அப்பவும் சீனியர் அவங்களை இப்படி அடிக்கல.." ஜீவா இப்படி சொல்லவும் மற்றவர்கள் ஆச்சரியத்தோடு அவனை பார்த்தனர். சம்மதமே இல்லாமல் இதை ஏன் இழுக்கிறான் என்று யோசித்தார்கள்.

"நீங்க இரண்டு பேரும் எவ்வளவு லவ் பண்றிங்கன்னு எனக்கும் தெரியும்.. உங்களை சேர்த்து வைக்கதான் இப்படி செஞ்சேன்.. உங்களுக்கு புரிய வைக்க இப்படி செஞ்சேன்னும் சொல்லலாம்.. இன்னைக்கு நான் செத்தே போயிருந்தாலும் அதுக்கு காரணம் நான் மட்டும்தான். நீங்க கிடையாது.. அது போலதான் அன்னைக்கு அஞ்சனா சிஸ் சூஸைட் அட்டெம்ட்டுக்கும் காரணம் அவங்களேதான்‌.." என்றான்.

அன்பு அவனை கோபத்தோடு பார்த்தான். அபிநயா ஜீவாவை தன் பக்கம் திருப்பினாள். "முட்டாள்.. அதுக்காக இப்படியாடா செய்வ.? சொல்லி புரிய வைக்க அவனுக்கு என்ன புத்தியா இருக்கு.? நானே அவனை வேண்டாம்ன்னு சொல்லி வந்துட்டேன். நீ ஏன் தேவையில்லாத விசயத்துக்கெல்லாம் டிராமா போடுற.." என்றாள்.

"நீங்களும் கூடதான் அவரை பத்தி புரிஞ்சிக்கல சீனியர். நான் செத்துட்டேன்னு தெரிஞ்சதும் டென்சன்ல என்ன செய்றதுன்னு தெரியாமதானே நீங்களும் நின்னிருப்பிங்க. அந்த டைம்ல எதிர்ல இருக்கற யாரை பத்தியும் யோசிக்க தோணாது சீனியர்.. அந்த கோபத்துல நாலஞ்சி வார்த்தைங்க தவறா வந்துட்டா அதை மன்னிச்சிட கூடாதா.?" என்றான்.

"சில்லு வண்டு என்னவெல்லாம் பேசுது பாரு.." என்று கிண்டலடித்தான் குணா.

"நீங்க இரண்டு பேருமே லவ் பண்றிங்க. இன்னமும் மறக்கல.. அப்புறம் ஏன் பிரிஞ்சி நின்னு சண்டை போட்டுட்டே இருக்கிங்க.? நான் சீனியரோடு பேசினாலே ஜெலஸால என்னை அடிக்க வராரு அன்பு அண்ணா.. திட்டுறேன் திட்டுறேன்னு எப்பவும் அன்பு அண்ணாவையே நினைச்சிட்டு இருக்காங்க சீனியர்.. நானாவது ஒரு காரணத்துக்காக டிராமா பண்ணேன்.. ஆனா நீங்க காரணமே இல்லாம ஏன் டிராமா பண்றிங்க.?" என்று இருவரையும் பார்த்து கேட்டான் ஜீவா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN