சிக்கிமுக்கி 54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜீவா சொன்னதை அவர்கள் இருவராலும் மறுக்கவும் முடியவில்லை. அதே நேரத்தில் உடனடியாக அதை ஒத்துக் கொள்ளவும் மனம் வரவில்லை.

"உங்களை நீங்களே ஏமாத்திக்கறதுக்கு பதிலா உங்க ஈகோவை விட்டுட்டு சமரசம் ஆகுங்க.." என்றான் ஜீவா.

"இதுக்காகவெல்லாம் ஏன்டா இப்படி பண்ற.? நீ இறந்துட்டன்னு கேட்டு அபி மயக்கம் போட்டு விழுந்துட்டா.. அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னடா பண்றது.?" என்று கோபத்தோடு கேட்டான் குணா.

"எனக்கும் உயிரே போயிடுச்சிடா பையா.." என்று கண்களை கசக்கினாள் மீனா.

"சாரி மீனுக்கா.. சாரி சுவேதாக்கா.." என்று இருவரிடமுமே மன்னிப்பு கேட்டான் ஜீவா.

"இனிமேல் இப்படி எதுவும் பண்ணாதடா.." என்ற அபிநயா தன் கையில் இருந்த ட்ரிப்ஸ் இணைப்பை பார்த்தாள்.

"சாதாரண மயக்கம்தானே.? அங்கேயே கொஞ்ச நேரம் படுக்க வச்சிருந்தா எழுந்திருக்க மாட்டேனா.? ஏன் இங்கே வரைக்கும் கூட்டி வந்திங்க.?" என்று சலிப்போடு கேட்டாள்.

"தண்ணீரை முகத்துல தெளிச்சும் நீ எழலன்னுதான் உன்னை இங்கே கூட்டி வந்தோம்.. உங்க அப்பாவுக்கும் சொல்லியிருக்கோம்.. அவர் வந்துட்டு இருக்காரு.." என்று சுவேதா சொன்னது கேட்டு அபிநயா அதிர்ச்சியடைந்த வேளையில் அந்த அறைக்குள் நுழைந்தார் வினோத்.

மகளிடம் ஓடி வந்த வினோத் அவளின் சோர்ந்த முகத்தையும் அவளுக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த ட்ரிப்ஸையும் கண்டு மனம் வாடினார்.

"என்ன ஆச்சி அபி.? சாப்பிடலையா.? இல்ல வெயில்ல சோர்ந்துட்டியா.?" கவலையோடு கேட்டவர் அவளின் கழுத்தில் புறங்கையை வைத்து அவளின் உடல் சூட்டை சோதித்தார்.

வினோத் அங்கே வந்ததும் பயந்து போய் விட்டான் ஜீவா. அபிநயாவை பார்த்து திருதிருவென விழித்தான். தன்னை பற்றி சொல்லி விடுவாளோ என்று பயமாக இருந்தது அவனுக்கு.

"பசிக்கவே இல்லப்பா மதியம்.. அதான் லஞ்ச்சை ஸ்கிப் பண்ணேன். மயக்கம் வந்துடுச்சி.." என்று சொன்னாள் அபிநயா. அப்பா இதை நம்புவாரா என்று சந்தேகமாக இருந்தது அவளுக்கு.

"நேரா நேரத்துக்கு சாப்பிடாம ஏன் இப்படி பண்ற.? திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு கேட்டதும் எனக்கு கை காலே ஓடலே.." என்று சலித்துக் கொண்டார் அவர்.

"சாரிப்பா.. இனி கவனமா இருக்கேன்.." என்றவளின் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து விட்டவர் ஏதோ உறுத்தலாக உள்ளதே என்று திரும்பி பார்த்தார்.

சுவேதா, மீனா, குணா, ஒரு புது பையன் அப்புறம் அவர்களின் அருகே அன்புவும் நின்றுக் கொண்டிருந்தான். ட்ரிப்ஸ் ஸ்டேன்டை தூக்கி அவன் தலை மேல் போட வேண்டும் போல இருந்தது வினோத்திற்கு.

"இவன் இங்கே என்ன பண்றான்.?" என்றார் கோபத்தோடு.

"அவர் எனக்கு துணையா வந்தார் சார்.." என்று இடை புகுந்து சொன்னான் ஜீவா.

"யார் இது.?" அபிநயாவிடம் கேட்டார் அவர்.

"நான் அவங்களோட ஜூனியர். சீனியர்க்கு எப்படி மயக்கம் வந்ததோ அதே போல எனக்கும் திடீர்ன்னு காய்ச்சல் வந்துடுச்சி.. எனக்கு துணையா அன்பு அண்ணாவை கூட்டி வந்தாங்க.. இன்ஜெக்சன் பண்ணி முடிச்சதும் நான்தான் அன்பு அண்ணாவை இங்கே கூட்டி வந்தேன்‌‌.." என்று இதற்கும் ஜீவாவே பதில் சொன்னான்.

வினோத் அன்புவை முறைத்தவாறு மகள் பக்கம் திருப்பினார். "எங்கே உங்க புரபொசர்.? ஹாஸ்பிட்டல் அட்ரஸ் சொன்னவர் அதுக்குள்ள எங்கே போயிட்டார்.?" என்றார்.

"டீ குடிக்க போயிருக்காங்க அங்கிள்.." என்றாள் சுவேதா.

"உங்களுக்குதான் இன்ஜெக்சன் பண்ணியாச்சி இல்லையா.? அப்புறம் ஏன் இங்கே இருக்கிங்க.? காலேஜ்க்கோ வீட்டுக்கோ கிளம்ப வேண்டியதுதானே.?" என்றார் அவர் ஜீவாவிடம்.

"சீனியர் நல்லாருக்காங்களான்னு பார்க்க வந்தேன் சார்.. இப்ப கிளம்பிடுறோம்.." என்ற ஜீவா "பத்திரமா காலேக்கு வந்துடுங்க சீனியர்.." என்றுவிட்டு அன்புவை தன்னோடு இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

அன்புவை இழுத்துக் கொண்டு நடப்பதற்கு அவனுக்கு சிரமமாக இருந்தது. "நீங்களும் கொஞ்சமாவது கேர் எடுத்து நடந்து வாங்க அண்ணா.. உங்களை இழுத்துட்டு போக கஷ்டமா இருக்கு.." என்றான் ஜீவா.

"உன்னை யார் என்னை இழுத்துட்டு போக சொல்றாங்க.?" என்று தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டான் அன்பு.

"பின்ன சீனியரோட அப்பாக்கிட்ட நீங்களே பதில் சொல்விங்களா.? ஆள் பார்க்க சாதாரணமா இருக்காரு.. ஆனா முறைச்சா அவரோட முறைப்பிலயே நெருப்பு எரியும் போல இருக்கு.." என்று ஆச்சரியப்பட்டான் ஜீவா.

"அந்த ஆள் சும்மாவே தவுசன் வாலாதான்.." என்று கடுப்போடு சொன்னவனுக்கு தன்னை முறைத்த வினோத்தை பிடிக்கவேயில்லை.

"தவுசன் வாலான்னு தெரிஞ்சும் அவரோட பொண்ணையே லவ் பண்றிங்களே.. நீங்களும் கெத்துதான் அண்ணா.." என்றவனை முறைத்தவன் "எல்லாமே உன்னாலதான் வந்தது.. மரியாதையா ஓடிடு.. இல்லன்னா தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்.." என்று எச்சரித்தான்.

"சீனியர் நல்லா இருக்காங்க.. இதுக்கு மேல எனக்கு என்ன இங்கே வேலை.?" என்று கிளம்பியவன் நின்று அன்புவை பார்த்தான். "ஒரு சின்ன விசயம்.. நீங்க என்னை மிதிக்க முடியாது. அப்புறம் நான் நிஜமாவே எதையாவது செஞ்சிப்பேன்.. வீரமான ஆண் மகனை போல பேசுன்னு கவுண்டர் தராதிங்க.. நான் சின்ன பையன்.. குட்டி பசங்ககிட்ட நீங்க உங்க வீரத்தை காட்டாதிங்க.." என்றான்.

"ஓவரா பேசுறான்.. கொலை கேஸ்ல உள்ளே போனாலும் பரவால்லன்னு முதல்ல இவனை போட்டு தள்ளணும் போல.." என்று இவன் முனகியது கேட்டு அத்தோடு அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டான் ஜீவா.

இரத்த தானம் தந்துவிட்டு பேராசிரியையுடன் இணைந்து அபிநயா இருந்த அறைக்குள் நுழைந்தார் அருள் குமரன். வினோத்தை பார்த்து புன்னகைத்தார்.

"தேங்க்ஸ் சார்.. என் பொண்ணை கவனிச்சிக்கிட்டதுக்கு.." தன் நன்றியை சொன்னார் வினோத்.

"பரவால்ல சார்.. நாங்க எங்க கடமையைதானே செஞ்சோம்.. நீங்கதான் ரொம்ப பயந்திருப்பிங்க போல.." என்றார் அருள் குமரன்.

கட்டிலில் அமர்ந்திருந்த மகளை கவலையோடு பார்த்த வினோத் ஆமெனும் விதமாக தலையசைத்தார். "கடை அப்படியே சாத்திட்டு வந்துட்டேன் சார்.. இன்னும் இவங்க அம்மாவுக்கு நான் இங்கே வந்தது தெரியாது. பதட்டத்துல என்ன செய்றதுன்னு கூட தெரியல.."

அபிநயா தன் அருகே நின்றிருந்த தந்தையின் வயிற்றில் முகம் புதைத்தார். வினோத் அவளின் தலையை வருடி விட்டார்.

"விழிச்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.." என்ற அருள் குமரன் மருத்துவ ரசீதை அருள் குமரனிடம் தந்தார்.

"நான் போய் பணம் கட்டிட்டு வரேன்.." வினோத் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் உள்ளே வந்த நர்ஸ் தீர்ந்து விட்ட ட்ரிப்ஸ் இணைப்பை அபிநயா கையில் இருந்து எடுத்தார்.

மாத்திரை கவரோடு உள்ளே வந்த வினோத் "போகலாமா.?" என்றார்.

அபிநயாவிற்கு தங்களின் கரங்களை நீட்டினர் தோழிகள்.

கல்லூரி வாசலில் தன் பைக்கை நிறுத்திய வினோத் "உன் பேக்கை எடுத்துட்டு வா.. வீட்டுக்கு போகலாம்.." என்றார்.

"அப்பா நான் நல்லா இருக்கேன்.." என்ற மகளை முறைத்தவர் "இன்னும் இரண்டு நாளுல சனி ஞாயிறு வர போகுது.. வா வீட்டுக்கு போகலாம்.. உங்க அம்மாவை நல்ல சாப்பாடா செய்ய சொல்லி சாப்பிட்டுட்டு காலேஜ்க்கு வருவ.." என்றவர் மகளை வலுக்கட்டாயமாக தன்னோடு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

'ஸ்கூல் படிக்கும் போது லீவ் போடணுங்கற ஆசையில காய்ச்சல்ன்னு பொய் சொன்னா ஊசியை போட்டு உடனே கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வருவாங்க.. ஆனா இப்ப படிக்கறேன்னு சொன்னா கூட வேணாம்ன்னு சொல்லி இழுத்துட்டு போறாங்க. இவங்களை புரிஞ்சிக்கவே முடியல..' என்று சலித்துக் கொண்டாள் அவள்.

மறுநாள் கல்லூரிக்கு வந்த ஜீவாவை மறித்த அன்பு "முட்டாள்.. உன்னாலதான் அபியை அவங்க அப்பா வீட்டுக்கு கூட்டி போயிட்டாரு.‌" என்று திட்டினான்.

"நீங்க அவங்களுக்கு பக்கத்து வீடுதானே.? நீங்களும் லீவு போட்டுட்டு கிளம்புங்க.." என்று சொன்ன ஜீவாவை முறைத்தான் அன்பு. "ஏன் லீவு போட்டன்னு கேட்டு எங்க அப்பா என்னை மிதிப்பாரு.. ஐடியா சொல்றான் பாரு, புண்ணாக்கு.." என்று விட்டு நகர்ந்தான். ஆனால் அன்றைய மாலையிலேயே சந்தனக்கொடிக்காலுக்கு பேருந்து ஏறிவிட்டான்.

மனதில் இருந்த ஈகோ இந்த ஒரு வருட காலமாகவே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டிருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ளதான் அவனுக்கு மனம் இல்லை. அபிநயாவை வெறுப்பதாக காட்டிக் கொண்ட அதே வேளையில் மனதுக்குள் இருக்கும் தன் காதலுக்கு அபிநயாவின் அன்பை தீனியிட ஒரு நேரம் வராதா என்றும் காத்திருந்தான்.

அன்புவும் கல்லூரியை விட்டு ஒரு நாள் முன்பே வந்ததை அறிந்துக் கொண்ட அபிநயா அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல இருக்க ஆரம்பித்தாள். ஆனால் இதயம்தான் அடிக்கடி அவனையே நினைத்து நினைத்து உருகுகிறேன் என்ற பெயரில் இவளை இம்சித்தது.

ஆனந்தி உளுந்தங்களி, உளுந்தவடை, உளுந்தங்கஞ்சி என்று செய்து அபிநயாவிடம் சாப்பிட தந்துக் கொண்டே இருந்தாள்.

"அம்மா.. அது சும்மா மயக்கம்தான்ம்மா.. எனக்கு ஏன்ம்மா இத்தனையை செஞ்சி தந்து குண்டாக்க பார்க்கற.?" என்றாள் அபிநயா கெஞ்சலாக.

"என்ன குண்டாகுற நீ.? எப்ப பார்த்தாலும் சோத்தை பருக்கை பருக்கையா எண்ணி சாப்பிட்டுதான் இப்படி ஆவூன்னா மயக்கம் போடுற.. ஊர்ல இருந்து பாட்டி போன் பண்ணி என்னை திட்டுறாங்க.. இந்தா இந்த மெதுவடையை நாலு சாப்பிடு.." என்று மகளிடம் மெதுவடையை தட்டு நிறைய நிறைத்து தந்தாள் ஆனந்தி.

"கடையில போங்கி வாங்கினா இந்த ஒரு தட்டு வடையே இருநூறு ரூபா வரும்.. ஏன்ம்மா என்னை சாப்பிட வச்சே கொல்லுற.?" என்றவளை திரும்பி பார்த்து முறைத்தாள் ஆனந்தி.

அபிநயா சுருங்கி போன முகத்தோடு தட்டை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அப்பாவும் அதே நேரத்தில் கடையிலிருந்து வீடு திரும்பினார்.

"அப்பா நான் அஞ்சுவோட கிராமத்துக்கு போகட்டா.?" என்றாள் சிணுங்கலாக அபிநயா.

தான் வாங்கி வந்த பழ கவரை அபிநயாவின் முன்பே வைத்தவர் "இதையெல்லாம் முதல்ல சாப்பிடு.. அப்புறம் போவ‌‌.." என்றார்.

அந்த கவரில் குறைந்தபட்சமாக ஒரு கிலோ ஆப்பிள், ஒரு கிலோ திராட்சை, ஒரு கிலோ சப்போட்டா இருக்கும் என்று அபிநயா கணக்கு போட்டாள். அது மட்டுமின்றி பப்பாளி பழங்கள் இரண்டும், நாட்டு பேரீட்சை ஒரு பாக்ஸ்ம் இருந்தது.

அபிநயா தந்தையை முறைத்தாள். "இதையெல்லாம் சாப்பிட்டு நான் குண்டான பிறகு எந்த டிரெஸ்ம் எனக்கு பத்தாது. அதனால நானே அஞ்சனா கிராமத்துக்கு போக மாட்டேன்னு சொல்லிடுவேன்.. அதுதானே உங்க பிளான்.?" என்றாள்.

"காய் பழமெல்லாம் உடம்புக்கு நல்லது‌ இதை சாப்பிட்டா நீ குண்டாக மாட்டா.. அப்படி ஆனாதான் என்ன.? அப்பா உனக்கு புது டிரெஸ் எடுத்து தரேன்.." என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

"ஆமா.. குண்டா இருந்தாதான் நாளைக்கு அந்த பக்கத்து வீட்டு கோணக்காலன் உன்னை வம்புக்கு இழுத்தான்னா கூட வலுவா நாலு அடி தர முடியும்.." என்று தீபக்கும் தன் பங்கிற்கு பேசினான்.

இவங்களோடு பேசி போராட முடியாது என்று புரிந்துக் கொண்டு அமைதியான அபிநயாவிற்கு உண்மையிலேயே அஞ்சனா கிராமத்துக்கு கிளம்பிய நாளன்று உடை அனைத்தும் இறுக்கமாகி போனது.

"உன்னாலதான் லேட்டாகுது.." என்று அம்மாவை குற்றம் சாட்டினாள் அவள். அம்மா உடைகளில் இருந்த தையல்களை அவசரமாக பிரித்துக் கொண்டிருந்தாள். "எந்த துணி வாங்கினாலும் லூசா இருக்குன்னு தையல் கடைக்காரர்கிட்ட ஓடுறவ நீதானே.? இதெல்லாம் பிடிச்சி வைக்காம இருந்திருந்தா இன்னைக்கு சரியாதான் இருந்திருக்கும். எப்ப பார்த்தாலும் எலி மாதிரியேவா இருக்க முடியும்.?" என்ற ஆனந்தி தையல் பிரித்த உடைகளை மகளிடம் நீட்டினாள்.

அபிநயா அவசரமாக உடையை வாங்கி அணிந்துக் கொண்டாள். "அப்பா என்னை பஸ் ஸ்டேண்ட்ல விடுங்க.." என்று தன் பயண பையோடு கிளம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN