சிக்கிமுக்கி 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அஞ்சனாவின் கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் அபிநயா.

"பத்திரமா இரும்மா.." என்று சொல்லி அனுப்பினார் வினோத்.

பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அன்பு தன் பயணம் முடியும் வரையிலும் அபிநயாவை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.

பேருந்து அந்த சிறு கிராமத்தின் பாதையினுள் நுழைந்ததும் அபிநயா தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

அவள் அந்த கிராமத்திற்குள் இறங்கிய அதே நொடியில் "சீனியர்.." என்று கத்தி அழைத்தான் ஜீவா. ஓடிவந்து இவளின் கையில் இருந்த பயண பையை வாங்கிக் கொண்டான். பேருந்து அடுத்த ஊருக்கு கிளம்பியது. ஜீவா அபிநயாவின் பின்னால் பார்த்து கையசைத்தான். "வாங்க அண்ணா.." என்றான்.

'இவனும் கூடவேதான் வந்தானா.? அதனால்தான் இந்த ஹார்ட் தாறுமாறா துடிச்சிட்டு இருந்திருக்கு போல..' என்று யோசித்தவள் "போகலாமா.?" என்றாள் ஜீவாவிடம்.

"போகலாம் சீனியர்.. அன்பு அண்ணா வாங்க நீங்களும்.." என்றவன் அருகே இருந்த பைக்கில் ஏறி அமர்ந்தான். அபிநயாவின் பேக்கை பெட்ரோல் டேங்கின் மீது வைத்தான்.

"வந்து உட்காருங்க.." என்றான் ஜீவா அவர்கள் இருவரையும் பார்த்து.

"பைக்ல போகணுமா.? நீ வழி சொல்லு.. நான் நடந்தே வரேன்.." என்ற அபிநயாவிற்கு அன்புவோடு இணைந்து அந்த பைக்கில் செல்ல மனம் வரவில்லை.

"கொஞ்சம் தூரமா போகணும் சீனியர்.." என்று ஜீவா சொன்னதும் அன்பு வந்து அவனின் பின்னால் ஏறி அமர்ந்தான். அன்புவின் பின்னால் இருந்த இடம் அபிநயாவிற்கு தாராளமாக இருக்கும். ஆனால் அவனோடு ஒட்டி உரசி செல்ல அவளுக்கு பிடிக்கவில்லை.

"நீ அவனை கொண்டு போய் விட்டுட்டு வா.. நான் இங்கேயே வெயிட் பண்றேன்.." என்றாள் அவள்.

"என்னோடு நீ சேர்ந்து வந்தா உன் மேல எனக்கு லவ் வந்துடுமா என்ன.?" என்று நக்கலாக கேட்டான் அன்பு.

அபிநயாவிற்கு அவனின் தலையை உடைக்க வேண்டும் போல இருந்தது. தனது கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டியபடி வந்து பைக்கில் ஏறினாள். அவளின் செயலை கண்டு விட்டு அன்பு தன் பேக்கை மீண்டும் முதுகு புறகே மாட்டிக் கொண்டான். அபிநயா தன் கரங்களை கீழிறக்கினாள். பாதுகாப்பு கம்பியை பற்றிக் கொண்டாள்.

ஜீவா பைக்கை கிளப்பினான்.

"இரண்டு பேரும் இறுக்கமா பிடிச்சிக்கங்க.." என்றவன் ஆக்ஸிலேட்டரை முறுக்கியவுடன் அவனின் இடுப்பை கட்டிக் கொண்டான் அன்பு.

தார் சாலையில் சென்ற பைக் விரைவிலேயே ஒற்றையடி மண் பாதையில் இறங்கியது.

"மீனு வந்துட்டாளா ஜீவா.?" என்று கேட்டாள் அபிநயா.

"கொஞ்சம் நேரம் முன்னாடிதான் அவங்களை ருக்கு மாமா கூட்டி போனாரு.." என்ற ஜீவா "ஏன் அண்ணா நீங்க காலையில் பஸ்க்கே வரல. குணா அண்ணாவோடே வருவிங்கன்னு நினைச்சேன் நான்.." என்றான்.

அன்பு குணாவோடு கிளம்பி வர நினைத்துதான் தயாராகி இருந்தான். ஆனால் அபிநயா அந்த பேருந்தில் ஏறவில்லை. முதல் முறையாக அறியாத ஊருக்கு பயணப்படுகிறவளை தனியாக விட்டு செல்ல மனம் வராமல் பேருந்து நிலையத்திலேயே நின்று விட்டான் அன்பு. அபிநயா அதற்கடுத்து வந்த பேருந்தில்தான் ஏறினாள். அவனும் அதன் பிறகே பேருந்தில் ஏறினான்.

பாதை மேடு பள்ளமாக இருந்தது. சில இடங்களில் மிகவும் மேடாக இருந்தது. அந்த இடங்களில் எல்லாம் அபிநயாவும் அன்புவும் பைக்கிலிருந்து இறங்கி நடந்தார்கள்.

"இதுக்கு நடந்தே போயிருக்கலாம்டா.." என்று கிண்டலடித்தாள் அபிநயா.

"நான் டபுள்ஸே ஓட்டியது இல்லக்கா.. இந்த மேடு பள்ளத்துல எங்கேயாவது தள்ளி விட்டுட்டா என்ன செய்றது.?" என்றான் ஜீவா.

மேடு பள்ளமெல்லாம் தாண்டி கடைசியாக ஒரு புழுதி காடு வந்தது. அடுத்து வரும் வெள்ளாமைக்காக ஏர் ஓட்டி வைத்திருந்த காடு அது. நடுவில் இருந்த பாதையில் ஏற்கனவே ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சென்று வந்திருக்கும் போல என்பதை அறிந்துக் கொண்டாள் அபிநயா. அவளுக்கு ஜீவாவின் மீதும் நம்பிக்கை இல்லை. அந்த புழுதி காட்டை பத்திரமாக தாண்டுவோம் என்ற நம்பிக்கையும் இல்லை. ஜீவா அந்த காட்டில் பைக்கை ஓட்ட ஆரம்பித்ததும் பட்டென்று கண்களை மூடிக் கொண்டவள் அன்புவின் பேக்கை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

பைக்கை அப்படியும் இப்படியுமாக சாய்த்து சாய்த்து எப்படியோ ஒரு வழியாக அந்த காட்டை தாண்டி விட்டான் ஜீவா. பைக் சமமாக செல்ல ஆரம்பித்த பிறகே அபிநயா கண்களை திறந்தாள். அதே நேரத்தில் அந்த பைக் ஒரு மொட்டை கிணற்றின் ஓரத்தை கடந்துக் கொண்டிருந்தது. அபிநயா பயத்தில் மீண்டும் அன்புவின் பேக்கையே கட்டிக் கொண்டாள்.

"அக்கா பைக்கை ஆட்டாத.. டிரிப்ள்ஸ் வேற.. பைக்கை கொண்டு போய் கிணத்துல விட்டுட்டேன்னா அவ்வளவுதான்.." என்று எச்சரித்தான் ஜீவா.

"நான் நடந்தே வந்திருப்பேன்.." சிணுங்கலாக சொன்னாள் அபிநயா. அன்பு தனக்கு வந்த சிரிப்பை கடக்க உதட்டை அழுத்தமாக கடித்துக் கொண்டிருந்தான்.

பைக்கை நிறுத்திய ஜீவா "வீடு வந்துடுச்சி இறங்கு.." என்றான்.

அபிநயா கண்களை திறந்து பார்த்தாள். எதிரில் ஒரு பெரிய வயல்வெளிதான் தெரிந்தது. இரண்டடி முன்னால் சென்றவள் "இங்கே காடுதானே இருக்கு.?" என்றாள். பைக்கிலிருந்து இறங்கிய அன்பு அவளின் தோளை பற்றி இந்த பக்கம் திருப்பினான்.

"வீடு இந்த பக்கம் இருக்கு.." என்றான்.

அபிநயா அவனின் கையை தட்டி விட்டாள். "என்னை தொடாதே.." என்றாள்.

"தொட்டா தீட்டா என்ன.? அப்படின்னா என் பேக்கை நான் தூக்கி கிணத்துல இல்ல போடணும்.?" என்றான் அவன் கிண்டலாக.

"இங்கேயும் சண்டை போடாதிங்க.. அமைதியா வாங்க.." என்றுவிட்டு முன்னால் நடந்தான் ஜீவா.

"டிவியில் வர பண்ணையார் வீடு போலவே இருக்கு.." என்றாள் அபிநயா வீட்டை பார்த்துவிட்டு. பெரிய வீடாக இருந்தது எதிரே. அந்த வீட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் சென்றுக் கொண்டிருந்த மற்ற வீடுகள் இதை விட சிறிய அளவாகவே இருந்தன

"ஆமாக்கா.. இந்த ஊர்லயே இவங்கதான் அதிகமா காடு வச்சிருப்பவங்களாம்.." என்று சொன்னான் ஜீவா.

"ஓ.. ஆனா பாரு.. ஒரு ரோடு கூட இவங்களுக்கு இல்ல.." என்று பரிதாபப்பட்டவளிடம் அங்கே இடது புறம் இருந்த பாதையை கை காட்டினான் ஜீவா. "ரோடு இருக்குக்கா.. இந்த சிமெண்ட் ரோடு எண்ட்ல தார் ரோடு இருக்கு.." என்றான் அவன்.

"ஆனா அப்புறம் ஏன்டா.." அவள் முடிக்கும் முன்பு அவனே "நீ வந்தது வேற ஊர்க்கு போற பஸ்க்கா.. இந்த ஊருக்கு வர பஸ் முன்னாடியே வந்துட்டு போயிடுச்சி. அந்த ஊர்ல இருந்து இங்கே இரண்டு வழி இருக்கு. இந்த ரோட்ல போகலாம்தான். ஆனா அது குறுக்கு பாதை.. அதனால்தான் அதுல வந்தேன்.. என் பிரெண்ட் சொன்னான் 'நீ டிராபிக்ல வண்டி ஓட்டுவதை விட இந்த மாதிரி கிராமத்துல வயல்லயும் வரப்புலயும் பைக்கை விட்டு நாலு சுத்து சுத்தினா பைக் ஓட்டுறதுல நல்லா எக்ஸ்பர்ட் ஆகிடலாம்ன்னு.. அதுதான் இந்த சான்ஸை.." என்றான்.

அபிநயா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். பைக் கடந்து வந்த மொட்டை கிணற்றை நினைத்து பார்த்தாள். கால்கள் தானாய் நடுங்கியது.

"போடா முட்டாள்.." என்றவள் அவனிடமிருந்த தன் பேக்கை பிடுங்கி கொண்டு வீட்டின் வாசலுக்குள் நுழைந்தாள்.

வாசலின் ஓரத்தில் கொடியில் ஏறியிருந்த ராமர் பாணம் அங்கே வீசிய தென்றலின் காரணமாக அவளின் மீது பூக்களை வீசியது.

அபிநயா அண்ணாந்து பார்த்தாள். காற்று மென்மையாக வீசிக் கொண்டே இருந்தது. பூக்களும் அவள் மீது விழுந்துக் கொண்டே இருந்தன.

"பாப்பா.. நீயும் அஞ்சனாவுக்கு பிரெண்டா.?" என்று குரல் கேட்கவும் திரும்பினாள். நடுத்தர வயது பெண்மணி ஒருவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரின் முன்னால் மொட்டு விட்ட பருத்திகள் இருந்தன. பஞ்சை தனியாக பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர் பருத்தியை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் சிலர்.

அபிநயா அவர்களை குழப்பமாக பார்த்தாள்.

"ஆமா அக்கா.. இவங்களும் அஞ்சனா அக்காவோட பிரெண்ட்தான்.." என்ற ஜீவா "உள்ளே போகலாம் சீனியர்.." என்றான்.

வீட்டுக்குள் அவர்கள் நுழைந்த நேரத்தில் காப்பி தட்டோடு கிச்சனிலிருந்து வெளிய வந்தாள் மீனா.

"தேங்க்ஸ்டி.."என்று காப்பி டம்ளரை கையில் எடுக்க முயன்றாள் அபிநயா. ஆனால் மீனா காப்பியை கொண்டுச் சென்று பருத்தி எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் தந்தாள்.

'வந்தவுடனே மொக்கையா.?' என அவள் நினைத்த நேரத்தில் "அபி.. இங்கே வா.." என்று மாடி கைப்பிடியை பிடித்துக் கொண்டு கத்தினாள் சுவேதா.

அபிநயா படியை நோக்கி நடந்தாள். வழியின் ஓரத்தில் இருந்த ஒரு அறையில் தரை முழுக்க நெல் கொட்டியிருந்தது. அதை அள்ளி மூட்டையில் கொட்டிக் கொண்டிருந்தார் அஞ்சனாவின் மாமா ருக்கு.

"மொத்த நெல்லையும் வேய்க்கணுமா.?" என்று சந்தேகமாக கேட்டாள் அஞ்சனாவின் பாட்டி.

"ஆமா அம்மா.. சாரதாக்கிட்ட சொல்லு. அவ வேய்க்க ஏற்பாடு செய்வா.." என்றவர் நெல்லை அளந்தபடி இவர்களை திரும்பி பார்த்தார்.

"இப்பதான் வந்திங்களாப்பா.?" என்றார்.

ஆமென தலையசைத்த அபிநயாவை பார்த்து புன்னகைத்தவர் "போய் ரெஸ்ட் எடுங்கப்பா.. அப்புறமா பேசலாம்.." என்றார்.

அபிநயா படிகளில் ஏறிய நேரத்தில் "சாரதா.. புது பாப்பாவுக்கும் தம்பிக்கும் சாப்பாடு கொடு.." என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

மாடிக்கு அபிநயா வந்தபோது அறை ஒன்றிலிருந்து வெளியே வந்த அஞ்சனா "அபி.." என்றபடி வந்து இவளின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

"வீடு பரபரப்பா இருக்கற மாதிரி இருக்கு‌. ஆனா ஆட்களை காணமே.." குழப்பமாக சொன்னாள் அபிநயா.

சிரித்தாள் அஞ்சனா. "எல்லோரும் மாப்பிள்ளை வீட்டை பார்த்து வர போயிருக்காங்க. ஏற்கனவே பழகிய ஆள்தானேன்னு யாரும் முறையா போகவேயில்லை. ஆனா சம்பிரதாயம் தவற கூடாதுன்னு சொல்லி தாத்தா இந்த கடைசி நாளுல மாப்பிள்ளை வீடு பார்க்க கூட்டி போயிருக்காரு.. எல்லோரும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.." என்றாள்.

அஞ்சனாவின் முகம் சிறிது மாறி இருந்தது. ஒருவேளை அது அவள் தீட்டியிருக்கும் அஞ்சனத்தாலா என்று சந்தேகித்தாள் அபிநயா. அவளின் முகத்தில் இருந்த புன்னகை புதிதாக இருந்தது. அழகாக இருந்தது. பார்த்து ரசிக்க தோன்றியது. முன்பெல்லாம் தெரியும் கண்களில் இருந்த சோர்வு இப்போது தேடி பார்த்தாலும் கிடைக்கவில்லை. அவளின் மாற்றத்தை முழு மனதாக வரவேற்றாள் அபிநயா.

தனது கைகளை அபிநயாவிடம் காட்டினாள் அஞ்சனா. "நல்லாருக்கா.. நான் பன்னீரை சும்மாதான் நினைச்சேன்.. ஆனா மருதாணி இவ்வளவு சிவந்து போச்சி.." என்றவளின் கைகளை விட அதிகம் சிவந்திருந்தது கன்னங்கள்.

அபிநயா வெட்கப்பட்டவளின் முகத்தை அதிசயமென பார்த்தாள்.

"ஹாய்.." என்று அபிநயாவின் பின்னால் இருந்து கை அசைத்தான் அன்பு. அஞ்சனா அவனை பார்த்து தன் கையை ஆட்டினாள்.

"ஹாய் அண்ணா.." என்றாள். அன்புவையும் அபிநயாவையும் பார்த்தவள் அவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்று யோசித்தாள்.

"குணா மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருக்காரு.. நீங்க ரூம்ல வெயிட் பண்ணுங்க. நான் பாட்டியை சாப்பாடு காப்பி எடுத்துட்டு வர சொல்றேன்.." என்றாள் அஞ்சனா.

"பரவால்ல எனக்கு பசிக்கல.. நான் இவனோடு சேர்ந்து பேசிட்டு இருக்கேன்.. நீ உன் வேலையை பாரு.." என்றவன் ஜீவா முன்னால் அவனை தொடர்ந்து நடந்தான்.

"அபி.. இங்கே வா.. நீயும் மருதாணி வச்சிப்ப.." என்று அங்கே ஓடி வந்தாள் சுவேதா. அவளின் இரு கைகளிலும் மருதாணி இருந்தது.

"மருதாணியா.?" என்று தயங்கியவளிடம் "அன்புவுக்கு உன் மேல எவ்வளவு லவ் இருக்குன்னு பார்க்கலாம் வா.." என்றாள். அபிநயாவிற்கு இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து போனது.

ஜீவா நுழைந்த அறையின் உள்ளை காலடி எடுத்து வைத்த அன்பு நடப்பதை நிறுத்தினான். 'மருதாணி வைக்கலனாலும் கூட‌ என் காதலை பத்தி நினைச்சாலே கை சிவக்கும்..' என்றான் மனதுக்குள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN