சிக்கிமுக்கி 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயாவிற்கு காப்பியையும் உணவையும் எடுத்து வந்தாள் மீனா.

"நான் கீழேயே வந்து சாப்பிட்டிருப்பேனே.." என்றவளிடம் "அங்கே கூட்டமா இருக்கும். நீ இங்கேயே சாப்பிட்டுக்கோ.." என்ற மீனா அவள் உண்டு முடித்ததும் அவளின் கையில் மருதாணியை வைத்து விட்டாள்.

"இந்த வீட்டுல ஆட்கள் அதிகம் அபி.. எல்லோருமே கிராமத்தார். இங்கேயும் நீயும் அவனும் சண்டை போட்டுக்காதிங்க.." என்று எச்சரித்தாள் சுவேதா‌.

மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த குணா அதன் பிறகு அன்புவோடு சேர்ந்து இருக்க ஆரம்பித்தான்.

அபிநயாவின் கரத்தில் மருதாணி நன்றாகவே சிவந்திருந்தது. ஆனால் தோழிகள் அன்புவின் பெயரை சொல்லி அவளை கிண்டல் செய்யவில்லை. மாலை வேளையில் மற்ற நண்பர்களோடு கூடியிருக்கும் போதுதான் அபிநயாவின் கரத்தை பார்த்தான் அன்பு. அரை குறை மீசையை முறுக்கி விட்டு கொள்ள வேண்டும் போல இருந்தது.

"உன் ஆளு செம.." என்று பன்னீரை பற்றி பாராட்டினான் குணா.

அஞ்சனா வெட்க முகத்தோடு புன்னகைத்தாள்.

'இந்த வயசுலேயே ஏன் கமிட்மெண்ட் ஆகணும்.?' என்று நினைத்த அன்புவிற்கு மட்டும்தான் அங்கே கொஞ்சம் பிடிப்பில்லாமல் இருந்தது.

"கல்யாணம் எப்ப செய்ய போறிங்க.?" சுவேதா தன் கூந்தலில் பூவை சூட்டியபடியே கேட்டாள்.

"தெரியலப்பா.. பன்னீர் என்னை டிகிரி முடிச்சிட்டு வர சொல்றாரு. ஆனா மறுபடியும் காலேஜ் வர.." அஞ்சனா முடிக்கும் முன்பு அன்பு "தயக்கமா இருக்கா.?" என்றான் அன்பு தன் கோபத்தை அடக்கியபடி. இந்த தயக்கத்தை கூட களையாமல் ஏன் இவள் கல்யாண மேடை வரை போகிறாள் என்று கோபம் வந்தது அவனுக்கு.

"தயக்கம் இல்ல.. சோம்பேறியா இருக்கு.. உடம்புல சோம்பேறித்தனம் பழகிடுச்சின்னா மறுபடியும் போக மாட்டேங்குது.. மத்த எல்லா மைனஸை விடவும் சோம்பேறித்தனம்தான் பயங்கர மைனஸா இருக்கு.." என்று சொல்லி கொட்டாவி விட்டாள் அஞ்சனா.

அபிநயா அவளின் தோளில் தட்டினாள். "சோம்பேறித்தனத்துக்காக காலேஜ் வராம இருக்காத.. சிம்பிளான கோர்ஸ் ஏதாவது எடுத்து படி.." என்றாள்.

"இந்த வருசம் காலேஜ் முடியறதுக்குள்ள முடிவெடுக்கறேன்.." என்றவள் அந்தி மாலை சூரியனை கண்டுவிட்டு "எங்க காட்டை சுத்தி காட்டட்டுமா.?" என்று கேட்டாள்.

அபிநயா தன் கை கடிகாரத்தை பார்த்தாள். அன்பு தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான். "உங்க வீடு சந்தை கடை போல இருக்கு.. வா நாம வெளியவே போகலாம்.." என்றான்.

"உன்னை மாதிரி ஒன்டியா வளர்ந்து ஒன்டி தீனி தின்னுட்டு இருந்தா அப்படிதான் இருக்கும். இது விவசாயம் செய்றவங்க வீடுடா.. நாலு ஆள் இருக்கதான் செய்வாங்க. அதுவும் இல்லாம அஞ்சனாவுக்கு இப்ப நிச்சயம் நடக்க போகுதுன்னு சொந்தக்காரங்களும் வந்திருக்காங்க.." என்ற குணாவும் எழுந்து நின்றான்.

"வாங்க நாம எல்லாரும் போய் காடு காடா சுத்திட்டு வரலாம்.." என்றான்.

அபிநயா தன் தோழிகளோடு புறப்பட்டாள்.

"எங்கடா கண்ணு கிளம்பிட்டிங்க.?" என்றாள் பாட்டி.

"வயல் வரப்புகளை பார்த்துட்டு வரோம் பாட்டி.." என்று பதில் தந்தாள் சுவேதா.

வீட்டின் பின் வாசல் வழியே முன்னால் நடந்தாள் அஞ்சனா. ஆட்டுக்குட்டி ஒன்று கத்தியபடி அவளோடு பின் வந்தது.

"இதுதான் என் ஆட்டு குட்டி.." என்று கை காட்டிய அஞ்சனா ஆட்டுக்குட்டியை சொடக்கிட்டபடி அழைத்துக் கொண்டே நடந்தாள்.

சற்று தூரம் சென்றதும் காய்ந்து கிடந்த மிளகாய் செடி தோட்டத்தை கை காட்டியவள் "இதுலயிருந்து நேரா எங்களோடதுதான்.." என்றாள்.

தூரமாய் தென்னந்தோப்பு தெரிந்தது. பாதி நிலங்கள் தரிசாக இருந்தது.

"புரட்டாசி ஐப்பசியில் வந்து பார்த்தா இந்த மொத்த இடமும் முழு பச்சையா இருக்கும். இப்ப கிணத்துல தண்ணி கம்மியா இருக்குன்னு அதிகமா விதைக்காம விட்டிருக்காங்க.." என்ற அஞ்சனா மிளகாய் தோட்டத்தின் வரப்பு முடிந்ததும் தெரிந்த கிணற்றை கை காட்டினாள்.

"எங்களோட கிணறு.." என்றாள். விவசாய மொட்டை கிணறு அது. மற்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அபிநயா மட்டும் தூரமாக நின்றாள்.

"அபி வந்து பாரு.. மீன் கூட இருக்கு.." என்று அழைத்தாள் மீனா.

அபிநயா மறுப்பாக தலையசைத்தாள்.

"நீங்க விழ மாட்டிங்க.. வாங்க சீனியர்.." என்று ஜீவாவும் அழைத்தான்.

அபிநயாவுக்கும் விவசாய மொட்டை கிணறுக்களுக்கும் இடையில் எப்போதும் பொருத்தம் இல்லை. சிறு வயதில் அவளின் பாட்டி வீட்டின் ஓரத்தில் இப்படிதான் ஒரு கிணறு இருந்தது. பாட்டி வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் விடிய விடிய உறங்கவே மாட்டாள். இரவில் பாட்டியின் வீடு அந்த கிணற்றில் சென்று விழுந்து விடுமோ என்று பயந்துக் கொண்டே இருப்பாள். கண்களை மூடினால் கூட அந்த வீடு சரிந்து கிணற்றில் விழுவது போலவே காட்சிகள் வரும். தண்ணீர் நிரம்பி தானும் அந்த கிணற்றில் மூழ்குவது போலவே இருக்கும். நினைத்தாலே பயத்தை வரவழைக்கும் நினைவுகள் அவை.

"வாங்க சீனியர்.." ஒன்று ஜீவா சென்று அவளின் கையை பற்றி இழுத்து வந்தான்.

"எனக்கு பயமா இருக்கு ஜீவா‌.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் அன்பு. அவள் எளிதில் தன் பயத்தை பற்றி சொல்ல மாட்டாளே என்று குழம்பினான்.

"நான் உங்க கையை பிடிச்சிக்கிறேன்.." என்று கிணற்றின் அருகே வந்தான் அவன்.

அபிநயா கண்களை இறுக்க மூடியிருந்தாள். "அட கண்ணை திறந்து பாருங்க சீனியர்.." கிண்டலாக சொன்னான் ஜீவா.

அபிநயா இடம் வலமாக தலையசைத்தாள். தோழிகள் அவளை பார்த்து சிரித்தனர். "இது வெறும் கிணறுதான் அபி.." என்றார்கள்.

"நாம வேற எங்கேயாவது போயிடலாமா.?" ஜீவாவின் கையை இறுக்க பிடித்தபடி கேட்டாள் அபிநயா.

"உன்னோட கோலத்தை பார்த்த பிறகு யார்தான் அடுத்த இடத்துக்கு கிளம்புவாங்க. நீ கண்ணை திறந்து இந்த கிணத்தை பாரு.. நாம அடுத்த இடத்துக்கு கிளம்பலாம்.." என்றான் குணா.

அபிநயா உதட்டின் உள் பகுதியை கடித்தபடி கண்களை திறந்தாள். ஜீவா அவளை அந்த கிணற்றின் விளிம்பில் நிறுத்தியிருந்தான். கண்களை திறந்து பார்த்தவளுக்கு கால்கள் தானாக நடுங்கியது. அவளின் நடுக்கத்தின் காரணமாக கிணற்றின் விளிம்பில் இருந்த சிறு சிறு கற்கள் கிணற்றில் விழுந்தன.‌ அந்த சிறு இடத்தில் இருந்த மண் மட்டும் சரிந்தது. அபிநயா தடுமாற்றமாக உள்ளே விழுந்தாள். பதற்றத்தில் ஜீவாவின் கை அவளின் கையை விட்டுவிட்டது.‌ கிணற்றில் பொத்தென்று விழுந்தாள் அபிநயா.

தெளிந்த நீர்தான். ஆனாலும் அவள் தன் பயத்தின் காரணமாக மூழ்கினாள்.

"அபி.." எல்லோரும் பதட்டத்தில் கத்திய நேரத்தில் அன்பு யோசிக்காமல் கிணற்றில் குதித்தான்.

அபிநயாவை தண்ணீரின் மேலே கொண்டு வந்தான். இரும்பியபடி சிவந்த கண்களோடு அவனை பார்த்தாள் அவள். மேலே ஏறி செல்ல மண் படிக்கட்டுகள் இருந்தன. அன்பு முதலில் ஏறிநின்று இவளுக்கு கை நீட்டினான். அபிநயா அவனின் கையை முறைப்போடு பார்த்தாள். அந்த மண் படியில் ஏற பார்த்தாள். உயரமாக இருந்த படிக்கட்டில் அவளால் ஏற முடியவில்லை. அன்பு வானத்தை பார்த்தபடி மீண்டும் தன் கையை நீட்டினான். அபிநயா வேண்டா வெறுப்பாக அவனின் கையை பற்றினாள்.

"எப்படா சான்ஸ் கிடைக்கும்ன்னு காத்துட்டு இருக்கான் போல.." என்று கிண்டலடித்தான் குணா.

"உங்களை நான் வேணா தள்ளி விடட்டா குணா அண்ணா. இதை போல மீனுக்கா வந்து உங்களை காப்பாத்துவாங்களான்னு பார்க்கலாம்.." என்றவனின் முதுகில் ஒரு குத்து விட்டாள் மீனா.

"உன்னாலதான் அபி கிணத்துல விழுந்தா.." என்றாள்.

"சீனியர்தான் பேய்க்கும் பயப்படுறாங்க. எல்லாத்துக்கும் பயப்படுறாங்க. கடைசியில் இந்த கிணத்துக்கும் பயப்படுறாங்க.." பெருமூச்சோடு சொன்னவனை பார்த்து விரல் நீட்டி எச்சரித்தாள் சுவேதா‌. "அவளோட பயத்தை பத்தி தெரிஞ்சி கிண்டல் பண்ணாத. அப்புறம் அவளே உன்னை கிணத்துல தள்ளிடுவா.." என்றாள்.

அபிநயா மேலே வந்ததும் ஜீவா தனது சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான். மீனா சந்தேகமாக பார்த்தாள்.

"சீனியர் குளிர்ல நடுங்கறாங்களேன்னு தந்தேன்ப்பா.. தான்தான் உள்ளே ஒரு சட்டை போட்டிருக்கேனே.." என்று அவசரமாக பதில் சொன்னான் அவன்.

அபிநயா அவன் தந்த சட்டையை வாங்கி போர்த்திக் கொண்டாள்.

"சாரி சீனியர்.." கெஞ்சலும் கொஞ்சலுமாக ஜீவா மன்னிப்பு கேட்க அபி சரியென்று கையை அசைத்தாள்.

அன்பு தன் சட்டையை கழட்டி அதிலிருந்து தண்ணீரை பிழிந்தான். அபிநயா அவன் பக்கம் மறந்தும் திரும்பவில்லை. "ஷோ காட்டுறியாடா.?" அவனின் காதோரம் கிசுகிசுப்பாக கேட்டான் குணா.

அன்பு அவனை முறைத்துவிட்டு முன்னால் நடந்தான்.

"அபி.. தென்னந்தோப்புக்கு போகலாமா இல்ல வீட்டுக்கு போகலாமா.?" சந்தேகமாக கேட்டாள் அஞ்சனா.

"இளநீர் குடிக்கலாம்ன்னு இருந்தேன் நான்.." என்று சிணுங்கிய சுவேதாவிற்கு அபிநயாவின் ஈர உடையை கண்டும் வருத்தமாக இருந்தது.

"பக்கத்துலதானே.? போயிட்டே வரலாம்.." தோழிகளுக்காக சரியென்று சொல்லி முன் நடந்தாள் அபிநயா.

ஈர உடை, புது கிணற்றின் நீர்.. காய்ச்சலை வரவழைத்து விடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது அவளுக்கு‌. இந்த பயணத்தை பத்திரமாக முடித்துக் கொண்டு வீடு போய் சேராவிட்டால் அதன் பிறகு அப்பா வேறு எங்கும் விட மாட்டாரே என்று கவலையாக இருந்தது.

தென்னந்தோப்பில் அனைவரும் இளநீர் குடித்தார்கள். அபிநயா தயக்கமாகதான் இளநீரை கைகளில் வாங்கினாள். அனைவரும் ஐந்தாறு இளநீர் வரை குடித்தபோது இவள் ஒன்றே போதும் என்று சொல்லி விட்டாள்.

வீட்டுக்கு திரும்பியபோது அறுத்து விட்ட நெல்லின் அடி தண்டு மட்டும் மண்ணுக்கு மேல் ஒன்றிரண்டு இன்ச் உயரத்திற்கு தெரிந்தது. அனைவரும் வரப்பு மேட்டை விட்டுவிட்டு அந்த அறுப்பு முடிந்த வயலின் வழி நடந்தனர். தண்டின் இடை இடையே புகுந்து விளையாட்டாக துள்ளிக் கொண்டே நடந்தனர் அனைவரும். சில இடங்களில் அதன் இடையே சரியாக நடக்க தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து எழுந்தும் நடந்தனர்.

அபிநயாவின் பின்னால் நிழல் போல நடந்தான் அன்பு. அபிநயா தடுமாறி சாயும் போதெல்லாம் அவளை சட்டென்று பிடித்து நிறுத்தினான். ஆனால் அபிநயாதான் ஒவ்வொரு முறையும் அவனை முறைத்துவிட்டு தன் கையை உருவிக் கொள்வாள்.

வீடு வந்து சேர்ந்ததும் அவசரமாக சென்று உடை மாற்றியும் கூட இரவில் காய்ச்சல் வந்து விட்டது அவளுக்கு.

இரவில் தாகத்தில் தண்ணீர் தேடினாள் அபிநயா. அவளருகே படுத்திருந்த மீனா "என்ன அபி.?" என்றாள் அரை தூக்கத்தில்.

"தாகமா இருக்குப்பா.." தும்பலோடு சொன்னாள்.

"நான் வேணா போய் கொண்டு வரட்டா.?" என கேட்டவளிடம் "இல்ல நான் அஞ்சனா ரூம்ல போய் குடிச்சிட்டு வரேன்.." என்று கதவை திறந்து வெளியே நடந்தாள். நடக்கும் போதே எப்போது தரையில் தலை சாய்க்கலாம் என்று இருந்தது. சில்லென்று அடித்த காற்றுக்கு உடல் நடுங்கியது. அஞ்சனாவும் சுவேதாவும் உறங்கி கொண்டிருந்த அறையின் கதவை திறக்க முயன்றாள். கதவு உள் பக்கம் பூட்டியிருந்தது. தள்ளாட்டமாக சுவரில் சாய்ந்து நின்றாள். எதிரே இருந்த அறையை பார்த்தாள். கதவை கூட சாத்தவில்லை அவர்கள். அறையினுள் ஜீரோ வாட்ஸ் பல்ப் ஒன்று எரிந்துக் கொண்டிருந்தது. கூரையில் சுத்திக் கொண்டிருந்த பேன் லேசாக சத்தமிட்டது. குணாவும் ஜீவாவும் ஒரு கட்டிலில் உறங்கி கொண்டிருந்தார்கள். மற்றொரு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த அன்பு போர்வையை இழுத்து போர்த்தியபடி இந்த பக்கமாக திரும்பி படுத்தான். அவனின் கட்டிலின் கீழ் தண்ணீர் பாட்டில் இருந்தது.

வறண்ட தொண்டையை தடவி விட்டுக் கொண்டே அரை மயக்கமாக நடந்தவள் எதிரே இருந்த அறையினுள் நுழைந்தாள். பாட்டிலை எடுத்து கடகடவென தண்ணீரினை குடித்தாள்.

அன்பு தூக்கம் கலைந்து கண்கள் திறந்து பார்த்தான். "அபி.." என்றான்.

"அன்பு.." என்றவள் தடுமாற்றமாக கட்டிலில் அமர்ந்தாள்.

"லேசா குளிருது.." என்றவள் அவனருகே தலை சாய்த்தாள். அவனின் போர்வையை பிடுங்கி போர்த்திக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN