சிக்கிமுக்கி 57

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்னருகே தலைசாய்த்தவளை குழப்பமாக பார்த்த அன்பு அவளின் உடல் சூடு உணர்ந்து நெற்றியை தொட்டு பார்த்தான். நெருப்பாய் தகித்தது.

"அபி.. உனக்கு காய்ச்சலா.?" என்று பதறி கேட்டவனுக்கு "ம்ம்.." ஒன்று முனகியவள் அவன் பக்கம் திரும்பினாள். அவளின் சுருங்கிய நெற்றி கண்டு கவலைக் கொண்டவன் கட்டிலை விட்டு இறங்கினான். அலமாரியை சத்தமில்லாமல் திறந்தான். அம்மா தந்து விட்ட காய்ச்சல் மாத்திரைகள் தனது பேக்கின் ஓரத்து ஜிப்பில் இருந்ததை கண்டு கையில் எடுத்தான். அலமாரியை மீண்டும் சாத்தி விட்டு வந்தவன் மாத்திரையை பிரித்தான்.

"அபி எழு.." என்று அவளை உலுக்கினான். அபிநயா சிணுங்கலாக அவனின் மடியில் தலை வைக்க முயன்றாள்.

"எழுந்து மாத்திரை போட்டுக்க அபி.." அவளின் தோள் பற்றி எழுப்பி அமர வைத்தவன் தண்ணீரையும் மாத்திரையையும் அவளிடம் தந்தான். மாத்திரையை கண்டு முகம் சுளித்தவள் முகத்தை அஷ்ட கோணலாக நெளித்தபடியே மாத்திரையை உண்டாள்.

தண்ணீர் பாட்டிலை அவன் கையில் திணித்தவள் மீண்டும் சாய்ந்தாள். அவளின் தலை முதல் கால் வரை போர்த்தி விட்டான் அன்பு.

மறுநாள் காலையில் கண் விழித்த பிறகுதான் அபிநயா தன் அருகில் இல்லை என்பதை கண்டாள் மீனா. இரவு தண்ணீர் அருந்த சென்றவள் மீண்டும் வரவில்லை போல என நினைத்து எழுந்தவள் வெளியே வந்து பார்த்தாள். கீழிருந்து ஆட்களின் பேச்சு சத்தம் கேட்டது.

சுவேதா அதே நேரத்தில் கதவை திறந்து வெளியே வந்தாள். "செம தூக்கம் மீனு.." என்றாள்.

"அபி எங்கே.. அங்கேயே தூங்கிட்டாளா.?" என்று கேட்ட மீனாவை குழப்பமாக பார்த்தவள் "இல்லயே.. அவ எப்ப எங்க ரூம்க்கு வந்தா.?" என்று கேட்டாள்.

"தண்ணீர் கேட்டு வந்தாப்பா.." என்று மீனுவின் தோளை தட்டியவள் எதிரே இருந்த அறையை காட்டினாள். கட்டில் ஒன்றின் அருகே தரையில் அன்புவும் அபிநயாவும் படுத்திருந்தார்கள்.

"அட கொடுமையே.. யாராவது பார்த்தா அவ்வளவுதான்.." என்று ஓடிய மீனா எச்சரிக்கையோடு கதவை பாதியாய் சாத்தினாள்.

கட்டிலில் தலையணைகளும் பெட்சீட்டும் கிடந்தன. ஆனால் அன்புவும் அபிநயாவும் தரையில் கிடந்தனர். அன்புவின் நெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்தாள் அபிநயா. அன்புவின் கரம் அவளை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தது.

"அபி.." தோழியின் அருகே சென்று அவளின் தோளில் தட்டினாள் சுவேதா.

"என்ன சீனியர் காலையிலயே என்னை பார்க்க வந்திருக்கிங்க.." கிண்டலாக கேட்டபடி எழுந்து அமர்ந்தான் ஜீவா.

"ஓவர் ரியாக்ட் பைத்தியம் வேற எழுந்துட்டானா.?" என்று கிசுகிசுத்த மீனாவின் கண்கள் தரைக்கு சென்றது.

"அட நம்ம சீனியர் இங்கே ஏன் தூங்குறாங்க.?" என்றவனின் ஆச்சரிய குரலில் குணாவும் எழுந்தான்.

"எல்லாருமே எழுந்துட்டாங்க. ஆனா இதுங்க இரண்டும் எழாம இருக்குங்க‌.." என்று முணுமுணுத்த மீனா அன்புவின் காலை நச்சென்று மிதித்தாள். அன்பு சட்டென எழுந்தான். தன் முன் நின்றிருந்த இருவரையும் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தான். "என்ன காலையிலயே.?" என்றான். சுவேதா அவனின் அருகே படுத்திருந்த அபிநயாவை கை காட்டினாள். திரும்பி பார்த்த அன்பு குழம்பி போய் கட்டிலை பார்த்தான்.

"குளிருக்கு வந்து பக்கத்துல படுத்துட்டா போல.." என்று சொன்னவன் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான். உடல் சூடு தணிந்திருந்தது. 'நல்லாகிட்டா போல..' என்று எண்ணினான்.

"அபி.. எழுடி.." சுவேதா மீண்டும் அவளை உலுக்கினாள். அபிநயா மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.

"இவனோடு ஏன்டி தூங்கிட்டு இருக்க.?" மீனா கோபத்தோடு கேட்டது அவளுக்கு புரியவில்லை. அருகில் இருந்தவனை பார்த்தாள். கட்டிலும் பார்வைக்கு தென்பட்டது. "சாரி.." என்றவள் அவசரமாக எழுந்தாள். ஆனால் தடுமாறி அன்பின் மீதே சாய்ந்தாள். இருவரின் நெற்றியும் மோதியது. அபிநயா தடுமாறி எழுந்ததும் அன்பு தன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

அபிநயா அந்த அறையை விட்டு வெளியேறியதும் மற்றவர்கள் அன்புவை ஆச்சரியமாக பார்த்தனர்.

"என்ன ஆச்சி நைட்.?" என்றான் குணா.

"காய்ச்சல்டா அவளுக்கு. தாகத்துக்கு தண்ணி குடிக்க வந்தவ அரை மயக்கத்துல கட்டில்லயே படுத்துட்டா.. நான் மாத்திரை கொடுத்து பெட்சீட் போர்த்தி விட்டுட்டு கீழே இறங்கி படுத்துட்டேன். ஆனா அவளும் குளிர்ல குழப்பமா கீழே இறங்கிட்டா போல.." என்றவன் எழுந்து நின்றான்.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த அஞ்சனாவின் அம்மா "காலையிலயே ஏன் எல்லோரும் இப்படி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கிங்க.? இந்தாங்க டீ எடுத்துக்கோங்க.." என்று டீயை தந்தாள்.

மீனாவும் சுவேதாவும் தேனீர் கோப்பைகளோடு வெளியே நடந்தனர்‌. எதிர் அறையில் இருந்த அபிநயா தலையை பிடித்தபடி தரை பார்த்து அமர்ந்திருந்தாள்.

"தலை வலிக்குதா அபி.? நான் போய் தைலம் வாங்கிட்டு வரட்டா.?" தேனீரை குடித்தபடி கேட்டாள் மீனா.

மறுப்பாக தலையசைத்த அபிநயா அவளின் கையில் இருந்த கோப்பையை வாங்கி ஒரே விழுங்கில் குடித்தாள்.

"ஏய்.. சூடுடி.." என்ற மீனாவின் குரல் முடியும் முன்பே கோப்பையை காலி செய்து அவள் கையில் தந்தாள் அபிநயா.

"இனி நான் எப்படி அவன் முகத்துல விழிப்பேன்.?" என கேட்ட அபிநயாவிற்கு கண்களை மூடியபடி சென்று கிணற்றில் விழ வேண்டும் போல இருந்தது.

"அரை தூக்கத்துல காய்ச்சல் மயக்கத்துல புத்தி வேலை செய்யல போல. அவன் பக்கத்துல தூங்கியிருக்கேன் ‌காலத்துக்கும் இதையே சொல்லிக் காட்டி பேச போறான் அவன்.." என்று புலம்பியவளை பரிதாபமாக பார்த்தனர் தோழிகள் இருவரும்.

"நைட்டெல்லாம் செமையா தூக்கம் வந்திருக்குமே.." அஞ்சனாவின் அம்மா அறையை தாண்டியதும் அன்புவை கிண்டலடித்தான் ஜீவா. அன்பு தன்னிடமிருந்த காலி தேனீர் கோப்பையை அவனை நோக்கி வீசினான். "சின்ன பையனை போல பேசுடா.." என்றான்.

"உங்க போனுக்கு ஒரு பிக்சர் அனுப்பியிருக்கேன் பாருங்க.." என்ற ஜீவா அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான். அன்பு தன் போனை தேடி எடுத்து பார்த்தான். அன்புவும் அபிநயாவும் கட்டிப்பிடித்து உறங்கியதை புகைப்படம் எடுத்து அதை அன்புவிற்கும் அனுப்பிருந்தான் ஜீவா.

அன்பு பற்களை கடித்தான். "இந்த ஜூனியர் பிசாசை கொல்லாம விட்டது தப்பாயிடுச்சே.." என்று புலம்பியவன் மீண்டும் புகைப்படத்தை பார்த்தான். அபிநாவின் கரங்கள் அவனின் சட்டையை பிடித்திருந்தது. அவளின் முகம் புகைப்படத்தில் தெரியவே இல்லை. அவளை அணைத்திருந்த தன் கரத்தை பார்த்தான். மறைந்து விடுவாளோ என்று பயந்து அணைத்திருந்தது போல இருந்தது. பெருமூச்சோடு போனை இருந்த இடத்திலேயே வைத்தான்.

துண்டு ஒன்றை எடுத்து தோளில் போட்டுக் கொண்ட குணா "வரியாடா கிணத்துக்கு குளிக்க போகலாம்.." என்றான். அன்பு தன் பேக்கை திறந்து துண்டையும் மாற்று உடையையும் எடுத்து கொண்டு கிளம்பினான்.

"அவளை விட முடியலன்னா அப்புறம் ஏன்டா பிரிஞ்சிருந்து சண்டை போடுற.?" என்று குளிக்கும்போது கேட்டான் குணா.

அன்புவால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. சிறு மீனாய் இருந்த காதல் இத்தனை நாட்களாய் அவனின் குழம்பிய மனதில் பெரியதாக வளர்ந்து விட்டது. அதை உணர பயந்தான் அவன்.

அன்றைய நாளெல்லாம் அபிநயா அன்புவின் முன்னால் வரவேயில்லை‌. நிச்சயத்தார்த்தம் நடந்தபோது கூட சுவேதா அல்லது மீனாவின் பின்னாலேயே ஒளிந்து நின்றாள்.

பன்னீர் நல்ல அம்சமாக இருந்தான். பலசாலியாய் இருந்தான். அன்புவை விட நான்கைந்து வருடம் பெரியவனாக இருப்பான் என்பது தோற்றத்தை பார்க்கும்போதே தெரிந்தது. ஆளுமை அவனிடம் இயல்பாக தெரிந்தது. முகம் இறுக்கமாவே இருந்தது. அன்புவிற்கு அஞ்சனாவை நினைத்து கவலையாக இருந்தது. கட்டாயப்படுத்தி அவளை காதலிக்க வைத்தானோ என்று கூட எண்ணினான்.

பன்னீரோடு உடன் வந்தவர்கள் அவனிடம் கேட்டு கேட்டே ஒவ்வொரு விசயத்தையும் செய்தார்கள். அவர்கள் மரியாதை தருகிறார்களா இல்லை பயப்படுகிறார்களா என்று குழம்பினான் அன்பு. மரியாதையாக இருந்தால் இந்த சிறு வயதில் ஏன் மரியாதை தர வேண்டும் என்று யோசித்தான். மொத்தத்தில் அவனுக்கு பன்னீரை நேரிலும் பிடிக்கவேயில்லை.

ஊரே கூடியிருந்தது. இல்லையேல் தன் மறுப்பை சத்தமாகவே சொல்லியிருப்பான் அன்பு. இவன் முசுடு போல அமர்ந்திருக்க குணாவும் ஜீவாவும் பன்னீரோடு கதை அளந்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்த்த அன்புவிற்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஆனால் பன்னீர் இவர்கள் இருவரிடம் மட்டும் சிரித்து பேசியது புரிந்தது.

நிச்சயதார்த்தத்தின் போது அஞ்சனாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் பன்னீர். அஞ்சனா கன்னங்கள் சிவக்க அவனுக்கு மோதிரத்தை அணிவித்தாள்.

தூரத்தில் இருந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அன்பு சுவேதாவின் பின்னால் நின்றிருந்த அபிநயாவை பார்த்தான். சுவேதாவை விட குள்ளமாக தெரிந்தாள் அவள். "குட்டச்சி.." அன்புவின் உதடு தானாக முணுமுணுத்தது. அபிநயா இவன் இருந்த திசையை பார்த்தாள்‌. உடனடியாக சுவேதாவின் பின்னால் முழுமையாக ஒளிந்துக் கொண்டாள். "இவளுக்கு என்ன வந்தது.?" எரிச்சலாக கேட்டான் அன்பு.

நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் சாப்பிட சென்ற நேரத்தில் அன்புவை தேடி வந்தான் பன்னீர். அன்பு தான் இருந்த இடத்தை விட்டு நழுவ முயற்சித்தான்.

"ஹாய்.." என்றபடி பன்னீரே பேச ஆரம்பித்தான். அவனை மரியாதை குறைவாக நடத்த நினைக்கவில்லை அன்பு. ஆனால் அவனை ஏனோ அவனுக்கு பிடிக்கவும் இல்லை.

"ஹாய்.." என்றான் அரை மனதோடு.

"உங்களை பத்தி அஞ்சனா நிறைய சொன்னா.. அவளுக்கு நண்பனாவும் பாதுகாவலானாவும் இருந்ததுக்கு தேங்க்ஸ்.." என்றான் பன்னீர்.

அன்பு மொத்தமாக தலையசைத்து வைத்தான்.

"உங்களுக்கு என்னை பிடிக்கல இல்லையா.?" பன்னீர் நேரடியாக கேட்கவும் அன்பு திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"அஞ்சனா என்னை லவ் பண்றதை நீங்க நம்பலன்னு சொன்னா அவ.." என்று இழுத்த பன்னீர் "உங்க பயம் அவ மேல நீங்க வச்சிருக்கும் பாசத்தைதான் சொல்லுது. ஆனா மனுசங்க எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. அவளுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு அவளை பிடிச்சிருக்கு. மனுசன் மனம் ஒரு குரங்குன்னு உங்களுக்குமே தெரியும். ஆனா அந்த குரங்கு மனசு ஒருநிலையா இருக்க காரணம் காதல்தான். என் காதலை அஞ்சனாகிட்ட நிரூபிச்சிருக்கேன். அவ நம்புறா.. காலம் ரொம்ப வேகமா போகுது. அதுவும் பிடிச்சவங்க நம்ம கூடவே இருக்கும்போது நூறு மடங்கு வேகமா சுத்தும். அவளை பிடிச்சிருந்தது எனக்கு. அதான் சட்டுன்னு சொல்லிட்டேன். அவதான் என் லைப்ன்னு அவளை பார்த்த உடனே தெளிவா புரிஞ்சி போச்சி. இன்னும் ஐம்பது வருசம் முடிஞ்சாலும் அவளை இதே அளவு காதலோடுதான் வெறிச்சி பார்ப்பேன்னு தெரிஞ்ச பிறகும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்‌.? அவளை ஒருத்தன் ஏமாத்திட்டான்ங்கறது எனக்கும் மைனஸ்தான். ஏனா அவ என்னோடவ. என்னில் பாதியா இருப்பவ ஒருத்தன்கிட்ட ஏமாந்துட்டாளேன்னு நினைச்சி செம கோபம் வந்தது. அவ அப்பாவிதனத்தை நினைச்சி மனசு கஷ்டமா இருந்தது. ஆனாலும் அத்தனையையும் தாண்டி அவளை பிடிச்சிருக்கு. உங்களோட சந்தேகத்துக்கான எனது ஒரே பதிலை காலம் கடந்த பிறகு அவளோடு வாழ்ந்துதான் உங்களுக்கு நிரூபிக்க முடியும்.. வெயிட் பண்ணி பாருங்க. எங்களோட வருங்காலத்துல நீங்களும் நண்பரா கண்டிப்பா இருப்பிங்கன்னு நம்புறேன்.." என்றான். அன்பு அவனை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேட்டியை தூக்கி கட்டியவன் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு நகர்ந்தான்.

அவன் பேசியது அத்தனையும் கேட்ட பிறகு அஞ்சனா மீதான அவனின் காதல் புரிந்ததோ இல்லையோ அன்புவிற்கு அபிநயாவின் மீது தான் வைத்திருக்கும் காதல்தான் கண் முன் வந்து போனது‌.

"அவதான் என் லைப்ன்னு அவளை பார்த்த உடனே தெளிவா புரிஞ்சி போச்சி. இன்னும் ஐம்பது வருசம் முடிஞ்சாலும் அவளை இதே அளவு காதலோடுதான் வெறிச்சி பார்ப்பேன்னு தெரிஞ்ச பிறகும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்‌.?" என்ற பன்னீரின் கேள்வி அவனின் மனதில் எதிரொலித்தது.

சிறு பிள்ளை தனமாக சண்டை போட்டாலும் சரி, இரு நாட்டு ராணுவமாக பிரிந்து நின்று போரிட்டாலும் சரி.. அவனது எதிர்கால வாழ்க்கை அவள் மட்டும்தான் என்ற விசயம் அவனின் முகத்தில் பளீரென அறையை தந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN