சிக்கிமுக்கி 58

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிச்சயதார்த்த விழா முடிந்ததும் பன்னீரும் அவனோடு வந்த உறவினர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

அஞ்சனாவை தேடி வந்த அன்பு தான் வாங்கி வந்த கிப்டை அவளிடம் நீட்டினான். அஞ்சனா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

"கன்க்ராட்ஸ்.." என்றான். மீனாவின் பின்னால் நின்றிருந்த‌ அபிநயா கூட அவனை அதிசயம் போல பார்த்தாள்.

"தேங்க்ஸ்.." என்றபடி கிப்டை வாங்கிக் கொண்ட அஞ்சனா "உங்களுக்கு பன்னீரை பிடிச்சிருக்கா.?" என்றாள். ஏனோ அவனின் சம்மதம் தன் வாழ்விற்கு மிக முக்கியம் என்பது போல தோன்றியது அவளுக்கு.

அஞ்சனாவின் தலையை வருடி விட்ட அன்பு "உனக்கு பிடிச்சிருப்பதுதான் முக்கியம். உன் லைப் ஹேப்பியா இருந்தா எனக்கும் சந்தோசம்தான்.." என்றான். "நாளைக்கு காலேஜ்ல முக்கியமான அசைட்மெண்ட் சப்மிட் பண்ணனும்.. நான் சாயங்காலம் இங்கிருந்து கிளம்பறேன். வரவங்களும் வரலாம்.." என்று அபிநயாவின் பக்கம் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

நாற்காலி ஒன்றில் அமர்ந்து கேசரியை உண்டுக் கொண்டிருந்த ஜீவா "பார்த்திங்களா குணா அண்ணா சீனியர்க்கு உங்க மேல எவ்வளவு பாசம்ன்னு.?" என்றான் கண்களை சிமிட்டி.

அவனின் தோளில் கிள்ளினான் குணா. "அவனோட பாசம் எனக்காக இல்லன்னு உனக்கும் தெரியும். நான் அசைன்மென்ட் சப்மிட் பண்ணலான்னா கூட அவன் கவலைப்பட மாட்டான். அவனோட பாசம் யாருக்குன்னு தெரிய வேண்டியவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.." கிண்டலாக சொல்லி விட்டு கேசரியை உண்ண ஆரம்பித்தான்.

அபிநயாவின் முகத்தில் இருந்த ஜீவன் இருந்த இடம் தெரியவில்லை. "அபி.. மறுபடியும் காய்ச்சல் வந்துடுச்சா.?" என்று கேட்டாள் மீனா.

இல்லையென தலையசைத்த அபிநயா "லேசா தலைவலிக்குது. நான் தூங்க போறேன்.." என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பாட்டியின் அறைக்கு சென்று தைலம் வாங்கி கொண்டு திரும்பியவளை தன் அறையிலிருந்து கவனித்த அன்பு அவளது அறைக்கு சென்றான்.

"என்ன ஆச்சி.?" என்றான். அவனின் குரலில் திடுகிட்டவள் "ம்.. ஒன்னும்‌ இல்ல.." என்றாள் பதட்டமாக.

அவள் வழக்கத்தை விட வித்தியாசமாக நடந்து கொள்வதாக தோன்றியது அவனுக்கு. அருகில் நெருங்கி அவளது நெற்றியை தொட்டான். அபிநயா அவசரமாக பின்னால் நகர்ந்தாள். அன்பு குழப்பத்தோடு தன் கையை பின்னே இழுத்துக் கொண்டான்.

"உனக்கு ஏதாவது பிரச்சனையா.?" என்று கேட்டான். உடனடியாக மறுப்பாக தலையசைத்தாள் அவள்.

"அப்புறம் ஏன் வித்தியாசமா நடந்துக்கற.?" என கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "நைட் காய்ச்சல்ல மைன்ட் சரியா வேலை செய்யல..‌‌ அதனாலதான் உன் பக்கத்துல தூங்கிட்டேன்.. சாரி.." என்றாள்.‌

"விடு பரவால்ல. நீ ரெஸ்ட் எடு.. நாம சாயங்காலம் ஊருக்கு கிளம்புவோம்.." என்றவன் அவளை விட்டுவிட்டு நகர்ந்தான்.

அபிநயா மாத்திரையை விழுங்கிவிட்டு கட்டிலில் ஏறி படுத்தாள். ஏனோ அழுகையாக வந்தது. அன்புவை வெறுக்கவும் முடியவில்லை. அவனோடு சகஜமாக பழகவும் முடியவில்லை. கண்ணீரை துடைத்தபடி உறங்க முயன்றாள்.

அன்புவும் மற்றவர்களும் ஊருக்கு கிளம்புகிறார்கள் என தெரிந்ததும் அஞ்சனாவின் பாட்டி ஆளுக்கொரு பையில் திண்பண்டங்களை கட்டி தந்தாள்.

"எனக்கு வேண்டாம் பாட்டி.." என்ற மீனாவிடம் "பஸ்ல போகும்போது சாப்பிட்டுக்கிட்டு போ.. மீதியை கொண்டு போய் வீட்டுல கொடு.." என்றாள்.

அபிநயா மாலையில் தாமதமாகதான் எழுந்தாள். உடல் அசதியில் உறங்குபவளை எழுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்ட அன்பு அனைவரும் கிளம்பிய பிறகும் அபிநயாவிற்கு துணையென அங்கேயே இருந்தான். அபிநயா எழுந்து தயாராகி வந்த பிறகு அவளோடே கிளம்பினான்.

அஞ்சனாவின் மாமா அவர்கள் இருவரையும் பேருந்து நிறுத்தத்திற்கு கொண்டு சென்று விட்டார். அன்புவிடமும் அபிநயாவிடமும் நூறு நூறு ரூபாய்களை தந்தார். வேண்டாமென மறுத்தவர்களின் கையில் பணத்தை திணித்தவர் "செலவுக்கு வச்சிக்கங்க.." என்றார்.

அபிநயா அமர்ந்த இருக்கையிலேயே அன்புவும் அமர்ந்தான். ஜன்னலை முழுதாக சாத்தி விட்டவன் அவளை தன் கை அணைப்பிற்குள் கொண்டு வர முயன்றான். அவனை விட்டு விலகி அமர்ந்த அபிநயா ஜன்னலில் தலை சாய்த்தாள். இருட்டிக் கொண்டிருந்த வானத்தை ஜன்னல் வழியாக பார்த்தாள்.

அவளின் விலகலால் அன்புவிற்கு சங்கடமாக இருந்தது. தன் பேக்கிலிருந்து துண்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான். அபிநயா அவனை கேள்வியாக பார்த்தாள். "கழுத்தை சுத்தி போட்டுக்கோ.. குளிராது.." என்றான்.

அபிநயா வேண்டாமென்று துண்டை அவனிடமே திருப்பி தந்தாள். அவனின் முகத்தை கூட திரும்பி பார்க்கவில்லை. சிலையை போல ஜன்னல் மீது சாய்ந்திருந்தாள். அன்பு அவ்வப்போது அவளின் உடல் சூடு பரிசோதித்தான். அவள் அவனது செய்கை பிடிக்கவில்லை என்பது போல முகம் சுளித்தாள்.

இரவு விளக்கு பேருந்தில் ஒளிர ஆரம்பித்தது. திரைப்படம் ஒன்று பேருந்தின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த அன்பு சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்தபோது அபிநயா உறங்கி போயிருந்தாள். தன்னிடமிருந்த துண்டை அவளின் தோள் மீது போர்த்தி விட்டான். அபிநயா அவன் மீது சாய்ந்தாள்.

'பகல் முழுக்க உறங்கியவளுக்கு மீண்டும் ஏன் தூக்கம் வருகிறது.. ஒருவேளை உடம்புக்கு ரொம்ப முடியாமல் போய் விட்டதோ.?' என பயந்து மீண்டும் அவளின் கழுத்தை தொட்டு பார்த்தான். ஜில்லென்றுதான் இருந்தாள். சோர்வில்தான் உறங்குகிறாள் என்று அறிந்த பிறகே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் பேருந்தில் ஏறினர் சிலர். அதில் இரு இளைஞர்கள் அன்புவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தனர். அவர்கள் அவ்வப்போது இவர்களை உற்று உற்று பார்த்தனர்.

வழிநெடுகிலும் அபிநயா உறங்கி கொண்டேதான் வந்தாள். அவளின் சோர்ந்த முகத்தில் படந்துக் கொண்டிருந்த தலை முடியை சரி செய்து விட்டான் அன்பு.

சந்தனக்கொடிக்காலின் முன்னால் நிறுத்தத்திலேயே அபிநயாவை எழுப்பி விட்டான் அன்பு. அபிநயா தடுமாற்றமாக எழுந்து அமர்ந்தாள். அவனின் மீது சாய்ந்திருந்ததே அவளுக்கு தெரியவில்லை. தனது பயணப்பையை எடுத்து மடி மீது வைத்துக் கொண்டாள்.

சந்தனக்கொடிகாலில் பேருந்து நின்றதும் அன்பு எழுந்து நின்றான். அபிநயாவிற்கு வழி விட்டான். அபிநயா அவனை வெற்று பார்வை பார்த்துவிட்டு முன்னால் நடந்தாள். தனக்கு முன்னால் நடந்துக் கொண்டிருந்த இரு இளைஞர்களின் முதுகை குழப்பமாக பார்த்தவள் பேருந்திலிருந்து இறங்கியதும் அவர்களை அடையாளம் கண்டுக் கொண்டாள்.

"அண்ணா.." என்றவளை திரும்பி பார்த்த இருவரும் புன்னகைத்தனர். தன் பெரியப்பா மகன்கள் இங்கே வந்தது அவளுக்கு ஆனந்த அதிர்ச்சியை தந்து விட்டிருந்தது.

"அபிம்மா.." என்றவர்கள் இருவரும் தங்களின் கைகளை நீட்ட இருவருக்கும் இடையில் சென்று நின்றவள் "வீட்டுக்கு வந்திருக்கிங்களா.?" என்றாள் ஆச்சரியமாக.

ஆமென தலையசைத்தவர்களை குஷியோடு பார்த்தவள் "ஏன் எனக்கு சொல்லல.?" என்றாள்.

"சித்தப்பாக்கிட்ட சொன்னோம்.. நீ உன் பிரெண்ட் நிச்சயத்துக்கு போயிருக்கன்னு சொன்னார் அவர். அதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு உன்கிட்ட சொல்லல.‌." என்றான் ஒருவன்.

அவர்களின் பின்னால் நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அன்பு அவர்களை தாண்டி நடந்தான்.

அன்புவின் முதுகை வெறித்தான் ஒரு அண்ணன்.

"வீட்டுக்கு போகலாமா.?" என்றவன் அபிநயாவை அழைத்து கொண்டு நடந்தான்.

"அவனோடு மறுபடியும் சமாதானம் ஆகிட்டியா.?" கடைவீதியை தாண்டிய பிறகு கேட்டான் பெரியவன்.

அபிநயாவிற்கு அவனது கேள்வி புரியவில்லை. யோசித்துவிட்டு அவசரமாக மறுத்து தலையசைத்தாள். "அவனேதான் என் சீட் பக்கத்துல உட்கார்ந்தான். அவனோடு சண்டை போட மனசில்லாம அமைதியா இருந்துட்டேன் நான்.." என்றவளின் குரலில் வெறுமை இருந்தது.

"உனக்கு அவனை பிடிச்சிருக்கா.. சொல்லு.. நான் அவனை காலை உடைச்சி உன்னோடு பேச வைக்கிறேன்.." என்ற சின்னவனின் தோளில் இடித்தவள் "ஒன்னும் வேணாம்.. அவன் ஒரு பைத்தியம். அவனை நினைச்சா நினைச்சவங்களுக்கு பைத்தியம் பிடிக்கும்.." என்றவளுக்கு அவனை பற்றி பேசவே மனம் வலித்தது.

"அவனே மறுபடியும் உன்னை சுத்தி வரானா.? நான் வேணா அவன் மூக்கை உடைச்சி விடட்டா.?" இம்முறை பெரியவன் கேட்டான்.

"வேணாம்.. அவனை பத்தி நினைச்சி நீங்க டென்ஷன் ஆகாதிங்க.." என்றவளை இருவருமே பரிவோடு பார்த்தனர். அவளின் மனதில் அவனை நினைத்து இருந்த டென்சன் வெளிப்படையாகவே தெரிந்தது இருவருக்கும்.

வீட்டிற்கு வந்ததும் அவளின் சோர்ந்த முகம் கண்டு "மறுபடி என்ன ஆச்சி.?" என்றான் தீபக்.

"ஒன்னும் இல்லடா.. பஸ்ல தூங்கிட்டே வந்தேன். அதனால முகம் அப்படி தெரியுது.." என்றவள் உணவை உண்டுவிட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

ஆனந்தியும் வினோத்தும் வீட்டிற்கு வந்த மகன்களோடு பேசினர். அபிநயாவின் பேக்கின் உள்ளிருந்து வெளியே தெரிந்த துண்டை கண்ட தீபக் "இது கோணக்காலன் துண்டு மாதிரியே இருக்கு.." என்றான் அதை கையில் எடுத்து.

வினோத் துண்டை கண்டதும் ஆத்திரமடைந்தார். அவரின் கோபம் முகத்தில் அப்படியே தெரிந்தது.

"அபிநயா பஸ்ல தூங்கிட்டா.. அப்ப அந்த பையன் இவ மேல அதை போர்த்தி விட்டிருப்பான் போல.." என்று சொன்னான் அபிநயாவின் பெரிய அண்ணன். வினோத் கோபத்தில் அன்பு வீட்டிற்கு சென்று சண்டையிட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்தனர் இருவரும்.

"ஒரு துண்டுக்கு கூடவா நம்ம புள்ளை வக்கு கெட்டு கிடக்குது‌.? தூங்கி எழுந்தும் துண்டை தூக்கி அவன் முகத்துல எறிஞ்சிட்டு வராம போயிட்டாளே.." என்று திட்டினார் வினோத்.

அன்புவோடு மீண்டும் ஒரு சந்திப்பு நடத்த வேண்டுமோ என்று யோசித்தான் தீபக்.

பகல் முழுக்கவும், பேருந்திலும் உறங்கி விட்டதன் காரணமாக அபிநயாவிற்கு இரவில் உறக்கமே வரவில்லை. அன்புவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க அழுகை வந்தது. மனம் சோர்ந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள்.

மறுநாள் கல்லூரி கிளம்பியவளை பேருந்து நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்து விட்டு வந்தார் வினோத்.

"அந்த பையன் அபியை இன்னமும் லவ் பண்றானா சித்தப்பா.?" அபிநயாவின் சின்ன அண்ணன் சந்தேகத்தோடு கேட்டான்.

"அவன் ஒரு பொறுக்கிப்பா. அவனுக்கு லவ்வெல்லாம் இல்ல. வேலை வெட்டி இல்லன்னா அபி பின்னாடி சுத்துவான். அவ்வளவுதான்.." என்றார் வினோத்.

கல்லூரிக்கு வந்த அபிநயாவை நலம் விசாரித்தனர் அவளின் தோழிகள்.

அவள் மாலை நேரத்தில் விடுதிக்கு திரும்பியபோது குறுக்கே வந்து மறித்த அன்பு "சாரி.." என்றான்.

அபிநயா அவனை தாண்டி நடந்தாள். அன்பு அவளின் கையை பற்றி நிறுத்தினான். "ஐ லவ் யூ.." என்றான்.

"எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. சாரி.." என்றவளை நம்பாமல் பார்த்தவன் "அதுதான் சாரி சொல்லிட்டேன் இல்ல.?" என்றான்.

தன் கையை உருவிக் கொண்ட அபிநயா கைகளை நெஞ்சுக்கு நேராக கட்டியபடி அவனை வெறித்தாள். "எனக்கு காதலிக்க ஆசையில்ல.. அதிலேயும் உன்னை காதலிக்க சுத்தமா விருப்பம் இல்ல.." என்றாள் அழுத்தமாக.

"அபி நீ பழைய கோபத்துல பேசாத.." என்றவனின் முன்னால் கை காட்டி நிறுத்தியவள் "நீ சொன்னது ரொம்ப சரி. இப்ப சொன்னது இல்ல. முன்ன சொன்னது. நான் யோக்கியமா படிச்சி இந்த காலேஜை விட்டு போக ஆசைப்படுறேன். உன்னை காதலிச்சா என்னோட யோக்கியம் கெட்டுடும். நான் இங்கே வந்தது படிக்கதான். உன்னை போல ஒருத்தனை காதலிக்க இல்ல. இன்னைக்கு நான் காதலுக்கு ஓகே சொன்னா நாளைக்கே நீ உன்னை காதலிக்கிற நான் தப்பானவன்னு சொல்வ.. எனக்கு இது தேவையில்ல. அதனால என்னை டிஸ்டர்ப் பண்ணாம விட்டுடு.." என்றவள் "எனக்கு இந்த அளவுக்காவது சொரணை வந்திருக்குன்னா அதுக்கு அன்னைக்கு நீ கேட்ட கேள்விக்குதான் நான் நன்றி சொல்லணும்.." என்று முனகியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN